கூனி குறுகியபடி நிற்கும் மயிலாவின் பயந்த முகத்தைப் பார்த்து, உதட்டோரம் மெல்லிய புன்னகையை உதிர்த்தான் குமரன். அவன் மெதுவாகத் தனது சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்தான். அவளது பார்வை அந்த அசைவில் பதிந்தது. அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தே, அடுத்த பொத்தானை அவிழ்த்தான்…
ஒவ்வொரு பொத்தானும் கழற்றப்படும்போதும், அவளது உடல் வெடவெடத்தது. நினைவுகள் மரத்துப் போய், உதடுகள் உலர்ந்தன. ஒரு வார்த்தை கூட அவளால் பேச முடியவில்லை. அடர்ந்த இருள் ஒன்று அவளைச் சூழ்ந்து, விழுங்குவதற்கு தயாராக இருந்தது.
“வேணாம் மச்சான்! தயவு செஞ்சு, என்னை எதுவும் பண்ணிடாத. என்ன விட்டுடு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் எப்படியாச்சும் அப்பாகிட்ட பேசி, அந்த வண்டிய உனக்கு வாங்கி கொடுத்துடறேன்…”
“கண்டிப்பா பண்ணுவியா?”
“கண்டிப்பா பண்ணுறேன். எனக்கு ஒரே ஒரு மாசம் டைம் கொடு. அதுக்குள்ள எப்படியாவது அவரை பேசி சரி கட்டுறேன்” என்றாள்.
குமரன் சட்டையை கழற்றி கட்டில் மீது வீசிவிட்டு, அவளுக்கு அருகில் வந்து நின்றான். அழுததால் அவள் கண்கள் இரண்டும் பளபளத்தது.
“உனக்கு ஒரே ஒரு வாரம்தான் டைம். அதுக்குள்ள, அந்த வண்டி என் கைக்கு வரணும்!” என்று பிடிவாதமாக கூறினான்.
இதழை கீழாக வளைத்து விசும்பினாள் பேதை.
“நீ என்ன நினைக்கிறன்னு தெரியும். என்னடா இவன், ரொம்ப சாதுவா இருந்தானே. நாம சொல்றபடி அடங்கி நடப்பான்னு நினைச்சு ஈஸியா தலையை கொடுத்துட்டோம். இப்ப என்னாடான்னா இப்படி ராட்சசன் மாதிரி நடந்துக்குரானேன்னு தோணுதா?” என்று கேட்க, அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அச்சு அசலாக அவளின் எண்ண ஓட்டங்களை படித்து விட்டான் இல்லையா?
கைகளை முறுக்கி நெளிப்பு எடுத்தவன், “என்ன பண்றது? நான் நல்லவனா இருக்குறது உனக்கு புடிக்கலயே” என்று கூறியபடி அவள் தோள்களில் கையை போட்டான்.
காதலோடு தொட்டிருந்தால், அந்த தீண்டல் தித்தித்திருக்குமோ என்னவோ! இப்போது வேப்பங்காய் கசந்தது அவளுக்கு.
“உனக்கு இன்னொரு உண்மையை சொல்லட்டுமா? எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்! இந்த ஊருக்குள்ளயே, நீ தான் பாக்குறதுக்கு கண்ணுக்கு லட்சணமா அழகா இருக்க! எப்ப பாரு குரங்கு சேட்டை பண்ணிட்டு சுட்டித்தனமா சுத்திட்டு இருப்ப. அதனால எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும்…” என்று கூறி அவள் கன்னம் கிள்ளினான். அவளில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“ஒரு பெரிய தொகைய ஏற்பாடு பண்ணிட்டு இந்த ஊரை விட்டு போற பிளான்ல இருந்தேன். போறதுக்குள்ள உன்ன எப்படிடா அனுபவிக்கிறதுனு நான் யோசிச்சுட்டு இருக்க, ஆடு தானா என் வலையில வந்து சிக்கிடுச்சு” என்று கூற, கண்ணீரோடு அவன் கண்களைப் பார்த்தாள் மயிலா. பஞ்சாயத்தில் அவன் ஏன் மறுத்துப் பேசவில்லை என்பதற்கான காரணம் இப்போதுதான் அவளுக்கு விளங்கியது.
“வண்டி வேணும் எனக்கு. அதனால இப்போதைக்கு உன்ன விடுறேன். ஆனா எப்பவும் நான் இப்படியே இருப்பேன்ன்னு நினைக்காத! நான் ரொம்ப மோசமானவன், எந்த நிமிஷமும் குணம் மாறுவேன்!” என்று கூறிவிட்டு அவன் போய் கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்.
அவன் தற்போதைக்கு தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை தவிர, அந்த இரவில் மயிலாவுக்கு வேறு எந்த ஆறுதலும் இருக்கவில்லை. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கடந்து வந்திருந்ததால், அவளின் கண்கள் இரண்டும் இருண்டு கொண்டு வந்தது. புடவையும் எட்டா உயரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, இருந்த இடத்திலேயே படுத்து உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் ஜன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சம் அவள் முகத்தில் சுள்ளென சுட்டது. வெளியில் சில மக்களின் பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டு இருக்க, மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். பொழுது நன்றாக விடிந்திருந்தது. ஒரு முறை தன்னைத்தானே பார்த்துக் கொண்ட மயிலா, எதுவும் ஆகவில்லை என்று உறுதியானதும் தூரத்தில் இருந்த கட்டிலைப் பார்த்தாள்.
குமரனை அங்கே காணவில்லை! மேலே நிமிர்ந்து பார்த்தாள். அவன் இரவில் வீசி எறிந்த சேலை இன்னும் கூரையில்தான் தொங்கிக் கொண்டு இருந்தது. வேறு புடவை வேண்டும் எனில் அவள் தன் வீட்டிற்கு போய் எடுக்க வேண்டும். எனவே மெதுவாக கட்டிலின் மீது ஏறி புடவையை பிடித்து இழுக்க பார்த்தாள். அந்தோ பரிதாபம், அது அவளுடைய கைகளுக்கு எட்டவில்லை.
வெளி அறையில் சமையலுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து, ஒரு குண்டாவை எடுத்து வந்து கட்டில் மீது குப்புற போட்டாள். அதன் மீது ஏறி நின்று புடவையை எடுக்க முயற்சி செய்தாள். அந்த பாத்திரத்தின் அடிப்பகுதி வளைந்து இருந்ததால், அவளால் அதில் சரியாக நிற்க முடியவில்லை. கால் வழுக்கினாலும் பரவாயில்லை, என்று தொடர்ந்து முயற்சித்தாள்.
புடவையின் முனை அவள் விரல் நுனியை உரசியது. இன்னும் ஒரு இஞ்ச் உயரமாக எக்கி நின்றால் கூட புடவையை பிடித்து இழுத்துவிடலாம். அவளது கவனம் முழுவதும் அந்தப் புடவையின் மீது இருந்தது. சிரமப்பட்டு ஒற்றை காலில் பாத்திரத்தின் மீது ஏறி நிற்க முயல, திடீரென பாத்திரம் வழுக்கிவிட்டது.
“ம்மா…” என்ற அலறலுடன் அவள் கீழே விழப்போனாள்.
நொடிப் பொழுதில், பலமான இரு கைகள் அவளைச் சுற்றி வளைத்தன. குமரன்! அவனது திடமான அணைப்பில் அவளை பத்திரமாகத் தாங்கிப் பிடித்தான். எதிர்பாராத விதமாக இருவரின் உடலும் நெருக்கமாக உரசிக்கொண்ட அந்த நொடியில், அவளுக்குள் ஒரு புதுவிதமான உணர்வு ஊற்றெடுத்தது. அதுவரை அவள் உணர்ந்திராத ஒரு மெல்லிய மின்சாரம் அவள் உடலில் பாய்ந்தது. முந்தைய இரவில் நடந்ததெல்லாம் மறந்துபோனாள் பேதை!
அவனது அருகாமை அவளை அந்த அளவுக்குப் படபடக்க வைத்தது. அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் கன்னத்தில் உரசுவதும், அவன் கைகள் இடுப்பைச் சுற்றியிருந்த இறுக்கி இருந்த அழுத்தமும் அவளை என்னென்னவோ செய்தது. ஒருவித தயக்கத்தோடு அவனது கண்களை ஏறிட்டாள். அதில் தெரிந்த இனம் புரியாத ஏதோ ஒன்று, அவளது இதயத்தை மெல்ல வருடியது. நேற்று இரவு பேசக்கூடாத பேச்செல்லாம் பேசியது இவன்தானா? என்று அவள் மனதே அவளிடம் கேட்டது.
அந்த குறுகிய நொடியில், அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு மௌன மொழி பரிமாறப்பட்டது. அவனோடு ஒரு புதிய பந்தம் உருவாகிவிட்டதற்கு அறிகுறியாக, அவன் செய்த எல்லா தவறுகளையும் மறந்தாள் மயிலா.
சில வினாடிகள், இந்த உலகமே நின்றுவிட்டது போல, அவர்கள் கண்கொட்டாமல் ஒருவரை ஒருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வை பல அர்த்தங்களைக் கொண்டிருந்தது. ஆனால், அவள் மனதிற்குப் பிடித்த அந்த மாயாஜாலம் ஒரு நொடியில் கலைந்தது. குமரன் சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பினான்.
“என்னடி? இறங்கலையா?”
அவன் கேட்ட கேள்வியே புரியாமல் புருவங்களை வளைத்தாள் அவள்.
“இப்படியே தூக்கிட்டு வெளிய போகவா?”
அப்போதுதான், யதார்த்தம் அவள் மனதை உலுக்கியது. அவள் இன்னும் புடவை கட்டாமல் தான் இருந்தாள். அந்தரங்கமான பாகங்கள் அத்தனையையும் அவன் அந்த நெருக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையால் அவள் உள்ளத்தில் விவரிக்க முடியாத, வித்தியாசமான உணர்வுகள் அரும்பத் தொடங்கின.
மறு நொடி அவளை கட்டிலில் வீசி எரிந்திருந்தான் குமரன். அவனது முகத்தில் வெறுப்பு குடி கொண்டிருப்பதே இப்போதுதான் அவள் புத்திக்கு உரைத்தது. ஒற்றைக் காலில் கட்டில் மேல் ஏறியவன், கூரையில் தொங்கிக் கொண்டிருந்த புடவையை, ஒரே தாவில் எக்கி பிடித்தான். அதை இரக்கமே இன்றி அவள் முகத்தின் மீது வீசி எறிந்தான். அவளை ஒரு வெறுப்பான பார்வையால் துளைத்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.
அந்த நொடி, மயிலாவின் இதயம் சுக்கு நூறாக சிதறியது. கணவனின் உதாசீனம் தந்த அவமானத்தில் அவள் முகம் சிவந்தது. அவளது கன்னங்களில் கண்ணீர் திரையிட்டது.
‘சற்று முன்பு அவன் தந்த அரவணைப்பு ஒரு கானல் நீரா? அரைகுறையாய் நிற்கும் பெண் மீது, பெயரளவிற்கு கூட ஆசை வரவில்லையா? இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்வதால், இகழ்ந்து அளித்த பரிசா இது?’ என்னென்னவோ எண்ணத் தோன்ற, கட்டிலில் சுருண்டு அழுதாள்.
வெளியே செவத்தம்மா பாட்டியின் பேச்சுக்குரல் கேட்க, விருட்டென எழுந்து புடவையை கட்டிக்கொண்டாள். கண்ணீர் தடங்களை அழித்துவிட்டு அவள் வெளியே வருவதற்குள், குமரன் புறப்பட்டு தோட்டத்தை பார்க்கச் சென்று விட்டான். பாட்டி தனியாக உட்கார்ந்து, அடுக்களையில் எதையோ சமைத்துக் கொண்டு இருந்தார்.
மயிலா பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். செவத்தம்மா, அவள் முகத்தை பார்த்தே, நேற்றிரவு அவர்கள் இருவருக்கும் நடுவில் எதுவும் நடக்கவில்லை என்று கண்டுபிடித்து விட்டார்.
“என்னடி ராங்கிப் புள்ள? என் பேரன் என்னத்த சொல்றான்? அவனுக்கு இன்னும் கோவம் தெளியலயா?” என்று பாட்டி கேட்டதும், மயிலா பொலபொலவென கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
பாட்டி அவள் கண்களை துடைத்து விட்டு, “அழாத கண்ணு! நீ அழுதா எனக்கு நெஞ்சு வெடிக்குற மாதிரி இருக்குல்ல. எனக்கு அவன் வேற நீ வேற இல்ல தாயி. நீயும் எனக்கு ஒரு பேத்தி மாதிரிதானே? உனக்கு ஏதாச்சும் ஒண்ணுனா, இந்த கிழவி சும்மா பாத்துக்கிட்டு இருப்பேனா? அப்புறம் பாட்டின்னு நான் எதுக்கு இங்க குத்துக்கல்லு மாதிரி இருக்கேன்? நான் ஒன்னும் உனக்கு எதிரி வீட்டுக்காரில்ல! என் பேரன் ஏதாச்சும் கொரங்குச் சேட்டை புடிச்சா சொல்லு, அவன உண்டு இல்லன்னு பண்ணிப்புடுறேன்…” என்று சொன்னார்.
“பாட்டி, நான் செஞ்சது தப்புதான்! ஆனா, ஏன் அதை செஞ்சேன்? எப்படியாச்சும், என் மச்சான கல்யாணம் கட்டிக்கணும்ங்குற ஆசைலதானே? எனக்கு அவர அந்தளவுக்கு உசுராட்டம் பிடிக்கும்! ஆனா, என் மச்சான் என் பாசத்த கொஞ்சங்கூட புரிஞ்சுக்க மாட்டேங்குறாரு. என்னப் பாத்தாலே நெருப்பப் கக்குற மாதிரி பாக்குறாரு. என்னைய அவருக்குப் புடிக்கல போல பாட்டி!” என்று சொல்லி புலம்பி அழுதாள்.
பாட்டி ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டு, “சரி சரி! புருஷன் பொண்டாட்டி வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும். முதல் நாளே அழுது கரைஞ்சா எப்படி? முதல்ல இதை சாப்பிடு. உடம்பு தெம்பா இருந்தா தான், அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும்” என்று சொல்ல, மயிலாவும் அழுது கொண்டே அதை சாப்பிட ஆரம்பித்தாள்.
அவளுடைய வெகுளித்தனத்தை பார்த்து, பாட்டிக்கு பாவமாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்ணை, தன்னுடைய பேரன் கஷ்டப்படுத்துகிறான் என்று நினைத்து வருத்தப்பட்டார். என்னதான் அவள் தன் பேரன் மீது தீராத பழியை போட்டு, அவனை அவமானப்படுத்தி திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அந்த ஊரிலேயே மயிலாதான் அவனுக்கு பொருத்தமான பெண் என பாட்டிக்கு தெரியும்.
அதிலும், அந்த ஊரிலேயே ஏழாவது வகுப்பு வரை படித்த பெண் அவள் ஒருத்தி தான். அவள் போன்று படித்த ஒரு பெண்ணைத்தான், தன்னுடைய பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த பாட்டிக்கு, அது தானாகவே நடந்ததில் உள்ளூர சந்தோஷம்தான். இப்படி ஊர் சிரிக்க இந்த கல்யாணம் நடந்து விட்டதே! என்றுதான் சங்கடப்பட்டார்.
“அழாத புள்ள! இப்ப என்ன வந்துருச்சு உனக்கு? என் பேரன் உன்னப் பாத்தாலே நெருப்பாட்டம் கொதிக்கிறான், அவ்ளோதானே? பொம்பளைங்க நெனைச்சா ஆகாத காரியம்னு ஒண்ணுமே இல்ல. அவன் எங்கயும் போகாம, உன்னையே சுத்தி சுத்தி வர வைக்கிற அளவுக்கு இந்த கிழவிகிட்ட ஒரு யோசன இருக்கு! அதை செஞ்சதுக்கு அப்புறம் பாரு, அவன் உன்ன விட்டு ஒரு அடிகூட நகர மாட்டான். உன்னையே வட்டம்கட்டி வருவான்” என்று சொல்ல, மயிலா வெட்கப்பட்டு, முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.
“என்ன பாட்டி? நீ என்னத்த சொல்ற? அப்படி என்ன திட்டம் வச்சிருக்க?”
“அதெல்லாம் இப்ப சொன்னா பலிக்காது கண்ணு! ராத்திரி வரட்டும். அப்புறம் உனக்கே தெரியும்!” என்றார் செவத்தம்மா.
(ஆபரேஷன் செவத்தம்மா… ஆன் தி வே! அவனுக்கு தெரிஞ்சா என்னாகுமோ?!😂)
