அழுதுக் கொண்டு ஓரமாய் நின்றிருந்த பவித்ராவின் அருகில் சென்றவன், “வீட்டுக்கு போகலாம் பவி”.
அவளோ எந்த பதிலும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்திருந்தாள்.
வீடு வந்து சேரும் வரையிலும் இருவருக்கும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. அத்தனை அமைதியாய் வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன். அவளின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு, “சாரி பவி, அப்பா பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காத. அப்பா ஏதோ கோவத்துல.. ம்ம்ச்ச்… சாரிடா”.
“பரவாயில்ல பாவா. நான் ஒன்னும் நெனச்சுக்கல”.
“இனி நீ அங்க வர வேண்டாம் பவி”.
அவனை தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்த்தவள், “ஏன் பாவா, அப்போ நான் அந்த குடும்பத்துல ஒருத்தி இல்லையா? எனக்கு அது குடும்பம் இல்லையா? எனக்கும் குடும்பம் வேணும்ல” என்று கண்ணீர் மல்க கேட்க.
அவளின் கன்னத்தை தன் கரங்களில் தாங்கிக் கொண்டவன், “நான் தான் பவி உன்னுடைய குடும்பம். நான் மட்டும் தான்! நீ, நான், நம்ம குழந்தை.. இதான் நம்ம குடும்பம். வேற யாரும் இல்ல” என்றவனுக்கும் மித மிஞ்சிய வருத்தமே இருந்தது.
“நான் எதுவும் நினைக்கல பாவா. அவங்க என்ன பேசினாலும் எனக்கு வருத்தம் இல்ல” என்றவளின் இதழை தன் கரம் கொண்டு மூடியவன்.
“போதும்டி. இன்னும் எத்தன காலத்துக்கு தான் இப்படி அவங்க உன்ன வார்த்தையால குத்தி கிழிக்கிறத நான் பாத்துட்டு இருக்கிறது. என்னால முடியல.. ஆமா, அவங்கள பொறுத்த வரைக்கும் நான் தப்பு பண்ணிட்டேன். அத்தன அன்பா பாசமா என்னை வளர்த்தாங்க. உனக்காக அவங்கள தூக்கிப்போட்டுட்டு வந்துட்டேன். இப்படித்தான் அவங்களுக்கு தெரியும். அந்த குற்ற உணர்ச்சி எனக்குள்ளயும் இருக்கு. அதுக்காக நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா, இதையே சொல்லி உன்ன ஏத்துக்காம இப்படி நோகடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? உனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குல்ல. நீ என்ன கல்லா.. எதை பத்தியும் யோசிக்காம, எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாம, என்ன பேசினாலும் வாங்கிட்டு இருக்க”.
“அதெல்லாம் பிரச்சனை இல்ல. நான் சமாளிச்சுப்பேன்” என்று அவனின் கையை விலக்கிவிட்டு அவசரமாக கூறினாள்.
“அப்படியே நீ சமாளிச்சுக்கிட்டாலும் எதுவுமே மாறாதுடா பவி. அதுவரைக்கும் நீ சொன்ன போல நாம காத்திருப்போம். ஆனா, இனி அங்க நீ வர வேண்டாம்”.
இதற்கு மேல் என்ன கூறுவது ‘சரி’ என்னும் விதமாக தலையசைத்து விட்டாள்.
******
அடுத்தடுத்த நாட்கள் ஒருவித அழுத்தத்திலேயே கழிந்து கொண்டிருந்தது. அதன் பிறகு பவித்ராவை அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்வதையே கைவிட்டு இருந்தான் யஷ்வந்த்.
வார இறுதி நாட்களில் தான் மட்டும் தனித்து சென்று விட்டு வருவான்.
இந்துவிற்கும், நித்யாவிற்கும் பவித்ரா ஏன் வரவில்லை என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், திருமூர்த்திக்காக யோசித்து கேட்டுக் கொள்ளவில்லை.
சில நாட்களாகவே பவித்ராவின் உடல் நிலையில் சில மாற்றங்களை அவளால் உணர முடிந்தது. நாட்களும் தள்ளிப் போயிருந்தது. ஒரு வித எதிர்பார்ப்போடு பதட்டமாக பரிசோதித்து பார்த்தாள்.
ஆம், கருவுற்றிருக்கிறாள்!
இரு கோடுகள்.. அதை கண்டவளுக்கு ஆனந்தத்தை விட அழுகை தான் மேலோங்கி இருந்தது. சத்தமாக ‘ஓ’வென கதறி அழுக துவங்கி விட்டாள்.
யஷ்வந்த் அலுவலகம் சென்றிருந்தான். அன்று விடுப்பு எடுத்துவிட்டு பரிசோதனை செய்து பார்த்தவளிற்கு இரட்டைக் கோடுகளை பார்த்ததும் அப்படி ஒரு உணர்ச்சிப் பெருக்கு.
அவளுக்கே அவளுக்காக அவளால் உருவாகப் போகும் முதல் உறவு அல்லவா..
அவளால் தாங்க முடியவில்லை. அழுது கதறியவள் தன் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.
இப்பொழுதே கருவாகி இருக்கும் குழந்தை கைக்கு கிடைத்து விடாதா என்பது போல் அவளின் கரங்கள் இரண்டும் பரபரத்தது.
தன் வயிற்றை மெதுவாய் தடவி பார்த்தவளுக்குள் அப்படி ஒரு ஆனந்தம். உடனே, இந்த விஷயத்தை யஷ்வந்திடம் கூற வேண்டும் என்று தான் எண்ணினாள்.
ஆனால், வெறுமனே அவனிடம் கூறாமல், குட்டியாக ஒரு உடையை தயாரித்து அவனிடம் அதை காண்பித்து கூறலாம் என்று அந்த வேலையில் இறங்கிவிட்டாள்.
தான் கருவுற்றிருக்கிறோம் என்பதை அறிந்த பிறகு, குடும்பத்தினரின் ஒதுக்கமும், பேச்சும் கூட பின்னோக்கி சென்று விட்டது.
அவளின் முழு கவனமும், எண்ணமும் குழந்தையை சுற்றியே வலம் வந்துக் கொண்டிருந்தது.
“என்ன பவி, இப்போ எல்லாம் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறியே?” என்றவாறு அவளை பின் நின்று அணைத்தவன் வினவவும்.
“உங்கள கண்டுக்காம வேற யாரை கண்டுக்குறேன்” என்றாள் அவளும் விளையாட்டாக.
“இன்னைக்கு வீட்டுக்கு போறீங்க தானே”.
“ம்ம்.. அம்மா கால் பண்ணாங்க வர சொல்லி”.
“சரி, போயிட்டு வாங்க பாவா” என்று அவனை அனுப்பியவள் தன் வேலையில் இறங்கி விட்டாள்.
மதியத்திற்கு அவளுக்கு மட்டும் சமைக்க சென்றவளுக்கு ஏனோ அவளுக்கு மட்டும் சமைக்க மனம் வரவில்லை. இத்தனை நாள் யஷ்வந்திற்கும் அவளுக்கும் சேர்த்து தானே சமைத்தாள்.
இன்று தனக்கு மட்டும் செய்ய வெறுமையாய் இருக்கவும், அவனுக்கும் சேர்த்து சமைத்தாள்.
அவன் வருவானா, மாட்டானா என்றெல்லாம் தெரியாது. அவள் என்றால் அவளை பொருத்த மட்டும் அவனும் தான்!
“மா எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம். பவி வீட்ல தனியா இருப்பா நான் அவளோட சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்” என்று மறுத்த மகனை முறைத்த பரமேஸ்வரி.
“தினமும் அவளோட தானே சாப்பிடுற.. ஒரு நாள் கூட என்னோட சாப்பிட முடியாதா?” என்று சிறுபிள்ளைப் போல் சண்டைக்கு நின்றார்.
“மா உங்களோட சேர்ந்து சாப்பிட எத்தனை பேர் இருக்காங்க. ஆனா, அவளுக்கு நான் மட்டும் தானே” என்று அர்த்தத்தோடு அவன் கூறவும்.
“அப்போ அம்மா கூட சாப்பிட மாட்ட அப்படித்தானே” என்று அவர் தன் பிடியிலேயே நின்றார்.
வேறு வழியின்றி, அவரிடம் பேசி சமாளிக்க முடியாமல் ஒரு வழியாய் உணவை உண்டு முடித்திருந்தான் யஷ்வந்த்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவன் கிளம்பி வாசலை எட்டவும்.
“இப்பவாவது உன் பையனுக்கு புத்தி வந்துச்சே, எதை எதை எங்க வைக்கணும்னு புரிஞ்சுகிட்டான். என்ன தான் விலை உயர்ந்த செருப்பா இருந்தாலும், அதை வாசல்ல தான் வைக்கணும். எப்படியோ இந்த அளவுக்கு அவன் மனசு மாறுச்சே.. அதுவரைக்கும் சந்தோஷம். இப்படியே போகப் போக அவளுடைய உறவையும் தல முழுகிட்டான்னா போதும்” என்று பரமேஸ்வரியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் வார்த்தைகளை காதில் வாங்கிவிட்டே வெளியேறி இருந்தான் யஷ்வந்த்.
வீட்டிற்குள் நுழைந்தவனை பளிச்சென்ற புன்னகையோடு வரவேற்றாள் பவித்ரா.
“சாப்டியா பவி?”.
“ம்ம் சாப்பிட்டேன். நீங்க?”.
அவளுடன் பேசிக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவன். தண்ணீரை குடித்துவிட்டு அங்கே முடி வைத்திருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான்.
“நான் வருவேன்னு எதிர்பார்த்தியா?” என்றவனின் குரலே மாறி இருந்தது.
“ஐயோ! இல்ல பாவா, எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்கீங்க. கொஞ்சம் சிரிங்களேன்”.
“என்னை எதிர்பார்த்த தான நீ” என்றான் அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு.
“எதிர்பாக்கலன்னு சொல்ல முடியாது. அதே சமயம் எதிர்பார்த்தேன்னும் சொல்ல முடியாது” என்றவளை அவன் புரியாமல் குழப்பமாக பார்க்கவும்.
“தினமும் ரெண்டு பேருக்கும் சேர்த்து சமைச்சு பழகிடுச்சா, எனக்கு மட்டும் தனியா சமைக்க ஒரு மாதிரி இருந்துச்சு. ஏதோ நான் மட்டும் தனியா இருக்க போல.. அதான் எப்பவும் போல சேர்த்து சமைச்சுட்டேன். ஒருவேளை, நீங்க வந்தா.. ஆனா, நீங்க வரணும்னு எதிர்பார்க்கல. நீங்களே எப்பவாவது தான அங்க போறீங்க. அங்க இருக்கவங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணனும்ல”.
“கேள்வியும் கேட்டு பதிலும் நீயே சொல்லிக்கிட்டா நான் என்ன பேசுறது பவி?”.
வழக்கத்திற்கு மாறாக அவனின் முகம் வாட்டமாய் இருப்பது போல் பவித்ராவிற்கு தோன்றவும்.
“என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”.
“ஒன்னும் இல்ல. ஒருவேளை, நான் உன்ன விட்டுட்டு என் குடும்பத்தோட போயிட்டா என்ன பண்ணுவ பவி?”.
அவன் கூறி முடிப்பதற்குள்ளாகவே அவளின் கருவிழிகள் தவிப்போடு அலை பாய்ந்தது.
“சொல்லு, நான் அவங்களோட போயிட்டா நீ என்ன பண்ணுவ?”.
“முதல்லயே சொன்னது தான். உங்களோட இத்தனை நாள் வாழ்ந்ததை நினைச்சுக்கிட்டு..” என்று அவள் முடிப்பதற்குள்ளாகவே, “கொன்னுடுவேன் டி” என்றிருந்தான்.
“என்னோட சண்டை போட மாட்டியா? உன்னோட நான் வரணும்னு கேட்க மாட்டியா?”.
அவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. திருமணம் முடிந்து விட்டது. அவனின் குழந்தையையும் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் ஆனாலுமே, ஏதோ ஒரு அனாதரவான மனநிலை தான். ஏதோ, தனித்து இருப்பது போல்.
எதுவும் கூறாமல் அவள் அமைதியாக நிற்கவும். அவளின் கன்னம் பற்றியவன், “என்னோட சண்டை போடு பவி. என்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்துடாத. நான் தான் உன் குடும்பம்னு சொல்லி இருக்கேன். என்னை அப்படியே அம்போன்னு விட்டுட்டு போயிடாத” என்றவனோ அவனுக்கு மாறி பேசிய அவளின் இதழுக்கு தண்டனை கொடுத்திருந்தான் தன் இதழ் கொண்டு.
இப்பொழுது கேள்வியும் அவனே, பதிலும் அவனே என்று ஆகிப் போனான்.
அவளுக்குள் ஆதியும் அந்தமுமாய் முழுவதுமாய் நிறைந்திருப்பவன். அவனை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன.. அவன் கூறிய பிறகு தான் அவளுக்குள்ளும் அந்த எண்ணமே எழுந்தது.
ஒருவேளை, அப்படி நடந்தால் தன் நிலை..
சண்டையிட்டு அன்பைப் பெற முடியுமா..
போராடி காதலைப் பெற முடியுமா..
அதெல்லாம் உணர்வுகளால் உருவாகப்பட வேண்டும் அல்லவா..
சண்டையிட்டு அவனை தன்னுடனே வைத்துக் கொண்டால் மட்டும், அவனின் முழு அன்பும் தனக்கு கிடைத்துவிடுமா என்ன என்ற எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது.
*****
“இப்போ என்ன இங்க குடியா முழுகிப் போச்சு. மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க.. அவன் இல்லனா ஊரு உலகத்துல வேற மாப்பிள்ளையே இல்லயா.. கட்டுனா அவனுக்கு தான் கட்டி வைப்பேன்னு எதுக்கு இப்படி ஒத்த கால்ல நிக்குற நீ” என்று காஞ்சனாவிடம் காய்ந்துக் கொண்டிருந்தார் ஐயனார்.
“பின்ன, நீங்க பண்ண காரியத்துக்கு வேற என்ன செய்யுறதாம்? உங்க நடவடிக்கை வெளியில தெரிஞ்சா நம்ம பொண்ண எவன் கட்டுவான்?” என்று மூக்கை உறிஞ்சியபடி பேசினார் காஞ்சனா.
முகம் கடுகடுக்க, “இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்செல்லாம் பேசுற? அப்படி என்ன ஊர் உலகத்துல எவனும் செய்யாததை நான் செஞ்சிட்டேன்னு இப்படி எகிறிக்கிட்டு வர”.
“ஓ! பண்ணது தப்புன்னு இன்னும் உணரல இல்ல. அதான் நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு வரீங்களா”.
