ரசிகை – 24

‘சூர்யாவைக் கொல்லப் பார்க்கிறார்களா? இது எல்லாம் என்னால்தானே? நான் திருவிழாவுக்கு போக வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தால், இது எதுவும் நடந்திருக்காது! என்னால் எல்லாவற்றையும் இழந்து விட்டு நிற்கும் அவனுக்கு இதுதான் நான் செய்யும் கைமாறா?’ என்று யோசித்து யோசித்து அதனுள் மூழ்கிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. 

“என்னடி? பயமா இருக்கா?”

“நீங்க பொய்தான சொல்றீங்க? சூர்யாவ எல்லாருக்கும் தெரியும். அப்படியெல்லாம் அவன யாரும் எதுவும் பண்ணிட முடியாது” என்று விக்கி விக்கி அழுதாள்.

“நிச்சயமா கொன்றுவாங்க! ஏன்னா அவங்க அவ்வளவு பெரிய இடம். அவங்களை எதிர்க்க நினைச்சா, சூர்யாவ மட்டும் இல்ல… அந்தத் தாத்தாவையும் கோமாவுல கெடக்குற அவன் தம்பியையும் சேர்த்து காலி பண்ணிடுவாங்க. இப்போ சொல்லு… சூர்யாவும் அவங்களும் உயிரோட இருக்கணுமா வேண்டாமா?” என வசந்தி வில்லத்தனமாக அவளது காதோரம் கேட்டாள்.

பூர்ணிமா சோர்ந்து தரையில் சரிந்தாள். ஒரு பக்கம் தன் தங்கை அபியின் உயிர்… மறுபக்கம் தன் உயிரினும் மேலான சூர்யாவின் வாழ்வு. இடையில் தன் மாமாவின் மீது விழப்போகும் அவர் பெயர்.

‘சூர்யா… நான் என்ன செய்வேன்? உண்மையைச் சொன்னா உன்னைக் கொன்னுடுவாங்கன்னு சொல்றாங்களே… உன் மேல ஒரு சின்னக் கீறல் விழுறதைக் கூட என்னால தாங்க முடியாதே! மாமா என்னை காப்பாத்திட்டு நீங்க போயிட்டீங்களே? எனக்கு பதிலா நீங்க இங்க இருந்திருக்க கூடாதா? உங்க தியாகத்துக்கு பதில் உபகாரம் செய்ய, நான் இந்த அநீதிக்குத் துணை போய்த்தான் ஆகணுமா?’

தன் பிஞ்சு மனதிற்குள் அவள் எடுத்த அந்த முடிவு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாபமாக அவளைத் துரத்தப்போகிறது என்று அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

“சொல்றேன் சித்தி… நீங்க சொன்ன மாதிரியே கோர்ட்ல பொய் சொல்றேன். சூர்யாவை மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ்… அவனை விட்டுடுங்க” என்று தேம்பி அழுதாள்.

ஐந்து லட்சம் இப்போதே தன் கைக்கு வந்துவிட்டது போல வசந்தி வெற்றிக் களிப்பில் சிரித்தாள். அன்றிலிருந்து பூர்ணிமா சூர்யாவின் வீட்டு பக்கம் போகவே இல்லை. 

அபியை, “போகாத, இங்க இரு” என்று தடுத்தாலும் அவள் கேட்கவில்லை. 

“சூர்யா… சூர்யா…” என்று அவன் பெயரை மந்திரம் போல ஓதியபடி ஓடிவிடுவாள். 

சரியாக சாப்பிடாமல் தூங்காமல் பூர்ணிமாவின் பிஞ்சு தேகம் மெலிந்து போனது. இதற்குள் ஒரு வாரம் ஓடிப்போக, கோர்ட்டுக்கு அவள் சாட்சி சொல்ல வேண்டிய நாள் வந்துவிட்டது.

நீதிபதி முன்னால் கண்கள் கலங்கி  நின்றிருந்தாள் பூர்ணி. தூரத்தில் நின்று தன்னையே உறுத்து விழித்துக் கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்தாள். அவனுக்கு ஏதோ தெரிந்து விட்டது என்று அவளுக்கு புரிந்தது! 

அருகிலேயே நின்றிருந்த தாத்தாவைப் பார்த்தாள். அவர் விழிகளில் இருந்த தைரியத்தை இன்னும் சில வினாடிகளில் உடைக்கப் போகிறோம் என்று நினைக்கும் போதே உயிர் உடைந்தது இவளுக்கு!

தன் மனதை இரும்பாக்கிக் கொண்டாள். அவனது உயிருக்காக, வாழ்நாள் முழுவதும் நிந்தனையைச் சுமக்கத் தயாரானாள்.

“மாமா… மாமாதான் வண்டியைத் தப்பா ஓட்டினாரு… அந்த லாரி மேல தப்பில்லை…”

அவள் சொல்லி முடித்த அந்த நிமிடம், கோர்ட் ஹாலே நிசப்தமானது. சூர்யாவின் முகம் அப்படியே கல்லாக மாறிற்று. அவன் கண்ட அந்த முதல் துரோகம் அது. அதுவும் அவளுக்கு சோறு போட்டு வளர்த்த தன் குடும்பத்திற்கே துரோகம் செய்துவிட்டாள். அத்தனை சுலபத்தில் ஜீரணிக்க முடியவில்லை சூர்யாவால்.

நீதிபதி தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்க, பூர்ணிமா அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினாள். வசந்தாவையும் அவளையும் அந்த இன்ஸ்பெக்டரே ஒரு சொகுசு காரில் ஏற்றி வழியனுப்பினார். கார் நகரத் தொடங்கிய போது, ஜன்னல் வழியாகச் சூர்யாவைப் பார்த்தாள். அவனது விழிகளில் தெரிந்த அந்த வெறுப்பும், ஏமாற்றமும் அவளைக் கொன்று கொண்டிருந்தன.

‘உன்னைக் காப்பாத்தத்தான்டா இவ்வளவு பெரியப் பழியைச் சுமக்கிறேன். என்னை மன்னிச்சிடு சூர்யா…’ என்று மனதிற்குள் கதறினாள். ஆனால் அன்று சூர்யாவின் கண்களுக்கு தெரிந்தது அவளது துரோகம் மட்டுமே! தன் தந்தை, தாயின் மரணத்திற்கு நீதி கிடைக்கவிடாமல் செய்த அந்த துரோகியின் முகத்தைப் பார்க்கும்போதே அவன் ரத்தம் கொதித்தது.

“பூர்ணிமா! இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு, மொத்தமா உனக்கு ஒரு நாள் வட்டியும் முதலுமாத் திருப்பித் தர்றேன். அன்னைக்கு நீ என் கால்ல விழுந்து கெஞ்சுவ பாரு…” என்று அந்தச் சின்ன வயதிலேயே தன் நெஞ்சில் நெருப்பை ஏற்றிக்கொண்டான்.

அன்று இரவு பூர்ணிமாவின் வாழ்க்கையில் இன்னொரு பேரிடி விழுந்தது. ஐந்து லட்சம் பணத்தோடு வசந்தா தன் கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு ஓடிவிட்டாள். தந்தை தங்கதுரை எப்போதுமே ஒரு தனி உலகத்தில் வாழ்பவர். முதல் மனைவியின் மரணம், இரண்டாவது மனைவியின் துரோகம், சிதறிப்போன குடும்பம் அனைத்தும் அவரை பித்தனாக்கியது.

இரு பெண் குழந்தைகளையும் அப்படியே தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். ராசம்மாள் பாட்டி ஏற்கனவே தன் மூத்த மகன் பிரபாவிடம் ஒட்டிக்கொண்டுதான் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். இரண்டாவது மகனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று புலம்பிக்கொண்டிருக்க, இப்போது சுமையாக இரண்டு பெண் பிள்ளைகளை வேறு தந்து விட்டானே என்ற வருத்தம் அவருக்கு!

“ஏன்டா தங்கதுரை? நீயா ஒருத்தியை தேடிப் பிடிச்சு காதலிச்சு கல்யாணம் பண்ணி அவள எமன்கிட்ட தூக்கி கொடுத்த. சரி, ஒரு பொம்பள பிள்ளையோட நிக்கிறியே… பாவமேனு நாங்க இன்னொருத்தியை பார்த்து கட்டி வச்சோம்‌. இப்ப என்னடான்னா அவளை இன்னொருத்தனோட அனுப்பி வச்சிட்டு, இதுங்க ரெண்டையும் என் தலையில கட்டுற? இதுகளுக்கு யாரு நல்லது கெட்டதெல்லாம் பார்க்கிறது? இதுக்கு கல்யாணம் வேண்டாம்னு அப்பவே ஒத்த கால்ல நின்னுருக்க வேண்டியதுதானே? காலம் போன கடைசியில என்னால எப்படி இந்த பொம்பள பிள்ளைகளை கரை சேர்க்க முடியும்? அதுலயும் ஒன்னு அரைகுறை வேற…” என்று வாய்க்கு வந்தபடி பேசினார். 

கதவு ஓரத்தில் நின்று கொண்டு தன் தங்கையின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் அழுது அங்கிருப்பவர்கள் வாயில் விழ வேண்டாம் என்று அமைதி காத்தாள்.

தங்கதுரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கும் இந்த பிள்ளைகள் வேண்டாம்! என்று உறுதியாக நிற்பது அவன் முக பாவணையில் எல்லோருக்கும் புரிந்தது.

அவரின் அண்ணன் பிரபா தலையில் அடித்துக் கொள்ள, மங்கையின் முகமோ அஷ்டகோணலானது. 

“இங்க பாருங்க கொழுந்தனாரே, ஏற்கனவே எங்களுக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க. அவங்க படிப்பு செலவுக்கே எங்களால பணம் போட்டு முடியல. இதுல உங்க பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு  படிக்க வைக்கிறதெல்லாம் எங்களால முடியாது. வேணும்னா ஏதாச்சும் ஆசிரமத்துல சேர்த்து விட்டு போங்க…” என்று முகத்தில் அடித்தார் போல கூறிவிட்டாள்.

அது ஏனோ ராசம்மாள் பாட்டியின் நெஞ்சை உருத்தியது. ஆயிரம் தான் இருந்தாலும் அவ்விருவரும் தங்கள் வீட்டு வாரிசு! அதிலும் பெண் பிள்ளைகள் வேறு. சமுதாயத்தில் பெண் பிள்ளைகளுக்கு அவ்வப்போது நிகழும் அவலங்கள் பற்றி அவருக்கு தெரியாதா?

எனவே, “விடு மங்கை, வீட்டு வேலை பார்த்துட்டு ரெண்டும் ஓரஞ்சாரமா இருந்துட்டு போகட்டும்…” என்றார்.

மங்கை கூட அந்த சமயத்தில் வீட்டு வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்த காரணத்தால், “நீங்க சொல்றதால ஒத்துக்குறேன் அத்தை. அதுக்கு மேல எதையும் எங்க கிட்ட எதிர்பார்க்க வேண்டாம் பார்த்துக்கோங்க” என்று கட் அண்ட் ரைட்டாக பேசினாள்.

“என்னவோ பண்ணுங்க, நான் கிளம்புறேன்” என்று தலைமுழுகி விட்டு தப்பித்து ஓடினார் தங்கதுரை. ‌

பூர்ணிமாவுக்கு வீட்டு வேலைகளை பட்டியலிட்ட மங்கை, “உன் தங்கச்சிய, கொல்லையில இருக்கிற திண்ணையிலயே போட்டு வை. அவள மாதிரி ஆளெல்லாம் நடு வீடு வரைக்கும் நடமாடிட்டு இருக்கக் கூடாது!” என்று முதல் கட்டளையிலேயே, பூர்ணிமாவின் இதயத்தை ரெண்டாக உடைத்து விட்டார்.

பெற்ற தாய் தந்தையே வேண்டாமென தூக்கி எறிந்த பிள்ளைகளுக்கு, மற்றவர்களை எதிர்த்து பேசிட துணிவு வருமா? இதுதான் விதி, இனி யார் என்ன பேசினாலும் கண்டும் காணாமல் இருந்தாக வேண்டும்! என்று மனதிற்குள் பதிய வைத்தாள் பூர்ணிமா.

பள்ளிக்கூடம் போயிருக்க வேண்டிய கைகளில் துடைப்பமும், கரண்டியும் வந்து சேர்ந்தன. தங்கை அபியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பூர்ணிமா ஒரு வேலைக்காரி போல அடங்கிப்போனாள். பெரியம்மாவின் வசவுச் சொற்களும், அடிகளும் அவளுக்குத் தினசரி பழக்கமாகின.

இவர்கள் தான் இப்படி என்றால், அபி அவளை அந்த சம்பவத்திற்கு பிறகு அடியோடு வெறுத்துவிட்டாள். அவள் செய்யும் சேவைகளையே வேண்டா வெறுப்போடு ஏற்பாள்.‌ ஒரு நாள் ஒரு பொழுது கூட பூர்ணியிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. இத்தனை இன்னல்களுக்கு மத்தியில் பூர்ணியின் ஒரே ஆறுதல் என்பது, சூர்யா அடுத்தடுத்து கிரிக்கெட்டில் முன்னேறிச் செல்வது மட்டுமே!

நியூஸ் பேப்பரில் அவன் புகைப்படங்களை ஆர்வமாய் தேடி ரசித்து வருடிப் பார்ப்பாள். செய்தி சேனலில் அவன் பெயர் கேட்டால், செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து விழி விரித்து பார்ப்பாள். கனவிலும் கற்பனையிலும் அவன் கை கோர்த்து நடந்த நாட்கள் அநேகம்! 

பருவ வயதுக்கு வந்ததும் பக்கத்து வீட்டு அக்காவிடம் டெய்லரிங் கற்றுக் கொண்டாள். பூர்ணியின் மீது காதல் கொண்ட முத்து, அவளுக்கு ஆதரவாய் அடிக்கொரு முறை வந்து நின்றான். அவன் உதவியால் ஒரு கடையை போட்டு, வருமானம் பார்க்க ஆரம்பித்தாள். அப்போதும் தனக்கென எதுவும் சேர்க்காமல், தங்கைக்காகவே எல்லாம் செய்தாள்…

இதற்குள் சூர்யா புகழின் உச்சிக்கு வந்துவிட்டான். பாலாஜியை உடன் வைத்துக் கொண்டு அவ்வப்போது அவளுக்கு அச்சுறுத்தல் தந்து விளையாடுவான். உடம்பில் உயிரைத்தவிர வேறெந்த உணர்வும் இல்லாத அவளுக்கு, அவன் அச்சுறுத்தல் வலிக்கவா போகின்றது?

இந்த வழியிலாவது அவனை என்னால் பார்க்க முடிகிறதே என்று‌ ஆறுதல் கொண்டாள் பெண் மயில்!

மொத்த கதையையும் சொல்லி முடித்துவிட்டு மூச்சு வாங்கியவளிடம், “முட்டாளாடி நீ? இதை அப்பவே எங்கிட்ட சொல்லியிருக்கலாமே?” என்று ஆவேசப்பட்டான் சூர்யா.

“சொல்லியிருந்தா இப்ப நீ உயிரோட இருந்திருக்க மாட்ட…” என்றவளது காதலின் ஆழம் அவனை அடியோடு சாய்த்திருந்தது.

“உனக்கு எதுவும் ஆகக்கூடாது சூர்யா, நீ நூறு வருஷம் நல்லா இருக்கணும்‌. குடும்பம் குழந்தைனு நீ சந்தோஷமா வாழணும்டா. எனக்கு உன்னை தூரத்துல இருந்து பார்த்துக்குற திருப்தியே போதும். வேற எதுவும் வேணாம்! வேற எதுவுமே வேணாம் சூர்யா!” என்று‌ கதறி அழுதாள். அந்த அழுகை வழியே அவளின் இத்தனை வருட மன அழுத்தம் வெளிவந்தது.

பத்து வயது குழந்தைக்கு இத்தனை மனசிக்கல்கள் அதிகம்… துயரத்தை தோள் கொடுத்து தாங்கிக் கொள்ளக்கூட, துணைக்கு யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட பேதையவள், இன்று வரை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே பேரதிசயமன்றோ!

பூர்ணிமா விழியில் இருந்து வழிந்த ஒவ்வொரு கண்ணீர் துளியும், சூர்யாவின் இதயத்தில் அமிலமாக இறங்கியது. அவளது நடுக்கத்தை நிறுத்தும் விதமாக, சட்டென அவளைத் தன் கரங்களுக்குள் சிறை பிடித்தான். 

“சூர்யா… நான்…” என்று அவள் ஏதோ சொல்ல முயல, அவனது சுட்டு விரல், அவளது இதழின் குறுக்கே வந்து நின்று பேச்சைத் தடுத்தன.

சுண்டு விரலால் அவளது பட்டுக் கன்னத்தை தொட்டு வருடியவன், ஈரம் படந்த அவள் இதழ்களை உற்றுப் பார்த்தான். அவை இரண்டும் அவனை மந்திரம் போட்டு தன் பக்கம் இழுக்க, தன் இரு கரம் கொண்டு அவள் கன்னங்களை மென்மையாக ஏந்தினான். 

அவனது பார்வை தனது இதழ்களில் நிலைப்பது புரிய, அவளது மூச்சுக்காற்றின் வேகம் அதிகரித்து, அது அவன் முகத்தில் அனலாகத் தெறித்தது. மெல்லத் தலை குனிய முனைந்தாள், அதற்குள் அவள் இதழோடு இதழ் கோர்த்தான். 

ஆரம்பத்தில் மென்மையாகத் தொடங்கிய அந்த முத்தம், அடுத்த நொடியே பிரிந்திருந்த இரு காதலர்களின் ஆவேசமானச் சங்கமமாக மாறியது.

அந்த ஒரு முத்தத்தின் வழியே, ‘இனி உனக்கென நான் இருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தான் சூர்யா.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page