மொழி – 33

வேன் நேராக திருமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றதும். அனைவரும் இறங்கிக்கொண்டனர்.

“சரிங்க சம்பந்தி, நாங்க அப்போ அப்படியே கிளம்புறோம். நேரம் ஆயிடுச்சு உள்ள வந்துட்டு போனா இன்னும் நேரம் ஆகிடும்” என்று அங்கேயே விடைபெற்றுக் கொண்டனர் இந்துவின் தாய் வீட்டினர்.

இப்பொழுதே இருள் கவ்விவிட்டது.

“ஓகே மா, நாங்களும் அப்படியே கிளம்பறோம்” என்ற யஷ்வந்தை முறைத்த பரமேஸ்வரி, “என்னடா விளையாடுறியா.. குலதெய்வ கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்திருக்கோம். அப்படியே போறேன்னா என்ன அர்த்தம்.. அதுவும் மாசமா இருக்க பொண்ண கூட்டிட்டு வீட்டுக்குள்ள கூட வராம அப்படியே போயிடுவியா நீ? குலதெய்வ கோவிலுக்கு போனா நேரா வீட்டுக்கு வந்து பூஜை அறையில பூஜை பண்ணிட்டு தான் மத்த வேலைன்னு உனக்கு தெரியாதா.. அது மட்டும் இல்லாம இருட்டிடுச்சு வீட்டுக்கு வா”.

மறுக்க முடியாமல் பவித்ராவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் குடும்பமாக பூஜையறையில் மீண்டும் பூஜையை செய்து முடித்தனர்.

“அம்மா நாங்க கிளம்புறோமே” என்று மீண்டும் அடம் பிடித்தான் யஷ்வந்த்.

“சும்மா இரு யாஷ், அந்த பொண்ணு மாசமா இருக்கும்போது அங்க தனியா இருந்து என்ன பண்ண போறீங்க? இனி நீங்க அங்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே இருங்க, எங்களோடவே இருந்தா இந்த மாதிரி நேரத்துல என்ன செய்யணும்னு நாங்க பாத்துப்போம்” என்று உரிமையாக கோபப்பட்டார்.

“அதெல்லாம் சரி வராதுமா. நாங்க அங்கேயே இருக்கோம்”. 

திருமூர்த்தி வாயையே திறக்கவில்லை. அவருக்கு அப்படி ஒரு சங்கடமான சூழ்நிலை. என்னவெல்லாம் பேசி இருந்தார். 

சாமி, கோவில், பூஜை என்பதில் எல்லாம் மிக மிக நம்பிக்கை கொண்ட மனிதர். இப்படி அவள் மேல் எந்த தவறும் இல்லை என்பது அவருக்கு நிரூபணம் ஆகி விடவும், முகம் கொண்டு பேசவே அத்தனை தயக்கமாய் இருந்தது அவருக்கு.

எப்படிபட்ட அவதூறான வார்த்தைகளை எல்லாம் வீசி இருக்கிறார். கோபமாகவும், ஆதங்கமாகவும் என எப்படி எல்லாம் சாடியிருக்கிறார். 

இப்படி ஒரே நாளில் அனைத்தையும் மறந்தது போல் பேசவும் அவருக்கு வரவில்லை. சங்கடமாக அறைக்கு சென்று விட்டார். அவர்களை தடுக்கவும் இல்லை, கிளம்பவும் சொல்லவில்லை.

“பாரு, அப்பாவே எதுவும் சொல்லாம போறாங்க. நீ வேலைக்கு போயிட்டா அந்த பொண்ணு என்ன செய்யும்?” என்ற தன் தாயிடம்‌

“அவ பேரு பவித்திர பாரிஜாதம்!” என்று அழுத்தமாக கூறினான் யஷ்வந்த்.

“சரிப்பா, இங்கேயே இருக்கலாமே”. 

“இல்லம்மா, சரி வராது. சொன்னா புரிஞ்சுக்கோங்க. நாங்க அங்கேயே இருக்கோம்” என்று தன் பிடியிலேயே நின்றிருந்தான்.

“சரி, அட்லீஸ்ட் நாளைக்கு காலையில தூங்கி எழுந்திரிச்சாவது போகலாம்ல. இந்த நேரத்துலயா மாசமா இருக்க பொண்ண கூட்டிட்டு போக போற?”. 

“அத்த சொல்றதும் சரி தானே யாஷ். இருட்டிடுச்சு, இதுக்கு அப்புறம் எப்படி போவீங்க. காலையில போகலாமே” என்று இந்துவும் கூற.

‘சரி’ என்று ஒப்புக்கொண்டான்.

அறைக்குள் நுழைந்தவன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பார்த்துக் கொண்டிருந்தான். 

அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அறையில் பவித்ரா என்று ஒருத்தி இருக்கிறாள் என்பதையே அவன் சற்றும் சட்டை செய்யவில்லை.

அவனின் பாராமுகத்தில் அவளுக்கு தான் முகம் சுணங்கிப் போனது. அவன் பின்னோடே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

“பா..” என்று அவள் தொடங்கும் பொழுதே, துண்டுடன் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

ஏனோ அவனின் பராமுகத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அழுகையாக வந்தது. மற்றவர்கள் எத்தனை திட்டினாலும் பொறுத்துக் கொண்டு போகுபவளிற்கு, யஷ்வந்தின் சிறு முக திருப்புதலை கூட தங்கிக் கொள்ள முடியவில்லை.

முகமே தொங்கிவிட்டது. அப்படி என்ன பெரிய கோபம் என்று இவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

கண்ணீரை துடைத்துக் கொண்டு கோபமாக சென்று கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

குளியலறையில் இருந்து வந்தவன் மீண்டும் அவளைக் கண்டுகொள்ளாமல் சோதித்தான்.

பொருத்து பொருத்து பார்த்தவள் பொங்கி எழுந்து விட்டாள்.

“இப்போ என்ன, ஆமா சொல்லாம மறைச்சுட்டேன். நான் என்ன சொல்லவே கூடாதுன்னு நினைச்சா மறைச்சேன். டிரஸ் டிசைன் பண்ணிட்டு சொல்லலாம்ன்னு நினைச்சேன். அதுக்கு போய் இப்படி கோபப்படுறீங்க. சரி, கோபம் தானே.. திட்டுங்க.. இல்ல, ரெண்டு அடி கூட அடிச்சுக்கோங்க. இப்படித் தான் பேசாம மூஞ்ச திருப்பிட்டு போவீங்களா.. எனக்குன்னு இருக்கிறது நீங்க மட்டும் தான‌.. நீங்களும் பேசலன்னா, நான் யார் கிட்ட போய் பேசுறது” என்னும்பொழுதே அவளின் குரல் உடைந்து அழுகத் தொடங்கிவிட்டாள். 

தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே அழுத்தமாக பார்த்தவன்.

“உன்கிட்ட கோபப்படவும் முடியல, சண்டை போடவும் முடியல. சட்டுனு என்ன செஞ்சா நான் சமாதானம் ஆவேன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்க இல்ல”. 

அவனின் வார்த்தையில் அவளின் அழுகை மேலும் அதிகரிக்க.

“திரும்ப இப்படி நடந்துக்காத பவி, உனக்குன்னு இருக்கிறது நான் ஒருத்தன் தான.. என்கிட்ட நீ முதல்லயே சொல்லி இருக்கணும். அங்க வச்சு எல்லாருக்கும் தெரியும் போது தான் எனக்கும் தெரியுது. அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. நான் அப்பா ஆனதை எல்லாருமே தெரிஞ்சுக்கும் போது தான் நானும் தெரிஞ்சிக்கிற மாதிரி இருக்கு. இது எனக்கு ஸ்பெஷல் மொமெண்ட் இல்லயா.. இது நமக்கான ஸ்பெஷல் மெமரி. ஆனா, அதுக்குள்ள நீ எல்லாரையும் கொண்டு வந்துட்ட”.

அவனை சட்டென்று அணைத்துக் கொண்டவள், “சாரி, இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்றாள் தொண்டை அடைக்க.

“உன் மேல அவ்வளவு கோவமா இருக்கு. ஆனா, இப்போ கோவமும் பட முடியல” என்றவனை மூக்கை உறிஞ்சிக் கொண்டே பார்த்தவள்.

“நீங்க இப்படி என்னை திட்டிட்டே இருந்தா உள்ள இருக்க பாப்பாவும் பயப்படும்”.

“ஓ! இப்பவே கூட்டு சேக்குறியா நீ” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றிக் கேள்வியாக.

“ஆமா, நீங்க என்னை திட்டுனா உள்ள இருக்க பாப்பாவையும் திட்டுன மாதிரி தான.. அப்போ பாப்பாவும் உங்க மேல கோவப்படும். எனக்கு தான் சப்போர்ட் பண்ணும்” என்றாள் மீண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு.

“அப்போ நீங்க என்ன பண்ணாலும் நான் உங்க ரெண்டு பேரு மேலயும் கோவப்படக்கூடாது அப்படித்தானே”. 

“கோவப்படலாம். ஆனா, பேசாம மூஞ்ச திருப்பிக்கிட்டு தான் போகக் கூடாது” என்று அவள் விளக்கம் கொடுக்கவும்.

அவளின் விளக்கத்தில் அவனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

“ஓ! நான் எப்படி கோவப்படனும்னு கூட மேடம் தான் சொல்லுவீங்களா” என்று அவளை குறுகுறுவென பார்த்துக்கொண்டே, “அப்போ கூட என்னை சமாதானம் செய்ய எதுவும் செய்ய மாட்டீங்க. கோவப்படுறதுல கூட உங்களுக்கு ஒரு நியாயம்”  

“நீங்க சமாதானம் செய்ய விட்டா தான நான் சமாதானம் செய்ய.. என் மூஞ்சிய பாக்காம திருப்பிக்கிட்டு போனா எங்கிருந்து சமாதானம் செய்ய?”.

“சரி, இப்ப மூஞ்ச திருப்பல. என் கோபத்தை சரி பண்ணி சமாதானம் பண்ணு” என்றவனோ தன் கையை கட்டிக் கொண்டு அவளை நேர் பார்வை பார்த்தவாறு அவளை நோக்கி திரும்பி கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்துக் கொண்டான்.

அவளோ இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருத்தப்படி பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கவும்.

“இப்படி திருட்டு முழி முழிச்சா என்ன அர்த்தம்? சமாதானம் பண்ணுவேன்னு சொன்னல்ல.. பண்ணு.. நீ செய்யுற சமாதானத்துல உடனே நான் சமாதானம் ஆயிடனும்”.

“ஐயோ! எத்தன சமாதானம்?” என்றாள் அயர்வாய்.

“நீ என்னை சமாதானம் செய்யுற வரைக்கும் சமாதானத்தை பத்தி சொல்லிக்கிட்டே தான் இருப்பேன்”. 

“சரி, நீங்க கண்ண மூடுங்க நான் சமாதானம் செய்யுறேன்”.

“இது வேறயா..” என்றவனோ புன்னகையோடு தன் விழிகளை மூடிக்கொள்ளவும்.

சட்டென்று அவனின் இதழில் அழுத்தமாய் தன்னிதழை பதித்திருந்தாள். 

பட்டென்று விழி மலர்த்தியவன் அவளை ஆச்சரியம் பொங்க பார்க்கவும்.

“இப்போ சமாதானம் ஆகிட்டீங்களா?” என்றாள் ஆர்வமாய்.

“இது ஒன்னும் சமாதானம் செய்யுற மாதிரி இல்லடி. சண்டைக்கு கூப்பிடுற மாதிரி இருக்கு”.

“என்ன பாவா, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஐடியாவை யோசிச்சேன் தெரியுமா.. இத பாத்தா சண்டைக்கு கூப்பிடுற மாதிரியா இருக்கு?” என்றாள் பாவமாய்.

“ஆமா, சண்டைக்கு தான்” என்றவனோ ஒற்றைக் கையால் அவளை அள்ளி தன் அருகில் கிடத்தி அவளில் படர்ந்தான்.

“ஆனா, இது வேற மாதிரி சண்டை” என்றவனோ அவளுடன் வார்த்தைகள் அற்ற சண்டையில் ஈடுபட துவங்கினான். 

இருவரின் வாழ்க்கைக்குமான அர்த்தம் கிடைத்துவிட்டது. எந்த ஒரு குறிக்கோளும் இன்றி சென்று கொண்டிருந்த வாழ்க்கைக்குள் புதிதாய் ஒரு உறவு. நினைத்துப் பார்த்து பூரித்துப் போனான் யஷ்வந்த்.

தனக்கும், தன்னவளுக்கும் மட்டுமே உரிமையான உறவு.. நினைக்கவே தித்தித்தது. அந்த பிஞ்சு உயிரின் ஸ்பரிசத்தை தீண்டவும், அந்த குட்டி குட்டி கை கால்களை உணரவும் இதயம் துடித்து அடங்கியது.

இந்த 10 மாத கால காத்திருப்பு இருவருக்குமே அத்தனை கடினமான ஒன்றாய் தான் இருந்தது.

மறுநாள் விடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு பவித்ராவுடன் கிளம்பி விட்டான். பரமேஸ்வரி எத்தனை கூறியும் கேட்பதாய் இல்லை. சற்று காலம் போகட்டும் என்று கூறிவிட்டான்.

அடுத்த ஒரு வார காலமும் இப்படித் தான் சென்று கொண்டிருந்தது. வழக்கம்போல் வார இறுதியில் அவன் மட்டும் வீட்டிற்கு வந்திருக்க. பரமேஸ்வரியின் விழிகள் தானாய் அவனின் பின்னோடு பவித்ராவை தேடியது.

அதை உணர்ந்தாலும், உணராதவன் போல் அவன் அமைதியாய் வீட்டிற்குள் நுழையவும்.

“எங்கடா அவ?”.

“யாரு?”.

“பவித்ரா”.

“அவ வரலமா, தல சுத்தலா இருக்குன்னு வீட்ல ரெஸ்ட் எடுக்குறா”. 

“என்னடா பேசுற நீ, தல சுத்தலா இருக்க பொண்ணயா தனியா விட்டுட்டு வந்த.. என்ன யாஷ் நீ இப்படி இருக்க?” என்று அவர் திட்டவும்.

“இங்க பாரு, அந்த பொண்ணயும் கூப்பிட்டு வரர்தா இருந்தா வா. இல்லனா, நீயும் அங்கேயே துணைக்கு கூட இரு. இது என்ன பழக்கம் இந்த மாதிரி நேரத்துல தனியா விட்டுட்டு வரர்து” என்று தன்னையும் மீறி ஒரு ஆர்வத்தில் சிடுசிடுத்து விட்டார் திருமூர்த்தி.

ஆனால், அடுத்தடுத்து யஷ்வந்த் கேட்ட கேள்விகளுக்கு பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போய் நின்று விட்டார் திருமூர்த்தி.

கோவிலுக்கு சென்று வந்தது முதலே அவனின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியை தன் தந்தையிடம் கேட்டு விட்டான். 

அதற்கு பதில் அளிக்க முடியாமல் வாயடைத்துப் போய் நின்றது என்னவோ திருமூர்த்தி தான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page