யஷ்வந்திடமிருந்து இப்படி ஒரு செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தின் மீது ஏத்தனை பற்று கொண்டவன்.
அதிலும், தன் தாயின் மேல் எத்தனை அளப்பெரிய அன்பும், பாசமும் வைத்திருப்பவன்..
இப்படி அவளுக்காக அனைவரையும் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டானே.. அதுவே அவர்களின் மனதை கூர் வாள் கொண்டு அறுத்தது.
வெளியே வந்தவன் எதுவும் பேசவில்லை. யஷ்வந்த் பவித்ராவுடன் வெளியேறியதும் சுதாகரும், சாரதியும் அவனை பின்தொடர்ந்து வெளியேறி இருந்தனர்.
“என்னடா இப்படி பண்ணிட்ட?” என்றான் சுதாகர்.
“வேற என்ன பண்ணனும்னு சொல்ற? இவள எங்கிருந்து கூட்டிட்டு வந்தோமோ அங்கேயே கொண்டு போய் விடனும்னு சொல்றியா?” என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கேட்டான் யஷ்வந்த்.
இப்படி அவனை இத்தனை கோபமாய் இருவரும் கண்டிடாதவர்கள் அவனை கையாள தெரியாமல் தடுமாறினர்.
“நான் அப்படி சொல்லல டா” என்ற சுதாகர், “சரி, இப்போ அடுத்து என்ன பண்றது?”.
“சரி, ஓகே.. போய் வீட்டை பஸ்ட் பாப்போம். பவித்ராவுக்கு ஓகேனா அங்கே இருக்கலாம்” என்று அவனின் வார்த்தையில் பவித்ரா இருந்தாலும் அவனின் பார்வை அவளை தீண்டவே இல்லை.
அவனின் கரம் இன்னமும் அவளை தான் அழுத்தமாய் பற்றி இருந்தது.
அவளைப் பற்றிய அவனின் கரத்தை அவன் விலக்கவும் இல்லை, அழுத்தத்தை குறைக்கவும் இல்லை.
அவன் முகம் ஒருவித கடுமையோடு தான் இருந்தது. வீட்டினரை விட்டு பிரிந்து வந்ததினால் தான் இந்த கடுமை என்று நினைத்துக் கொண்ட நண்பர்கள் இருவரும், நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டனர்.
அவர்கள் வெளியேறியதும் சுதாகரின் செல்பேசி இசைத்தது. திரையில் மின்னியது என்னவோ சேரனின் பெயர் தான்.
முதலில் எடுக்கலாமா வேண்டாமா என்று தடுமாறியவன். ஒருவித தடுமாற்றத்துடனே அழைப்பை ஏற்றிருந்தான்.
“எங்கடா இருக்கீங்க?”.
“அண்ணா யாஷ் ஒரு வீடு பார்க்க சொன்னான். அதான்..”.
“ஓ! வீட்ட பார்த்து உன் பிரண்டையும் அவன் பொண்டாட்டியையும் குடி வச்சுட்டீங்களா?”.
“அண்ணா..” என்று அவன் இழுக்கவும்.
“அவன் தான் புத்தி கெட்டுப் போய் எல்லாத்தையும் பண்ணி இருக்கான்னா, நீங்களும் அவனுக்கு துணை போயிருக்கீங்களே டா?” என்றான் ஆதங்கமாக.
“சாரிண்ணா, இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்களுமே எதிர்பார்க்கல. விளையாட்டுத்தனமா பண்ண போய் இப்படி என்ன எல்லாமோ நடந்து போச்சு”.
பவித்ராவின் மேல் இந்த இடைப்பட்ட நாட்களில் நல்ல அபிப்ராயம் எழுந்தது என்னவோ உண்மை தான்.
ஆனாலும், அவளைப் பற்றிய உண்மைகளை கேட்டதும் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் அனைவரையும் ஒரு வித வெறுப்பு மாயை போல் சூழ்ந்து கொண்டது.
“அவனை கொஞ்சம் கூடவே இருந்து பாத்துக்கோங்க டா இப்போ எப்படி இருக்கான்?”.
அவனின் குரலில் அத்தனை வருத்தமும், ஆதங்கமும் மேலோங்கி இருந்தது.
“சரி, அவனை பாத்துக்கோங்க. ஏதாவதுனா கால் பண்ணு” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.
என்ன இருந்தாலும் உடன் பிறந்தவனின் வருத்தம் இவனையும் வாட்டத்தான் செய்தது.
ஆனாலும், குடும்பத்தை மீறி முடிவெடுக்க முடியாத நிலையில் அல்லவா நிற்கிறான்.
****
யஷ்வந்தின் கடுமையான முகம் பவித்ராவிற்குள் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தியது.
“பாவா” என்றாள் அவனை நெருங்கி அவனின் கையை பற்றியவாறு.
அவளின் கையை வெடுக்கென தட்டி விட்டவன், “அப்படி கூப்பிடாத! எந்த உரிமையில என்னை அப்படி கூப்பிடுற? ஆங்!” என்றான் அதட்டலாக.
அவனின் வார்த்தை மனதிற்குள் சுருக்கென்று வலியை ஏற்படுத்த, அவனின் பிம்பத்தை மறைக்கும் படி திரண்டிருந்த விழி நீரை இமை தட்டி கீழே இறங்கி விடாமல் தடுத்தவாறு முற்றிலுமாக உடைந்து போய் நின்றாள்.
கோபத்தில் தன் சிகையை அழுத்தமாக கோதியவன், “அதான் சொன்னியே என்னை விட்டு போயிடுறேன்னு இப்போ என்ன பாவா.. ம்ம்..” என்றவனின் விழிகள் எல்லாம் கோபத்தில் அப்படி சிவந்து போய் கிடந்தது.
பார்க்கவே அவளுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்த. அவனின் இந்த புதிய அவதாரத்தை அவனின் நண்பர்களாலும், குடும்பத்தாராலுமே கணிக்க முடியவில்லை என்னும் பொழுது பவித்ரா எல்லாம் எம்மாத்திரம்.
அவளின் உடல் முழுவதும் மெல்லிய நடுக்கம் பரவியது. பதில் பேச முடியாமல் நின்றிருந்தாள்.
“என்ன சொன்ன.. என்ன சொன்ன.. இந்த ஒரு வார கால வாழ்க்கையை நெனச்சு வாழ்நாள் முழுக்க வாழ்ந்துடுவியா.. நீ வாழ்ந்து இருப்ப சரி, நான் என்னடி பண்றது? உன்ன கல்யாணம் பண்ணி ஒரு வாரம் வாழ்ந்துட்டேன். உன்னை மறந்துட்டு வேற ஒருத்தியை ஏத்துப்பேன்னு நினைக்கிறியா? மனசு முழுக்க நீ தான் டி இருக்க.. நீ போனதும் என் நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?”.
“இல்ல பாவா..” என்று அவள் எதுவோ கூற வரவும்.
“வாய மூடுன்னு சொன்னேன். நீ பேசுன வரைக்கும் போதும்! நான் பேசுறத மட்டும் தான் நீ கேட்கணும். வீட்ல கன்வின்ஸ் பண்ணி உன்ன அங்க இருக்க வைக்க நான் அவ்வளவு போராடிட்டு இருக்கேன். ஈஸியா போறேன்னு சொல்ற.. என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா?” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாக வினவியவன்.
“நீ இருப்ப டி.. அதான் சொன்னியே ஒரு வாரம் வாழ்ந்ததை நினைச்சு இந்த ஆயுசுக்கு வாழ்ந்திடுவேன்னு.. நீ இருப்ப.. ஆனா, நான்.. என்னை பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா.. என் குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாரும் கஷ்டப்படுறாங்க, அதை பார்த்து உனக்கு கஷ்டமா இருக்குன்னு சொன்ன. அப்போ என் கஷ்டம்.. நீ இல்லாம நான் கஷ்டப்படுவேனே அதுக்கு என்ன பண்றது?”.
அவன் கோபத்தில் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் மனதிற்குள் அத்தனை தித்திப்பாய் ஊடுருவியது.
கோபத்தில் கத்துகிறான்..
திட்டுகிறான்..
கண்டமேனிக்கு பேசுகிறான்..
ஆனால், அவளோ அவனின் வார்த்தைகளை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் நின்றிருந்தாள்.
“இன்னொரு தடவ மத்தவங்களுக்காக என்னை விட்டுட்டு போறேன், அது இதுன்னு ஏதாவது பேசுன சாவடிச்சிடுவேன் டி உன்ன. என்ன நினைச்சுட்டு இருக்க நீ உன் மனசுல? உன்ன பார்த்து பாவப்பட்டு நான் உனக்கு இந்த வாழ்க்கையை பிச்சையா போட்டேன்னு நெனச்சியா? பிடிச்சு தான் டி கல்யாணம் பண்ணேன். ஆனா, அப்போ காதல் இல்ல நான் ஒத்துக்குறேன். உன்னை காதலிச்சு உயிருக்குயிரா நேசிச்சு ஒன்னும் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கல. ஆனா, பிடிச்சிருந்தது.. என்ன கருமமோ தெரியல பிடிச்சு தொலைஞ்சிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு. ஆசைப்பட்டு தான் டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் நினைச்ச போலவே இந்த ஒரு வாரம் அத்தனை சந்தோஷமா உன்னோட வாழ்ந்தேன். ஆனா, இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. உன்ன கட்டும் போது காதலிக்கல.. ஆனா, இப்போ.. காதலிக்கிறேன்! உன்ன மொத்தமா காதலிக்கிறேன். உன்ன அத்தனை புரிஞ்சிருக்கேன். நீ என்னை விட்டுட்டு போயிட்டா வேற ஒருத்திய கல்யாணம் பண்ணி இதே காதலை அவ மேல என்னால வைக்க முடியுமா? என்னை ஏன் டி இப்படி சாவடிக்கிற?” என்றவன் கோபமாக தன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான்.
“சாரி” என்றாள் நா தழுதழுக்க.
“பேசாத!”.
“நான்..”.
“பேசாதன்னு சொன்னேன்”.
“ப்ளீஸ் பாவா..”.
“போடி”.
அவனின் வாயை தன் கரம் கொண்டு மூடியவள், “ப்ளீஸ்..” என்று இறைஞ்சும் பார்வை பார்த்தவள்.
“இந்த ஒரு வாரம் உங்களோட உங்க வீட்ல இருக்கும் பொழுது நான் நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு அவங்களையெல்லாம் எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சது.. அவங்க மேல எல்லாம் நீங்க எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சுது.
என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வரர்தை பார்க்கும் பொழுது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் பாவா.. எல்லார் முன்னாடியும் நீங்க அத்தனை கெஞ்சுனீங்க.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சுன்னு தெரியுமா.. நான் உங்களை விட்டுட்டு போயிட்டா உங்க லைஃப் திரும்ப பழைய மாதிரி ஆகிடும்னு தான்..” என்று அவள் முடிப்பதற்குள்ளாக அவளின் கையை தட்டி விட்டவன்.
“உன்ன பேசாதன்னு சொன்னேன்”.
“பேசுவேன்.. நான் அப்படி தான் பேசுவேன். என்ன செய்ய முடியும் உங்களால” என்று வழியும் கண்ணீரை தன் உறங்கையால் துடைத்து எடுத்தவள் தேம்பிக் கொண்டே அழுகையோடு பேசினாள்.
“என்னால உங்கள இப்படி பார்க்க முடியல .ஒத்துமையா இருந்த குடும்பம் என்னால பிரிஞ்சு போய் இருக்கு. எவ்வளவு கஷ்டப்படுறீங்க அவங்க இல்லாம.. எனக்கு இதெல்லாம் எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரியுமா..
அதனால தான் உங்கள விட்டு போயிடுறேன்னு சொன்னேன். எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும். நான் சொன்னது எல்லாமே உண்மை தான். நான் உங்களோட வாழ்ந்த அந்த ஒரு வாரமும் என் ஆயுசுக்கும் போதும். நான் நினைச்சு பார்க்காத வாழ்க்கை..
அதை நினைச்சுகிட்டே நான் என் வாழ்க்கை முழுக்க வாழ்ந்திருப்பேன். ஆனா, உங்களுக்கு அப்படி இல்லயே.. உங்க குடும்பத்தோட நீங்க திரும்ப சேரனும்னு தான்..” என்று தேம்பலோடு அவள் முடிப்பதற்குள்ளாக அவளின் வாயை தன் இதழ் கொண்டு அடைத்திருந்தான்.
அதுவரை கோபமாகவும், ஆதங்கமாகவும் பேசிக் கொண்டிருந்த இருவரின் இதழ்களுக்கும் இளைப்பாறுதல்.
ஒருவரின் உணர்வுகளின் குவியலுக்கு மற்றொருவர் வடிகாலாய் மாறிப்போயினர்.
ஒற்றை இதழ் தீண்டல் தான், இருவரின் மொத்த உணர்வுகளையும் மட்டுப்பட செய்திருந்தது.
வார்த்தைகள் அற்ற ஒரு உணர்வுகளின் பரிமாற்றம் அங்கே அமைதியாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.
இருவருக்குள்ளும் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்வுகளை சீர் செய்து அமைதியான மழை சாரலாய் மாற்றியது.
ஒற்றை இதழ் தீண்டலுக்கு தான் எத்தனை சக்தி..
வாய் மொழியாக கூறாத அத்தனை ஆறுதலையும், நம்பிக்கையையும் ஒருவருக்குள் மற்றொருவர் கடத்திக் கொண்டிருந்தனர்.
இன்றைய நாளின் தொடக்கம் எத்தனை சுழலாய் அவர்களை சுழற்றி அடித்து இருந்தாலும், முடிவில் அத்தனை இதமான இளைப்பாறுதல்.
பொய்யைக் கொண்டு எந்த ஒரு உறவையும் பலப்படுத்த முடியாது. அந்த வகையில் உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததில் அவர்களின் மனதிற்குள் ஒரு வித நிம்மதி உணர்வும் படர்ந்தது.
*****
யாருக்கெல்லாம் இந்த கதை பிடித்திருக்கு.. ஒரு லைக், கமெண்ட் ஏதாவது கொடுங்க டா. இப்படிக்கு, கதை உங்களுக்கெல்லாம் பிடிக்குதானு தெரியாம மண்டை காயும் பாவப்பட்ட கதையின் எழுத்தாளர்
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…