தனது திருமணம் குறித்து எவ்வளவு யோசித்தும் அதற்க்கான பதிலை எப்படி தருவது என்று யோசித்தே விஜயராகவனின் நேரம் கழிந்தது.அலுவலகத்தில் வேலை செய்யும்பொழுதும்,வீட்டில் மற்றவர்களிடம் பேச்சுக்கொண்டு இருக்கும் பொழுதும் எழாத யோசனைகள் எல்லாமே தயாவுடன் இருக்கும்பொழுதும்,தனிமையிலும் திருமணம் குறித்த யோசனைகள் அவனை ஆழமாக தாக்குகிறது.
முதலில் தனக்கு எதற்க்காக இன்னொரு திருமணம்?ஏற்கனவே பட்ட துன்பம் இந்த ஜென்மம் முடியும் வரை போதுமே! இன்னுமா… அந்த பெண் திவ்யாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும்,அவள் ஒரு குழந்தை பிறந்த பிறகு தன்னையும்,குழந்தையையும் விடுத்து பிரிந்து சென்றதையும் திருமணம் செய்துகொள்ளவென்று பார்க்கப் போகும் பெண்களிடம் விளக்கி சொல்லி ,’எவ்வளவு அவமானம். முன்பின் தெரியாத பெண்ணிடம் என்னை பற்றிய வாழ்க்கையின் ரகசிய பக்கங்களை சொல்வது அவ்வளவு எளிதான விஷயமா?
சமூகத்தின் எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவன் நான். எனது பலவீனத்தை எப்படி கடை விரிக்க முடியும்?அப்படியே திருமணம் என்று ஒன்று ஆனாலும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் கூட என்னை திருமணம் செய்துகொண்ட பிறகு அவள் என்னிடம் எப்படி நடந்து கொள்வாள்? என்னுடைய குழந்தை தயாவிடம் அவள் நடந்து கொள்ளும் முறை எவ்வாறானதாக இருக்கக்கூடும்?
என்றாவது குழந்தையை தரக்குறைவாக நடத்தினாலோ,குழந்தையை அவள் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினாலோ வளர்ந்த பிறகு தயாவிடம் அந்த வார்த்தைகளின் தாக்கம் இருக்கக் கூடுமே!
சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இப்போது திருமணம் செய்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?
இந்த வயதின் இளமையின் தேவையை மட்டும் கட்டுப்படுத்திக்கொண்டாலே போதும்.திருமணம் என்று ஒன்று எனது வாழ்வில் ஏற்கனவே முடிந்தது. இன்னொரு கயிறை பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு,நான் அந்த கயிறால் இறுகுபட வேண்டாம்.’ என்று முடிவெடுத்தவன் அதை தெளிவாகவே பெற்றவர்களிடம் சொல்லியும் விட்டான்.
அவனை பெற்றவர்களுக்கு அவனிடமிருந்து இன்னமும் தெளிவான பதில் தெரியவேண்டி இருந்தது. ‘அது அவன் மனதில் திவ்யா இன்னமும் இருக்கிறாளா…அப்படி இருக்கிறாள் என்றால் எந்த இடத்தில இருக்கிறாள்?அவள் மீண்டும் இவனிடம் வாழ்க்கையை தொடர,குடும்பம் நடத்த விருப்பம் கொண்டு வந்தால்,அப்போது அவளை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவளுடன் வாழ்வதற்கு அவன் மனம் தயாராகி விடுமா ? ‘
இதுபோன்ற கேள்விகளை மகனிடம் கேட்பதற்கு பெற்றவர்களுக்கு தயக்கம் தான்.ஆனால்,இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் அவனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது என்று புரிந்ததாலேயே அவனிடம் ஒவ்வொன்றாக கேட்டே விட்டார்கள்.
அவனிடமிருந்தும் தெளிவான ,எந்த சஞ்சலமும்,குழப்பமும் இல்லாத தெளிவான பதிலே கிடைத்தது.
“ம்ஹும்…திவ்யா என்னை விட்டு, என்னோட காதலை உணராம போயிருந்தா அது பெரிசு இல்லை. மனுஷ மனசு எப்போ எப்படி பிஹேவ் பண்ணும்னு சொல்ல முடியாது. உணர்ந்து திரும்பி வந்தா கண்டிப்பா ஏத்துப்பேன். ஆனா, அவ என்னோட உணர்வுகளை மட்டும் மிதிச்சிட்டு போகல.என்னோட சின்ன குழந்தை தயா? பிடிக்காத குழந்தையா பெத்தவளுக்கு எப்படி இருக்க முடியும்? கர்ப்பமா இருக்கும் பொழுது தயாவை பெத்துக்க மாட்டேன்னு ஒரே ரகளை.அபார்ஷன் செஞ்சே ஆகணும்னு அப்படி ஒரு சண்டை. குழந்தை நல்லபடியாக பிறக்கணும்னு நா பட்ட கவலை?
டாக்டர்,’ அபார்சன் செய்யுற நிலை கடந்தாச்சு.இனிமே எதுவும் செய்ய முடியாது.உங்க ஹெல்த் நீங்க சரியா பாக்காம விட்டா,பிறகு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் வரும்’னு சொன்னபிறகுதான் அவ சரியா தன்னை கவனிச்சிக்கவே ஆரம்பிச்சா.
குழந்தை பிறந்த பிறகு என்னோட லைப்,சுதந்திரம்னு என்னென்னவோ பேச்சு. நானும் ,குழந்தை பிறந்தபிறகு வர டிப்ரெஷன்னு டாக்டர்கிட்டே கூட்டிட்டு போய் காமிச்சு,கடைசில எனக்கு நான் முதலில் முக்கியம்னு சொல்லிட்டு கிளம்பிட்டா.
இப்போ அவளே என்னோட வாழ விரும்பி திரும்ப வந்தாலும் ,நடந்த விஷயங்களை என்னால மறக்கவும் முடியாது.மன்னிக்கவும் முடியாது. இன்னொரு கல்யாணத்துக்கு தயாராகவும் முடியாது. இந்த விஷயங்களை யாரோ ஒரு பொண்ணுகிட்ட போயி சொல்லி,என்னை கல்யாணம் செஞ்சுக்கன்னு கெஞ்சவும் முடியாது.இனிமே இதைப்பற்றிய பேச்சுகள் வேண்டாம் “என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
மகன் சொன்ன விஷயங்களை பெற்றவர்கள் மீண்டும் யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.அவனை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்று.
இன்னொருபக்கம் திவ்யா, அவளும் விஜயராகவனுடனான தன்னுடைய காதல்,திருமணம் குழந்தை போன்ற விஷயங்களை யோசித்துக்கொண்டு இருந்தாள்.தீபன் இவ்வளவு சீக்கிரம் தன்னை விடுத்து,தனக்கான ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்வான்..விட்டுவிட்டு சென்று விடுவான் என்றெல்லாம் அவள் நினைத்து பார்த்திருக்கவில்லை.
விஜயராகவனின் “நாம எதுவா இருந்தாலும் பேசி சரி செஞ்சுக்கலாம்.குழந்தையை பார்த்துக்க பேபி சிட்டெர் போடலாம்.நீ வேலைக்கு போ. உன்னோட தனித்துவம் போகமா பார்த்துக்க நா இருக்கேன். குழந்தை பாவம்.இந்த நேரம் அவளுக்கு அம்மா வேணும் .ப்ளீஸ் யோசிச்சு டிசைட் பண்ணு திவி ” என்ற அவனது வார்த்தைகள் ..இல்லை..கெஞ்சல்கள்.இப்போது தனது காதுகளில் ஒலிப்பது போலவே இருந்தது பெண்ணுக்கு.
இப்போது தயா கொஞ்சம் வளர்ந்திருப்பாள்.நிச்சயம் விஜய் வேறு பெண்ணை திருமணம் செய்திருக்க மாட்டான் என்று சொல்லியது அவள் மனது .தீபன் அவள் நினைவுகளில் சற்று பின்னே செல்ல அந்த இடத்தை விஜய் நிரப்பிக்கொண்டான்.
தனிமையை அவளால் உணரமுடிந்தது. எவ்வளவு நேரம் வேலை செய்யமுடியும்? அல்லது வெளியே செல்வது ,கோவிலுக்கு செல்வது என்று தன்னை பிசியாக வைத்திருக்க முயற்சி எடுத்தாள்.ஆனால் எந்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலும் அது முடிந்துதானே தீரும்?
வேறு யாரையும் திரும்பவும் தனது வாழ்க்கைக்குள் அனுமதிக்கவும் பயமாகவும்,தயக்கமாகவும் இருந்தது.ஏற்கனவே தனது வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் வந்து சென்ற பிறகு திரும்ப எந்த விதமான வாழ்க்கையை தெரிவு செய்யவேண்டும்?
நிச்சயமாக வழக்கமான இந்திய திருமண உறவு அவளுக்கு வேண்டாம்.கமிட்மெண்டுகளை சுமந்துகொண்டு ஓயாமல்,கணவன் – குழந்தைகள் -மாமியார் -மாமனார் -மற்றுமுள்ள உறவினர்கள் கூட்டம் என்று வாழ்க்கையை ரசித்து வாழ தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை திவ்ய அறவோடு வெறுக்கிறாள்.மீண்டும் எதுவும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்குமா என்று அலுவலகத்தில் கேட்டுப்பார்த்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.’இப்போது வேலை செய்யும் ப்ராஜெக்ட் முடிந்த பிறகு மீண்டும் வேறு ப்ராஜெக்ட் இன்டெர்வியு போகவேண்டும் .ஆன்சைட் இப்போதைக்கு இல்லை ‘என்று விட்டார்கள்.
தீபனோடு சேர்ந்து இதே அலுவலகத்தில் வேலை பார்த்ததும்,இப்போது அவனுக்கு திருமணம் என்பதும் ஜீரணிக்க முடியவில்லை. அதிலும் தனியாக வீடே வாங்கிக்கொண்டு சென்றதெல்லாம் வேறே லெவல் என்றுதான் தோன்றியது.
திவ்யாவுக்கு சொந்தமான வீடு இருக்கிறது.அதுவும் சென்னையில்.விஜய் தெரிவு செய்து வாங்கியது. அதனாலேயே அந்த வீட்டில் வசிக்க திவ்யாவுக்கு விருப்பம் இல்லை. லோன் இன்னமும் அடைத்துக்கொண்டுதான் இருக்கிறாள்.மூன்று படுக்கை அறைகள் கொண்ட வில்லா.கேட்டட் கம்யூனிட்டியில்.வாடகை பணம் மட்டும் இவளுக்கு ஐம்பதினாயிரம் வருகிறது.இன்று வேலையை விட்டால் கூட பிரச்சனை இல்லை எனும் அளவுக்கு பணம்.
இரவு வீட்டுக்கு வந்ததில் இருந்தே சந்தனாவுக்கு காய்ச்சல் படுத்தி எடுத்தது. கெம்ப் சென்ற இடத்தில நீரோ,உணவோ,ஏதோ ஒன்று உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவள் அம்மா கீதா திட்டி தீர்த்துவிட்டாள். அக்காவின் காய்ச்சல் பார்த்து ராகினிக்கு மூட் அப்செட் என்று தான் சொல்லவேண்டும். பேசவும், காண்பிக்கவும்,விளையாடவும் என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பொழுது அக்கா இப்படி கிழிந்த நாராய் படுத்திருப்பது அவளுக்கு என்னவோ போல் மனதுக்கு இருந்தது.
இரண்டு நாட்களுக்கு எழுந்திருக்கவும் முடியாமல் தான் கிடந்தாள் பெண். சாப்பிட்டால் உணவு வெளியே வந்து விடும்போல் பிரட்டல்.வாய் கசப்பு.கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். யாரிடமும் பேசுவதற்குக்கூட உடம்பில் சக்தி இல்லை.
வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மகளின் அருகிலேயே amarndhirundhaa; கீதா. பிரச்சனை என்னவென்றால் சந்தனாவுக்கு லேசில் உடம்புக்கு படுத்தாது.எப்போதாவது உடம்பு நலம் பாதிக்கப் பட்டால் அவளை ஒரு வழி செய்துவிடும். திரும்ப சீராக குறைந்தது ஒரு மாதமாவது வேண்டும். சிறு வயதிலிருந்தே இப்படித்தான்.
ரங்கன் மகளுக்காக அவள் பணிபுரியும் மருத்துவமனையில் லீவுக்கு சொல்லிவிட்டார். வீட்டின் அருகில் இருக்கும் மருத்துவமனையில் தான் காண்பிக்கிறார்கள். சந்தனா வேலை செய்யும் மருத்துவமனையில் அங்கேயே அட்மிட் செய்து பார்த்துக்கொள்ள சொன்னார்கள்தான். ரங்கன் அதுபற்றி மனைவியிடம் இன்னமும் பேசவில்லை. ஒருவேளை காய்ச்சல் குறையவில்லை என்றால் அதுபற்றியும் யோசிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சென்றவுடன் மனைவியிடமும் இதுபற்றி பேசிவிட்டார். கீதா ,மகளின் அருகிலிருந்து பார்ப்பதால் இன்னமும் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனையில் சேர்த்துவிடவேண்டும் என்று கணவரிடம் சொல்லிவிட்டாள்.
காய்ச்சலின் தீவிரம் அதிகமாகிக்கொண்டிருந்தது. முகம் முழுவதும் சிவந்து விட்டது. பயம் கொண்ட பெற்றவர்களை அவள் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே சேர்த்துவிட்டார்கள்.
ஒருவழியாக காய்ச்சலின் தீவிரம் குறைய மூன்று நாட்கள் ஆனது . அதுவரை ராகினியும் கீதாவும் மருத்துவமனையில் சந்தனாவுடன் இருக்க ரங்கன் மட்டும் மருத்துவமனைக்கும்,வேலைக்கும்,வீட்டுக்குமாக அலைந்தார். அவருக்கு விடுப்பு கிடைக்கவில்லை.
அந்த வாரம் முழுமைக்குமான விடுப்பு மருத்துவமனையால் ஒத்துக்கொள்ள பட்டிருந்தது. நான்காம் நாள் சந்தானாவை வீட்டுக்கு அனுப்பினார்கள். வீடு வந்தவளுக்கு சாப்பிட்ட மருந்துகளின் தீவிரத்தில் தூக்கம் சுழற்றியது.
விடுப்பில் இருப்பதால், அம்மாவின் கைமணத்தில் கொஞ்சம் நன்றாகவே சாப்பிட்டாள். துவண்டிருந்த உடம்புக்கு மிளகு ரசம் அமிர்த்தம்போல் இருந்தது. கொஞ்சம் உடம்பு நிலை தேறவும் , மருத்துவமனையில் விடுப்பு முடியவும் சரியாக இருந்தது. ராகினி அக்காவின் அருகிலேயே இருந்தாள். அதுவே அவளுக்கு இப்போது சந்தோஷத்தை கொடுத்தது.
சென்ற நாட்களில் அக்காவின் நிலைமை பார்த்து ராகினி வெகுவாக பயம் கொண்டிருந்தாள். மீண்டும் திங்கட்கிழமை அன்று காலை வேலைக்கு கிளம்பும்பொழுது சோர்வு மிச்சம் இருந்தது.
அவளுக்கு வி ஐ பி தளத்திற்கு பதிலாக அந்த வாரத்திற்கு மட்டும் கீழே மருத்த்துவருக்கு உதவி செய்ய என்று வேலை ஒதுக்கியிருந்தார்கள். மதிய நேரத்தில் ஓய்வு கிடைத்ததில் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டாள்.
