🌦️அந்தி மழை பொழிகிறது…

🌦️அந்தி மழை பொழிகிறது…

விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.

 

செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது. 

 

சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.

 

பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.

 

அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.

 

திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! என பறைசாற்றும் விதமாக பூமித்தாய் விடும் பலமான மூச்சுக்காற்று, மண் வாசனையாய் அப்பகுதி முழுவதும் வியாபித்தது.

 

மழைக்கு அஞ்சி அடைந்து கிடக்கும் மனிதத் தலைகளுள் ஒன்றாய், சீதாவும் நின்றிருந்தாள்…

 

அடிக்கொரு முறை மணியைப் பார்க்கும் அநேக மானுடர்களுள் அவளும் ஒருத்தி. அவள் ஆசையை நிராசையாக்கவே அடித்துப் பொழிந்தது அந்திமழை.

 

அரண் போல அகன்று விரிந்திருந்த அந்த இடத்திற்கு, மழையோடு போராடும் ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். மழை இரைச்சலின் தாக்கத்தால், மௌனமாய் அழுது கரைந்தது அவளின் செல்ஃபோன்.

 

அவளருகிலிருந்த புண்ணியவான், “மேடம், உங்க போன் அடிக்குதுனு நினைக்கிறேன். லைட் வெளிச்சம் தெரிஞ்சது” என்றான். 

 

யோசனையோடு செல்ஃபோனை வெளியே எடுத்தாள், அவள் கணவன் நிமலன்தான் ஐந்தாறு முறை அழைத்திருந்தான்.

 

அவள் பதில் அழைப்பு விடுத்த அடுத்த கணம் தெறித்து வந்தது, “எங்க போன?” எனும் பதற்றமான குரல்.

 

“காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்தேன், மழை பிடிச்சுக்கிச்சு. சாந்தி ஹோட்டலுக்கு முன்னால நிக்கிறேன், வண்டிய எடுத்துட்டு வர்றீங்களா?”

 

“வர்றேன், அங்கேயே பத்திரமா இரு. கூட ஆளுங்க இருக்காங்களா? தனியா இருக்கியா?…”

 

“இருக்காங்க, நீங்க பொறுமையா கார ஓட்டிட்டு வாங்க.” 

 

“ம்…” என்பதோடு இருவரின் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது.

 

‘இனி கவலை இல்லை! என் கணவன் கண்டிப்பாக என்னைத் தேடி வந்துவிடுவான்’ எனும் நிம்மதி அவளது ஆழ்மனம் வரை சென்று நிறைந்தது.

 

அனிச்சையாய் தன் புறக் காரணிகளை வேடிக்கை பார்க்கலானாள் சீதா. 

 

அப்போது ஒரு பெண், தன் நான்கு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தாள். அடுத்த சில நொடிகளுக்கு, சீதாவால் அந்தப் பெண் மேலிருந்த பார்வையை பிற திசையில் நகர்த்தவே முடியவில்லை.

 

காரணம், அந்தப்பெண் அச்சு அசலாக அவள் அம்மாவின் ஜாடை…

 

இதே போலத்தான் சீதாவின் அம்மாவும் மழைக்கும் மகளுக்கும் நடுவில் எப்போதும் மல்லுக்கட்டுவார். தான் தெப்பமாய் நனைந்தாலும், துளி மழையும் தன் பிள்ளையைத் தீண்டக்கூடாது என்பதில் அத்தனை வைராக்கியம் அவருக்கு.

 

ஆனால் சீதாவோ மழையைப் பார்த்ததும் மயிலாகிடுவாள். நினைத்த பொழுதெல்லாம் நிலத்தை முத்தமிடும் மழை, பச்சை பசுமையை பாதையாய் பெற்ற பூமி, இயற்கையும் இறைவனும் ஒருங்கே உட்கார்ந்திருக்கும் ஓர் உன்னத ஊர் பாபநாசம். 

 

அதுதான் அவள் பிறந்த ஊர்…அம்மாவை ஏமாற்றிவிட்டு அவ்வப்போது மழையில் ஆட்டம்போட்டு சுற்றுபவளை, அந்த ஒரு நாள் காலில் விலங்கு மாட்டிவிட்டு அழகு பார்த்தது.

 

“பெரிய பொண்ணாகிட்ட, முன்னைப்போல ஆடவோ ஓடவோ கூடாது. முக்கியமா மழையில நனையக்கூடாது, ஊருக்குள்ள கொள்ளிக் கண்ணு கோடிக்கணக்குல குமிஞ்சு கெடக்கு” என்று நாள்தோறும் சுப்ரபாதம் போல பாடித் தீர்த்தாள் சீதாவின் அம்மா.

 

அத்தனை கெடுபிடிக்கு பிறகெங்கே மழையைத் தீண்டுவது? ஆசையாய் தூரத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதோடு, அவள் எல்லை முடிந்துவிடும்.

 

‘நீ விட்டாலும், நான் விட மாட்டேன்…’ என்றுரைப்பது போல, அடிக்கடி மழை அவள் பள்ளிக்குப் போகையிலும் வரையிலும் அவள் பொறுமையை சோதிக்கும். 

 

ஆனாலும் இறுதியில், அம்மா மீது அவளுக்கிருக்கும் அச்சம் தான் வெற்றி பெறும். கண்மூடி திறப்பதற்குள் நாட்களும் மாதங்களும் நகர்ந்து போய்விட, கல்லூரி காலத்திற்குள் நுழைந்தாள் சீதா.

 

சென்னைக்கு திருமணமாகிச் சென்ற பக்கத்துவீட்டு அக்காவுக்கு வெகு விமர்சையாக வளைகாப்பு நடந்தது. அவளுக்கு பேச்சுத் துணை இல்லாத காரணத்தால், அவ்வப்போது சீதாவை பிடித்துக் கொள்வாள். 

 

அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், யதேட்சையாய் சில புகைப்படங்கள் சீதாவின் கண்ணில் பட்டது. மொட்டை மாடியில் அவளும் அவள் கணவனும் மழையில் நனைவது போல அந்த போட்டோக்கள் இருந்தது.

 

அதைப் பார்த்த சீதாவோ காணாததைக் கண்டது போல், “கட்டுனா சென்னை பையனத்தான் கட்டுவேன்” எனும் விதிமுறையை விதித்து விட்டாள்.

 

நம் ஊரில் சென்னை மாப்பிள்ளைக்கா பஞ்சம்? அவள் கல்லூரிப் படிப்பு முடிய மூன்று மாதங்கள் இருக்கையிலேயே திருமணம் முடிந்து விட்டது.

 

அவசரப்பட்டு விட்டோமோ?! என்று காலம் கடந்த பின் கவலைப்பட்டாள் பேதைப் பெண். அவள் கணவன் நிமலன் நிதானமானவன், நியாயவானும் கூட…

 

“ஒன்னும் பிரச்சினை இல்ல, ஒழுங்கா அம்மா வீட்டுல இருந்து டிகிரி படிச்சு முடி. அதுவரைக்கும் அப்பப்ப நான் வந்து பார்த்துட்டு போறேன், ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும் சென்னை போவோம்” என்றான்.

 

அக்கம்பக்கத்து அக்காக்களின் புகுந்த வீட்டுப் புலம்பல்களும், ஆதிகாலம் தொட்டு தொலைக்காட்சிகள் காட்டும் ஆணாதிக்க சமூகமும், அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் பொய்த்துப் போனது.

 

மூன்று மாதங்கள் கரைந்தோட, மே மாதம் சென்னைக்குக் குடி பெயர்ந்தாள் சீதா. அவள் கொண்ட அற்ப ஆசையை அழகாய் அலைக்கழித்தது ஆட்டம் காட்டியது அக்கினி வெயில்‌. 

 

“மழைக்காலம் வரட்டும், பார்த்துக் கொள்கிறேன்…” எனும் வீராவேசத்தோடு வடகிழக்கு பருவ மழைக்காக ஆசையாசையாய் காத்திருந்தவளை, பவித்ரா முந்திக் கொண்டாள். 

 

தள்ளிப் போன நாட்களை தாங்கிப் பிடிப்பதிலேயே அவள் தேகம் தேய்ந்து போனது. நிலவரம் புரியாமல், குமட்டலுக்கு எலுமிச்சையும், வாய்க் கசப்புக்கு மாங்காயுமென வகைவகையாய் வாங்கிப் போட்டான் நிமலன். அவனுக்கும் பாவம் இது முதல் அனுபவமாயிற்றே!

 

விஷயம் தெரிந்ததும் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர் அவளின் அம்மாவும் அத்தையும். அவர்கள் மாறி மாறி பண்டுவம் பார்த்ததன் பலனாய் பகல் நிலவாய் ஜனித்தாள் பவித்ரா. பேறு காலம் முடிவதற்குள் மீண்டும் இங்கே அக்கினி வெயில்…

 

ஈரைந்து மாதம் தவமிருந்து ஈன்றெடுத்த குழந்தைக்காக உண்டு, உறங்கி, உழைத்து நாட்களை நகர்த்திய சீதாவுக்கு மழைக் காதலனின் நினைவே வரவில்லை.

 

மகள் பெரியவளானதும், அம்மாவின் அச்சுப் பிரதியாய் மகளை ஒவ்வொரு விஷயத்திலும் விரட்டினாள் சீதாவும்‌. அவளின் சிற்றறிவுக்கு அன்றைக்கு தவறாய் பட்டது, இன்று சரியாய் படுவது இயற்கையின் நியதியன்றோ?!

 

இல்லற வாழ்வில் இரண்டெனக் கலந்து வாழ்ந்து வந்தவளுக்கு, வருடங்கள் கடந்து போனதே தெரியவில்லை. பவித்ராவின் தயவால் வெகு விரைவிலேயே பேத்தியும் பிறந்துவிட்டது. இன்று பவித்ரா தன் குடும்பத்தோடு சந்தோஷமாய் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டாள்.

 

“விட்டா இருட்டிடும், அதுக்கப்புறம் பள்ளம் மேடு தெரியாது. வேகமா போவோம் வா…” என்றுரைத்தபடி இரண்டு ஆண்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி சென்றார்கள்.

 

இவ்வளவு நாட்களாக வாழ்க்கை எனும் நதியில், இழுத்துச் செல்லப்படும் இலையாய் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த சீதாவுக்கு இன்றுதான் ஞானம் பிறந்தது.

 

‘அம்மாவுக்காக, கணவனுக்காக, குழந்தைக்காக என்று எண்ணியே வாழ்ந்தாயிற்று. எனக்குப் பிடித்த மழையில் எப்போதுதான் நனைவேன்?…’ எனும் கேள்வி சிறு துளியாய் துவங்கி, பெருமழையானது அவள் மனதில்.

 

அடித்துப் பொழிந்த மழை, அலுவலக வாசிகளின் அத்தியாவசிய வேலைகளைக் கருத்தில் கொண்டு, தன் வேகத்தை அளவாய் சுருக்கிக் கொண்டது. சீதாவுக்கு அருகிலிருந்த அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து ஓடினார்கள்.

 

அவள் ஓடவில்லை… பொறுமையாய் மழைக்கு நேராக வந்து நின்றாள். வருடக்கணக்கில் பிரிந்த தன் காதலியை, வருணபகவான் காதலோடு கட்டிப்பிடித்தான். 

 

அங்குல அங்குலமாய் அவள் தேகம் நீரில் நனைந்தது…

 

தலைவனுக்கு சொந்தமான தன் தேகத்தின் வளைவு நெளிவுகளை, பிறர் பார்த்து விடுவார்கள் எனும் பயம் இல்லை…

 

என்னால் என் பிள்ளைகளுக்கு காய்ச்சல் தொற்றிக் கொள்ளும் எனும் அச்சமில்லை…

 

மூன்று நாட்கள் முடியாமல் படுத்தால், உடனிருந்து உதவி செய்ய ஆள் இல்லை எனும் உதறல் இல்லை…

 

கரம் விரித்து நிற்கும் மரமானாள் அவளும்…

 

“ஏய்! என்ன பண்ற?” எனும் அதட்டல் நிமலனிடமிருந்து.

 

கண் திறந்து பார்த்தாள், காரைக் கொண்டு வந்து அவளருகில் நிறுத்தி வைத்திருந்தார். 

 

“வந்திடுவேன்னு சொன்னேன்ல? அறிவில்லையா? காய்ச்சல் தலைவலி வந்தா என்ன பண்ணுவ?” என்று அவர் போக்கில் அக்கறையோடு அர்ச்சிக்க,

 

“இன்னிக்கி ஒரு நாள் மட்டும் ஆசை தீர நனைய விடுங்களேன். இப்பவும் நனையலனா, இனி எப்ப நனைவேன்?” என்றாள் சீதா.

 

வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருவரும் நின்று கொண்டிருப்பதை, அவள் குறிப்பால் உணர்த்துவதை உணர்ந்து கொண்டார் நிமலன். காரை ஹோட்டலின் பார்க்கிங் பக்கம் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் போனவர், சீதாவை பார்க்கும்படியான ஒரு இருக்கையை தேர்வு செய்து உட்கார்ந்தார். 

 

அவரின் அக்கறை அப்போதிருந்து இப்போது வரை துளியும் மாறாதிருப்பது கண்டு, அவர் மனைவிக்கு மனம் மயங்கியது. ஆனபோதும் காதலனைக் கைவிட மனம் வரவில்லை. பதில் காதலை காட்டும் பொருட்டு பலத்த இடி சத்தத்தோடு மழை பொழிந்தது.

 

திரும்ப மழையின் வேகம் குறைவதற்கும், நிமலன் தேநீர் அருந்தி முடிப்பதற்கும் சரியாக இருக்க, ‘வாங்க, வீட்டுக்கு போகலாம்…’ என்று சைகையால் அழைத்தாள் சீதா.

 

சின்ன சிரிப்போடு எழுந்து வந்தவர் முகத்தில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று காதல் நிறைந்து வழிந்தது.

 

“நல்ல மழை, நீங்களும் நனைஞ்சிருக்கலாம்…”

 

தயாராக வைத்திருந்த பூந்துவாலையை காரிலிருந்து எடுத்துக் கொடுத்த நிமலன், “இந்ததடவை நீ முந்திக்கிட்ட, அடுத்ததடவை நான் முந்திக்குவேன். நீ இதே போல உட்கார்ந்து காவல் காக்கணும்…” என்றார் கவிழ்ந்து கிடக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே.

 

அவர் மனதிலும் மழைக் காதலி உண்டென புரிந்துகொண்ட சீதா, அன்போடு அவர் விரல் பற்றினாள்.

 

ஐம்பது வருடங்களாய் பிறருக்காக, உலகுக்காக என தங்களின் ஆசையைத் துறந்து வாழ்ந்த அவ்விரு ஜீவன்களும், இந்த நொடி முதல் தங்களின் சின்ன சின்ன ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் எண்ணத்திற்கு வந்திருந்தனர்.

 

‘வாழ்க்கை வாழத்தான்’ எனும் அரிய தத்துவத்தை அவர்களுக்கு அறிவுறுத்திய பின், வந்த வேலை முடிந்ததெனக் கருதி அன்போடு அவர்களிடமிருந்து விடைபெற்றது ‘அந்திமழை’…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!