மொழி – 28

“நமக்கு குழந்தை பிறந்தாலும் இதே போல டிசைன் பண்ணுவியா?” என்றான் அவளின் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு கோலமிட்டவாறு.

“ம்ம் கண்டிப்பா.. நம்ம பாப்பாவுக்கு பண்ணாமலா” என்றதும் அவளின் கண்கள் மின்ன.

“ஓ! அப்போ பாப்பாவுக்கு டிரஸ் டிசைன் பண்ண ரெடியா இருக்க போலருக்கே”. 

“ஆமா, அப்புறம் நம்ம பாப்பாவுக்கு டிசைன் பண்ணனும்ல. வந்ததும் நிறைய டிசைன் பண்ணுவேன். வித்தியாச வித்தியாசமா” என்று அத்தனை ஆசையாய் கைகளை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள்.

“டிசைன் பண்ண பாப்பா வேணுமே பவி” என்றான் கிறக்கமாய்.

அவனின் குரல் மாறுதலே இவளை கூசி சிலர்க்கச் செய்ய. அடி வயிற்றுக்குள் எதுவோ உருளும் உணர்வு.

“என்ன பவி சைலன்ட் ஆகிட்ட.. பாப்பா வேணும் தானே?”. 

“ம்ம்” என்றதும்.

அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், “அப்போ ஃபர்ஸ்ட் பாப்பாவுக்கு ரெடி பண்ணுவோம்” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாய் புன்னகைத்தவாறு.

அதில், மொத்தமாய் அவள் சிவந்து போக, “அச்சோ பாவா” என்றவாறு தன் முகத்தை இருகரம் கொண்டு மூடிக் கொண்டாள்.

*****

இருவரும் வீட்டிற்குள் நுழைவதை பார்த்ததுமே முறைத்துக் கொண்டு அறைக்கு எழுந்து சென்று விட்டார் திருமூர்த்தி.

வழக்கம்போல் அதை ஒரு பெருமூச்சுடன் கடந்து விட்டாள் பவித்ரா. யஷ்வந்திற்கு தான் மனம் கேட்கவில்லை. இன்று தன் தந்தையிடம் எப்படியாவது பேச வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.

“வா பவி, சாப்பிட்டீங்களா?” என்று இந்து வினவவும்.

பரமேஸ்வரி கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார்.

“சாப்பிட்டோம் கா. இங்க பாருங்க யாஷிகா பாப்பாவுக்கு நான் டிசைன் பண்ண டிரஸ்”.

“வாவ்! ரொம்ப அழகா இருக்கு பவி. கொஞ்ச நாளிலேயே ரொம்ப நல்லா டிசைன் பண்ண கத்துக்கிட்டியே.. ரொம்ப அழகா பண்ணியிருக்க” என்று மனதார அவளை பாராட்டினாள்.

இந்துவின் அருகில் வந்து நின்ற நித்யா துணியை பார்த்துவிட்டு, “நிஜமாவே ரொம்ப அழகா இருக்கு அண்ணி” என்றாள் வெகு நாட்கள் கழித்து தன் வாயை திறந்து.

எத்தனை நாட்கள் கழித்து அவள் தன்னை அண்ணி என்று அழைக்கிறாள். பவித்ராவிற்கு பெரும் உணர்ச்சி பெருக்காகி போனது. இந்த நொடிகளை கடக்க முடியாமல் மனதை எதுவோ அழுத்துவது போன்ற உணர்வு.

கண்கள் கலங்க யாரிடமும் அதை காட்டாமல் சிரமப்பட்டு மறைத்துக் கொண்டாள்.

“யாஷிகா பாப்பாவுக்கு இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கும். நான் இத அவளுக்கு போட்டுவிடவா அண்ணி” என்றவள் இந்துவின் கையில் இருந்த துணியை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

பேச முடியாமல் கண்கள் கலங்க நின்ற பவித்ராவின் தோளைத் தொட்ட இந்து, “என்னாச்சு?”.

அவளுக்கு மறுப்பாக தலையசைக்கவும்.

அவளின் தோளில் தட்டிக் கொடுத்தவள், “எல்லாம் சரியாகிடும் சரியா” என்றாள் மென்மையாக.

அவளும் மெல்லிய புன்னகையோடு தன் தலையை மேலும் கீழுமாய் ஆட்டி வைத்தாள்.

அதன் பிறகு, நித்யா யாஷிகாவை தயார் செய்து தூக்கி வரவும். அந்த உடை அவளுக்கு அத்தனை கச்சிதமாகவும், அழகாகவும் இருந்தது.

“யாஷிகாம்மா புது துணி போட்டு இருக்கீங்களா ரொம்ப அழகா இருக்கே” என்று குழந்தையை நெட்டி முறித்து கொஞ்சினார் பரமேஸ்வரி.

“அம்மா சின்னண்ணி பண்ண டிசைன் தான் சூப்பரா இருக்குல?” என்று நித்யா பட்டென கூறி விடவும்.

ஒரு நொடி திகைத்த பரமேஸ்வரி, “நல்லா இருக்கு” என்றதோடு முடித்துக் கொண்டார்.

“இன்னைக்கு வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கோவிலில் சிறப்பு பூஜை. நீயும் வாயேன் பவி விசேஷமா இருக்கும். நாங்க எல்லாருமே இப்ப அங்க தான் போக கிளம்பிக்கிட்டு இருக்கோம்” என்று அழைத்தாள் இந்து. 

“இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க. என்னால கோவிலுக்கு வர முடியாது” என்று தயக்கத்தோடு அவள் கூறவும்.

“ஓ” என்றவள் புரிந்ததாய் அவளைப் பார்த்து தலையசைக்கவும். 

அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.

அதன் பிறகு அனைவரும் ஒன்றாய் கிளம்ப.

“அண்ணி நீங்க வரலையா?” என்றாள் நித்யா.

“அவளால கோவிலுக்கு வர முடியாது நித்யா. நாம போயிட்டு வரலாம்” என்று விட்டு மற்றவர்களுடன் புறப்பட்டிருந்தாள் இந்து. 

வீட்டில் பவித்ராவை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவருமே குடும்பமாய் கிளம்பி இருந்தனர்.

கிளம்பும் தருவாயில், “ஏன் டி பொய் சொன்ன?” என்றான் யஷ்வந்த்.

“ஆங்” என்று விழித்தவளுக்கு என்ன கூறி சமாளிப்பது என்று விளங்கவில்லை. மற்றவர்களிடம் கூறிய அதே பொய்யை இவனிடம் கூற முடியாதல்லவா.. அதனாலேயே திடுக்கிட்டு நின்று விட்டாள்.

“உன்னால கோவிலுக்கு வர முடியாதுன்னு ஏன் அண்ணிகிட்ட பொய் சொன்ன?”.

“அது.. அது வந்து பாவா.. தேவையில்லாம எதுக்கு பிரச்சனை அதான்” என்று அவள் தடுமாறி இழுக்கவும்.

“அப்போ நீ இந்த குடும்பத்துல ஒருத்தி இல்லையா? நீயே விலகிக்கலாம்னு பாக்குறியா?”.

“அச்சோ! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கும் இது குடும்பம் தான். நானும் இந்த குடும்பத்துல ஒருத்தி தான். கோவிலுக்கு வரலன்னா எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அர்த்தமா.. எதுக்கு ஒவ்வொரு முறையும் வரும் போது அவங்கள டென்ஷன் பண்ணனும்னு தான் இந்து அக்கா கேட்கும் போது வர முடியாதுன்னு சொன்னேன். இன்னும் கொஞ்ச நாள் தானே பாவா, அவங்க மனசு மாறிடுவாங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீங்க கோவிலுக்கு போய் நமக்காக வேண்டிக்கிட்டு வாங்க”. 

“வேண்டிக்கிட்டு தான் இருக்கேன். ஆனா, வேண்டுதல் எப்போ பலிக்கும்னு தான் தெரியல” என்றவனும் பெருமூச்சோடு புறப்பட்டு விட்டான்.

கதவை தாழிட்டுக் கொண்டு அமைதியாய் அமர்ந்து விட்டாள் பவித்ரா. அவளுக்குள்ளும் பல ஏக்கங்களும், வருத்தங்களும், உணர்வுகளும் அலைக்கழித்துக் கொண்டு தான் இருக்கிறது. 

ஆனாலும், யஷ்வந்த் என்ற ஒருவனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.

சட்டென கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும் எழுந்து சென்று கதவை திறந்தாள்.

திருமூர்த்தி தான் பார்க்கவே அயர்வான தோற்றத்துடனும், வாடிய முகத்துடனும் நின்றிருந்தார்.

கோவிலுக்கு சென்ற திருமூர்த்திக்கு கூட்டத்தில் அங்கே இருக்க முடியவில்லை. அதனால் யாரிடமும் கூறாமல் வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஹால் சோபாவில் தட்டுத் தடுமாறி அமர்ந்தவருக்கு வியர்த்து வழிய நிலை கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருந்தார்.

அவரின் நிலையை உணர்ந்த பவித்ரா வேகமாக சமையலறைக்கு விரைந்தவள், ஒரு டம்ளரில் தண்ணீருடன் வெளியே வந்து அவரின் முன்பு அதனை நீட்டி இருந்தாள்.

அப்பொழுது தான் திருமூர்த்தியை காணவில்லையே என்று குடும்பத்தில் இருந்த மற்றவர்களும் அவசரமாக வீடு திரும்பியிருந்தனர்.

பவித்ரா நீட்டிய தண்ணீர் டம்ளரை பார்த்துவிட்டு அவளை முறைத்துப் பார்த்தவர். வேகமாய் அதனை தட்டி விட்டிருந்தார். தண்ணீர் டம்ளர் சுவற்றில் அடித்து அதிலிருந்த தண்ணீர் மொத்தமும் சிதற, பெரும் சத்தத்தோடு டம்ளர் கீழே விழுந்தது .

அதில் பயந்து போன பவித்ரா தன் காதுகளை பொத்தியவாறு கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

“உன் கையால தண்ணிய வாங்கி குடிச்சிட்டு நான் உயிரோட இருக்குறதுக்கு இப்படியே கிடந்து செத்துப் போகலாம்” என்று அவள் உயிர் வேதனை கொள்ளும் வார்த்தைகளை உதிர்த்தார்.

வீட்டிற்குள் நுழைந்த அனைவரும் பதறிப் போய் திருமூர்த்தியின் அருகில் ஓடி வர.

நித்யா ஓடிச் சென்று வேறு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள். அதை வாங்கி பருகியவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிலைகொள்ள முடிந்தது.

“என்னங்க என்ன ஆச்சு?” என்று தவிப்போடு வினவினார் பரமேஸ்வரி.

“முதல்ல இவள உள்ள போக சொல்லு. தண்ணி கொடுக்கிறாளாம்.. இவ கையால நான் வாங்கி குடிக்கிற அந்த தண்ணி கூட விஷம் மாதிரி தான். யாரு கேட்டா இவகிட்ட தண்ணிய.. நம்ம குடும்பத்தோட குடிய கெடுத்துட்டு தண்ணியை கொடுத்து ஒட்டிக்கலாம்னு பார்க்கிறாளா”.

அதற்குள் சேரனும், யஷ்வந்தும் வீட்டிற்கு வந்து சேர. அனைவரும் பதட்டத்தோடு நிற்பதும், திருமூர்த்தி ருத்ர மூர்த்தியாய் மாறி இருப்பதும், பவித்ரா ஓரமாக அழுது கொண்டிருப்பதும் எதுவோ சரியில்லை என்று உணர்த்தியது.

பவித்ராவின் அருகில் வந்த யஷ்வந்த், “என்னாச்சு பவி?”.

“இந்த நடிப்பை எல்லாம் இதோ வந்திருக்கான் பாரு இவன் கிட்ட வச்சுக்கோ. இவன் தான் இளிச்சவாயன். நீ என்ன செஞ்சாலும் அப்படியே பூரிச்சு போவான். நீ நடிக்கிறியா இல்ல, உண்மையா செய்யுறியானு கூட தெரிஞ்சுக்க முடியாத முட்டாள். ஆனா, நான் ஒன்னும் இவன மாதிரி கிடையாது. இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேலைக்காகாது. நான் செத்தாலும் உன்னை மன்னிக்க மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் தாமதமாகி இவங்க வந்திருந்தாலும், உன் கையால அந்த தண்ணிய வாங்கி குடிச்சு நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன். அப்படியே ஒரு வாய் தண்ணி இல்லாம செத்திருப்பேன்” என்றார் அத்தனை ஆத்திரமாகவும், அகங்காரமாகவும்.

“அப்பா!” என்ற பிள்ளைகளின் குரல் மாற்றி மாற்றி ஒலிக்க.

யஷ்வந்தை பார்த்தவர், “ஆமாண்டா, செத்து தான் போயிருப்பேன். பின்ன, இப்படிப்பட்டவ கையால தண்ணிய வாங்கி குடிச்சிட்டு இந்த உசுர புடிச்சு நான் என்னத்த சாதிக்க போறேன். நீயும் இன்னும் எத்தன காலத்துக்கு இவள இங்க வரும் பொழுதெல்லாம் இழுத்துட்டு வந்தாலும் சரி, என் மனசு மாறாது. எங்க காலத்துக்கு பிறகு வேணும்னா இவள இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்து வச்சுக்கிட்டு சந்தோஷமா எல்லாரும் ஒத்துமையா குடும்பம் நடத்துங்க. ஆனா, நான் உசுரோட இருக்க வரைக்கும் என்னைக்குமே இவ இந்த வீட்டு ஆளாக முடியாது” என்று கூறியவருக்கு உடல் எல்லாம் நடுக்கம் எடுத்தது.

“அப்பா இத பத்தி அப்புறமா பேசிக்கலாம். நீங்க கொஞ்ச நேரம் படுங்க” என்றவாறு அவரை சமாதானம் செய்து அறைக்கு அழைத்து சென்றிருந்தான் சேரன்.

பரமேஸ்வரிக்கு என்ன கூறி அவரை சமாதானம் செய்வது என்றே விளங்கவில்லை. ஒரு புறம் மகன், மற்றொருபுறம் கணவர்.. இந்த பிரச்சனை எல்லாம் எப்பொழுது முடியுமோ என்று ஆகிவிட்டது அவருக்கு.

இன்று தன் தந்தையிடம் அத்தனை அவன் தன் மனம் திறந்து பேசியும், இவர் இப்படி நடந்து கொண்டதில் மொத்தமாய் மனமே விட்டுப் போனது யஷ்வந்திற்கு.

ஆம், கோவிலுக்கு சென்றதும் அவருடன் தனிமையில் பேசி இருந்தான் யஷ்வந்த்.

“அப்பா எனக்கு உங்க மனசு புரியுது. உங்களுடைய சூழ்நிலையும் புரியுது. ஆனா, நீங்க நினைக்கிற அளவுக்கு அவ மோசம் எல்லாம் இல்லப்பா .ரொம்ப நல்ல பொண்ணு. நிச்சயம் நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகளா அவ இருப்பா. சின்ன வயசுலருந்து என்னை நீங்க ரொம்ப நல்லா பாத்துக்கிட்டிங்க. எனக்கு எல்லாமே கொடுத்து இருக்கீங்க. உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துகிட்டதுக்கு என்னை தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க பா. ஆனா, எங்கள ஒதுக்கிடாதீங்க”.

அவனுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காத திருமூர்த்தி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page