லவ் லாக் 🔐
சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.
மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.
‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.
படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது.
‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி இருப்பாங்க’ என்று பிரித்வியின் மனசாட்சியே அவன் மானத்தை கப்பலேற்றி அழகு பார்க்க, அதை அடக்கிவிட்டு நிமிர்ந்த வாக்கில் நடந்தான்.
மேய்ப்பனற்ற ஆடுகளாய், மேடையைச் சுற்றி மனிதர்கள்…
‘பார்வ கற்பூர தீபமா, ஸ்ரீ வள்ளி…
பேச்சே கல்யாணி ராகமா?!?!’
சித் ஸ்ரீராம் செல்போன் அழைப்பொலி வாயிலாக தொண்டை கிழிய கத்தியதும், பிரித்வி வேகமாய் அழைப்பை எடுத்தான்.
அவனது நெருங்கிய நண்பன் சுதீப், “டேய், எங்கடா இருக்க?” என்றான்.
“மண்டபத்துக்குள்ள வந்துட்டேன் மச்சான், நீங்க எங்க இருக்கீங்க?” என்றான் இவனும்.
“மண்டபத்துக்கு பின்னால சாப்பிடுற இடத்துல இருக்கோம், இங்க வா…”
அந்த வார்த்தையால் மனதிற்குள் மகிழ்ந்த பிரித்வி, “இதோ வர்றேன்…” என்று உற்சாக பதில் சொல்லிவிட்டு, எட்டி நடையைப் போட்டான்.
நவீன வகை மண்டபமாதலால் சாப்பாடு திறந்த புல்வெளிதனில், பஃபெட் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆங்காங்கு மட்டுமே ஆட்கள் இருக்க, அதில் தன் கூட்டத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை பிரித்விக்கு.
ஆழிக்குமிழியாய் அவனை அப்படியே தனக்குள் இழுத்துக் கொண்டது அந்த கூட்டம்.
ஆண்பிள்ளைகள் கூட்டு சேர்ந்துவிட்டால் அங்கே அரட்டைக்கு பஞ்சமேது? ஒவ்வொரு நொடிக்கும் ஒரு முறை சிரித்து மாய்ந்தனர்.
“டேய், பரிசு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க, வாங்கடா” என்றொருவன் குரல் கொடுக்க, பேச்சுவார்த்தையை அதோடு முடித்து விட்டு மேடை நோக்கி கிளம்பியது நம்கூட்டம்.
அங்கே, உறவுக்குடும்பம் எனும் பெயரோடு மேடை ஏறிய எட்டுபேரை, மண மக்களோடு சேர்த்து போட்டோ பிடிக்க வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் கேமராமேன்.
‘இவர்களோ பனிரெண்டு பேர், இதில் நாமும் ஏன் பதிமூன்றாம் வேதாளமாய் தொங்கிக் கொண்டு நிற்க வேண்டும்?’ என்றெண்ணிய பிரித்வி,
“சுதீப், நான் போட்டோ எடுக்க வரலை. வெளியில இருக்கேன், நீங்க முடிச்சிட்டு வாங்க…” என்றான்.
அவனைப் போலவே மற்றவர்களும், இந்த பிரச்சனையைப் பற்றி யோசித்திருக்க வேண்டும் போலும். எந்தவித வற்புறுத்தலும் இல்லாமல் தலையாட்டி சம்மதித்துவிட்டனர்.
வெற்றிலையாய் இதழ் விரித்துச் சிரித்தவன், அது கருகும் முன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
வெளியே வந்த பிரித்விக்கு அவ்வளவு நேரம் அடக்கிவைத்திருந்த பசி உணர்வு, ஆங்காரத்தோடு தன் விஸ்வரூபத்தை காட்டத் தொடங்கியது.
‘பொறுத்தது போதும், புசித்துவிடலாம்…’ எனும் முடிவோடு, உணவுப் பதார்த்தங்களை அடுக்கி வைத்திருக்கும் இடத்திற்குப் போனான்.
வெள்ளை நிற பீங்கான் தட்டு, அவனைப்போலவே சந்தோஷமாய் பல்லைக்காட்டி சிரித்தது. செரிமானத்திற்கென முதலாவதாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழத்துண்டுகளையும், பச்சைக் காய்கறிகளையும் கடைக் கண்ணாலும் காணவில்லை அவன்.
சுடச்சுட பொரித்தெடுக்கப்பட்ட பூரியையும், சன்னா மசாலாவையும் தட்டில் வைத்துக்கொண்டு, காலிஃப்ளவர் நோக்கி கரம் நீட்டினான்.
“ஸ்ஆ… சார்… அறிவில்ல…” என்று தேனினும் இனிய பெண் குரல், அவன் பின்னால்.
‘யார திட்டுறாங்க?’ என்று யோசித்தபடியே திரும்பினான்.
அப்சரஸ் போன்ற அழகு தேவதை, அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் முறைத்துக் கொண்டு நின்றது.
‘ப்பா… என்னா அழகு?’ என்று சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் அவன் மனம் அந்த தேவதைப் பெண்ணை பாராட்டிற்று.
“கால எடுங்க…” என்றவள் திட்டிய பிறகுதான், துரைக்கு இவ்வளவு நேரம் தன் பாதங்களுக்குக் கீழ் அவள் துப்பட்டா சிக்கி கொண்டிருப்பதே தெரிந்தது.
“ஐயோ, சாரிப்பா… சீ, சாரிங்க…” என்று பதறிச் சிதறுபவனைப் பார்த்து, பாவையின் மனதிற்குள் பாவ உணர்வு தோன்றிவிட்டது போலும்.
அவனை ஏற இறங்க பார்த்தபடி, “பார்த்து நடங்க சார்” என்றவள் அதற்குமேல் பேச்சுவார்த்தையை வளர்க்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
அத்தோடு அவனை மறந்தும் விட்டாள்…
பிரித்விக்குதான் அடுத்த சில நிமிடங்களுக்கு அவளைவிட்டு கண்களை, அகற்றவே வெகு சிரமமாகிப்போனது. கையும் வாயும் அது போக்கில் தன் வேலையை செய்வது போல, கண்களும் அவன் கட்டுப்பாட்டை மீறி அடிக்கடி அவளைப் பார்த்துவிட்டு வந்தது.
அந்த தேவதைப் பெண், குருவி கூட்டத்து குழந்தை போலும்…
பேருக்கு கொஞ்சமாய் கொரித்துவிட்டு, சாப்பிட்டு முடித்ததன் அடையாளமாய் டிஸ்யூ பேப்பரால் தன் ரோஜா வண்ண இதழ்களை மென்மையாய் ஒற்றினாள்.
‘அவ்வளோதானா? முடிஞ்சதா?’ எனும் வருத்தம் இவனுக்குள்…
கடுகின் துளை வழியே காட்டாற்றை கடத்தும் காதல், அவனுக்குள்ளும் தன் ஆதிக்கத்தை ஆரம்பித்திருந்தது.
ஐஸ்கிரீம் இருக்கும் பக்கம் அவள் அன்ன நடை நடந்து போக, கையை கூட துடைக்க மறந்து அவள் பின்னால் போய் நின்றான் பிரித்வி.
சின்ன சிரிப்புடன், “பட்டர் ஸ்காட்ச் ஃப்ளேவர்…” என்றவள், தனக்கானதை வாங்கிக் கொண்டு நகர,
நிச்சலனத்தை உடைக்கும் வீரியக் குரலில், “எனக்கும் ஒரு பட்டர் ஸ்காட்ச் கொடுங்க” என்றான் இவனும்.
வெடுக்கென திரும்பியவள், அவன் முகத்தில் ஒரு நொடி தன் பார்வையை ஊன்றி நிறுத்தினாள். மேற்கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் தலை தாழ்த்திக் கொண்டான் அவன்.
பெண்ணவள் தன்னை முறைப்பது, பிள்ளைக்கு பெருந்துயர் போலும்…
“தனியாவா வந்திருக்கீங்க?”
அவள் குரல்தான்…
தேவதை தன்னிடம் பேசுகிறாள் என்று தெரிந்ததும், அவன் முகத்தில் தவுசன் வாட்ஸ் பல்ப் எரியத் துவங்கியது.
“ப்ரெண்ட்ஸோட வந்தேன்” என்றான் பெருமையாய்.
“யாரையும் காணும்?”
“கிஃப்ட் கொடுக்க உள்ள போயிருக்காங்க…”
“நீங்க போகலையா?”
“இல்லீங்க, ஆக்சுவலா இந்த கல்யாணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மாப்பிள்ளை என் ப்ரெண்டு சுதீப்க்கு முன்னாள் ப்ரெண்டு. அவன் சும்மா கம்பெனிக்கு வாடானு என்னை வற்புறுத்தி கூப்பிட்டான். நானும் வந்துட்டேன்…” என்று கூறிவிட்டு தோள்களைக் குலுக்கினான்.
கடலை விழுங்கிவிட்டு கவிழ்ந்து கிடக்கும் மலைப் பாம்பாய், அவன் வார்த்தைகளின் பின்புலம் நீண்டு கிடந்தது…
“நானும் உங்கள மாதிரிதான், இந்த கல்யாணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொண்ணு என் அக்காவோட க்ளோஸ் ப்ரெண்ட், அவ இப்போ வெளிநாட்டுல இருக்கா. இங்க வர முடியாத சூழ்நிலை, அதனால அவளுக்கு பதிலா நான் வந்திருக்கேன்.”
சலசலக்காத ஆற்றைப் போலிருந்தது அவள் பேசும் பாங்கு…
“கூல், உங்க அக்கா பேர் என்ன?”
“சந்தியா, ஏன் கேக்குறீங்க? அவள உங்களுக்கு தெரியுமா?”
இதழ் பிதுக்கிய பிருத்வி, “நேரடியா உங்க பேரை கேட்க சங்கடமாயிருந்தது. அதான் அக்காவிலிருந்து ஆரம்பிக்கலாமேனு…” என்றான் மன்மத சிரிப்போடு.
“ஓ… சாரி, நாம இன்னும் பேர் சொல்லிக்கவே இல்ல, ஐ ஏம் ஷ்ராவ்யா” என்றபடி நட்போடு கை நீட்டினாள்.
அப்போதுதான் பிரித்வி, அவள் சிரிப்போடு சேர்ந்து சிரித்திட்ட அவளின் கன்னக்குழியினைக் கண்டான். உயிராழம் உணர்ந்ததைப் போல, உறைந்து நின்றது அந்த ஆண் மனம்.
“ஹலோ… நான் ரொம்ப நேரமா கைநீட்டிட்டு இருக்கேன்” எனும் அறிவுறுத்தலுக்குப் பிறகு,
“ஹான்… நான்… பிரித்வி…”
ஏகப்பட்ட திணறலுக்கு பிறகு, ஒரு வழியாய் தன் பெயரைச் சொல்லி விட்டான்.
செம்மஞ்சள் தூரிகை விரலாளை தீண்டி திரும்பியதால், அவன் வலக்கரத்தினை வெம்மையும் குளுமையும் விட்டுவிட்டு அறைந்தது.
“வாங்க, உட்கார்ந்து பேசலாம்” என்றவள் அவன் பின்னால் வருகிறானா இல்லையா என்பதைக் கூட காணாமல், அருகிலிருந்த டேபிளுக்குப் போய் அமர்ந்து கொண்டாள்.
ரெக்கை இல்லாமல் பறந்த பிரித்வி, அவள் பாதச்சுவடுதனை பற்றி நடந்தான்.
அன்னப் பறவையின் அலகு போலிருந்த குட்டி ஸ்பூனால், ஐஸ்கிரீமை எடுத்து தன் இதழுள் ஒளித்தாள். அது மெதுமெதுவாய் அவள் தொண்டைப் பகுதியை கடந்து கீழே இறங்குவது, பிரித்வியின் கண்களுக்கு தெளிவாய் தெரிந்தது.
பேரதிசயம் காணும் பிள்ளைபோல, இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரித்வி.
“ம்… சாப்பிடுங்க, ஐஸ்கிரீம் உருகுது” என்றதும்தான் தன் கையில் ஐஸ்கிரீம் இருக்கும் ஞாபகமே அவனுக்கு வந்தது.
அவளைப் போலவே, அவனும் தன் கையில் இருந்த குட்டி ஸ்பூனால் கொஞ்சமாய் ஐஸ்கிரீமை அள்ளி உள்ளே போட்டான். அது வழக்கத்தைக் காட்டிலும் இன்று ஏனோ அதீத தித்திப்பாய் திகட்டியது.
அவள் அவன் அருகில் இருப்பதால் இந்த மாறுதலா?! இருக்கலாம்…
அண்டவெளிகளுக்கு அப்பால் பறந்து கொண்டிருந்த அவன் மனதினை, “என்ன பண்றீங்க நீங்க?” எனும் அவள் கேள்வி, தரையில் தலை குப்புற தள்ளி விட்டது.
“நான்… நான் வந்து… நான் ஒரு…” என்று இழுத்தான்.
அவன் தடுமாற்றம் கண்டு மீண்டும் கன்னக்குழி தரிசனம் காட்டிய ஷ்ராவ்யா, “புரியுது, புரியுது…” என்றாள்.
அவமானத்திற்கும் அன்பிற்கும் நடுவில் சிக்கிக் கொண்ட பிரித்வி, பின்னந் தலையைக் கோதி தன்னைத்தானே சமப்படுத்திக் கொண்டான்.
“எனக்கு ஒரு சின்ன உதவி, அந்த பேக்ரவுண்ட் ரொம்ப அழகா இருக்கு. ஆனா என்னால செல்ஃபி மட்டும் தான் எடுக்க முடியுது, எனக்கு ஒரு ஃபுல் கவரேஜ் ஃபோட்டோ வேணும். எடுத்து தர்றீங்களா?”
அவமானத்தை அந்த நொடியே தூக்கி எறிந்த பிரித்வி, “ஷ்யூர்…” என்றான் முகம் கொள்ளா புன்னகையோடு.
அவள் கேட்ட இடத்தில், கேட்ட விதத்தில் சிலபல ஃபோட்டோக்களை அவன் எடுத்துக்கொடுக்க, வந்த கடமை முடிந்ததென்ற தோரணைக்கு வந்துவிட்டது அவன் தேவதை.
“ஓகே, டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்…”
“எதுல போறீங்க?”
“அது…” என்று ஓர் நொடி யோசித்தவள், “கேப் புக் பண்ணி போறேன், நீங்களும் வரப்போறீங்களா?” என்றாள்.
“இல்ல, வண்டி வர்ற வரைக்கும் துணைக்கு இருக்க நினைச்சேன்.”
அவன் கண்கள் கெஞ்சிக் கொஞ்சுவது கண்டு இன்னொரு முறை கன்னக்குழி காட்டியவள், “சரி வாங்க…” என்று சம்மதம் தந்தாள்.
பிரித்விக்கு விண்ணில் எகிறி குதித்து, நிலவோடு ஒரு ஹைபை அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் நாகரிகம் கருதி ஆசையை அடக்கிக் கொண்டு அமைதியாய் நடந்தான்…
இருவரும் இரைச்சல் ததும்பும் மண்டபத்தினை விட்டு வெளியேறினார்கள். நான்கு கால் பாய்ச்சலில் ஓடும் வாகனங்களின் இன்னிசையை கேட்டபடியே மெதுவாய் நடந்தாள் அவள்.
‘அவள் எங்கு போகிறாள்?…’ என்றெல்லாம் யோசிக்க தோன்றவில்லை அவனுக்கு.
‘இந்த நொடி என் இதயத்தினுக்கு இன்பம் வேண்டும்…’ எனும் பேராவலோடு இணைந்து நடந்தான்.
தடதடக்கும் சப்தத்தோடு உருண்டு வந்த அரசுப் பேருந்து, தரையூரும் புழுவாய் டயர் தேய்த்து நின்றது.
உலக சுற்றுச்சூழலுக்கு தன்னால் முடிந்த உபத்திரவமாய், கண்டபடி கருவண்ண புகையைக் கக்கிட, அதுவரை பாதம் நோகாது நடந்து கொண்டிருந்த பாதசாரிகள், பயந்தடித்து ஓடினார்கள்.
சிக்கிக் கொண்ட சிற்றெலியாய் பிரித்வியும் ஷ்ராவ்யாவும் முன்னும் பின்னும் முட்டிக்கொள்ள, இதற்குள் கரும்புகை காற்றெங்கிலும் கலந்துவிட்டது.
அதன் நெடி தாங்காது ஷ்ராவ்யா இருமிட, பிரித்வி அவசரமாய் தன் கர்சீப் எடுத்துக் கொடுத்தான். பேருந்தை விட்டு சில அடி தூரம் தள்ளிப் போன பிறகுதான், அவளால் சகஜமாய் மூச்சுவிட முடிந்தது.
“ஆர் யூ ஓகே?”
“நெஞ்சு எரியுது…”
சாலையின் இருமருங்கிலும் பார்வையை ஓட்டிய பிரித்வி, “அங்க பாரு ஜூஸ் கடை, வா உனக்கொரு லெமன் ஜுஸ் வாங்கி தர்றேன்…” என்றான்.
தன் நெஞ்சுக்குள் தகிக்கும் தீயை தாங்க முடியாமல் தவித்தவளுக்கு, அவன் காட்டும் அக்கறைக்கு இணங்கி தலையாட்டத்தான் தோன்றியது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் அவள் கையில் லெமன் ஜூஸ் இருந்தது…
குடிக்காமல் கை மாற்றிக் கொண்டே இருந்தவளிடம், “ஏன் இன்னும் குடிக்கல? ரொம்ப குளிருதா?…” என்றான் பிரித்வி.
“இல்ல, உங்களுக்கு இன்னும் ஜூஸ் தரலையே, அதான் வெயிட் பண்றேன்.”
“எனக்கு எதுவும் சொல்லல, உனக்கு மட்டும்தான் சொன்னேன்.”
“ஏன்?”
அவள் காதருகே குனிந்துவந்த பிரித்வி, “எங்கிட்ட அவ்வளவுதான் காசு இருந்ததுமா” என்றான் ரகசியமாய்.
விலுக்கென தலையை நிமிர்த்தியவள், “எங்கிட்ட சொல்லி இருக்கலாம்ல?” என்றாள் சற்றே கோபமாய்.
“சொல்லி இருக்கலாம்… ஏன், என் ப்ரெண்டுட்ட சொல்லி ஜிபே மூலமா பணம் கட்டச்சொல்லி ரெண்டு ஜூஸ் வாங்கி இருக்கலாம். ஆனா அது நான் உனக்காக செஞ்சேன்ற சந்தோஷத்தை எனக்கு தராது… என்னால என்ன முடியுமோ அதை செஞ்சுட்டேன், நவ் பிரித்வி ஹேப்பி” என்று கண் சிமிட்டினான்.
கடைக்காரரிடம் இன்னொரு டம்ளர் கேட்டு வாங்கிய ஷ்ராவ்யா, தன் ஜூஸில் பாதியை அந்த டம்ளருக்கு மாற்றி ஊற்றினாள்.
துருவிய தேங்காய் போல் பல்லைக்காட்டிச் சிரித்த பிரித்வி, “ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது உனக்கு…” என்றான்.
“பின்ன? நீங்கபாட்டுக்கு ஜூஸ் வாங்கித் தந்து என்னை கடத்திட்டு போயிட்டீங்கனா? மரியாதையா பாதி குடிச்சு ப்ரூஃப் பண்ணுங்க.”
“ஐடியா நல்லாயிருக்கு, ஆனா கடத்திட்டு போகக்கூட காசில்லனு நினைக்கும் போது…” என்றவன் சிவாஜி போல நடித்துக் காண்பிக்க, சிரித்து தீர்த்தாள் ஷ்ராவ்யா.
மீண்டும் அவர்களின் பாதையாத்திரை தொடர்ந்தது.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, “என்ஜினியரிங் படிச்சீங்களாக்கும்?” எனக் கேட்டது அவன் தேவதை.
“இல்ல, எம்பிஏ… ஏகப்பட்ட அரியர்ஸ் தாண்டி வந்ததால நல்ல வேலை கிடைக்கல. போனவாரம் ஒரு காலேஜ்ல டெம்ப்ரவரி லெக்சரா மூணு மாசம் வர்றியானு கேட்டாங்க, எதுவும் இல்லாம இருக்குறதுக்கு இதுவாச்சும் கிடைக்குதேனு ஓகே பண்ணிட்டேன். நாளைக்குதான் ஜாயின் பண்றேன்…”
“எந்த காலேஜ்?”
“ஜேபிஎஸ் காலேஜ்…” என்றிட, அவள் கால்கள் மண்ணோடு வேர் பிடித்தது போல் நின்று விட்டது.
அதை கவனித்துவிட்ட பிரித்வி, “என்னாச்சு?” என்றான்.
தன் தடுமாற்றத்தை மறைத்துக்கொண்டு, “ஒண்ணுமில்ல” என்றாள்.
ஆனால் அவள் பார்வை தன் கண்களோடு மோதாது, தரையில் தவழ்வதைப் பார்த்து, “ஹேய் ஷ்ராவ்யா, நீ அந்த காலேஜ்லதான் படிக்கிறியா?” என்றான்.
அவன் குரலில் இருந்த குஷி உணர்வு, அவள் முகத்தின் தசைகளில் வீணை மீட்டி விளையாடிற்று.
“என்ன டிபார்ட்மெண்ட்?”
“அது… அது வந்து…”
“சும்மா சொல்லுமா…”
“பிபிஏ, ஃபைனல் இயர். ப்ளீஸ், நாம இங்க பேசினதை அங்க போட்டுக் கொடுத்துடாதீங்க சார்.”
“கொஞ்சம் யோசிக்கணுமே…” என்று வில்லத்தனமாய் தாடையைத் தேய்த்தான்.
“வேணும்னா லஞ்சமா நான் உங்களுக்கு ஒரு ஜூஸ் வாங்கி தரவா?”
“ஜூஸ் வேண்டாம், உன் நம்பர் தர்றியா?” எனக் கேட்டதும் அவள் முகம் சட்டென்று மாறிவிட்டது.
“விருப்பமில்லனா வேண்டாம்…” என்றான் அவனும்.
அநித்திய மனதோடு, “டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்” என்ற ஷ்ராவ்யா, எதிரில் இருப்பவன் பதிலுக்கு காத்திராமல் முன்னால் நடந்து சென்றாள்.
“ஷ்ராவ்யா… என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு கோபம்?”
பதில் சொல்லாது விலகிப் பறந்தது அவனின் தேவதை.
அந்தரத்தில் ஆடும் மனதோடிருந்த பிரித்வியும், அதற்கு மேல் அவளைப் பின் தொடராமல் நின்றுவிட்டான்.
தூரத்தில் அவளருகே ஒரு கார் வந்து நின்றது. இறுதியாக ஒருமுறை இவனைத் திரும்பிப் பார்த்தாள்.
ஏக்கம் ததும்பும் விழியோடு இவனும் அவளைப் பார்க்க, தலையைச் சிலுப்பியபடி விரைந்தேறிச் சென்றுவிட்டாள்.
‘காதலெனும் கடவுள் நிச்சயம் இருவரையும் இனி அடிக்கடி சந்திக்க வைப்பான்’ எனும் மன உறுதியோடு பிரித்வியும் புறப்பட்டான்.
அடுத்தநாள் அவள் பயிலும் கல்லூரிக்குள் நுழைந்தான்.
புனலாடும் கயல் போல, வழிநெடுக அவள் முகம் காணத் தவித்தது அவனின் கண்கள்…
அவன் மனசாட்சி, ‘கண்டிப்பா எங்கேயாவது ஒளிஞ்சு நின்னு என்னை பார்த்துட்டு இருப்பா…’ என கூப்பாடு போட்டது.
எங்கு தேடினும் அவள் கிடைக்காது போக, சோர்ந்த முகத்தோடு முதல்வர் அறைக்குச் சென்றான்.
“வாங்க பிரித்வி, உங்கள காலேஜ் ஃபவுண்டரும் பார்க்கணும்னு சொன்னாங்க. முதல்ல அவங்கள பார்த்துட்டு வந்திடுங்களேன்…” என்று அடுத்த அறைக்கு வழியனுப்பி வைத்தார்.
அந்த அறை வாசலில் உட்கார்ந்திருந்த பெண் உதவியாளர்(பிஏ), “நீங்கதான் புதுசா வந்திருக்கிற ப்ரொபசரா?” எனக் கேட்டாள்.
“எஸ் மேம், சாரை பார்க்க முடியுமா?”
“இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நீங்க உள்ள சேர்ல உட்காருங்க, நான் இன்ஃபார்ம் பண்றேன்…” என்றவள் அருகிலிருந்த ஆதிகால டெலிபோனுக்குள் தன் காதினைக் கொடுத்தாள்.
‘எனக்காகவா? ஏன்? இன்டர்வியூ இல்லனு சொன்னாங்களே?! ஃபார்மாலிட்டிக்காக ஒரு சில கேள்வி கேட்பாங்களா இருக்கும்…’ எனும் எண்ணச் சுழற்சியோடு உள்ளே சென்றான்.
டேபிள் மேல், ‘சத்ய நாராயணன்’ எனும் பெயரோடு பலவிதமான டிகிரிகள் இடம்பிடித்திருந்தது.
‘ஃபவுண்டர் பெரிய படிப்பாளி போல’ என்று எண்ணிய பிரித்வி, தன் ஆடையின் மடிப்பை சரி செய்து கொண்டு உட்கார்ந்தான்.
எண்ணி இரண்டு நிமிடம் கழித்து கதவு திறக்கப்பட, விருட்டென எழுந்த பிரித்வியின் முகத்தில் பேரதிர்ச்சி.
“ஹாய் பிரித்வி…” என்றாள் ஷ்ராவ்யா.
பதில் சொல்ல முடியாத அளவுக்கு அவன் நாவு மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது.
“உட்காருங்க” என்றவள், சகஜமாய் தன் இருக்கையில் உட்கார்ந்தாள்.
அவன் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்…
“என் அப்பாதான் சத்ய நாராயணன், அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும். அக்கா ஃபாரின்ல இருக்கா, அதுவும் ப்ரெக்னென்ட்டா இருக்கா.
அதனால நிர்வாதத்தை நான் பார்த்தாக வேண்டிய கட்டாயம். எங்க தாத்தா கட்டின காலேஜை, எடுத்தோம் கவிழ்த்தோம்னு யாருக்கும் தூக்கி கொடுத்திட முடியாதில்லையா?
அதான் க்ளாஸ் டைம்ல க்ளாஸ்க்கு போவேன், பிரேக் டைம்ல ஆபீஸ் வேலையை செய்வேன். இப்ப உங்களை பார்க்கத்தான் என் க்ளாஸை விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள்.
அவள் உதிர்த்த வார்த்தைகளில் தன் வருகைக்கான முக்கியத்துவமும், அவள் நேரத்தின் மதிப்பும் ஒருங்கே விளங்கிற்று பிரித்விக்கு.
“என்னை நீங்க மன்னிக்கணும், உங்கள நான் இந்த காலேஜ்க்கு ப்ரொபசரா செலக்ட் பண்ண முடியாது” என்றவளை விழி அகலாது பார்த்தான் பிரித்வி.
“நேத்து நாம ஐஸ்கிரீம் சாப்பிடும் போதே நீங்கதான் புது ப்ரொபசர்னு கண்டுபுடிச்சிட்டேன். இங்க இன்டர்வியூ வைக்கிறதுக்கு பதில் அங்கேயே இன்டர்வியூ நடத்தினேன்.
ஆரம்பத்துல ஏகப்பட்ட சறுக்கல் இருந்தாலும், அந்த ஜூஸ் கடையில நீங்க நிறைய மார்க் ஸ்கோர் பண்ணீங்க. ஜஸ்ட் பாஸ்ல ஊசலாடின உங்களுக்கு அடுத்து ஒரு வாய்ப்பு தர நினைச்சுதான், இந்த காலேஜ்ல நான் படிக்கிற விஷயத்தை சொன்னேன்.
நான் உங்க ஸ்டூடண்ட்டா வரப்போறேன்னு சொன்னதுக்கு பிறகும், என் போன் நம்பர் கேட்டீங்க பாருங்க… அப்பவே நீங்க ப்ரொபசரா இருக்குற தகுதியை இழந்துட்டீங்க.
என் வயசுப் பொண்ணுங்களுக்கு, என் அளவு மன முதிர்ச்சி இருக்காது. எங்கிட்ட தடம்புரண்ட உங்க உணர்ச்சிகள், நாளைக்கு வேற ஸ்டூடண்ட்ட நடந்துட்டா? எங்கள நம்பி பிள்ளைய விடுற பெத்தவங்களுக்கு, நாங்க என்ன பதில் சொல்லுறது?
கடைசி வரைக்கும் உங்க பார்வையில நான் உங்க ஸ்டூடண்ட்ன்ற நினைப்பு துளிகூட வரவே இல்ல. நான் எந்த நம்பிக்கையில உங்கள உள்ள விடுறது?” என்று கேட்க, பிரித்வியின் முகம் சுருங்கிப்போனது.
சர்டிபிகேட் ஃபைலை எடுத்துக் கொண்டு நடந்தவனிடம், “நான் வேணும்னா உங்களுக்கு ஏத்தது போல வேற வேலைக்கு ரெகமெண்ட் பண்ணட்டுமா சார்?” என்றாள் ஷ்ராவ்யா.
“வேண்டாம் மேடம், நான் கிளம்புறேன்…” என்பதோடு பேச்சை முடித்தவன், விறுவிறுவென வெளியேறிச் சென்றுவிட்டான்.
ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு, அவளும் தன் வகுப்பிற்கு புறப்பட்டாள்.
வாசலில் இருந்த பிஏ, “மேடம் லெமன் ஜூஸ் வந்தது. நீங்க உள்ள ஏதோ முக்கியமா பேசிட்டு இருந்ததால, நான் உள்ள வரல. இதை குடிச்சுட்டு க்ளாஸ்க்கு போங்க மேடம்” என்று நீட்டினாள்.
அந்த ஜூஸ் டம்ளரினுள், நேற்றிரவு அன்பொழுக பேசிய பிரித்வியின் முகம் தெரிந்தது ஷ்ராவ்யாவுக்கு.
படக்கென ஓரடி பின் நகர்ந்து, “எனக்கு வேண்டாம் மேடம், நான் வேணுங்கிற அளவுக்கு தண்ணீர் குடிச்சுட்டேன். ஜூஸ வேற ஸ்டாஃப்க்கு கொடுத்திடுங்க” என்ற ஷ்ராவ்யா, நிமிர்வாய் தன் வகுப்பு தேடி நடந்தாள்.
