மலர்-29
“நீ சொல்லறது சரிதான். ஆனா ஏதோ ஒரு ஆம்பிளை இந்த மாதிரி வந்துட்டு போனா உன்னோட பேரு கெட்டு போயிடாதா ? அவருதான் உனக்குப் புருஷன்னு உனக்குத்தான் தெரியும். நீங்க ஒன்னும் ஊரு கூட்டி கல்யாணம் பண்ணல. உனக்குத் தாலியும் கிடையாது. ப்ளீஸ் டீ எனக்கு என்னவோ ரொம்ப தப்பா தெரியுது. நீ என்னிக்குமே சந்தோசமா இருக்கனும். நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு முடிவெடு. அவரு ஆம்பிள. ரெஜிதா இல்லன்னா அம்ரு. அம்ரு இல்லன்னா… வேற யாராவது.
ஒனக்கு இன்னொன்னும் சொல்லறேன். விக்ரமுக்கு வேற இடத்துல பொண்ணு பாக்கறாங்க தெரியுமா ? அவங்கள்லாம் வேற மாதிரிடி. நமக்கு இதெல்லாம் செட்டாகாது. ஒன்னு நீ அங்க போ. இல்ல வேண்டான்னு சொல்லிட்டு லீகலா ஏதாவது ஒரு முடிவெடுங்க. இது எல்லாமே நான் மட்டும் இல்ல. உங்க வீட்டு ஆளுங்களும் யோசிச்சதுதான். அங்கே அமைதியாக நின்றிருந்த அன்னையும் சொன்னாள். .
“வீட்டு மாப்பிள்ளைன்னா எதுக்கு ரோட்டுல நிக்கறாரு? எதுக்கு ரெண்டு பேரும் தனியா வெளில போறாங்கன்னு கண்டபடி பேச ஆரம்பிச்சுட்டாங்க அம்மு. உன்ன பத்தி யாரும் தப்பா பேசறதை என்னால தாங்கிக்க முடியலடி.
“புரியுதும்மா. ஏதாவது ஒரு முடிவெடுக்கறேன்”
ஆனந்திடம் இதைப் பற்றிப் பேசினாள். அவனுக்கு இதன் வீரியம் புரியவில்லை.
“இங்க பாரு அமிர்தா எப்ப வேண்ணாலும் நீ அங்க வரலாம். நீ மட்டும். வேற யாரையாவது கூட்டிகிட்டு வரணுன்னு நினைச்சா நடக்காது.”
அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான். முதலில் எல்லாம் அவன் வரவு இனிமையாக இருந்தது போகப்போக பயமாக மாறியது. கோதையின் நிலை என்ன ? தன்னுடைய நிலை என்ன ? எதிர்காலம் என்ன ? அவளால் எந்த முடிவும் தனித்து எடுக்க முடியாது. அவளின் பயத்தை அதிகப்படுத்துவது போல காரணங்கள் வரிசை கட்டி நின்றன.
கோதையை மன நல மருத்துவரிடம் அழைத்து சென்றாள் . “அந்த புஜ்ஜிதான் இவங்களுக்கு மருந்து. ஒரே போடாக போட்டார் மருத்துவர். நம்பர் ஒன் மருத்துவர். வயதானவர். அவரின் மருத்துவ அனுபவமே ஐம்பது வருடங்களை கடந்திருந்தது. இன்னும் வேறு யாரை பெஸ்ட் என்று பார்ப்பது?”
மலைப்புடன் வீட்டிற்கு வந்தாள் . அவளுக்கு இப்போதெல்லாம் எப்படியாவது கோதையை பற்றி கணவனிடம் பேசி விட வேண்டும் என்று தோன்றியது. இப்படியே அமைதியாக எத்தனை நாட்களை ஓட்டுவது? கணவனிடம் பேச வேண்டும் என்று அவள் எத்தனை முறை நினைத்தாலும் அவளுக்கு அவனிடம் பேச பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது.
ஒரு நாள் விசாலம், “இங்க பாரு புருசன்காரன் வந்து வந்து வீட்டு வாசல்ல நிக்கறான்னா அவனுக்கு தேவை பொண்டாட்டி. ஒன்னு அவரோட அங்க போய் இரு. இல்ல அறுத்து விட்டுட்டு வேற என்னன்னு யோசி. இப்டி வந்து வந்து நின்னா பாக்கறவங்க என்ன சொல்லுவாங்க?”
முதலில் அமைதியாக சொல்லிக் கொண்டிருந்தவர் ஒரு நாள் பொங்கி விட்டார்.
அதற்கு ஏற்றார் போல் பக்கத்துக்கு வீட்டு அக்கா கடையில் பார்க்கும் போது ரொம்ப அக்கறையாக நலம் விசாரித்தார்.
“என்ன அம்மு? அடிக்கடி ஒருத்தரு உங்க வீட்டுக்கு வராரே யாரு அவரு ?
“அவரு எங்க வீட்டுக்காரருக்கா“
“வீட்டுக்காரரா? உனக்கு கல்யாணம் ஆனதே எங்களுக்கு சொல்லலியே? வெளியலையே நின்னு பேசறாரு. ஆளு நல்ல வாட்ட சாட்டமா இருக்கறாரு, வீட்டுக்குள்ள வேற வரலை, நீயும் அவரு கூட சிரிச்சுகிட்டே வெளில போறியா, அதான் யாரோ பிரண்டுன்னு நினச்சேன். இருத்தாலும் சொல்லறேன் அம்மு . காலம் கெட்டு கெடக்கு. யாரையும் நம்பி ஏமாந்து போயிடாத.”
அக்கறையான அவரின் பேச்சில் இவர்கள் கணவன் மனைவி என்பதை நம்பவில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது.
பின்ன ? தாலி இல்லாமல் நம் இனத்தில் திருமணம் என்றால் யார் தான் நம்புவார்கள்?
ஒரு நாளைக்கே நமக்கு இப்படி இருக்கிறதே அப்படி என்றால் அன்னை? மனம் கனத்தது.
இதைப் பற்றி கணவனிடம் சொன்ன போது அதை ஒரு விஷயமாகக் கூட யோசிக்கவில்லை அவன்.
ஒரு நாள் பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக இவள் காத்திருந்த போது சில பொறுக்கிகள் நின்று கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அவ்வபோது அங்கே இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள்தான். ஆனால் இன்று இவளைச் சுற்றி வந்து சுற்றி வந்து பேச ஆரம்பித்தார்கள்.
“டேய் மச்சீ பிகரு சூப்பர்”
“இன்னிக்கு ராவுக்கு நமக்கு செம்ம வேட்டதான்” இது இன்னொருவன்.
“டேய் அப்போ வேற ஒருத்தன் வருவான்டா?”
என்றான் முதலாமவன்
“யாரு புருசனா?”
“டேய் புருசன்னா தாலி எங்க?” என்றான் ஒருவன்.
“தாலி இல்லாத புருசனா? அப்போ இன்னிக்கு நான் புருசன்”
“நாளைக்கு நான்”
அவசரமாக, வந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தவளுக்கு அழுகை முட்டியது.
ஆனந்தன் வீட்டில் அவனுடன் இருக்கும் வரை அவன் கணவன் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுவே வெளியில் வந்து விட்டால்? ஒப்பந்தத் திருமணம் என்று அவன் சொன்ன போது அதன் வீரியங்கள் புரியவில்லை. அனுபவிக்கும் போது ? இனியாவும் முரளியும் எத்தனை சொன்னார்கள்? கேட்கவில்லையே? இப்போது? விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல்? இது என்ன?
ஆனந்திடம் சொன்னவுடன் கமிஷனரிடம் புகார் அளித்தான். அந்த ரெஜிதாவின் விஷயத்திற்கு பிறகு இவனுக்கு கமிஷனரிடம் நல்ல உறவு ஏற்பட்டிருந்தது. அவரின் மகனுக்கு இவன் கம்பெனியில் நல்ல உயர்தர வேலை தருவதாக சொல்லி இருக்கிறான். கேட்கவும் வேண்டுமா ? உடனேயே அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே அவர்கள் மீது இருந்த புகார்களையும் தோண்டி எடுத்தனர். பிறகு என்ன ? கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கபட்டனர்.
கமிஷனரை பார்த்து விட்டு வெளியில் வந்ததும் காரில் ,
“என்ன இப்போ நிம்மதியா ?”
அமிர்தாவின் மனமோ நடக்கும் சம்பவங்களால் கொதித்துக் கொண்டிருந்தது.
“எது நிம்மதி சார்? இதோ அந்த மூணு பேரு மேல கம்பளைண்ட் குடுத்துருக்கோம் சரி. ஆனா அக்கம்பக்கத்துல இருக்கறவங்க? அவங்கள நான் எப்டி பேஸ் பபன்னுவேன்? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னா யாருமே நம்ப கூட மாட்டேங்கறாங்க”
“மத்தவங்கள நம்ப வைக்கறது நம்ம வேலை இல்ல அமிர்தா”
“நம்பணுங்க. அது என்னோட காரக்டர் பத்தி சொல்லற விஷயம். நாம தனித் தீவுல இல்ல. ஒரு சமுதாயத்துல இருக்கோம். “ஊருடன் கூடி வாழ்” நாம நம்மள சுத்தி இருக்கறவங்க யாரையும் பகைச்சுக்க முடியாது. அக்கம் பக்கத்துல நாலு பேர் நமக்கு தேவை.”
“நீ சொல்லறதை சொல்லிக்கோ. இது எல்லாமே உன்னோட திங்கிங். நீ சொல்லற நாலு பேருதான் என்னையும் என்னோட குடும்பத்தையும் எங்கம்மாவை வச்சு கிண்டல் பண்ணி பண்ணி ஓட ஓட வச்சாங்க. இதோ இப்ப நீ இருக்கியே அந்த வீடுதான் நாங்க முன்னாடி இருந்த வீடு. நீ சொல்லற அந்த நாலு பேரு யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும். இங்க பாரு உனக்கு தாலி வேணுமா கேளு. நான் கட்டறேன். அதுவும் உனக்காகத்தான். எனக்கு தாலி மேல நம்பிக்கை இல்ல. ஆனா இப்ப இந்த நொடி நான் தயார் உனக்காக. ஆனா நான் தாலி கட்டின ஒடனே நீ என் வீட்டுக்கு வரணும். நீ மட்டும் . சரியான்னு சொல்லு. இப்பவே கடைக்கு போகலாம். தாலி வாங்கலாம். உனக்கு வேற என்னென்ன வேனுமோ எல்லாம் பண்ணலாம்” அசால்ட்டாக சொல்லி விட்டு காரை ரிவேர்ஸ் எடுத்தான்.
“இல்ல சார்! அது முடியாது. உங்க அம்மா தப்பானவங்களா இருந்திருந்தாலும் இந்த நிலையில் அவங்களை விடறது ரொம்ப தப்பு அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். தாலி கட்டினாலும் இல்லன்னாலும் இப்ப நாந்தான் உங்க பொண்டாட்டி. உங்களால முடியாத விஷயத்துக்கு பொறுப்பு நாந்தான் எடுத்துக்கணும் நாளைக்கே அவங்களுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால என்னை மன்னிக்கவே முடியாது. என்னை சார்ந்தவங்க யாரும் உங்க வீட்டுக்கு வரணுன்னு நான் கேக்க மாட்டேன். பட்! அவங்க இல்லாம நான் அங்க வர மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் சரி. இல்ல விவாகரத்து பண்ணணுன்னு நீங்க சொன்னாலும் சரி. நான் அவங்க இல்லாம வர மாட்டேன். அவங்க உங்களுக்கு உயிர் கொடுத்தவங்க. இப்ப? அவங்களோட உயிர் நீங்க தான். டாக்டரும் அதை தெளிவா சொல்லிட்டாரு. இதுக்கு மேலையும் நீங்க சொல்லறதே சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா சாரி! இனிமே என்ன பாக்க வராதீங்க. “
“ஓகே! இத்தனை நாள் எனக்கு கம்பனி கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அமிர்தவர்ஷினி.” கை கொடுத்தான்.
பதில் எதுவும் சொல்லாதவள் பார்த்த பார்வை அவ்வளவுதானா? என்று கேட்டது.
அவன் வெளியில் வேறு மாதிரி காட்டிக் கொண்டாலும் ‘நாந்தான் வேணுன்னு சொல்லுடி ப்ளீஸ்.. ‘ அவன் மனம் கெஞ்சிக் கொண்டிருந்தது.
“அன்னிக்கு காண்ட்ராக்ட் கிழிச்சு போடட்டுமான்னு கேட்டீங்கல்ல? கிழிச்சு போட்டுருங்க. இனிமே நமக்குள்ள எந்த உறவும் இல்ல. அப்புறம் எதுக்கு அந்த காகிதங்கள்? சொல்லி விட்டு பதில் பேசாமல் பேருந்து நிலையத்தில் வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஒடிச் சென்று ஏறி விட்டாள்.
அவனும்தான் முறுக்கிக் கொண்டான். பார்மலாக ஆரம்பித்த வாழ்க்கை பார்மலாக முடிந்துவிட்டது.
பேருந்தில் இருந்து வீட்டுக்கு விடுவிடுவென நடந்தாள். “ஓ” வென்று அன்னையின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். முரளியின் தோளில் தலை முட்டி கண்ணீர் சிந்த வேண்டும். இதற்காக ரொம்ப கடினப் பட்டு தன்னை அடக்கிக் கொண்டு வந்தாள். பேருந்தில் தெருவில் அழ விருப்பம் இல்லை.
நாம் நினைப்பது எல்லாம் நடந்து விடுமா என்ன?
வீட்டிற்கு வந்தவளுக்கு வீட்டில் தொங்கி கொண்டிருந்த பூட்டு தான் வரவேற்றது. அம்மா எங்காவது அருகில் சென்றிருப்பாள். கோதையை தனியாக விட்டு விட்டு யாரும் எங்கும் செல்வதில்லை. தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. கோதையின் அறையில் கோதை இருக்கிறாரா என்றுதான் முதலில் பார்த்தாள். இருந்தார். அறை முழுவதும் டயப்பர் எல்லாம் பிய்த்து வாயில் ஒன்றை வைத்துக் கடித்துக் கொண்டிருந்தார். இவளை பார்த்ததும் ஈ என்று பல்கலைக் காட்டினார். எப்போதுமே அவர் அப்படி சிரிக்கும்போது இவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து விடும். சில பற்கள் உடைந்து இருக்கும். சில பற்கள் காணாமல் போயிருக்கும். இருந்தாலும் அந்த குழந்தைத் தனமான சிரிப்பில் மயங்கி விடுவாள் அமிர்தா. ஆனால் இன்று? இந்த காட்சியைப் பார்த்தவளுக்கும் அத்தனை ஆத்திரம் வந்தது. அதற்குள் விசாலம் வந்து விட்டார்.
“என்ன இது? எல்லாத்தையும் இப்படி பிச்சு போட்டு வச்சிருக்கீங்க? இது எல்லாம் என்ன விலை தெரியுமா? உங்க பையனுக்கு நானும் வேண்டாம் நீங்களும் வேணாம். நான் காசுக்கு எங்க போவேன்? “
இப்போது அவருக்குத் தான் மன நிலை சரியில்லையா? பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் சந்தேகம் வந்துவிடும்.
மகளை பார்த்த அன்னைக்கு பாவமாக இருந்தது. என்ன ஆச்சு? மகளின் தலைக் கோதி கேட்க வேண்டும். அதுதான் ஒரு அன்னையாக அவளுக்கு முதல் கடமை. ஆனால் முடியாது. அதை விட முக்கியம் கோதை. அவருக்குப் பசி. அவசரமாக தோசை போட்டுக் கொண்டு வந்தார். கைப் பொறுக்க முடியாத சூட்டில் இருந்தது. அவருக்கு ஒன்றும் உறைக்கவில்லையா? அவசரமாக பிய்த்து திங்கத் தொடங்கினார். ஒன்று இரண்டு ஐந்து “அம்மா போதும். அப்புறம் அவங்களுக்கு லூஸ் மோஷன் ஆக ஆரம்பிச்சுடும்”
தன் நிலையே அவளுக்கு இப்போது தான் புரிந்தது.
“இது தாண்டி நம்மைப் போல நடுத்தரத்தோட பாடு. உனக்கும் தோசை ஊத்தவா? இல்ல சாப்பாடு சாப்பிடறியா ? அவருக் கூட வெளில சாப்பிட்டியா?
“அவரு என்ன அவரு? இனிமே எந்த அவரும் கிடையாது. எல்லாரும் சொன்னீங்க இல்ல அறுத்து விட்டுடு அறுத்து விட்டுடுன்னு . அறுத்து விட்டுட்டேன். இனிமே என்னிக்குமே உனக்கு பொண்ணு மட்டும்தான். யாருக்கும் பொண்டாட்டி இல்ல. தாலி இல்லை. மெட்டி இல்ல. உறவும் இல்லை. போதுமா? இரு கைகளையும் வைத்து முகம் மூடி அழுதாள். விசாலத்துக்கும் என்னவென்றுப் புரியவில்லை. இவள் என்ன சொல்கிறாள். அவர்கள் இருவருக்கும் என்னதான் நடந்தது? இவள் சொல்வது உண்மையா? தாத்தா பாட்டி கிட்ட பேசலாமா? யோசித்தாள். மகளின் கைகளை பிரித்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டார் . சற்று நேரத்தில் அழுகையை நிறுத்திக் கொண்டவள் முகம் துடைத்துக் கொண்டு கையில் இருந்தக் காஸைக் கொண்டு அவருக்கு புது டயப்பர் வாங்கி வந்தாள்.
அந்த நேரத்துக்கு சமாதானம் ஆனது போல காட்டிக் கொண்டாலும் இரவில் உறங்காமல் அழுதுக் கொண்டிருந்தவள் தோளை தொட்டு திருப்பியது ஒரு கரம்.
கண்ணை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஆம் அது கோதை தான். மகனின் மீது இருந்த கோபம் முழுவதும் அவன் அன்னையின் மீதுதான் காட்ட முடிந்தது. “போங்க நீங்க எப்பவுமே உங்க மகனதானே பார்ப்பீங்க? இப்ப என்ன?” கையை தட்டி விட்டாள் .
கோதைக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தையை போல அழ ஆரம்பித்தாள். தன் கவலையை மறந்து அவளை மடியில் சாய்த்து இவளே சமாதானப்படுத்தினாள் .
‘இப்டி குழந்தை மாதிரி இருக்கறவங்கள வேண்டாங்கறாரே ? கடவுளே?’ எத்தனை அழுதாலும் இறைவன் நம்மை பார்த்து சிரித்து கொண்டுதான் இருக்கிறார் அழுது அழுது அவள் ஆடைதான் நனைந்தது. இதற்கு முடிவுதான் என்ன? யாருக்கும் விடை தெரியவில்லை. ஆனால் உடலும் மனமும் சோர்ந்து தானாகவே தூக்கம் உடலை அழுத்தியது.
இவளுக்காவது பரவாயில்லை. அவன் நிலை இன்னும் மோசம். ஏனோ முதல் காதல் அழிந்தபோது அவன் இத்தனை வருத்தப்படவில்லையோ?
‘என்னை ஏன் எல்லா பொண்ணுங்களும் வேண்டான்னு சொல்லறாங்க . முதல்ல பெத்தவ வேண்டான்னு போய்ட்டா. அடுத்து வந்தவ நீ ஆம்பளையான்னு கேட்டா. மூணாவது வந்தவ எனக்கு நீ வேணாம், உங்க அம்மாதான் வேணுன்னு போய்ட்டா. எப்படிடி எப்படி உன்னால என்ன வேணாம்ன்னு சொல்ல முடிஞ்சது ? அப்போ நமக்குள்ள ஒன்னுமே இல்லையா? இந்த ரிலேஷன்ஷிப்? ஒன்னுமே கிடையாதா ? அப்ப எதுக்குடி அப்டி விழுந்து விழுந்து என்ன ஆஸ்பத்திரில கவனிச்சுக்கிட்ட? எதுக்கு குழந்தைக்கு குச்சி மிட்டாய் காமிக்கறமாதிரி இந்த கொஞ்ச நாள் சம்பந்தம்?
முள் மலரும் …
