13.வல்லினம்
சென்னை மாநகரம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மாநகரச் சாலையின் வழியாக விஷ்வாவின் மகிழுந்து பயணித்துக் கொண்டிருக்க நேற்று இரவு நடந்தவைகளை மனதில் அசைப்போட்டுக் கொண்டிருந்தான் விஷ்வஜித்.
பிரகல்யாவின் கிளினிக்கைத் தொடர்ந்து அவன் நேராக சென்றது என்னவோ, உதயுடன் அவன் தங்கியிருந்த வீட்டிற்குத்தான். ஏனோ உதய்க்கு பிரகல்யாவை பற்றிய ஏதோ ஒரு விசயம் தெரிந்திருக்குமோ? என்று அவன் உள்மனம் நம்பியது.
அவனது அந்த சந்தேகத்திற்கு முதல் காரணம், பிரகல்யாவின் கிளினிக்கின் முகவரி, உதய்யின் குறிப்பேட்டில் இருந்தது மட்டுமல்ல. அன்று காவல் நிலையத்தில் உதயின் பெயரை கூறும்போது அவளது சலனமற்ற முகத்தில் ஒருவித மாற்றம் தெரிந்து மறைந்தது. அதுவே அவளுக்கும் அவனை தெரிந்திருக்கின்றது என்ற செய்தியை அவன் மனதில் உணர்த்தியிருந்தது.
பிரகல்யா காணாமல் போனதற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு உள்ளதை நினைத்தவன் உதய் வைத்திருக்கும் சில கோப்புகளை எடுத்து தேடலானான். அவனது தேடலுக்கு பலனாக, பிரகல்யாவின் கல்லூரி புகைப்படம் ஒன்று கிடைத்திருக்க, பிரகல்யா மற்றும் அவளது அருகே மற்றொரு பெண்ணையும் சிவப்பு நிற வண்ணத்தால் வட்டமிட்டு மையப்படுத்திக் காட்டியிருந்தான் உதய்.
அதைக் கண்டதுமே விஷ்வஜித்தின் முகத்தில் அதிர்ச்சி அலைகள் பரவியது. மேலும் அந்தப் பெண்ணை பற்றி விசாரிக்க நினைத்தவன், உடனே சென்னை நோக்கி கிளம்பியிருந்தான்.
புகைப்படத்தில் இருக்கும் கல்லூரியின் பெயரே அவனை சென்னை வரை அழைத்திருக்க, லியாவின் வாழ்வில் நடக்கும் மர்மங்களை அறிவதற்காக மட்டுமல்லாது, அவளை காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே அவனை இவ்வளவு தூரம் வரவைத்திருந்தது.
விஷ்வாவின் மகிழுந்து கல்லூரியினை அடைந்திருந்தது. ‘யாரிடம் சென்று கேட்பது?’ என்ற யோசனை அவனுள் தோன்றியிருக்க, நேரடியாக கேட்டால் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழும் என்று அறிந்தவன், கல்லூரியின் உணவுவிடுதிக்குள் நுழைந்தான்.
அவ்விடம் காபி ஒன்றை வாங்கியவன், மேசை ஒன்றில் வந்தமர்ந்தான். ஆங்காங்கே மாணவர்கள் தத்தமது நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருக்க, சில துறைகளை சேர்ந்த பியூன்கள் டீன்களுக்காக தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
“மாணிக்கம் நாலு சமோசா. மூனு பிளாக் டீ கொடு.” அதிகார தோரணையில் கேட்டுக் கொண்டிருந்தான் பியூன் சுந்தரம்.
“என்ன ஸ்பெஷல்? இப்போ தான் வந்தீரு? அதுக்குள்ள இன்னொரு ரவுண்டா?” சிரிப்பலைகள் குறையாது அவனிடமிருந்து பிளாஸ்க்கை வாங்கியபடி கேட்டார் மாணிக்கம்.
“நீ வேறய்யா. டீன் மீட்டிங்னு ஒன்னு போட்டு படுத்தி எடுக்குறானுங்க. உனக்கே தெரியும் நான் இல்லாமல் அங்க ஒன்னுமே நடக்காது. சிரிச்சுகிட்டே வாங்கிட்டு வர சொல்றப்போ, வேற என்னத்த பண்ண?”
“சரி சரி… இந்தாங்கயா. சீக்கிரம் கிளம்புங்க.” பார்சலை அவனது கைகளில் ஒப்படைக்க, சுந்தரமோ அதனைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றிருக்க, “மேய்க்குறது எருமை, இதுல இந்தாளுக்கு ஒரு பெருமை.” என்று முணுமுணுத்தபடி மாணிக்கம் அடுத்த ஆளை கவனிக்கத் தொடங்கினார்.
இருவரது உரையாடல்களைக் கண்டு சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த விஷ்வஜித்தின் இதழ்களில் புன்னகை தன்னாலே அரும்பியது.
குழம்பியைக் (காபி) குடித்தவன், ப்யூன் சுந்தரத்தை பின்தொடர்ந்து நடக்கலானான்.
சுந்தரமோ, தான் வாங்கி வந்த சிற்றுண்டியை பவ்யமாக உள்ளே கொடுத்துவிட்டு, வெளியே அவருக்கே உரித்த மிடுக்குடன் வர, அவனுக்காக காத்திருந்த விஷ்வாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
மாணிக்கம் சொன்ன கூற்று இவருக்கு சரியாக பொருந்துகிறது என்றெண்ணிய படியே, சளைக்காத புன்னகையோடு அவனை நோக்கி வந்தான் விஷ்வஜித்.
பெரிய பணக்கார வீட்டு பையன் போன்ற அவனது தோற்றமும், இதற்கு முன் அவனை அவ்விடம் கண்டதில்லையே என்ற எண்ணமும் தான் முதலில் தோன்றியது சுந்தரத்திற்கு. இருந்தும் வெளிக் கல்லூரியிலிருந்து மாணவர்களும், மருத்துவர்களுமே ஆடிட்டோரியத்திற்கு வருகைப் புரிந்ததால் அவர்களுள் ஒருவன் இவன் என்று நினைத்தவரோ, அங்கிருந்து நகரப் பார்க்க, “மிஸ்டர் சுந்தரம்” என்றவனது அழைப்பு அவனை நகரவிடாது செய்தது.
இதுவரை தன்னை யாருமே இவ்வளவு மரியாதையாக அழைத்ததில்லை என்பதால், முகத்தில் குழப்பரேகைப் படிய, திரும்பி அவனைப் பார்த்தார் சுந்தரம்.
“சொல்லுங்க சார். என்ன வேணும்?”
“நீங்க தான் வேணும் சுந்தரம்.” என்றவனின் சொல்லில் அவரது உர்ரென்ற முகத்திலும் சிறு புன்னகை மலர்ந்தது.
“என்னங்க சார் விளையாடுறீங்களா?” இருந்தும் சற்று எகிறினார்.
“ச்சேச்சே.. மிஸ்டர் சுந்தரம் எங்க பார்த்தாலும் உங்களை தான் பெருமையா சொல்றாங்க. அதான் உங்களைத் தேடி வந்துட்டேன்.” என்றான் குறும்பாக.
“ஆனால் எதுக்கு?” குழப்பத்தோடு ஏறிட்டன சுந்தரத்தின் விழிகள்.
“நீங்க இங்க பத்து வருசமா இருக்கீங்கனு கேள்விப்பட்டேன். உங்களை மீறி இங்க ஒரு அணுவும் அசையாதாமே.”
“யார் சொன்னா? பதினைஞ்சு வருசமா இருக்கேன். அப்புறம் நேத்துக்கூட அனுப்பிரியா, அனுபாமா எல்லா பிள்ளைகளும் அசையரது என்ன, ஆள் அசைஞ்சா போதும் தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க.” என்றவரது பதிலில் விஷ்வஜித்துக்கு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
“நாட் லைக் தேட் மிஸ்டர். நீங்க தான் இங்க பெரிய ஆள்னு கேள்விபட்டேன்.” தெளிவாய் அவன் கூறியதும், அவனைத் தனியாக அழைத்துச் சென்றார் சுந்தரம்.
“சொல்லுங்க தம்பி. எதுக்காக வந்திருக்கீங்க? என்ன தெரிஞ்சவங்களுக்கு அட்மிஷன் வேணுமா?” காதோரம் கிசுகிசுத்தார் மனிதர்.
“அது இல்லை சுந்தரம். எனக்கு இங்க படிச்ச ஒரு பொண்ணை பத்தின டீடெயில் வேணும். எடுத்துத் தரமுடியுமா?” என்றவனின் கேள்வியில் அதிர்ந்தது மட்டுமன்றி கோபத்தில் முறைத்தார் சுந்தரம்.
“இதுலாம் சரிபட்டு வராது கிளம்புங்க” என்றவர் உரைக்க,
“எனக்கு அந்த பொண்ணோட அட்ரஸ் தெரிஞ்சா மட்டும் போதும். இதுல ஒரு பொண்ணோட லைஃப் அடங்கியிருக்கு. உங்களுக்கு அந்த வயசுல ஒருபொண்ணு இருப்பானு நம்புறேன். புருஞ்சுக்கோங்க சுந்தரம்.” அவன் கண்களில் தெரிந்த பரிதவிப்பு, அவரது மனதையும் பிசையத் தொடங்க, “சரி” என்று தலையசைத்தார்.
“அப்புறம் தம்பி. அந்த பொண்ணு பேட்ச், பெயர், டிப்பார்ட்மெண்ட் டீடெயில்ஸ் கொடுங்க.”
“ஓகே. பெயர் மகிஷா.” என்று தொடங்கி அவளது பேட்ச் முதற்கொண்டு தனக்கு தெரிந்தவற்றை நினைவுக் கூர்ந்துக் கூறினான்.
“அப்புறம் சுந்தரம். மகிஷா, பிரகல்யா. இவங்க இரண்டு பேரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“சரியா நினைவு இல்லை தம்பி. போட்டோ பார்த்தால் எதாவது சொல்லலாம்.” என்று தலையை சொறிந்தபடி யோசித்தார்.
“இட்ஸ் ஓகே நீங்க போய் அத மட்டும் பார்த்து சொல்லுங்க.” என்றவன் அவரது சட்டைப்பையில் இரண்டாயிரம் ரூபாய் தாளை வைத்தான்.
“பணமெல்லாம் எதுக்கு தம்பி?” என்று கேட்டாலும் அவருக்கும் அந்த பணத்தினை மறுக்க மனம் வரவில்லை.
“பிள்ளைங்களுக்கு பிடிச்சது வாங்கிக் கொடுங்க சுந்தரம்.” என்றவன் கூறவும் இன்முகத்துடன் அங்கிருந்து சென்றார்.
அவர் பின்னே சென்றவன் வெளியவே நிற்க, சுந்தரமோ இரண்டாயிரத்து பதினைந்தாம் பேட்சு அடங்கிய ரெஜிஸ்டரைத் தேடத் தொடங்கினார். மருத்துவம் சார்ந்த புத்தகம் இடம்பெற்ற நூலகத்திற்குள் செல்லும் முன், இவ்வாறு ரெஜிஸ்டர் புத்தகத்தில் தங்களது பெயர்களை பதிவிட்டே செல்வர்.
அப்படிபட்ட பழைய ரெஜிஸ்டர் நோட்டுக்கள் அனைத்தும், அவ்வறையில் நிரம்பியிருந்தது. ஒவ்வொன்றாக தேடியவர், அந்தாண்டு ரிஜிஸ்டர் புத்தகத்தினை எடுத்திருக்க, புத்தகத்தை கையோடு வெளியே எடுத்து வந்தவர், யாரேனும் பார்க்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி வெளியே நின்றவனின் கைகளில் ஒப்படைத்தார்.
அந்த புத்தகத்தின் அளவைக் கண்டு மிரண்டுப் போனான் விஷ்வஜித். இதுல ஒவ்வொன்றாக தேடி கண்டு பிடிப்பதற்குள் தான் ஒரு வழியாகிவிடுவோம். என்று பெருமூச்சொன்றை அவன் விட,
“இங்க என்ன பண்றீங்க?” என்றொருவனின் குரல் இருவரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்தது.
****
மேசையின் மீது தனக்கு முன் நிரம்பியிருந்த உணவுகளையே கண்கள் அகற்றாது பார்த்தாள் அபூர்வா. எதை உண்ணுவது என்று குழம்பியவள் தலையில் கைவைத்து அமர, அவளது செயலை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தான் ருத்ரஜித்.
முதலில் அவளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குலோப்ஜாமுனை ஜீராவில் மூழ்கவைத்து எடுத்தவள், ஜீரா சொட்ட சொட்ட தலையை அண்ணாந்து வாயில் முழுவதுமாக போட, ஒரு துளி ஜீரா அவளது உதட்டோரம் சிந்தியது.
அவள் உணவு உண்ணும் அழகினைக் கண்டு, ரசித்து அவன்
பார்க்க, அவளோ அங்கிருந்த உணவுகளை எடுத்து உண்ணத் தொடங்கியிருந்தாள். நாணை பிய்த்து, பன்னீர் பட்டர் மசாலாவில் நனைத்து அவள் உண்ணும் அழகே தனித்துவமாக தான் இருந்தது.
சற்று நேரம் முன்பு தான் குளித்துவிட்டு வந்தவன், அவளை உணவுண்ண அழைக்க, முதலில் மறுத்தவளை விடாது அழைத்து வந்தவன் உணவினை வாங்கிக் கொடுக்க, அவளோ உணவு உண்பதற்காகவே பிறந்தவள் போல் உணவு உண்டுக் கொண்டிருக்கிறாள்.
“காலையிலேயே சாப்பிடாமல் என்னை பார்க்க வந்திருக்க, நிச்சயம் காரணமில்லாமல் இருக்காது.” என்றவன் கேட்டதில், நாணை மென்றபடி நிமிர்ந்தவள் திருதிருவென விழித்தாள்.
“சாரி பேபி. முதல்ல நீ சாப்பிடு.” என்று இதமாக முறுவலிக்க, அவளுக்கோ அப்பாடா என்றிருந்ததுப் போல. நேற்று இரவு கடமைக்கென இரண்டு வாய் உணவு உண்டதன் விளைவாக பசியில் வாடிய அவளது வயிற்றை அழகாக நிரப்பியிருந்தது அங்கிருந்த பதார்த்தங்கள்.
அனைத்தும் உண்டவள், தண்ணீரை எடுத்து அருந்தினாள்.
“தாங்ஸ் மாமா.” என்றாள் புன்னகையாக. “ஆமா மாமா நீங்க சாப்பிடலையா?” அப்போதுதான் அவன் சாப்பிட்டானா என்பதையே கவனித்தாள்.
“பசியில்லை பேபி. காலையிலேயே சாப்பிடாமல் கொள்ளாமல் என்னைத் தேடி வந்திருக்க காரணம் என்ன?” மீண்டும் விடாக்கண்டனாக அதே கேள்வியை விடாது கேட்டான்.
‘விடமாட்டாரு போலயே.’ என்று மனதில் நினைத்தவள், “அது வந்து மாமா.” அதற்கு மேல் அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.
“சொல்லு பேபி. என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?”
“அது மாமா நீங்க ஏன் பேபினு கூப்பிடுறீங்க. எல்லாரையும் பேபி தான் சொல்வீங்களா?” பேச்சை மாற்ற நினைத்தவள் கேட்க, நான் கேட்டதற்கு அது பதில் இல்லையே? என்றவனின் பார்வை அவள் மீது படிந்தது.
“அத கேட்க தான் இவ்ளோ தூரம் தேடி வந்தியா பேபி?” இருந்தும் கேட்டான் நக்கல் பொதிந்த குரலில்.
“அது இல்லை மாமா.” என்று தடுமாற்றத்துடன் அமர்ந்தவளுக்கோ, பேசவே மறக்கடித்துவிட்டான் ருத்ரஜித்.
சலனமின்றி அவள் மனதில் ஊடுருவியவனது ஆளுமையின் முன் படபடத்து பேசுபவளுக்குக்கூட நா எழவில்லை.
“ரிலாக்ஸ் பேபி. எனக்கு ரொம்ப ஸ்பெஷலானவங்களை மட்டும் தான் அப்படி கூப்பிடுவேன்.” என்றான் அவளது மோதிரம் பொருந்திய கரத்தின் மீது ஆறுதலாக தன் கரத்தினை வைத்தபடி.
அந்நொடி அவனது தொடுதல் இளம்பெண்ணின் மனதில் பல்வேறு உணர்வுகளைத் தூண்ட, நாணத்துடன் ஏறிட்டவள், தான் எதற்காக வந்தோமோ அதைக் கூற முனைந்தாள். ஏனோ அவனிடம் மறைக்க பிடிக்கவில்லை.
“மாமா. உங்க மோதிரம் கொடுக்கத்தான் வந்தேன்.” என்று கூறினாலும் பெண்ணவளின் உள்மனமோ, ‘வாங்கிடாதீங்க மாமா.’ என்று தனக்குள்ளே வேண்டிக் கொண்டிருந்தது.
“இதுல என்ன இருக்கு அபூ. உனக்காக கொடுத்த மோதிரம் உன்கிட்டயே இருக்கட்டும். வேண்டாம்னு உனக்கு தோணுச்சுனா கழற்றிக் கொடு.” புன்னகை மாறாது கூறுபவனைக் கண்டு அப்பாடா! என்பது போல பெருமூச்சொன்றை விடுத்தவள்,
“இல்லை மாமா நானே வெச்சுக்குறேன்.” எங்கு அவன் கேட்டு விடுவானோ என்ற பயத்தில் பட்டென்று கூறுபவளைக் கண்டு அன்னிச்சையாக மலர்ந்தது ருத்ரஜித்தின் முகம்.
“ஓகே பேபி. கை கழுவீட்டு வா. நான் வீட்டுல கொண்டு போய் உன்னை ட்ராப் பண்றேன்.” என்றவன் கூறியதும் பட்டென்று எழுந்தவள், குடுகுடுவென்று கைகழுவும் இடத்திற்கு ஓடிச் சென்றாள்.
கை கழுவியவள் அங்கிருந்த கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தாள். ருத்ரஜித்தின் முகம் கண்ணாடியில் அழகாய் தெரிய, தன் முத்துப்பற்கள் தெரியுமளவிற்கு அழகாய் சிரித்தாள். அவளுக்கு மற்றொரு புறமாக கைகளை கழுவிக் கொண்டிருந்தான் வேறொருவன், அவள் தன்னைத்தான் கண்டு புன்னகைக்கிறாள் என்று நினைத்தவனோ பதில் புன்னகை புரிந்தான்.
அதுவரை புன்னகைத்த அவளின் உதடுகள், நொடியில் வேறொருவனைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டது. தன்னைப் பார்த்து வெளிப்படையாக வழிந்தபடி நின்றவனைக் கண்டு முறைத்தவள், “இடியட். ஆளைப்பாரு.” என்று திட்டிவிட்டே நகர, அவனோ பட்டென்று அவளது கைகளைப் பற்றியிருந்தான்.
“ஏய் என்ன சொன்ன? நீதானடி என்னை பார்த்து சிரிச்ச, பதிலுக்கு சிரிச்சா இடியட்டுனு சொல்வியா?” எகிறிக்கொண்டு வந்தவன் அவளது கரத்தை விடாது அழுத்த, அடுத்த நொடி ருத்ரஜித்தின் கரம் அவனது கன்னத்தில் ஓங்கி குத்தியிருக்க, ரத்தம் தெறிக்க கீழே விழுந்தான் அந்த புதியவன்.
ஒருநிமிடம் அதை எதிர்பாராதவனோ, அவனடித்த வலியில் கண்களைச் சுருக்கியபடி ருத்ரஜித்தினைக் கண்டான். பின் தட்டுத்தடுமாறி எழுந்தவன், “ஹேய்” என்று எகிறி வர, அவனது சட்டையை ஒற்றைக் கையால் பற்றியபடி நிறுத்தினான் ருத்ரஜித்.
ருத்ரஜித்தின் ஆக்ரோஷத்தினை முதல்முறையாக பார்த்தவளோ வாயை ஆவென பிளந்தாள். கதையில் வரும் நாயகர்களின் வீரத்தை நிஜத்தில் இவன் மூலம் காண்பதாகவே நினைத்துக் கொண்டவளுக்கு அவனின் மீது மேலும் ஈர்ப்பு அதிகமானது.
“யாரப் பார்த்தாலும் சிரிக்குறா? அவளுக்காக என்ன அடிக்குறியா? உன்னை சும்மாவிடமாட்டேன். நான் யார் தெரியுமா?” புதியவனுக்கு உதடு கிழிந்தும் கூட பயம் வரவில்லை. திமிராக நின்றான்.
“ஷி இஸ் மை பேபி. அவளை ஒரு வார்த்தை சொன்னாலும் அவ்ளோ தான்.” உறுமின ருத்ரஜித்தின் கண்கள்.
அவனது அக்னியாய் சிவந்த விழிகள் அவனை மிரட்டியிருக்க, அப்போதுதான் அவனை உற்று கவனித்தான். பரீட்சயமான முகம் என்று யோசித்த புதியவன் ஒருநிமிடம் யோசித்தபடி நின்றான்.
அவனது குழப்பத்தை உணர்ந்தவனோ, “ருத்ரஜித் தெரியுமா?” என்றுத் தன்னைப் பற்றியே கூறிய ருத்ரஜித் அவனது சட்டைக் கசங்களை சரிசெய்ய, அவன் அவ்வாறு கூறியதும் பொட்டில் அடித்ததுப் போல் நினைவு கூர்ந்தான் புதியவன்.
“சா…சார் நீங்களா?” என்றான் மிரண்ட விழிகளுடன். தாடியை முழுவதுமாக எடுத்திருந்ததாலும், அவன் தகுதிக்கு மிகவும் குறைவான ஹோட்டலில் அவன் இருந்ததாலும் அடையாளம் தெரியாமல் போக, தவறிழைத்தவன் வருந்தி நின்றான்.
“என்னை மன்னிச்சிடுங்க சார். தெ.. தெரியாமல் எகிறிட்டேன்.” மரணபயம் தெரிய கூறியவனைக் கண்டு அழுத்தமாக புன்னகைத்தவன்,
“இனியொரு முறை என் கண்ணுல பட்டுறாத தம்பி.” என்று அவனது தோளைத் தட்டிக்கொடுத்து விட்டு, அபூர்வாவை அழைத்துக் கொண்டு செல்ல, ருத்ரஜித்தின் பின்புலத்தையும், கெத்தையும் ரசித்துக்கொண்டே வந்தாள் அபூர்வா.
அபூர்வாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டிற்கு சென்றவன், மறந்தும் அவள் தன்னைக் காண வந்ததை அவளது வீட்டில் சொல்லவில்லை. அவனது அந்த செயலும் அவளை கவர்ந்தது. சத்யராஜிடம் ஆறுதலாக பேசியவன், பிரகல்யாவை பற்றி விசாரிப்பது தன் பொறுப்பு என்று வாக்களித்து விட்டே செல்ல, அவனைக் கண்டு மனதார புன்னகைத்துக் கொண்டாள் அபூர்வா.
தன் அறைக்குள் நுழைந்தவளது கால் தரையில் படவேயில்லை. “மாமா ரொம்ப ரொம்ப நல்லவரு. ரொம்ப க்யூட் மட்டும் இல்லை. சோ ஸ்வீட், மொத்தத்தில பக்கா ஜென்டில்மேன்.” என்று மகிழ்ந்தவள் கட்டிலின் மீதே குப்புறப்படுத்துக் கொண்டாள்.
“பிரக்ஸ் நீ எங்க இருக்கனு எனக்கு தெரியலை. ஆனால் நிச்சயம் நான் யோசித்த இந்த முடிவுக்கு நீ சப்போர்ட் பண்ணுவேனு நம்புறேன். மண்டபத்துல எல்லாரும் சொன்ன மாதிரி நீ செஞ்ச தப்ப, நான் சரி பண்ணுவேன் அக்கா.” என்று தன் அக்காவின் புகைப்படத்தைக் கண்டு கூறினாள்.
அங்கு பிரகல்யாவோ உணவு எதுவும் உண்ணாததால் மயங்கியநிலையில் படுத்திருந்தாள். அவளது உள்ளம் அந்நிலையிலும் அபூர்வாவை பாதுகாக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தது. நேரங்கள் செல்ல, பாதி வரை மூடிய கண்கள் முழுவதுமாக மூடிக்கொள்ள, ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவ்விடம் வந்து சேர்ந்தான் ருத்ரஜித்.
அவ்வறையை திறந்து பார்த்தவனுக்கு மயங்கிய பிரகல்யா கண்களில் பட, மூளையில் அவளுக்காக வைக்கப்பட்ட உணவு பொட்டலம் பிரிக்காது இருப்பதைக் கண்டவன் முகம் நொடியில் இறுகியது.
“ரொம்ப திமிரு தான்.” என்று கூறியவன் தன் அழுத்தமான நடையினை பிரகல்யாவை நோக்கி வைத்தான். அங்கிருந்த தண்ணீர் குவளையைத் தூக்கியவன், பசி மயக்கத்தின் பிடியிலிருந்தவளின் முகத்தின் மீதே ஊற்ற, மூச்சிறைக்க அடித்துப்பிடித்து கண்விழித்தவள், அரை மயக்கத்திலேயே அவனை ஏறிட்டான்.
“மேடம் சாப்பிட மாட்டீங்களோ? எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்ணுனா சுத்தமா பிடிக்காது.” என்றவன் அவ்வுணவினை எடுத்து வந்து, அவளுக்கு எதிராக வந்தமர்ந்தான்.
நேற்று வாங்கிய அதே உணவினை பிரித்தவன், “ம்ம்ம் சாப்பிடு.” என்று உறுதியாக உரைக்க, பெண்ணவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளது செயலில் ருத்ரஜித் முகம் கோபத்தில் இறுக, அதைக் கண்டு அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. உடனே அவளது பிடரியை பற்றி நிமிர்த்தினான் அவளது முகத்தை.
“பயம் விட்டு போச்சோ?” என்றவன் உறுத்து விழிக்க,
“ஒரு தடவைத்தான் சாக முடியும்.நான் ஏற்கனவே செத்துட்டேன். செத்த பிணத்துக்கு பயம் தெரியாது?” என்றாள் விரக்தியாக.
“அப்போ உயிரோட இருக்க உன் தங்கைக்கு பயம் தெரியும் இல்லையா?” என்றவன் அவளுக்கு சளைக்காமல் கேள்விக்கேட்க,
‘என்னால முடியலைடா’ என்று நொந்துப் போய் வலி நிறைந்தப் பார்வை பார்த்தாள் பாவை.
அவள் கண்க்கொண்டே பெண்ணவளின் உணர்வினைப் புரிந்தவன், சப்பாத்தியை பிய்த்து அவளது வாயில் திணித்தான்.
“எங்கூட நீ கஷ்டப்படணும்னு விதியிருக்கு. அந்த விதியை இந்த ருத்ரஜித் தவிர்த்து யாராலையும் மாத்த முடியாது. மென்னு முழுங்குடி.” என்று கத்தியதில் உணவினை உண்ணத் தொடங்கினாள்.
இதுல ஒரு சப்பாத்தி விடாமல் சாப்பிட்டு முடிக்கிற. மைண்ட் இட்.” என்றவன் மிரட்டியதில் அன்னிச்சையாக சப்பாத்தியை பிய்த்து வாயில் போட்டுக்கொண்டாள். நிச்சயம் உணவுகூட அவளுக்காக உண்ணவில்லை. தன் தங்கையின் நலனுக்காகவே உண்டு முடித்தாள் பிரகல்யா.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், “சீக்கிரமே நம்ம வேற ப்ளேஸ் போகப் போறோம் ஸ்வீட்டி. தயாரா இரு.” என்றவன் அவ்விடத்தை விட்டு வெளியேற, அவனையே வலி நிறைந்தப் பார்வை பார்த்தாள் பிரகல்யா.
வெளியேறிய ருத்ரஜித், காரில் தனக்காக வைத்திருந்த உணவினை எடுத்து உண்டவன், மற்றொரு உணவினை எடுத்துவந்து அவளது அறையில் போட்டுவிட்டே அவ்விடமிருந்து கிளம்பியிருந்தான்.
****
“தாங்ஸ்டா தீபக். நீ இங்க தான் வொர்க் பண்றேனு தெரியாமல் போயிடுச்சு.” என்று விஷ்வஜித் புன்னகையோடு கூறினான்.
“நமக்குள்ளே எதுக்குடா. ஆனால் பாரு ஒன்னா ஸ்கூல்ல படிச்சு, இப்போ யார் யார் எங்க வேலை பார்க்குறாங்கனு கூட தெரியலை நமக்கு.” என்று தீபக் நகைச்சுவையாக கூறினாலும் அதில் உள்ள வருத்தம் தெளிவாக புரிந்துக்கொண்டான் விஷ்வஜித்.
சற்று முன்பு ரெஜிஸ்டரை பெற்ற போது, அவனைக் கேள்விக் கேட்டவன் தீபக் தான். விஷ்வஜித்துடன் பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்பதால் மாட்டாமல் தப்பித்திருந்தான் விஷ்வா. மேலும் தீபக்கின் உதவியோடு மகிஷாவின் வீட்டு விலாசம் முதற்கொண்டு, சில முக்கிய தகவல்களை கணினியின் வாயிலாகவே தெரிந்துக் கொண்டவன் தன் பால்ய நண்பனுக்கு நன்றிகளைக் கூறினான்.
“சுந்தரம் இரண்டு காபி வாங்கிட்டு வாங்க.” என்று தீபக் கூற, அவனை தடுத்த விஷ்வஜித்தோ,
“பாவம்டா மனுசன். ஏற்கனவே ரொம்ப நடந்துட்டாரு. அப்புறம் நிறைய வொர்க் இருக்குடா. நான் கிளம்புறேன்.” என்றான் புன்னகையோடு.
சுந்தரமும் விஷ்வாவை புன்னகையோடு ஏறிட்டார். பின் இருவரிடமிருந்து விடைபெற்றவன் தன் மகிழுந்தை உயிர்ப்பித்து சென்னை கிண்டியில் உள்ள மகிஷா இல்லத்திற்கு சென்றான்.
காரில் செல்லும் போதே லியாவை மீட்கும் வழியை கண்டுபிடித்து விடலாம் என்று ஒருவித உற்சாகத்துடனே பயணித்தது அவனது கார். முதல்முறையாக அவளை பார்த்த நினைவு அவன் கண்களில் தோன்ற, அன்னிச்சையாக மலர்ந்தது. அந்த மகிழ்ச்சி மாறாது விலாசத்தைக் கண்டறிந்தவன், தனது காரினை ஓரமாக நிறுத்துவிட்டு வெளியேறினான்.
பின் மகிஷாவின் நீல நிற வண்ணம் பூசப்பட்ட வீட்டின் கேட்டினை திறந்தவன் உள்ளே சென்று காலிங் பெல்லை அழுத்தினான்.
காலிங் பெல்லை அழுத்தியதும், நெற்றி வகுட்டில் குங்குமத்துடன், பச்சை வண்ண சுடிதாரில் வந்து நின்றாள் ஒரு நங்கை.
அவளைக் கண்டதுமே மகிஷா என்றவன் வார்த்தைகளை உதிர்க்க, அவனையே புரியாதப் பார்வை பார்த்தாள் அவள்.
“யார் நீங்க?” என்றவள் கேட்க,
“நான் பிரகல்யாவோட பிரெண்டு உங்களை பார்க்க தான் வந்திருக்கேன்.”
“ஓ உள்ள வாங்க. ” என்று உள்ளே அழைத்தவள் அவனை இருக்கையில் அமரச் சொன்ன ஓரே காரணம் பிரகல்யாவின் தோழன் என்பதால் மட்டுமே.
“சொல்லுங்க. என்ன விசயமா வந்திருக்கீங்க?”
“மகிஷா நீங்களும் பிரகல்யாவும் ஒன்னா படிச்சவங்க.” என்றவன் ஆரம்பிக்கும் போதே இடை நிறுத்தியவள்,
“சாரி. உங்களுக்கு தெரியாதா?” என்றவள் அதிர்ச்சியுடன் கூற, பெண்ணவளின் விழிகளோ பின்னாலிருக்கும் புகைப்படத்தை பார்த்திருக்க, அவனும் தனக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று குழம்பியவன் திரும்பிப் பார்க்க, அதிர்ந்து தான் போனான் விஷ்வா.
“நீ… நீங்க மகிஷா இல்லையா?” என்றவன் கேட்க,
“நான் மகிமா. நானும் மகிஷாவும் ஐடெண்டிக்கல் ட்வின்ஸ்.” என்றவள் உரைக்க, விஷ்வஜித்தின் பின்னிருந்த புகைப்படத்தில் மகிஷாவும் மகிமாவும் ஒன்றாக புன்னகைத்தபடி நின்றனர்.
“அப்போ மகிஷா எங்க?” என்றவன் கேட்டதில் இடியாய் இறங்கியது மகிமாவின் பதில்.
பெண்ணே உன்னை நான்
தேடிச் செல்லும்
பாதை முழுவதும் முட்களாய் இருக்க…
முட்கள் மீதும் பயணிப்பேன்.…
நீ பிழையல்ல
திருத்தம் என்று உலகிற்கு நிருபிக்க….!
