மொழி – 13

“என்னை மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணா உங்க வீட்ல பிரச்சனை வந்துடாதா?” என்றவளின் விழிகள் ஒரு இடத்தில் நில்லாமல் பரிதவிப்போடு அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த வண்ணம் இருந்தது. 

யாரும் அற்று அனாதரவாய் அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் விளையாட்டு சாமான்களை கொடுத்தால் எத்தனை ஆசையாய் அதனை வாங்கிக் கொள்ளும். 

அப்படித்தான் இப்பொழுது அவளின் நிலையும் இருக்கிறது. அவனின் ஆசை வார்த்தைகள் அவளுக்குள் நிச்சயம் ஆசையை விதைத்தது தான்.

ஆனால், அதை ஏற்கவும் முடியாமல், வேண்டாம் என மறுக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்குள் இருக்கும் உணர்வுகளின் அலைப்புறுதலை அவளின் விழிகளே அவனுக்கு காட்டிக் கொடுக்க.

அவளின் கையை மென்மையாக பற்றியவன், “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கலாம். வேற எதை பத்தியும் யோசிக்காத.. என்னை பத்தி மட்டும் யோசி. நான் ஒரு ஐடி கம்பெனியில் வொர்க் பண்றேன். நல்ல சம்பளம்.. நல்ல பேமிலி.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கெட்ட பழக்கம் இல்லாத உத்தமனுக்கு இங்க என்னடா வேலைன்னு கேட்டுடாத” என்று அவன் புன்னகைக்கவும்.

அத்தனை நேரம் இருந்த கடினம் மறைந்து அவளின் இதழிலுமே மென்னகை படர்ந்தது. 

“எல்லாம் ஏன் பிரெண்ட்ஸால வந்தது. விளையாட்டா பேசப் போய் அது விபரீதமாகி இங்க கூப்பிட்டு வந்துட்டானுங்க. வேண்டாம்னு சொன்னாலும் கேட்கல‌.. எனக்கு ஏதாவது பிரச்சனையானு கேக்குறாங்க பக்கிங்க.. அதான் கெத்த மெயின்டெயின் பண்றதுக்காக நானும் இங்க வந்துட்டேன். வந்த இடத்துல என்ன பண்றதுன்னு தெரியல. ஆனா, இப்படி வந்த இடத்துல கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல”. 

அதன் பிறகு யஷ்வந்த் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தாரைப் பற்றியும் அவளிடம் விளக்கினான். 

அவளுக்கும் அவர்களுக்குமான ஏற்றத்தாழ்வு அவளுக்கு நன்கு விளங்கியது.

அறிவிற்கு உரைத்ததெல்லாம் பாவம், மனதிற்கு தான் உரைக்கவில்லை.

“இதெல்லாம் சரி வருமா? எனக்கென்னவோ சரி வராதுன்னு தோணுது”.

“பார்த்தவுடனே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா யாருக்குமே நம்பிக்கை வராது. என்ன தான் நான் நல்லவன், நான் நல்லவன்னு நானே சொல்லிக்கிட்டாலும், அது உண்மையா பொய்யானு உனக்குமே ஒரு சந்தேகம் இருக்கும். என்னால புரிஞ்சுக்க முடியுது”.

“ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம் இல்ல. இதுவரைக்கும் இந்த இடத்துக்கு எத்தனையோ பேர் வந்துட்டு போயிருக்காங்க. அவங்க யாருடைய பார்வையும் உங்கள போல இருந்ததில்ல. எல்லாரும் முகத்தை தவிர்த்து தான் பார்ப்பாங்க. ஆனா, நீங்க இத்தனை மணி நேரத்தில் என் முகத்தை தவிர வேற எங்கயுமே பாக்கல. இது ஒன்று போதாதா நீங்க எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்க”.

அவளின் வார்த்தையில் இவனின் புருவங்கள் ஆச்சரியமாய் மேல் நோக்கி வளைந்தது.

“என்ன?” என்று அவள் தன் தலை சரித்துக் கேட்கவும்.

“உனக்கு என்னை புரியுது இல்ல?”.

அவளிடம் அதற்கு பதில் இல்லை. மௌனமாகிவிட்டாள்..

“இங்க பாரு பவி, இந்த இடம்.. நீ வளர்ந்த சூழல்.. எதுவுமே எனக்கு பிரச்சனை இல்ல. உன்னோட மனசு ரொம்ப சுத்தமானது. அது ஒன்னு மட்டும் எனக்கு போதும். உனக்கும் என்னை பிடிச்சிருந்தா, என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் சரின்னு சொல்லு. நமக்குன்னு ஒரு வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கலாம். இல்லனா, வேண்டாம் உன்னுடைய விருப்பம்”. 

மறுக்க தோன்றவில்லை.. 

எப்படி மறுக்க முடியும்? 

வாழ்க்கையே இன்றுடன் இருளப் போகிறது என்ற எண்ணத்துடன் தான் அவள் இந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்ததே..

ஆனால், அவளின் வாழ்க்கைக்கான புது வெளிச்சமே இந்த அறைக்குள் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை எண்ணும்பொழுது, அவளின் கண்கள் எல்லாம் கரித்துக் கொண்டு வந்தது. 

நிறைய பேசினாள்.. 

சிறு வயது முதல் அவள் சந்தித்த சூழல்களை பகிர்ந்துக் கொண்டாள். 

சந்தித்த மனிதர்களின் வக்கிரங்களை பகிர்ந்துக் கொண்டாள்.

என்ன பேசுகிறோம், எது பேசுகிறோம் என்ற ஸ்வர்ணையே இன்றி ஏதேதோ பேசினாள்.

உளறினாள்.. 

அவளின் மனதில் தேக்கி வைத்திருந்த மொத்தத்தையும் அவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.

ஏனோ அவளுக்கே அவளுக்கென கிடைத்த ஒரு உறவை உதறித்தல்ல அவளின் மனம் முன் வரவில்லை. 

உறவுகளுக்கும், உணர்வுகளுக்குமான முக்கியத்துவத்தை அவளை விட வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ன..

இருவருக்கும் பரிட்சயம் கிடையாது.. 

இருவருக்கும் கண்டதும் காதலும் கிடையாது..

சொல்லால் விவரித்து முடியாத ஓர் உணர்வு இருவருக்குள்ளுமே பலமாய் உருவெடுத்திருந்தது.

அவனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு அவனுடன் சேர்ந்து பயணப்பட முடிவு செய்துவிட்டாள்.

எப்படியும் அவனின் குடும்பத்தில் தன்னைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்தால் பிரச்சனை பூதாகரமாய் வெடிக்கும் என்று அவளுக்கும் தின்னமே.. 

ஆனாலும், ஏதோ ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை. 

இது அனைத்திற்கும் மேல் வாழ்க்கையின் மீதான ஆசை.. அவளை அவனிடம் சரணடையச் செய்தது.

ஆம், ஆசை இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? 

இப்படி ஒரு வாழ்க்கை..

கனவிலும் நினைத்துப் பார்த்திட முடியாத கௌரவமிக்க வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன் என்று கேட்பவனிடம் மறுக்க முடியுமா என்ன..

நிதர்சனம் உரைத்தாலும், பிற்காலத்தைப் பற்றிய சிந்தனை எழுந்தாலும், மனதின் ஓரம் துளிர்விட்ட ஆசை அவளை ஒப்புக்கொள்ள வைத்தது.

ஆம், ஒப்புக் கொண்டாள்..

அவனுடன் சேர்ந்து இந்த உலகத்தை புது பார்வையில், புது கண்ணோட்டத்தில் கண்டு மகிழ ஒப்புக்கொண்டாள்.

ஆனால், இந்த சமூகமும் தன்னை அதே போல் புது கண்ணோட்டத்தில் காணுமா என்பதை சிந்திக்கும் மனநிலை அப்பொழுது அவளுக்கு இல்லாமல் போனது.

*****

“ஏன் டா போகும் போது அவ்வளவு வீர வசனம் எல்லாம் பேசிட்டு போனியேடா. இப்படி அரை மணி நேரத்துல வெளிய வந்து வேர்த்து விறுவிறுத்து போய் நிக்கிறியே” என்று சுதாகரைப் பார்த்து கேலிப் புன்னகை சிந்தினான் சாரதி.

“அங்க மட்டும் என்ன வாழுதாம்.. நான் அரை மணி நேரத்துல வந்தேன். நீ முக்கால் மணி நேரத்துல வந்த.. அவ்வளவு தான் உனக்கும் எனக்குமான வித்தியாசம்” என்று பதிலுக்கு அவனுக்கு குட்டு வைத்திருந்தான் சுதாகர்.

சுதாகரின் தோளில் கையைப் போட்டவன், “ஆனாலும், பரவாயில்ல டா.. நம்ம யாஷ் முடியவே முடியாதுன்னு சொன்னான். ஆனா, விடியவே போகுது இன்னும் வெளியில ஆளையே காணும் பாத்தியா.. பைய புள்ள பயங்கரமா பெர்பார்ம் பண்றான் போலருக்கே”. 

“இதுக்கு தான் டா வேண்டாம்னு சொல்றவனுங்கள நம்பவே கூடாதுன்றது. ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு எப்படி வேலையை பார்க்கிறான் பார்த்தியா”. 

“எப்படி தான் இங்க எல்லாம் வராங்களோ தெரியலடா.. 10 நிமிஷம் தான் டா மச்சான். உடம்பு முழுக்க வெடவெடத்து போயிடுச்சு. வேர்த்து ஊத்தி எங்க மயக்கம் போட்டு விழுந்திடுவோமோன்ற பயத்திலேயே வெளியில ஓடி வந்துட்டேன் டா” என்ற சாரதியைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு நகைத்தான் சுதாகர்.

“சிரிக்காதடா நாயே.. நான் கூட என்னமோ ஏதோனு நினைச்சுட்டேன். இதெல்லாம் நமக்கு ஒத்து வராதுடா சாமி” என்றான் பெருமூச்சை வெளியேற்றியவாறு.

“அது என்னவோ வாஸ்தவம் தான் டா. என்னாலயும் தாக்கு பிடிக்க முடியல”. 

“ஆனா, நம்ம யாஷை பாருடா.. எப்படி தாக்குபிடிக்கிறான். பெரிய ஆள் தான் டா அவன்” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தன் தலையை கோதியவாறு வெளியே வந்தான் யஷ்வந்த் உடன் பவித்ர பாரிஜாதம்.

******

“என்ன தம்பி சொல்றீங்க? அதெல்லாம் சரி வராது. எந்த நம்பிக்கையில் நாங்க உங்களை நம்பி எங்க பொண்ண அனுப்புறது?” என்றார் ராணி.

“அப்போ எந்த நம்பிக்கையில உங்க பொண்ண என்னை நம்பி ரூம்குள்ள அனுப்புனீங்க?” என்ற யஷ்ந்தின் எதிர் கேள்வியில் அவரின் வாய் சட்டென்று மூடிக்கொண்டது.

“இப்படி தினம் தினம் எந்த நம்பிக்கையில அவளை அனுப்ப போறீங்க? எனக்கு அவளை பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். என்னை பத்தின எல்லா டீடைல்ஸும் பவித்ரா கிட்ட சொல்லி இருக்கேன். அவளுக்கு விருப்பம் இருந்தா என்னோட அனுப்பி வைங்க. பவித்ரா உங்களை பத்தி நிறையவே சொன்னா‌. அவளுக்கு நீங்க அம்மா மாதிரின்னு சொன்னா.. எந்த அம்மாவும் தன் பொண்ணுடைய வாழ்க்கை நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க. நீங்களும் அப்படி நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இதுல என்னுடைய டீடைல்ஸ் எல்லாம் இருக்கு” என்றவனோ ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய அனைத்து விபரங்களையும் எழுதி அவர் கையில் கொடுத்தான்.

“நிச்சயம் அவளை நான் சந்தோஷமா பாத்துப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவளை நான் விட்டுட மாட்டேன். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு நீங்க நெஜமாவே நினைச்சீங்கன்னா என்னோட அனுப்பி வைங்க. நான் வெளியில வெயிட் பண்றேன்” என்று விட்டு வெளியேறி விட்டான்.

அவரிடம் அவன் அதிகமாக பேசவில்லை. பவித்ராவின் வாய்மொழியாக கேட்ட வரை அவரின் மேல் ஒரு வித மதிப்பும், மரியாதையும் தோன்றியது. தன் மனதில் பட்டதை கூறிவிட்டு வெளியேறி விட்டான்.

“இதெல்லாம் சரி வருமா பவித்ரா. இந்த பையன நாம எப்படி நம்புறது?”.

“அவர் பார்வையில பொய்யோ, தப்போ இருக்க போல எனக்கு தெரியல. அத்தனை நம்பிக்கை கொடுத்திருக்கார். எனக்கு அவர் மேல முழு நம்பிக்கை இருக்கு” என்று மட்டும் தான் கூறியிருந்தாள்.

“உனக்கு விருப்பம்னா எனக்கும் இதுல எந்த தடையும் இல்லை. உன் வாழ்க்கை இங்கேயே இருந்து மத்தவங்கள போல நாசமாயிடுமோனு நினைச்சேன். ஆனா, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகுதுன்னும் பொழுது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நீ போ.. அவரோட போய் சந்தோஷமா வாழு. இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன், நான் சமாளிச்சிக்கிறேன்” என்றவருக்கும் கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டிருந்தது

இந்த ஒரு ஜீவன் மட்டும் இங்கே இல்லாமல் போயிருந்தால் அவளின் வாழ்க்கை என்றோ புயலில் சிக்கிய பொறியை போல் சின்னாபின்னமாகி சிதைந்து போய் இருக்கும்.

அவளை இத்தனை நாள் பாதுகாத்த தெய்வம் இவர் தானே.. அந்த நன்றி உணர்வு அவளிடம் நிறையவே கொட்டிக் கிடந்தது.

அவரை அணைத்துக் கொண்ட பவித்ராவிற்கு தொண்டையை எதுவோ அடைப்பது போல் தான் இருந்தது. மௌனமாக சற்று நேரம் தண்ணீரில் கரைந்தவள், அங்கிருந்து யஷ்வந்துடன் வெளியேறி இருந்தாள்.

******

யஷ்வந்துடன் வரும் பவித்ராவை புரியாமல் பார்த்த மற்ற இருவரும், “டேய் யாரு டா இந்த பொண்ணு? எதுக்கு கூப்பிட்டு வந்து இருக்க?” என்றனர் ஒரு சேர.

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு”. 

“டேய், என்னடா சொல்ற? விளையாடுறியா.. உன் வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சது மவனே சாவடிச்சிடுவாங்க”. 

“அதெல்லாம் என் பிரச்சனை நான் பாத்துக்கிறேன். டேய் உன்னுடைய ரிலேட்டிவ் ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருக்காங்க இல்ல. இன்னைக்கே மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணனும்” என்று சுதாகரைப் பார்த்து கூறியவன்.

சாரதியை நோக்கி, “கோவில்ல சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம். சீக்கிரமா ரெண்டு பேரும் எல்லா ஏற்பாட்டையும் செய்யுங்க” என்று விட்டு தன் வண்டியில் ஏறியவன்.

“வா” என்றான் பவித்ராவைப் பார்த்து.

முதல் முறை புதுவித உணர்வுடன் வெளி உலகத்தை சந்திக்கிறாள். அவளின் மனமே அத்தனை நெகிழ்ச்சியாய் இருந்தது.

அவளின் நெகிழ்வுக்கு சரி நிகராய் அத்தனை பதட்டமும், பயமும் அவளை ஆட்கொண்டது என்னவோ உண்மை தான்.

அடுத்தடுத்த வேலைகள் மலமலவென அரங்கேற. கோவிலில் திருமணத்தை முடித்தவர்கள், கையோடு ரிஜிஸ்டரும் செய்துவிட்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

சாரதிக்கும், சுதாகருக்கும் உள்ளுக்குள் பதைபதைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது. 

இவனின் குடும்பத்தின் அருமை பெருமைகளைப் பற்றி எல்லாம் அறிந்தவர்கள் ஆயிற்றே.. 

இப்படி ஒரு பெண்ணை யஷ்வந்த் மணந்திருக்கிறான் என்பது தெரிய வந்தால், அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ என்ற பதட்டம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்தது.

ஆனாலும், நண்பனுக்காக செய்தனர். அதன் விளைவு அவனின் குடும்பத்தாரின் முன்பு இருவரும் தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தனர்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page