மனிஷா வீட்டை விட்டு வெளியே செல்வதை பார்த்து சிரித்தனர் அம்பிகாவும்,ரேணுவும்!
” அம்மா எப்படியோ நம்ம நினைச்ச மாதிரி இவளை வீட்டை விட்டு துரத்தியாச்சு, நம்மளும் காலையில கிளம்பிடுவோம்! கொஞ்ச நாளு அண்ணனும் அண்ணியும் தனியா இந்த வீட்ல இருக்கட்டும், அப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள நீங்க சொன்ன மாதிரி அன்னியோன்யம் வளரும், ஆனா அம்மா சரஸ்வதி பெரியம்மாவை எப்படி சமாளிக்கிறது என்று ரேணு தன் சந்தேகத்தை கேட்க, “பெரியம்மா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்” என்று அம்பிகா சொல்ல திகைத்தாள் ரேணு.
“பெரியம்மா எதுவும் சொல்லலையா?” என்று ரேணு கேட்க, ” அது அப்படி சொல்லாம இருப்பா, இப்ப எதுக்கு தேவையில்லாம வெளில போகணும் நினைக்கிறனு கேட்டா, நானும் நம்ம திட்டத்தை பத்தி சொன்னேன், நல்ல ஐடியா தான். ஆனா நீயும் ரேணுவும் கஷ்டப்படுவீங்களேன்னு நம்மள நினைச்சு தான் வருத்தப்பட்டா! இதுல வருத்தப்படுறதுக்கலாம் ஒன்னும் இல்ல, கொஞ்ச நாள் வெளியில தங்கி இருந்தா எங்களுக்கும் மனசு ரிலாக்ஸா இருக்கும் னு சொல்லவும் சரி உங்க இஷ்டம் பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டா, அவளுக்கு தெரிஞ்ச ஆட்கள் மூலமா நம்ம தங்குவதற்கு எல்லா ஏற்பாடையும் பண்ணுனது சரஸ்வதி தான், அதனால நமக்கு எந்த பிரச்சனையும் வராது நம்ம கிளம்பி அங்க போனா போதும்!” என்று அம்பிகா கூறினார்.
“அப்போ சரி மா, நம்மளும் கிளம்புவோம் ஆனா ரஞ்சித் அண்ணே ஏதாவது பிரச்சனை பண்ணுமோன்னு எனக்கு தோணுது என்று ரேணு சொல்ல,” அதுக்கு வாய்ப்பு இல்ல பெரியப்பா கொஞ்ச நாள் பிசினஸ பாத்துக்குற ரஞ்சித் கிட்ட சொல்லி இருக்காங்களாம், அதனால ரஞ்சித்துக்கு நேரம் இருக்காது, ரஞ்சித நெனச்சு இப்போதைக்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது!” என்று அம்பிகா கூறினார் .
“சரி மா அப்ப போய் தூங்குவோம் காலைல சீக்கிரமே எழுந்து கிளம்பி ஊருக்கு கிளம்புவோம்” என்று ரேணு சொல்ல, இருவரும் அவர்களின் அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தனர்.
மனிஷாவிடம் பேசிவிட்டு விதுரன் அறைக்குள் செல்ல, பிரதிக்ஷா அமர்ந்து கொண்டிருந்தாள்.
” என்ன உனக்கு தேவையான பொருளை எல்லாம் எடுத்து வச்சுட்டியா? காலையில அவங்க அஞ்சு மணிக்கு கிளம்ப போறாங்களாம். அதுக்குள்ள உனக்கு தேவையானதை எல்லாத்தையும் எடுத்து வச்சு கிளம்பிரு!” என்று நக்கலாக கூறினான் விதுரன்.
“சரி அத்தான் நீங்க இவ்வளவு ஆசை படுறீங்க என்னோட டிரெஸ்ஸோட உங்களோட டிரஸ்ஸையும் எடுத்து வைக்கிறேன்! பேசாம அவங்களோட நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போயிருவோம். அத்தையும் ரேணுவும் ப்ராஜெக்ட்டுக்கு ஒர்க் பண்ணட்டும். நம்ம ரெண்டு பேரும்…. என வெக்கப்பட்டு கொண்டே கூறினாள் பிரதிக்ஷா.
“உனக்கு அந்த ஆசை வேற இருக்கா! நீ நினைக்கிறது உன்னுடைய கனவுல கூட நடக்காது, என் உயிர் இருக்கிற வரை அந்த எண்ணத்தோட என் சுண்டு விரல் கூட உன் மேல படாது, அதை ஞாபகம் வைத்துக்கொள்!” என்று அழுத்தமாக கூறினான் விதுரன்.
“ஒரு பொண்ணு நெனச்சா, என்ன வேணும்னாலும் பண்ணலாம் அதை ஞாபகம் வச்சுக்குருங்க!” என்று பிரதிக்ஷாவும் உதட்டை சுளித்தாள்.
“அதான் பார்த்தேனே, நான் செய்யாத தப்ப எல்லாரும் முன்னாடி செஞ்சேன்னு என்னை குற்றவாளியா நிக்க வச்சு பொய் சொல்லி உன் கழுத்துல தாலிவாங்குனியே அதை மறக்க முடியுமா?” என்று குத்தலாக விதுரன் கேட்க,
” இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சொல்லிக்கிட்டே இருக்க போறீங்க! நடந்தது நடந்து முடிஞ்சிட்டு நீங்க என் புருஷன் நான் உங்க பொண்டாட்டி, இப்ப அதுதான் நிஜம், நம்ம சேர்ந்து வாழனும்னு நம்ம வீட்டுல உள்ளவங்க எல்லாரும் ஆசைப்படறாங்க உங்கள தவிர! அதனால சீக்கிரமா உங்க மனச மாத்திட்டு வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வோம் அந்த நாளுக்காக நான் காத்துகிட்டு இருக்கேன்!” என்று மகிழினி கூறினாள்.
“நீ எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்தாலும் நீ நினைக்கிறது நடக்காது, அதனால சீக்கிரமா என்னைய டைவர்ஸ் பண்ணிட்டு உன் மனசுக்கு புடிச்ச வேற எவனையாவது கல்யாணம் பண்ணி உன்னோட வாழ்க்கையை வாழப் பாரு, இப்பவும் எப்பவும் என் மனசுல என்னோட காதலியும் மனிஷா மட்டும் தான் இருப்பா, இருக்கிறா!” என்று கூறினான் விதுரன்.
விதுரன் சொல்லிய வார்த்தைகள் பிரதிக்ஷாவின் மனதை வருத்தம் அடைய செய்ய பிரதிக்ஷா எதுவும் பேசாமல் அமைதியாக மெத்தையில் ஏறி படுத்து விட்டாள்
அவள் வருத்தத்தில்தான் படுக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட விதுரன், ‘ நீ வருத்தப்பட்டாலும் இதுதான் நடக்கப் போகுது பிரதிக்ஷா, அதனால இப்பவே உன்னுடைய மனச நீ பக்குவப்படுத்துறதுக்காக தான் உன்கிட்ட அடிக்கடி என் மனசுல உள்ள எண்ணத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன்!’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு அவனும் பிரதிக்ஷாவின் பக்கத்தில் படுத்தான்.
இருவரும் ஒருவரிடம் ஒருவர் எதுவும் பேசவில்லை. அமைதியாக தங்கள் மனதில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஓட்டி பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தனர். வெகு நேரம் கழித்து எப்படியோ இருவரும் உறங்கியும் போனார்கள்.
அதிகாலையில் எழுந்து கிளம்பி தங்கள் ஊருக்கு செல்வதற்காக எடுத்து வைக்கப்பட்ட அனைத்து சூட்கேசையும் டிரைவரை வைத்து காரில் ஏற்றினர் அம்பிகாவும் ரேணுவும்!
அனைத்து வேலையிலும் முடிந்த பிறகு விதுரனின் அறைக் கதவை தட்டினர். அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் விழித்து விட்டனர். அம்பிகாவும் ரேணுவும் தான் கதவை தட்டுகின்றனர் என்பதை புரிந்து கொண்டு இருவரும் வெளியில் வர, அவர்கள் இருவரும் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
“நாங்க கிளம்பிட்டோம் அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்னு கதவை தட்டினேன், பாத்து பத்திரமா இருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடாதீங்க! ரெண்டு பேருக்கும் தேவையானதை எல்லாம் மாத்தி மாத்தி பண்ணிக்கிருங்க, அப்பப்ப உங்கள போன் பண்ணி விசாரிக்கிறேன்!” என்று அம்பிகா சொல்ல,
” அத்தை கண்டிப்பா போகணுமா? ” என்று கேட்டாள் பிரதிக்ஷா. ” வேற வழி இல்ல பிரதிக்ஷா நீ எதையும் யோசிக்காத, நான் உன்கிட்ட நேத்தே சொன்னது தான், பாத்து பத்திரமா இருந்துக்க!” என்று அவளின் தலையை ஆதுரமாக தடவ பிரதிக்ஷா அம்பிகாவின் காலில் விழுந்தாள்.
“உன் நல்ல குணத்துக்கு நீ எப்பயும் சந்தோசமா நல்லா வாழ்வ!” என்று ஆசீர்வதித்தார் அம்பிகா.
“சரி அண்ணா அண்ணி நாங்க கிளம்புறோம், அண்ணா அண்ணிய நல்லா பாத்துக்க அண்ணி மேல கோபப்படாதே! அவங்க ரொம்ப நல்லவங்க!” என்று ரேணு கூற சரி என்று தலையசைத்தான் விதுரன்.
நால்வரும் மாடியிலிருந்து இறங்கி வாசலிற்கு வெளியே வந்தனர். அம்பிகாவும் ரேணுவும் புறப்படுவதற்கு தயாராக கார் நிற்க அதில் ஏறிக்கொண்டனர். ” பாத்து பத்திரமா இருங்க என்று சொல்லிவிட்டு இருவரும் காரில் ஏற, ” நீங்களும் பாத்து பத்திரமா போங்க அங்க ரீச் ஆனதும் எனக்கு போன் பண்ணுங்க! ஏதாவது தேவைனா உடனே எனக்கு தகவல் சொல்லுங்க நான் சரி பண்றேன்!” என்று விதுரன் சொல்ல இருவரும் தலை அசைக்க கார் கிளம்பியது.
அம்பிகாவிடம் பெரும்பாலும் விதுரன் அதிகமாக பேச மாட்டான். ஆனால் இன்று அம்பிகா அவனை விட்டுச் செல்ல விதுரனின் மனம் ரணமானது.
சரஸ்வதியும் கோபத்தோடு ஏற்கனவே அவனை விட்டு கிளம்பி போயிருக்க இப்போது அம்பிகாவும் தன்னை விட்டு தூரமாக செல்வது போல் இருந்தது விதுரனுக்கு..!
அவன் மனதின் கலக்கத்தை பிரதிக்ஷாவிடம் சொல்ல விரும்பாமல் அமைதியாக வீட்டிற்குள் செல்ல மனிஷாவின் ஞாபகம் வந்தது.
தன்னுடைய மன துயரத்தை மனுஷாவிடம் பேசினால் தனக்கு நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு மனிஷாவின் அறைக்குள் நுழைந்தான் விதுரன். பிரதிக்ஷாவோ விதுரன் மனிஷாவின் அறைக்குள் நுழைவதை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் மனம் கணக்க அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்தவன் அறை முழுவதும் மனிஷாவை தேட மனிஷா எங்கும் இல்லை. எங்க போயிருப்பா? அதிகாலையிலேயே, ஒருவேளை ஜாக்கிங் போயிருப்பாளா? என்று அவன் சிந்தனையில் உதிக்க, அவளுக்கு ஜாக்கிங் போற பழக்கம் இல்லையே! என்று நினைத்துக் கொண்டே மனிஷாவின் அறையை விட்டு வெளியில் வர மனிஷா எழுதி வைத்து சென்ற லெட்டர் அவன் கண்களில் பட்டது.
ஏதோ ஒரு பதட்டத்துடன் அந்த லெட்டரை ஓடிச் சென்று எடுத்து படிக்க, ” அன்புள்ள விதுரனுக்கு, என்னைய மன்னிச்சிரு விதுரா, நீனும், அந்தப் பிரதிக்ஷாவும் ஒண்ணா சேர்ந்து இருக்கிறத என்னால பாக்க முடியல, காரணம் நான் உன்னைய உண்மையா காதலிச்சுருக்கேன். என் இடத்துல வேற எந்த பொண்ணையும் என்னால நிறுத்தி பார்க்க முடியவில்லை, அதனால கொஞ்ச நாள் இங்கே இருந்து வெளியில எங்கையாவது தங்குனால் நல்லா இருக்கும்னு நினைச்சு இங்கிருந்து கிளம்புறேன், நான் இல்லாத நேரத்துல என்னைய பத்தி யாராவது தப்பு தப்பா சொல்றதுக்கு வாய்ப்பு இருக்கு ஆனா என்னை பத்தி முழுசா உனக்கு தெரியும்.
இப்பயும் எப்பயும் நான் காதலிக்கிறது உன்னைய மட்டும் தான், ஐ லவ் யு விதுரா! ஐ மிஸ் யூ, கூடிய சீக்கிரத்துல உன் பிரச்சனையை எல்லாத்தையும் முடிச்சிட்டு நீ என்னைய தேடி வா உனக்காக நான் காத்துகிட்டு இருப்பேன்!” என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்ததும் விதுரனின் மனம் உடைந்து விட்டது.
மனிஷா, லெட்டரில் ரேணு சொன்னது போல் எழுதாமல், தான் திட்டம் பண்ணினது போல் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தாள். தான் வீட்டை விட்டு சென்றதற்கான காரணம் பிரதிக்ஷா தான் என்று கூறினால் விதுரன் பிரதிக்ஷாவை இன்னும் வெறுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி இப்படி எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தாள். அம்பிகாவும் ரேணுவும் மனிஷா எழுதிய கடிதத்தை பார்க்காமல் சென்றது தான் இனிமே நடக்கும் விபரீதங்களுக்கு காரணமோ என்னவோ?
இந்த கடிதத்தை படித்து முடித்தவன் அவசர அவசரமாக கோபத்தில் கதவை வேகமாக தள்ளிக் கொண்டு வெளியே வந்தவன், அங்கு நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவின் கன்னத்தில் அறைந்திருந்தான்.
