மொழி – 30

“காஞ்சனா நான் செஞ்சது தப்பு தான். அதுக்கு என்ன மன்னிச்சிடு தாயி” என்று தன் தலைக்கு மேல் இரு கரம் கூப்பி வணங்குவது போல் காண்பித்தவர்.

“என்ன பண்ணனும்னு சொல்ற, ஏதோ புத்தி கெட்டுப் போய் அப்படி நடந்துக்கிட்டேன். இனி அதுபோல எதுவும் நடக்காது போதுமா.. அதுக்காக அவன் முன்னாடி என்னை திரும்ப போய் நிக்க சொல்றியா?”.

“ஏன் நின்னா என்ன தப்பு? நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக போய் நிக்க முடியாதா.. கண்ட இடத்துல போய் நிக்க முடியுது. நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக உங்க தங்கச்சி வீட்டுக்கு போய் நிக்க முடியாதா?” என்று கடுகடுத்தார்.

“ஐயோ! அந்தப் பையன் அவ்வளவு பேச்சு பேசின பிறகும் எப்படி நீ நம்ம பொண்ண அவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு நினைக்கிற.. அதுவும் அவன் வேற ஒருத்திய கட்டுன பிறகு எப்படி இவள கட்டுவான்?.

“அந்த பொண்ணு எப்படிப்பட்டவன்னு தெரியாம தானே உங்க தங்கச்சி குடும்பம் அவள ஏத்துக்கிட்டாங்க. நாம தான் அந்த பொண்ணு எங்கிருந்து வந்தான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுட்டோமே. இப்போ எப்படியும் குடும்பத்துக்குள்ள பிரச்சனையாகி இருக்கும். அந்த பெண்ண இந்நேரம் வீட்டை விட்டே விரட்டி அடிச்சிருந்தாலும் அடிச்சிருப்பாங்க. நிச்சயமா திருமூர்த்தி அண்ண அந்த பொண்ண வீட்ல வச்சிருக்க மாட்டாங்க. மரியாதை, கௌரவம்னு பார்க்கிற குடும்பம். இப்படிப்பட்ட பொண்ணயா வீட்டு மருமகளா வச்சிருப்பாங்க. அதெல்லாம் அவங்க எப்பவோ அடிச்சு துரத்தி இருப்பாங்க. இப்ப அவனுக்கும் ரெண்டாம் தாரம் தானே.. நாமளே போய் பொண்ணு கொடுக்கறோம்னு சொன்னா நிச்சயம் சம்மதிப்பாங்க” என்று தான் பிடித்த பிடியிலேயே நின்றார்.

“சம்மதிக்கலனா?”.

“சம்மதிக்கலனா, அவங்க மகன் லட்சணத்தை ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொல்லிடுவோம்னு சொல்லுவோம். அதுக்கு பயந்தாவது நம்ம பொண்ண கட்டி தானே ஆகணும்”. 

“என்னடி கொஞ்சம் கூட விவரம் புரியாம கூறுகெட்ட தனமா பேசிகிட்டு இருக்க. எந்த காலத்துல இருக்க நீ, நாம எதையாவது சொல்ல போய் அவனும் பதிலுக்கு எதையாவது சொல்லி வச்சா, நம்ம மானமும் சேர்ந்து தான் போகும்” என்று பல்லை கடித்தார்.

“இந்த அறிவு அந்த இடத்துக்கு போய் நிக்கிறதுக்கு முன்னமே இருந்திருக்கணும். எனக்கு அதெல்லாம் தெரியாது, உங்க லட்சணம் வெளியில தெரிஞ்சா நாள பின்ன என் பொண்ண கட்டிக்கிட்டு போறவனும் அதே மாதிரி நடந்துக்கிட்டா ஒரு வார்த்தை கேட்க முடியாம நானும் என் பொண்ணும் மருகிப்போய் நிக்கணும். அதுக்கு இவனுக்கு ரெண்டாம் தாரமா கூட கட்டிக் கொடுத்திடலாம்”.

“இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்ற?”.

“அப்படி கேளுங்க, உங்க தங்கச்சிக்கு போன் பண்ணி பேச போறேன். மேலோட்டமா பேசி குடும்ப நிலவரம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்”. 

“எனக்கு என்னவோ இதுல விருப்பம் இல்ல. அதுக்கு மேல உன் இஷ்டம். என்னமோ பண்ணு” என்றவர் முகத்தில் கோபம் டன் கணக்கில் குடிகொள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

“ஹலோ அண்ணி, எப்படி இருக்கீங்க?” என்று வாயெல்லாம் பல்லாக விசாரித்தார் காஞ்சனா.

முதலில் இவரின் எண்ணை பார்த்த பரமேஸ்வரி எடுக்கலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்திற்கு பிறகு தான் அழைப்பை ஏற்றார். 

அன்றைய பிரச்சனைக்கு பிறகு இப்படி சுமூகமாக இவர் பேசுவார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

எனவே, திகைத்து விழித்தவர் தன்னை சுதாரித்து, “ஆங்! நல்லா இருக்கோம் அண்ணி. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”.

“எங்களுக்கு என்ன அண்ணி, எல்லாரும் நல்லா இருக்கோம். அன்னைக்கு பேசிட்டு வந்ததோட சரி, மனசு தான் கேட்கல. நம்ம புள்ள வாழ்க்கை இப்படி நம்ம கண்ணு முன்னாடியே கருகி போகுதேனு மனசு கிடந்து அடிச்சுக்குது. அதான் அங்க என்ன நிலவரம்னு விசாரிக்கலாம்னு போன் போட்டேன்” என்று வார்த்தையில் இனிப்பை தடவி பேசினார்.

பரமேஸ்வரியும் அவர் உண்மையாக தான் விசாரிக்கிறார் என்று எண்ணியவர், தங்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை அவரிடம் வெள்ளந்தியாக ஒப்புவித்தார்.

“ஓ! இவ்வளவு நடந்துடுச்சா.. பரவாயில்ல அண்ணி, எப்படியோ நம்ம யாஷ் தம்பி அந்த பொண்ண வீட்டுக்கு கூப்பிட்டு வரர்த நிறுத்திட்டாரே.. கொஞ்சம் கொஞ்சமா மொத்த உறவும் அத்து போயிடும் பாருங்க”.

யஷ்வந்தை நேரில் பார்க்கும் பரமேஸ்வரிக்கு தெரியாதா, அவர்களின் உறவு முறிந்து போகுமா இல்லையா என்று. 

இருப்பினும், இவரிடம் எதையும் கூறிக்கொள்ளாமல், “சரி அண்ணி” என்று முடித்துக் கொண்டார்.

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. எதுக்கும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு குடும்பமா போய் பொங்க வச்சிட்டு வந்துடுவோம். ஆத்தா அருள் வந்ததும் இந்த கஷ்டத்தை எல்லாம் எப்படி நீக்குறதுன்னு அவகிட்டயே கேட்போம். நம்ம குலசாமி நமக்கு நல்ல வழியை காட்டும். அந்த ஆத்தாவே இவ நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ இல்லைன்னு சொல்லிட்டா, யாஷ் தம்பி நிச்சயமா அந்த பொண்ண வெட்டி விட்டுடும் பாருங்க”.

“எனக்கும் மனசு சரியில்ல அண்ணி. நானும் நெனச்சிட்டு தான் இருந்தேன் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணும்னு. இப்போ நீங்களும் அதையே சொல்றீங்க. இந்த வாரமே போய் பொங்கல் வச்சுட்டு வந்துடறோம்”. 

“சரி அண்ணி, கிளம்பும்போது சொல்லுங்க நாங்களும் உங்களோட வரோம். குடும்பமா போய் வைப்போம்” என்று அழுத்தி கூறினார்.

அதற்கு ‘சரி’ என்ற பரமேஸ்வரி அணைப்பை துண்டித்ததும். 

ஐய்யனாரை பார்த்தவர், “அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு. ஒரு போன் போட்டு பேசினா அங்க என்ன நிலவரம்ன்னு தெரிஞ்சிதுல. அந்த பையன் இப்போ அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வரர்த நிறுத்திட்டானாம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா மொத்த உறவும் அத்து போயிடும். நம்ம பொண்ணயும் அவனுக்கு கட்டி வச்சிடுவோம்”.

“அவ்வளவு பேசினவன் வீட்ல போய் எப்படி நம்ம பொண்ண கட்டி கொடுக்குறது. அப்படியே கட்டி கொடுத்தாலும், அவன் நம்மள மதிப்பானா?”.

“மதிக்கிற மாதிரி நடந்திருந்தா மதிச்சிருப்பாங்க. உங்க மேலயும் தான தப்பு இருக்கு. இனி ஒழுங்கா இருங்க மதிப்பு, மரியாதை எல்லாம் தானா தேடி வரும்” என்று அவரை அடக்கி இருந்தார் காஞ்சனா.

*****

உடனே, யஷ்வந்திடமும் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க போக வேண்டும் என்று கூறியிருந்தார் பரமேஸ்வரி.

“மா பவித்ரா வராம நான் வரமாட்டேன்” என்று முடிவாய் கூறி இருந்தான் அவன்.

“என்னய்யா இப்படி சொல்ற?”. 

“வேற என்னமா சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்க. குடும்பமா குலதெய்வ கோவிலுக்கு போகணும்னு சொல்றீங்க. நான்னா அது அவளும் சேர்த்து தான.. நாங்க தான் ஒரு குடும்பம். வந்தா நான் அவளோட தான் வருவேன். இல்லனா, நீங்க மட்டும் போய் பொங்கல் வச்சுட்டு வாங்க”.

“இல்ல பா, அவளையும் கூப்பிட்டு வா ஒன்னும் பிரச்சனை இல்ல. கொஞ்ச நாளா மனசு சரியில்ல. ஏகப்பட்ட பிரச்சனை நடந்துட்டு இருக்கு. குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வச்சுட்டு, சாமிகிட்ட குறி கேட்டுட்டு வந்தா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்”.

“சரி மா, எப்ப வரணும்னு சொல்லுங்க. நான் நேரா கோவிலுக்கே வந்துடுறேன்” என்று அவன் கத்தரிப்பது போல் பேசவும்.

எங்கே வீட்டிற்கு வந்து தங்களுடன் சேர்ந்து செல்லலாம் என்று கூறினால், அவன் மறுத்து விடுவானோ என்று எண்ணிய பரமேஸ்வரியும் அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டார்.

“என்னடா முகமே சரியில்ல. டல்லா இருக்க” என்றான் சுதாகர்.

“வீட்ல நிறைய பிரச்சனை”.

“இது என்னடா சின்ன விஷயமா எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் உன் வீட்ல ஏத்துக்குறது ரொம்பவே கஷ்டம். அதுக்கான நேரத்தை கொடுத்து தானே ஆகணும்” என்று அவனை சமாதானம் செய்தனர் சுதாகரும், சாரதியும்.

*****

வழக்கமாய் இரவு உணவை சமைத்து வைத்துவிட்டு அவனுக்காய் காத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருக்கும் பவித்ராவை இன்று ஹாலில் எங்கும் காணாமல், தன் கையில் இருக்கும் சாவியின் மூலம் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவன் அவளை தேடிக்கொண்டு அறைக்கு வந்தான்.

சோர்ந்து போய் அறையில் படுத்திருந்தவளை கண்டவன் அவள் அருகில் அமர்ந்து, “என்னாச்சு பவி, ஏன் ரொம்ப டல்லா இருக்க?”. 

“வந்துட்டீங்களா.. ஒன்னும் இல்ல பாவா, கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சு. அதான் அப்படியே வந்து படுத்துட்டேன்”.

இப்பொழுது தான் அவளுக்கு தலைசுற்றல், வாந்தி என கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பிக்க துவங்கியது.

அவள் தயாரிக்கும் துணியும் முடியும் தருவாயில் இருக்க. அதை காட்டித்தான் அவனிடம் கூற வேண்டும் என்ற ஆவலில் அவனிடம் இன்னும் கூறாமல் மறைத்துக் கொண்டிருந்தாள்.

அத்தனை சோர்விலும் அவளின் முகம் மலர்ச்சியோடு ஒருவித பொலிவோடு இருந்தது.

“என்னமோ உன்கிட்ட சேஞ்சஸ் இருக்கு பவி” என்றான் அவளின் முகத்தையே குறுகுறுவென ஆராய்ந்த படி.

“என்ன?” என்றவளோ தன் கரம் கொண்டு முகத்தை தொட்டுப் பார்க்கவும்.

அவளின் கரத்தை பிடித்து தடுத்தவன், “என்னனு தெரியல. ஆனா, ரொம்ப பிரைட்டா ஒரு மாதிரி தெளிவா இருக்க மாதிரி இருக்கு. வழக்கத்தைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்க” என்றவாறு அவளின் நெற்றி முட்டினான்.

“நானே தலைவலியில சோர்ந்து போய் படுத்திருக்கேன். பிரைட்டா இருக்கேன்னு சொல்லி என்னை கிண்டல் பண்றீங்களா பாவா” என்று தன் இடுப்பில் கை குற்றி அவனை முறைத்துப் பார்த்தாள். 

“ஹே! நான் சீரியஸா சொல்றேன்டி. பாரு, கன்னத்துல ஃப்ளஷ் எல்லாம் கூட ஆகுது” என்றவாறு அவளின் கன்னத்தை புறங்கையால் தடவியவன். 

அவளின் இதழை பார்த்துவிட்டு விழிகளை நோக்கியவாறு அவளை நோக்கி குனிந்திருந்தான்.

அவனின் மார்பின் மீது கையை வைத்து தள்ளி விட்டவள், “இப்போ தான் ஆபீஸ்லருந்து வந்திருக்கீங்க. போய் பிரஷ் ஆகிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அதன் பிறகு இருவரும் உணவை உண்ண ஆரம்பிக்கவும். 

“அம்மா குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கனும்னு சொன்னாங்க பவி”.

“ம்ம்”.

“குடும்பமா போகணுமாம்”.

“ஓ! எப்போ போக போறீங்க?”. 

“குடும்பமா போகணும்னு சொன்னேன் டி. குடும்பம்னா நீயும் தான்!”. 

சட்டென்று அவளின் தலை கவிழ்ந்து விட, “நான் எதுக்கு பாவா?” என்றாள் தயங்கிக் கொண்டு.

“நீ வந்தா தான் நானும் போவேன். நீ வரலைன்னா நானும் போகல. சரி விடு” என்றவாறு அவன் உண்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு எழவும்.

அவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவள், “உடனே கோவப்படாதீங்க. எதுக்கு அங்க வந்து அவங்க மூட ஸ்பாயில் பண்ணனும்னு நெனச்சேன் அவ்வளவு தான். நானும் வரேன் ஓகேவா”. 

“ம்ம், குட்” என்று அவளின் கன்னம் தட்டியவன். அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page