கௌதம் உடல்நிலை சரியானவுடன் அலுவலகம் சென்ற போது அங்கே அவனை பார்க்க ஜென்னி வந்தாள்.
அவள் போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது கௌதம் அவள் மேல் இருந்த கோபத்தில் வெகுவாக தவிர்த்தான்.
அவனிடம் பேச முடியாமல் தவித்தவள் அவனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் வீட்டுக்கு வந்தாள். ஆனால் வரும் வழியிலே ராகுலின் கண்களில் தென்பட்டாள்.
“ஹேய்… உனக்கு இங்க என்ன வேல ஜெனிபர்?”
“கௌதம பாக்க வந்தேன் ண்ணா” என்றவளை பார்த்து முறைத்தான்.
“இப்போ தான் அவன் கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கான் ஜென்னி. அவன் உன்ன திரும்பவும் பாத்தா டென்ஷன் ஆகிடுவான்”
“பரவால்லணா. என் மேல தான தப்பு. நான் பாத்துக்கிறேன் ண்ணா” என்று சொன்னாள்.
“சொன்னா புரிஞ்சுக்கோ ஜென்னி. அவனோட சித்தப்பா இருக்காங்க. ஏற்கனவே அவன திட்டிட்டு இருக்காங்க. இப்போ தான் பொறுப்பு வந்ததுனு சந்தோஷப்பட்டேன். ஆனா இப்போ ஜெயிலுக்கு போய் இருக்கறியேனு எவ்ளோ சத்தம் போட்டாங்க தெரியுமா?” என்று கேட்டான்.
“ண்ணா… பரவால்லணா… எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. நான் அவன ஒரு டைம் பாத்துட்டு வந்தறேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
“நீ இன்னொரு நாள் வா ஜெனிஃபர். உன்னால அவனுக்கும் திட்டு விழ போகுது” என்று கூறினான்.
“இட்ஸ் ஓகேணா. எதுனாலும் நான் சமாளிச்சிக்கறேன். நான் அவன பாக்கணும்” என்று சொல்ல இப்போது ராகுல் ஆத்திரமாக கத்தினான்.
“ஹேய்… உனக்கு ஒரு முற சொன்னா புரியாது. நீ அவன பாக்க கூடாது” என்று கூறினான்.
“ண்ணா” என்று அதிர்ந்து போய் பார்த்தாள்.
“போன்னு சொல்றேன்ல” என்று அவன் திரும்பவும் கத்த கண்களில் கண்ணீர் வழிய அவமானம் தாங்காமல் அங்கிருந்து வெளியேறினாள்.
அதற்கு பிறகும் ஜென்னி நிறைய முறை அவனிடம் பேச முயற்சி செய்தும் அவன் அவளிடம் பேசவில்லை. அதனால் அவனை பார்க்க நேரில் வந்தாள்.
அவள் கௌதமுக்காக காத்து கொண்டிருக்கும் போது அந்த பக்கம் வந்த ராகுலும், ஷாலினியும் அவளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
“இவள அன்னைக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு துரத்தி விட்டேன். ஆனா திரும்பவும் வந்து நிக்கறா” என்று ஷாலினியிடம் சொன்னான்.
“இரு. இப்போ நான் பேசப் போறதுல அவ பதறியடிச்சிட்டு எடத்த காலி பண்ணுவா” என்றவளுடன் அவனும் சென்றான்.
“ஜென்னி நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அதிகாரமாய் கேட்டாள்.
“நான் கௌதம் பாக்க வந்தேன் கா” என்று சொன்னாள்.
“அவன் உன்ன வர சொன்னானா?”
அவள் இல்லை என்று தலையாட்டினாள்.
“அப்றம் ஏன் ஜென்னி வந்து தொல்ல பண்ற? உன்னால அவன் பட்ட அவமானம் போதாதா?” என்று கேட்டாள்.
“அக்கா என் மேல் தப்பு தான். ஆனா அதுக்காக நான் என் கௌதம பாக்காம எப்டிக்கா இருப்பேன்?” என்று கேட்டாள்.
“இங்க பாரு. கௌதமுக்கு நாங்க எடுத்து சொல்லி புரிய வைக்கறோம். நீ ஃபர்ஸ்ட் கிளம்பு” என்று கோபமாக கூறினாள்.
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்கா? நானே அவன பாத்து பேசிட்டு போய்டறேன்” என்று ஜென்னி கூறினாள்.
“ஏய்… உனக்கு எத்தன டைம் சொன்னாலும் புரியாதா? நீ கௌதம பாக்க தேவையில்லைனு சொல்றேன்ல” என்று கத்தினாள்.
அத்தனை நேரம் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருந்தவளுக்கு ஷாலினியின் இந்த மெத்தனமான பதில் உள்ளுக்குள் ஏதோ அதிர்வலைகளை கிளப்பியது.
அது தந்த எரிச்சலில் “அது கௌதம் சொல்லட்டும். நீங்க சொல்ல வேணாம்” என்று இந்த முறை நிமிர்வாகவே பதில் கூறினாள்.
எப்போதும் அமைதியாக செல்பவள் இன்று பதிலுக்கு பதில் பேசுவதை கேட்டு இருவரும் அதிர்ந்து நின்றார்கள்.
“நாங்க தான் நீ கௌதம் கூட பேசணுமா, வேண்டாமானு முடிவு பண்ணுவோம். அவன் இல்ல. மைன்ட் இட்” என்று ராகுல் இறுக்கமான குரலில் சொன்னான்.
“வாட்? என்ன பேசறீங்க? எங்க ரெண்டு பேத்துக்கிடையில வரதுக்கு உங்களுக்கு யாரு ரைட்ஸ் குடுத்தா?” என்று ஜெனிபரும் இப்போதும் கோபமாக பேசினாள்.
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தான் கௌதம் அங்கே வந்து சேர்ந்தான்.
அவனை தேடி இத்தனை நாட்களில் யாரும் வந்தது இல்லை. அவன் எப்போதும் தனது நண்பர்களுடனே இருப்பதால் அவன் அதை பற்றி கவலைப்பட்டதும் இல்லை.
ஆனால் இன்று தன்னை தேடியும் ஒருவர் வந்துள்ளார் என்று சொன்னதும் சந்தோஷம் பொங்க அங்கு சென்றான்.
ஆனால் அங்கே இவர்களது மூவரது சண்டையை பார்த்ததும் அதிர்ச்சியுடன் நின்று விட்டான்.
ஜென்னி கௌதமை பார்த்ததும் “கௌதம் நான் உன்ன பாக்க தான் வந்தேன்” என்று கண்ணீர் பொங்க நிற்க அதற்குள் வேகமாக யோசித்த ராகுல் ஜென்னி அவர்களது நட்பை பிரிப்பதாக திரித்து சொல்ல கௌதம் ஜெனிஃபரை நம்ப இயலாமல் பார்த்தான்.
“இல்ல கௌதம். இவங்க நம்ம இரண்டு பேத்துக்குள்ள இன்டர்ஃபியர் ஆகறாங்க. அதுக்கு சொன்னதுக்கு ராகுல் அண்ணா மாத்தி சொல்றாங்க” என்று புகார் அளித்தாள்.
“ஹே… வில் யு ஷட் அப்?” என்று கத்தியவன் “அவங்க என் ஃபிரண்ட்ஸ். எங்களுக்கு இடையில நீ இன்டர்ஃபியர் ஆகாத. எங்களோடது 7 வருஷ ஃபிரண்ட்ஷிப். நேத்து வந்த நீ எங்கள பிரிக்க பாப்பியோ?” என்று கேட்டான்.
“கௌதம் நான் அப்படி சொல்லல” என்று விளக்கம் கூறினாள்.
“இங்க பார். நீ உன் லிமிட் எதுவோ அங்க நின்னுக்கறது தான் உனக்கு நல்லது. இல்லேனா விளைவுகள் வேற மாதிரி இருக்கும்” என்று இறுக்கமான குரலில் கூறியவன்
“ஃபுட் கோர்ட்ல வெயிட் பண்ணு. நான் வரேன்” என்று சொல்ல இப்போது நண்பர்கள் இருவரும் ஜென்னியை வெற்றி பார்வை பார்த்தார்கள்.
ஜென்னி அங்கிருந்து ஃபுட் கோர்ட் செல்ல நண்பர்கள் இருவரும் வேலையை பார்க்க கிளம்பினார்கள்.
இங்கே கேபின் வந்த கௌதமுக்கோ ஜென்னியை கொல்லும் ஆத்திரம் வந்தது.
ஏற்கனவே ஒரு முறை உயிர் போகும் அளவு ஜென்னியால் அவமானப்பட்டு விட்டான். இப்போது அடுத்து அவனது நட்பை பிரிக்க போகிறாளாம். அவளை கொன்று கூறு போட நினைத்த அதே வேளையில் அவளது கண்ணீர் முகம் அவனது மனதை பிசைந்தது.
கண்ணில் கருவளையத்துடன் உடம்பு இளைத்து பார்க்கவே ஏதோ போல இருந்தாள்.
அவளது கண்களில் தெரிந்த ஏக்கம் அவனை ஒரு வேலை கூட செய்ய விடவில்லை. அவளை இத்தனை நாள் பார்க்காமல் தப்பு செய்து விட்டோமோ என தோன்ற ஆரம்பித்தது.
உடனே அவளை பார்க்க ஃபுட் கோர்ட் சென்றான். அங்கே அவளோ இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் மனது தவித்தது.
ஏதோ அரவம் கேட்கவும் பார்த்தவள் கௌதமை பார்த்ததும் ஓடிப் போய் கட்டி பிடிக்க துடித்த கால்களை கட்டுப்படுத்தியவள் அவனை கண் சொட்டாமல் பார்த்தாள்.
“எதுக்கு வந்த ஜென்னி? உன்ன யாரு இங்க வர சொன்னா?”
“உன்ன பாக்க தான் வந்தேன் கௌதம்” என்றவள் மேற்கொண்டு பேச ஆரம்பிக்க அவளை கை நீட்டி தடுத்தவன்
“பாத்தாச்சு தானே. கிளம்பு” என்றான்.
“கௌதம்”
“எனஃப் ஜென்னி. நீ ஒவ்வொரு டைமும் உன் ரிலேஷன்ஸ் கூட சேந்து என்ன இன்சல்ட் பண்ணுவ. என்ன… இந்த டைம் ஊரே கை கொட்டி சிரிச்சிது” என்று விரக்தியான குரலில் சொன்னவன்
“நெக்ஸ்ட் டைம் இப்படி பாக்க வர வேல வெச்சுக்காத” என்றவன் “உன் பாடிகார்ட் வரல?” என கேட்டான்.
“பாடிகார்ட்டா? யார சொல்ற?” என்று கேட்டாள்.
“அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்தானே” என்று கேட்டான்.
“அவன் என் பிரதர் சாம். அவன் ஹெல்ப்னால தான் உன்ன வெளிய எடுக்க முடிஞ்சது” என்று சொன்னாள்.
“அதனால அவனோட நான் ஒட்டி உறவாடுவேனு நினைச்சியா?”
“இல்ல கௌதம்”
“நீ இங்க வந்தது அவனுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
இல்லை என்று தலையாட்டினாள்.
“யார் கூட வந்த?”
“தனியா தான் வந்தேன்” என்றாள்.
“ஹே… ஷிட்… அறிவில்ல… முதல்ல கிளம்புடி” என்று அவளை கிளம்ப சொன்னான்.
“கௌதம்”
“கிளம்புடினா” என்றவன் என்ன நினைத்தானோ “கொஞ்சம் வெயிட் பண்ணு. நானும் வந்தறேன்” என்றவன் அவசரமாக வேலையை முடித்து பர்மிஷன் போட்டு விட்டு அவளை பைக்கில் கூட்டி போய் வீட்டில் விட்டான்.
பயணத்தின் போது இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏதேனும் பேசவே ஜெனிபர் பயந்தாள்.
அவளை இறக்கி விட்டு அவன் செல்லும் போது “கௌதம்” என்றவள் பரிதவிப்பும், ஏக்கமுமாய் அவனை கூப்பிட்டாள்.
அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தனது பைக்கை வேகமாக ஓட்டி சென்றான்.
அதன் பிறகு அலுவலகம் வந்தவன் விட்ட வேலையை தொடர்ந்தான். இவனது நடவடிக்கையில் ராகுலும், ஷாலினியும் அதிர்ந்து நின்றனர்.
******
வீட்டுக்கு வந்த ஜெனிஃபருக்கு கௌதம் ஞாபகமாகவே இருந்தது.
அவன் பிறந்தநாள் பரிசாக கொடுத்த வாட்சில் அவனது குரலில் “லவ் யூ பொண்ணே” என்று கேட்டு கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
“ஆம் சாரி கௌதம். சாரிடா” என்று கண்ணீர் விட்டவள் மொட்டை மாடியின் ஒரு மூலையில் சாய்ந்து அந்த வாட்சை இறுக அணைத்து கொண்டாள்.
அப்போது யாரோ குதிக்கும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள். அங்கே கௌதம் நின்று கொண்டிருந்தான்.
முதலில் பிரமையோ என கண்ணை கசக்கி பார்த்தவள் அவன் மறையாமல் நிற்கவும் கௌதம் என்று கதறியபடி ஓடி வந்தவளை அவன் இறுக அணைத்து கொண்டான்.
“கௌதம் சாரிடா.ப்ளீஸ்டா… என்ன அவாய்ட் பண்ணாதடா. சாரிடா… சாரிடா…” என்றவள் கதறினாள்.
“ஜென்னி… ரிலாக்ஸ்டா…” என்று அவன் முதுகை வருடி கொடுக்க அவளது அழுகையோ இன்னும் அதிகரித்தது.
இவ்வளவு நாள் ஏக்கத்தையும்,வலியையும், குற்ற உணர்வையும் தனது கண்ணீரால் அழுது கரைத்தாள்.
“ஜென்னி… அழாதடா… ஓகே… ஓகே…” என்று மென்மையான குரலில் அவளை சமாதானப்படுத்தியவன் அவளது கன்னத்தை பிடித்து அவளது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
அவனது நெற்றி முத்தம் கொஞ்சம் வேலை செய்ய சிறிதளவு அவள் கண்ணீர் குறைந்தது.
அவளை அணைத்தபடியே தோள் வளைவில் உட்கார வைத்தவன் அப்படியே அவளை அணைத்தபடி அமர்ந்து இருந்தான். இருவரும் இத்தனை நாள் பிரிவின் ஏக்கத்தில் பேசவும் மறந்து போயினர்.
இருவரும் தன்னை மறந்து இருந்த போது அங்கே ஒரு குரல் கேட்டது.
