அதிகாலை வேளையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கிராமத்தின் மையப்பகுதியில் பாரம்பரியமான முறையில் கட்டப்பட்டிருந்த இரண்டு அடுக்குகளை கொண்ட அழகான மாடி வீடு…
பொள்ளாச்சி கிராமம் பற்றி கூற வேண்டுமென்றால் தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள், பெரிய பண்ணை வீடுகள், பாரம்பரியக் குடும்பங்கள் என ஒரு அழகான கிராமம்…
கிராமத்தின் மையப்பகுதியில் இருந்த வீட்டில் அதிகாலை வேளையில் பரப்பரப்பாக சமையல் வேலைகளும் வீட்டை சுத்தப்படுத்தி அலங்காரிக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது…
சமையல் வேலை செய்து கொண்டிருந்த தனது மனைவியின் அருகில் வந்த அவ்வீட்டின் தலைவர் ராஜேந்திரன், “பாரு.. பாப்பாக்கு பிடிச்ச எல்லாத்தையும் சமைச்சிட்டியா… அவ எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி எல்லா வேலையையும் முடிச்சிடணும்.. நம்ம பொண்ணு இப்போ தான் பிறந்து கையில வாங்குன மாதிரி இருக்கு அதுக்குள்ள அவளுக்கு இருபது வயசாகிடுச்சு… பாப்பா சீக்கிரம் வளர்ந்திட்டா… இன்னைக்கு நம்ம பொண்ணோட பிறந்தநாளை அவளுக்கு எப்பவுமே மறக்க முடியாத மாதிரி பாப்பாக்கு சர்பிரைஸ் கொடுக்கணும்…” என்று சந்தோசத்துடன் கண்கள் கலங்கிய படியே கூறினார்..
கணவனின் கூற்றை கேட்ட மனைவி பார்வதி, “பாப்பாக்கு பிடிச்ச எல்லா உணவையும் சமைச்சிட்டேன்… அவளுக்கு ரொம்ப பிடிச்ச பால் கொழுக்கட்டையும், பால் பாயசமும், கேசரியும் பண்ணிட்டேன்.. அப்புறம் பூரி, சென்னாமசாலாவும் பண்ண போறேன்.. சாம்பார் வச்சிருக்கேன். பாப்பா எழுந்து குளிச்சிட்டு புது துணி போட்டு ரெடியாகி வரும் போது சூடா மசாலா தோசை சுட்டு கொடுக்கிறேன்…” என்று மகளிற்கு பிடித்த உணவுகளை ஆர்வமாக சமைத்த படியே கணவனின் கேள்விக்கு பதில் கூறினார்..
“நம்ம பொண்ணு சீக்கிரம் வளர்ந்த்திட்டாங்க.. எனக்கும் இப்போ தான் கையில வாங்கின மாதிரி இருக்கு.. அதுக்குள்ள வளர்ந்திட்டா… அதை விட தேவதை மாதிரி ரொம்ப அழகா இருக்கா… பாப்பா காலேஜ் படிப்பை முடிச்சதுல இருந்து சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா பொண்ணு கேட்டிட்டு இருக்காங்க… எனக்கு சொந்தத்துல பொண்ணு கொடுக்க விருப்பம் இல்லை.. பாப்பா மேல் படிப்பு படிக்கணும்ணு ஆசைப்படுறா அவளோட ஆசை, கனவு நிறைவேறினதுக்கு அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்… என் பொண்ணை நல்லா பார்த்துக்கிற மாதிரி குணத்தில இளவரசன் வருவான்..” என்று கூறியவர் அறியவில்லை தனது மகளை கொடுமை படுத்த போகும் அசுரன் வர போகிறான் என்று.. அது மட்டுமின்றி குணத்தில் இளவரசனாக இருப்பவன் அல்ல குணத்தில் அரக்கனாக இருப்பவன்..
அந்த நேரம் சமையல் அறைக்குள் வீட்டை பெருக்கும் துடைப்பத்துடன் வந்தான் அவர்களது மகன் அர்ஜுன்.. அவனது கோலத்தை பார்த்து தாய் தந்தை இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்… ஏனெனில் வீட்டை துடைப்பம் வைத்து கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை அவனிடம் கொடுத்தால் குப்பையாக கிடந்த காகிதம் முழுவதும் அவனது தலையில் அல்லவா இருக்கிறது..
பார்வதி, “டேய் அர்ஜு.. உன்னை வீட்டை பெருக்கி சுத்தம் பண்ண தானே சொன்னேன்.. தரையில கிடந்த பேப்பர் எல்லாம் உன்னோட தலையில இருக்கு.. துடைப்பத்தை வச்சு கூட்டி பெருக்க சொன்னா நீ தரையில உருண்டு சுத்தம் பண்ணியா..??” என்று கேட்டு மகனை கலாய்க்க ஆரம்பித்தார்..
தனது தாய் கூறுவதை கேட்ட அர்ஜுன் தனது தலையில் இருந்த பேப்பரை எடுத்து கீழே போட்டவன் தனது தந்தையை முறைத்து பார்க்க ஆரம்பித்தான்.. மகன் தன்னை முறைத்து பார்த்ததும் ராஜேந்திரன் திரு திருவென முழிக்க ஆரம்பித்தார்.. மகன் வீட்டை கூட்டி ஒதுக்கி வைத்திருந்த குப்பையில் இருந்து பேப்பரை எடுத்து வந்து அவனது தலையில் விளையாட்டாக வைத்தவர் அவர் அல்லவா.. மகன் கணவனை முறைத்து பார்ப்பதை பார்த்ததும் அவருக்கு புரிந்து போனது இதை செய்தது கணவன் தான் என்று அவரும் கணவனை முறைத்து பார்க்க ஆரம்பித்தார்..
மகன், மனைவி இருவரும் தன்னை முறைத்ததும் சமாளிக்கும் விதமாக, “சும்மா தான் இப்படி பண்ணேன்.. நான் பேப்பரை அவன் தலையில வைக்கும் போதே கண்டுபிடிப்பான்னு நினைச்சேன்.. ஆனா அவன் கண்டு பிடிக்கவே இல்லை..” என்று பாவமாக கூறி விட்டு, “இப்படியே சும்மா வெட்டி பேச்சு பேசிட்டு இருந்தா எந்த வேலையும் நடக்காது.. பாப்பா எழுந்துக்கிறதுக்கு முன்னாடி எல்லா ஏற்பாட்டையும் பண்ணி முடிக்கணும்.. சீக்கிரம் வேலையை முடிங்க..” என்றவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்..
அவர் அங்கிருந்து நகர்ந்ததும் பார்வதி, அர்ஜுன் இருவரும் தங்களது வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்..
வீட்டில் அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவ்வீட்டின் இரண்டாம் தளத்தில் இருந்த அறையில் எதை பற்றியும் அறியாமல் உறங்கி கொண்டிருந்தாள் நாயகி சிவயாழினி…
அவள் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகவே அதாவது அவளது பிறந்தநாளுக்கு செய்ய போகும் ஏற்பாட்டை பற்றி அவள் அறிந்து கொள்ளாமல் இருக்கவே கீழே உள்ள அவளது அறையில் தூங்க விடாமல் ஏதேதோ காரணங்களை கூறி மாடியில் உள்ள அறைக்கு அனுப்பி வைத்தார் பார்வதி.. அதனாலேயே கீழே நடப்பது எதுவும் யாழினிக்கு தெரியவில்லை..
அர்ஜுன் வேகமாக வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் வேலைகளை பார்த்து கொண்டிருந்தான்.. மனதிற்குள், “அக்கா எழுந்து வந்ததும் முதல் வாழ்த்து நம்ம தான் சொல்லணும்.. இந்த டெக்கரேஷன் எல்லாம் அக்காக்கு பிடிச்ச நிறத்தில பண்ணிருக்கேன்.. இதை பார்த்து ரொம்ப சந்தோசப்படுவா…” என்று நினைத்தான்.
நேரம் நகர ஆரம்பித்தது.. காலை 7 மணியை தொட இன்னும் சில வினாடிகளே இருந்தது..
ராஜேந்திரன் பெரிய துணிப்பையுடன் வந்தவர், பாரு.. பாப்பா பிறந்தநாளுக்கு போட புதுத்துணி எடுத்திட்டு வந்திட்டேன்.. புடவை தான் எடுத்தேன்.. அதுக்கு மேச்சிங்கான நகைகளும் இருக்கு.. பாப்பாவை எழுப்பி இந்த துணியை கொடுத்திட்டு வா.. பாப்பா தயாராகி வரட்டும்…” என்று கூறி மனைவியின் கையில் கொடுத்தார்..
பார்வதியும் கணவர் கொடுத்த துணிப்பையை எடுத்து கொண்டு மகளின் அறைக்கு சென்றார்.. அறையில் தூங்கி கொண்டிருந்த மகளை பார்த்து நெட்டி முறித்தவர்.. துணிப்பையை கட்டிலில் வைத்து விட்டு,
“பாப்பா எழுந்திரு..” என்று கூறி மகளை மெதுவாக தட்டி எழுப்பினார்.. யாழினியின் தூக்கமும் மெதுவாக கலைய ஆரம்பித்தது.. மெதுவாக கண்களை திறந்து எழுந்தமர்ந்து சோம்பல் முறித்து விட்டு, “குட் மார்னிங் அம்மா..” என்று சிரித்த படியே அன்னையிடம் கூறினாள்.
பார்வதி மகளின் தலையை கோதி கொடுத்தபடியே, “ஹாப்பி பர்த்டே பாப்பா..” என்று கூறி மகளின் நெற்றியில் முத்தமிட்டார்…
யாழினி, “தேங்க் யூ அம்மா…” என்று அழகாக சிரித்தவள் அன்னையை அணைத்து கொண்டாள்..
சிவயாழினி.. வயது இருபது, பேரழகி, சுண்டினால் சிவக்கும் வெள்ளை நிறம், அடர்த்தியான நீள கூந்தல், வில் போன்ற புருவம், ஆளை கவர்ந்திழுக்கும் கண்கள், அளவான மூக்கு, அதில் சிவப்பு கல் வைத்த சிறிய மூக்குத்தி அவளின் அழகை கூட்டுவது போல், ரோஜா இதழ்களை போன்ற சிவந்த உதடுகள், காதில் தங்க ஜிமிக்கி, கழுத்தில் மெல்லிய செயின், கையில் தங்க வளையல் மற்றும் வைர பிரேஸ்லெட், காலில் தங்க கொலுசு. தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்தா தேவதை போல் கொள்ளை அழகு.
பார்வதி தான் கொண்டு வந்த புடவை நகையை எடுத்து மகளின் கையில் கொடுத்து, பாப்பா.. குளிச்சிட்டு இந்த புடவையை கட்டி இதுல இருக்க நகையை போட்டு அலங்காரம் பண்ணிட்டு வா.. பூ பிரிட்ஜ்ல இருக்கு எடுத்து கொடுக்கிறேன்…கோவிலுக்கு போகணும்…” என்றார்..
யாழினி புடவை நகையை பார்த்து விட்டு, “என்னம்மா இவ்வளவு நகையை போட்டு அலங்காரம் பண்ணிட்டு வர சொல்றீங்க.. என்ன எனக்கே தெரியாம இன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணி அனுப்பலாம்னு இருக்கீங்களா…” என்று விளையாட்டாக கூறியது நிஜத்தில் நடக்க போகிறது என்று அறியாமல் போயினர் சிவயாழினியும், அவளது குடும்பத்தினரும்..
பார்வதி, “பாப்பா.. என்ன பேசுற.. உனக்கே தெரியாம உனக்கு கல்யாணம் பண்ணி வைப்போமா.. நீ மேல்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டிட்டு இருக்கும் போது கல்யாணம் பண்ணி வைக்க நினைப்போமா.. அப்பா தான் என் பொண்ணு புடவை கட்டி நகை போடுறதை பார்க்கணும்னு ஆசைப்பட்டு நிறைய கடை ஏறி இறங்கி தேடி இந்த புடவை எடுத்திட்டு வந்திருக்கார்…” என்றார்.
யாழினி, “அம்மா.. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. சீரியஸ்சா எடுத்துக்காதீங்க..” என்று கூறி தாயை சமாதானப்படுத்தி கீழே அனுப்பி வைத்தவள் எழுந்து காலை கடன்களை முடித்து குளித்து விட்டு ஈர தலையை உலர்த்திய படியே வெளியே வந்தவள்.. தலையை நன்றாக துவட்டி விட்டு இரு பக்கமும் முடி எடுத்து கிளிப் போட்டவள் புடவை கட்ட ஆரம்பித்தாள்.. சிவப்பு நிற பட்டு புடவை, புடவையில் அழகான கை வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது.. தங்க ஜரிகை வைத்த புடவை கண்ணை கவரும் வகையில் சிவயாழினிக்கு அட்டகாசமாக பொருந்துவது போல் அவளது தந்தை பார்த்து பார்த்து எடுத்திருந்தார்..
புடவை அழகாக கட்டி முடித்து கண்ணாடியின் முன்னால் அமர்ந்த யாழினி சிகை அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள்.. சிகை அலங்காரம் முடிந்ததும் முகத்திற்கு சிம்பிளான இயற்கை பொருட்கள் வைத்து ஒப்பனை செய்தவள் ஸ்டிக்கர் பொட்டு வைத்து தயாரானவள் நகைகளை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்து கொண்டிருந்தாள்..
பார்வதி தனது கணவனை தேடி தோட்டத்திற்கு சென்றார்.. அங்கே யாரிடமே போனில் மும்முரமாக பேசி கொண்டிருந்தார் ராஜேந்திரன்.. அவர் போனில் என்ன பேசி கொண்டிருந்தார் என்று பார்வதிக்கு கேட்கவில்லை..
ராஜேந்திரன், “இன்னைக்கு என் பொண்ணுக்கும் உங்களுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும் கார்த்திக்.. நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன்.. நீங்க என் கம்பெனிக்கு நிறைய ப்ராஜெக்ட் கொடுத்து கம்பெனி வளர்ச்சிக்கு உதவிவேன்னு சொல்லிருக்கீங்க.. என் கம்பெனிக்கு கோடிக்கணக்கா இன்வர்ஸ் பண்றேன்னு அக்ரீமெண்ட் போட்டிருக்கீங்க.. அதை நம்பி தான் என் பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன்.. எனக்கு என் பொண்ணை விட பிசினஸ் தான் முக்கியம்.. பொண்ணா, பிசினஸ்சான்னு வந்தா நான் பொண்ணை விட்டிட்டு பிசினஸ்சை தான் தேர்ந்தெடுப்பேன்.. பொண்ணுக்கு பிறந்தநாள்.. அதையே காரணமா வச்சு கோவிலுக்கு கூட்டிட்டு வாரேன்.. கோவில்ல இருந்து கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்கோ.. நான் இங்க சமாளிச்சுக்கிறேன்..” என்று தான் ஒரு தந்தை என்பதை மறந்து முழு தொழிலதிபராக பேசி கொண்டிருந்தார்..
மனைவி தன்னை தேடி வருவதை பார்த்ததும் ராஜேந்திரன் கார்த்திக்கிடம் சில விஷயங்களை மெதுவாக கூறி அழைப்பை துண்டித்து விட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கிய பூக்களை ரசிப்பது போல் நின்று கொண்டிருந்தார்..
பார்வதி, “ஏங்க.. இங்க என்ன பண்றீங்க.. பாப்பா ரெடியாகி வர போற.. வாங்க.. கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிட்டிட்டு கேக் வெட்டி கொண்டாடணும்..” என்றார்.
ராஜேந்திரன், “பாரு.. பாப்பாக்கு கேக் வெட்டி கொண்டாடிட்டு, காலை உணவை சாப்பிட்டிட்டு கோவிலுக்கு போகலாம்.. இன்னைக்கு விஷேச நாள் வேற கோவில்ல ரொம்ப கூட்டமா இருக்கும்..” என்று தனது திட்டம் சரியாக நடக்க வேண்டும் என்று மனைவியிடம் அதற்கேற்ற மாதிரி கூறினார்.. கணவன் கூறியது சரியென படவே கேள்வி எதுவும் கேட்காமல் சம்மதித்தார்.
பார்வதி, ராஜேந்திரன் இருவரும் வீட்டிற்குள் நுழையும் போது மாடியில் இருந்து இறங்கி வந்தாள் சிவயாழினி.. மகளின் அழகில் பெற்றோர் இருவரும் மெய் மறந்து நின்றனர்..
அர்ஜுன், “ஹாப்பி பர்த்டே அக்கா..” என்று சத்தமாக கத்தினான்.. அவனின் சத்தத்திலேயே பெற்றோர் இருவரும் சுயநினைவிற்கு வந்தனர்..
யாழினி, தேங்க் யூ அர்ஜு.. என்ன டா புதுசா அக்கான்னு கூப்டுற.. என்ன விஷயம்..?? நீ காரணம் இல்லாம அக்கான்னு கூப்பிட மாட்டியே..” என்று தம்பியை கலாய்த்த படியே கீழே இறங்கி வந்தாள்..
அவள் கூறியதை கேட்டு அர்ஜுன் ஏதோ கூற வந்தான் அதற்கு முன் பார்வதி, பாப்பா.. அவனை விடு.. இங்க வா. கேக் வெட்டலாம்..” என்று அழைத்து பிரிட்ஜில் இருந்த பூவை எடுத்து மகளின் தலையில் அழகாக வைத்து விட்டு பிறந்தநாள் கொண்டாட டெக்கரேஷன் செய்திருந்த இடத்தில் மகளுடன் போய் நின்றார்.. குடும்பமாக சில புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்..
பின்னர் யாழினியிடம் கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர்.. யாழினியும் சந்தோசமாக கேக் வெட்டி பெற்றோர் மற்றும் தம்பிக்கு சந்தோசமாக ஊட்டி விட்டாள்.. அவர்களும் அவளுக்கு ஊட்டி விட்டனர்.. ஒவ்வொருவரும் வாங்கி வைத்திருந்த கிப்ட்டை யாழினியின் கையில் கொடுத்தனர்..
ராஜேந்திரன், வைர செயின் பரிசாக கொடுத்தவர் மகளின் கழுத்தில் அதை அணிவித்து விட்டார்.. அவர் வாங்கிய பரிசு இல்லை என்பது வேறு விஷயம்.. அவர் நினைத்து கொண்டிருப்பது வைர செயின் அனுப்பியது கார்த்திக் என்று.. ஆனால் அதை அனுப்பியது கார்த்திக் இல்லை.. கார்த்திக் இல்லையெனில் செயின் அனுப்பியது யாரோ..??
பார்வதி, முத்துக்கள் வைத்த தங்க கொலுசை பரிசாக கொடுத்தவர் அங்கிருந்த இருக்கையில் மகளை அமர வைத்து பழைய கொலுசை கழட்டி விட்டு புது கொலுசை அணிவித்தார்..
அர்ஜுன், விலையுயர்ந்த கைகடிகாரத்தை பரிசாக கொடுத்து அதை தானே சகோதரியின் கையில் அணிவித்தான்..
யாழினி, மூன்று பேரையும் ஒன்றாக அணைத்து கொண்டாள்..
பின்னர் அனைவரும் பேசி சிரித்த படியே காலை உணவை முடித்து விட்டு கோவிலுக்கு புறப்பட்டனர்..
அவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டதும் அவர்களை கண்காணித்து கொண்டிருந்த நபர்களில் ஒருவன் தனது போனை எடுத்து யாருக்கோ குறுங்செய்தி அனுப்பி விட்டு அவர்களை பின்தொடர்ந்தனர்..
கார்த்திக்கும் யாழினியை கடத்த அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டு தனது வீட்டில் அமர்ந்திருந்தான்..
அதே நேரம் தனது போனில் வந்த குறுங்செய்தியை பார்த்து குரூரமாக புன்னகைத்து கொண்டு தனது காரில் கோவிலை நோக்கி புறப்பட்டான் ருத்ரவேந்தன்.. ஆம் அவனே கதையின் நாயகன்…
தொடரும்…😈