17.வேய்ந்தனனின் வல்லினம்

17.வல்லினம்

யார் பலசாலி என்று? போட்டி போட்டு சண்டையிட்டு கொள்வதற்கு இது ஒன்றும் மல்யுத்தம் அல்லவே! இருவரும் ஒருவரது சட்டையை மாற்றிமாற்றி பற்றிக் கொண்டிருந்தாலும், அந்த சண்டைக்கு காரணியாக திகழ்பவள் ஒரே ஒரு பெண் என்பதுதான் இங்கு விந்தை. பாரதப்போர் நிகழ காரணம் பாஞ்சாலி என்ற ஒற்றைப் பெண் தான். இங்கும் சகோதரர்களுக்குள் தர்மயுத்தம் நிகழ காரணம் பிரகல்யா என்னும் ஒற்றைப் பெண்தான்.

விஷ்வஜித்தின் கண்கள் ருத்ரஜித்திடம் வாதாடிக் கொண்டிருந்தது. ருத்ரஜித்தும் சலிக்காத பார்வையை பரிசளிக்க, விஷ்வஜித்தின் கண்களில் தெரிந்த பார்வை மாற்றத்தை உற்று கவனித்தான் ருத்ரஜித்.

அவனின் கருவிழிகள் எதையோ பேச, அதை புரிந்தவனது இதழ்கடையோரம் அகங்காரப் புன்னகை துளிர்த்தது.

“ரொம்ப காதலோ?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். இருந்தும் அவனது மொழியில் எள்ளல் நகையாடியது.

“உனக்கு புரியாது ருத்.” என்றிவனும் அழுத்தம் மாறாமல் கூறியதில், ருத்ரஜித்துக்கு முகம் எல்லாம் சிவந்தது. இருந்தும் சூழ்நிலைக் கருதி பேசாமல் இருந்தவனது அலைபேசி அந்நொடி ஒலிக்க, அவனை விட்டவன், தனது கைபேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான்.

“சொல்லு பேபி?” என்றவன் கைபேசியில் பேச, விஷ்வஜித்தின் முகமோ யோசனையில் விரிந்தது.

“இந்நேரத்துக்கா. ஓகே வரேன்.” என்றவன் கைபேசியை அணைக்க, அவனைக் கண்டு எள்ளலாக புன்னகைத்தான் விஷ்வஜித்.

“காதல் கண்கட்டுதோ?” என்றவன் அவனைப் போலவே கேலியாக கேட்க, அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த ருத்ரஜித் எதுவும் பேசாது விரைந்துச் சென்றான்.

இவ்வாறு இருவரும் பேசுவதை அதுவரை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடிக்கண்களுக்கு உரிமையானவர். ருத்ரஜித் சென்றதும்  நேரம் பார்த்து அவ்விடம் விட்டு வெளியே வந்த மர்ம உருவமோ, வீட்டின் பின்புறம் நோக்கி நகர்ந்திருக்க, ருத்ரஜித்தின் அறையை விட்டு வெளியேறிய விஷ்வஜித்தோ, யாரோ ஒளிந்துக் கொண்டே செல்வதைக் கண்டுக் கொண்டான்.

“யாரா இருக்கும்?” என்ற யோசனையோடு பின்தொடர்ந்தான் விஷ்வஜித்.

ஒரு போர்வையால் தன்னை மறைத்திருந்த உருவம், வீட்டின் பின்பக்க கதவினை திறந்துக் கொண்டு சென்றிருக்க, மெல்ல அவனும் பின்தொடர்ந்து சென்றான். 

பின்புறமிருந்த அடர்ந்த மரங்களைத் தவிர இருள் சூழ்ந்த அவ்விடத்தில் அந்த உருவம் மறைந்துவிட, தேடி வந்த விஷ்வஜித்தோ குழம்பிப் போய் நின்றான். 

“இவ்ளோ செக்யூரிட்டி இருந்தும் அதையும் மீறி ஒருத்தர் வந்திருக்காங்கனா? இந்த வீட்டை சேர்ந்த யாரோ தான் இருக்கணும்.” என்று உறுதியாக நம்பியவன் அவ்விடத்தை சுற்றியும் நோட்டமிட்டு திரும்ப, எதிரே நின்றிருந்தவரைப் பார்த்ததும் அவனது முகத்தில் குழப்பம் சூழ்ந்துக் கொண்டது.

இங்கு இவ்வாறு இருக்க, ஒருபுறம் வீட்டைவிட்டு அந்த இரவு நேரத்தில் ருத்ரஜித் நேராக சென்றது என்னவோ அபூர்வாவைப் பார்க்கத்தான். மிக பதட்டத்தோடு உடனடியாக வரும்படிக் கூறியிருந்தாள் அபூர்வா.

புல்லட்டில் வந்திருந்த ருத்ரஜித், அபூர்வா தற்காலிகமாக தங்கியிருந்த உறவினர் ஒருவரின் வீட்டின் முன் வந்து நிற்க, ஏற்கனவே அவனுக்காக காத்திருந்தவளோ, சத்தமின்றி இருபுறமும் யாருமில்லாததை உறுதி செய்தபடி அவனருகே வந்தாள்.

“வாவ் மாமா. புல்லட்ல வந்திருக்கீங்க?” என்று புருவத்தை உயர்த்தியவள் கேட்க, 

“ஆர் யூ ஓகே அபூ? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே? ” என்று அவளுக்கு விடையளிக்காமல் பதில் பேசினான் ருத்ரஜித். அவனது அக்கறையில் கரைந்து உருகிப் போனவளோ,

“மாமா. இங்க இருந்தால் மாட்டிப்பேன். வண்டியில கூப்பிட்டு போறீங்களா? நான் என்ன விசயம்னு சொல்றேன்.” யாருக்கும் கேட்காத வண்ணம் மெதுவாக பேசியவளையே வினோதமாக பார்த்தான் அவன்.

நள்ளிரவு பதினொரு மணியைக் கடந்த இவ்வேளையில், தன்னை அழைத்தது மட்டுமின்றி தைரியமாக தன்னுடன் வரவிருக்கிறாளே? என்பது தான் அவனது வியப்பிற்குக் காரணம்.

“சரி வண்டியில ஏறு.” என்று சொன்னது தான் தாமதம், விரைந்து வந்து பின்னே ஏறிக்கொண்டாள் அபூர்வா. அவள் மனமோ இறக்கை இல்லாமலே பறக்கத் தொடங்கியது.

காற்றில் அவன் அணிந்திருந்த டீசர்ட் பின்னோக்கி பறக்க, தனது கைகளால் தொட்டுப் பார்த்தாள் பெண். 

“மாமா இந்த டீசர்ட் ரொம்ப நல்லாருக்கு.” என்றவள் அவனது காதோரம் தனது முகத்தை வைத்துக் கொண்டு கூற, “ம்ம்ம்” என்பதை தவிர்த்து அவன் எதுவுமே பேசவில்லை.

என்றுமே காரில் சுற்றி பாதுகாவலர்கள் சூழவே அவனைப் பார்ப்பவளுக்கு, இந்த எளிமையான தோற்றம் வெகுவாக கவர்ந்தது. ஒருமுறை அவளுக்கு புல்லட்டில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் என்று அவனிடம் கூறியிருக்கிறாள். ‘தனக்காக தான் மாமா ரகசியமாக புல்லட்டை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.’ என்று நினைத்தநொடி அபூர்வாவின் முகம் மலர்ந்தது.

தான் நேசிக்கும் நபர், தனக்காக செய்யும் சிறு செயல்கூட அந்த பெண்ணுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அப்படி தான் அபூர்வாவிற்கும் இருந்தது.

“சரி இங்க வண்டியை நிறுத்துட்டுமா?” ஆள்நடமாட்டம் குறைந்த ஒரு சாலையில் வண்டினை நிறுத்தியபடிக் கேட்டான் ருத்ரஜித்.

“மாமா மெரீனா போலாமா? ப்ளீஸ் வந்ததுல இருந்து பார்க்கவே இல்லை.” என்று கெஞ்சலாக மொழிந்தாள்.

“அபூ மெரீனா பார்க்கதான் என்னை கூப்பிட்டியா?” என்றவன் சற்று காட்டமாகவே கேட்டான். எத்தனையோ தொழிலதிபர்கள் அவனைப் பார்ப்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி காத்திருக்க, அப்படி பட்டவனை இங்கும் அங்கும் அலைக்கழிக்கிறாளே இந்த பெண்.

“மாமா முக்கியமான விசயம்.  என்ன விசயம்னு கடல் அலைகளை பார்த்துகிட்டே சொல்றேன். இந்த வாய்ப்ப விட்டா எனக்கு இனி கிடைக்குமானு தெரியலை?” என்று பரிதவிப்போடு கூறுபவளுக்கு மறுப்பு தெரிவிக்க அவனால் இயலவில்லை.

“சரி போலாம்.” என்றவன் மீண்டும் வண்டியை உயிர்ப்பிக்க, அபூர்வாவின் முகத்தில் குறுநகை படர்ந்திருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் கடற்கரையை அடைந்திருந்தனர். வண்டியை நிறுத்திவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு கடற்கரையை அடைந்தான் ருத்ரஜித்.

ருத்ரஜித்தின் முன்பு, திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள் அபூர்வா. அவளை ஏறிட்டுப் பார்த்தவனே முதலில் பேசத் தொடங்கினான்.

“என்னாச்சு உனக்கு? அதுவும் இந்த அர்த்தராத்திரியில 

வெளியே போலாம்னு சொல்ற? இன்னைக்கு நீ நடந்துக்குற விதமே கொஞ்சம் கூட சரியில்லை பேபி ” சற்று கண்டிப்புடன் வந்தது அவனது வார்த்தைகள்.

“மாமா முக்கியமான விசயம் அது போன்ல சொன்னா ஜஸ்ட் அது ஒரு செய்தியா மட்டும் தான் தெரியும். இப்போ சொல்லலைனா, உங்ககிட்ட எப்போதுமே சொல்லமுடியாது மாமா.” தரையைப் பார்த்தபடி படபடவென்று கூறினாள்.

“ம்ம்ம் சொல்லுங்க மேடம்?” என்றவன் அசராது பார்க்க,

‘அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே கேட்டாதான் என்னவாம்?’ என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அவனிடம் சொல்லத் தொடங்கினாள்.

“மாமா எனக்கு கல்யாணம் நடந்தால் தான் அக்கா கிடைப்பானு ஜாதகத்துல இருக்காம். அம்மா போன் பண்ணி சொன்னாங்க.” என்று ஆரம்பித்தவள் சத்யராஜ் ஜோதிடம் பார்த்தது முதல் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள்.

“அபூ என்ன இது? இத எல்லாம் நீ நம்புறியா?”

“அம்மா அப்பா நம்புறாங்க மாமா. அவங்களுக்கு எதிரா என்னால எதுவும் பேச முடியாது. ஏற்கனவே அவங்க நிறையா அழுதுட்டாங்க.”

“ஓ.. அப்போ கல்யாணம் பண்ண போறீங்களா மேடம்?” 

“கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.” என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளது தைரியத்தைக் கண்டு வியப்பதா?  இல்லை அவளது முட்டாள் தனமான செயலை நினைத்து வருந்துவதா? என்று தெரியாது குழம்பிப் போய் பார்த்தான் ருத்ரஜித்.

“அபூர்வா… என்ன பேச்சு இது?” 

“மாமா ப்ளீஸ் மாமா. உங்களை மனசுல நினைச்சுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியாது. அன்னைக்கே நம்ம கல்யாணம் நடந்திருந்தால்? இன்னைக்கு நான் உங்க மனைவியாக இருந்திருப்பேன் தானே? அப்பாகிட்ட பேசி நீங்களே என்னை கட்டிக்கோங்க மாமா.” 

“அபூர்வா என்னால முடியலை. சுத்த பைத்தியக்காரத் தனமா பேசுற? உன் வாழ்க்கையை பாரு அபூ. இந்த ஜாதகம் எல்லாமே பொய். அத நம்பாத? நான் வேணா உங்க அப்பாகிட்ட பேசுறேன்.”

“எதுக்கு மாமா. அவங்களோட ஒரு நம்பிக்கையையும் குழித் தோண்டி புதைக்கவா? உங்க மனசார சொல்லுங்க உங்களுக்கு என்ன பிடிக்கலைனு. பிடிக்காத பொண்ணுக்காக தான் இவ்வளவு தூரம் உங்க பாதுகாப்ப கூட பொருட்படுத்தாமல் வருவீங்களா?” திரண்டு வந்த கண்ணீரை உள்ளிழுத்தபடி கேட்டாள் பெண்.

அவனால் பதில் சொல்ல இயலவில்லை தான். “அபூ…” என்றவன் தொடங்கும் முன்னே இடைநிறுத்தியவள், 

“என் மேல அன்பு இல்லைனு நீங்க நினைச்சீங்கனா இப்போவே இங்க இருந்து போங்க. நீங்க போயிட்டீங்கனா, உங்களுக்கு என்னை பிடிக்கலைனு நான் நினைச்சுக்குறேன்.” உறுதியாக சொன்னாள்.

இவள் சொன்னால் சரிபட்டு வரமாட்டாள் என்று நன்கு உணர்ந்தவன், வேறு வழியின்றி அவ்விடமிருந்து செல்ல, அவனை வலி மிகுந்தப் பார்வைப் பார்த்தாள் அபூர்வா. 

“அப்போ உங்களுக்கு என்ன பிடிக்கலையா மாமா.” கண்ணீரில் கரைந்தவள் பார்க்க, அவனோ நிற்காமல் அங்கிருந்து சென்றிருந்தான்.

கண்களில் வழிந்திடும் கண்ணீரோடு கடலை நோக்கி பெண்ணவள் செல்ல, ருத்ரஜித்தோ பாதி தூரம் சென்றவனுக்கு அதற்கு மேல் செல்ல பிடிக்கவில்லை. அவள் ஏதேனும் தவறாக முடிவெடுத்து விடுவாளோ என்ற பதட்டம் அவனைத் தொற்றிக் கொண்டதில் விரைந்து அவ்விடம் வந்து பார்த்தான் ருத்ரஜித்.

சலனமற்ற கடல் அலைகளின் சப்தத்தை தவிர்த்து அவளிருந்த அடையாளமே இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது கடற்கரை.

“எங்க போனா இவ?” என்றவன் நெற்றியை நீவ, அவளிருந்த சுவடே தெரியவில்லை.

“அபூர்வா… அபூ…” என்று நாலாபுறமும் அவன் தேடி அலைய,  அவளை தனியாக விட்டு சென்றது தனது  முட்டாள்தனம் என்பதை நன்கு உணர்ந்தவனுக்கு, ஆர்ப்பரித்த கடல் அலைகளைக் கண்டு பயம் ஏற்பட்டது.

எங்கு அவள் கடலை நோக்கி சென்றிருப்பாளோ? என்று சிந்தித்த நொடி “ஓ… காட்.” என்று தலையில் கைவைத்தவன் கடலை நோக்கி ஓடினான். ஆர்ப்பரிக்கும் அலைகள் அவனது கால்களைத் தீண்ட அவன் மனமோ அபூர்வா என்கின்ற ஒற்றைப் பெண்ணுக்கு என்ன நேர்ந்ததோ? என்று அடித்துக் கொண்டது.

“மாமா….” என்ற அபூர்வாவின் குரல் அவனது பின்புறம் ஒலிக்க, கையில் சிப்பிக்களை வைத்துக்கொண்டு புன்னகையோடு நிற்பவளைக் கண்டதும் தான் போன உயிரே மீண்டும் அவனுக்கு வந்தது. 

அவனையும் மீறி, “பேபி.” என்றவன் அழைத்துக் கொண்டு அவளை நோக்கி விரைந்து ஓடி வந்தவன், மிக இறுக்கமாக பெண்ணவளை அணைத்துக் கொண்டான். ஆணவனின் தவிப்பும், அந்த தொடுகையும் அவளுக்குள் பலவித ஆச்சரியத்தைக் கொடுக்க, கையிலிருந்த சிப்பிக்களை கீழே தவற விட்டிருந்தாலும், தன் காதலை கெட்டியாக பற்றிக்கொண்டாள் அபூர்வா.

அவனது சூடான உஷ்ணக்காற்று, பெண்ணவளின் கழுத்தில் தீண்ட, அன்னிச்சையாக பெண்ணவளின் கண்கள் மூடிக்கொண்டது. அவனது தூய அன்பையும், காதலையும் ஒற்றை அணைப்பில் அனுபவித்தவள் அந்த நொடி அனைத்தையுமே மறந்தாள். இளமங்கையின் உடலில் சடுதியில் தோன்றிய உணர்ச்சிகளில், அவளது உடலே சிலிர்த்து அடங்கியது.

குளிர்ந்த தென்றல் இருவரையும் தீண்ட, ருத்ரஜித்தின் முதுகை தன் தளிர் கைகளால் நீவியவள், “மாமா ஒன்னும் இல்லை. நான் உங்க முன்னாடி தான் இருக்கேன்.” அன்பாக எடுத்துரைத்தாள்.

அந்த நொடி தன் நிலை உணர்ந்தவன் அவளைவிட்டு வெடுக்கென்று பிரிந்து நிற்க, அவனைக் கண்டு இதமாக புன்னகைத்தாள் அபூர்வா.

“மாமா இது லவ் தானே? என்னை காணோம்னு தானே பதறிட்டீங்க. எப்படியும் நீங்க வருவீங்கனு தெரியும். அதுனால தான் சிப்பி ஒவ்வொன்னா கலெக்ட் பண்ணிகிட்டு இருந்தேன்.” என்று சர்வ சாதாரணமாக கூறியவளைக் கண்டு அடிப்பதற்காக கைகளை ஓங்கியிருந்தான் ருத்ரஜித்.

அபூர்வாவோ, பயத்தில் கண்களை முடிக்கொள்ள, அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவனோ அடிக்காமல் கைகளை கீழே இறக்கியிருந்தான்.

“உனக்கு அறிவுனு ஒன்னு இருக்கா? இல்லையா? நம்மள நம்பி வந்த பொண்ணை எப்படி பாதியில விட்டுட்டுப்போக முடியும்? இதுல காதல் மண்ணாங்கட்டினு பேச்சு வேற. இப்போ கூட உன்னை காணோமேனு பரிதவிப்புல தான் உன்னை கட்டிப்பிடிச்சேன். அதுல காதல் இல்லை. உண்மையான அக்கறை மட்டும் தான் இருக்கு.” அவன் பல்லைக் கடிக்கும் சப்தம் தெளிவாக கேட்டது அபூர்வாவிற்கு.

“மாமா பொய் சொல்றீங்க? நான் நம்ப மாட்டேன். உங்களுக்கு என்ன பிடிக்கும்.”

“அபூர்வா உன்னை எனக்கு பிடிக்கும். ஆனால் அது அன்பு மட்டும் தான். காதல் இல்லை.” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.

“மாமா நீங்க இல்லாமல் என்னால வாழ முடியாது மாமா. ஊருக்கு போனதும் எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிடுவாங்க.”

“பண்ணிக்கோ அபூர்வா. தாராளமா பண்ணிக்கோ. அப்போ தான் என்னைபத்துன நினைப்பு உனக்கு வராது.”

“மாமா..” அதிர்ந்து விட்டவள், கண்களில் நீர் திரள அவனையே பார்த்தாள்.

“வா அபூர்வா. உன்னை வீட்டுல ட்ராப் பண்ணனும்.” என்றவன் அழைத்துச் செல்ல, அவனது கைகளை வெடுக்கென்று தட்டிவிட்டவள், 

“போதும் மாமா. போதும் நீங்க இல்லாமல் வேற ஒருத்தன் கையில தாலி வாங்குற சக்தி எனக்கு இல்லை. அதே சமயம் அம்மா அப்பாகிட்ட மறுப்பு தெரிவிக்குற சக்தியும் இல்லை. நான் செத்தா என் அக்கா வருவா தானே? அப்பா அக்கா அம்மா மூனு பேரும் சந்தோசமா இருக்கட்டும்.” என்று கூறியவள் கடலை நோக்கி ஓட, அதை சற்றும் எதிர்பாராதவனோ, “அபூ” என்று கத்திக்கொண்டே துரத்தினான்.

அவளோ அலைகளைக் கடந்து உள்ளே செல்ல, ருத்ரஜித்தோ பெண்ணவளின் கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினான். இருவரின் உடலிலுமே கடல் அலைகள் அடித்துவிட்டு சென்றது.

“அபூ முட்டாள்தனம் பண்ணாத வா என்னோட.” என்றவனது பிடியில் பெண்ணவளின் கரம் கன்றிப் போனது.

“மாமா. இப்போ நீங்க காப்பாற்றலாம். ஆனால் வீட்டுக்கு போன பிறகு நான் இந்த முடிவை எடுத்தா உங்களால என்ன பண்ண முடியும்?” என்று பிடிவாதமாக மறுப்பவளது கைகளை பற்றிக்கொண்டு வெளியே அழைத்து வந்தவன், அபூர்வாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

“பைத்தியமாடி நீ. சின்ன பொண்ணுனு நினைச்சா ரொம்ப ஓவரா பண்ற? உனக்கு என்ன கல்யாணம் தானே பண்ணனும்? பண்றேன் உங்க அப்பாகிட்ட நானே பேசி நம்ம கல்யாணத்தை நடத்துறேன்.” வேறு வழியின்றி சம்மதித்தான் ருத்ரஜித். அவள் கூறுவதைப் போல மற்ற நேரத்தில் அவள் இவ்வாறு செய்தால் அவனும் என்ன தான் செய்வான்.

அவனையே நம்பாதப் பார்வைப் பார்த்தவளோ, “நிஜமாவா மாமா” என்று அவனடித்த கன்னத்தை பற்றியபடி  மலங்க விழிப்பவளைப் பார்த்து பெருமூச்சொன்றை விட்டான்.

“என்னை நம்பி நீ இவ்வளவு தூரம் வந்திருக்க, அதே மாதிரி என் வாக்கையும் நீ நம்பலாம்.” 

“நம்புறேன் மாமா.” என்று மனதார கூறியவளின் மனமோ, ‘மாமா உங்க அணைப்புல நான் காதலை பார்த்தேன். அதுனால தான் நான் சாகுற அளவுக்கு போனேன். நிச்சயம் நீங்க என்னை விடமாட்டீங்கனு தெரியும். அதுமட்டுமில்லாமல் சாகுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை.’ என்று நினைத்துக் கொண்டது பெண்ணவளின் மனம்.

“நான் தப்பு பண்ணிட்டேன். பேசாமல் அன்னைக்கே உன் கழுத்துல தாலிக் கட்டியிருந்தால், இப்போ இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காது.” என்று சொல்லிக் கொண்டே அவன் புல்லட்டை நோக்கி செல்ல, 

“ரொம்ப லேட்டா புருஞ்சுகிட்டீங்க மாமா. இதுகூட நல்லதுதானே மாமா. இப்போ உங்களை ரொம்ப பிடிச்சு கல்யாணம் பண்ணப் போறேன்.” என்று துள்ளிக் குதிப்பவளை திரும்பி அவன் முறைத்துப் பார்க்க, தனது வாயை மூடிக்கொண்டாள் பெண்.

பின் அபூர்வாவை அழைத்துக் கொண்டு வந்தவன் அவள் தங்கியிருக்கும் வீட்டின் முன்பே வண்டியினை நிறுத்தியிருக்க, அவனை பிரிய மனமின்றி இறங்கியவள், “மாமா” என்றழைக்க, திரும்பியவன் அவளை என்னவென்று பார்வையாளே கேட்டான். 

அவன்  இன்னும் கோபம் குறையாது சிவக்க,  அவனது அருகே நெருங்கிச் சென்றவளோ, “மாமா ஸ்மைல் ப்ளீஸ்.” என்றாள்.

அவனோ சிடுசிடுத்த முகத்தோடே இருக்க, “மாமா” என்று மீண்டும் அழைத்தாள் பெண். அவன் திரும்பி என்னவென்று கேட்கும் முன்னரே, அவனது இதழில் தன் இதழைப் பொருத்திவிட்டாள் அபூர்வா.

அவளது செயலைச் சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. மனதார ஒருநிமிடம் அவள் முத்தத்தை உள்வாங்கியவன் கண்களை மூடித் திறக்க, பெண்ணவளோ ஒரே ஓட்டமாக அவனைவிட்டு ஓடியிருந்தாள். 

அவளது செயலில் அவனையும் மீறி புன்னகைத்துக் கொண்டது ருத்ரஜித்தின் இதழ்கள். அவள் வீட்டிற்குள் சென்றதும் அங்கிருந்து திரும்பி சென்றவனது முகமோ மலர்ந்தது. அவனது மகிழ்ச்சிக்குக் காரணம் எதை எதிர்பார்த்தானோ அதை நடத்திக்காட்டியதாக கூட இருக்கலாம்.

                        ***

அடுத்த நாள் காலை வெய்யோனின் செங்கதிர்கள், அந்த காட்டு வீட்டினுள் வெளிச்சத்தை பரவச் செய்திருக்க, நேற்று வயிற்று வலியில் தவித்த பிரகல்யாவோ வெகு நேரம் கழித்தே உறக்கத்தை தழுவியதால், இன்று சற்று தாமதமாகவே எழுந்திருந்தாள்.

எழுந்ததுமே செங்குருதி படிந்த சேலையை கழற்றி  துவைத்தெடுத்தவள், குளித்துவிட்டு மாற்றுடை அணிந்தபிறகே வெளியே வந்தாள். நேற்றைய கசப்பான நினைவுகளில் ஒரே ஒரு ஆறுதலாக தோன்றிய ருத்ரஜித்தின் செயல்பாடுகளை நினைத்தவளுக்கு, ஏனோ அவனால் தான் படும் துயரே அலாதியாக தெரிய, வெகுவாக அவனை வெறுத்தாள் லியா.

உயிருக்கு மேலான பெற்றவர்களையும், உடன் பிறந்தவளையும் விட்டுப் பிரிந்து, ‘ஓடிப்போனவள்’ என்ற பட்டத்தை வேறு சுமந்து வாழ்ந்துக் கொண்டிருப்பதற்கு பதில் சாவதே மேல் என்று நினைத்தது பிரகல்யாவின் மனம்.

கண்ணீரில் கரைந்தவள், காலைக்கு தேவையான உணவினை செய்வதற்காக, வீட்டின் கீழறையில் இருந்த சமயலறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அரிசியை எடுத்து அவள் ஊற வைக்க, அந்தநொடி யாரோ கதவினைத் திறந்துக்கொண்டு உள்ளே வரும் சப்தம் அவளது செவியில் கேட்க, உடனே அவ்விடமிருந்து மறைந்துக் கொண்டாள்.

உள்ளே வந்த ருத்ரஜித்தோ, “ஹே ஸ்வீட்டி. மிஸ் டிராமக்குயின்” என்றெல்லாம் அழைத்துக் கொண்டே அவன் வர, பெண்ணவளோ, அங்கிருந்த அலமாரியின் பின்பு மறைந்துக் கொண்டாள்.

இன்று எப்பாடு பட்டாவது தப்பித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக அவள் நிற்க, மாதந்திய வலி வேறு லேசாக படுத்தி எடுக்க, வயிற்றை பற்றிக் கொண்டவள் அமைதியாக நின்றாள்.

ருத்ரஜித் மேலறையை நோக்கி சென்ற நிமிடம் வெளியே வந்தவள், முகப்பு அறையின் கதவினைத் திறக்கப் பார்க்க, அவனோ உள்ளிருந்து தாழ்பாளையும் பூட்டி வைத்திருந்தான்.

“கடவுளே? அந்த சாவி எடுத்தா தான் நான் தப்பிக்க முடியும்? என்ன பண்ணலாம்?” தீவிரமாக யோசித்தவள் அவன் கீழேவருவதற்கு முன் சமயலறைக்கே சென்றுக் கொண்டாள்.

மேலே சென்றவனோ, அவளை காணாததால் கீழே இறங்கி வந்தான். சமயலறைக்குள் நுழைந்தவன், அவள் சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு தொண்டையினை செருமினான்.

“கூப்பிட்டா பேச மாட்டியோ மிஸ் டிராமா குயின். நேத்து வந்த வயிறு வலி இப்போ இருக்காதே உனக்கு?” என்று நக்கலாக கேட்பவனை உறுத்து விழித்தாள் பெண்.

நேற்று தனக்கு உணவினை ஊட்டி விட்டவன் இவன்தானா? என்பது போல் இருந்தது அவனது இந்த நக்கலான பேச்சு.

“பொண்ணுங்க அனுப்பவிக்கிற வலி உங்களுக்கு எங்கங்க தெரியப் போகுது. நீதான் ஒரு கல்லு ஆச்சே. அரக்கன். சாடிஸ்ட்.” என்று வார்த்தைகளை உமிழ்ந்தவளுக்கு கோபம் மட்டும் குறையவேயில்லை.

“உனக்கு நான் அரக்கன் தான். சாடிஸ்ட் தான். அதுவே உன் தங்கை அபூர்வாக்கு ஹீரோ சூப்பர் ஹீரோ. அதுமட்டுமில்லை அவளோட புருசன்.” என்றவன் சொல்லி முடிப்பதற்குள், கையிலிருந்த பாத்திரத்தைக் கீழேப் போட்டிருந்தாள் பிரகல்யா.

“ஏன்… இப்படி பண்றீங்க? அவ என்ன தப்பு பண்ணா?”

“உன் தங்கச்சியா பொறந்ததே தப்புதானே லியா…பிரகல்யா….” என்று அழுத்திக்கூற, பிரகல்யாவின் கண்கள் கலங்கிப் போனது.

“ப்ளீஸ் என்னை கொன்னுடு. ஆனால் என் தங்கச்சி அபூர்வா வாழ்க்கையில மட்டும் விளையாடிடாத.” என்று இருக்கரம் கூப்பியவள் கெஞ்சியநொடி, இரக்கமற்ற பார்வை பார்த்தான் ருத்ரஜித்.

“உன்ன கொன்னா உனக்கு வலிக்காதே? நீ துடிக்கணும். நான் பட்ட வலியைவிட மரண வலியை நான் உனக்கு கொடுக்கணும்…. கொடுப்பேன்…” கர்ஜித்தவனது கழுத்தின் நரம்புகள் கோபத்தில் புடைத்தது.

“அதுக்கு தான் இத்தனை டார்ச்சர் பண்றியே? இதுக்கு முன்னாடி நான் உன்னை பார்த்தது கூட இல்லை. எதுக்குடா என்னை இப்படி கஷ்டப்படுத்துற? நான் என்ன தப்பு செஞ்சேன்.” திரண்டு வந்த கண்ணீரோடு கேட்டவளை உறுத்து விழித்தவன் அவ்விடமே அதிரும் வண்ணம் சிரித்தான்.

“டிராமா குயின். இந்த அழுகை, இந்த அப்பாவி முகம் எல்லாமே உன்னோட நாடகம்டி. அந்த நாடகத்தை இனி ஆட்டிப்படைக்கப் போறவன் நான். எவனாலயும் உன்னை எங்கிட்ட இருந்து காப்பாற்ற முடியாது. இன்னும் நீ உயிரோட இருக்க ஒரே காரணம் ஒன்னே ஒன்னு மட்டும் தான். அதுவும் இல்லைனு ஆச்சுனா நரகத்தை உனக்கு காட்டப்போறேன்.” என்றவனின் பழிவெறி அவளை அச்சுறுத்தியது.

“நான் என்ன தப்பு பண்ணேன்? என்னடா தப்பு பண்ணேன் சொன்னாதானே எனக்கு தெரியும்? சட்டத்துல கூட குற்றவாளியோ? நிரபராதியோ அவங்களுக்கு பேச உரிமை இருக்கு. இங்க நான் என்ன பண்ணேனுகூட நீ சொல்ல மாட்டேங்குறியே? ஆறு மாசம் அடைச்சு வெச்சுமா உனக்கு இரக்கம் வரலை? நீ எல்லாம் மனுசனா? இல்லை….. இல்லை நீ ஒரு அரக்கன்.” கேவியவள் மொத்தக் குமறலையும் கொட்டித் தீர்க்க, அவளது கூந்தலை பற்றி இழுத்தவனோ, தரதரவென ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.

பூட்டப்பட்ட அறையின் கதவினை திறந்தவன் அவளைப் பிடித்து ஒரே தள்ளாக தள்ளியதில் அங்கிருந்த திரையின் மீதே மோதி விழுந்தவள், திரையினைத் தன் இருகைகளால் பற்றிக்கொண்டு எழ, தூசிப்படிந்த அந்த சிவப்பு கம்பளம் அவள் மீதே விழுந்தது.

தன் மீது விழுந்த அந்த கம்பளத்தை நீக்கியவள், தூசி நாசிதணில் நுழைந்ததில் தும்மலிட்டப்படி கண்களை கசக்கிக்கொண்டுப் பார்க்க, அங்கு ஓவியமாக மிளிர்ந்த பெண்ணைக்கண்டு அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் பிரகல்யா.

தவறை அறியாமலே தண்டனையை அனுபவிக்கிறேன்.…

உன்னை நினைத்ததற்கு தண்டனையா…?

இல்லை உன்னை பார்த்ததற்கு

தண்டனையா….?

இல்லை என் வாழ்வில் நீ வந்ததற்கான 

தண்டனையா…..?

புரியவில்லையடா

ஆயுள் தண்டனை சலித்துவிட்டது….…

மரத்துப் போன என் நெஞ்சிற்கு

மரணதண்டனை கொடுத்து

வழியனுப்பிவிடு..…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!