மொழி – 16

இந்த வெம்மையான சூழலை குளுமையாக்க.. கொஞ்சமே கொஞ்சம் இதமாக மாற்ற இந்நொடி உதவியது என்றால் அது மிகையாகாது. 

அவனில் பனியாய் கரைந்துக் கொண்டிருந்தாள்.

இதைவிட ஒரு ஆறுதலை வாய் மொழி கூறிவிடுமா என்ன..

அவளிலிருந்து பிரிந்தவன், “திரும்ப இப்படி எல்லாம் பேசின இப்படி தான் வாயை அடைப்பேன். என்னை ரொம்ப சோதிக்கிற பவி” என்றான் கரகரத்த குரலில்.

அழுது களைத்து ஓய்ந்து போய் இருந்தாள் பவித்ரா.

“பசிக்குது பாவா” என்றவளை கனிவாக பார்த்தவன், “சரி வா, வெளியில போய் சாப்பிட்டு அப்படியே வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்”.

இருவருமே இதிலிருந்து தற்பொழுது மீண்டு வர நினைத்தனர் ஒருவர் மற்றொருவருக்காக..

*****

நடந்த சம்பவங்களினால் ஓரமாய் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரி.

“ம்மா யாஷ் அவன் பிரெண்டுக்கு தெரிஞ்ச வீட்ல தான் வாடகைக்கு இருக்கானாம்”.

அறைக்குள் இருந்து விறுவிறுவென வேகமாக வெளியே வந்த திருமூர்த்தி, “இனி அவன பத்தி யாரும் இந்த வீட்ல ஒரு வார்த்தை பேசக்கூடாது சொல்லிட்டேன். நம்ம யாரும் முக்கியமில்ல அவ தான் முக்கியம்னு அவ பின்னாடி போனான்ல.. எக்கேடோ போய் தொலையட்டும். 

இவனெல்லாம் பட்டா தான் திருந்துவான். அசிங்கத்தை இழுத்துக்கிட்டு ஊர் ஊரா சுத்தி நம்ம குடும்ப மானத்தையே வாங்கப் போறான். என்னமோ பண்ணி தொலையட்டும்.. இந்த வீட்ல இருந்து யாராவது அவன் கிட்ட பேசுறீங்க பழகுறீங்கன்னு தெரிஞ்சது, அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று கோபமாக கத்திவிட்டு மீண்டும் அறைக்கு சென்று விட்டார்.

அவரின் வார்த்தையில் மேலும் சோர்ந்து போனது என்னவோ பரமேஸ்வரி தான். 

“இந்து அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வா” என்றதும்.

வேகமாக சமையலறைக்குள் நுழைந்தவள் ஒரு தட்டில் அவருக்கான உணவை வைத்துக்கொண்டு எடுத்து வந்தாள். 

“எனக்கு வேண்டாம் சேரா” என்று கலங்கிய குரலில் கூறும் தாயைப் பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது.

“மா எல்லாம் சீக்கிரம் சரியாகும். நீங்க இப்படி இருந்து உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. இந்தாங்க சாப்பிடுங்க” என்று உணவை பிசைந்து அவருக்கு ஒரு வாய் ஊட்டினான்.

மறுக்காமல் வாங்கிக் கொண்டவர், “இவன் ஏன்டா இப்படி ஆகிட்டான்.. அவளுக்காக நம்ம மொத்த பேரையும் தூக்கி போட்டுட்டு போயிட்டானே.. அவன நான் எப்படி வளர்த்தேன்” என்று அவருக்கு மீண்டும் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

“ப்ளீஸ்மா, திரும்ப இதை பத்தி பேசாதீங்க. கொஞ்சம் கேப் விடலாம். அவனே நம்மள புரிஞ்சுகிட்டு திரும்ப வருவான்”.

“வருவானா?” என்றவரின் வார்த்தைகள் அவரின் தாயுள்ளத்தின் ஏக்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.

“கண்டிப்பா வருவான் மா. நம்மள விட்டா அவனுக்கு மட்டும் வேற யாரு இருக்கா.. ஏதோ கோவத்துல இப்படி பண்ணிட்டான். நிச்சயம் அவன் திரும்ப வருவான். நீங்க சாப்பிடுங்க” என்று தன் தாய்க்கு சமாதான மொழிகளை கூறியவாரே உண்ண வைத்திருந்தான்.

“இப்படி பண்ணிட்டானே டா.. இவன் இப்படி பண்ணது தெரிஞ்சா உன் தங்கச்சியை யாரு கட்டுவா.. வயசு பொண்ண வீட்ல வச்சிருக்கும்போது இப்படி பண்ணிட்டானே”. 

“அம்மா எதுக்கும் எதுக்கும் பேசுறீங்க.. நித்யா கல்யாணம் வேற.. அதுக்குள்ள இந்த பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும் பாருங்க”. 

****

“இந்த மனுஷனுக்கு அப்படி நான் என்ன டி குறை வச்சேன்? என்ன வேலை பார்த்திருக்கார் பார்த்தியா.. அங்க யாரு முகத்தையும் பாக்க முடியாம எவ்வளவு அசிங்கமா போச்சு.. அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் நம்மால பதில் சொல்ல முடிஞ்சுதா” என்று அழுகையோடு ஆதங்கமாக கத்தினார் காஞ்சனா.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்த அய்யனாருக்கு பதில் பேச நா எழவில்லை. தன் குட்டு வெளிப்பட்டுவிட்ட கோபத்தில் முகம் இறுக அமர்ந்திருந்தார்.

“வீட்ல வயசு பொண்ண வச்சுக்கிட்டு ஒரு அப்பா பண்ற காரியமா இதெல்லாம்.. கொஞ்சம் கூட வெட்கமில்லாம எப்படி நடந்திருக்காரு.. அந்த பையன் சொல்லும் போது உடம்பே கூசி போச்சு”. 

தன் அருகில் இருந்த தண்ணீர் சொம்பை தள்ளிவிட்ட அய்யனார், “போதும்! கொஞ்சம் நிறுத்துறியா.. வயசு பொண்ண வச்சிக்கிட்டு என்ன பேச்சு பேசுற நீ?”.

“ஓ! இப்ப தான் உங்க கண்ணுக்கு வயசு பொண்ணு நம்ம வீட்ல இருக்குறதே தெரியுதா? இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கீங்களே அப்போ தெரியலையா? நம்ம வீட்லயும் ஒரு வயசு பொண்ணு இருக்குன்னு.. அசிங்கமா இல்ல”. 

அவருக்கு பதிலுரைக்க முடியாமல் தன் கையை கோபமாக மடக்கியவர், “அவனுக்கு இருக்கு.. நம்ம சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் அவன் பொண்டாட்டிய பத்தின உண்மையை சொல்லி அவன் குடும்பத்தையே தலை குனிய வைக்கிறேன்”. 

“வாய மூடுங்க! நீங்க பண்ணி கிழிச்ச வரைக்கும் போதும். என்னன்னு சொல்லுவீங்க.. நான் இப்படி அந்த இடத்துக்கு போனேன். அங்க அவன் பொண்டாட்டிய பார்த்தேன்னு சொல்லுவீங்களா.. சொன்னா எல்லாரும் நம்மளையும் தான் காறி துப்புவானுங்க. வயசு பொண்ண வீட்ல வச்சுக்கிட்டு பேசுற பேச்ச பாரு. நம்ம பொண்ண நாளை பின்ன எவன் கட்ட வருவான். இந்த விஷயம் மட்டும் வெளியில கசிஞ்சுச்சு அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று தன் அருகில் கிடந்த டம்ளரை விசிறி அடித்தார்.

காயம் கண்ட மிருகமாய் முகம் இறுக அமர மட்டுமே முடிந்தது அய்யனாரால். இந்த விஷயத்தை வெளியில் கூறி தன் மன காயத்தை ஆற்றிக் கொள்ளவும் முடியவில்லை. 

அவனின் குட்டை உடைக்கிறேன் என்று தன்னை பற்றிய குட்டும் உடைந்து விட்டால்.. 

அந்த பயத்தினாலேயே விஷயத்தை வெளியே கசிய விடாமல் வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

****

மிதமான கூட்ட நெரிசலில் சுழன்று கொண்டிருந்தது அந்த இரு சக்கர வாகனம். அதில் அமர்ந்திருந்த இருவரின் மனநிலையுமே இப்பொழுது அந்த வாகனத்தின் சக்கரத்தை போல் தான் இன்றைய நாளின் சம்பவங்களிலேயே உழன்று கொண்டிருந்தது.

ஆனால், இருவரின் மனநிலையும் வெவ்வேறாய் இருந்தது.

தன்னை இவன் பார்க்காமல் இருந்திருந்தால், அவனின் வாழ்க்கைக்குள் நான் நுழையாமல் இருந்திருந்தால், இன்று அவனுடன் சேர்ந்து அவனின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்களே.. 

நான் ஒருத்தி விட்ட பிழையினால் இப்படி மொத்த குடும்பமுமே உருக்குலைந்து போய்விட்டதே என்ற மனக்குமுறல் அவளுக்குள் அடங்கிய பாடில்லை.

அவனுக்காக அவனின் முன்பு அதை காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டிருந்தாளே ஒழிய, அவளிலிருந்து முற்றிலுமாய் அந்த எண்ணம் நீங்கி விடவில்லை.

எப்படி நீங்கும்.. சிறு வயது முதல் யாரின் மீதும் உரிமை கொண்டாடியது கிடையாது. 

யாரையுமே தனக்கு உரிமை பட்டவர்களாக பார்த்ததும் கிடையாது. 

கிட்டத்தட்ட.. கிட்டத்தட்ட என்ன.. முற்றிலும் ஒரு அனாதை போல் தான் அவ்விடத்தில் வளர்ந்தாள். ராணி அவள் மேல் பாசம் வைத்தாலும், அனைத்தும் அத்தனை வெளிப்படையாய் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு தான் இருக்கும்.

அதை உணரும் பக்குவமும் அவளுக்கு அப்பொழுது இருந்திருக்கவில்லை.

ஆனாலும், அவரின் மேல் ஒருவித மதிப்பும், மரியாதையும் நிறையவே இருந்தது.

ஆனால், ஏனோ உரிமைக் கொண்டாடும் இடத்தில் அவரை வைத்துப் பார்க்க முடியவில்லை.

இருவருக்கும் இடையே ஏதோ ஒரு மறைமுக திரை இருப்பது போன்றே ஒரு மாயை.

முதல் முறை இவனை சந்தித்தவளுக்குள் எந்த ஒரு எண்ணமுமே இல்லை. இதை எப்படி கடக்க போகிறோம் என்ற அச்சமும், பரிதவிப்பும் தான் அவளில் முழுவதுமாய் விரவிக் கிடந்தது.

அவனின் பார்வை, பேச்சு என அனைத்தும் புதுவிதமாய் இவளில் பதிய. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களா என்று அவனை அதிசயித்து தான் பார்த்தாள்.

அப்படி ஒரு பிரமிப்பானவன் தனக்கே தனக்காய் அமையும் பொழுது மறுக்க முடியவில்லை. 

கொஞ்சமே கொஞ்சம் ஆசை.. 

ஏன், பேராசை என்றும் கூறலாம். 

அவளின் மனதின் ஒரு மூலையில் முளைவிட்டு எட்டிப் பார்த்தது. அதன் விளைவு திருமதி.யஷ்வந்தாக மாறிப் போனாள்.

ஆனால், அவனுக்கு இவளைப் போல் எல்லாம் கிடையாது. சிறுவயது முதலே அத்தனை சீராட்டோடும், பாராட்டோடும், சுற்றி உறவுகளோடும், உரிமைப் பட்டவர்களோடும் அத்தனை மதிப்பும் மரியாதையுமாய் வளர்ந்தவன்.

இன்று தன் ஒருத்திக்காக அனைவரையும் தூக்கி எறிந்து விட்டு வந்திருப்பது, இவளுக்குள் சஞ்சலத்தை கொடுத்தது.

தன் மேலேயே கோபம், வெறுப்பு, ஆற்றாமை என ஏதேதோ உணர்வுகள்..

தான் மட்டும் அன்று அவனை சந்திக்காமல் இருந்திருந்தால்..

வேறு ஒரு அறைக்கு சென்றிருந்தால்.. 

அல்லது, அவன் கேட்டதும் சரி என்று தன் தலையை உருட்டாமல் இருந்திருந்தால்.. 

இது அனைத்துமே சீராக இருந்திருக்குமே.. யஷ்வந்திற்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது என்று எண்ணி எண்ணி தனக்குள்ளேயே குமைந்து போனாள்.

“பவி அப்படி எந்த உலகத்தில் தான் இருக்க? கடை வந்துருச்சு பாரு கீழ இறங்கு”.

“ஆங்” என்று அவன் கூற வருவது புரியாமல் விழித்தவளுக்கு, அவன் கூறுவதை உள்வாங்கவே ஓரிரு நொடிகள் எடுத்து விட்டது.

சட்டென்று வண்டியில் இருந்து கீழ் இறங்கி அவள் அவனை பார்த்து தூக்கத்திலிருந்து விழித்ததை போல் மலங்க மலங்க விழிக்கவும்.

அவனின் இதழ்களோ உள்புறமாய் மடிந்து தன் சிரிப்பை அடக்கியது. 

“என்ன?” என்றவள் சுற்றும் முற்றும் புரியாத பார்வை பார்த்துக் கொண்டே வினவவும்.

“அப்படி என்ன ஓடிட்டு இருக்கு உன் மண்டைக்குள்ள.. எவ்வளவு நேரமா உன்ன கூப்பிடுறேன்னு தெரியுமா.. அதை கூட கவனிக்காம மேடம் என்ன யோசிச்சிட்டு வரீங்க? அப்படியே உன்னை எங்கேயாவது கடத்திட்டு போனா கூட உனக்கு தெரியாது போலருக்கே”.

“கடத்திட்டு தான் போகணும்னு இல்ல சொல்லியே கூப்பிட்டு போகலாம். நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன்” என்றவள் அந்த வார்த்தையை அத்தனை உணர்ந்து கூறியிருந்தாள். அது அவனுக்குமே நன்கு விளங்கியது.

அவளை பார்த்து தன் தலையை சரித்து சிரித்தவன், “ஓகே போகலாம். சாப்பிட்டு அப்புறமா போகலாம்” என்றவாறு அவளுடன் தன் விரல்களை கோர்த்துக்கொண்டு அந்த உணவகத்திற்குள் நுழைந்தான்.

“நீ இங்க உக்காரு நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்” என்றவன் கை கழுவி விட்டு வரவும்.

இவளோ அந்த இடத்தையே கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தாள். 

“ஆர்டர் பண்ணிட்டியா?” என்றவாரே அவன் வந்து அவளுக்கு எதிர் இருக்கையில் அமரவும்.

“எனக்கு பசிக்கல” என்றாள் கரகரப்பான‌ குரலில்.

“உனக்கு மனசு நிறைய சந்தோஷம் இருந்தாலும், சோகம் இருந்தாலும் பசிக்காத மாதிரி ஏதாவது வியாதி இருக்கோ?” என்று அவன் விளையாட்டாக கூறுவது போல் தோன்றினாலும், அவனின் கண்களில் அந்த விளையாட்டுத்தனம் சற்றும் இல்லை.

அன்று ஒரு நாள் மனம் நிறைந்து அவள் பசிக்கவில்லை என்று கூறியது நினைவு வந்தது. ஆனால், இன்று அப்படி இல்லையே.. 

மனம் முழுவதும் வேதனை மண்டிக் கிடக்க பசி இல்லை என்பவளை பார்க்கவே வருத்தமாய் இருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page