யஷ்வந்த் அனைத்தையும் கூறி முடிக்கவும். இடையிலேயே சுதாகரையும், சாரதியையும் வீட்டிற்கு வர வைத்திருந்தான் சேரன். அவர்களும் யாரின் முகத்தையும் காண முடியாமல் தலை தொங்க அமர்ந்திருந்தனர்.
“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உங்கள நம்பி தானடா என் தம்பிய அனுப்புனோம். இப்படி பண்ணி வச்சிருக்கீங்க” என்று சேரன் கோபமாக கேட்கவும்.
“ஆமா, இவர் தம்பி எல்கேஜி படிக்கிற குழந்தை.. நம்மள நம்பி அனுப்புனாராம்.. அவனே நமக்கு சொல்லிக் கொடுப்பான். வேண்டாம்னு சொல்லியும் கேட்காம அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப நம்மள மாட்டிவிட்டுட்டான் பாத்தியாடா இவன்” என்று சுதாகரின் காதைக் கடித்தான் சாரதி.
“சும்மா இருடா.. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. நானே குப்புறப் போட்டு குமுற போறாங்களா.. இல்ல, மல்லாக்க படுக்க வச்சு வயித்து மேலேயே எத்த போறாங்களானு தெரியாம கதி கலங்கி போய் உட்கார்ந்து இருக்கேன். இதுல நீ வேற..” என்று சிடுசிடுத்தான் சுதாகர்.
அவன் கூறிய மொத்தத்தையும் கேட்டு முடித்த பரமேஸ்வரி, “இங்க பாரு யாஷ், நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரி வராது. அந்த பொண்ண எங்கிருந்து கூப்பிட்டு வந்தியோ அங்கேயே கொண்டு போய் விட்டுடு”.
அவரின் வார்த்தையில் பவித்ரா அதிர்ந்து பார்க்க.
“மா என்ன பேசுறீங்க நீங்க?”.
“நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன் யாஷ். நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரி வராது சொன்னா புரிஞ்சுக்கோ. இப்படிப்பட்ட ஒருத்திய என் மருமகளா என்னால ஏத்துக்கவும் முடியாது. பார்த்தல்ல, அண்ணன் எப்படி பேசிட்டு போனாருன்னு.. இதே மாதிரியே ஊர்ல இருக்குற எல்லாரும் நம்மள பார்த்து காரி துப்புவாங்க. இதெல்லாம் நமக்கு தேவையா.. மரியாதையா இந்த பொண்ண அனுப்பிட்டு வா”.
“முடியாதுமா”.
“முடியாதுன்னா எங்கள மறந்துடு” என்ற வார்த்தைகள் சடுதியில் வந்து விழுந்தது.
அனைவரும் திருமூர்த்தியைப் பார்க்க, அவர் தான் கோபமாக பேசியிருந்தார்.
“என்னடா பாக்குற? பெத்தவங்க எங்கள விட இவ உனக்கு முக்கியமா போயிட்டாளா? சரி, அவளோடவே வாழ்ந்துக்கோ.. அவ தான் உனக்கு வேணும்னா எங்கள தலைமுழுகிடு. எங்கள விட்டு எங்கேயாவது போய் தொல.. இப்படி ஒரு அசிங்கத்தோட எங்களால ஒரே வீட்ல இருக்க முடியாது” என்று முகத்தை அருவருப்பாக வைத்துக் கொண்டு அவர் பவித்ராவைப் பார்க்கவும்.
அந்த நொடியே மரித்துப் போனால் என்ன என்ற எண்ணமே தோன்றி விட்டது பவித்ராவிற்கு.
“அப்பா ப்ளீஸ், அவ வளர்ந்த சூழ்நிலை தப்பு தான். நான் ஒன்னும் உங்க கிட்ட பொய் சொல்லல.. நான் சொன்ன ஒரே விஷயம் அவ அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவனு சொன்னது மட்டும் தான். ஒருவேளை, அவ இருந்த இடம் அனாதை ஆசிரமமா இருந்திருந்தா நீங்க எல்லாரும் அவளை ஏத்துக்கிட்டு இருந்திருப்பீங்க இல்ல..
இப்போ என்ன.. அவ வளர்ந்த இடம் தப்பான இடம் அதானே.. மத்தபடி அவ ஒன்னும் தப்பானவ இல்லையே.. அவ மனசளவுல கூட எந்த ஒரு தப்பும் செஞ்சது கிடையாது. அவ இருந்த இடம் சேறா இருந்தாலும், அவ அந்த சேத்துல பூத்த செந்தாமரை மாதிரி ரொம்ப புனிதமானவப்பா.. அவ பேர் போலவே ரொம்ப பவித்திரமானவ.. ப்ளீஸ், தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க”.
தனக்காக அனைவரிடமும் மாற்றி மாற்றி மன்றாடும் யஷ்வந்தை பார்க்கவே பவித்ராவின் இதயத்தை யாரோ பிடுங்கி குருதி ஒழுக வெளியே எடுக்கும் உணர்வு.. அத்தனை வேதனையை கொடுத்தது.
தனக்காக அவன் ஏன் இத்தனை தூரம் அனைவரிடமும் கெஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தையும் எழுப்பியது.
“நீ என்ன பேசினாலும் சரி எங்க மனசு மாறாது. எங்க முடிவு இது தான்! உனக்கு நாங்க வேணுமா.. அவ வேணுமா.. நீ தான் முடிவு பண்ணனும். திரும்பத் திரும்ப பவித்திரமானவனு நீ சொல்றதால எதுவும் மாறிடப் போறது இல்ல. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும்.. அவ பவித்ரமானவளாவே இருக்கட்டும். இந்த பவித்ரம் என் மகனுக்கு தேவையில்ல” என்று திடமாக கூறிவிட்டார் பரமேஸ்வரி.
“டேய், அம்மா அப்பா சொல்றத கேளுடா.. அவங்க எது செஞ்சாலும் நம்ம நல்லதுக்கு தான் இருக்கும். இதெல்லாம் வேண்டாம் யாஷ். அம்மா உன் மேல உயிரையே வச்சிருக்காங்க. அவங்க பேச்சை கொஞ்சம் கேளுடா.. அந்த பொண்ண எங்கிருந்து கூப்பிட்டு வந்தியோ அங்கேயே கொண்டு போய் விட்டுடு. அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்”.
“எப்படிண்ணா கொண்டு போய் விட சொல்ற? அவளுக்கு நம்பிக்கை கொடுத்து நான் கூப்பிட்டு வந்திருக்கேன். அவளுக்கு ஒரு நல்ல குடும்பத்தை கொடுக்குறேன்னு சொல்லி இருக்கேன். வாழ்க்கை முழுக்க அவள சந்தோஷமா வச்சு பார்த்துக்குறேன்னு சொல்லி இருக்கேன். என்னை மட்டுமே நம்பி அவ அந்த இடத்திலிருந்து வந்திருக்கா.. இப்போ எப்படி அப்படியே நட்டாத்துல விட முடியும்?”.
“அப்போ எங்க நம்பிக்கை.. எவளோ ஒருத்தி உன் மேல வச்ச நம்பிக்கைக்காக இவ்வளவு தூரம் பேசுறியே.. சின்ன வயசுலருந்து உன்ன அப்படி வளர்த்தேன் டா.. உன் மேல உயிரே வச்சிருக்கேன். உன் மேல அத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன். எங்க நம்பிக்கையை மொத்தமா உடைச்சுட்டு வந்து நிக்கிறியே.. அப்ப நான் உன் மேல வச்சிருந்த நம்பிக்கை.. அவ உன் மேல வச்ச நம்பிக்கையை விட நாங்க உன் மேல வச்சிருக்க நம்பிக்கை ரொம்ப பெருசு யஷ்வந்த். தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ” என்று கோபமும் ஆத்திரமுமாக பேசினார் பரமேஸ்வரி.
“அம்மா ப்ளீஸ், எனக்குன்னு நீங்க எல்லாருமே இருக்கீங்க. அப்பா அம்மானு ஒரு குடும்பமே இருக்கு. ஆனா, அவளுக்குன்னு நான் மட்டும் தான்மா இருக்கேன். என்னால எப்படியோ போனு அவளை விட முடியாது. என்னை நம்பி வந்துட்டா.. கஷ்டமோ நஷ்டமோ இனி அவளோட தான் என்னுடைய வாழ்க்கை. தயவு செஞ்சு, எங்க கல்யாணத்தை ஏத்துக்கோங்க. நான் சொன்ன போல அவ ஒரு அனாதை ஆசிரமத்தில தான் வளர்ந்தான்னு நினைச்சுக்கோங்க. அவ மேல எந்த தப்பும் இல்லாதப்போ தப்பே செய்யாதவளுக்கு நீங்க கொடுக்க நினைக்கிற தண்டனை ரொம்ப பெருசுமா”.
எவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாலும் தன் மகன் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கவும். பரமேஸ்வரிக்கு கோபம் அதன் எல்லையை கடந்தது.
“ஏய் இங்க பாரு டி, நல்லா இருந்த குடும்பத்தை இப்படி நாசம் பண்ணிட்டியே.. எங்க குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்னு தெரியுமா.. இப்படி எங்களையெல்லாம் தலை குனிய வச்சுட்டியே.. நீ யாரு.. நீ இருந்த இடம் என்ன.. வளர்ந்த முறை என்ன.. எங்கிருந்து வந்திருக்கன்னு எல்லாம் தெரிஞ்சும் ஒரு கல்யாணத்துக்கும், ஒரு கௌரவமான வாழ்க்கைக்கும் நீ ஆசைப்படலாமா? என் பையனுடைய வாழ்க்கையையே இப்படி அழிச்சிட்டியேடி பாவி.. நீ எல்லாம் நல்லா இருப்பியா.. நல்லாவே இருக்க மாட்ட.. நாசமா தான் டி போவ” என்று கண்ணீரோடு சாபம் விட்டார்.
பவித்ராவிற்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அப்படி ஒரு தள்ளாட்டம்.. மனதளவிலும், உடலளவிலும் அத்தனை பலவீனமாய் உணர்ந்தாள்.
“நா.. நான் போயிடுறேன்” என்று எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி வெறுமனே வார்த்தைகளை வீசியிருந்தாள்.
அவளின் வார்த்தையில் அவளை அதிர்ந்து பார்த்தான் யஷ்வந்த்.
“உனக்கு புண்ணியமா போகும். தயவு செஞ்சு சொன்னதை செஞ்சிடு. என் பையன் வாழ்க்கையை விட்டு போய் தொலைஞ்சிடு” என்று கையெடுத்து கும்பிட்டார் பரமேஸ்வரி.
அவரின் செயல் பவித்ராவிற்கு மேலும் அழுகையை கூட்ட தன் இதழ் கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள், தளர்ந்த நடையோடு அறைக்குள் செல்ல முற்படவும்.
அவளின் கையை அழுத்தமாக பற்றிய யஷ்வந்த், “எங்க போற?” என்றான் கடுமையாக.
அவனின் முகமே இறுகிப்போய் கடுமையாக இருந்தது.
“தப்பு என் மேலயும் இருக்கு. நீங்க பேசுனதும் நான் ஆசைப்பட்டிருக்க கூடாது. இதெல்லாம் என்னுடைய நிலைமைக்கு ரொம்ப பெருசு.. கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத வாழ்க்கை.. என்னுடைய ஆசையால இன்னைக்கு உங்க குடும்பமே இப்படி கஷ்டப்படுத்துன்றதை பார்க்கும் பொழுது என்னால தாங்கிக்க முடியல. இந்த ஒரு வார காலம் என் மொத்த வாழ்க்கைக்கும் போதும். இதை நினைச்சுட்டே நான் வாழ்ந்துடுவேன்” என்று உணர்வு பொங்க பேசியவளின் கையை அவன் விடவே இல்லை, அத்தனை அழுத்தமாய் பற்றி இருந்தான்.
அவளிடம் ஒரு வார்த்தையும் பதில் பேசவில்லை. முகமே அத்தனை கடுமையை தத்தெடுத்திருந்தது. தாடை இறுக நின்றிருந்தான்.
“இப்போ என்னம்மா உங்களுக்கு பிரச்சனை? ஒன்னு நான் அவளை விட்டுட்டு உங்களோட வரணும். இல்லையா, அவளோட போயிடனும். அதானே.. சரி, நான் அவளோடவே போயிடுறேன்”.
“அண்ணா… டேய்… யாஷ்…” என்ற வார்த்தைகள் மாறி மாறி அவனின் செவிப்பறையை தீண்டியது.
“அதானே உங்களுக்கு வேணும்.. எனக்கு இவ தான் வேணும்! நானே போயிடுறேன். எங்களால நம்ம குடும்ப கௌரவத்துக்கு எந்த களங்கமும் வந்துடாது. பரிசுத்தம்ன்றது மனசுல இருக்கணும். அது என் பவித்ரா கிட்ட நிறையவே இருக்கு. அவ தான் என் வாழ்க்கைனு நான் முடிவு பண்ணி பல நாள் ஆச்சு. நான் கிளம்புறேன்” என்றவன், அறைக்குள் சென்று தங்களுக்கு தேவையான உடைமைகளையும், அவனின் லேப்டாப்பையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன்.
யாரையும் திரும்பியும் பாராமல் அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
சற்று நேரத்தில் புயல் அடித்து ஓய்ந்தார் போல் ஆகிவிட்டது. வீடே மயான அமைதியில் காட்சி அளித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்து இருந்தனர்.
திருமூர்த்தி உணர்ச்சி பெருக்கில் அமைதியாக சென்று கட்டிலில் படுத்து விட்டார்.
பரமேஸ்வரி தன் வாயை பொத்தியவாறு அழுது கொண்டே ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்து கிடந்தார்.
அழுகும் குழந்தையை சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள் இந்து.
சோபாவில் அமர்ந்திருந்த சேரன் தன் தலையை இரு கைகளாலும் தாங்கியவாறு ‘அடுத்து என்ன’ என்று புரியாமல் அமர்ந்திருந்தான்.
நித்யா இங்கே நடந்து முடிந்த அனைத்தையும் கமலேஷிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
“பயமா இருக்கு கமல், அண்ணா விஷயம் தெரிஞ்சு வீட்ல இவ்வளவு பெரிய பிரச்சனை.. இதுல நாம லவ் பண்றது தெரிஞ்சா வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு தெரியல” என்ற அவளின் குறுஞ்செய்தியை பார்த்தவன்.
“அதுவும் இதுவும் ஒன்னு கிடையாது நித்யா” என்று மட்டும் அனுப்பி இருந்தான்.
அவர்களின் வீடே நிலைகுலைந்து போய் காணப்பட்டது. யாருக்கும் பசியோ, உறக்கமோ இல்லை. அப்படியே அமர்ந்திருந்தனர்.
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…