மௌனத்தால் உடைந்த காதல் 18

ஆதி தன் மாமியார் வீட்டிற்கு தந்தையுடன் சென்று இறங்க.

வாசலில் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த கமலா ,வீட்டிற்குள் கூட இருவரையும்” வாங்க” என்று அழைக்காமல் ,”இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? என் மகளை அந்த பேச்சு பேசுனது பத்தாதுன்னு திரும்ப வீட்டுக்கே  தேடி வந்து உசுர வாங்க வந்துட்டீங்களா?”

” தங்கச்சி என்னமா இப்படி பேசுற ?”

“அண்ணா என்ன மன்னிச்சிருங்க . உங்க மேல மதிப்பு, மரியாதை வச்சிருக்கேன். ஆனா, நேத்தி உங்க பொண்டாட்டி அவ்ளோ பேச்சு பேசும் போதும் நீங்க அமைதியா தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்க .உங்கள கூட நான் பெருசா எதுவும் சொல்லல. ஆனா, தான் பொண்டாட்டிய தன்னோட அம்மாவாவே இருந்தாலும், அம்புட்டு பேச்சு பேசுறாங்க வேடிக்கை  பாத்துட்டு நிக்கிறாரு.

அப்ப உங்க பொண்டாட்டி சொல்றதெல்லாம் உண்மை என்றமாறி தான் உங்க பையனோட நடவடிக்கை இருக்கு “
என்றார்.

இவ்வளவு நாள் ,”மாப்பிள்ளை” என்று அழைத்தவர். வாயில் முதல் முறையாக “உங்க பையன் “என்ற வார்த்தையை கொண்டு வந்திருந்தார் .அவருக்கு மனம் சிறிதும் ஆறவில்லையே ! தன் மகள் வாழ்ந்த வாழ்வு என்ன ?நேற்று அவ்வாறு பேசியும் வாய் திறக்காமல் நின்ற மாப்பிள்ளையின் மீது கடும் கோபம், இயலாமை அனைத்தும் சேர்ந்து இப்பொழுது வேறு யாரோ என்பது போல் தோன்றியது அவருக்கு.

” அத்தை நான் பேசி இருக்கணும் தான். என் மேல தான் தப்பு. என்னை சுதாவை பார்க்க விடுங்க.நான் அவ கிட்ட பேசணும்”

” போதும்! நீங்க என் பொண்ண பார்த்த வரைக்கும் போதும்! அவ உங்க கூட வாழ்ந்த வரைக்கும் போதும். எல்லாம் முடிஞ்சிருச்சு இதோட “என்றார்.

“சுதா! சுதா!” என்று குரல் கொடுத்தான். ஆனால் ,அவளுக்கு ஜுரம். நேற்று கணவன் பேசியது, மாமியார் பேசியது ,மழையில்  நனைந்தது .என அனைத்தும் சேர்ந்து ஜுரம் வாட்டி வதைக்க. வக்கீலைப் பார்த்து விட்டு வரும்போதே, மருத்துவரை பார்த்து விட்டு வந்திருந்தார்கள்.

அசதியில் மாத்திரை போட்டவுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள். இரவு தூங்காதது வேறு,  குழந்தையும் சேர்ந்து தூங்கி இருந்தது. ஆகையால், இவன் கத்திய கத்தல் சுதாவை எட்டவில்லை.

ஆனால், சுதா  கோபத்தில் வரவில்லை என்று இவன் எண்ணிக்கொண்டான். ரொம்ப நேரமாக கத்தி பார்த்துவிட்டு , நேசனும் பேச .

“போதும் அண்ணா ! என் மக இனியும் உங்க வீட்ல வந்து கஷ்டப்பட வேண்டியதில்லை. என் மக என் மகளாவே  என் வீட்டிலேயே இருந்துட்டு போறா.அவ நிம்மதியாவது இருந்துக்கட்டும். அவ எந்த ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டியது இல்லையே. அங்க அம்புட்டு பேச்சு பேசுறாங்க உங்க பொண்டாட்டி. என் பொண்ணோட நடத்தையை தப்பா பேசுறாங்க ,என் பொண்ணு அந்த பையன் கூட வர்றது உங்க மகனுக்கும் தெரியும். அப்படி இருந்தும், உங்க மகன்  வாய் திறக்கல.

உங்க  மகன் சொன்ன பிறகுதான் என் மக அந்த பையன் கூட வந்தா. அது எனக்கு தெரியும்.அவ நேரம் கழிச்சு வரும் போது கேட்கும் போது,சொன்னா  .உங்க மகன் சொன்னதுக்கு அப்புறம் தான் வந்தா, அப்படி இருக்க உங்க மகன் அங்க பேசாம இருந்தது, உங்க மகனோட தப்பு தானே.

சரி அப்போ கூட ஏதோ அப்படின்னு நினைச்சு விட்டா ,நான் திரும்ப கேட்டேன் இல்லையா?, என்ன மாப்ள உங்க அம்மா என் கண்ணு முன்னாடியே இப்படி பேசுறாங்க, என் முன்னாடியே இப்படி பேசினா? நான் இல்லாத அப்போ என்னன்ன பேசுவாங்கனு அப்பயும் உங்க மகன் ஒரு வார்த்தை எதிர்த்து பேசல.

என் பொண்ணுக்கு அங்க என்னதான் மரியாதை ?என் பொண்ணு இத்தனை வருஷம் வாழ்ந்த  வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் அப்போ? அம்மா தான் முக்கியம்னா பொண்டாட்டி எதுக்கு ? இங்க அம்மா முக்கியமா ?பொண்டாட்டி முக்கியமானு நான் எந்த பிரச்சனையும் பண்ண விரும்பல.

ஆனா, அங்க அவுங்க அவ்ளோ பேச்சு பேசும் போது, பொண்டாட்டி பாக்க நிண்ணு இருக்கணுமா இல்லையா? யாரு தப்பு செய்றாங்களோ அவங்க பக்கம் நிக்கமா?உண்மையும் , நேர்மையும்,நியாமும் எங்க இருக்கோ அங்க நிண்ணு இருக்கணும்  இல்லையா ?

அம்மாவை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறவர். பொண்டாட்டியை விட்டுக் கொடுத்துவிட்டு,  வேடிக்கை பார்த்தாரு, இன்னைக்கு அம்மாகிட்ட விட்டு கொடுத்தவர்,  நாளை பின்ன உங்க பொண்டாட்டி சொன்ன மாதிரி ரோட்ல போற வரவங்க சொல்றாங்கன்னு சொன்னா விட்டு கொடுத்துட்டு வேடிக்கை பார்க்க மாட்டாருனு என்ன நிச்சயம் ?

எதை நம்பி என் புள்ளையை உங்க பையனோட  அனுப்ப சொல்றீங்க?  போதும்! நான் காலையிலேயே போய் வக்கீல பாத்துட்டு வந்துட்டேன். எதா இருந்தாலும், இனி கோர்ட்டுல பேசிக்கலாம்” என்றார் இறுதியாக,

  இவ்வளவு நேரம், ஒரு தாயாக புலம்புகிறார் ,கேள்வி கேட்கிறார் உரிமை இருக்கிறது என்று அமைதியாக இருந்த நேசன்.

” என்னம்மா வக்கீல பாத்துட்டு வந்துட்டேன்னு சட்டுன்னு சொல்ற ?”

“பின்ன வேற எப்படி சொல்லணும்னு நினைக்கிறீங்க ?இனியும் என் மக அந்த வீட்டில ஏச்சும் பேச்சும் கேட்டுட்டு ஒக்காந்து இருக்கணும்னு நினைக்கிறீங்களா?”

திரும்ப நேசன் பேச வர ,

கையெடுத்து கும்பிட்டவர் .”எதா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்குங்க. போங்க ”  என்க

ஆதி அழுதபடி திரும்பி பேச வர .”வாடா இதுக்கு மேல் பேசினா சரியா வராது” என்று அவனின் தோளில் கைப் போட்டார்.

கமலா ஒரு நிலை இல்லாமல் இருப்பதினால்,’ பேசுவது வீண் ‘என்று யோசித்தவர்.

‘ நாளை மறுநாள் சுதாவை ஆபீஸ் செல்லும் பொழுது பார்த்து பேசிக்கொள்ளலாம் ‘என்று எண்ணிய நேசன் ,”வாடா அப்புறமா பேசலாம்” என்று மகனின் தோளில் தட்டி அழைத்துக்கொண்டு சென்றார்.

மருமகள் வேறு இவ்வளவு நேரம் வெளியில் வராதது அவள் கோபத்தில் இருப்பாள் என்று எண்ணினார் .

மீண்டும் மீண்டும் தொடர்ந்து தினமும் ஆதி வந்தபடி இருக்க. இரண்டு நாள் வேலைக்கு லீவு போட்டு இங்கே வந்து நின்று இருந்தான்.

இரண்டு நாட்களும் கதவு, ஜன்னல் என அனைத்தையும் அடைத்து வைத்தபடி கமலா இருந்தார் .மருமகனின் வருகையை உணர்ந்து, இரண்டு நாட்கள் தொடர்ந்து ,

சுதாவிற்கு இரண்டு நாட்கள் ஜுரம் வாட்டி வதைக்க. குழந்தையையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, சுதா வேலைக்கு செல்லும் பொழுது, குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, தானும் செல்ல. அப்போது வழிமறித்து நின்றான் ஆதி.
 

அவனைப் பார்த்தவள் யாரோ போல் பார்த்துவிட்டு நகர்ந்து விட.

” சுதா!” என்று வேகமாக கைபிடிக்க.

அற்ப புழுவை பார்ப்பது போல் அவனை பார்த்த பார்வையில் மொத்தமாக உடைந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

“சுதா நான் பேசுறதை கேளு சுதா” என்று அவன் பேசுவதை சிறிதும் நின்று காதில் வாங்காமல் சென்றாள் .

அவளின் பார்வையில் ஒன்றே ஒன்றுதான் அன்று பேசும்போது, பேச முடியாத உன் வார்த்தையை தான் ஏன் கேட்க வேண்டும் ?என்பது போல் இருந்தது.

அவளின் ஒற்றைப் பார்வையில் உள்ளுக்குள் செத்தவன். தொடர்ந்து அவள் பள்ளியில் மகளை விட வரும் பொழுது தொடர்ந்து அவளிடம் பேச முயற்சித்தான் .

அவளோ ஒற்றைப் பார்வையிலே அவனை ‘தூரப் போ !’என்று துரத்தாமல் துரத்தி இருந்தாள்.

அவளது மனவலியை உணர்ந்த நேசன் ஒரு வாரம் கழித்து பேச வர.

” உங்க மேல மதிப்பு இருக்கு மாமா .அதை நீங்களே கெடுத்துக்காதீங்க. இனி நான் யாரையும் பார்க்க விரும்பல. யார் கிட்டயும் நான் பேச விரும்பல “
 

“உங்க அம்மா  என்னன்னவோ சொல்றாங்களே சுதா ? வக்கீல் பார்த்து பேசியிருக்கிறதா சொல்றாங்க ?”என்றார் .

நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் “வேற என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க ? உங்க பொண்டாட்டி அம்மாவா அன்னைக்கு அவ்வளவு பேச்சு பேசும்போது உங்க பையன் அமைதியா இருந்தாரு. இன்னைக்கு என்  அம்மா தன் புள்ள வாழ்க்கை போயிடுச்சுன்னு என்ன அங்க கொண்டு போய் நிக்க வச்சுருக்காங்க. அங்க என்னால எதுவும் பேச முடியல உங்க மகனுக்காக .

அவர் எப்படி அன்னிக்கு எதுவும் பேச முடியாம நின்னாரோ? அதே மாதிரி தான் என்னால இன்னிக்கி எங்க அம்மாவை எதிர்த்து எதுவும் பேச முடியுமா நிக்கிறேன். எனக்குன்னு இருக்கிறது அவங்க மட்டும் தான் மாமா . அவங்களையும் தொலைச்சிட்டு நிக்க சொல்றீங்களா?”  என்றவள் அவரை மேற்கொண்டு பேச முடியாதபடி, பலமாக வார்த்தையாலே அடித்து விட்டு. கிளம்பி இருந்தாள்.

என்ன செய்வது என்று நேசனுக்கும்  புரியவில்லை .அதன் பிறகு ,வக்கீல் நோட்டீஸ் வீட்டிற்கும் வந்திருக்க.

கோர்ட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்திருந்தது. அதன் பிறகு ,வக்கீலை பார்த்து நேசனும் பேசி இருக்க. தனக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை என்று உங்கள் மகன் கூறினால் மட்டுமே போதும்,  டிவோர்ஸ் தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது.

அப்படி வாய்ப்பிருக்கும் பொழுது ஒரு சில நேரம் ஆறு மாதம் காலகெடு கொடுப்பார்கள் .அந்த நேரத்தில் உங்கள் மகன் தனக்கு சாதகமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தான் இருக்கிறது .அவரது திருமண வாழ்வு என்று வக்கீலும் கூறி விட.

அருகில் இருந்த தன் மகனை பார்த்தார் .அவனால் வேறு எதுவும் செய்ய முடியாமல் ,கண்மூடி திறந்தவன். வெளியில் வந்து தன் தந்தையை கட்டிக்கொண்டு அழுதான்.

” நான் எப்படியாவது என் வாழ்க்கையை காப்பாத்துவேன். எனக்கு சுதா முக்கியம்! அவ இல்லாம என் வாழ்க்கை கிடையாது .என்னால பாப்பாவை  பார்த்து பேச கூட முடியல பா. பாப்பா முன்னாடி போய் நிக்க முடியல. சாதாரணமாவே பயப்படுவா இப்போ” என்றவனுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை .

அந்த ஒரு மாத காலங்களாக இவனாகவே தன் மகளை பார்ப்பதை நிறுத்தி இருந்தான். இவள் பள்ளி விட்டு வெளியில் வரும் பொழுது மட்டுமே பார்த்து பேசியவன், மகளுடன் நின்று இவளிடம் பேச பயம். தன் மகளின் முகத்தை பார்க்க முடியாமல் தவித்தான் .தவிர்த்தபடி இருந்தான்.

“ஒன்னா வளர்த்த புள்ளைங்கப்பா. என்னால என் புள்ளைங்களும் தனித்தனியா இப்போ ஒரு மாசமா வளர வேண்டி இருக்கு “என்று அழுதவன் வீட்டிற்குச் சென்று அனைத்தையும் யோசித்து விட்டு, தான் எடுத்து முடிவை தன் தந்தையிடமும் கூறவில்லை. என்றாலும்,” நான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கேன் அப்பா. என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல உங்களுக்கு ?”என்று கேட்டிருந்தான்.
 

அவரும்,” உன் மேல நம்பிக்கை இருக்கு ஆதி. ஆனால், இனியும் ஒரு முறை பார்த்து” என்றவர் வேறு ஏதும் கூறாமல் நிறுத்த.

” எனக்கு புரியுதுப்பா. இனி அப்படி ஒரு தப்பு பண்ண மாட்டேன்” என்று கூறியிருந்தான் .

அதன் பிறகு தான் கோர்ட்டில் ஜட்ஜிடம் பேசியது. அதன் பிறகு, சுதாவை தனியாக அழைத்துக் கொண்டு வந்தது ,தாய் வீட்டிற்கு சென்று ,தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தது என அனைத்தும் நடந்தது.

இப்பொழுது இருவருக்கும் அனைத்தும் மனதில் வந்து செல்ல. இன்னும் தங்களை இறுக்கி கட்டி அணைத்தபடி நின்றனர் .

குழந்தைகளின் சத்தத்திலேயே இருவரும் தங்களிடமிருந்து விலகினர்.

“அப்பா தூங்கலாமா?” என்று இருவரும் வந்து நிற்க .

மனைவியிடம் இருந்து திரும்பி தன் கண்களை அழுத்த துடைத்தவன்.” சுதா!” என்றான் .

அவளும் வேறு புறம் திரும்பி கண்களை துடைத்தபடி இருக்க .

“நீ போயிட்டு கிச்சன்ல ஏதாவது வேலை இருந்தா பாரு .நான் பசங்களை தூங்க வைக்கிறேன்”

‘எங்கு பிள்ளைகள் முன்னாடி அவள் அழுது விடுவாளோ ?’என்று சமையலறைக்கு அவளை அனுப்பி வைத்துவிட்டு , பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அறைக்கு  சென்றான்.

அவன் பெட்ரூமிற்கு சென்ற அடுத்த நொடி அவள் சோபாவில் வந்து உட்கார்ந்து , பழைய நினைவில் உழன்று கொண்டிருப்பதை பார்த்தான் . இருந்தாலும், குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு சென்று பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டான் .

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, அவன் ஹாலுக்கு வர.

அவன் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.” எதுவும் யோசிக்காத அம்மு !தூங்கு. நாளைக்கு வேலைக்கு வேற போகணும் இல்ல”  என்றான் தலையை ஆதுரமாக வருடி விட்டபடி,

எதுவும் பேசவில்லை .அவன் மடியிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்று இருந்தாள். நிறைய விஷயங்கள் நடந்து இருந்தாலும், தன்னவனை அவளால் தூக்கி எறிய முடியாதே? அந்த ஒரு மாதம் தாய் வீட்டில் இருக்கும் போது ,அவள் யோசித்ததும் அதுதானே!

கோர்ட் வாசப்படி சென்று இருந்தாலுமே கூட, தான் இல்லாமல் இருந்து விடுவரா? குழந்தைகளை பிரிந்து இருந்து விடுவாரா? குழந்தையை பிரிப்பது சரியா ?  தாயிடமிருந்து குழந்தையை பறிப்பதாகட்டும், இல்லை,  தந்தையிடம் இருந்து குழந்தையை பிரிப்பது ஆகட்டும் இல்லை, இரு குழந்தைகளுமே ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதுமே கூட சரியா ?

தங்களுக்காக குழந்தைகள் பிரிய வேண்டுமா? என ஆயிரம் யோசிக்கத்தான் செய்தாள்.

தன் தாயிடமும் சண்டையிட்டாள் .

“அதுக்காக திரும்பத் திரும்ப அந்த இடத்திலேயே போய் இருக்க போறியா சுதா ?”என்று தாய் கேட்க.
 

“அதுக்காக பசங்களை பிரிக்க சொல்றியா?”

” வேணாம் டி. பையன கூட்டிட்டு வா போய். இல்லன்னா நீ கூட போக வேணாம். நான் போய் கூட்டிட்டு வரேன்” என்றார் மல்லுக்கு .

“ஒன்னும் வேணாம் பையன் அங்க இருக்கட்டும்”என்றாள் .

அப்போது தான் கணவன் சிறிது நடமாடவாது செய்வான் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறியிருக்க.

மகளின் நோக்கம் புரியாதவர் கிடையாதே! அன்றைய  மருமகனின் ஒரு செயல் பிடிக்காமல் இருந்தாலும் ,மற்றபடி மருமகன் மீது குறை சொல்லிவிட முடியாது. ஆகையால், அமைதியாக இருந்தார்.

அவருக்கும் என்னதான் செய்வது என்று புரியவில்லை .ஆனால், மொத்தமாக மருமகளிடமிருந்து மகளை பிரிப்பதில் அவருக்கும் விருப்பமில்லை. ஆனால் ,இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எண்ணியே வக்கீலை பார்க்கச் சென்றார்.

வக்கீலை பார்ப்பதற்கு முன்பாகவே அவருக்கு போன் செய்து விவரத்தை கேட்டு விட்டு தான் சென்றிருந்தார் கமலாவும்.

மகளை மருமகனிடம் இருந்து முழுவதாக பிரிப்பது அவருக்கும் நோக்கம் இல்லை .

ஆனால்,இனியும் இவ்வாறு பேசிய படியே இருந்தார்கள் என்றால் சரிவராது என்பதற்காகவே, வக்கீல் இடம் பேசினார்.

“இப்போ மொத்தமாக அங்கிருந்து பிரிஞ்சு வரணும்னு நினைக்கிறீங்களாமா ?” என்று வக்கீல் கேட்க .

“நான் அப்படியெல்லாம் நினைக்கல சார். ஆனா ,இதுக்கு, இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரணும் . மருமகன் அன்னைக்கு அமைதியா இருந்ததும் தப்புதான். மத்தபடி மருமகன் மேல எந்த தப்பும் சொல்லிட முடியாது. ஒன்னுக்கு ரெண்டு புள்ளைங்க இருக்கு. என் மகளோட வாழ்க்கையும் எனக்கு முக்கியம்.

மருமகனை விட்டு பிரியணும்னு நினைக்கல. புள்ளைங்களையும் பிரிக்க முடியாது .ஆனா, இதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க ?”

“இந்த பிரச்சனையை சுமூகமா பேசி முடிகிறது”என்றார்.

” சரி வராத காரியம்  சார்.பேசினா இன்னும் அதிகமா சம்பந்தி கிட்ட இருந்து பேச்சி வாங்க வேண்டி வரும். என் மக பேச்சு வாங்குறதை என்னால கேட்டுட்டு இருக்க முடியாது. அதே சமயம் இப்படியே அழுது வடிஞ்ச முகத்தோடு இருக்கிறதையும் என்னால பார்க்க முடியாது .ஒத்த வார்த்தை கூட அவளுக்காக பேசாத மருமகனை பார்த்த உடனே என் மக மொத்தமாக உடைஞ்சு போயிட்டா. இன்னொரு வார்த்தை என் சம்மந்தி ஏதாவது பேசி, அம்மாவை எதிர்த்து பேச முடியாம மருமகன் நின்னா என் மக மொத்தமாக போய் சேர்ந்திடுவா .

எனக்கு என் மகளோட உசுரும் முக்கியம் ,வாழ்க்கையும் முக்கியம். அதனால ,இதுக்கு சுமூகமா முடிக்கிற மாதிரி ஏதாவது வழி இருந்தா  சொல்லுங்க “என்று கேட்டார்.

“அப்போ தனிக்குடித்தனம் தான்   ஒரே வழி”

” தனிக்குடுத்தனமா? ஏற்கனவே என் பையன் தனியாத்தான் இருக்கான். என் மருமக என்கிட்ட இருந்து பிரிச்சு இழுத்துட்டு போயிட்டா. ஆனா , இதுவரைக்கும் நான் அவங்களை குடும்பத்துல இருந்து பிரிக்கணும்னு நினைக்கலையே சார் “

“நீங்க அவரை அவங்க அப்பா,அம்மா கிட்ட இருந்து   பிரிச்சு வாழ வைக்கனும்னு  நினைக்கல தான் .ஆனா, இப்ப சூழ்நிலை அவங்க பிரிஞ்சு வாழ்வது மட்டும் தான் சரியா வரும். உங்க மகளால் உங்க சம்மந்தி கூட போய் இருக்க முடியுமா ? இல்ல உங்க சம்மந்தி வாய் தான் சும்மா இருக்குமா? ஆடுனா காலும்  ,பேசின வாயும் சும்மா இருக்காதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க கேட்டதில்லையா?” என்று கேள்வி கேட்க .

“ஆனா  என் மகளும் சரி, நானும் சரி ,மருமகனை அவங்க பெத்தவங்க கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைக்கலையே!”

“நீங்க நினைக்க வேண்டாம். அந்த முடிவை உங்க மருமகன் எடுத்தா உங்களுக்கு சம்மதமா ?”என்று கேட்க .

“சார்!”என தயங்கினார்.

“அப்புறம் இது எப்படி மா சுமுகமாக முடியும். நீங்களே சொல்றீங்க உங்க  மருமகன் தன்னோட அம்மாவ எதிர்த்து எதுவும் பேச முடியாம இருக்காருன்னு. அப்ப மேலும் மேலும் உங்க பொண்ணுக்கு தானே இது வலியை கொடுக்கும். சேர்ந்து எப்படி வாழ முடியும் ?இப்ப விருப்பப்பட்டு இருக்க உங்க பொண்ணு கூட, பின்னால வெறுப்பா மாறிடும் உங்க மருமகன் மேல”   என்றார் .

அதிர்வாக வக்கீல் சொல்வதை கேட்டார் கமலா.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page