ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாமியாரை அழைத்துக் கொண்டு சென்ற நேரத்தில் தாய் போன் செய்து ஏதாவது திட்டி விட்டாரோ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது.
” அம்மு என்ன ஆச்சுடி? ப்ளீஸ்! பசங்க வேற இருக்காங்கடி”
” ஒன்னு இல்ல ஆதி” என்றபடி இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள்.
“அம்மு பசங்க” என்றான்.
குழந்தைகள் இருவரும் சிறிது பயத்துடனே தாயைப் பார்த்தபடி இருந்தனர்.
” சுதா!” என்று வேகமாக அதட்டியப் பிறகே, அவனிடம் இருந்து சிறிது விலகினாள் .
“பசங்க இருக்காங்க !” என்றான் பற்களை கடித்தபடி ,
அவளும் அமைதியாக நின்றாள்.
“சாப்பிட்டீங்கல்ல போய் தூங்குங்க “என்று பசங்களிடம் கூற,
” இல்லப்பா நாங்க கொஞ்ச நேரம் வெளிய ஊஞ்சல்ல விளையாடுறோம்” என்றனர்.
சரி என்று தலையசைத்தவன். குழந்தைகள் கண்களில் தெரியும் படியாகவே உட்காருவதை பார்த்து விட்டு, மனைவியின் புறம் திரும்பினான்.
“என்ன ஆச்சு அம்மு? அம்மா ஏதாவது சொன்னாங்களா ?யாராவது ஏதாவது சொன்னாங்களா ?”
” இல்லை” என்று அழுகையுடனே தலையசைக்க.
“பின்ன என்ன தாண்டி . அத்தையை விட்டுட்டு வர கேப்ல இப்படி அழுதுட்டு இருந்தா எனக்கு என்னனு புரியும். ஏற்கனவே டென்ஷனா இருக்கேன்”
” இல்லை ஆதி ஒரு பொண்டாட்டியா உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்த்த ஒன்னு எனக்கு இன்னைக்கு கிடைக்கவும் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல. எனக்கு புரியுது நீங்க எனக்கு எல்லா இடத்துலயும் சப்போர்ட்டிவா தான் இருக்கீங்க. பக்கபலமா இருக்கீங்க, எனக்கும் தெரியுது, ஆனா, அன்னைக்கு அன்னைக்கு ஒரு நாள் “என்று சொல்லும்போதே, நா தந்தியடிக்க குரல் உடைய ,அடுத்த வார்த்தை பேச முடியாமல் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.
அவளை வேகமாக இறுக்கி அணைத்து நெற்றியில் இதழ் பதித்தவன் ,”அத யோசிக்காத அம்மு ப்ளீஸ் டி! கெஞ்சி கேட்கிறேன் , அதை திரும்பத் திரும்ப யோசிச்சு உன்னையும் கஷ்டப்படுத்தி ,என்னையும் கஷ்டப்படுத்தாத அம்மு”
“நான் யோசிக்க வேணாம்னு நினைச்சாலும் , என்னால முடியல ஆதி அன்னைக்கு நடந்தது” என்று இருவருக்குமே அன்றைய நினைவு வந்து சென்றது.
இருவராலுமே கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில், அன்றைய நாளுக்கு சென்றது. நினைவுகளும் பின்னோக்கி ..
நாமும் அன்று என்னதான் நடந்தது என்று பார்க்கலாம் வாருங்கள். கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்பு, தொடர்ந்து இரு வாரங்களாக சுதாவிற்கு ஆபீஸில் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் ,புதிய ப்ராஜெக்ட் கிடைத்ததினால், இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வரும்படியாக இருந்தது.
அப்பொழுது அவள் தினமும் வரும் பஸை விடும்படியாக இருக்க. பஸ் ஸ்டாண்டில் இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, அடுத்த பஸ் பிடித்து வருவது போல் தான் நேரம் இருந்தது .
ஆகையால் ,தன் கணவனுக்கு முதல் நாள் அழைத்து விவரத்தை கூறியவள்.” நீங்க வரீங்களா? ஆதி” என்று கேட்க .
“நான் இங்கிருந்து அங்க கிளம்பி வரதுக்குள்ள, நீ பஸ் பிடிச்சே வந்துடலாம் சுதா. நானும் வேலையை முடிச்சு, நீ இருக்க ஏரியாவுக்கு வர்றதுக்குள்ள பஸ் வந்துரும்”என்று உண்மையான நிலவரத்தை கூற .
அதை உணர்ந்தவள்” சரி ஆதி. நான் அடுத்த பஸ் வரும் போது வந்துடுறேன் ” என்றாள்.
அப்போது அருகில் வந்த அவளுடன் வேலை செய்யும் அன்பு என்றவனோ , “ஏன் சுதா நீங்க இவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணிக்கிறீங்க ?உங்க ஏரியா தாண்டி தானே என்னோட வீடு இருக்கு. வாங்களேன். நானே உங்கள டிரா பண்ணிடுறேன்” என்று கேட்டான் .
அன்புவை ஆதிக்கும் தெரியும். ஆனால் சுதா தான் சிறிது தயங்க.
ஆதி தான், லைனில் இருந்தவன், “அன்புக்கூடவே நீ வந்துரு சுதா. ஒன்னும் பிரச்சனை இல்ல. இந்த ஒன் வீக் மட்டும் தானே, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நம்ம வீடு தாண்டி தானே அவர் வீடு இருக்கு ” என்றான் .
அதன் பிறகு, சரி என்று தலை ஆட்டியவள் கணவனின் அனுமதி உடன், அவன் கூறிய பின்பு அன்புடன் வர ஆரம்பித்தாள்.
ஒரு வாரமாக அவனுடனே வர. மாலை உதயா தாய் வீட்டிற்கு வந்தால் பிள்ளைகளுடனே வந்துவிடுவாள் .கணவன் 9 மணிக்கு மேல் வேலை விட்டு வீட்டுக்கு வருவதால், இங்கு தன் அண்ணனும், அண்ணியும் வந்த பிறகு கிளம்புவாள்.
அப்படி அவள் வந்து செல்லும் பொழுது ,தினமும் தனது அண்ணி ஒரு ஆணுடன் வருவதை பார்த்தவள். தாயிடம்,” என்னமா இது உன் மருமக புதுசா தினமும் ஒருத்தன் கூட ,வரா.நீ எதுவும் கேட்காம இருக்க?”
” எங்க நான் கேட்க .நீ கம்முனு போடி ,வீட்டுக்குள்ள எதுவும் பிரச்சனையே இழுத்துட்டு வேடிக்கை பார்க்காத” என்று அதட்டினார்.
இரண்டாவது வாரமும் இதே தொடர்ந்தது.. அதே போல் அன்புடனே அவள் இந்த வாரமும் வீட்டிற்கு வர.
அவருக்குமே சிறிது உறுத்த ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து இதே தொடர ..அவருக்கு ஒன்றும் சரியாக படாத காரணத்தினால், மகனிடம் என்ன ?என்று கேள்வி கேட்டிருந்தார்.
அவனும் விரிவாக கூறாமல், மேலோட்டமாக, “அவளுக்கு ஒரு வாரம் கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு மா. அதனால அந்த பையன் கூட வரா. நீ ஏன் அதை பெருசா எடுத்துக்குற?” என்று அதோடு நிறுத்திக் கொண்டான்.
விவரமாக கூறவில்லை. ஒரு வேலை கூறி இருக்கலாமோ ?என்னவோ ?ஆதிக் கூற மறந்து இருந்தாலும், நேசன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்பொழுது இதெல்லாம் சாதாரணம், ஒரு பெண்,ஆணுடன் ஒரே வண்டியில் வந்து விட்டால் ,தவறாக எண்ணும் எண்ணம் கிடையாதே என்ற எண்ணம் அவருக்கு .
அது இல்லாமல், மருமகளை பற்றி அவருக்கு தெரியும் . ஆகையால் ,அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மகள் உதயாவோ தினமும் தாய்க்கு தூபம் போட்டபடி இருந்தாள்.
பகல் நேரத்தில் வந்தும்”உன் மருமக போக்கே ஒன்னும் சரியில்ல. இப்ப பாத்தியா தினமும் பூவை வெச்சி மினிகிட்டு எப்படி கிளம்புறா பாத்தியா? தினம் புது புடவை தான்” என ஏத்தி விட்டாள்.
தினமும் அவள் கிளம்புவது போல் தான் கிளம்புகிறாள். ஆனால், மகள் தூபம் போட்டத்தில் அவருக்குமே கூட , அவளின் நடவடிக்கை, ஒவ்வொன்றும் குத்தம் கண்டுபிடிப்பது போல் தான் தோன்றியது .
ஆனால், அதை மனதிற்குள்ளே வைத்துக் கொள்வதை விட கேட்பது நன்று என்று யோசித்தவர்.
அதை வாய்விட்டு ஒரு நாள் அவளிடம் கேட்க.” வேலை விட்டு வரதுக்கு லேட் ஆகுது அத்தை.அதனால அவருதான் இவர் கூட வர சொன்னாரு.இவர் என் கூட ஆபீஸ்ல வேலை செய்ற கோலிக்ஸ் தான். நம்ம வீட்டு தாண்டி தான் இவங்க வீடு. பக்கத்து ஏரியா அதனாலதான்”
“சரி. நீ அடுத்த பஸ் பிடிச்சு வர வேண்டியதுதானே !”
“பிள்ளைங்களை பாக்கணும். படிக்க வைக்கணும், வீட்டு வேலையும் பாக்கணும் இல்ல”
” ஏன் வீட்டு வேலையை நீ பாக்கலனா, இம்புட்டு நாளா ஒத்த ஆளா நான் பாக்கலையா? அதுபோல இனியும் பார்த்துக்க மாட்டேனா?” என்றார் சித்ரா.
“இல்ல அத்தை..அப்படி இல்ல..” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ,ஆதி அழைக்க.
” அவர் கூப்பிடுறாரு” என்றபடி, அதை அவளும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விட்டாள்.
தன்னிடம் நின்று கூட பதில் சொல்ல முடியவில்லை .அவள் போக்கே சரியில்லை, மாறிவிட்டாள் என்று எண்ணி விட்டார் சித்ரா.
உண்மையாகவே அவ்வாறு அவர் நினைத்ததற்கு ஏற்ப கிடைக்கும் நேரத்தை ஆதி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, இங்கே உதயா தினமும் தூபம் போட்டபடி இருந்தாள். மாமியாருடன் நின்று பேச நேரமில்லாமல் நாட்களும் செல்ல. தன்னிடம் நின்று பேச முடியாமல் பேச்சை தவிர்க்கிறாள் .அவளிடம் ஏதோ ?ஒன்று தவறாகத்தான் இருக்கிறது என அவர் முடிவே செய்து விட்டார்.
மருமகள் நடத்தை சரியில்லையோ ?தினமும் அதிக வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி உடன் வேலை செய்பவனுடன் வருகிறாளோ? என்று எண்ணி அன்று வார்த்தையை விட்டு விட்டார்.
அன்று இரவு அவள் வேலை முடித்து வீட்டிற்குள் வர. அப்போது ஆதியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. முதலில் வந்தது சுதா தான் .
அன்றும் அன்புடன் வந்து இறங்க.
அவள் இறங்கும் வரை அமைதியாக இருந்தவர். அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் பிடிபிடி என பிடித்துக் கொண்டார் .
அப்பொழுது உதயாவும் அங்கு தான் இருந்தாள் . நேசன் டிவி பார்த்துக் கொண்டிருந்தவர், மனைவியின் கத்தலில் எழுந்து வந்தார்.
“என்னடி நினைச்சுட்டு இருக்க? தினமும் நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் .உன் கிட்டயும் ,உன் புருஷன் கிட்டயும் மாத்து கட்டுல. ஆனா, நீ கொஞ்சமும் சொல் பேச்சு கேட்காம, அந்த பையனோடவே வர ? யாருடி அவன்?”என்று கேட்க.
” என்ன தினமுமா? அத்தை இப்ப கொஞ்ச நாளா வேலை இருக்கு. அதனால நான் தினமும் வர பஸ் விட்றேன் .அடுத்த பஸ்க்கு நிக்க ரொம்ப நேரம் ஆகுது . அதனாலதான், நான் வர்றது அவருக்கும் தெரியுமே” என்றாள்.
அப்பொழுது கூட அவர் கேட்பதின் நோக்கம் புரியாமல் ,”என் கூட ஆபீஸ்ல வேலை செய்றவரு. இன்னும் கொஞ்ச நாளைக்கு வேலை அதிகமா இருக்கறதால அவர் கூட வந்துட்டு இருக்கேன் . ஏற்கனவே சொன்னேனே ஆனா நீங்க திரும்பத் திரும்ப இதையே கேக்குறீங்க ?”
“திரும்பவும் இதையே கேக்கிறேனா ? ஏன் இருக்காது. நா கேக்குறதெல்லாம் உனக்கு திரும்பத் திரும்ப கேட்கிற மாதிரி தான் இருக்கும். வேற எப்படி இருக்கும்?”
” என்னம்மா நீயும் பொறுமையா பேசிகிட்டு இருக்க. அவங்க கிட்ட ?என்னன்னு ஒடச்சு பேசு ,அப்புறம் தானே நமக்கு உண்மை தெரிய வரும். இது நம்ப வூட்டு புள்ளையோட வாழ்க்கை இல்லையா? ஏன் அண்ணனோட வாழ்க்கை இல்லையா ?”என ஏத்தி விட்டாள் உதயா.
ஒன்றும் புரியாமல் சுதா நாத்தனாரை பார்க்க.” என்ன உதயா?” என்றாள் புரியாமல்,
“இருங்க, எங்க அம்மாவே பேசுவாங்க, என்னய்யா ஏன் கேட்கிறீங்க ?” என்றவள் தாயே இன்னும் சீண்டி விட,
” அவரும் என்ன நினைச்சிட்டு இருக்க ? தினமும் அவன் கூட வராதுன்னு சொன்னேன். யாருன்னே தெரியாத ஊரு பேரு தெரியாதவன் கூட வந்துட்டு இருக்க? உனக்கும் அவனுக்கும் என்னடி பழக்கம்?”
” அத்தை அதிகமா பேசுறீங்க” என்றாள்.அப்போதுதான் அவர் பேசுவதன் நோக்கம் புரிந்து,
“என்ன நா அதிகமா பேசுறனா ?தினமும் ஒருத்தன் கூட வர ,யாருனு ஒரு மாமியாரா நான் கேட்கக் கூடாதா?”
” கேளுங்க தப்பில்ல. அதுக்காக, தப்பு தப்பா பேசாதீங்க .நா வர்றது உங்க பையனுக்கும் தெரியும். உங்க முன்னாடி தான வந்து இறங்குற”
“அதான் டி கேக்குறேன் . தைரியமா என் முன்னாடியே வந்து இறங்குறியே என்ன சங்கதி ?”என்றார் .
அப்பொழுது அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, தான் மகளை பார்ப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்தார் கமலா.
“சம்மந்தி நல்லா இருக்கீங்களா ?”என்று கேட்டப்படியே வர,
” வாங்க வாங்க! என்ன புள்ளையை வளர்த்து வச்சிருக்கீங்கன்னு தெரியல “என்றார் வீட்டிற்குள் நுழைந்த கமலாவிடம்,
“என்னாச்சு சம்பந்தி?” என்று சிறிது அச்சத்துடன் கமலா வினவ.
“என்ன ஆச்சா ?என்னனு உங்க பொண்ணுகிட்டயே கேளுங்க ?தினமும் வேலை முடிஞ்சி வரும்போது ஒரு வாரமா ஒரு பையன் கூட வரா, என்னன்னு கேட்டா, என் கூட வேலை செய்றாருன்னு சொல்றா,ஏன் பஸ் இல்ல, இல்லனா ஏன் மகன் எதுக்கு இருக்கான் அவன் கூட வர வேண்டியதுதானே ?”
“உங்க பையன் தான், அவர் கூட வர சொன்னாரு”
” என்ன என் பையன் அவன் கூட வர சொன்னானா? கேட்டீங்களா? உங்க பொண்ணு சொல்றதா பாத்துக்கோங்க நீங்களே!”என்று சம்பந்தியிடம் முறையிட்டவர்.
“உங்க பொண்ணு போக்கே வர வர எதுவும் சரியில்ல சம்மந்தி .சொல்லி வையுங்க ,அடக்கி வையுங்க ,”
“என்ன சம்மந்தி தப்பு தப்பா பேசுறீங்க?” என்றார் கமலாவும் ,தன் மகளின் நடத்தையை தவறாக கூறவும்,
“நான் என்ன ஊரு உலகத்துல இல்லாததையா தப்பா சொல்லிட்டேன். தெருவே பேசத்தானே செய்யுது. ஊரே பேசுது. நானும் தான் என் கண்ணால பார்க்கிறேன். தினமும் ஒருத்தன் கூட வந்தா ?என் பையன் என்னதுக்கு இருக்கான் ?” என்றார்.
அப்போதுதான் வேலை முடுந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஆதி.
தன் தாயின் கடைசி வரியை மட்டும் கேட்டபடி, நுழைந்தவன் “என்னமா நான் என்னத்துக்கு இருக்கேன்னு கேட்கிற ?”என்றபடி வர.
“ஹம் வா டா .. நான் பெத்த மகராசா, உன் பொண்டாட்டி தினமும் ராத்திரி நேரத்துல எவன் கூடையோ வரா . அத பாத்து ஊர் என்னம்மா பேச்சு பேசுது தெரியுமா?” என்றார்.
அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,
“மா ஊர் பேசுது உலகம் பேசுதுன்னு சொல்லிட்டு திரியாத. அது கூட வேலை செய்ற பையன் தான், எனக்கும் தெரியும் அந்த பையனை, நம்ம தெரு தள்ளி தான் அடுத்த தெரு தான் அவர் வூடு. அதுனால தான் அவங்க கூட வர சொன்னேன்.”
“ஓ! அப்போ உன் பொண்டாட்டி அவன் கூட ஊர் மேஞ்சிட்டு வர்றது உனக்கும் தெரியும்!” என்றார் நாக்கில் நரம்பில்லாமல்,
“சித்ரா!” என நேசன் வேகமாக சத்தமிட்டார்.
இவ்வளவு நேரம் மாமியார் ,மருமகள் சண்டையில் உள்ளே நுழைய வேண்டாம் என்று பொறுமை காத்தவருக்கு மனைவியின் பேச்சு தவறாக இருக்கவும் கத்தி விட்டார்.
தாய் பேசியதை நம்ப முடியாமல்,அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், முதல்முறையாக தாயின் வக்கிரமான வார்த்தையில் ,ஆதி அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
ஆனால்,அவர் பேசியதை காது கொடுத்து கேட்க முடியாத சுதாவோ, தன் மாமியாரை நிர்மலமான முகத்துடன் பார்த்தவள். கணவனை நிமிர்ந்து பார்த்தாள். கணவன் அமைதியாக இருக்கவும் .அதை அவரும் ஏற்றுக்கொண்டது போல் இருப்பது போல் உணர்ந்து ,அவள் அழுகையில் கரைய .
“சம்மந்தி என்ன பேசுறீங்க ?யோசிச்சு பேசுங்க நீங்களும் ஒரு பொம்பள புள்ள வெச்சு இருக்கீங்க” என்றார் கமலா.
“என்ன சத்தம் போடறீங்க ?புள்ளைய வளக்க தெரியாம வளர்த்துட்டு ஊரே சந்தி சிரிக்குது. உங்க மக பன்ற கூத்துக்கு .. இதுல நீங்க என் புள்ளைய பத்தி பேசுறீங்களா ?என் புள்ள ஒன்னும் இப்படி தினமும் ஒருத்தன் கூட கூத்தடிச்சிட்டு வீட்டுக்கு வரல ராத்திரி நேரத்துல” என்று கூற.
” போதும் நிறுத்துங்க! என்ன மாப்ள…இது, உங்க அம்மா இந்த பேச்சு பேசுறாங்க, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க? அப்போ உங்க அம்மா பேசுறதெல்லாம் சரி என்ற போல இருக்கு உங்களோட அமைதி?” என்று கேட்க.
” அத்தை அது” என்று தடுமாறினான். எதுவும் பேச முடியாமல்,
” போதும் மாப்பிள்ளை! இங்கு என் பொண்ணு என்ன வாழ்க்கை வாழ்றானு எனக்கு இன்னைக்கு தான புரியுது. இம்புட்டு நாளா நல்லா இருக்கான்னு இல்ல நினைச்சுகிட்டு நானும் அங்க நிம்மதியா இருக்கேன்.இங்க வந்து பார்த்த பிறகு தானே தெரியுது, நீ ஏண்டி அப்படியே நின்னுட்டு இருக்க?” என்று மருமகனை பார்த்தபடி நின்ற மகளின் கையை பிடித்துவர்.
” கிளம்பு இனியும் இங்க என்ன நமக்கு வேலை ?நம்ம வீட்டுக்கு போயிட்டே இருக்கலாம் .இனியும் உனக்கு இந்த வாழ்க்கை வேணுமா? இப்படிப்பட்ட வாழ்க்கை ?உன் நடத்தையே சந்தேகப்பட்டு பேசுறாங்க ?கட்டின புருஷன் பெத்தவங்கள பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு நிக்கிறாரு. இதான் நீ வாழ்ந்து கிழிக்கிற லட்சணமா ?”என்று மகளை கையோடு அழைத்துக் கொண்டு செல்ல .
மழை வெளியே கொட்டியது.. அவன் “சுதா!” என்று கத்தியபடி பின்னாடியே வர.
தன் கணவனை தான் பார்த்தாள். இப்பொழுது கூட தாயிடம் ஒற்றை வார்த்தை பேசாதவனை நிர்மலமான (அமைதியான) முகத்துடன் பார்த்தாள்.
அவளது முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது இருப்பதே அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்க ..
குழந்தைகளும் வெளியில் ஓடி வந்தனர் அழுகையுடனே,
மகளை மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டவள், கணவனிடம் மகனை விட்டுவிட்டு எதுவும் பேசாமல் தாயுடன் பிறந்த வீட்டை நோக்கி கிளம்பிவிட்டாள் சுதா.
