“சொல்லுங்கப்பா கோவிலுக்கு போய் சாமி சொன்னதும் அவ மேல எந்த தப்பும் இல்லன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அதனால அவளை வீட்டுக்குள்ள சேக்குறீங்க.. ஒருவேளை, கோவிலுக்கு போகாம இருந்திருந்தா.. அந்த சாமி சொன்னத கேட்காம இருந்திருந்தா.. இதே போல நீங்க பவித்ராவ ஏத்துக்க முயற்சி பண்ணி இருப்பீங்களா.. இல்ல தான.. அவ தூய்மையானவன்னு எனக்கு தெரியும் பா. குடும்பத்துல இருக்கவங்க ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நம்பிக்கை இருக்கணும். எனக்கு புரியுது, உங்க நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டு நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னேன். ஆனா, உங்க மகனை நீங்க கொஞ்சம் நம்பி இருக்கலாம். அப்படி தப்பு பண்றவன் இல்லன்னு நீங்க நம்பியிருக்கலாம்.
ஆமா, அன்னைக்கு நான் பண்ணது தப்புதான். அந்த இடத்துக்கு நான் போனதே தப்புதான். ஆனா, இது எல்லாமே ஏதோ ஒரு அர்த்தத்தோட தானே நடந்திருக்கு. நான் அங்க போகணும், அங்க பவிய பாக்கணும்னு இருந்திருக்கு. பார்த்ததும் எனக்கு அவள பிடிச்சது.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவ ஒழுக்கமானவ தான்னு உங்க கிட்ட எல்லாம் நான் எவ்வளவு சொன்னேன். யாராவது என்னை நம்புனீங்களா.. வார்த்தையால் பேசி பேசி அவள குத்தி கிழிச்சு எவ்வளவு ஹர்ட் பண்ணீங்க.
இப்போ சாமி சொன்னதும், அவ மேல நம்பிக்கை வந்துடுச்சு இல்ல.. இல்லனா, இப்போ எங்களுக்கே எங்களுக்குன்னு உருவாகி இருக்க அந்த குழந்தையை கூட நீங்க சந்தேகம் தானப்பா பட்டிருப்பிங்க” என்றவனுக்கோ தன் கடைசி வாக்கியத்தில் நா தழுதழுத்து விட்டது.
“யஷ்வந்த்!” என்று வீடே அதிரும் வண்ணம் கத்தி இருந்தார் திருமூர்த்தி.
பரமேஸ்வரி தன் வாயைப் பொத்திக்கொண்டு அதிர்ந்து நின்று விட்டார்.
“உண்மை தானப்பா, அப்படியும் கூட நீங்க பேசி இருப்பீங்க. உங்களுக்கு என் மேல கோபம், அதுக்கு அவள வடிகாலா யூஸ் பண்ணிக்கிட்டீங்க. உங்க வளர்ப்பு தப்பாகிடுச்சுன்னு என் மேல உங்களுக்கு அத்தனை ஆதங்கம், கோபம் எல்லாமே இருந்துச்சு. அது மொத்தத்துக்கும் அவ பலியாகிட்டா. எவ்வளவு பேச்சு.. அவளும் மனுஷி தான.. அவ ஒன்னும் பொம்மை இல்லயே.. அவளுக்கும் மனசிருக்கு.
அவளுக்குள்ளயும் அதே ரத்தம் தான இருக்கு. அவளும் நம்மள போல சதையால உருவான மனஷி தான.. எவ்வளவு அவ மனச காயப்படுத்த முடியுமோ, ரணமாக்க முடியுமோ எல்லாம் பண்ணிட்டீங்க. இப்போ நீங்க மனசு மாறி இருக்கீங்க. அவள புரிஞ்சுக்க முயற்சி பண்றீங்க. ஏத்துக்க முயற்சி பண்றீங்க. ஆனா, நீங்க அவகிட்ட விட்ட வார்த்தைகள் என்னைக்குமே மறஞ்சு போகாதுப்பா. கடைசி வரைக்கும் அந்த ரணமெல்லாம் வடுவா மாறி அவளுக்குள்ள தான் இருக்கும்.
இதையெல்லாம் உங்ககிட்ட பேச கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா முடியல, மனசுக்குள்ளவே வச்சு அழுத்தி அழுத்தி மூச்சு முட்டுற போலருக்கு. உங்க கிட்ட மொத்தத்தையும் கொட்டிட்டா கூட எனக்குள்ள இருக்க அழுத்தம் குறைஞ்சிடுமோனு பார்க்க தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
உங்களயும் தப்பு சொல்ல முடியாது. உங்க வளர்ப்பு மேல உங்களுக்கு கோபம்.. அதுக்கு அவ என்ன செய்வா? அவளுக்கு நம்பிக்கை கொடுத்து கூப்பிட்டு வந்தது நான். அவளுக்கான ஒரு அன்பான, அழகான குடும்பத்த கொடுக்குறேன்னு சொல்லி கூப்பிட்டு வந்தேன். அவ மனச மொத்தமா உடைச்சிட்டீங்க” என்றவனின் கண்கள் எல்லாம் கலங்கிப் போய்விட்டது.
வேக எட்டுக்களுடன் அவனை அடைந்தவர், அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “நீ சொல்றது சரிதான். எனக்கு உன் மேல கோபம், நம்ம வளர்ப்பு தப்பிடுச்சேன்ற ஆதங்கம். அந்த கோவத்த மொத்தத்தையும் அந்த புள்ள மேல காட்டிட்டேன். தப்பு தான்.. வயசு அதிகமா இருந்தாலும், என்னால யோசிக்க முடியல. அதுக்கும் மேல ஊர் உலகம் என்ன பேசும், சொந்தபந்தம் என்ன நினைப்பாங்க, ஒரு வார்த்தை தப்பா பேச விடாம உங்கள எல்லாம் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து ஆளாக்கிய பிறகு, இவ்வளவு பெரிய அவமானம்னா எங்க அது நம்ம குடும்பத்துக்கு தீராத பழியாகிடுமோனு பயம்.
அதெல்லாம் சேர்ந்து தான் நான் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன். இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா.. எல்லாம் சரி ஆகிடும்னு வார்த்தையால சொல்ல முடியாது. ஆனா, திருத்திக்கலாம்ல.. குடும்பம்னா எல்லாம் சேர்ந்தது தான.. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிறது தான.. எங்களுக்கு புரிஞ்சுக்க நேரம் ஆயிடுச்சு உன் மனசுல வேற ஏதாவது இருந்தாலும் அதை இப்போவே எங்ககிட்ட கொட்டிடு. மனசுக்குள்ளயே வச்சு புழுங்கிட்டு இருக்காத”.
தளர்ந்து போய் அவரைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி விட்டான்.
அவனின் நிலையும், அவன் வார்த்தையில் இருந்த நியாயமும் அனைவருக்கும் புரியாமல் இல்லை. அதே சமயம், இவர்களின் பக்க நியாயமும், சூழலும் அவனுக்கும் புரியாமல் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அத்தனை ஆதங்கம், மொத்தமாய் கொட்டி விட்டனர்.
உள்ளுக்குள்ளேயே வைத்துக் குமைந்து புழுங்கிப் போவதை விட, இப்படி மனம் விட்டு கொட்டி விட்டால் கூட அழுத்தம் குறையும் அல்லவா.. அதைத்தான் அவனும் செய்திருக்கிறான்.
வீட்டிற்கு சென்றவன் பவித்ராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று, அவளை பரிசோதித்து குழந்தையின் நலனையும் விசாரித்து விட்டு வீடு வந்து சேரவே இரவை தொட்டுவிட்டது.
வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவனின் செல்பேசி அடித்து அடித்து ஓய்ந்துக் கொண்டே இருந்தது.
“அதை எடுத்து தான் பேசுங்களேன். எனக்கு நடந்து போக தெரியாதா, கை பிடிச்சு தான் கூப்பிட்டு போகணுமா?”.
“ரொம்ப பேசாதடி. அப்புறம் போன கோபம் திரும்ப வந்துடும். அப்புறம் திரும்பவும் சமாதானம் செய்யணும்” என்றான் தன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி குறும்பாக.
“டாக்டர் சொன்னதெல்லாம் மறந்து போச்சா.. மூணு, நாலு மாசத்துக்கு என் பக்கத்திலேயே வரக்கூடாது” என்று தன் கண்களை உருட்டி மிரட்டினாள்.
“அந்த தைரியத்துல தான ஓவரா பேசுற.. ரொம்ப பண்ணாத பவி. மூணு, நாலு மாசம் கழிச்சு என்கிட்ட தான் வந்தாகணும். அப்போ இருக்குடி உனக்கு” என்றான் குறும்புடன் கூடிய வன்மமாய்.
அதற்குள் மீண்டும் அவனின் செல்பேசி இசைக்க.
“நீங்க பேசுங்க பாவா, நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவாறு அவள் சமையலறைக்குள் நுழையவும். அழைப்பை ஏற்றிருந்தான் யஷ்வந்த்.
“என்ன.. என்ன சொல்ற சேரா.. எப்போ இருந்து காணும்? எல்லா இடத்திலும் தேடுனீங்களா”.
*******
“அவ்வளவு இர்ரெஸ்பான்சிபிலா அவ இருக்க மாட்டாளே.. எங்கேயாவது போனா கூட இன்பார்ம் பண்ணிட்டு தானே போவா”.
*******
“அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? அவங்கள பாத்துக்கோ. உடனே நான் அங்க வரேன்” என்று அவசரகதியில் கூறி அணைப்பை துண்டிக்கவும்.
அவனின் பதட்டத்தை அவனின் முகமே பிரதிபலித்தது.
“என்னாச்சு பாவா ஏதாவது பிரச்சனையா?”.
“ஆமா பவி, நித்யாவை காணுமாம். ஈவ்னிங் ஏதோ பிரெண்ட பாக்க போறேன்னு போனாலாம். இன்னும் வீட்டுக்கு வரலையாம். போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருதாம். அவ பிரெண்ட் வீட்டுக்கு எல்லாம் விசாரிச்சுட்டாங்களாம். எங்கயுமே வரலன்னு எல்லாரும் சொல்றாங்களாம். அம்மா அப்பா எல்லாம் ஒரே அழுகை, ரொம்ப பயமா இருக்கு பவி” என்று படபடவென பொரிந்தான்.
“இந்தாங்க பாவா, முதல்ல தண்ணிய குடிங்க. நித்யாவுக்கு எதுவும் ஆகாது நீங்க பயப்படாதீங்க. நம்ம உடனே வீட்டுக்கு போவோம் சரியா வாங்க” என்று அவனுடனே புறப்பட்டாள்.
இருவரும் வீடு வந்து சேரவும். வீடே தலைகீழாய் இருந்தது. வீட்டின் வாசலில் சிலர் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க. பரமேஸ்வரி தலையில் அடித்து அழுதுக் கொண்டிருந்தார்.
திருமூர்த்தி முற்றிலும் உடைந்து போய் அழுது ஓய்ந்த கண்கள் கலங்க சோபாவில் அமர்ந்திருந்தார்.
யஷ்வந்தை பார்த்த பரமேஸ்வரி ஓடிவந்து அணைத்துக் கொண்டவர் ‘ஓ’வென விட்ட அழுகையை துவங்கிவிட்டார்.
“மா அழாதீங்கம்மா, ஏதாவது பிரெண்ட் வீட்ல தான் இருப்பா. நாங்க பார்த்து கூப்பிட்டு வரோம்” என்றவனோ சேரனை பார்த்து, “வா சேரா” என்று அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாச்சு யாஷ். எங்கயுமே இல்ல.. என்ன பண்றதுன்னு தெரியல. கமலேஷ் அவங்க அம்மா, அப்பா எல்லாம் வந்துட்டு இருக்காங்க. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல டா”.
“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடலாமா?”.
“போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா பிரச்சனை வேற மாதிரி போயிடுமோனு பயமா இருக்குடா”.
“என்னடா பேசுற நீ, காணாம போய் இவ்வளவு நேரம் ஆகுது. ஃபோனும் சுவிட்ச் ஆஃப், ஃபிரண்ட்ஸ் வீட்ல எங்கேயுமே இல்ல. எனக்கு என்னமோ விஷயம் ரொம்ப சீரியஸா இருக்குமோனு தோணுது. எதுக்கும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கமலேஷின் குடும்பத்தார் வீடு வந்து சேர்ந்தனர்.
கமலேஷ், யஷ்வந்த், சேரன் என மூவரும் சேர்ந்து காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
நித்யாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்து அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் உரைத்து கண்டுபிடித்து தருமாறு கூறிவிட்டு கிளம்பி வந்தனர்.
“என்னாச்சு.. என்னாச்சு சேரா.. நம்ம நித்யா கிடைச்சிட்டாளா?” என்று பரிதவித்துக் கொண்டு கேட்டார் பரமேஸ்வரி.
“என்னங்க என்ன ஆச்சு?” என்ற இந்து மறுபுறம் வந்து நிற்க.
“கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கோம் தேடுறோம்னு சொல்லி இருக்காங்க”.
“என்னப்பா சொல்றீங்க, போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கீங்களா.. அப்ப நெஜமாவே எம்மக காணாம தான் போயிட்டாளா” என்று அழுகவே துவங்கி விட்டார் திருமூர்த்தி.
அவரின் அருகில் அமர்ந்த யஷ்வந்த், “அப்பா அழாதீங்க. நித்யாவுக்கு எதுவும் ஆகாது. நாம கண்டுபிடிச்சிடலாம். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. அவங்க உடனே ஆக்ஷ்ன் எடுக்கிறதா சொல்லி இருக்காங்க” என்றான் சமாதானமாய்.
கமலேஷிற்கு முகமே சுருண்டு விட்டது. நித்யாவிற்கு என்ன ஆகி இருக்குமோ என்ற பதட்டம் ஒருபுறம், அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற வேண்டுதல் ஒரு புறம் என தவித்துப் போய் நின்றிருந்தான்.
“அழாதீங்க, நித்யாவுக்கு எதுவும் ஆகாது” என்று சமாதானம் கூறினாள் பவித்ரா.
*********
அந்தப் பழைய பாழடைந்த இடத்தில் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள் நித்யா.
அவளின் எதிரே நின்றிருந்தவனோ தன் நாடியை நீவிக் கொண்டே கண்கள் சிவப்பேற அவளைப் பார்த்து வன்மமாய் புன்னகைத்தான்.
அவனின் சிரிப்பே இவளுக்குள் கிலியைக் கிளப்ப. தன் குடும்பத்தார் எப்போது வருவார்கள் என்பது போல் வாசலையும், அவனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு நின்றாள்.
