1.தணல்
மாபெரும் விழா போன்று மிகப்பிரம்மாண்டமாய் காட்சியளித்தது அத்தனியார் ரெசார்ட். வண்ண வண்ண மலர்கள் கொண்ட அலங்காரங்கள், மற்றும் வண்ண விளக்குகளும் அவ்விடத்தை மேலும் மெருகேற்றியது. சுற்றிலும் பச்சைப்பசெலென்று செயற்கை முறையில் பராமரிக்கப்பட்ட புல்வெளிகளுக்கு நடுவே வட்ட வடிவிலான மேசைகளும், இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்க, அவ்விடமே பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தொடங்கி கலகலப்பில் திளைத்தது.
கோடிகளில் புரளும் தயானந்த பரத்வாஜின் ஒற்றை வாரிசின் திருமணம் நாளை நடக்கவுள்ள நிலையில் இன்று காலை மெஹந்தி மற்றும் இரவு சங்கித் என்று அவ்விடமே கலைக்கட்டிக் கொண்டிருக்க, பெரும் புள்ளிகள் மற்றும் மணமகனது உறவுகள் என அனைவரும் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
“ஆர்யன், கன்கிராட்ஸ்டா” என்று விழாவின் நாயகனை அணைத்து தங்களது வாழ்த்துகளைக் கூறிக்கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.
“தேங்க்ஸ்டா.” என்று மென்புன்னகை புரிந்தவனது முகத்திலோ எண்ணற்ற மகிழ்ச்சி தென்பட்டது.
“கலக்குற ட்யூட். ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணப் போற.” என்றொருவன் கூற,
“அப்புறம் எங்க மச்சி பொண்ணு? எங்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டியா?” என்றான் மற்றொருவன்.
“உங்களை அறிமுகப்படுத்தாமல் இருப்பேனா லெட்ஸ் கோ.” என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.
அழகிய பூக்களுக்கு நடுவில் அழகே உருவாய் அமர்ந்திருந்தாள் அதிஷ்டா. அவளது வெண்கரங்களைப் பற்றி மெஹந்தி இட்டுக்கொண்டிருந்தனர் இரண்டு பெண்கள். அனைத்து வண்ணங்களும் அழகுற கலந்த ஸ்லீவ்லெஸ் லெஹங்காவை அணிந்தபடி, காதோடு அணிந்திருந்த வைரத் தோடு இரண்டையும் ஆட்டிக்கொண்டே, தன் தோழிகளோடு சேர்ந்து புன்னகையோடு கதைத்துக் கொண்டிருந்தவள் அன்றலர்ந்த மலர் போலவே காட்சியளித்தாள்.
மையிட்ட அவளதுக் கண்களின் அசைவுகளும், முத்துப்பற்கள் தெரிய புன்னகைக்கும் அவளது பவள உதடுகளும் ஒரே ஒரு நொடி கண்டு மெய்மறந்து நின்று விட்டான் ஆர்யன். நண்பர்களுக்கு பெண்ணவளை அறிமுகப்படுத்தும் சாக்கில், இங்கு இவனோ அவளை அப்பட்டமாக ரசித்துக் கொண்டிருந்தான்.
“ட்யூட், ரொம்ப வழியுது கொஞ்சம் தொடச்சுக்கோ.” என்று நண்பன் செய்த கேலிக்கு, முறைப்பை பரிசளித்தான் ஆர்யன்.
அவர்களது சத்தம் கேட்டு அவர்கள் புறம் திரும்பி பார்த்தாள் அதிஷ்டா. அவளது பார்வையும், அவனது பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்த கணம் வார்த்தைகளில் விவரிக்க இயலாத சுகத்தில் தத்தளித்து நின்ற ஆர்யனுக்கு, இசைப்புயலின் பாடல்கள் இன்னிசையாக காதிற்குள் நுழைந்து சென்றது.
பார்த்த நொடியில் அவனை ஈர்த்தவள் அதிஷ்டா. அவளோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததும் தான் பெரும் பணக்காரன் என்பதை மறைத்து, அவளுடன் ஒன்றாக வேலைப் பார்த்து, பெண்ணவளுக்கு உற்ற நண்பனாய் மாறி, அவளை கண்ணுக்கு கண்ணாக பாதுகாத்தவன் அவன்.
உறவுகளைப் பிரிந்து வந்தவளுக்கு உறவாய் அவன் கிடைக்க, அவன் காதல் சொன்ன கணம் அவளால் அவனை நிராகரிக்கவே இயலவில்லை. அவன் மீது காதலா என்று அவளிடம் கேட்டால் அதற்கும் அவளிடம் பதில் இல்லை. ஏனோ அவன் தன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளிடம் அலாதியாக இருந்தது. அதுவே அவர்களை இணைத்தும் வைத்திருந்தது.
“என்ன?” என்று தன்னையே ரசிக்கும் அவனது பார்வைக் கண்டு புருவம் உயர்த்திக் கேட்டாள் அதிஷ்டா.
“அத்து… மீட் மை பிரெண்ட்ஸ்” என்றவன் அனைவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.
அனைவரிடம் புன்னகையை பரிசளித்தவள், “சாரி, கை கொடுக்க முடியாத சூழ்நிலை. தென் ஐ அம் அதிஷ்டா. நைஸ் டூ மீட் யூ பிரதர்ஸ்.” என்றாள் மெஹந்தி இட்ட தன் கைகளை காட்டி.
“இட்ஸ் ஓகே சிஸ்டர். ஆமா உங்க பேமலி எங்க?” என்றொருவன் கேட்டதில் அதிஷ்டாவின் முகம் நொடியில் பொழிவிழந்தது.
அவள் முகம் வாடுவதை உணர்ந்த ஆர்யனோ, “அவங்களை பார்த்து என்ன பண்ண போற?” என்றதும்,
“வேற எதுக்கு மச்சி இவன் கேட்க போறான், அதிஷ்டாக்கு வேற சிஸ்டர் யாராவது இருக்காங்களானு பார்க்க தான்.” என்றொருவன் கேலி செய்ய,
“டேய் கொஞ்சம் அமைதியா இருங்கடா.” என்று ஆர்யன் அதிஷ்டாவின் முகமாறுதலை கவனித்து அவர்களை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றான்.
“அத்து நீ மெஹந்தி போடு. இவங்களை ஒரு வழி பண்ணிட்டு வரேன்.” என்றவன் அவளது தலையை ஆறுதலாக தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்து விட,
அவனிடம் அவள் புன்னகையுடன் தலையசைத்தாலும், அவன் சென்ற பின் அவளது விழியோரத்தில் அவளையும் மீறி கண்ணீர் கசிந்தது. இனம்புரியாத வலியை மனதில் அடக்கிக்கொண்டவள், வெளியே அனைவரின் முன்பும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.
நேரங்கள் நகர, மருதாணி காய்ந்ததும் கழுவி விடுவதற்காக வாஷ்ரூமிற்கு சென்றாள் அதிஷ்டா. தன்னை சுற்றி இத்தனை கூட்டமிருந்தும் அவளால் அங்கு அனைவரிடமும் ஒன்ற இயலவில்லை. ஏதோ ஒரு தனிமை அவளை வாட்டியது.
வாஷ்ரூமிற்குள் நுழைந்ததும் கைகளை அவள் கழுவிக் கொண்டிருக்க, சிவந்த அவளதுக் கரங்களைக் காணும் நொடி, அவளையும் அறியாமல் சில நினைவுகள் அவள் மனதில் வந்து சென்றது.
மனதோடு வைத்து வருடக்கூடிய இனிய நினைவுகளே அவளுக்கு வலியினைக் கொடுக்க, இதற்கு மேல் அதனை சிந்தையில் ஏற்றிக் கொள்ள வரும்பாதவளோ, தண்ணீரைத் திறந்து முகத்தில் அடித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
நினைவுகளை எண்ணி தலை ஒருபுறம் விண்ணென்று வலியெடுக்க, தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று கலங்கி நின்றவள், கண்ணாடியை நிமிர்ந்துப் பார்க்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனது பிம்பம் பெண்ணவளின் விழித்திரையில் பதிந்து நின்றது.
அவன் தான்! அவனே தான்! அவனது கூரிய கண்களின் உக்கிரமும், சிரிக்காத உதடுகளும் பெண்ணவளை அச்சுறுத்த, தன் கண்களை அகல விரித்தவள் தனக்கு பின்னே பயத்துடன் திரும்பிப் பார்க்க, அவ்விடம் வெறுமையாக காட்சியளித்தது.
எந்த முகத்தைப் பார்க்க பிடிக்காமல் ஓடி வந்தாலோ, அதே முகம் கண்ணாடியில் பிம்பமாய் பதிந்து விழித்திரையில் வந்து செல்ல, ஒரே ஒரு நொடி என்றாலும் அரண்டுதான் போனாள் அதிஷ்டா.
“இல்லை இங்க யாருமே இல்லை. ஆனால் ஏன் எனக்கு அவனோட முகம் நினைவுக்கு வருது?” என்று தலையைப் பற்றிக்கொண்டாள் பெண்.
அவளை அச்சுறுத்தும் முகம் யாருடையது? யார் அவன்? அனைத்திற்குமான பதில் அவள் மட்டுமே அறிவாள்.
“நான் தான் வீணா கற்பனை பண்றேன். இங்க ஒன்னுமில்லை. யாரும் இங்க இல்லை.” என்றவள் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
அதன்பின் அவளால் அங்கு நடந்த மற்ற சம்பிரதாயங்களில் ஒன்றவே இயலவில்லை. உறவுகளை தொலைத்துவிட்டோம் என்ற கவலையைத் தாண்டி முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிந்த அவனது கனல் முகம் அவளை மெல்ல மெல்ல வதைத்தது.
நெஞ்சோரம் இனம் புரியாத வலி அவளைத் தாக்க, தான் இயல்பாக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்ட, மற்றவர் முன்னிலையில் நடித்தாள் பெண்ணவள்.
இரவு சங்கித்துக்கு வேறு உடை அணிந்து, அலங்காரங்கள் மாற்றி அவள் வந்திருந்தாள். அவளது வருங்கால மாமியாருக்கு பெரிதாக அவள் மீது விருப்பம் இல்லை. தங்களது இனத்தில் பெண்ணைப் பார்த்து ஆர்யனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றே அவர் ஆசைப்பட்டதால், இவளை அவருக்கு சற்றும் பிடிக்கவில்லை.
ஹிந்தியில் அவளைப் பற்றி குறைக்கூறிக்கொண்டே அங்கும் இங்கும் நடந்தார். அதிஷ்டாவிற்கும் அவரது செயல் வலித்தது. பாவம் ஆர்யனின் தாய் அறியவில்லை, அவளுக்கும் ஹிந்தி ஓரளவு தெரியும் என்று.
“அத்து என்ன பண்ற? கமான் டான்ஸ் பண்லாம் வா.” பெண்ணவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான் ஆர்யன்.
“நோ ஆர்யன். கொஞ்சம் டயர்டா இருக்கு.”
“ஓகே கொஞ்சம் ரெஸ்ட் எடு. அப்புறம் ஆடுவோம்.” என்றவன் அவளை இருக்கையில் அமர வைத்தான்.
ஒவ்வொருவாக நடனம் புரிய, அவ்விடமே ஆடலும் பாடலும் என்று கலைக்கட்டியது. ஆர்யனின் முழுப்பெயர் ஆர்யன் பரத்வாஜ். வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவன் என்றாலும் வளர்ந்தது மற்றும் படித்தது அனைத்தும் தென்னிந்தியா என்பதால் தமிழ் சரளமாக பேசுவான். ஒரே மகனின் ஆசைக்காக அதிஷ்டா தென்னிந்தியப் பெண் என்று அறிந்தும், அவளுக்கு உறவென்று யாரும் இல்லை என்பது தெரிந்திருந்தும் சம்மதித்தார் தயானந்த் பரத்வாஜ்.
ஆர்யனோ, அதிஷ்டாவிடம் அவளது குடும்பத்தை பற்றி கேட்க கூடாது என்று அவனது குடும்பத்திடம் மிக உறுதியாக கூறிவிட்டான். இவ்வாறு தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் ஆர்யனை மணப்பதில் தவறு என்ன உள்ளது என்று எண்ணிய அதிஷ்டாவிற்கோ, திருமணம் நெருங்கும் சமயம் தான், பயம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.
“இப்போ நீ மாட்டேனு சொல்லக்கூடாது. கமான் பேபி.” என்று ஆர்யன் பெண்ணவளதுக் கரம் பற்றி இம்முறை அழைத்துச் சென்றான்.
‘முண்டா தோடா’ என்னும் ஹிந்தி பாடலும், ‘தாய் கிழவி’ என்னும் தமிழ் பாடலும் கலந்திசைக்க, அங்கிருந்த அனைவரும் நடனம் புரிய தொடங்கியிருந்தனர்.
பெண்ணவளும் தன் கவலைகளை மறந்து இசையோடு லயித்து நடனமாட தொடங்கினாள். இரவு விளக்குகள் மின்ன, அனைவரும் நடனம் புரிந்துக் கொண்டிருக்க, ஆர்யனைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே நடனமாடியவளது தேகம் ஒரே ஒரு நொடி அதிர்ந்தது. உடலின் உஷ்ணம் அதிகரிக்க, அவளது கழுத்து வளைவில் முட்டி மோதும் உஷ்ணக்காற்று அவளை சிலையாக்கி நிற்க வைக்க, விழித்துக்கொள் என்ற உள்ளுணர்வு அவள் மூளையை செயல்படுத்த தொடங்கியிருக்க, அரண்டு போய் திரும்பிப் பார்த்தவளதுக் கரம் சட்டென்று இழுக்கப்பட்டிருந்தது.
பெண்ணவளது தளிர் கரங்கள் பிடித்து இழுக்கப்பட, பயத்தில் கத்தச் சென்றவளது உதடுகளின் மீது ஒற்றை விரலை வைத்து தடுத்திருந்தவனோ, அவளை மறைவாக அழைத்து சென்றிருந்தான்.
“இட்ஸ் மீ ஆர்யன்.” என்றவன் அவளை அமைதிப்படுத்த, அவன் என்று தெரிந்த நொடி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் பெண்.
“ஆர்யன் நீங்களா? கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்.”
“அத்து பேபி, உன்ன தைரியமா கையைப் பிடிச்சு இழுத்துட்டு போக, என்னைத் தவிர வேற யார் இருக்கா?” என்றான் சற்று கர்வத்துடன்.
“இருக்காங்க.” என்றவள் எதையோ எண்ணி பயத்துடன் மொழிந்தாள்.
“வாட் யாரு?” என்றவன் புரியாத பார்வைப் பார்க்க, அவனது கேள்வியில் தன்னை நிதானித்துக் கொண்டவள்,
“ஆண்டி இல்லைனா என் பிரெண்ட்ஸ் யார் வேணாலும் இழுத்திருக்கலாம்னு சொல்ல வந்தேன்.” என்றாள் சமாளிப்பாக.
“இப்போதைக்கு உன் மாமியார் உன்னை இழுக்க மாட்டாங்க. வருங்காலத்துல உன் குணத்தால் அவங்களை நீ ஈர்க்கணும் சரியா?”
“அது நான் பார்த்துக்குறேன். ஏன் என்ன தனியா இழுத்துட்டு வந்திருக்கீங்க. அதுக்கு பதில் சொல்லுங்க?”
“அத்து பேபி, இப்போ வரை நீ ஹக் கூட தந்ததில்லை. நாளைக்கு நம்ம கல்யாணம். ஒரே ஒரு…” என்று ராகமாக இழுத்தவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் பெண்.
“ராகம் பாடுனது போதும். கஹோ”
“க்யா தும் முஜே ஏக் சும்பன் தோகே” என்றவன் ஹிந்தியில் ‘எனக்கு ஒரு முத்தம் கிடைக்குமா?’ என்று கேட்க, பெண்ணவளதுக் கண்கள் அகல விரிந்தது.
“ஆர்யன் உங்களை ஜென்டில்மேன்னு நினைச்சேன். இப்படி கேட்கிறீங்க. டூ பேட்.” என்றவள் முகத்தை வேண்டுமென்று சுளிக்க,
“இப்படி சொல்லியே என்னை ஆஃப் பண்ணு. நம்ம மேரேஜ் முடியட்டும் அப்புறம் இருக்கு.” என்றவன் சோகமே உருவாய் சிறு கோபம் தொணிக்கக் கூறினான்.
“அப்புறம் பார்க்கலாம். இப்போ வாங்க போகலாம்.” என்று முன்னோக்கி சென்றவளது உதடுகளில் அன்னிச்சையாக புன்னகை வெளிப்பட்டது.
இருவரது நெருக்கத்தைக் கண்ட இருவிழிகளோ அக்னி பிழம்புக்கு நிகராக எரிந்துக் கொண்டிருக்க, இவையாவும் அறிந்திடாது, ஆர்யனின் செயலில் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள் அதிஷ்டா. இயல்பு நிலைக்கு திரும்பியவள் ஒன்றை மறந்திருந்தாள். அவள் உணர்ந்த உஷ்ணக்காற்று அவளவனின் காற்று.
அவளது தேகம் தீண்டாமலும் சுடும் கனல் அவன். அவனது வருகை அவள் வாழ்வையே மீண்டும் புரட்டிப்போடுமா? விடை தெரியாத கேள்வியின் விடை கனலவனின் வரவில் காத்திருக்கும்.
