“உம்மகனுக்கு நீ எந்த குறையும் வைக்கல. ஒரு அப்பா அம்மா அவங்க பசங்கள எப்படி பாத்துக்கணுமோ, அப்படி எல்லா நல்லது கெட்டதையும் பார்த்து நல்லபடியா தான் நீங்க உங்க பசங்கள வளத்தீங்க. அதேபோல உன் மகனும் கட்டிக்கிட்டு வந்த பொண்ணு தப்பாவ கிடையாது. நல்ல பொண்ணு தான். நம்பிக்கைன்றது ஒருத்தவங்க நடத்தைய பார்த்து தானா வரணும். அந்த பொண்ணு இத்தன நாள் உங்க வீட்ல இருந்தாளே, இன்னமும் உனக்கு அந்த நம்பிக்கை வரலையா.. அந்த பொண்ணு தப்பாவன்னு உனக்கு மனசார தோணுதா”
“ஆனாலும், அவ வளர்ந்த இடத்த பத்தி வெளியில தெரிஞ்சா எங்க குடும்ப கௌரவம் என்னாகுறது?” என்றார் ஐயனார்.
“வளர்ந்த இடத்த பத்தி இவ்வளவு கவலைப்படுற அளவுக்கு இங்க யாரும் உத்தமன் கிடையாது. தேடிப் போய் தப்பு பண்றவங்களே நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நியாயம் பேசும்போது, தப்பே பண்ணாம வளர்ந்த சூழலுக்காக அந்தப் பொண்ணு கூனிக் குறுகி நிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல” என்றதும் அனைவரின் பார்வையும் ஐயனாரின் மேல் படிய.
ஐயனாருக்கு அங்கு நிற்கவே அவமானம் ஆகிப்போனது. விறு விறுவென அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டார்.
அவர் வெளியேறியதும், “நீங்க சொல்றது சரிதான். அதுக்காக என் பொண்ணு என்ன தப்பு பண்ணா, அவர மனசுல நினைச்சுகிட்டு இருக்கிறத தவிர அவ எந்த தப்பும் செய்யலையே.. அவ மனசுலயும் ஆசைய வளர்த்து விட்டுட்டு இப்ப வேற யாரையோ கட்டிக்கிட்டாரு” என்று தன் பங்கிற்கு குறையாக கூறினார் காஞ்சனா.
“உன் பொண்ணோட மனசுக்கு நல்ல வாழ்க்கை தான் அமையும். அடுத்த பொண்ணு வாழ்க்கைய கெடுக்கனும்னு நினைக்காத” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டார்.
அதில் முகம் கருக்க அவரும் திலகாவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
“என்ன திருமூர்த்தி இன்னும் நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை வரலையா?” என்று தாண்டவம் ஆடியவரை கண்டு தயங்கியவாறு, “நம்பிக்கை இருக்கு ஆத்தா. ஆனா, ஏத்துக்க முடியல”.
“உன்னோட நிலைமை புரியுது. கஷ்டம் தான். ஆனா, ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இதுதான் விதி. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். உன் மகனுக்கு அந்த பொண்ணு தான்றது ஏற்கனவே முடிவானது. அதை யாராலும் மாத்த முடியாது. அதோட உங்க குடும்பத்து வாரிச அந்த பொண்ணோட வயித்துல இப்போ சுமந்துட்டு இருக்கா” என்றதும்.
அனைவரின் பார்வையும் பவித்ராவில் படிய. தன் அருகே தன் கையைப் பற்றி கொண்டு தலை குனிந்து அழுது கொண்டிருப்பவளை அதிர்ச்சியாக பார்த்தான் யஷ்வந்த்.
“அந்தப் பொண்ண கண் கலங்காம பாத்துக்கோங்க. உங்க குடும்பம் நல்லா இருக்கும்” என்றவர்.
யஷ்வந்தை பார்த்து, “நீ செஞ்சது சாதாரண காரியம் இல்ல. யாரும் அவ்வளவு சீக்கிரம் செஞ்சுட மாட்டாங்க. ஆனா, எல்லாமே விதிப்படிதான் நடந்திருக்கு. உன்னால தான் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையனும்னு முன்னமே எழுதினது தான்” என்றவர்.
பரமேஸ்வரியைப் பார்த்து, “உன் பொண்ணு கல்யாணமும் நல்லபடியா நடக்கும். போயிட்டு வாங்க”.
பவித்ராவின் தோளைச் சுற்றி தன் கையைப் போட்ட யஷ்வந்த் அவளை வெளியே அழைத்து வரவும்.
“ஏன் டி என்கிட்ட முன்னமே சொல்லல” என்று தான் முதலில் கேட்டான்.
அவள் அமைதியாக தலை குனிந்து நின்றிருக்கவும்.
“உனக்கு முன்னாடியே தெரியுமா?”.
“ம்ம்” என்று தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
“என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல பவி”.
“பாப்பாவுக்கு டிரஸ் ரெடி பண்ணி அதை உங்ககிட்ட காட்டி சொல்லலாம்ன்னு நினைச்சேன் பாவா. இப்போ தான் டிரஸ் செஞ்சு முடிச்சேன். கோவிலுக்கு போயிட்டு வந்து உங்க கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்”.
“எவ்வளவு சந்தோஷமான விஷயம், நீ என்னடானா இப்படி பண்ணிட்டியே.. போடி”.
இந்துவும், நித்யாவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க.
சேரன் தன் தம்பியை அணைத்து விடுவித்தான்.
“சம்பந்தி உங்களுக்கு உங்க குலதெய்வம் மேல தான அத்தன நம்பிக்கை. இப்போ உங்க குலதெய்வமே சொல்லிடுச்சு, இந்த பொண்ணு தான் உங்க வீட்டு மருமகனு.. இப்பவாவது இவங்க கல்யாணத்த ஏத்துக்குறீங்களா சம்பந்தி” என்றார் இந்துவின் தந்தை.
திருமூர்த்தி தனக்குள்ளேயே ஏதேதோ சிந்தனையில் குழப்பமாக உழன்று கொண்டிருந்தவர். அவருக்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக நின்றிருந்தார். அவர் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பி இருந்தது.
அனைத்தும் முடிந்து அனைவரும் ஒரு வழியாய் அங்கிருந்து புறப்பட.
“யாஷ் நீங்க பஸ்ல வர வேண்டாம். இந்த மாதிரி நேரத்துல பாதுகாப்பா இருக்காது. எங்களோட வேன்ல வாங்க” என்று அழைத்தார் பரமேஸ்வரி.
“இல்ல வேண்டாம் மா. நாங்க வந்த மாதிரி பஸ்லயே போயிடுறோம்” என்று மறுத்திருந்தான் யஷ்வந்த்.
“சொன்னா புரிஞ்சுக்கோ யாஷ். குலதெய்வ கோவிலுக்கு வந்து பொங்கல் வச்சதுமே ஒரு நல்ல செய்தி கிடைச்சிருக்கு. நம்ம குடும்ப வாரிச நாம தானே பாத்துக்கணும். நீ எங்களோட வண்டியிலேயே வா அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று கராரான குரலில் கூறிவிட்டார்.
“அம்மா சொல்றது தான் டா சரி. ஏன் அடம் பிடிக்கிற எங்களோட வா. இந்த மாதிரி நேரத்துல அலைச்சல் இருக்கக்கூடாது” என்று சேரனும் அழைக்கவும் யஷ்வந்தால் மறுக்க முடியவில்லை.
திருமூர்த்தி எதுவும் கூறாமல் அமைதியாய் நிற்கவும். அவரை ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சோடு, “சரி மா” என்று முடித்துக் கொண்டான்.
ஆனால், பவித்ராவின் கையை மட்டும் அவன் நொடியும் விடவில்லை. அழுத்தமாய் பிடித்துக் கொண்டே இருந்தான்.
வண்டியில் ஏறி ஊரை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அவளின் கையை தனக்குள் அழுத்தமாய் பொத்தி வைத்துக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு பாவா?” என்று கிசுகிசுத்தாள்.
“பேசாதடி! சாவடிச்சிடுவேன் உன்ன.. என்கிட்ட கூட நீ சொல்லவே இல்ல” என்றான் கோபத்தை உள்ளடக்கிய குரலில்.
“இல்ல, டிரஸ் ரெடி பண்ணி..”.
“கிழிச்ச.. இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு, எவ்வளவு சந்தோஷமான விஷயம். முதல் முதல்ல நீ அதை என்கிட்ட தான சொல்லி இருக்கணும். என்கிட்டயே மறைச்சிருக்கல்ல. எல்லாரும் தெரிஞ்சிக்கும் போது தான் நானும் தெரிஞ்சுக்கனுமா?” என்று சாடினான்.
“சாரி பாவா” என்று அவள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறவும்.
“முகத்தை இப்படி வைக்காதடி. மனுஷனால கோவம் கூட நிம்மதியா பட முடியல” என்று முணுமுணுத்தவன்.
எச்சிலை கூட்டி விழுங்கியவாறு வருத்தம் இழைந்தோடும் குரலில், “என்னை ரொம்ப சோதிக்கிற பவி”.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் சாதாரணமா நினைச்சு தான்..”.
“சாதாரணமா.. எது சாதாரணம்? இது உனக்கு சாதாரணமா? உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. உடனே அதை என்கிட்ட தான சொல்லி இருக்கணும். என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டு சாதாரணமானு வேற சொல்றியா”.
“ஐயோ! அப்படி இல்ல பாவா..” என்று அவளை முடிக்க விடாமல் தடுத்தவன், “பேசாத பவி, செம கோவத்துல இருக்கேன். அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. எல்லாரும் இருக்கிறதால நீ தப்பிச்ச”.
“ப்ளீஸ் பாவா”.
“பேசாதன்னு சொன்னேன். பேசாதடி” என்றான் அதட்டலாய்.
“சரி, நீங்க பேசலனா நான் நித்யா கூட உக்காந்துக்குறேன்” என்று அவள் தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
“எங்க போ பாப்போம், கால உடைப்பேன்” என்றான் அத்தனை தீவிரமாய்.
“என்ன உங்களுக்கு ரொம்ப தான் கோவம் வருது. மாசமா இருக்க பொண்ண பாத்து இப்படி தான் கோபப்படுவீங்களா.. எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கேன். கொஞ்சம் கூட உங்களுக்கு சந்தோஷமே இல்ல திட்டிட்டே இருக்கீங்க” என்று அவளும் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ செஞ்சதுக்கு சந்தோஷம் வேற படணுமா.. உனக்கு விஷயம் தெரிஞ்சதுமே என்கிட்ட சொல்லியிருந்தா உன்ன தல மேல தூக்கி வச்சு கொண்டாடி இருப்பேன். என்கிட்ட சொல்லாம மறைச்சதோட இல்லாம கோபம் வேற வருது உனக்கு” என்று முறைத்தான்.
“நீங்க இப்படி திட்டிட்டே இருந்தா நான் நெஜமாவே நித்யா பக்கத்துல போய் உட்கார்ந்துப்பேன்” என்று அவள் மிரட்டவும்.
“எங்க போய் பாரு பார்ப்போம். சொன்ன போல நெஜமாவே கால உடைச்சு என் மடியில உட்கார வச்சிடுவேன் பாத்துக்கோ” என்றான் அவனும் மிரட்டலாகவே.
அவளோ தன் முகத்தை சுருக்கிக் கொண்டு, “என்ன பாவா” என்று இறங்கி வந்தாள்.
“நீ கெஞ்சினாலும், கொஞ்சினாலும், மிரட்டினாலும் என்னை மலையிறக்க முடியாது” என்று அவன் நிதானமாக கூறவும்.
கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வேனில் அப்படி ஒரு அமைதி நிலவியது. அவனின் கோப வார்த்தைகள் அரசல் புறசலாய் அனைவருக்கும் கொஞ்சமாய் கேட்டது.
ஆனால், யாரும் எதுவுமே வாய் திறக்கவில்லை.
இந்த சூழலே அத்தனை கனமானதாய் மாறி இருந்தது. இத்தனை நாட்கள் பிடிவாதமாய் பிடித்தமின்மையை காட்டிவிட்டு, இப்பொழுது சட்டென்று இறங்கி போய் பேசவும் திருமூர்த்திக்கும், பரமேஸ்வரிக்கும் நெருடலாய் இருந்தது.
அவர்களின் மனநிலையை உணர்ந்த அனைவருமே அமைதியாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
சட்டென்று திருமூர்த்தி எழுந்து வந்து யஷ்வந்த் மற்றும் பவித்ரா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்து நிற்கவும்.
பவித்ரா அவரைக் கண்டு திடுக்கிட்டு விழித்தாள்.
மனமெல்லாம் படபடவென அடித்துக் கொண்டது.
அனைவரும் அவரை திரும்பிப் பார்க்கவும்.
அவரோ வேறு எங்கோ பார்த்துக் கொண்டே தன் குரலை செறுமியவர், “பரமு, இவன அவன் பொண்டாட்டிய கூப்பிட்டு என் சிட்ல போய் உட்கார சொல்லு. மாசமா இருக்கும்போது இப்படி தான் கடைசி சீட்ல உட்காருறதா.. தூக்கி தூக்கி போடும்” என்றார் கடுமையான குரலில்.
“ஆமா யாஷ், அப்பா சொல்றதும் சரிதான். இந்த மாதிரி நேரத்துல கடைசி சீட்ல உட்கார வேண்டாம். இப்படி வந்து நடுவுல உட்காருங்க”.
“வாடா, அதான் அப்பாவே சொல்றார்ல” என்றான் சேரன் வேறு.
கடுகடுத்த முகத்தோடு எழுந்து சென்று அமர்ந்து கொண்டான். எதுவுமே பேசவில்லை. அவனின் கோபம் அவனின் முகத்திலேயே பிரதிபலித்தது.
பவித்ராவிற்கு அவர்தான் பேசுகிறாரா என்று சற்றும் நம்பவே முடியவில்லை. திகைத்த பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் கையைப் பிடித்து இவனே அழைத்து வந்து விட்டான். அதை உணரும் நிலையில் கூட அவள் இல்லை. உறைந்த நிலையில் தான் இருந்தாள்.
நடுவில் அமர்ந்திருப்பதால் இருவராலும் சண்டையிடவும் முடியவில்லை. எனவே, அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பவித்ரா மட்டும் நொடிக்கு ஒரு முறை தன் திருதிருத்த விழிகளால் அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவளின் செயல் இவனுக்கு சிரிப்பை கொடுத்தாலும், வீம்புக்காகவே தன் பற்களைக் கடித்துக் கொண்டு சிரிக்காமல் அமர்ந்திருந்தான்.
