ஒரு ஞாயிற்று கிழமையில் மாலையில் விஜயராகவனது மொத்த குடும்பமும் கிளம்பி சந்தனாவின் வீட்டுக்கு சென்றார்கள். அன்று சந்தனாவுக்கு விடுப்பு கிடையாது. காலை நேர பணி என்பதால் அவள் மருத்துவமனைக்கு சென்று விட்டிருந்தாள். வீட்டில் கீதாவும் அரங்கனும் இருந்தார்கள். ராகினி காலையிலேயே தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டிருந்தாள் தோழிகள் ஐந்து பேர் கொண்ட குழு பள்ளியின் ஆண்டு விழாவுக்காக நடனம் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.அங்கே சாப்பிட்டு விடுவதாகவும் ராகினி சொல்லிவிட்டாள்.
கணவனும் மனைவியுமாக சேர்ந்து அடுத்த வாரத்திற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தார்கள். ரங்கன் அவர்கள் நாலுபேரின் துணிகளையும் அயர்ன் செய்து கொண்டிருக்க, கீதாவோ பத்து நாட்களுக்கு தேவையான குழம்பு,ரசப்பொடிகளை அரைத்து வைத்தார். மறுநாளைக்காக கிரைண்டரில் இட்லி மாவு அரைபட்டுக்கொண்டிருந்தது.
நடுவில் விடுப்பு நாளின் பொழுது மீண்டும் அந்த வாரத்தில் மீத நாட்களுக்குத் தேவையானவற்றை சந்தனா செய்து விடுவது வழக்கம். ரங்கனுக்கும் கீதாவுக்கு சந்தனாவின் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ என்ற பெரும் அச்சம்.
வெளிநாட்டுக்கு வேலைக்கென்று சென்றாலாவது அங்கே யாரையாவது பிடித்து திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.இங்கே நம்முடன் இருக்கும் பொழுது அவள் தனிமையை உணர்வதில்லை. அவள் தனியாக கண்காணாத தேசத்திற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக அந்த உணர்வு எவ்வளவு கொடுமையானது என்று உணர வாய்ப்பு இருப்பதாக இருவரும் நம்பினார்கள்.
வீட்டு வாயிலில் அழைப்பு மணி ஒலிக்கவே , மாவை அள்ளியபடி இருந்த கீதா அடுக்களையிலிருந்து வந்து கதவை திறந்தார். வெளியே நின்றிருந்தவர்களை கீதா இதுவரை பார்ததது இல்லை. நடுவில் கொஞ்சம் உயரமாக நின்றிருந்த முப்பதுகளில் இருக்கும் ஆணை மட்டும் எங்கேயோ பார்த்தது போல இருந்தது.
‘நீங்க ..” என்று கீதா கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே அரங்கனும் அங்கே வந்துவிட்டார். இருவருக்கும் வந்திருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. வாணி தான் ஆரம்பித்தார்,” நாங்க சந்தனா பத்தி பேச வந்திருக்கோம்.வெளியே நின்னு பேச வேணாமே!”
திகைப்பிலிருந்து வெளியே வந்திருந்த கீதா அவர்களிடம்,”சாரி,வீட்டுக்கு வந்தவர்களை வெளியே நிக்க வச்சே பேசிட்டிருக்கேன். உள்ளே வாங்க’ என்று அவர்கள் உள்ளே நுழைய வழி விட்டு நின்று கொண்டார்.
அவர்கள் உள்ளே நுழையவும் ,மூவரையும் அங்கே இருந்த கதிரைகளில் உட்கார சொல்லிவிட்டு வேகமாக அடுக்களைக்கு சென்ற கீதா கைகளை அவசரமாக கழுவிக்கொண்டு வந்திருப்பவர்களுக்காக தம்ளர்களில் நீரை கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கிக்கொண்ட மூவரும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு பெரியதாக வேலை வைக்காமல் கீதாவே ஆரம்பித்தார்.” எங்க சந்தனா பற்றி ஏஹோ பேசவேண்டும் என்று சொன்னீங்களே?”
சுதாரித்துக்கொண்ட ஆனந்த் பேச ஆரம்பித்தார். ” இவன் என்னோட மகன் விஜயராகவன்.இவனுக்கு உங்க பொண்ணு சந்தனாவை கல்யாணம் செய்ய பொண்ணு கேட்டு வந்திருக்கோம் .எங்க பையனை பற்றி சொல்லனும்னா, இந்தியாவோட பெரிய கம்பெனிகள்ல ஒண்ணு xxxx கம்பெனி.அதுல சிஇஓ வா இருக்கான். **** ல மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் படிச்சிருக்கான்.
வருஷத்துக்கு ரெண்டு கோடி சம்பளம் வருது. இதைத்தவிர அந்த கம்பெனில அவனுக்கு குறிப்பிட்ட சதவிகித பங்குகளும் இருக்கு. வயசு முப்பத்து நாலு ஆகுது. உங்க பொண்ணுக்கு எங்களை நல்லாவே தெரியும் .விஜய் ஆக்சிடென்ட் ஆகி இருந்த பொழுது உங்க பொண்ணுதான் பார்த்துக்கிட்டாங்க.” என்று சொல்லி நிறுத்திவிட்டு மகனையும், மனைவியையும் ஒரு பார்வை பார்த்தார்.
பிறகு வாணி தொடர்ந்தார்,”எங்க பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அது விவகாரத்துல முடிஞ்சிருச்சு .ஒரு பெண் குழந்தை உண்டு நாலு வயசாகுது. அவளோட பெயர் தயா. சந்தனாவுக்கும் தெரியும் ‘ என்று நிறுத்தினார்.
வாணியும் ஆனந்தும் சந்தனாவின் பெற்றவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்த்திருக்க அரங்கனோ,”எங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லை. சந்தோஷம்தான். பத்து நிமிஷத்துல சந்தனா வீட்டுக்கு வந்திருவா.நீங்க அவள் கிட்டேயே பேசுங்க. ஒத்துக்கிட்டா எங்களுக்கும் சம்மதம் தான்” என்றுவிட்டார்.
ஆனந்துக்கும், வாணிக்கும் குழப்பம். “புரியல, உங்க பொண்ணு ஒத்துக்க மாட்டான்னு நினைக்கிறீங்களா? உங்க வார்த்தைகள் கொடுக்குற அர்த்தம் அப்படி தான் தெரியுது.உங்களுக்கு முழு சம்மதம் தானா?மனசுல ஏதாவது நெருடல் இருக்கா? ஏதாவது எங்ககிட்ட கேட்கணுமா? என்னோட பையனோட முதல் கல்யாணம்,குழந்தை இந்தமாதிரி? வாணி கேட்டேவிட்டார். அவரது குரலில் அதிகமான பதட்டம் தெரிந்தது.
அதை கீதாவும் அரங்கனும் கவனித்துவிட்டார்கள். அரங்கன்தான் சொன்னார்,” இல்ல,அப்படி இல்ல. உங்க பையனை பற்றி எங்களுக்கு நிச்சயம் தெரியணும்.அதுக்கு முன்னால உங்க பையனும் சந்தனாவும் மனம் திறந்து பேசட்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கட்டும். ரெண்டு பேருக்குமே வயசு முப்பதை தாண்டிருச்சு. ரெண்டு பேருமே பக்குவப்பட்டவங்களா இருப்பாங்க. பரஸ்பரம் பிடிச்சிருந்து கல்யாணம் கூடி வந்த பிறகு எங்களுக்கு தேவையான விஷயங்களை நாங்களே கேட்டுக்கறோம்.இப்போ.. உங்க பையனை பற்றிய விஷயங்கள் எங்களுக்கு …”
ஆனந்தனின் வார்த்தைகளில் இருந்தது என்ன? ஏதோ அவர் பேசுவதே வித்தியாசமாக இருந்தது வந்திருந்த மூவருக்கும். வழக்கமாக பெண்ணை பெற்றவர்கள் பெண் கேட்டு வரும் மணமகன் பற்றி தெரிந்து கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.யார் என்ன என்றெல்லாம் விசாரிப்பார்கள்.இவர்கள் என்ன என்றால் முதலில் பெண் சம்மதம் தரட்டும்.பிறகு பேசிக்கொள்ளலாம் என்கிறார்கள்.
அவ்வளவு ஏன் ஏற்கனவே திருமணம் ஆகி கையில் பெண் குழந்தை இருக்கிறது என்று சொன்ன பிறகும் கூட பெண்ணை பெற்றவர்கள் இவ்வளவு நிதானமாக பேசுவதை கேட்டால் ஆச்சர்யமாக இருந்தது. அவர்களிடம் எந்த உணர்வுகளின் தாக்கமும் இல்லை.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தனா வீட்டுக்கு வந்துவிட்டாள். வந்தவள் முகமே அவ்வளவு களைப்பை காட்டியது. உள்ளே நுழைந்தவளுக்கு பெரியதாக எந்த அதிர்ச்சியும் இல்லை.’வாங்க’ என்ற அழைப்புடன் தனது அறைக்கு சென்றுவிட்டாள். தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள விரைகிறாள் என்று வந்தவர்களுக்கும் புரிந்தது. மருத்துவமனையிலிருந்து விட்டு வருபவர்களுக்கு ஒரு குளியலை போட்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது இயல்பு தானே!
குளித்துவிட்டு பளீரென ஒரு அனார்கலி கட்டில் இருக்கும் சுரிதாரை போட்டுகொண்டு , ஒப்பனைகள் எதுவும் இல்லாமல்,நெற்றியில் சிறு பொட்டுடன் வெளியே வந்தவளுக்கு சூடான காபியை நீட்டினார் கீதா. வந்தவர்களிடம்,”நீங்க எல்லாம் காபி குடிசீங்களா,இன்னொரு கப் குடிக்கிறீங்களா?” என்று கேட்ட பெண்ணை எந்த விதத்தில் சேர்ப்பது என்று வாணி -ஆனந்துக்கு புரியவில்லை.
‘திருமணம் குறித்து பேச வந்திருக்கிறோம் என்று இவளுக்கு புரிந்திருக்கிறது’ என்று புரிந்தவர்களுக்கு சந்தனாவின் இன்னொரு பரிமாணத்தை பார்ப்பதை உணர்ந்து கொண்டார்கள். அளவுக்கு மீறிய நிதானம். பதட்டமில்லா நடவெடிக்கைகள் .இவள் மருத்துவம் படித்திருக்கலாம் என்று ஆனந்துக்கு இந்தக்கணம் நிச்சயம் தோன்றியது.
வாணி சந்தனாவிடம், “நாங்க உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கோம்.உன்னோட பேரண்ட்ஸ் உனக்கு பிடிச்சிருந்தா மேலே ப்ரொசீட் பண்ணலாம்னு சொல்றாங்க. உன்னோட சம்மதம் வேணும்.ஏற்கனவே உன்கிட்ட தன்னை பற்றிய விஷயங்களை ராகவன் சொல்லியிருக்கான்னு நினைக்கிறோம்.”என்றார்.
காபியை நிதானமாக குடித்து முடித்தவள், ” சொல்லியிருக்காரு மேம். என்னை பற்றிய விஷயங்களை அவர் தெரிஞ்சுக்க வேணாமா?அதுக்குப் பிறகும் அவருக்கும் உங்களுக்கும் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம் “என்றாள்.
“சரி, நீயும் விஜயும் வெளியே எங்கயாவது போய், நிதானமா மனம் விட்டு பேசுங்க. சரின்னு தோணிச்சுனா மேற்கொண்டு பேசலாம் “என்றார் ஆனந். விஜய் எதற்குமே வார்த்தைகளை விடவில்லை.நடப்பவற்றை அவதானித்துகொண்டும்தான் இருக்கிறான். அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்.ஏனோ இதுவரை அனுபவித்திராத ஒரு பயம் கலந்த அவஸ்தை.
“ம்ஹும்,அது சரி வராது சார். என்னை பற்றிய விஷயங்களை முழுமையா நீங்களும் தெரிஞ்சுக்கணும்.இது ஏதோ சாதாரணமா பெண்ணும் மணமகனும் பேசுற பேச்சு கிடையாது. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? எனக்கு பிடிச்சது -உனக்கு பிடிச்சது,நமக்கான காமன் விஷயங்கள் அந்த மாதிரி இல்லை. ரொம்பவே டீப்பா, என்னை நீங்க மூணுபேரும் தெரிஞ்சுக்கணும்.அதுக்குப் பிறகும் உங்க மூணே பேருக்குமே பிடிச்சிருந்தா,அப்ஜெக்ஷன் இல்லன்னா மேற்கொண்டு பாக்கலாம் .” பெண்ணின் குரலில் தீர்மானமாக’ என்னை பற்றி தெரிந்து கொண்டால் என்னை மறுத்து விடுவீர்கள்’ என்ற நம்பிக்கை இருந்தது.
ஏற்கனவே மறுத்துவிட்டு வந்த பிறகு ,’விஜயராகவன்’பற்றிய எண்ணங்களை தூர நிறுத்திவிட்டு தனது வேலைகளை பார்க்க தொடங்கி விட்டிருந்தாள். அதாவது எவ்வளவு தூர அவன் நினைவுகளை நிறுத்தி வைக்க விரும்பினாளோ அவ்வளவு நெருக்கமாக அவள் மனதிற்குள் விஜயன் விரைந்து கொண்டிருக்கிறான் என்பது அவள் மனம் ஒப்புக்கொண்ட நிஜம்.அவள் அதை மறுப்பதற்கு தயாராக இல்லை.அதே சமயம் இந்த நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறாள்.
தனது விஷயம் தெரிந்துவிட்ட பிறகு நிச்சயம் விஜயனின் மறுப்பு இதில் இருக்கும்.அதை மனதில் கொண்டுவந்தவிட்ட பிறகு அவனை மறப்பது எளிதாகிவிடும்.அவனை பற்றிய நினைவுகள் கூட கசந்துவிடும்.இதிலிருந்து கடந்து வந்து விடலாம் என்று அவளது சாம்பல் நிற பொருள் அவளுக்கு எடுத்துக்கூறியது.
கீதாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தங்களது மகளுக்கு எல்லோரையும் போல நல்ல குடும்ப வாழ்க்கை அமையாதா… நல்ல கணவன், குழந்தைகள் என்று அவள் நிறைந்த வாழ்க்கை வாழ்வதை பார்க்கவே மாட்டோமா? என்றெல்லாம் சஞ்சலங்கள். அதிலும் மகள் கடந்து வந்த பாதையை மீண்டும் அவளது வாயினாலேயே கேட்பது எவ்வளவு பெரிய கொடுமை?
விஜயராகவன் சொன்னான்,”உன்னோட பாதை எவ்வளவு முற்களோட இருந்ததுன்னு தெரிஞ்சுக்க எனக்கு விருப்பம் இல்ல.நம்மோட வருங்காலம் ,அதை நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருந்து சந்தோஷமானதாக மாத்திக்கலாம்.”
மறுப்பாக தலையசைத்தாள் சந்தானா. “இல்ல, நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய இருக்கு. முதல் விஷயம் நா பதினாறு வயசு பொண்ணுக்கு அம்மா.என்னோட பொண்ணு இப்போ பள்ளிக்கூடம் படிக்கிறாள்.இன்னும் அஞ்சு வருஷத்துல அவளுக்கே கல்யாண வயசு வந்திரும்.’
வாணியும் ஆனந்தும் அதிர்ச்சியில் எழுந்தே விட்டார்கள். இது எப்படி சாத்தியம்.சந்தனாவுக்கு பதினைந்து வயதில் குழந்தை பிறந்ததா! ஆனந்த் இதை வாய் திறந்து கேட்டேவிட்டார். கீதாவின் அழுகை அதிகமானது. அரங்கன் மனைவியை அணைத்து தேற்ற முயற்சி செய்தார். இப்போதும் விஜயராகவன் முகத்தில் என்ற மாற்றமும் இல்லை. கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக பார்த்து கொண்டிருந்தான்.
