19.வல்லினம்
தன் ஆளூயுரக் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள் அபூர்வா. கழுத்தை பூட்டியிருந்த அணிகலன்களும், உடலோடு ஒன்றியிருந்த சந்தன நிற பட்டுப்புடவையும் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தாலும், மனதின் ஓரம் சொல்லப்படாத பாரம் இழைந்தோடியது.
அவள் சென்னையிலிருந்து வந்த பிறகு தன் மன விருப்பத்தை அவளும் எடுத்துரைக்க, ருத்ரஜித்தும் அபூர்வாவை கல்யாணம் செய்வதாக பேசவும், கல்யாண ஏற்பாடுகள் மிக வேகமாக இந்த பத்துநாட்களாக நடந்துக் கொண்டிருக்கின்றது. ருத்ரஜித்தின் மீது ஏற்கனவே இருந்த நல் அபிப்பிராயம் பிரகல்யாவின் வீட்டினரை சம்மதிக்க வைத்தது. இதோ இன்று யாரையும் அழைக்காது எளிய முறையில் திருமணம் நடக்கவிருக்கின்றது.
மணமகளது முகத்தில் உற்சாகமே இல்லாமல் இருந்தது. அவள் பாட்டிற்கு அனைத்தையும் சொல்லி விட்டாள் தான். இருந்தும் நாட்கள் நெருங்கும் போது பிரகல்யாவின் ஞாபகம் மனதை அரித்தது. கடந்த ஆறு மாதக் காலங்கள் அவளால் முடிந்த அளவிற்கு பிரகல்யாவைத் தேடினாள். கல்லூரி விட்டு வரும் வழியில் பிரகல்யா அடிக்கடி செல்லும் அனைத்து இடங்களுக்குமே சென்று பார்த்து விட்டு வருவாள்.
அவள் தேடுவது வீட்டிற்கு தெரியாது என்றாலும், அந்த புகைப்படங்களை கண்ட பிறகும்கூட, அவளது முயற்சி குறையவில்லை. ‘இவை அனைத்தும் பொய்யாக இருக்கக்கூடாதா?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறாள். பிரகல்யாவை பற்றிய சிந்தனையில் இருப்பவளுக்கு ஒரே ஆறுதல் ருத்ரஜித் மட்டுமே. அவனுடன் பேசும்போது தனது அனைத்து துயரங்களையும் அந்தநொடி மறந்துவிடுவாள் அபூர்வா.
“ஏன்கா. நீ எங்க தான் இருக்க? என் கல்யாணத்தை பார்க்கக்கூட நீ இங்க என்னோட இல்லையே? என் கழுத்துல தாலி ஏறும்போது நீ இங்க வருவேன்னு நம்பிக்கையில தான் நான் போறேன். மறக்காமல் வந்துடுக்கா.” மானசீகமாக கேட்டு கொண்டாள் தன் தமக்கையிடம்.
“அபூ என்ன பண்ற? உன்னை கூப்பிடுறாங்க. வா போகலாம் கோவிலுக்கு.” என்று கூறிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் வந்தனா.
அவள் வருகின்ற சத்தம் கேட்டு, தன் கண்களில் தேங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், மீண்டும் புன்னகையை முகத்தில் தவழவிட்டாள்.
“வரேன் வந்து.” புன்னகையோடு சொல்பவளைப் பார்த்து பதில் புன்னகை புரிந்தாள் வந்தனா.
“நினைச்சதை சாதிக்குறடி. இதுக்கு அன்னைக்கே உனக்கு கல்யாணம் நடந்திருக்கலாம்.” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ம்ம்ம். எது எப்போ நடக்குமோ அது அப்போதான் நடக்கும். எனக்கு மாமாவை ஏன் பிடிச்சுதுனு தெரியலை. ஆனால் பிடிச்சுது. பட் கல்யாணம் அப்போ நடந்திருந்தா அவரை பிடிக்காமல் கூட போயிருக்கலாமே.”
“பார்த்தா அப்படி தெரியலையே? எப்போடா அவரை கட்டிக்கலாம்னு இருந்த மாதிரில்ல இருக்கு. அக்கா போனதுகூட உனக்கு நல்லதா போச்சுல.” என்று விளையாட்டாக கூறுவதாக நினைத்து வார்த்தைகளை கவனிக்காமல் விட்டிருந்தாள் வந்தனா.
“வந்தனா” உரக்க கத்திய அபூர்வாவின் விழிகள் கோபத்தில் சிவந்தது. முணுக்கென்று கண்ணீர் வேறு சிவந்த விழிகளுக்குள் நிரம்பியது.
“ஹேய் சாரிடி நான் விளையாட்டுக்கு சொன்னேன்.” அவளது முகப்பாவணைக் கண்டு அதிர்ந்துக் கூறினாள் வந்தனா.
“என்ன விளையாட்டு? என் அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ அவ மேல வருத்தம் இருக்கலாம். அதுக்காக அவ போனது எனக்கு நல்லதா மாறிடுமா? அக்கா வந்த அப்புறம் தான் அவரை கல்யாணம் பண்ண நினைச்சேன். ஆனால் விதி எல்லாமே மாத்திருச்சு. கடைசியில நீ கூட என்னை தப்பா புருஞ்சிக்கிட்டல்ல.” என்று கரகரத்த குரலில் கேட்பவளைப் பார்த்து பரிதவித்தாள் வந்தனா.
“சாரி அபூ. ஐ அம் ரியலி சாரி. நான் அந்த அர்த்ததுல சொல்லலை.” என்று அழுதுவிடும் நிலையில் கேட்டவளை அணைத்த அபூர்வாவோ, முகத்தை ஒருநொடியில் மாத்திக் கொண்டாள்.
“எனக்கு தெரியாதா? நீ அப்படி நினைக்கலைனு. சும்மா உன்கூட விளையாடுனேன்.” என்று அபூர்வா சிரிக்க, வந்தனாவோ அவளது விளையாட்டு தனத்தைக் கண்டு வாயைப் பிளந்தாள்.
“அடிப்பாவி ஒரு நிமிசத்துல தப்பு பண்ணிட்டனேனு எனக்கு மனசே இல்லை தெரியுமா?” பாவமாக கேட்பவளை சமாதானம் செய்தவள், அவளை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, அபூர்வாவின் உள்மனமோ வலித்துக் கொண்டிருந்தது.
வெளியே சிரித்து மகிழ்ச்சியுடன் இருந்தாலும் அவள் உள் மனதில் உள்ள பாரம் அவள் மட்டுமே அறிவாள். என்ன தான் இருந்தாலும் அவளது உடன் பிறந்தவள் அல்லவா பிரகல்யா. தனியாக உறங்கும் நேரம் எல்லாம் பிரகல்யாவுடன் இருந்த தருணங்கள் அனைத்தும் வாட்டி எடுக்கும். ஆனால் தன் பெற்றோர் முன்பு காட்டிக் கொள்ளாமல் அவர்களை இவள் தேற்றுவாள்.
‘அக்கா’ என்றும் போல அபூர்வாவின் மனம் பிரகல்யாவை அழைத்தது.
சதாநேரமும் நட்சத்திராவின் ஓவியம் இருந்த அறையிலேயே அமர்ந்திருந்த லியாவிற்கு நேற்றிலிருந்தே அபூர்வாவின் நினைவு தான். அன்றைய நாள் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கியவளை எழுப்பக் கூட ஆள் இல்லை. மயக்கம் தெளிந்து எழுந்தவள் உயிருடன் இருக்க ஒரே காரணம் அபூர்வா மட்டுமே. விட்டத்தை வெறித்தவளுக்கு அபூர்வாவின் ஞாபகம் தோன்ற, ஆழ்ந்த மூச்சுக்காற்றினை விட்டப்படி எழுந்தாள். நட்சத்திராவின் இறப்பிற்கு தான் மட்டுமே காரணம் என்று அறிந்தவளுக்கு அப்போதே உயிர் போன நிலை தான்.
இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிரே அபூர்வாவை காக்க வேண்டும் என்பதற்காகவே இருந்தது. அன்று சென்ற ருத்ரஜித் இடையில் அவள் முன் வரவேயில்லை. அவளும் எதிர்பார்க்கவில்லை அவனை. ஆனாலும் அவன் வந்து சென்றதற்கான தடம் பத்திரிக்கை வடிவில் முகப்பறையில் கிடக்க, அதைக் கண்டு அதிர்ந்துப் போனாள் பிரகல்யா.
தன்னை அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஏன் தன் தங்கையை பழி வாங்க வேண்டும்? அபூர்வாவைக் காப்பாற்றிவிட்டே, தன் உயிர் தன்னைவிட்டு போக வேண்டும் என்று மனதார தீர்மானித்திருந்தாள் பிரகல்யா.
இன்று தானே அந்த திருமண நாள்! எப்படி என் தங்கையை மீட்பேன்? ஆயிரத்தெட்டு கேள்விகள் அவளது மனதை அரிக்க, எழுந்தவள் நட்சத்திராவின் புகைப்படத்தின் அருகே சென்றாள்.
நட்சத்திரா ஒருத்தியே அவளுக்கு வலியும் ஆறுதலும் ஒரு சேரக் கொடுத்தாள். கைகள் நடுங்க தன் தளிர் விரல் கொண்டு அவளது பூமுகத்தை வருடினாள் பிரகல்யா. அவளை வருடும் போதே மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி எழுந்தது. ‘நீ நிஜத்தில் என்னுடன் இருந்திருக்கலாமே?’ என்று ஏங்கியது லியாவின் மனம்.
“நட்ஸ். உன்னை தான் நான் இழந்துட்டேன். என் தங்கச்சி அபூர்வாவையும் நான் இழக்கணுமா? எனக்கு இங்க இருந்து போகணும் நட்ஸ். தாமதிக்குற ஒவ்வொரு நேரமும் அபூர்வா நரகத்துக்குழியில விழுந்திடுவா.” அழுகையோடு அவளது ஓவியத்தின் மீதே சாய்ந்துக் கொண்டாள் பிரகல்யா. ஏனோ நிச்சயம் ஓவியமான சூழலிலும் அவளுக்கு ஆறுதல் சொல்வாள் என்று நினைத்திருப்பாள் போல.
“நான் பண்ண பாவத்துக்கு என்னை கொன்னுட வேண்டியது தானே. ஏன் என் தங்கச்சியைத் துரத்தணும். என்னால முடியலைமா.” என்று அழுதுக்கொண்டே தன் தலையை புகைப்படத்தின் மீதே முட்டினாள்.
‘பட்… பட்’ என்ற சத்தம் சற்று வித்தியாசமாகக் கேட்டது. முதலில் அதை கவனிக்காதவள், மீண்டும் மீண்டும் ஒலிக்கவும் எதேச்சையாக கவனித்தவள், தனது சிவந்த விழிகளுடன் நட்சத்திராவின் ஓவியப்படத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
அது ஒன்றும் மரத்தால் செய்யப்பட்டது இல்லையே. ஏன் இந்த சத்தம்? மீண்டும் தட்டிப்பார்த்தாள். அருகிலிருந்த சுவற்றையும் தட்டிப் பார்த்தாள். சுவற்றுக்கும் ஓவியப் புகைப்படத்திற்கும் இடையேயான விளிம்பில் எறும்புகள் வரிசைக்கட்டி சென்றுக் கொண்டிருந்தன.
அது செல்லும் வரிசையை உற்று கவனித்தவள் நிமிர, பாதி வழியில் ஓவியத்தின் பின் எறும்புகள் மாயமாக மறைந்துவிட, அதிர்ச்சியுடன் ஏறிட்டன பிரகல்யாவின் கண்கள்.
தன் பலத்தை திரட்டி, நட்சத்திராவின் புகைப்படத்தை சுவற்றிலிருந்து நீக்கியவள், அருகே இருந்த சுவற்றின் மீது சாய்த்து வைத்தப்படி நிமிர, அதன்பின் மறைந்திருந்த மரக்கதவைக் கண்டு விழிகள் விரித்தாள் பெண். நன்றியுணர்வு மாறாது நட்சத்திராவை கண்கள் கலங்கிப் போய் பார்த்தாள்.
ஓவியமாக மிளிர்ந்தாலும் தனக்காக உதவுகிறாளே? என்ற நன்றியுணர்வு பொங்கிப் பெருகியது. கண்கள் சிவக்க, நட்சத்திராவின் ஓவியத்தை அணைத்தவளது கண்ணீர் சொட்டு சொட்டாக, அந்த ஓவியத்தின் மீதே விழுந்தது.
உள்பக்கம் பூட்டப்பட்ட தாழ்ப்பாளை திறந்தவள், கதவை திறக்கப் பார்க்க, கதவோ திறப்பேனா என்றது. அதன் விளிம்புகளில் துருப்பிடித்திருப்பதைக் கண்டவள், சமையலறைக்குள் விரைந்தாள்.
அங்கிருந்த தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்தவள், கதவின் விளிம்பில் ஊற்றி மீண்டும் முயற்சிக்க, இம்முறை கதவு ஓரளவு திறந்துக் கொண்டது. அந்த சிறு வழியினைப் பயன்படுத்தியவள், ஆறு மாதத்திற்கு மேலாக தான் அடைக்கப்பட்டிருந்த வீட்டினை விட்டு வெளியேறியிருந்தாள்.
இங்கு திருமணம் நடக்கவிருக்கும் கோவிலில் இருவீட்டினரும் கூடியிருந்தனர். வைஜெயந்தி இந்திரனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆதிமந்திரை வரவில்லை என்றாலும் ஏனோ இந்த கல்யாணம் ருத்ரஜித்தின் மனதில் மாற்றத்தை விளைவிக்கும் என்பதனால் சம்மதித்திருந்தார்.
“வைகை ருத்ரா ரெடியாகிட்டானா?” வைஜெயந்தி கேட்டார்.
“அஞ்சு நிமிசத்துல வந்திருவாரு அம்மா.”
“சரி நீ போய் நம்ம கார்ல ஒரு மஞ்சள் பை வெச்சிருப்பேன் எடுத்துட்டு வாடா கண்ணா.”
“என்னமா எத்தனை காலம் போனாலும், இந்த மஞ்சள் பை மட்டும் விடமாட்டிங்களே?”
“டேய் அடிவாங்குவ நீ. ஆமா அஜ்ஜூ எப்போடா வருவான்?”
“தெரியலையேமா. உங்க பசங்க எதுவுமே என்கிட்ட சொல்றதே இல்லை.” என்று அப்பாவியாக கூறுபவனது முதுகின் மீதே தட்டியவர், சொன்ன வேலையை செய்யச் சொல்லி அனுப்பினார்.
காரை நோக்கி சென்றவன், எதிரே வந்த வந்தனாவின் மீதே மோதியிருந்தான். கையில் மலர் தட்டுடன் வந்தவள், தனது ஒற்றைக் கரத்தால் மலர்தட்டினை விழாதுப் பிடித்துக் கொண்டாள். மற்றொரு கரம் பிடிமானத்திற்காக வைகையின் தோளினைப் பற்றிக் கொண்டது. வைகையோ அவளைக் கண்டு சிடுசிடுக்கவும், பட்டென்று கைகளை எடுத்துக் கொண்டாள் வந்தனா..
“ஹே பார்த்து வரதில்லை?”
“ஆஹான். அதே கேள்வியை நான் உங்ககிட்ட கேட்டா?” அர்த்தமான பார்வை பார்த்தாள் அவள்.
“என்ன வாய் நீளுது.”
“பின்ன இது ஒன்னும் உங்க ஆஃபிஸ் இல்லை. பயந்துட்டு பேசாமல் இருக்க?”
“அப்போ மேடம்க்கு என் மேல பயம் அப்படி தானே.” என்று வசீகரிக்கும் புன்னகையை உதிர்த்தான்.
‘பார்ரா சிடுமூஞ்சிக்கு சிரிக்கக்கூட வருது.’ என்ற தோரணையில் அவனைப் பார்த்தவள்,
“நினைப்பு தான் சிடுமூஞ்சி காரமிளகாய்.” என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்துச் சென்றாள்.
“வாட் சிடுமூஞ்சி? வாட் காரமிளகாய்? சில்லி கேர்ள்.” என்று தோள்களை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான் வைகைசெல்வன்.
அங்கு மென்மையான பிரகல்யாவின் பாதங்கள் முட்களுக்கு இரையாகியிருக்க, சுள்ளென்ற வலியையும், வெண்பாதங்களில் வழிந்திடும் குருதியையும் பெரிதுப்படுத்தாது, இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் ஓடிக் கொண்டிருந்தாள் பிரகல்யா.
“அபூர்வாவை காப்பத்தணும். அதுக்கு அப்புறம் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.” மூச்சு இரைக்க புலம்பியவள் பாதி வழியிலேயே ஓட இயலாது தவிக்க, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
சுற்றிலும் அடர் மரங்களே சூழ்ந்திருக்க, அவ்விடத்தில் தென்றலின் சத்தத்தை தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை. சுத்தி சுத்தி ஒரே இடத்தில் ஓடுகிறோமோ? என்ற எண்ணம் அவளது மனதில் உருவானது.
ஒற்றையடிப் பாதையை மெதுவாக பின்தொடர்ந்து சென்றவளுக்கு, மண்தரையிலான சற்று பெரிய வழி கண்களில் தென்பட, விரைந்து மீண்டும் ஓடத் தொடங்கினாள்.
அவள் மனம் முழுவதும் தன் தங்கையை காக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. தட்டுத்தடுமாறி பாதையினுள் ஓடி வந்தவளுக்கு, தூரத்தில் சாலை ஒன்று தெரிய தனது வேகத்தை வெகுவாக கூட்டியிருந்தாள் லியா.
“இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன். நிச்சயம் நடக்க விட மாட்டேன்.” சூளுரைத்தது பெண்ணவளின் மனம்.
ஒருவழியாக சாலையை அவள் அடைந்திருக்க, சாலையின் வளைவில் ஓடிச்சென்றவள் எதிரேவரும் மகிழுந்தினை கவனிக்காதுப் போக, மகிழுந்தின் மீதே மோதியிருந்தவள், நிலைத்தடுமாறிக் கீழே விழுந்தாள்.
நல்லவேளையாக மகிழுந்து வேகமாக வராத ஒரே காரணத்தால், பெரிதாக காயமின்றி அவள் தப்பித்திருக்க, காரிலிருந்து இறங்கியவனோ அதிர்ச்சி குறையாது அவளை நெருங்கியிருக்க,
கீழே விழுந்ததில் அங்கிருந்த கூரான கல் பட்டு தலையில் குருதி ஒழுகிய அந்நிலையிலும் பிரகல்யாவின் உதடுகள் “அபூர்வாவை காப்பாற்றணும். என் அபூர்வாவை காப்பாற்றணும்” என்றே கூறிக் கொண்டிருந்தது.
“லியா?” என்றவனின் குரல் அவளது செவியைத் தீண்டியிருக்க, யாரென்று அதிர்ந்த விழிகளுடன் நிமிர்ந்துப் பார்த்தவளோ, அங்கு நின்றிருந்த விஷ்வாவினைக் கண்டு எண்ணற்ற மகிழ்ச்சி கொண்டாள்.
“வி.. விஷ்வா.” என்றழைத்தவள் தனது வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். அந்தப் பார்வையே ‘என்னைப் பார்? என் நிலையைப் பார்? நீ சொன்னது போன்றே துயர் வந்து என்னை ஆட்கொண்டு விட்டதடா’ என்று கூறுவதைப் போல தெரிந்தது விஷ்வாவிற்கு.
ஒருநிமிடம் கூட தாழ்த்தாது அவளருகே சென்றவன் அவளுக்கு நிகராக கீழே சாலையில் அமர்ந்தபடி, பெண்ணவளின் இரு கன்னங்களையும் தன் இருகைகளால் ஏந்திக் கொண்டான்.
அவளது நெற்றியில் வழிந்த செங்குருதியைத் தன் கைக்குட்டைக் கொண்டு ஒத்தி எடுத்தவன், அவளையே வலி நிறைந்தப் பார்வை பார்த்தான்.
“ஆர் யூ ஓகே லியா?” என்றவனின் கண்களில் தெரிந்த பரிதவிப்பையே இமை மூடாமல் பார்த்தாள் பிரகல்யா.
இந்த ஆறு மாதக்காலம் ஒரு நாளிலாவது ருத்ரஜித்தின் கண்களில் அந்த பரிதவிப்பை காண மாட்டோமா? என்று ஏங்காத நாளே இல்லை. இன்று தான் பல மாதங்களுக்கு பிறகு தன்னைப் பார்த்து இரக்கம் கொள்ளும் ஒரு நபரைக் காண்கிறாள்.
நெஞ்சிலிருந்த பாரமே குறைந்தது போல உணர்ந்தவள், பொங்கி வந்த அழுகையோடு கேவி அழுதபடி அவன் மார்பின் மீது சாய்ந்துக் கொள்ள, அவளை ஆறுதல் படுத்த தெரியாமல் தவித்துப்போனான் விஷ்வஜித்.
அழுதுக்கொண்டே இருந்தவள், உயர்ரத்த அழுத்தத்தில் விஷ்வஜித்தின் மீதே மயங்கி சரிந்தாள். விஷ்வாவோ ஒருநொடி அதிர்ந்துப் போனான்.
அதேசமயம் கோவிலில் இருவீட்டு குடும்பத்தார்கள் சூழ்ந்திருக்க, எளிய முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அபூர்வாவின் திருமணம். மனம் முழுவதும் பூரிப்புடன், நினைத்ததை நடத்திவிட்டோம் என்ற பெருமிதத்தில் புன்னகையுடன் மணமேடையில் அமர்ந்திருந்தாள் அபூர்வா. ஏனோ தனக்கு பிடித்தவரைக் கரம் பிடிப்பதில் அவளையும் மீறி மலர்ந்திருந்தது பெண்ணவளின் முகம்.
அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்பவன், இன்று சிறு பெண்ணின் பிடிவாதத்திற்கு கட்டுப்பட்டு அமைதியாக அவளருகே அமர்ந்திருந்தான் ருத்ரஜித்.
“மாமா கொஞ்சம் சிரிங்களேன். ரொம்ப அழகா இருப்பீங்க.” ஆணவனின் காதோரம் கிசுகிசுத்தாள் பெண். ஏனோ ருத்ரஜித்தை சீண்டாமல் அவள் நாளே ஓடாதுப் போல.
அவளது செயலில் அவளை அழுத்தமான பார்வை பார்த்தவன், “நினைச்சத சாதிச்சிட்டியே பேபி.” என்று மட்டும் சொன்னானே தவிர்த்து வேறு எதுவுமே பேசவில்லை. ஏனோ அவனுக்கு அவள் மீது சிறு கோபம் இருக்கத் தான் செய்தது. அப்படி தான் நினைத்தும் கொண்டாள் அபூர்வா.
“சாரி மாமா. பட் ஐ லவ் யூ சோ மச் மாமா.” என்றாள் காதலோடு. ஆனால் ருத்ரஜித்தோ எதுவுமே பேசவில்லை.
அவன் மனம் அவனே அறிவான் அல்லவா? அபூர்வாக்கு தெரியாத பல ரகசியங்களை புரிபவன், கைத்தேர்ந்த நாடகக்காரன் என்பது பாவம் அவளுக்கு, தான் தெரியவில்லை.
ஐயர் மந்திரங்களைக் கூறிக்கொண்டிருக்க, அங்கிருந்த அனைவருமே அட்சதையோடு தயாராக நின்றிருந்தனர்.
ருத்ரஜித் தாலிக்கட்டப் போகும் அந்நேரம் தன் தமக்கையை ஒருநிமிடம் நினைத்துப் பார்த்துக் கொண்ட அபூர்வாவோ கண்களை மூடி திறக்க, ருத்ரஜித்தோ ஐயரிடம் பெற்ற தாலியை, தன் இரு கைகளால் ஏந்தியபடி, அபூர்வாவின் சங்குகழுத்திற்கு முன்பு கொண்டு வந்து, அவளை ஒருமுறை உற்று பார்த்தான்.
பெண்ணவளோ புன்னகையோடு அவனை ஏறிட, அன்றைய நாளில் அவனுக்கு கிடைக்காத சம்மதம், இன்று கிடைத்துவிட்டதன் உள்ளூர மகிழ்ச்சியில், திருமாங்கல்யத்தை அவளது கழுத்தில் மூன்று முடிச்சுக்களாக கட்டியவாறு, தன் சரிபாதியாக பெண்ணவளை ஏற்றிருந்தான் ருத்ரஜித்.
அபூர்வாவின் கண்கள் கலங்கியது. பிரகல்யாவிடம் திருமணத்தைப் பற்றி விளையாட்டாக பேசிய நினைவு ஒரு நிமிடம் மனக்கண்களில் உதிக்க, இமையைத் தாண்டி அவள் மடி மீதே விழி நீர் முத்துமுத்தாக சிதறியது.
அவன் நினைத்ததுப் போலவே அனைத்தும் சுபமாக நடந்துவிட, குங்குமத்தை பெற்றவன், அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து, பெண்ணவளின் நெற்றி வகுட்டின் மீது வைத்தான். அபூர்வா கண்கள் கலங்கியிருந்தது. அதன்பின் ருத்ரஜித்தின் கைகளோ அவளது சுண்டு விரலைப் பற்றியபடி அக்னிகுண்டத்தை மூன்று முறை வலம் வந்தது.
இனி நீயே நினைத்தாலும் என் பிடியைவிட்டு விலக இயலாது என்று சொல்லாமல் கூறியிருந்தான் அவனது அழுத்தமான நடையிலும், அவளது கைவிரல் பற்றியிருந்த பிடியிலும். சத்யராஜ் சரஸ்வதி இருவருமே ‘பிரகல்யா தங்களோடு வந்து சேர்ந்து விட வேண்டும்’ என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டபடி, மணமக்கள் இருவருக்கும் ஆசிகளை வழங்கினர்.
அதன் பின் இருவரும் இந்திரன், வைஜெயந்தி கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அதன்பின்னரே கோவிலை விட்டு மணமகளின் இல்லம் நோக்கி சம்பிரதாயம் நிமித்தமாக சென்றனர் அனைவரும்.
இங்கு பிரகல்யாவோ தன் தலையைப் பற்றிக்கொண்டு கண் விழித்தாள். தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதைக் கண்டவள் அதிர்ந்துப் போய் தன் எதிரே இருந்த விஷ்வாவைப் பார்த்தாள்.
“வி… விஷ்வா என் அபூர்வா கல்யாணத்தை நான் நிறுத்தணும். சீக்கிரம் என்னை அங்க கூப்பிட்டு போங்க.” என்று கைகளில் மாட்டப்பட்டிருந்த டிரிப்ஸை கழற்றி எறிந்தபடி கூறினாள்.
“என்னாச்சு லியா? எதுக்கு அபூர்வா கல்யாணம் நிறுத்தணும்?”
“அது வந்து..” என்று சொல்லத் தடுமாறியவள் வேறு வழியின்றி ருத்ரஜித்தை பற்றி மட்டும் கூறியிருக்க, அதைக் கேட்ட விஷ்வஜித்தின் முகம் நொடியில் மாறியது. பிரகல்யாவிற்கு தெரியாது அல்லவா ருத்ரஜித்தின் சகோதரன் இவன் என்று.
“இவ்ளோ பாவத்தை செஞ்சவனை என்ன பண்ணப் போற லியா?” என்றவனின் கேள்விக்கு பதில் கூற இயலாது தவித்துப் போனாள் பெண்.
“இல்லை விஷ்வா. நான் தான் பாவம் செஞ்சவ. அதுக்கான தண்டனை இது தான்.” என்று கண்களில் நீர் தேங்க கூறுபவளை புரியாது பார்த்தவன்,
“என்ன சொல்ற லியா?” என்றான் அவளை கூர்ந்து பார்த்தபடி.
“அது அது… நான் ஒ….ஒரு” என்பதற்கு மேல் அவளது நா எழவில்லை. எப்படி சொல்வாள் தான் ஒரு கொலைகாரி என்று. அவளது உதடுகள் துடித்தது கைகளும் நடுக்கமடைந்தது.
“லியா..” என்றவனோ அவளது கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு ஆறுதல் தர, தன் கண்களை அழுந்த துடைத்தவள்,
“ப்ளீஸ் அபூர்வாகிட்ட என்னை கூப்பிட்டு போங்க.” என்று கேட்டதும் தலையசைத்தவன்,
“அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும். இந்த கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நீ அங்க போனாலும் எதுவும் மாறப் போறதில்லை” என்றவன் கூறி முடிக்க, தான் கேட்டது நிஜமா? பொய்யா? என்ற தோரணையில் அதிர்ந்துப் போய் பார்த்தாள். வைகையின் மூலம் இச்செய்தி விஷ்வஜித்தை அடைந்திருந்தது. ஆதலால் தான் உண்மையை மறைக்காது கூறிவிட்டான்.
“இல்லை…என் தங்கச்சியை நான் காப்பாற்றணும். அவ எதுக்கு என்னால கஷ்டப்படணும்? அய்யோ என்னால இன்னொரு பொண்ணும் பாதிக்கப்பட்டுட்டாளா? இதுக்கு மேல நான் எதுக்கு உயிரோட இருக்கணும்?” என்று வெடித்துக் கத்தியவள், அவ்விடமிருந்த மருத்துவ கத்தியை எடுத்து தனது கைகளை வெட்டப்போக, சடுதியில் அவளது கைகளைப் பற்றி தடுத்து நிறுத்தினான் விஷ்வஜித்.
“ஏய் லியா என்ன பண்ற? உன்னை இவ்வளவு நாள் நான் தேடி அலைஞ்சது எல்லாத்தையும் ஒரே நிமிசத்துல அழிக்கப் பார்க்குறியே? ட்ரஸ்ட் மீ லியா. இதுக்கு அப்புறமும் அபூர்வாவை நம்ம காப்பாத்த முடியும். என்னை நம்பு.”
“இல்லை விஷ்வா… ஒன்னுமே மாறாது. நான் சாகணும். அப்புறம் நிஜமாவே என்னை நீங்க தேடுனீங்களா? ஆனால் ஏன்?”
“ஏன்னா அண்ணன் பண்ண தப்பை தம்பி சரி பண்ணனும் தானே.” என்றவன் கூறிய நொடி புரியாது அவள் பார்க்க, அவளைக் கண்டு ஆழ்ந்த பெருமூச்சொன்றைவிடுத்தவன்,
“என் முழு பெயர் விஷ்வஜித். ருத்ரஜித் என்னோட பெரியம்மா பையன்.” என்றிவன் சொன்ன நொடி அதிர்ந்துப் போனாள் பிரகல்யா.
இங்கு அபூர்வாவின் அறையிலிருந்த நிலைக் கண்ணாடியின் முன், தீர்க்கமான தன் கண்களின் வழியே தன்னைத்தானே பார்வையாலே அளவெடுத்துக் கொண்டிருந்தான் ருத்ரஜித். அவனது வதனத்தில் வெற்றி புன்னகை வாகையாக சூட்டப்பட்டிருந்தது. கண்களிலோ கர்வம் பொங்கியது. நினைத்ததை நடத்திக் காட்டிய மகிழ்ச்சி தான்.
அன்றே அபூர்வாவின் கழுத்தில் தாலி கட்டியிருப்பான் தான். அவள் சிந்திய கண்ணீர் அவனை கட்டவிடாமல் தடுத்துவிட்டது. அவளே தன்னை தேடி வர வேண்டும் என்று நினைத்தவன் அன்று தாலியைக் கட்டாமல் எழ, அதன்பின் நடந்த ஒவ்வொன்றும் அவன் தலையீடு இல்லாமலே சிறப்பாக அமைந்திருந்தது.
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை மெச்சுதலாக பார்த்தவன் “இனியும் தொடரும் நம்ம ஆட்டம்.” என்றான் தன் மீசையை முறுக்கியபடி.
“என்ன ஆட்டம்?” என்று புரியாது விழித்துக் கொண்டு கேட்ட அபூர்வாவின் குரலில் திரும்பிப் பார்த்தவனோ, அவளையே அழுத்தமான பார்வைப் பார்த்தான்.
உன்னையே நித்தம்
விரும்பும் என்
மனதிற்கு
எப்படி சொல்வேன் நான்..…
நீ என்னிடம்
ஏமாற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறாய்
என்று….…
