மௌனத்தால் உடைந்த காதல் 23

ஆதி வீட்டுக்கு சென்று சுதாவிடமும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க.

” நான் தான் சொன்னேன்லங்க அவ இப்படி மாற ஏதோ ஒரு வகையில நம்பலும் தான் காரணம். அவகிட்ட பழையபடி யாரும் இல்லன்றது தான் காரணம்.அதுதான் என் மேல முழுசா அவளுக்கு வெறுப்பு வர காரணம். புதுசா வந்த என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தா, என் பின்னாடி சுத்திட்டு இருந்தா தான அண்ணி அண்ணினு, இப்போ கொஞ்ச நாள தான மாறிட்ட. அவ மாறிட்டாங்குறத தாண்டி, நம்ம அவளை மாத்திட்டு வந்திட்டோம்னு தான் சொல்லணும். அவள முழுசா தப்பு சொல்ல முடியாது இல்ல ,விடுங்க, நீங்க அப்ப அப்ப போய் அவளையும் பார்த்துட்டு வாங்க. அத்தை ,மாமாவையும் அவளை பாக்க போகும்போது அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லுங்க, நீங்க தினமும் போன்ல பேசுங்க ,நேரம் கிடைக்கும் போது நீங்களும் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு வாங்க” என்று கூறியிருந்தாள்.

“உன்ன மாறி ஒரு மருமகளும், அண்ணியும் கிடைக்க என் குடும்பம் கொடுத்து வச்சிருக்கணும் “என்று அவளை முத்தமிட்டான் .

“அப்படி இல்ல ஆதி. குடும்பம்னா எல்லாம் சேர்ந்துதான் இருக்கும். சந்தோஷம் மட்டும் கிடையாது , சண்டை ,சச்சரவு, மனஸ்தாபம் என எல்லாம் அப்பப்போ வரும்,  போகும்.விட்டுக் கொடுத்துப் போனா மட்டும்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். அதும் உதயா மாறி  ஒரு நாத்தனார் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.

அந்த வீட்டுக்கு வரும்போது சின்ன பயம் இருந்துச்சு .எனக்கு மட்டும் கிடையாது, எந்த ஒரு பொண்ணுக்குமே கல்யாணம் பண்ணி புதுசா ஒரு இடத்துக்கு வரும்போது,பயம் இருக்கும். சின்ன பொண்ணா இருந்தாலும் கூட ,எனக்கு அவ்ளோ சப்போர்ட்டிவா இருந்தா, பல இடத்துல, ஆரம்பத்துல நான் எதையாவது சொதப்பினா கூட, வீட்டு விஷயம் ஏதாவது தெரியாம நடந்துகிட்டா கூட, அப்படி இல்ல அண்ணி ,இப்படி இல்ல அண்ணி, அப்படின்னு சொல்லி கொடுத்து இருக்கா.

அவளை எந்த இடத்துலயும் நான் குத்தம் சொல்லிட மாட்டேன். இப்ப ஒன்றரை ரெண்டு மூணு வருஷமா வேணா அவ என்கிட்ட இருந்து விலகி இருந்திருக்கலாம். அப்ப கூட அவ என்ன எந்த இடத்திலும் விட்டு கொடுத்து பேசினது கிடையாது. நம்ம வீட்டுக்குள்ள எப்படி இருந்தாலும் சரி, வெளி ஆளுங்க முன்னாடி  இதுவரை விட்டு கொடுத்தது கிடையாது.

இந்த பிரச்சனை நடக்குறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, ரோட்ல வச்சு ஒரு அக்கா என்ன தப்பா பேசினப்ப ,அவதான் சண்டைக்கு வந்து நின்னா. இப்போ வரைக்கும் அவ எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்துடல “

அவன் அவளை மேலும் கீழும் பார்த்தவன் “நாத்தனாரை விட்டு கொடுக்க மாட்டியே? ” என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.

கூறியது போலவே, தாயும் , தந்தையும் இரண்டு நாட்களுக்கு பிறகு சென்று அவளை பார்த்துவிட்டு வந்தனர்.

அந்த வார இறுதியில் தங்கை வீட்டிற்கு குழந்தைகளையும் அழைத்து சென்று இருந்தான். “உன் பொண்டாட்டி வரலையா?” என்று கேட்டாள் அண்ணனிடம் உதயா,

” ஏன் அண்ணின்னு சொல்ல மாட்டியோ ?”என்று மகளை குமட்டிலே குத்தினார் சித்ரா.

” நீயே உன் மருமகளை மெச்சிக்கோ. அப்பயும் இந்த வீடு தேடி வர மனசு வரல தானே, நான் செஞ்சது மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது” என்று கூற,

சிரித்தபடியே உள்ளே நுழைந்து இருந்தாள் சுதா.

உண்மையாகவே ஆதி முதற் கொண்டு யாருமே அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. கிளம்பும்போது ஆதி ‘நீயும் வரியா?’ என்று கேட்கத்தான் யோசித்தான். ஆனால், ஒரு சில நொடி தயங்கினான். அவன் தயங்கி நிற்க .

“என்ன ஆதி?”

“ஒன்னும் இல்ல  அம்மு”

“சரி பார்த்து போயிட்டு வாங்க” கூறிவிட்டு நகர்ந்து விட்டாள்.

வரியா என்று கேட்கவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது. வா என்று கூப்பிடவும் ஒரு மாதிரி இருக்க யோசித்தவன்..

இறுதியில் கிளம்புவதற்கு முன்பு, “நீயும் வரியா அம்மு?”என்று வாய்விட்டு கேட்டிருந்தான்.

“நீங்க போங்க ஆதி  நான் வரேன்” என்றாள் மொட்டையாக .

அவ்வாறு அவள் கூறியவுடன் இப்போது வர விருப்பமில்லை போல என்று எண்ணியே குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பியும் இருந்தான்.

இப்பொழுது தன் பின்னாலே மனைவி வந்து இருப்பதை பார்த்து சிரித்து முகத்துடன் அவளை பார்த்தபடி அவன் நிற்க.

“அண்ணி!” என்று ஓடி சென்று வேகமாக கட்டி அணைத்து இருந்தாள் உதயா சுதாவை.

சுதா வந்தது அதிர்ச்சி என்றால், உதயா இவ்வளவு நேரம் ‘உன்னுடைய பொண்டாட்டி !’என்று அழைத்தவள். இப்பொழுது ‘அண்ணி’ என்று ஓடிச்சென்று கட்டி  அணைத்தது அதைவிட பேரதிர்ச்சி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .

துரை தான் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு நின்றான்.

” மாப்ள வாய மூடுங்க கொசு போயிட போகுது உள்ள” என்று ஆதி அவன் காலை வார,

  குழந்தைகள் நால்வரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

குழந்தைகளை பார்த்து முறைத்தவன்.” போங்கடா” என்று விட்டு ,மனைவியையும் , மனைவியின் அண்ணியையும் தான் பார்த்தான்.

அதன் பிறகே, சுயம் உணர்ந்த துரையும் ,துரையின் பெற்றவர்களும் “வா சுதா!” என்று வரவேற்றனர்.

“வரேன் அப்பா ,அம்மா,அண்ணா “என்றவள் அனைவரிடமும் நலம் விசாரித்தாள்.

“வர மாட்டீங்கன்னு நினைச்சேன் அண்ணி!”என்றாள் கவலையுடன் உதயா.

“நான் ஏன் வராம என் நாத்தனார் வீட்டுக்கு “என்று அவளுக்கு பிடித்தமானதை   தன் கையாலே செய்து கொண்டு வந்து கொடுத்தாள்.

அதில் ஒன்றை எடுத்து அவளே ஊட்டியும் விட்டாள்.

” லவ் யூ அண்ணி!” என்று உதயா சுதாவின் கன்னத்தில் முத்தமிட,

  இங்கு ஆதி தான் வயிற்றெரிச்சலில் குமைந்தான்.

“என்ன மச்சான் நீங்க பண்ண வேண்டியதை எல்லாம் உங்க தங்கச்சி பண்றா போல.. எங்கேயோ வயிறு பார்ன் ஆகுற ஸ்மெல் வருதுல்ல “என்று துரை மூக்கை நுகர்ந்து காட்ட.

” எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”என்று மழுப்பினான் ..

“அப்படியா? எனக்கு  இங்க வரைக்கும்  ஸ்மெல் வருதே!” என்று வாய் விட்டு சிரித்தான்..

” மாப்பிள்ளை நீங்க வேற” என நேசன் துரையின் தோளில் தட்டி சிரித்தார் .

துரையின் அம்மா அமுதா தான் “என்னடா பேச்சு இது” என அதட்டினார்.

“இருமா  சும்மா தானே மாப்பிள்ளை இப்படி பண்றாரு” என்று கூறியிருந்தார் நேசன்.
 

சுதாவும்  சமையலுக்கு உதவினாள் உதயாவுடன், 
அதன் பிறகு, குடும்பமாக உட்கார்ந்து பேசி ,சிரித்து சாப்பிட்டனர்.

மாலை போல் அனைவரும் அவரவர் வீடு நோக்கி கிளம்பினர்.

கிளம்புவதற்கு முன்பாக,”அண்ணி  என்ன மன்னிச்சிடுங்க !”என்று சுதாவின் கைகளை பிடித்துக் கொண்டு உதயா கண்ணீர் விட.

“இப்போ வரை சந்தோஷமா தான இருந்தோம் அப்புறம் என்ன உதயா.விடு இனி அதை பேச வேணாம்”என்றாள் அவள் கையில் தட்டிக் கொடுத்து,

“ஆனா. உங்க சந்தோஷத்தை மொத்தமா அழிக்க நானே காரணம் ஆயிட்டேனே!” என்று வருத்தினாள் உண்மையாகவே,

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல உதயா”

“அண்ணி அது” என்றவள் பேச முடியாமல் தயங்க ,

“எனக்கு ஒரு சில விஷயம் நீங்க யாருமே சொல்லாமலே தெரியும் உதயா “என்றவள் வேறு எதுவும் கூறாமல் தட்டிக் கொடுத்தாள்.

ஆதிக்கு ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

சித்ரா கூட ,”என்ன உதயா?”  என்றார் கேள்வியாக புரியாமல்,

அவள் பேச வருவதற்கு முன்பு , “ஒன்னும் இல்ல அத்தை” என்று அமைதியாகிவிட்டாள் .

தன் மருமகள் தன்னிடம் நன்றாக தான் பேசுகிறாள். எப்போது தான் வீட்டிற்கு வருவாள் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.

அவர் கையில் தட்டிக் கொடுத்தவள். “கூடிய சீக்கிரம் வருவேன் “என்றாலே தவிர, வேறு வார்த்தைகளை உதிர்க்கவில்லை.

அவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும், மருமகள் தானாக மனம் வந்து எப்பொழுது தன் வீட்டிற்கு இந்த வீட்டுக்கு உரிமையானவளாக வருவாள் என்ற ஏக்கம்  அவரை விடாமல் இல்லை. இருந்தாலும், அமைதி காத்தார் .

மருமகளாக அவளாக வர வேண்டும் என்பதற்காக, மகள் வீட்டிற்கு வந்தது போல், தன் வீட்டிற்கும் அவளது வீட்டிற்கும் வருவாள்  என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

சிரித்து பேசி மகிழ்ந்துவிட்டு கிளம்பும்போது, தனியாக அழைத்துச் சென்று ,” உதயா நீ ஏன் இன்னும் அதே நினைச்சுட்டு இருக்க சந்தோஷமா இரு” என்க .

“மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க.”

” உன் அண்ணன்ட்ட சொன்னதுதான், நீ என்கிட்ட எப்படி வேணாலும் நடந்து இருக்கலாம். நீயும் சரி , அத்தையும் சரி அன்னைக்கு அப்படி பேசினதுக்கு ஒரு காரணம் இருக்கு எனக்கு தெரியும்”

” அண்ணி !” என்று அதிர்வாக உதயா அவளைப் பார்க்க.

” எனக்கு தெரியும் உதயா. ஆனா, இப்போதைக்கு ” என்றவள் அமைதியாக.

“அப்போ நம்ம வீட்டுக்கு நீங்க போகலாம் இல்ல. நான் உங்களை அங்க இருந்து மொத்தமா அனுப்ப நினைக்கல.”

“எனக்கும் புரியுது. ஆனா, எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் அங்க போறது விஷயம் கிடையாது, இங்க வந்த மாதிரி அங்க நான் போயிட்டு ரிட்டன் வர மாதிரி இருந்தாலுமே கூட, கஷ்டம் தான். இந்த விஷயம் நடந்ததெல்லாம் நம்ம வீட்ல தான்.. நான் அங்க இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அது நினைவுல வந்துட்டு போகும், அது எதுவும் இல்லாம நான் நானா இருக்கணும்” என்றவள் வேறு எதுவும் பேசாமல் நிறுத்த,

அவளுக்கும் ஒரு பெண்ணாக புரிந்தது. அந்த வீட்டிற்கு போய் நின்றால் கூட தானும் , அம்மாவும்  அன்று பேசிய வார்த்தைகள் அண்ணியின் மனதை வண்டாக குடையும் என்பதை உணர்ந்தவள். “சரி  அண்ணி உங்க விருப்பம்” என்று வேறு எதுவும் மேற்கொண்டு பேசவில்லை.

இருவரும் வாய்விட்டு ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் உள்ளத்தால் உணர்ந்திருந்ததால் அமைதியாகி விட்டனர். அதன் பிறகு ,சுதா சொல்லிக் கொண்டு கணவன் குழந்தைகளுடன் கிளம்பியிருந்தாள்.

நேசனும், சித்ராவும் தங்கள்  வீடு நோக்கி கிளம்பி இருந்தனர்.

ஆதி அன்று வேலை இருப்பதற்கு கூறி ,நான் வர நேரமாகும் என்று மனைவியிடமும் , தாயுக்கும் போன் செய்து தான் இன்று வீட்டுக்கு வர மாட்டேன் என்பதையும் கூறியிருந்தான்.
 

அன்று சுதா சீக்கிரமாகவே வேலை விட்டு வந்திருந்தாள் வீட்டிற்கு, குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போது , தாய் வீட்டில் இருக்கவும் சுதாவை  கட்டியணைத்து கொஞ்சி முத்தமிட்டனர் .

ஆனால் ,அவளோ அதை உணரும் நிலையில் இல்லாமல் சோர்வாக இருக்க.

“அம்மா என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா ?”என்று தொட்டு பார்த்தனர் .ஆனால் ,உடல் கொதிக்க வில்லை நன்றாகத்தான் இருந்தாள். ஆனால், உடல் சோர்வடைந்து ஒரு மாதிரி இருக்க.

” என்ன ஆச்சு? என்ன பண்ணுது?” என்றார்கள்.

“ஒன்னும் இல்லடா நீங்க டியூசன் கிளம்புங்க போங்க” என கூறியிருந்தாள்.

சரி என இருவரும் ஹாலுக்கு வர,
வீட்டை சுற்றிப் பார்த்தனர். அனைத்தும் போட்டது போட்டபடி அப்படியே இருக்கவும் தாயைப் பார்க்க சென்றனர். பேசிக் கொண்டிருந்தவள் அப்படி தூங்கியும் இருந்தாள்.

குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை ,சரி அம்மா தூங்கி எழுந்து கொள்ளட்டும் என்று நினைத்தவர்கள். தாய் வீட்டில் இருப்பதால் தாயுடன் நேரம் செலவழிக்க எண்ணி ,டியூஷன் வரவில்லை என்பதை எப்படி கூறுவது என்று புரியாமல் இருக்க.

அப்போது,ஆட்டோ டிரைவர் எப்பொழுதும் போல் வீட்டிற்கு வெளியே வந்து ஹாரன் அடிக்கவும், ஆட்டோ டிரைவரிடமே கூறி அனுப்பி இருந்தனர்.

அம்மா இருப்பதால் அம்மாவுடன் இன்று ஒரு நாள் டைம் ஸ்பென்ட் பண்ண போவதாக கூறி டியூஷன் மிஸ் இடம் லீவு  சொல்லி கேட்டிருந்தனர். அவரும் சிரித்துக் கொண்டே,” சரிபாப்பா!” என்று கூறிவிட்டு, டியூஷனுக்கு சென்று விஷயத்தை கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

தாய் வீட்டில் இருப்பதால் ,ஆதிக்கு போன் செய்து அவர் கூறவில்லை. சரி ஆதி தம்பிக்கு தெரியாமலா இருக்கும்? என்று அவர் அமைதியாகிவிட்டார்.

இரவு ஏழரை மணியை கடந்துமே கூட சுதா எழுந்து கொள்ளவில்லை. குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை, அம்மா என்ன இன்னமும்  தூங்குகிறார்கள் என்று எண்ணி மீண்டும் “அம்மா” என்று அழைக்க.

அவள் எழுந்து கொள்ளவில்லை என்று மீண்டும் மீண்டும் கன்னத்தில் தட்டி எழுப்பி பார்த்தனர் அவளிடம் சிறிதும் அசைவில்லை.

குழந்தைகளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை . உடல் சுடவில்லை .ஆனால்,” ஏன்? இப்படி இருக்கிறார் “என்று புரியாமல் தாத்தாவிற்கு அழைத்து விட்டார்கள் பயத்தில்.

தந்தைக்குதான் முதலில் அழைத்தார்கள். தந்தை எடுக்கவில்லை என்றவுடன் காலையில் வேலை இருப்பதாக கூறி சென்றது ஞாபகத்திற்கு வந்தது .குழந்தைகள் இருக்கும் போது, குழந்தைகளிடமும் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தான். ஆகையால், அதன் பிறகு , நேசனுக்கு அழைத்தார்கள். அவர் போன் பிசி என்று வந்தது.

யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து சிறிது யோசித்தவர்கள். சித்ராவிற்கு அடுத்தபடியாக அழைத்திருந்தனர்.

சித்ரா ரொம்ப நாட்களுக்கு பிறகு, மருமகளிடம் இருந்து போன் வரவும், சந்தோஷமாக ” சுதா?” என்றார்.

“பாட்டி நான் மகி பேசுற “என்றான்.

” சொல்லுடா மகி கண்ணா. என்ன அம்மா போன்ல இருந்து பேசுறீங்க?  டியூஷன் போயிட்டு அதுக்குள்ள வந்துட்டீங்களா ?”

‘அவர்கள் வரும் நேரம் இன்னும் இருக்கிறதே,அவர்களுக்கு டியூஷன் முடிந்திருந்தாலும் கூட , அவர்கள் அங்கு இருந்து இங்கு வரும் நேரம் இன்னும் இருக்க கேட்டார்.அதுவும் வந்தவுடனே தாய் போனில் இருந்து  அழைக்கிறார்கள் ‘என்றவுடன் யோசனை.

“பாட்டி அது  அம்மா நாங்க வரும் போது வீட்டில் இருந்தாங்க “என்ற மகி ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தான்.

” என்னடா சொல்ற ? எம்புட்டு நேரமா அப்படி இருக்கா? மூஞ்சில தண்ணி தெளிச்சு பாத்தியா? என்ன ஆச்சு உடம்புக்கு  ஜுரமா?” என்றார் கேள்வியாக,

“தெரியலப்பாட்டி. ஆனா, அம்மா எழுப்பின எந்திரிக்க மாற்றாங்க ரொம்ப நேரமா”என்றவன்  சொல்லிக் கொண்டே , “மிது தண்ணி எடுத்துட்டு வா. பாட்டி தெளிக்க சொன்னாங்க” என்று கூறினான் .

தண்ணீர் தெளிக்கவும். சோர்வாக கண்களைத் திறந்தாலே தவிர, எதுவும் பேசவில்லை.

“பாட்டி அம்மா எதுவும் பேச மாட்றாங்க” என்று குழந்தைகள் அழுதபடி பேச,

“சரி அழாதீங்க. நீங்க அம்மா கூடவே இருங்க. நான் இப்போ தாத்தாவ கூட்டிட்டு உடனே கிளம்பி வரேன் பயப்படாதீங்க” என்று வைத்தவர் வேகமாக கணவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page