ஒரு நாள் அந்தி சாயும் நேரம்… பறவைகள் கூட்டுக்கு திரும்பும் அந்நேரத்தில், அந்த மலைக்கிராமம் சற்று சலசலப்போடு அடங்கத் தொடங்கியது. மயிலா விறகு அடுப்புக்காக சுள்ளி பொறுக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்றாள்.
அவள் பாதங்கள் அடர்ந்த மரங்களின் ஊடாகச் சென்ற ஒற்றையடிப் பாதையில் தளர்வோடு நடந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளின் இலைகளுக்கிடையே சூரியனின் பொன்னிறக் கதிர்கள் மெல்லியதாக ஊடுருவின. அப்பகுதியில் பறவைகளின் ரீங்காரம் மட்டும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. அவள் சுள்ளி பொறுக்கியவாறே நடந்து சென்றபோது, சற்று தூரத்தில் தெரிந்த ஒரு காட்சி அவளை ஸ்தம்பிக்க வைத்தது. அவளுடைய கண்கள் தான் காண்பதை நம்ப மறுத்தன.
குமரன், அவளது தோழி ராசாத்தியுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தான்! அவர்கள் இருவரும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் தொட்டு பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ராசாத்தி அவன் கையைப் பிடித்து ஏதோ சொல்ல, குமரன் வாய்விட்டு சிரித்தான். அந்த சிரிப்பில் எந்தவிதமான நெருடலும் இருக்கவில்லை.
மயிலாவுடன் ஒரு நாள் கூட அவன் முகம் மலர்ந்து பேசியதே கிடையாது. அவன் சுபாவமே இதுதான் என்று நினைத்திருந்தவள், இன்று இன்னொருத்தியிடம் உறவாடுவது கண்டு ஒரு கணம் திடுக்கிட்டாள். அவளது கைகள் தானாகவே சுள்ளியைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தின.
‘என்ன மச்சான் இது? என்ன பாத்து, ஒரு வார்த்தைக்கூட நல்லா பேச மாட்டேங்குற. ஆனா அந்த ராசாத்தி கிட்ட மட்டும் எப்படி இம்புட்டு சிரிச்சு பேசுற? உனக்கு என் மேல அன்பே தோணலையா? நான் உனக்கு பொண்டாட்டி இல்லியா? என்ன குறை என்கிட்ட இருக்குன்னு என்ன இப்படி ஒதுக்கி வைக்கிற? நான் செஞ்சது தப்புதான். ஆனா அதுக்காக இப்படியா பழி வாங்குவ? கல்யாணம் பண்ணி என்னைக் கூட்டிட்டு வந்ததே ஒரு கண்துடைப்புக்கா? உன் மனசுல என்னதான் இருக்கு? வெளியில ஒரு மாதிரியும், உள்ளுக்குள்ள ஒரு மாதிரியுமா ஏன் மாத்தி மாத்தி இருக்க? நானும் மனுஷிதானே? எனக்கு உங்கூட இப்படி பேச ஆசை இருக்காதா? முதல்ல, நான் ஏன் இப்படி என்னையே வருத்திக்கிட்டு இருக்கணும்? அவன் சட்டைய புடிச்சு கேள்வி கேட்டாத்தான் என்ன?”
பொறாமையும், சந்தேகமும், வலியும் அவளது மனதை அரித்தது. கண்கள் கலங்கின…
அவள் அங்கேயே சிலை போல் நின்றுவிட்டாள். தொடர்ந்து அவர்கள் சிரிப்பதும், சந்தோஷமாக பேசுவதும் அவளது காதுகளில் இடியாக இறங்கின. அவள் கால்கள் இரண்டும் பின்னிக் கொள்ள, அங்கிருந்து நகரக்கூட தோன்றவில்லை. அந்த காட்சி அவள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.
மயிலாவின் உள்ளத்தில் கசப்பும், உக்கிரமும் மெல்ல கனலத் தொடங்கியது. ஆனால், அவள் உடனடியாக தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை. மாறாக, அங்கிருந்து மெதுவாக விலகிச் சென்று, தனது கொதிக்கும் மனதை தற்காலிகமாக தணிக்க முயன்றாள். அவன் ராசாத்தியுடன் சிரித்த சிரிப்பும், கனிவாக பேசிய முகமும் அவளது நினைவை விட்டு அகலவில்லை.
அவனுக்கு ஒருவேளை ராசாத்தியைத்தான் பிடித்திருக்கிறதோ என்ற எண்ணம் அவளை வாட்டியது. தான் திட்டமிட்டு திருமணம் செய்ததால், தன்னை அவன் திட்டமிட்டு புறக்கணித்து வைத்திருப்பது போன்ற ஒரு வலி அவள் உள்ளத்தை அரித்தது. அவள் பாதங்கள் வீடு நோக்கி நடந்தாலும், அவளது எண்ணங்கள் முழுவதும் குமரனையும் ராசாத்தியையுமே சுற்றி வந்தன. அந்த நினைப்பு அவளது நிம்மதியைக் குலைத்தது. இனி அவளால் அவனை முன்பு போல் பார்க்க முடியுமா? என்ற கேள்வி அவளை மேலும் வேதனைப்படுத்தியது!
அடுத்த நாள், மயிலா அவனிடம் நேரடியாக இதைக் கேட்டு விடலாம் என்று முடிவு செய்தாள். ஆனால், பேசத் தொடங்கியவுடனே அவன் இவளை முறைத்தான்.
“என்னடி… என்ன உளறுற நீ? ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பேசுறதுல என்ன தப்பு இருக்கு? நீ டவுனுக்குப் போய் வாழ ஆசைப்பட்டல? டவுன் பொழப்பு இப்படித்தான் இருக்கும். அங்க ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா சிரிச்சுப் பேசுறத யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்க. நீ இப்படி யோசிச்சா நான் யாரோடயும் பேசிப் பழக முடியாது. கடைசில, நீ டவுணுக்கு சரிப்பட்டு வரமாட்டனு காட்டிட்ட பாத்தியா?”
குமரனின் அந்தப் பதிலால் மயிலாவின் மனம் சற்றும் சமாதானம் அடையவில்லை. அவளது புத்தியை சந்தேகப் புழு அரித்துக் கொண்டே இருந்தது. அதே நேரத்தில், அதற்கு மேல் அவனிடம் வாதாடி மேலும் சண்டையை வளர்க்கவும் அவள் விரும்பவில்லை. மௌனமாக தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். நேரம் நகர்ந்தாலும், அவளது மனம் அவர்கள் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த காட்சியையே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது.
அன்று இரவு லோடு ஏற்றிச் சென்ற குமரன் வீடு திரும்பும் போது, எங்கிருந்தோ ஒரு அழகான ஹேர் க்ளிப்பை வாங்கி வந்திருந்தான். பளபளக்கும் கற்கள் பதிக்கப்பட்ட அந்த ஹேர் க்ளிப் மிகவும் அழகாக இருந்தது. அதைத் தனது மஞ்சள் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, அவன் களைப்பில் அப்படியே தூங்கிப் போனான்.
மறுநாள் காலையில் மயிலா, அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்காக அந்த மஞ்சள் பையை எடுத்தாள். அப்போதுதான் அந்த ஹேர் க்ளிப் அவள் கண்ணில் பட்டது. சட்டென்று அவளது இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவள் ஆசையோடு அந்த ஹேர் க்ளிப்பை எடுத்துப் பார்த்தாள். அவளது விரல்கள் அதன் வழவழப்பான மேற்பரப்பைத் தொட்டபோது மனம் பரவசப்பட்டது.
“மச்சான், நேத்து நான் உன்ன சந்தேகப்பட்டேன்னு, என்னை தாஜா பண்ணத்தானே இத வாங்கியாந்துருக்க? இருக்கட்டும் இருக்கட்டும்… கல்யாணம் முடிஞ்ச இத்தனை நாள்ல, நீ எனக்குன்னு எதுவுமே வாங்கியாந்ததில்ல. இதுக்காகவே ராசாத்தியையும் ஒன்னையும் மன்னிச்சிடலாம். எம்புட்டு அழகா இருக்குது, எபப்டியும் எனக்கு தானே குடுக்கப் போற? நீயே கொண்டாந்து குடு” என்று பிதற்றிக் கொண்டே அதை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள்.
அவன் அதை தன்னிடம் கொடுப்பான் என அன்று முழுவதும் எதிர்பார்த்து காத்திருந்தாள். ஆனால் அவன் அதை அவளிடம் கொடுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
‘ஒருவேளை வாங்கினதையே மறந்துட்டானோ?!’ என்று நினைத்துக் கொண்டே மஞ்சள் பையை பார்க்க, அங்கே அந்த கிளிப் இருக்கவில்லை.
“இங்கன தானே பாத்தேன். இப்போ எங்க போச்சு? ஒருவேளை தூக்க கலக்கத்துல எதையாச்சும் நினைச்சுக்கிட்டேனா?” என்று தலையை சொறிந்தபடி யோசித்தாள் மயிலா.
அவளுக்கு எல்லாமே ஒரு மாயை போல தோன்றியது. அதனால் அதை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாள். அன்று இரவும் அவன் லோடடித்து விட்டு திரும்பும்போது ஒரு செட் கம்மல் வாங்கி வந்து வைத்திருந்தான்.
“இல்ல, இது கனவு இல்ல! நெசந்தான்…” என்று யோசிக்க யோசிக்க, அவளுக்கு பைத்தியமே பிடிப்பது போல் இருந்தது.
மறுநாள் அவள் பொறுமையாக குமரனை கண்காணித்துக் கொண்டிருக்க, அவன் அதை எங்கோ எடுத்து செல்வதை பார்த்தாள். உடனே இவளுக்கு அது யாருக்காக வாங்கப்பட்டது என்று விளங்கிவிட்டது.
அன்று மாலை செவத்தம்மா பாட்டி, “மயிலா, உங்கம்மா உனக்குனு ஊறுகா போட்டு வச்சிருக்காளாம். உன்னை வந்து எடுத்துக்க சொன்னா” என்று கூறிக்கொண்டே, வாங்கி வந்திருந்த ஆட்டுக்கறியை அவள் கையில் கொடுத்தார்.
“இத சமைச்சுட்டு, போய் வாங்கியாறேன்” என்று கூறிவிட்டு, கடகடவென சமையல் வேலையை பார்த்தாள் அவள்.
அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்துவிட்டு, அம்மாவின் வீட்டைத்தேடி நடந்தது அவள் பாதங்கள். அப்போதுதான், எதிரே ராசாத்தி தண்ணீர் குடத்துடன் வந்து நின்றாள்.
“வா புள்ள, இப்பதான் இந்த பக்கம் வர வழி தெரிஞ்சதா?” என்று ராசாத்தி கலகலப்பாக அவளுடன் பேசத் தொடங்கினாள்.
ஆனால் ராசாத்தியின் காதுகளில் மின்னிய தோடுகளைப் பார்த்ததும் மயிலாவின் கால்கள் அப்படியே தரையோடு ஒட்டிக்கொண்டன. அவளது இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அது குமரன் வாங்கி வந்த அதே தோடுகள்! அவளது கைகள் தானாகவே நடுங்க ஆரம்பித்தன. அவளின் மனம் என்னவெல்லாமோ யோசிக்கத் தொடங்கிவிட்டது.
ராசாத்தி சகஜமாக பேசிக்கொண்டே இருந்தாள். ஆனால் மயிலாவின் காதுகளில் எதுவும் விழவில்லை. கண்கள் கலங்க ஒரு முடிவுக்கு வந்தவளாய், அம்மாவைப் பார்க்காமலேயே விறுவிறுவெனத் திரும்பி நடந்தாள்.
“எங்கடி போற?” எனும் ராசாத்தியின் குரல் அவளைப் பின் தொடர்ந்தாலும், அவள் நிற்கவில்லை. அவளது மனதில் எழுந்த வலியும் வேதனையும் அவளை வேகமாக வீட்டுக்கு இழுத்துச் சென்றன.
மறுநாள் பொழுது வழக்கம்போல விடிந்தது. கிழக்கு வானம் மெல்ல சிவந்து, சூரியனின் பொற்கதிர்கள் மெதுவாக வீட்டின் முன் விழுந்தன. குமரன் தூங்கி எழுந்து சோம்பல் முறித்தபடி மெதுவாக வெளியே வந்தான்.
வழக்கமாக அவன் வெளியே வரும்போது, மயிலா அவன் கண்ணெதிரில் ஏதாவது ஒரு வேலையை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பாள். அவனுக்கு சூடாக தேநீர், அல்லது அவன் விரும்பிக் கேட்கும் வடி தண்ணீர், கஞ்சி என ஏதாவது ஒன்றை கனிவுடன் கேட்டு கேட்டு செய்து கொடுப்பாள்.
ஆனால் இன்று அவள் அவனுடைய கண்ணெதிரில் தென்படவில்லை. வீட்டில் அமைதி நிலவியது. டீ மட்டும் ஒரு டம்ளரில் மூடி வைக்கப்பட்டு திண்ணையில் இருந்தது. அவளை காணாதது அவனுக்குள் ஒருவித வினோதமான உணர்வை ஏற்படுத்தியது. அதை எடுத்துப் பருகியவன், வழக்கம் போல குளித்து முடித்து தயாராகி வெளியே வந்தான். அப்போதும் மயிலா அங்கே இல்லை…
அவனுக்கு தேவையான காலை உணவு தயாராக இருக்க, அவன் தானே சாப்பாட்டை எடுத்துப் போட்டு அமைதியாக சாப்பிட்டு விட்டு தோட்ட வேலைக்கு புறப்பட்டான். ஏனோ அவனது மனதில் வெறுமை சூழ்ந்திருந்தது. முதன்முறை அவள் அண்மையைத் தேடி தவித்தது அவன் இதயம்!
மாலையில் களைப்புடன் குமரன் வீடு திரும்பியபோதும் அவள் அங்கே இல்லை. வீடே வெறிச்சோடிப் போயிருந்தது. அவளது சுறுசுறுப்பான நடமாட்டமோ, கலகலப்பான பேச்சோ எங்கும் கேட்கவில்லை. காதுகள் இரண்டும் யதார்த்தத்தை தொலைத்துவிட்டது போல் உணர்ந்தான்.
அவன் மனம் அவளைத் தேடியது. அவளைப் பார்க்கவும், அவளிடம் பேசவும் அவன் உள்ளம் ஏங்கியது. ஆனால் அவன் வெளியே அதை காட்டிக் கொள்ளவில்லை. ஏனோ தனது ஆசைகளை அவன் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டான்.
இப்படியே நான்கு நாட்கள் உருண்டோடின…
மயிலா தன் கணவன் கண்ணெதிரே வருவதையே முற்றிலுமாக தவிர்த்தாள். அவளின் இந்த மௌனமான போர் குமரனை வெகுவாக பாதித்தது. அவள் அமைதி அவனுக்குள் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளை பார்த்திருந்த அவனுக்கு, இந்த பிரச்சனை பித்து பிடிக்கச் செய்வதாய் இருந்தது.
‘இப்படியே விட்டால் சரிவராது! இன்றோடு அவளின் மௌனத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!’ என்று நினைத்த குமரன், அன்று மதியமே வீட்டிற்கு வந்து விட்டான்.
மயிலாவை வீட்டை சுற்றி தேடி கொண்டிருக்க, சற்று தள்ளி இருந்த ஒரு கொட்டகையில் உட்கார்ந்து அவள் எதையோ வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.
நேரடியாக அவளிடமே சென்று, “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” என்றான்.
அவள் அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“என்ன மயிலா? என்னாச்சு உனக்கு!! ஏன் ஒரு வாரமா ஒரு மாதிரி இருக்க? எங்கிட்டயும் சரியா பேச மாட்டேங்கிற?”
அவள் பதில் சொல்லாமல் போக, அவளின் தாவாங்கட்டையை பிடித்து தன் பக்கம் திருப்பினான்.
“உன்னத் தான கேக்குறேன். எதுக்கு இப்போ நீ மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருக்க? ஒழுங்கா வாயை திறந்து சொல்லப் போறியா இல்லியா?” என்று அதட்டலாக கேட்டான்.
“ஏன், உனக்கு தெரியாதா மச்சான்?”
“தெரியாம தான உன்கிட்ட வந்து கேட்குறேன்!”
“ஆனா எனக்கு எல்லாம் தெரியும் மச்சான்! நீ என்ன நினைப்போட வாழுற, யாருக்கு என்னெல்லாம் வாங்கி கொடுக்குற. எல்லாமே எனக்கு தெரியும்” என்று சொல்லி முடித்தவள் விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது.
குமரன் ஒரு கணம் அவள் விழிகளை அழுந்தப் பார்த்தான். பிறகு எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டான். குறைந்தபட்சம் சமாதானப்படுத்த இரண்டொரு வார்த்தை பேசுவான் என்று எண்ணி இருந்த மயிலா, வாய் மூடி அழுதிருந்தாள்!
