11.வேய்ந்தனனின் வல்லினம்

11.வல்லினம்

விழியோரம் கண்ணீர் கசிய, இருள் சூழ்ந்த வானத்தை வெறித்தவளுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. கருமேகங்களின் நடுவே காட்சி தரும் பிறைநிலா, ஆங்காங்கே பளிச்சென்று தானும் இருப்பதை எடுத்துக்காட்டும் நட்சத்திரங்கள் இவைதவிர வானில் வேறு என்ன தான் இருக்கும்? ருத்ரஜித்தின் விந்தையான செயலைக் கண்டு குழம்பிப் போயின பெண்ணின் கண்கள்.

வியர்வையில் நனைந்த ஈரக்கூந்தலை, சில்லென்று குளிர்ந்த தென்றல் வந்து தீண்டியதில், பெண்ணவளின் உதடுகள் நடுங்கியது. மறுபுறம் பளிங்கு கன்னத்தினை சன்னல் கம்பிகள் வேறு அழுத்திக் கொண்டிருக்க, வலியில் முகம் சுளித்தவள், “அங்க என்ன தான் இருக்கு? ஒன்னுமே இ..இல்லையே.” என்று எச்சிலை விழுங்கிக்கொண்டே, உதடுகள் நடுங்கக் கூறினாள்.

இருளில் தோன்றும் நிசப்தத்தை உடைப்பதுபோல், அவளது பதிலினைக் கேட்டு இடியென சிரித்தான் ருத்ரஜித். நிச்சயம் அந்த சிரிப்பு மகிழ்ச்சியால் அல்ல, அதன்பின் மறைந்துக்கிடக்கும் கட்டுக்கடங்காதக் கோபத்தால் என்பது பெண்ணவளுக்கும் நன்கு புரிந்தது.

“உனக்கு எதுவுமே தெரியாது? ரொம்ப பாவப்பட்ட ஜீவன். அப்படிதானடி?” என்றவனின் பார்வை வானை நோக்கியிருக்க, ஆணவனின் கைகளோ பெண்ணவளின் சிகையை அழுத்தியபடி ஆக்ரோசமாக தன்புறம் நோக்கி திருப்பியது. அதை சற்றும் எதிர்பாரதவள் அவனது வானை நோக்கும் விழிகளை அதிர்ந்துப்போய் பார்த்தாள்.

ருத்ரஜித்தின் இருவிழிகளுக்கு நடுவே நிலாவும் நட்சத்திரங்களும் தெரிய, அதன்பின்னே இழைந்தோடிய சோகத்தை கவனிக்கத் தவறியிருந்தாள் பிரகல்யா. நொடியில் தன் பார்வையை அவள்புறம் திருப்பியவன், உறுத்து விழித்தான்.

அவனது அச்சுறுத்தும் விழிகளும், அவனது பிடியும் அவளை மிரட்டியது. இருந்தும் தன் தைரியத்தை விடாதவள்,

“ஏன் இப்படி பண்றீங்க ருத்… ருத்ரஜித்.” என்றாள் பொங்கி வரும் துக்கத்தினை அடக்கியபடி. அவனோடு மகிழ்ச்சியுடன் வாழப் போகிறோம் என்றெல்லாம் கனவுகளை கண்டவளுக்கு இது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அல்லவா.

அவளது பதிலை நாடிய கண்களும், வலியில் துடித்த உதடுகளையும் கண்டவனுக்கு துளிக்கூட பெண்ணவளின் மீது இரக்கம் துளிர்க்கவில்லை. அவளது அந்த நிலையைக் கண்டு வெளிப்படையாக மகிழ்ந்தவன், “உன்னை அணுவணுவா துடிக்க வைக்கணும் ஸ்வீட்டி. அதுதான் எனக்கு வேணும். மோரோவர் இப்போ கூட என்னை ரொம்ப காதலிக்குறியோ?” என்றான் அவளது துக்கத்தை தூண்டும் விதமாக.

அவனது பேச்சை அருவருத்தவள், “நிச்சயமா இல்லை… இவ்ளோ மோசமான உன்னை எப்படி காதலிப்பேன்.” என்று கண்களில் நீர் தேங்க உரைப்பவளுக்கு மனமோ வலித்தது. பெண்பார்க்கப்பட்ட நாள் தொடங்கி, இந்த ஒரு மாதக்காலம் அவனையே நேசித்தவளின் நேசத்தை சுக்குநூறாக்கி விட்டானே அப்பாவி.

“பொய் சொல்ற ஸ்வீட்டி. இப்போ கூட உன் கண்ணுல காதல் தெரியுதே?” என்றான் இதழ்களை எள்ளலாக வளைத்து.

பெண்ணவளின் கருவிழியே இங்கும் அங்கும் அசைந்தது. பின்

அவனைப் பார்க்க பிடிக்காமல் தலைகவிழ்ந்தவள், “ப்ளீஸ் என்னை எங்க வீட்டில கொண்டு போய் விட்ருங்க. அப்பா அம்மா எல்லாரும் மனசு உடைஞ்சு போயிருப்பாங்க.” என்று இறங்கியவள் கேட்க, அவளது நெற்றியிலிருந்து காதோரம் வடிந்திடும் வியர்வைத் துளியினை தனது சுண்டுவிரல் கொண்டு சுண்டி விட்டவன், 

“வாய்ப்பில்லை ஸ்வீட்டி. ஆமா லிஸ்ட்ல தங்கச்சியை மிஸ் பண்ணிட்ட போல? பாவம் ரொம்ப அழுதுட்டா? அப்புறம் இதை சொல்லியே ஆகணும், ஷீ சோ பியூட்டிஃபுல்.” என்று கிறக்கத்துடன் கூறியதில், பிரகல்யாவின் விழிகள் கோபத்தில் சிவந்தது.

“ச்சீ வெட்கமா இல்லை? அவ சின்ன பொண்ணு. அவளை எப்படி இப்படி பேச உனக்கு மனசு வருது?” என்றவள் ருத்ரஜித்தின் சட்டையைக் கொத்தாக பற்றினாள்.

“ஹாஹா. சின்ன பொண்ணை தான் எனக்கு கட்டி வைக்க பார்த்தாங்களா?” என்றவனின் பதிலில் அதிர்ந்துப் போனவளது கைகள் அன்னிச்சையாக அவனது சட்டையினை விட்டிருந்தது.

“என் அபூ.. அய்யோ என்ன பண்ணீங்க அவளை?” என்று கண்ணீரோடு கேட்டவளுக்கோ இதயமே நின்றது போலாக, தலையில் கைவைத்தவள் பொத்தென்று அமர்ந்தாள்.

அவளது செயலில் ஆணவனின் கோபம் அதிகரித்தாலும், அவளது பலவீனம் அபூர்வா என்று நன்கு தெரிந்தவன், அவளது நிலையைக் கண்டு ஏளனமாக புன்னகைத்தான்.

“ரொம்ப பேசுறியே ஸ்வீட்டி? ரொம்ப பேசுனா எனக்கு  பிடிக்காது.” என்றான் அவளால் கசங்கிய தன் சட்டையினை உதறியபடி.

அவன் முன்பு தலைக் கவிழக் கூடாது என்று உறுதியாக நினைத்தவளுக்கு தன் தங்கையை பற்றிய செய்தி கதிகலங்க வைத்தது. தனக்கு என்ன நேர்ந்தாலும் தன் தங்கைக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்று கவலைக் கொண்டவளின் மனம் நூறுமடங்கு துடிக்க, முகமோ வியர்த்து வழிந்தது.

“என் அபூர்வாக்கு என்னாச்சு?” என்றாள் ஆதங்கமாக.

அவளது கேள்விக்கு பதிலேதும் கூறாதவன், “கெட்டப்…” என்றவனது பார்வையே உத்தரவை பிறப்பித்திருக்க, செய்வதறியாது எழுந்து நின்றாள் பாவை. மெல்ல அவளை நெருங்கி வந்தவனின் ஒவ்வொரு நகர்விலும், பெண்ணவளுக்கோ இதயம் படபடவெனத் துடித்தது.

அவனது அருகாமை அவளை அச்சுறுத்த, மெல்ல தன் கால்களை பின்னோக்கி வைத்தாள். அவனது அழுத்தமான பார்வையும், இதழில் தவழும் விசம புன்னகையும் தவறெனப்பட, “கி… கிட்ட வராதீங்க.” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.

அவளது பயத்தைக் கண்டு ருத்ரஜித்தின் மனதிற்குள் உற்சாகம் பிறக்க, மேலும் அவளின் அருகே நெருங்கியிருந்தான். மெல்ல பின்னோக்கி அடியெடுத்தவளது, கால்கள் அதற்கு மேல் நகர இயலாது செய்தது பின்புறமிருந்த சுவர். சுவற்றை இறுக்கமாக பற்றியபடி நின்றாள் பெண். 

“ப்..ளிஸ்.” என்று கண்கள் கலங்கிப்போய் கூறியவளுக்கும், அவனுக்கும் இடையே ஒரு கையளவு இடைவெளி மட்டுமே இருந்தது. மிரட்சியோடு பார்த்தவளின் நயனங்களும், வெறிபிடித்த வேங்கையவனின் நயனங்களும் ஒரு சேர்ந்து பார்த்த தருணம் அவளது விழிகளை நிறைத்தது கண்ணீர் துளிகள்.

அவளது அழுகையை ரசித்தான்! மிக அருகில் நின்று ரசித்தான். அவனுக்கு அந்த அழுகைதானே வேண்டும். 

“பிரகல்யா…. ரொம்ப அழகான பேர். ஆனால் நீ அழகானவ இல்லை. இப்போகூட உனக்காகதான் உன் தங்கச்சி கழுத்துல நான் தாலிகட்டாம வந்திருக்கேன். ஆனால் நீ தப்பிக்கணும்னு சில்லியா எதாவது ட்ரை பண்ண, உன்னை எதுவும் பண்ண மாட்டேன். என் டீலே உன் தங்கச்சிக்கூட தான் இருக்கும்.” என்றவனது அப்பட்டமான மிரட்டலைக் கண்டு ஆடிப்போனவள், ‘ஏன்?’ என்றாள் பார்வையாளே.

அவனது சிவந்த கண்களே அதற்கான பதிலை கூறியிருக்க, அவனது கைகளோ பெண்ணவளின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்றது. 

“என் தங்கச்சிய ஒன்னும் பண்ணிடாதீங்க?” என்றவளும் அவனது வேகத்துக்கு இணையாக ஓடிக்கொண்டே கூறினாள். அவளது கைப்பற்றியவனின் கைகளின் இறுக்கம் கூடிக்கொண்டே இருந்ததில் பிரகல்யாவின் கைகளில் சுள்ளென்று வலி ஏற்பட்டது. படிகட்டுகளில் வேகமாக ஏறியவளுக்கு, ஏற்கனவே விழுந்ததில் உண்டான உள்காயங்கள் அனைத்தும் வலியெடுத்தது.

வலியை தனக்குள்ளே அடக்கியவளுக்கு, அந்த வலிகூட பெரிதாக தெரியவில்லை. தன் தங்கைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? என்ற வலிதான் மிகவும் பலவீனப்படுத்தியது.

அவளை தரதரவென இழுத்துச் சென்றவன், அவளிருந்த அறைக்கே அழைத்து வந்திருந்தான். அடுத்த நொடியே அங்கிருந்த மெத்தையின் மீதே அவளைப் பிடித்து தள்ளியதில், பொத்தென்று கட்டிலின் மீதே விழுந்தாள் பிரகல்யா.

விழுந்த வேகத்தில் அவளது சேலையின் முந்தானை விலகி கீழே விழுந்திருக்க, பெண்களுக்கே உரிய பாதுகாப்பு எண்ணத்துடன் விரைந்து தனது முந்தானையை பற்றியவள் அவளது மேனியினை மறைக்க, அவளது செயலே அவனது கோபத்தை பன்மடங்கு உயர்த்தியது.

அடுத்தநொடியே அவளது தலை முடியினை பற்றியவன், “என்ன பார்த்தால் பொறுக்கி மாதிரி தெரியுதா?” என்றவனின் கனல்விழிகள் பெண்ணவளைத் தாக்க, அவன் கொத்தாக பற்றிய சிகையின் வலியினை இதழ்கடித்துப் பொறுத்துக் கொண்டவளுக்கு விழிநீர் திரண்டு நின்றது.

“ந… நான் அந்த அர்த்தத்துல பண்ணலை.” என்றாள் மருண்ட விழிகளுடன்.

“பின்ன என்ன அர்த்தத்துலடி பண்ண. நான் தொடுறதுக்கு கூட தகுதியில்லாதவடி நீ. அந்த ஆசை இருந்தால் இப்போவே தூக்கிப் போட்டிடு.” என்றதும் அதிர்ந்தவளின் விழிகள் அவனது வார்த்தையால் கண்ணீரை உதிர்த்தது. 

ருத்ரஜித்தோ எதை பற்றியும் கவலைக் கொள்ளாதவனாக, அவளை பற்றியிருந்த தனது கைகளை இழுத்து விடுத்தவன், அவ்வறையை விட்டு விருட்டென்று கதவினை அடைத்துவிட்டு வெளியேறி இருந்தான்.

செல்லும் அவனது முதுகை வெறித்தவளுக்கு, அவனது வார்த்தை தந்த வலி உயிரைப் பறிக்க, “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ருத்ரஜித். கடத்திட்டு வந்ததும் இல்லாமல்? என்னை கேவலமா பேச, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?”  என்றாள் பொங்கி வரும் அழுகையையும், கோபத்தையும் கட்டுப்படுத்தும் வழி அறியாமல்.

ஒருபுறம் பெற்றவர்களை நினைத்து வருந்துவதா? இல்லை தன் தங்கையை நினைத்து வருந்துவதா? என்று. அவள் நன்கு அறிவாள் கல்யாண மண்டபத்தில் தான் ஓடிப்போனதாக பேச்சுக்கள் கட்டாயம் எழுந்திருக்கும் என்பதை. அதைக்கேட்டு அம்மாவும் அப்பாவும் எப்படி எல்லாம் துடித்திருப்பார்கள்? என்று நினைக்கும் போதே, துக்கம் அவளது தொண்டையினை அடைத்தது.

“நீ ஒரு அரக்கன். கருணையே இல்லாத அரக்கன்.” என்றவளது விழியினோரம் கசிந்தது  கண்ணீர்.

பிரகல்யாவின் கிளினிக்குள்ளே இருந்து வெளியே வந்தார் ரமேஷ். அவரது விழிகளே கூறியது அவர் அழுதிருப்பதை. நேரம் பத்தைத் தாண்டியும் வீட்டிற்கு செல்லாமல், பிரகல்யா வருவாளா? என்று நம்பிக்கையோடு காத்திருந்தவர், பின் நிதர்சனம் விளங்க, மனம் முழுவதும் பாரத்துடன் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றார். 

அவர் செல்லும் நொடிக்காக வெகுநேரம் காத்திருந்தான் விஷ்வா. அவர் சென்றதும், சத்தம்போடாது கிளினிக்கிற்குள் நுழைந்தவன், தன்னிடமிருக்கும் மாற்று சாவியினை எடுத்து கதவினைத் திறந்தான்.

உள்ளே நுழைந்தவன், அங்கு ஏதேனும் தடயம் கிட்டுமா? என்று ஒவ்வொரு இடமாக ஆராய்ந்துப் பார்த்தான். அங்கு உள்ளேயிருந்த மரத்தாலான கபோர்டினை திறந்தவன், அங்கிருந்த ஒவ்வொரு கோப்பையும் ஆராய்ந்து பார்த்தான். 

அப்போது தான் அதில் கிடைத்த ஒரு கோப்பில் பிரகல்யாவின் கையெப்பமிருக்க, அவனிடமிருக்கும் கடிதத்தை வைத்து ஆராய்ந்துப் பார்த்ததில், “லி” என்ற எழுத்தில் சிறு நடுக்கம் தெரிந்திருக்க, கூர்மையான வித்தியாசத்தினைக் கண்டறிந்தவனுக்கு, நன்கு புரிந்தது. இந்த கடிதம் அவளால் எழுதப்பட்டது அல்ல என்று. 

வேறு ஏதேனும் தடயம் கிடைக்கின்றதா? என்று ஒவ்வொன்றாக தேடியவனுக்கு அந்த கபோர்டிலிருந்து ஒன்றுமே கிடைக்கவில்லை. அதன்பிறகு அவள் அமரும் மேசையின் அருகே வந்தவன் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்க, மேசையின் மீதிருந்த குடும்ப புகைப்படத்தை பார்த்தான். 

அதில் கள்ளங்கபடமற்ற அவளது புன்னகையை பார்க்கும்போதே மனதிற்குள் வலி ஏற்பட்டது. “ஐ அம் ரியலி சாரி லியா.” என்று அவளது புகைப்படத்தை அழுத்தி முத்தமிட்டான். 

அவளை காப்பாற்ற இயலாது போய்விட்டதே என்ற வருத்தம் அவனுள்ளே இருந்தது. மேசைமீதே அந்த புகைப்படத்தினை வைக்க, வெளியே சாலையில் போலிஸ் வாகனத்தின் சத்தம் வேறு கேட்க, உடனே அவ்வறையின் வெளிச்சத்தை முற்றிலும் அனைத்தவன், சத்தம்போடாது மேசையின் உட்புறமாக அமைதியாக மறைந்துக் கொண்டான். 

வெளியே நின்றிருந்த காவல்துறையின் வாகனம் போனப்பின்னரே எழுந்தவனது கை தெரியாமல் போட்டோவினைத் தட்டிவிட்டிருக்க, ஃபிரேமை விட்டு புகைப்படம் தனியாக வந்திருந்தது.

இருட்டில் அதை சரியாக கவனிக்காதவன், போட்டோவை மாட்டியபடி எடுத்து வைக்க, போட்டோவின் பின்னே மறைக்கப்பட்டிருந்த மற்றொரு புகைப்படத்தினை கவனிக்காது போனான். அந்த புகைப்படத்தை மட்டும் பார்த்திருந்தால், நிச்சயம் பிரகல்யாவைப் பற்றிய தேடல் அவனுக்கு கிட்டியிருக்கும்.

பின் கிளினிக்கை விட்டு வெளியேறியவன், மீண்டும் அதனை பூட்டியபடி சத்தம் போடாது, அவ்விடமிருந்து அடுத்து சென்றது உதயுடன் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு தான்.

 அதே சமயம் தனது அக்காவின் புகைப்படத்தையே வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அபூர்வா. அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த வண்ணமே இருந்தது.

இப்போது தான் தந்தையையும், தாயையும் சமாதானம் செய்துவிட்டு, காலையிலிருந்து உணவு உண்ணாமல் வாடியிருந்தவர்களுக்கு, தன் கைகளாலே உணவினை ஊட்டிவிட்டு, அவர்களை உறங்க வைத்துவிட்டு அறைக்கு வந்தாள்.

அம்மாவும் அப்பாவும் பிரகல்யாவை எத்தனை பாசமாக பார்த்திருப்பார்கள். “ஏன் அக்கா இப்படி பண்ண? உனக்கு தான் மாமாவை பிடிச்சிருந்துச்சே. அப்புறம் ஏன் போன?” என்றாள் ஆதங்கத்தோடு.

ஒருவீட்டில் கல்யாணப் பெண் ஓடிவிட்டால் அவ்வீட்டின் நிலைமை எவ்வாறு இருக்கும்? என்பதைக் கண்கூட அனுபவித்து விட்டனர் அவர்களது குடும்பம். கல்யாண கலையில் மிளிர்ந்த இல்லம், ஒரே நாளில் துக்கவீடாய் மாறிவிட்டதே. வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் அறிவுரை கூறிவிட்டு, காதுபடவே கேவலமாக பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைக்கும் போதே அபூர்வாவின் மனம் வலித்தது. 

எதற்கும் கலங்காத தந்தை கலங்கி அழுதகாட்சியை நினைக்கும்போதே மனதால் மரித்தாள் பெண். கண்ணில் வழிந்திடும் கண்ணீரைத் துடைத்தவள், அப்போது தான் கவனித்தாள்.விரலில் மின்னிக் கொண்டிருந்த ருத்ரஜித்தின் மோதிரத்தை.

அந்த மோதிரத்தை அவளது கைகளில் கொடுக்கும்போது மகிழ்ச்சியுடன் கொடுத்த முகம், இன்று காலையில் அவமானத்தில் வாடியபடி நின்றதை நினைத்தவளுக்கு கவலையாக இருந்தது.

“பாவம் மாமா. அக்கா நீ அவரை மிஸ் பண்ணிட்ட.” என்று ஆதங்கத்தோடு வார்த்தைகள் வந்து விழ, அவள் மனமோ, ‘நீ கூட தான் அந்த நல்லவரை மிஸ் பண்ணிட்ட.” என்று எடுத்துரைத்தது.

“ச்சீ மானங்கெட்ட மனசாட்சி. ஏன் என் மனசு இப்படி எல்லாம் யோசிக்குது.” என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டாள் இளையவள்.

ஒருவேளை திருமணம் நடந்திருந்தால், நிச்சயம் தன் மாமாவை வெறுத்திருப்பேனோ? ஒருவேளை திருமணம் நடக்காததால் அவரை நினைத்து பார்க்கிறதோ தன் மனம்? என்று பெண்ணவளுக்குள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

“என்ன இருந்தாலும் மாமா ரொம்ப பாவம் தான். எவ்வளவு கனவு அவருக்கும் இருந்திருக்கும்.” என்று அவனுக்காக வருத்தப்பட்டாள். 

“எந்த ஒரு உரிமையும் இல்லாமல் இந்த மோதிரம் என்கிட்ட இருக்கக்கூடாது. முதல்ல இதை மாமா கையில ஒப்படைக்கணும். ஆனால் மாமா இங்க இருப்பாரா? இல்லை சென்னைக்கு கிளம்பியிருப்பாரா?” என்ற யோசனை துளிர்த்தது.

அதேநிமிடம் அவளது கைபேசி சிணுங்க, திரையில் தெரிந்த “அக்காமாமா” என்று பதிவு செய்து வைத்திருந்த ருத்ரஜித்தின் எண்ணைக் கண்டதும் ஒருநொடியில் மலர்ந்தது அபூர்வாவின் முகம்.

கைபேசியை உயிர்பித்தவள், “ஹலோ மா…” என்று பாதியிலேயே வார்த்தைகளை நிறுத்துவிட, மறுமுனையிலிருந்த ருத்ரஜித்தின் முகம் நொடியில் உயிர்ப்பின்றி போனது.

“அபூர்வா. நான் ருத்ரஜித் பேசுறேன். அத்தை மாமா எப்படி இருக்காங்கா. ஆர் யூ ஆல் ரைட் பேபி?” என்று அக்கறையுடன் வந்த அவனது வார்த்தைகள் அவளுக்கு இதமாகதான் இருந்தது.

எப்படி அவரால் தங்களின் நலனை அக்கறையோடு விசாரிக்க முடிகிறது என்று. அவனை நினைக்கும்போது பெருமிதம் பொங்கியது அபூர்வாவிற்கு.

“பரவாயில்லை. நீங்க ஓகே தானே. அக்கா மேல கோபமா இருக்கீங்களா?” என்றாள் கவலையோடு.

“முடிஞ்ச விசயத்தை பேசி எதுவும் ஆகப்போறதில்லை. உங்க அக்கா பக்கமும் கண்டிப்பா எதாவது காரணமிருக்கும். என்ன, முன்கூட்டியே சொல்லியிருந்தால் இவ்வளவு கஷ்டம் இருக்காது.” என்றவனின் பதிலை அமைதியாக ஆமோதித்தாள்.

“லைன்ல இருக்கியா பேபி? கவலைப்படாத உன் அக்காவை கூப்பிட்டு வரது என் பொறுப்பு.” என்றவன் சொல்லியதும் தான் தாமதம்,

“நிஜமாவா மாமா.” என்று அவளையும் மீறி உரிமையுடன் கேட்டாள்.

“நிஜமா பேபி.” என்றவன் மனமோ, அவளது மாமா என்ற அழைப்பில் குதுகளித்தது.

“மாமா. நீங்க சென்னை கிளம்பிட்டீங்களா?”

“இல்லை. சித்தி சித்தப்பா மட்டும் தான் போயிருக்காங்க. நான் அதே ஹோட்டல்ல தான் இருக்கேன். நாளைக்கு ஈவினிங் கிளம்புறேன். ஆமா எதுக்கு கேட்குற பேபிமா?”

“சும்மா தான் மாமா. டேக் கேர்.” என்றவள் கைபேசியை அணைக்க, மறுமுனையிலிருந்த ருத்ரஜித்தின் இதழ்கள் அன்னிச்சையாக மலர்ந்தது.

“வெல்கம் பேபி.” என்று நாளையவள் வருகையை இன்றே கணித்தவன் வரவேற்க, அவன் கணித்ததை பிழையாக்காமல் மோதிரத்தை ஒப்படைப்பதற்காக செல்லவிருந்த அபூர்வா சுத்தமாக அறியவில்லை, நாளை அவள் ஒப்படைத்து விட்டு வருவது மோதிரத்தை அல்ல, மற்றொன்றை என்பது.

ஒருவளோ அவனால் வேதனையில் துடிக்க,

மற்றவளோ அவனது

வேதனையை நினைத்து வருந்த,

நாளைய விடியலில் 

காத்திருக்கும் ஆபத்தை

அறியா மடந்தையோ

அவனை தேடி செல்ல

விழைகிறாள்..…

அவள் நினைத்த அவனது

இலக்கணம் பிழையாய்

மாறிவிடுமோ?

இல்லை வசியம் புரிந்திடுமோ…!!

 

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!