மனிஷா சொல்லியது போல் அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டாள் பிரதிக்ஷா.
ரஞ்சித் விதுரனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.” விதுரா என்ன முடிவு எடுத்திருக்க? பிரதிக்ஷாவ டைவர்ஸ் பண்றதுக்கு உனக்கு முழு சம்மதம் தானே!” என்று கேட்க, சற்று நேரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் விதுரன்.
“என்னாச்சு விதுரா அமைதியா இருக்க?” என்று ரஞ்சித் கேட்க, ” சாரி ரஞ்சித், நான் பிரதிக்ஷாவோடையே வாழ முடிவு பண்ணிட்டேன் ” என்று விதுரன் சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித்.
“அப்போ மனிஷா?” என்று ரஞ்சித் கேட்க,” மனிஷாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன், கிட்டத்தட்ட மனிஷாவை ரெண்டு வருஷமா காதலிச்சுருக்கேன். ஆனா அவ கிட்ட தோணாத எல்லா உணர்வுகளும் பிரதிக்ஷா கிட்ட எனக்கு தோணுது, முதல்ல பிரதிக்ஷா மேல நான் கோபமா இருந்தது உண்மைதான். எல்லாரும் முன்னாடியும் பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணிட்டான்னு எனக்கு கோபம் இருந்துச்சு,
ஆனா பிரதிக்ஷாவை முதல் முறையாக பார்க்கும் போதே பிரதிக்ஷாவை எனக்கு புடிச்சி இருந்துச்சு, அவ உனக்கு பார்த்த பொண்ணுன்னு நான் அமைதியா இருந்துட்டேன், ஒருவேளை பிரதிக்ஷாவுக்கும் என் மேல இருந்த எண்ணத்த என்கிட்ட முறையா சொல்லி இருந்தால் கட்டாயம் பிரதிக்ஷாவ நான் கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன்! என்று கூறினான்.
“அப்போ நீயும் எனக்கு துரோகம் தான் பண்ண நினைச்சியா?” என்று கோபமாக ரஞ்சித் கேட்க,” நீயும் மனிஷாவும் சேர்ந்து எனக்கு பண்ணுன துரோகத்தை விடவா நான் உங்களுக்கு பண்ணிட்டேன்”என்று விதுரன் கேட்க அப்படியே அதிர்ந்து போனான் ரஞ்சித்.
“என்ன உளர விதுரா அந்த பிரதிக்ஷா உன்கிட்ட ஏதோ தப்பு தப்பா சொல்லி இருக்கான்னு நினைக்கிறேன்!” என்று ரஞ்சித் சொல்ல,
“அவ எதுவும் சொல்லல, எல்லாத்தையும் நானே கண்டுபிடிச்சேன். மனிஷா என்னைக்கி இந்த வீட்டை விட்டு சொல்லாம கொள்ளாம ஓடினாலோ அன்னைக்கே மனிஷாவை பத்தின எல்லா உண்மைகளும் எனக்கு தெரிஞ்சிருச்சு. மனிஷா இந்த வீட்டை விட்டு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி வீட்டில செக்யூரிட்டி அலாரம் அடிச்சுச்சு, அன்னைக்கு லாக்கர் ரூம்ல அவ தான் இருந்தா அன்னைக்கே அவ மேல சின்ன சந்தேகம் இருந்துச்சு, அன்னைக்கு நைட்டு அவளைப் பத்தின எல்லாம் விவரங்களையும் எனக்கு தெரிஞ்ச டிடெக்டிவ் மூலம் விசாரிக்க சொல்லிட்டேன், அவரு உனக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு அவளை நீ தான் கூட்டிட்டு வந்தனு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு!” என்று அதிர்ந்து போனான்.
அப்புறம் இன்னொரு உண்மையும் எனக்கு தெரியும், பிரதிக்ஷாவ முதல்ல எனக்கு தான் அம்பிகா அம்மாவும் ரேணுவும் பாத்தாங்க, உன்னைய விட எதுவும் பெட்டரா கிடைச்சுற கூடாது எனக்குன்னு நெனச்ச நீ உன்னோட சூழ்ச்சியால பிரதிக்ஷாவ அப்பா கிட்ட சொல்லி உனக்கு நிச்சயதார்த்தம் பண்ண வச்சதும் எனக்கு தெரியும்! இவ்வளவு உண்மையும் தெரிஞ்சு நான் ஏன் அமைதியா இருந்தேன் தெரியுமா? எல்லாம் உனக்காகத்தான்! அதனால இனிமேல் இந்த மாதிரி என்னோட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு தேவை இல்லாத வேலையை செய்றத விட்டுட்டு உன்னோட வாழ்க்கைய வாழ பாரு.அது தான் உனக்கு நல்லது எனக்கு நல்லது! நம்மள சுத்தி இருக்குற எல்லாருக்கும் நல்லது” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான் விதுரன். விதுரன் சொன்னதை கேட்கவும் ரஞ்சித்தின் மனம் கோபத்தில் கொந்தளித்தது.
‘அது எப்படி விடுவேன், என்னைய விட பெட்டரா உன் வாழ்க்கையில எதுவும் கிடைக்கக்கூடாது, நீங்க ரெண்டு பேரும எப்படி ஒன்னா சேரிங்கன்னு பாக்கத்தான் போறேன்’ என்று வன்மமாக நினைத்து விட்டு பிரதிக்ஷாவை கொலை செய்ய, தனக்கு தெரிந்த அடியாட்களுக்கு அழைப்பை விடுத்தான்.
“உங்க மொபைலுக்கு இப்ப ஒரு பொண்ணோட போட்டோ அனுப்புறேன், அவள தீத்து கட்டி இருங்க! ” என்று ரஞ்சித் சொல்லிக் கொண்டிருக்க அவன் கன்னத்தில் அறை விழுந்தது. யார் என்று பார்க்க ராம்தேவ் தான் அடித்திருந்தார்.
“அப்பா எதுக்கு என்னை அடிச்சீங்க?” என்று ரஞ்சித் கேட்க, ” ஒரு பொண்ண அநியாயமா கொலை செய்யறதுக்கு கூலிப்படைய ஏவிக்கிட்டு இருக்க, அதுவும் விதுரனோட மனைவி அது உனக்கு ஞாபகம் இருக்கா? இப்பதான் அவனே பெரிய கண்டத்தில் இருந்து தப்பிச்சு வந்து இருக்கான் அதுக்குள்ள அவன் பொண்டாட்டிய கொல்வதற்கு ஆட்களை அனுப்புற? ” என்று கேட்க,
“அதுக்கு என்ன இப்ப? எனக்கு கிடைக்காத எதுவும் அவனுக்கு கிடைக்கக்கூடாது, அந்தப் பிரதிக்ஷாவை நான் கல்யாணம் பண்ணனும்னு திட்டம் போட்டேன் கடைசில அவன் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான், அவன் மனச மாத்தி டைவர்ஸ் வாங்கி கொடுத்தரலாம்னு நெனச்சேன். கடைசில எனக்கு டைவர்ஸ் வேண்டாம், நான் பிரதிக்ஷா ஓட சேர்ந்து வாழ போறேன்னு என்கிட்ட சொல்றான், அவன அப்படியே விட சொல்றீங்களா?” என்று ரஞ்சித் கேட்க
“வாய மூடு, அவன் உன்னோட பிரண்டு தானே, அவன் நல்லா இருக்க கூடாதுன்னு ஏன் நினைக்கிற உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்ற சரஸ்வதி கேட்க,
” வாங்க ராஜா மாதா, அவன் மேல எனக்கு இவ்வளவு கோபமும் வன்மமும் இருக்குறதுக்கு காரணம்
நீங்கதான் நீங்க மட்டும் தான், என்னோட அம்மாவா இருந்துட்டு உங்களோட முழு பாசத்தையும் அவன் மேல தான் இத்தனை வருஷமா காட்டிக்கிட்டு இருக்கீங்க,
அன்னையிலிருந்து அவனை எனக்கு பிடிக்காம போயிருச்சு! அவன் வாழ்க்கையில என்னை விட பெட்டரா எதுவும் கிடைச்சிட கூடாது அப்படி ஒரு வேலை கிடைச்சா அதை எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு நெனச்சேன். ஏன்னா உங்கள என்கிட்ட இருந்து பிரிச்சதுக்கு அவனுக்கு தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன்.
பெத்த மகனை விட உங்களுக்கு அவன் தானே ஒசத்தி! நான் எப்படி ஆனதுக்கு காரணம் முழுக்க முழுக்க நீங்க தான் நீங்க மட்டும் தான்!” என்று ரஞ்சித் சரஸ்வதியை பார்த்து கேட்க
“வாய மூடு ரஞ்சித், சரஸ்வதிய குறை சொல்றதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது. விதுரன் யாரோ பெத்த மகன் கிடையாது, விதுரனோட பயாலஜிக்கல் அப்பா, அம்மா நாங்க தான்
விதுரன யாரோ பெத்த மகன்னு சொன்னியே நீ தான் யாரோ பெத்த மகன்!” என்று ராம்தேவ் சொல்ல “நீங்க பொய் சொல்றீங்க, பொய் சொல்றீங்க!” என்று சிறுபிள்ளை போல கதறினான் ரஞ்சித்.
“ஆமா உன் அம்மா சரஸ்வதி இல்லை, கலா ,ஆனால் விதுரன் எனக்கும் சரஸ்வதிக்கும் பொறந்த பையன்! ஆனால் இன்னைக்கு வரைக்கும் உன்னைய தான் எங்களோட மகனா நாங்க வளர்த்துக்கிட்டு இருக்கோம். காரணம் சின்ன வயசுல விதுரன் மேல உன் அம்மா பாசம் காட்டுனத பாத்து உனக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு, உன்னோட நல்லதுக்காக மட்டும் தான் விதுரன அவளோட தோழி அம்பிகா கிட்ட கொடுத்து வளர்த்து இருந்தோம்! உன் அம்மாவும் நானும் சரஸ்வதிக்கு துரோகம் பண்ணியிருக்கோம்னு தெரிஞ்சும் அந்த கோபத்தை ஒரு நாள் கூட காட்டாம , இத்தனை வருஷம் உன்ன வளர்த்திருக்கா, அவ பெத்த மகனை அம்பிகா கிட்ட கொடுத்து வளர்த்திருக்கிறா? ஆனா நீ அதெல்லாம் தெரியாம நீங்க எல்லாம் ஒரு அம்மாவானு கேக்குற? ” என்று நடந்த உண்மைகளை எல்லாம் ராம்தேவ் சொல்ல அப்படியே அதிர்ச்சியில் கதறியழ ஆரம்பித்தான்.
“அம்மா என்னைய மன்னிச்சிருங்க அம்மா, என்னைய விட என் பிரெண்டான விதுரன் மேல நீங்க பாசத்தை காட்டினத பாத்தத என்னால ஏத்துக்க முடியல, நீங்க பெத்த மகனே நான் இல்லைன்னு
முன்னாடியே சொல்லி இருக்கலாமே தெரிஞ்சிருந்தா நான் இப்படி விதுரன் மேலே தேவையில்லாத வன்மத்தை வளர்த்திருக்க மாட்டேனே,
அம்பிகாவும் ரேணுவும் பிரதிக்ஷாவை பார்த்துட்டு விதுரனுக்கு ஏத்த பொண்ணுன்னு உங்களுக்கு போட்டோவ அனுப்புனதை நான் பாத்துட்டேன். பிரதிக்ஷா விதுரனுக்கு கிடைக்கக்கூடாதுனு நினச்சு அப்பா கிட்ட பேசி அவளை கல்யாணம் பண்ண நினைச்சேன்,
நானும் பிரதிக்ஷாவும் வேலை பார்க்கும் போது, ஒரு கேஸ் விஷயத்துல பிரதிக்ஷாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்துச்சு. அதுல அவ என்ன மட்டமா பேசிட்டாள். அதுக்கு அவளையும் பழி வாங்கணும்னு நெனச்சேன். அப்பதான் விதுரனுக்கு பிரதிக்ஷாவ கல்யாணம் பண்ணி வச்சா நல்லா இருக்கும்னு ரேணுவோம் அம்பிகாவும் அம்மாவும் பிரதிக்ஷாவை எங்கேயோ பார்த்துட்டு அவ போட்டோவை எடுத்து உங்களுக்கு அனுப்பி இருந்தாங்க, ரெண்டு பேரையும் பழிவாங்க நல்ல திட்டம்னு எனக்கு தோணுச்சு, கடைசில நான் நெனச்ச மாதிரி எதுவும் நடக்காமல் அம்பிகா அம்மாவும் ரேணுவும் நெனச்ச மாதிரி பிரதிக்ஷாவோடையே விதுரனுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு!” என்று கூறினான் ரஞ்சித்.
“ஆனா நீ இவ்வளவு பண்ணினதும் தெரிஞ்சும் விதுரன் ஒரு தடவை கூட உன் மேல கோபப்பட்டதே கிடையாது, விதுரனுக்கும் தெரியும் விதுரன் நாங்க ரெண்டு பேரும் பெத்த பையன்னு,அவன் நினைச்சிருந்தால் உரிமையா எங்க கூட வந்திருக்கலாம்! நீ ஏற்கனவே அவ மேல வன்மத்தோடு இருக்கிறது தெரிஞ்சதுனால, நடந்த உண்மைகளை உன்கிட்ட சொன்னா நீ தாங்க மாட்டேன்னு நெனச்சு இதுவரை எதையும் சொல்லாம, அவனோட உரிமைய உனக்காக விட்டுக் கொடுத்துட்டு அங்க இருக்கான்!” என்று சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித்.
” என்னை மன்னிச்சிருங்க அம்மா, நான் யாரும் மன்னிக்க முடியாத பெரிய தப்பா பண்ணிருக்கேன், மனிஷா ஓட புத்தி பிரிந்து அவளை விட எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சீப்பா பிளான் பண்ணி இருக்கேன் அதை எல்லாம் நெனச்ச எனக்கு வெட்கமா இருக்கு, என்னைய மன்னிச்சிருங்க அப்பா நீங்களும் மன்னிச்சிடுங்க நான் உடனே விதுரன் கிட்ட மன்னிப்பு கேட்கணும்!” என்று தலையில் அடித்து அடித்து அழுதான் ரஞ்சித்.
அவன் அருகே வந்து சரஸ்வதி அவனை அனைத்து, நீ எந்த தப்பும் பண்ணல, நீ அழுகாத அம்மாவுக்கு வருத்தமா இருக்கு, நான் உன்னைய பத்து மாசம் சுமந்து பெத்து எடுக்கலைன்னாலும் உன்னோட அம்மா நான் தான், நீ எல்லாத்தையும் இப்பயாவது புரிஞ்சுக்கிட்டே அது போதும்!” என்று சொல்ல சரஸ்வதி கட்டிப்பிடித்தான்.
அம்மா நான் இப்பவே விதுரன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு என்னோட தம்பியா அவனை இந்த வீட்டுக்கு உரிமையா கூட்டிட்டு வரணும்னு ஆசைப்படுறேன்!” என்று ரஞ்சித் சொல்ல, இருவரும் சந்தோஷமாக தலையசைத்தனர். மூவரும் கிளம்பி விதுரனை பார்க்க வந்தனர்.
இங்கு,
மனிஷா கூறியதற்கு எல்லாம் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்த பிரதிக்ஷாவின் நினைவில் ‘எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நீ வரக்கூடாது ஏன் எங்க கண்ணுளையே நீ முழிக்க கூடாதுன்னு’ மனிஷா சொல்லிய நிபந்தனை மட்டும் அவள் எண்ணத்தில் வந்து கொண்டே இருந்தது.
என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தவள் ஒரு முடிவெடுத்து விட்டு, விதுரனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.
விதுரனும், அவளுடைய அழைப்பை ஏற்று,” எங்க இருக்க? இன்னைக்கு நம்மளோட லாஸ்ட் ஹியரிங், இன்னைக்குயோட உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உன்கிட்ட இருந்து எனக்கு முழுசா விடுதலை கிடைச்சுடும் என் மனசுக்கு புடிச்ச மனிஷாவோட இனி சந்தோசமா வாழ போறேன்” என்று சொல்லிக் கொண்டு இங்கே சிரித்தான் விதுரன்.
இது எதையும் அறியாத பிரதிக்ஷாவோ கண்கள் கலங்கி கொண்டு, ” என்னை மன்னிச்சிடுங்க! மனிஷாவை நீங்க எந்த அளவுக்கு காதலிக்கிறிங்கன்னு எனக்கு தெரியாம போயிருச்சு, ஒருவேளை உங்களுடைய காதல் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா கட்டாயமா பொய் சொல்லி உங்கள கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன், இந்த ஜென்மத்துல எனக்கு உங்க கூட வாழறதுக்கு கொடுத்து வைக்கல அடுத்த ஜென்மத்துலயாது உங்க கூட வாழனும்னு ஆசைப்படுறேன்! என்று பிரதிக்ஷா சொல்ல,
” எத்தனை ஜென்மம் வந்தாலும் நீ மட்டும் எனக்கு பொண்டாட்டியா வேண்டாம், ஒருவேளை நீதான் பொண்டாட்டியா வரதா இருந்தால் எனக்கு அந்த வாழ்க்கையே வேண்டாம்னு அந்த தெய்வத்துட்ட முறையிடுவேன்!” என்று சிரித்துக் கொண்டே கூறினான் விதுரன்.
” கவலைப்படாதீங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல நான் போயிருவேன் அதுக்கப்புறம் நீங்க மனிஷாவோட சந்தோசமா வாழுங்க!” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் பிரதிக்ஷா.
விதுரனோ, பிரதிக்ஷாவிடம் தன்னுடைய காதலை சர்ப்ரைசாக சொல்ல வேண்டும் என்று எண்ணி சிறு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.
விதுரனிடம் பேசி முடித்த பிரதிக்ஷா என்னைய மன்னிச்சிருங்க என்று சொல்லி தன் கையில் இருந்த விஷயத்தை எடுத்து அருந்தினாள்
அவள் அருந்தியதும் அவள் அலைபேசி அடிக்க யாரென்று பார்க்க ரம்யா தான் அழைத்திருந்தாள். அன்று கோபத்தில் அழைப்பை கட் செய்தவள் இன்று தான் அழைத்திருந்தாள். உடனே பிரதிக்ஷா அவளின் அழைப்பை ஏற்க
“என்னடி எங்க இருக்க உன் வீட்டுக்கு வந்தேன் உன்னைய காணோம்?” என்று ரம்யா கேட்க,
“இந்தியாவுக்கு எப்ப வந்த ஏன் என்கிட்ட சொல்லவே இல்லை!” என்று கேட்டாள் பிரதிக்ஷா.
“எல்லாம் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான்” என்று ரம்யா சிரித்துக் கொண்டே சொல்ல, “உனக்கும் பெரிய சர்ப்ரைஸ் நானும் வச்சிருக்கேன்” என்று விரக்தியாக கூறினாள் பிரதிக்ஷா.
“எனக்கும் சர்ப்ரைஸ்சா எதுவும் மாப்பிள்ள பார்த்து வச்சிருக்கியா?” என்று கிண்டலாக ரம்யா கேட்க, மெலிதாய் புன்னகைத்தாள் பிரதிக்ஷா.
“சரி சொல்லு எங்க இருக்க?” என்று ரம்யா கேட்க பிரதிக்ஷா இருக்கும் இடத்தை சொல்ல,
“அங்கேயே இரு இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வந்துருவேன்!” என்று சொல்லிவிட்டு, தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு பிரதிக்ஷா சொன்ன இடத்திற்கு சென்றாள் ரம்யா.
அங்கு பிரதிக்ஷா எவ்வித சலனமும் இல்லாமல் கண்கள் கலங்கி அமர்ந்து கொண்டிருந்தாள்.
“ஏய் என்னடி இங்கே உக்காந்து இருக்க, இன்னைக்கு தான லாஸ்ட் ஹியரிங் கோர்ட்டுக்கு போகலையா?” என்று ரம்யா கேட்க, ” எதுக்கு டைவர்ஸ் வாங்கவா!” என்று கேட்டாள் பிரதிக்ஷா.
“ஆமாடி, கவலப்படாத உன்ன கண்டிப்பா விதுரன் டைவர்ஸ் பண்ண மாட்டாரு” என்று ரம்யா சொல்ல நிமிர்ந்து பார்த்தாள் பிரதிக்ஷா.
“உன்னைய டைவர்ஸ் பண்ணிட்டு அந்த மனிஷாவை தானே கல்யாணம் பண்ணனும்னு விதுரன் ஆசைப்படுறாரு, இப்பதான் அந்த மனிஷா பத்தின எல்லா டீடெயில்ஸ்யும் எடுத்துட்டு வரேன் கண்டிப்பா அந்த மனிஷாவை பத்தி தெரிஞ்சா விதுரன் அவள வேண்டான்னு சொல்லிடுவாரு , அவ ஒரு பிராடு! சுருக்கமா சொல்லணும்னா அவ ஒரு ப்ராஸ்டியுட், அவள பத்தின உண்மைகளை இப்பதான் கண்டுபிடிச்சேன், அதான் உடனே கிளம்பி இந்தியா வந்துட்டேன்! இந்த எவிடன்ஸ் எல்லாத்தையும் விதுரன் கிட்ட கொடுத்தா கட்டாயம் விதுரன் மனிஷாவை ஏத்துக்க மாட்டாரு, உன்னையையும் டைவர்ஸ் பண்ண மாட்டாரு!” என்று ரம்யா கூற சிரித்தாள் பிரதிக்ஷா.
” என்னடி சிரிக்கிற? ” என்று ரம்யா கேட்க, ” அவ எப்படிப்பட்டவளா இருந்தாலும் விதுரன் அவள விட மாட்டாரு ஏன்னா அவர் அந்த அளவுக்கு அவளை காதலிக்கிறாரு! அதனாலதான் அவரோட உயிரையும் பொருட்படுத்தாம அவளை தேடி போயி ஆக்சிடென்ட் ஆனாரு!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் வாயில் வெள்ளை நுரை தள்ளியது.
“என்னடி ஆச்சு, ஏண்டி வாயிலிருந்து நுரை வருது என்று கேட்க, அவள் மடியில் இருந்து அவள் குடித்த விஷ பாட்டில் கீழே விழுந்தது. அதைப் பார்த்த ரம்யா,
“அடியேய் என்னத்த குடிச்ச, ஏன் இப்படி பண்ணுன?” என்று கேட்டு பிரதிக்ஷாவின் கன்னத்தில் அடிக்க,
“எனக்கு வேற வழி தெரியல ரம்யா, விதுரன எந்த அளவு காதலிச்சேன்னு உனக்கு தெரியும். அவர இழந்திட கூடாதுன்னு பொய் சொல்லி அவர கல்யாணம் பண்ணினது தான் பெரிய தப்பு, விருப்பமே இல்லாத ஒருத்தர நம்மளுடைய விருப்பத்திற்காக அசிங்கப்படுத்தி கல்யாணம் பண்ணினது பெரிய தப்புனு இப்பதான் புரிஞ்சது! அவர் வேற ஒரு பொண்ணோட சந்தோஷமா வாழ்வதை என்னால் பார்க்க முடியாது, அவருக்கு பிடிக்காத நான் அவர் கூட இருந்து அவர் கஷ்டப்படுறதையும் நான் விரும்பல, அதான் விஷத்தை குடிச்சு நான் இந்த உலகத்தை விட்டு போயிட்டேன்னா கட்டாயம் அவர் வாழ்க்கையை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோசமா வாழ்வார்னு எனக்கு தோணுச்சு, அதனால இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன், என் முடிவுக்கு காரணம் நான் மட்டும் தான் வேற யாரும் கிடையாது!” என்று பிரதிக்ஷா சொல்ல,
“பைத்தியம் அவர நினைச்சு பார்த்தியே அம்மாவையும் என்னையும் நினைச்சு பார்த்தியா? நீ இல்லாம நாங்க எப்படி இருப்போம்!” என்று ரம்யாவும் கதறிய அழுகத் தொடங்கினாள்.”என்னைய மன்னிச்சிரு அம்மாவ பாத்துக்க” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே மயங்கி சரிந்தாள் பிரதிக்ஷா.
உடனே ரம்யா பதறிக்கொண்டு அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து அவர்களின் உதவியுடன் பிரதிக்ஷாவை மருத்துவமனை கொண்டு சேர்த்தாள்.
