மொழி – 27

பாதி படம் முடிந்ததும் இடைவெளியில் சிற்றுண்டி ஏதாவது கொரிக்க வாங்கி வருவதாக கூறிவிட்டு சேரனும், யஷ்வந்தும் வெளியேறி விட்டனர்.

இந்து தன் அன்னையுடன் செல்பேசியில் பேசிக்கொண்டிருக்க. 

நித்யா தான் பதட்டத்தோடு பவித்ராவை சற்று நேரத்திற்கு ஒருமுறை பார்த்து பார்த்து திரும்பி கொண்டிருந்தாள். அவளின் அவஸ்தையை உணர்ந்த பவித்ரா.

“நீங்க பேசினத நான் கேட்டுட்டேன் தான். ஆனா, உங்க அண்ணன் கிட்ட எதுவும் சொல்லல” என்றாள் நித்யாவிற்கு மட்டும் கேட்குமாறு மெதுவான குரலில்.

அவள் கூறியதை கேட்ட பிறகு தான் நித்யாவிற்கு மூச்சே வெளிவந்தது. 

“தேங்க்ஸ்” என்று மெல்லிய சிரிப்போடு கூறியவள் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள்.

*****

“இதெல்லாம் எனக்கு தேவையா? மானமே போகுது. எத்தனை மரியாதையோட வாழ்ந்த குடும்பம் இது? ஒருத்தர் வாயைத் திறந்து நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா.. இப்ப பாரு, போன் பண்ணி எத்தன நக்கலா கேட்குறார்னு தெரியுமா” என்று பரமேஸ்வரியிடம் கத்திக்கொண்டிருந்தார் திருமூர்த்தி.

அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு, ஏன் திருமூர்த்தி இத்தனை கோபமாய் இருக்கிறார் என்பது விளங்கவில்லை.

“அப்பா என்ன ஆச்சு? யார் என்ன கேட்டாங்க. எதுக்காக இவ்வளவு கோபமா இருக்கீங்க?” என்று அவரை சமாதானம் செய்ய முனைந்தான் சேரன்.

“எல்லாம் உன் தம்பி பண்ண அசிங்கம் தான். விரட்டி விரட்டி அடிக்குது. நம்ம குடும்பத்தை பார்த்தாலே அவ்வளவு மரியாதை கொடுக்கிறவங்க இன்னைக்கு போன் பண்ணி உங்க வீட்டுல தல தீபாவளி கொண்டாட்டமாமே, எங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே, கமுக்கமா உங்க மகன் ஒரு பொண்ண கட்டி கூப்பிட்டு வந்து வீட்ல வச்சு குடும்பம் நடத்துறானாமேன்னு அசிங்கமா பேசுறாரு”.

“யாருப்பா என்ன பேசினா?”. 

“எல்லாம் உன்னோட ஒன்னு விட்ட மாமா தான். பெரிய பையனுக்கு ஊர் மெச்ச கல்யாணம் பண்ணீங்க. சின்ன பையனுக்கு இப்படி கமுக்கமா காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்த முடிச்சுட்டீங்களே.. பையன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா.. வேற வழி இல்லாம யாருக்கும் சொல்லாம கல்யாணத்தை பண்ணிட்டீங்களான்னு கேட்கிறார். உங்களயெல்லாம் நானும் அம்மாவும் அப்படியா வளத்தோம். எத்தன மரியாதையை சொல்லிக் கொடுத்து கௌரவமா வளர்த்தோம். இப்படி ஒருத்தர் பேசும்போது தல குனிஞ்சு நிக்கிற மாதிரி பண்ணிட்டியே டா” என்றார் யஷ்வந்தை பார்த்து.

“அப்பா பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க. அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. என் பையனுக்கு பிடிச்சிருந்துச்சு சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிட்டோம்னு நீங்க சொல்ல வேண்டியது தானே. அவர பேச விட்டு எதுக்கு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தீங்க”.

“பாத்தியாடி.. பாத்தியா.. உன் மகன் எப்படி பேசுறான்னு பாத்தியா.. ஏதோ இவன் மேல தப்பே இல்லாத மாதிரி, ஊர் மேல தப்புன்ற மாதிரி இல்ல பேசுறான். அவர் கேட்டதுல என்னடா தப்பு? ஊர் உலகத்துக்கு தெரியாம திருட்டு கல்யாணம் மாதிரி இழுத்துட்டு வந்தா ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் நாக்கு மேல பல்ல போட்டு தான் பேசுவானுங்க”.

“பேசிட்டு போகட்டுமே பா. அப்படி பேசுறவங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கணும்னு இப்போ என்ன அவசியம். அனாவசியமா யார் குடும்பத்துல என்ன நடக்கும்னு எதிர் பாத்துக்கிட்டு இருக்கவங்களுக்கு  எல்லாம் பதில் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லப்பா”.

“என்னடா பேசுற நீ, எப்படி பதில் பேசாம இருக்க முடியும். அவங்க மத்தியில தானே நம்ம வாழ்ந்தாகணும். இத்தன வருஷம் ஒழுக்கமா வளர்ந்த என் பையன் மேல அபாண்டமா ஒரு பழி சொல் வந்து விழும் பொழுது என்னால எப்படி அதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும். உங்க பையன் என்ன தப்பு பண்ணான். எதனால காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டிங்கனு கேட்கிறார். அதுக்கு என்ன அர்த்தம்னு உன் மண்டைக்கு உறைக்குதா இல்லையா?” என்று கத்தினார்.

“அப்பா புரியுது! அதுக்கு இப்ப என்ன பண்ணனும்? இவங்க பேச்சுக்கெல்லாம் பயந்துட்டு இருக்க முடியுமா.. நம்ம மேல எந்த தப்பும் இல்லன்னு நமக்கு தெரிஞ்சா போதாதா.. ஊர் வாயை அடைக்கனும்னு நமக்கு எந்த அவசியமும் இல்ல. பேசுறவங்க கொஞ்ச நாள் பேசிட்டு வேற ஏதாவது விஷயம் கிடைச்சா இதை விட்டுட்டு அதை பேச போயிடுவாங்க. இவங்க பேசுறத எல்லாம் நெனச்சு நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க?”.

“சரி விடுங்க, அவன் தான் இவ்வளவு தூரம் சொல்றான்ல. எதுக்கு அத பத்தி பேசிக்கிட்டு.. அவர பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல.. யாரு குடும்பத்துலயாவது ஏதாவது ஒரு பிரச்சனைனா முதல்ல வேணும்னே துருவி துருவி கேட்கிற மனுஷன். யார் மூலமாவோ இந்த விஷயம் வெளியில தெரிஞ்சிருக்கு. அதான் இப்படி கேட்கிறார்” என்று அவரை சமாதானம் செய்தார் பரமேஸ்வரி.

“யாரு மூலமோ எல்லாம் தெரியல பரமு. உன் ஐய்யனார் அண்ணன் தான் சொல்லி இருக்காரு.. இதை மட்டும் தான் சொன்னாரா.. இல்ல, எந்த இடத்துல இருந்து வந்தவன்றதையும் சேர்த்து சொன்னாரோ யார் கண்டா.. கல்யாணம் நடந்ததுக்கே இந்த மாதிரி கண்டமேனிக்கு பேசுறாங்க. இன்னும் இந்த பொண்ணு எங்கிருந்து வந்தான்னு தெரிஞ்சா, என்னவெல்லாம் பேசுவாங்களோ.. இன்னும் எதையெல்லாம் பார்க்க இந்த உயிரை நான் என் கையில புடிச்சு வச்சிருக்கேனோ தெரியல” என்று தன் தலையில் கையை வைத்து சோபாவில் அமர்ந்து விட்டார்.

பவித்ராவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வர, தன் வாயை பொத்தியவாறு அறைக்கு சென்று விட்டாள்.

“அப்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க. யாஷ் சொல்ற மாதிரி நீங்க ஏன் இதை பத்தி எல்லாம் யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்குறீங்க. இப்ப தான் அம்மா உடம்பு தெறி வந்திருக்கு. அடுத்து உங்களுக்கு ஒன்னுனா எங்களால தாங்க முடியாதுப்பா. பேசுறவங்க வார்த்தைக்கு எல்லாம் பயந்தா என்ன பண்ண முடியும். இவன் கல்யாணம் இப்படி தான்னு தெரிஞ்சு போச்சு. அதை பத்தியே யோசிச்சு பேசி என்ன ஆகப்போகுது. பேசாம நம்ம சொந்த பந்தத்தை எல்லாம் கூப்பிட்டு ஒரு அழைப்பு வச்சிடுவோம். இது மாதிரியான பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்ச மாதிரி ஆகிடும்” என்றான் சேரன்.

“ஆமாம்பா, எதுக்கு கொஞ்சமா மானம் பறந்துகிட்டு இருக்குன்னு மொத்தமா பறக்க விட்டுடலாம்னு சொல்றியா.. அழைப்பு வச்சு எல்லாரும் அங்க வந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசி நம்ம குடும்ப மானத்தை பறக்க விடவா.. அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்ல. இந்த கல்யாணத்துக்கு அழைப்பு ஒன்னு தான் கேடு” என்றார் கடுகடுத்த முகத்தோடு. 

யஷ்வந்திற்கு என்ன கூறி சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. இவர்களின் நிலை புரிந்தாலும், பவித்ராவையும் விட முடியாதே.. 

தன்னை பெற்று வளர்த்தவர்களின் மனவருத்தம் அவனுக்கும் புரியாமல் இல்லை. தன் வாழ்க்கை எங்கே வீணாய் போய் விடுமோ என்ற பயம் தான் அவர்களை இத்தகைய பேச்சை எல்லாம் பேச வைக்கிறது என்பது அவனுக்கும் நன்கு புரிந்தது. 

அதற்கான தேவையே இல்லை என்று தான் அவனும் விளக்கிக் கொண்டிருக்கிறான். ஆனாலும், அவர்களின் எண்ணம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருப்பது அவனுக்கும் அதிருப்தியை தான் கொடுத்தது.

ஒருபுறம், தன் பெற்றோரின் நிலை.. மற்றொருபுறம், பவித்ராவின் நிலை.. என நடுவில் தடுமாற்றத்தோடு தத்தளித்துக் கொண்டிருக்கிறான் யஷ்வந்த்.

எதுவுமே பேசாமல் மௌனமாக அறைக்கு சென்றவன். தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு பவித்ராவுடன் வெளியே வந்தான். 

பதட்டமாக அவனை நோக்கி விரைந்த பரமேஸ்வரி, “என்ன யாஷ்.. என்ன ஆச்சு.. அப்பா எதோ கோவத்துல..”.

“மா நேரம் ஆயிடுச்சு நாளைக்கு ஆபீஸ் இருக்கு, அவளுக்கும் கிளாஸ் இருக்கு. அதான் கிளம்புறேன். கோவமா எல்லாம் போகல. சாட்டர்டே வரேன். உடனே நீங்க இதையே நினைச்சு உங்க உடம்ப போட்டு கெடுத்துக்காதீங்க” என்று விட்டு வெளியேறிவிட்டான்.

சேரன் தான் தன் தந்தைக்கு சமாதானம் கூறி அவரின் மனதை ஆற்றிக் கொண்டிருந்தான்.

அடுத்தடுத்த நாட்களும் விரைவில் சென்று விட்டது. நடந்ததை நினைத்து ஒரே இடத்தில் தேங்கி விட முடியாது அல்லவா. பவித்ரா சிறு சிறு டிசைன்களை எல்லாம் தானே போடும் அளவிற்கு தேறி இருந்தாள்.

யஷ்வந்தை தான் சந்திக்காமல் இருந்திருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காதே என்று அவள் சிந்திக்காத நாளில்லை. 

அவனின் பெற்றோரின் மனவருத்தமும் இவளுக்கு நன்கு புரிந்தது. தன் வாழ்க்கை மட்டும் தான் முக்கியம் என்று சுயநலமாக அவளால் சிந்திக்கவும் முடியவில்லை. 

பெற்றவர்களுக்கு அவர்களின் பிள்ளையின் வாழ்க்கையை நினைத்த பயமும், அச்சமும், பரிதவிப்பும் இருப்பது நியாயம் தானே என்று அவர்களின் பக்கமும் நின்று சிந்தித்தாள்.

நாட்கள் வேகமாய் பறந்து விட. இதோ அடுத்த சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது.

மீண்டும் பவித்ராவுடன் தங்களின் வீடு நோக்கி புறப்பட்டிருந்தான் யஷ்வந்த்.

“பாவா இது அழகா இருக்கா பாருங்க” என்று அவனின் முன்னே அந்த குட்டி ப்ராக்கை காட்டினாள் பவித்ரா. 

“அழகா இருக்கு பவி, நீயா டிசைன் பண்ண?” என்றான் புருவங்கள் மேலுயர.

“ம்ம்.. ஆமா, யாஷிகா குட்டிக்காக”.

பவித்ரா யாஷிகாவிற்காக எத்தனை ஆசையாய் அந்த துணியை தயாரித்திருக்கிறாள் என்பது அவளின் முகத்திலேயே பளிச்சிட்டது.

ஆனால், இந்து அவளின் மனம் நோகும்படி ஏதேனும் கூறிவிட்டால், அல்லது இதை வாங்காமல் புறக்கணித்து விட்டால், அதில் நொந்து போவாளே என்று எண்ணியவன்.

“ஏன் பவி இதெல்லாம் செய்யுற?”.

“ஏன், நம்ம யாஷிகா குட்டிக்கு நான் செய்யக்கூடாதா?”.

“அப்படி சொல்லல டா. அண்ணி ஏதாவது பேசிட்டா.. ம்ம்ச்ச்..” என்றான் சலிப்பாக.

“இந்து அக்கா தான் யாஷிகா உடைய அளவே கொடுத்தாங்க”.

“என்ன நெஜமாவா?”. என்றான் ஆச்சரியமாக.

“ம்ம்.. ஆமா, நான் டிசைன் பண்ண போறேன்னு கேட்டேன். அவங்க தான் அளவு டிரஸ் கொடுத்தாங்க. இன்னைக்கு கொண்டு வரேன்னு இந்து அக்கா கிட்ட சொல்லி இருக்கேன். அதான் கொண்டு போகலாம்னு பார்த்தா நீங்க என்ன இப்படி பேசுறீங்க?” என்றாள் முகம் வாட.

“ச்ச.. ச்ச.. உன்ன பண்ணி கொடுக்க கூடாதுன்னு சொல்லலடா. அவங்க ஏதாவது பேசி உனக்கு ஏதாவது மன கஷ்டம் வந்துடுமோனு தான் யோசிச்சேன். அண்ணியே கொடுத்தாங்கன்னா ஓகே தான். எப்படி நீயும் அண்ணியும் செட் ஆனிங்க”. 

“தெரியல, அவங்க மட்டும் அப்பப்போ என்கிட்ட கொஞ்சம் நல்லா பேசுவாங்க”.

ஆம், இந்த இடைப்பட்ட நாட்களில் இவர்கள் அங்கே சென்று வந்து கொண்டிருக்கும் பொழுது இந்து உடன் மட்டும் பவித்ராவின் உறவு சற்று பலப்பட்டு விட்டது. 

நித்யா உடனும் சுமுகமான உறவு தான் என்றாலும், பெரிதாக பேசிக் கொண்டதெல்லாம் கிடையாது. 

இந்து ஏதேனும் உதவி என்றால் பவித்ராவிடம் கேட்கவும், யாஷிகாவை பார்த்துக் கொள்ள வேண்டி அவளிடம் கொடுக்கவும் என சற்று அவளுடன் பழகி இருந்தாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page