2.அத்தியாயம்

2.தணல்

பகலவனின் செங்கதிர்கள் பூமியை வெளிச்சமுறச் செய்திட, அதிகாலை பனித்துளிகள் உருகத் தொடங்கியிருந்தது. திரையில் தெரிந்த வெளிச்சம் திருமண உடைகளை அணிந்து தயாராகிக் கொண்டிருந்தவளது முகத்தின் மீதே சுள்ளென்று விழுந்தது. பனித்துளியாய் அவள் கரைவதற்கான அறிகுறியா? இல்லை கதிரவனின் பார்வை அவள் மீது பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறியா என்பது இன்னும் சற்று வினாடிகளில் அவளுக்கே தெரிந்துவிடும்.

அதிஷ்டா சிவப்பு நிற வேலைப்பாடுகள் மிக்க, லெஹங்காவில் ஓர் ஓவியம் போல் மிளிர்ந்தாள். குந்தன் நகைகளின் மீதே பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கதிர்கள் அவளது அழகை மேலும் மிளிரச் செய்தது. பட்டுப்புடவையில் தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இன்று வட இந்திய ஆடை அலங்காரத்துடன் கண்ணாடி முன் அமர்ந்திருப்பது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் அவ்வுடை அவளுக்கு பொருத்தமாகத்தான் இருந்தது.

“தும் பஹத் ஹூசூரத் ஹோ” என்று அவள் மிகவும் அழகாக இருப்பதாக அலங்கரித்த பெண்மணி கூற, ஆர்யனின் சில உறவுக்கார பெண்கள் பெண்ணவளின் காதோரம் திருஷ்டி பொட்டினை வைத்து விட்டனர்.

அவரவர்கள் தயாராகும் பொருட்டு சென்றுவிட அறையில் தனித்து இருந்தாள் அதிஷ்டா. கடந்த மூன்று வருடங்களாக தனித்து வாழப்பட்டவளுக்கு இன்னும் சற்று நிமிடங்களில் உறவென்று ஒரு குடும்பம் கிடைக்கவிருக்கின்றது.

இருந்தும் நெஞ்சோரம் ஒரு நெருடல். அவள் தவிர்க்க நினைக்கின்றாள் தான், இருந்தும் அவளால் முடியவில்லை. கண்களை மூடி சில நொடி அமைதியாக இருந்தாள் பெண்ணவள். அவளது அமைதியை கெடுக்கும் வண்ணம் கதவு திறக்கப்பட, பட்டென்று இமை திறந்தவள் வாயில் கதவினைப் பார்த்தாள்.

அதே சமயம் மணமகன் வேலைப்பாடுகள் மிகுந்த சந்தன வண்ண சர்வாணி அணிந்தபடி, தன் தலையைக் கோதிக் கொண்டிருந்தான்.

“க்யா தும் தயார் ஹோ பேட்டா” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தார் ஆர்யனின் தந்தை.

“ஓ தாதா. ஆல்மோஸ்ட் ஐ அம் ரெடி.” என்றவன் புன்னகைக்க அவனது நண்பர்களும் கோரஷாக “தயார் பிதா ஜி” என்று கிண்டலாக கூறினர்.

தயானந்தனோ, “கூட இருந்து அவனை தயாராகவிடாமல் தொல்லை பண்றீங்களா? வெளியப் போங்கோடா.” என்றவர் பொய்கோபத்துடன் அதட்டினார்.

“நாங்கள் இல்லைனா உங்கள் மகன் தயாராக மாட்டான் பிதாஜி.” என்றொருவன் வாயடிக்க,

“அரே… உங்களுக்கு வேலை வெச்சிருக்கேன் கம் வித் மீ.” என்றவர் முறைத்துக் கொண்டு முன்னேற,

நண்பர்களில் ஒருவனோ, “ட்யூட் உங்க டாடி, வெளியே போங்கடா, அயோக்கிய ராஸ்கல்ஸ்னு நாசுக்கா சொல்றாரு போலயேடா.” என்றான்.

“மச்சி, ஐ லைக் யுவர் இண்டலிஜென்ட். அதே தான். கிளம்புங்க.” என்று ஆர்யனும் புன்னகைத்தபடி வாரிவிட,

“கிரேட் இன்சல்ட் வாங்கடா நம்ம பிதாஜியை பாஃலோ பண்ணுவோம்.” என்றவர்களும் வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் மணமகனது அம்மா, அண்ணி என்ற உறவு முறைகளில் உள்ள பெண்கள், மணமகனின் முகத்தை மறைப்பதற்கான பூக்களாலும் விலை உயர்ந்த முத்துக்களாலும் வேயப்பட்ட சேராவை எடுத்து வந்தனர்.

சற்று முன்பு மணமகள் அறைக்கு சென்று பெண்ணவளது தலையில் சிவப்பு நிற துப்பட்டாவை அணிவித்து வந்திருந்தனர். அதேபோல் ஆணவனுக்கு ஆலம் சுற்றி, தலையில் பூக்கள் தூவி ஆசிர்வதித்து, சேராவை அனைவரும் சேர்ந்து அணிவித்தனர்.

“பேட்டா, விவாஹம் முடியும் வரை இதை கழட்டாதே டீகே.” என்றார் ஆர்யனின் அன்னை.

“டீகே மாம்.” என்றவனும் புன்னகைத்தான்.

“மாம், அதிஷ்டா ரெடியாகிட்டாளா?”

“அதிஷ்டா.. அதிஷ்டா வரவர அவளையே தேடு.” மகனது கைகளை கோபத்தில் கிள்ளியவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல,

“மாம்” என்று பற்களைக் கடித்தான் ஆர்யன். ‘நான் என்ன தப்பா கேட்டுட்டேனு ரொம்ப ஓவரா பண்றாங்க.’ என்று மனதுக்குள் அவனால் புலம்பாமல் இருக்க இயலவில்லை.

இன்னும் சற்று வினாடிகளில் விவாகம் நடக்கவிருக்க, மணமகள் அறையில் தயாராக நின்றிருந்தாள் அதிஷ்டா. சற்று முன்பு ஆர்யனை சந்திக்கும் முன்னர் இவளது அறைக்கதவை திறந்துக் கொண்டு வந்தது என்னவோ, அவளது மாமியார் தான். வந்தவர் இன்று ஏனோ அவளை எக்குறையும் கூறாது, பெண்ணவளுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்துவிட்டு சென்றார்.

பாடல் இசைக்க, அனைவரும் நடனம் ஆடியபடி மணமகனை விவாகம் நடக்கும் மேடைக்கு அழைத்து வந்தனர். மணமகன் விவாக மேடையை அடைந்ததும் மணமகளை அழைத்து வந்தனர், நாலபுறமும் பூக்களால் வேயப்பட்ட பந்தலின் நடுவே மணமகள் நடந்து வர, இளம்பெண்கள் பாடலிசைத்து நடனமிட்டு அவளை வரவேற்று அழைத்து வந்தனர்.

இருவரும் அருகருகே அமர்ந்ததும், ஆணவனின் பார்வை சேராவைத் தாண்டி பெண்ணவளைப் பார்த்தது. ஆனால் பெண்ணவளோ சிறிதும் அவன் முகம் பார்க்கவில்லை. தலைக்கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். நேரம் நெருங்க நெருங்க அவளுக்குள் பயம் அதிகரித்தது.

‘போ நீ எங்க வேணாலும் போ. முடிஞ்சவரை சந்தோசமா இரு. ஆனால் என்னைக்குனாலும் நீ எங்கிட்ட வந்து தான் ஆகணும். உன்னை யாராலையும் எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. நீ மறுத்தாலும் வெறுத்தாலும் நீதான் என் பொஞ்சாதி.’ அவன் ரௌத்திரத்திலும் நின்று நிதானமாக கூறிய அவ்வார்த்தைகள் பெண்ணவளது மனதில் ஒலித்தது.

தனக்கு எதிரே கொழுந்து விட்டு எரியும் அக்னிகுண்டத்தைப் பார்த்தவளுக்கு, அக்னியிலும் அவன் பிம்பம் தெரிந்தது. அவனும் அக்னி தானே.. அக்னியை போன்ற கோபமும் கொண்டவன் அவன். அகிலமே அக்னிதேவனை சுற்றி வர, இங்கு அக்னியோ அவளை சுற்றியல்லவா வருகிறது. மனதிலும், மனவோட்டத்திலும் அக்னியின் நினைவு வர, அவளது தளிர்கரங்கள் குப்பென்று வியர்த்துக் கொண்டது.

அவ்விடம் எங்குப் பார்த்தாலும் அவன் இருப்பது போன்ற எண்ணமே தோன்றிக்கொண்டே இருந்தது.

“காம்டவுன் அதி…காம்டவுன்” தனக்கு மட்டும் கேட்கும் குரலில் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் அதிஷ்டா. புரோகிதர் இருவரும் எழுந்து நிற்க சொல்ல, இருவரின் கரத்திலும் பூமாலை வழங்கப்பட்டது. மணமகளை ஆணவனின் கழுத்தில் மாலையிட சொன்னார் புரோகிதர்.

இருவரும் மாலையை மாற்றிக் கொண்டனர். பின் பெண்ணவளது முந்தியும், ஆணவனது தோள்பட்டையில் போடப்பட்ட துணியுடன் முடிச்சிடப்பட, அக்னி குண்டத்தை ஏழு முறை சுற்றி வரச் சொல்லும் சடங்கு நடைபெறத் தொடங்கியது.

முதல் நான்கு சுற்று பெண்ணவள் முன்னோக்கி செல்ல, அடுத்த மூன்று சுற்று அவளது கரம் பற்றி ஆணவன் அழைத்து சென்றான். இவ்வாறு ஏழு சுற்று சுற்றி வலம் வருவது பாதி விவாகம் முடிந்ததற்கு சமம் ஆகும். மனதை தேற்றி பெண்ணவள் பாதி விவாகத்தைக் கடந்துவிட்டாள்.

இறுதியாக இருவரும் மீண்டும் அமர்ந்துக் கொள்ள, புரோகிதர் மந்திரம் சொல்ல, பெண்ணவளதுக் சங்குகழுத்தில் கருகுமணியால் கோர்க்கப்பட்ட அவர்களது பரம்பரைத் தாலியை கட்டுவதற்காக கையில் ஏந்தினான் மணமகன்.

‘உனக்கு கல்யாணம் ஆகப் போகுது அதிஷ்டா. இனி யாரும் உன்ன தொந்தரவு பண்ண முடியாது.’ என்று மனதோடு நினைத்து தன் கண்களைப் பெண்ணவளோ மூடித்திறந்தாள்.

அவள் இமைமூடித்திறந்த ஒரு சில நொடிகள் பெண்ணவளின் வலி நிறைந்த மனதிற்கு இதமாக இருந்தது. நிம்மதியான மூச்சுக்காற்றை சுவாசிப்பதுப் போன்ற எண்ணம் உண்டானது.

அந்நொடி “தாலி கட்டட்டுமா பாப்பா.” என்று காதோரம் ஒலித்த குரலில் அவளது தேகம் நடுநடுங்கிப்போக, எக்குரலைக் கேட்கவே கூடாது என்று எண்ணினாளோ அதே குரல் கேட்கவும் ஒரு நொடி சிலையென சமைந்து அமர்ந்திருந்தாள். அந்த ஒரு நொடி அவள் கண்ட நிம்மதி சுக்குநூறாக நொறுங்கி உடைவதுப் போன்ற பிம்பம் அவளுள் தோன்றியது.

ஆணவனோ கருகுமணி தாலியை கீழே வைத்துவிட, அங்கிருந்த அனைவரும் புரியாது விழித்தனர். அந்நொடி தன் முகத்தை மறைத்திருந்த சேராவை கழற்றி எறிந்தான் அவளருகே அமர்ந்திருந்த ஆணவன்.

மணமகனுக்கு பதில் வேறொருவன் அமர்ந்திருப்பதைக் கண்டு அனைவரும் திடுக்கிட்டு பார்த்த கணம், அனைவரின் முன்பும் நொடிப் பொழுதில் பெண்ணவளதுக் கழுத்தில் அவன் கொண்டு வந்த மஞ்சள் தாலியினைக் கட்டியிருந்தான் ஆணவன்.

அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்துவிட, அவனது கனல் விழிகளை நேருக்கு நேர் சந்தித்ததில் ஏற்கனவே நடுங்கிக்கொண்டு சிலையென அமர்ந்திருந்தவளது தேகம், அவனது செய்கையில் அனலாய் தகிக்கத் தொடங்கியிருந்தது. முன்பிருந்தவள் என்றால் அனைத்தையும் அந்நொடி தூக்கி எறிந்து விட்டு சென்றிருப்பாள். ஆனால் தற்போது அவளால் அவ்வாறு செய்ய இயலாது அல்லவா!

மூன்று வருட கோபமும் ஒருங்கே அவன் பார்வையில் தெரிய, எதிரே இருந்தவளது நிலையோ மிகவும் கவலைக்கிடமாகி இருக்க, உதடுகள் துடிக்க தன் கழுத்தில் ஏறிய மாங்கல்யத்தைப் பார்த்தாள் பெண்ணவள்.

அவளையும் மீறி கண்களிலிருந்து உவர் நீர் சுரந்தது. எவ்வொருவனிடம் இந்த தாலியைப் பெறவேக்கூடாது என்று எண்ணினாளோ அவனதுக் கரத்திலிருந்து தாலியை தற்போது பெற்றுக்கொண்டாள்.

கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அக்னி சாட்சியாக அவளதுக் கழுத்தில் மூன்று முடிச்சினை இட்டவன் அவன்… அக்னிவேந்தன்.

கனலவனின் கைகள் கூட பெண்ணவளைத் தீண்டவில்லை. ஆனால் அவன் கட்டியத்தாலி அவள் தேகத்தோடு ஒட்டி உறவாட, நெருப்பினுள் அமிழ்ந்துக் கொண்டிருந்தாள் மிஸ்சஸ் அதிஷ்டலட்சுமி அக்னிவேந்தன்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page