3.அத்தியாயம்
3.தணல்
அக்னி சாட்சியாக, அங்கு குழுமியிருந்த மக்கள் சாட்சியாக அவளது வெண்கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் மனைவியாக்கி விட்டான் அக்னி வேந்தன். நடப்பது ஒன்றும் விளங்காமல் கண்களை அகல விரித்தபடி அமர்ந்திருந்தவளுக்கு இது கனவாகிப் போகக் கூடாதா என்றே மனம் அடித்துக்கொண்டது. நடப்பது நிஜம் தானா என்னும் குழப்பத்தில் மூழ்கியிருந்தாள் பெண்.
வாழ்க்கையில் நடப்பவை ஒன்றையும் கணிக்க இயலாது. விதி நம் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது. தான் ஒன்றை நினைத்தால் தெய்வம் ஒன்றை நினைக்கும் என்னும் பழமொழி இங்கு உண்மையாக மாறிவிட்டது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இங்கும் எதிர்வினை நடந்தேறியிருக்க, அதை அனுபவித்து நிற்பவளின் நிலை இனி என்னவாகும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
“இன்னும் எவ்வளவு நேரம் என்னையவே பார்த்துட்டு இருக்கப் போற? எழுந்திரு டி.” என்றவன் வார்த்தைகளில் அழுத்தம் கூட்ட, நடப்பவை உண்மை என்று விளங்கிய கணம் அடித்துப் பிடித்து எழுந்தவள், ஒரு கணம் தடுமாறி விழப் பார்க்க, அவனோ அவளை இம்முறை தாங்கவில்லை.
எனக்கென்ன? என்பதைப் போல் முகம் இறுகிப் போய் நின்றான். பெண்ணவளோ ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி தட்டுத்தடுமாறி நின்றாள்.
ஆர்யனின் உற்றார் உறவினர்களுக்கு இடையில் சலசலப்பு நிகழ்ந்தது. ஆர்யனின் திருமணமென்று வந்தவர்களுக்கு, அங்கு வேறொன்று நடக்க, தயானந்தனிடம் கேட்கவே தொடங்கி விட்டனர்.
“இங்க என்ன நடக்குது தயானந்த்? உன் மகன் எங்க? இவன் யார்?” என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்வி எழும்ப, தயானந்த் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது பார்வை அக்னிவேந்தனின் மீது இருந்தது.
“உங்க மகன் அவன் அறையில தான் இருக்கான். நான் வந்த வேலை சிறப்பா முடிஞ்சுது.” என்றவன் நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்து, அங்கு குழுமியிருந்தவர்களைக் கண்டு, “இவ எனக்கானவ. நான் யாரு? என்னனு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் உங்க யாருக்கும் வராதுனு நினைக்குறேன்.” என்றான் நக்கல் பொதிந்த பார்வையில்.
அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க தயானந்த் எதுவுமே ஒருவார்த்தை எதிர்த்து பேசவில்லை. அவரது மனைவியும் அவரையே தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ ஒன்று விளங்குவதுப் போல தோன்றியது. யாரென்று தெரியாத பெண்ணை மகன் கூறினான் என்று திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவர் சம்மதத்திற்கான காரணம் இதுதானா? என்ற யோசனை அவருக்குள் உருவாகாமல் இல்லை. இத்தனை வருடங்கள் கணவனுடன் வாழ்ந்தவர் ஆகிற்றே.
அதிஷ்டாவோ கண்கள் கலங்கி நின்றாள். அவளால் எதுவுமே பேச இயலவில்லை. தன் இயலாமையை எண்ணி பெண்ணவளால் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது. தன்னை காக்க இனி யாரும் வரமாட்டார்களா? என்று வேண்ட கூட இயலாத சூழலில் சிக்கி தவித்தவளுக்கு நெருப்பில் நிற்பதுப் போன்று தேகம் தகித்தது.
“அவங்க போட்ட நகை, இந்த உடுப்பு எல்லாமும் திருப்பிக் கொடுத்துட்டு இந்த அக்னி வேந்தனோட பொண்டாட்டியா இந்த புடவையை கட்டிட்டு வா.” என்றவன் கூறி முடிக்கும் முன்னரே புடவையை எடுத்துக் கொண்டு வந்திருந்தான் அக்னி வேந்தனின் நண்பன் முத்து.
முத்துவிடமிருந்து புடவையை வாங்கியவன் பெண்ணவளதுக் கரத்தில் திணிக்க, அவளோ அதை பெறாமல் அழுதுக் கொண்டே இருந்ததில் அக்னி வேந்தனின் கோபம் அதிகரித்தது.
“திமிரு இன்னும் குறையில போல” என்றவன் அடுத்த கணமே அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு தரதரவென இழுத்து சென்று, அவள் தங்கியிருந்த அறைக்குள் அழைத்து சென்றவன் கதவை வெடுக்கென்று அடைத்திருந்தான்.
அவனது அதிரடி செயலில் விழிகள் கலங்கி நின்றவள், “ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று இயலாமையுடன் கேட்டாள்.
“ஒரு வார்த்தை பேசினாலும் எனக்கிருக்க கோபத்துல உன்னை கொன்னாலும் கொன்றுவேன். வாயை மூடிகிட்டு சேலையை கட்டு.” என்றவன் பற்களைக் கடிக்கவும் அவள் நடுங்கி விட்டாள்.
கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய் நிற்பவனிடம் அவளால் என்ன பேச இயலும்? அவன் இப்படி கோபம் கொள்வதற்கு காரணமும் அவள் தானே. எதுவும் பேசாமல் புடவையை எடுத்துக்கொண்டு, குளியலறை நோக்கி நுழைந்தவளை அவனதுக் குரல் தடுத்தது.
“எதுக்கு அங்கப் போறவ? அப்படியே ஓடிரலாம்னு பார்க்குறியோ? பண்ணாலும் பண்றவ தான். இனி எவனும் உனக்கு கிடைக்க மாட்டான். இங்க நின்னு மாத்துடி.” என்றான் காட்டமாக.
ஏற்கனவே அழுகையில் கரைந்துக் கொண்டிருப்பவளுக்கு அவன் வார்த்தை சுருக்கென்று வலிக்க செய்தது.
“ஏன் வாழ்க்கையில விளையாட உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது? என்னால நீங்க பேசுறது எல்லாம் கேட்டுட்டு செய்ய முடியாது.” தனக்குள் தைரியத்தை வரவழைத்து அவள் பேச முனைந்த கணம், அவளது கழுத்தை இறுக பற்றி சுவற்றோடு ஒட்டி சாய்த்திருந்தான் அக்னி.
“என்னடி சொன்ன? சொல்லுடி மறுபடியும்?” என்றவனின் அழுத்தம் கூட, வலியில் துடித்தாள் பாவை.
கழுத்து வலிக்க, அவனது கரத்தை பிடித்து இழுக்க முயன்றவள் அவன் வலிமை முன் தோற்றுப் போனாள். கண்களிலிருந்து கண்ணீர் ஆறென சுரந்தது.
“வ… வலிக்குது..” தட்டுத்தடுமாறி திக்கித் திணறி வார்த்தைகள் வெளிப்பட, அவனது கரம் மெல்ல தளர்ந்தது. இருந்தும் அவன் கண்களில் தெரிந்த கோபம் மட்டும் குறையவில்லை.
“எனக்கும் தான்டி வலிக்குது… எவனோ ஒருத்தன் உன் கையை பிடிச்சு ஆடும்போதே நான் செத்துட்டேன்டி.. இந்தா பாரு உனக்கு சந்தோசத்தை மட்டுமே காட்டணும்னு நினைச்ச அக்னி வேந்தன் என்னைக்கோ செத்து போயிட்டான். இப்போ இருக்கவ உனக்கு நரகத்தை மட்டும் காட்ட பொறந்து வந்திருக்கான். நீ வீணா பேசி காயம்பட்டுக்காதா அம்புட்டு தான் சொல்லுவேன்.” என்றவனின் ஆவேச பேச்சில் அவள் தேகம் நடுங்கியது.
அதற்கு மேல் பதில் எதுவும் பேசவில்லை அவள். விரக்தியுடன் அவ்விடம் நின்றவள், ” நான் புடவை மாத்துறேன்.” என்றவள் அவனை அழுத விழிகளுடன் ஏறிட்டாள்.
அவனோ அடுத்த கணமே திரும்பி நின்று, எங்கோ சுவற்றை வெறித்துக் கொண்டு நின்றான். அதுவே அவளுக்கு போதுமானதாக இருக்க, மடமடவென உடைகளையும் நகைகளையும் கழற்றி வைத்தவள், அவன் கொடுத்தப் புடவையை கட்டிக்கொண்டு, அவன் முன்பு அவன் கட்டியத் தாலியுடன் வந்து நின்றாள்.
தன் விதி அவனுடன் தான் என்று தெரிந்தப் பின் அவளால் தான் என்ன செய்ய இயலும். மகுடிக்கு ஆடும் பாம்பைப் போல் அவன் சொல்லுக்கேற்ப இவள் நடந்துக்கொண்டாள்.
அவளை மேலிருந்து கீழே பார்த்தவன் நக்கலுடன் புன்னகைத்தான். அந்த புன்னகைக்கான அர்த்தம் அந்நொடி அவளுக்கு விளங்கவில்லை.
“இந்த புடவை உனக்கு நினைவு இருக்குதா? அது எப்படி உனக்கு நினைவு இருக்கும்?” என்றவன் கேள்வியும் கேட்டு, அதற்கு ஒரு பதிலை நக்கலுடன் அளித்து விட்டு செல்ல,
அங்கிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டவள் அப்புடவையைப் பார்த்து மௌனமாய் சத்தமின்றி அழுதாள். வாய்விட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்ததது. அதற்குள் ஆணவனோ பார்வையிலேயே அவளை சுட்டெறித்தான்.
“ஏய்.. ஒப்பாரி வெச்சது போதும் கெளம்புடி.” என்றவன் அவளை அதட்டவும் அவன் பின்னே சிறு விசும்பளுடன் அழுகையை கட்டுப்படுத்த முயன்றபடி சென்றாள் அதிஷ்டா.
ஆம் அவள் அழுவதற்கான சுதந்திரம் கூட பறிபோனது. இது அனைத்திற்கும் காரணம் அவன் ஒருவனே.
அவனோ நேராக சென்றவன் தயானந்த்தின் கரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விட்டு, “கல்யாணத்து நீங்க பண்ண செலவுக்கான மொத்த பணம். அப்புறம் உங்க நகை எல்லாம் ரூம்ல கெடக்கு. சரியா இருக்குதானு பார்த்துக்கோங்க. அடுத்தவன் சம்பாதியத்துல என் கல்யாணம் நடக்கணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல. நான் சொன்னது புரிஞ்சு உதவி பண்ணிருக்கீக அதை என்னைக்குமே இந்த அக்னி வேந்தன் மறக்க மாட்டேன்.” என்றவன் தனது மீசையை முறுக்கி விட்டு, பெண்ணவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான்.
தயானந்த் எதுவும் பேசமால் பணத்தை பெற்றுக்கொண்டார். யாரோ ஒருத்திக்காக தன் வீட்டு பணம் செலவாவதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லை.
“முத்து வண்டியை எடுல்ல” என்றவனோ பெண்ணவளது கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல,
“இல்லை நான் வரலை. என்னை விடுங்க. அதுதான் உங்க விருப்பபடி தாலி கட்டியாச்சே” என்றவளோ கண்ணீருடன் முரண்டுப்பிடித்தாள்.
“கோபத்துல அறைஞ்சு புடுவேன். ஒழுங்கா வாடி. தாலி கட்டுனா போதுமா மத்தது எவ்வளவோ கெடக்கு வாடி.” என்றவன் அவளை உறுத்து விழிக்க, அவன் அச்சறுத்தலுக்கி அஞ்சி விருப்பமின்றி அவன் பின்னே சென்றவளுக்கு மனசெல்லாம் பயம் மட்டுமே..
தன்னை யாரும் காக்க மாட்டார்களா? என்று விழிகள் கலங்க, அழுகையில் கரைந்துக் கொண்டே சென்றவளை தடுக்கும் விதமாக வந்தான் ராகுல். ஆர்யனின் நண்பன்.
தயானந்த அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்க, பத்து நிமிடங்கள் முன்பு தான் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்தனர் அவனும் மற்ற நண்பர்களும். வந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாய் அங்கு நடப்பவை இருக்க, நடந்தவற்றை மற்றவர்களிடம் விசாரித்தவன், தன் நண்பனின் வாழ்க்கைக்காக தயானந்திடம் கேள்வி கேட்கத் தொடங்கினான்.
“அங்கிள், இங்க என்ன நடக்குது. அவனை பிடிச்சு ஜெயில்ல போடுங்க. நம்ம வீட்டு கல்யாணத்துல வந்து பிரச்சனை பண்றான். டேய் நீ போய் ஆர்யன் என்ன ஆனானு பாரு” என்று தன் மற்ற நண்பர்களில் ஒருவனிடம் கூறியபடி, அக்னி வேந்தன் செல்லவிடாது வழியை மறைத்து நின்றான்.
“யாரைப் பார்த்துலே குரலை உசத்துற? மாப்ளை ஊம்னு மட்டும் சொல்லு இவனுங்க தலையை சீவி கூறு போடுறேன்.” என்று முத்து வேஷ்டியை மடித்துக் கொண்டு வர,
“சுண்டக்கா பசங்க கூட நம்ம வீரத்தை காட்டுறது நமக்குதாம்லே இழுக்கு. டேய், உசுரு முக்கியம்னு நினைச்சா ஒதுங்கி போயிடுங்க.. மீறி எதிர்க்கணும்னு நினைச்சா வா மோதி பார்த்துடலாம்” என்றவன் அனல் தெறிக்கும் பார்வை பார்த்தபடி, கை முஸ்டியை இறுக்கிப் பிடிக்க, அவனது ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கண்டு ஒரே ஒரு நொடி ராகுலும் மிரண்டு தான் போனான்.
“அங்கிள், இவனுங்க பேசிட்டே இருக்காங்க. நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க?” தைரியத்தை வரவழைத்து தயானந்திடம் கேட்டான்.
“அவங்க அமைதியா இருக்கும் போதே தெரிய வேண்டாமா? சாரு எங்களுக்கு தான் சப்போர்ட்டு. போவியா அங்குட்டு…” என்றான் முத்து எள்ளல் தொணியில்.
“அங்கிள்..” என்றவன் மீண்டும் கத்தும் முன்,
“சட்டாப் ராகுல். உன் வேலையை மட்டும் பாரு.” என்று தயானந்த் அவனைத் திட்டவும், நடப்பவை ஒன்றும் புரியாமல் வாயடைத்து போய் நின்றான் ராகுல்.
அவனை ஒரு நக்கல் பார்வை முத்து பார்த்தபடி செல்ல, அக்னிவேந்தனோ ‘நீயெல்லாம் எனக்கு ஒரு பொருட்டும் அல்ல’ என்பது போல மிகுந்த அலட்சியத்துடன் பெண்ணவளை அவனை தாண்டி அழைத்து சென்றான்.
அவன் கட்டியத் தாலியின் பாரம் கூடியதோ என்னவோ? அடுத்தடுத்த நடக்கும் நிகழ்வுகளை தாங்க இயலாது பரிதவித்தவள், இனி அழுவதற்கு தன் கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது என்பதைப் போல நடக்க இயலாமல், வாழ்வையே வெறுத்துக் கொண்டு நடந்தாள்.
அவனது பிடி வலித்தது. உடலின் நீர்ச்சத்து வற்றியது. காலையிலிருந்து உணவு உண்ணாத மயக்கம் கண்களை கிறக்கமடைய செய்ய, அவனது வலிய தோளின் மீதே மயங்கி சரிந்தாள் பாவை. அவள் நிலையை எண்ணி சிறிதும் அவன் கலங்கவில்லை.
பெண்ணவளைத் தன் இருக்கைகளால் தூக்கிக் கொண்டு, அவர்கள் வந்திருந்த ஜீப்பில் ஏறி அமர்ந்துக் கொண்டான். முத்துவும் ஏறி அமர்ந்துவிட, அவனது ஜீப் சீறிப் பாய்ந்தபடி அங்கிருந்து விரைந்தது.
நடந்து முடிந்தபின் எழுந்து என்ன பயன்? என்பது போல மயக்கத்திலிருந்து எழுந்திருந்தான் ஆர்யன். தனது ஆடைகள் மாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு, நண்பர்கள் நடந்தவற்றைக் கூற, அடித்துப் பிடித்து வெளியே வந்தவன், சாலையின் இருபுறமும் பெண்ணவளை தேடினான்.
தன்னை நம்பி வந்தவளை தொலைத்து விட்டோமே என்ற பரிதவிப்பு அவன் கண்களில் வெளிப்பட, “அதிஷ்டா…” என்று வாய்விட்டு கத்தியவனை, தயானந்தனின் ஆட்கள் தான் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.
“அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவ போயிட்டா, அவளை மறந்துட்டு அடுத்து என்ன பண்லாம்னு பாரு.” தயானந்த் கூற, உறைந்து போனான் ஆர்யன்.
“வாட், அவளை விட சொல்றீங்களா? அதுவும் எவனோ தெரியாத ஒருத்தன்கிட்ட? தாதா இங்க நடக்குறது எதுவும் சரியில்லை. யாருனே தெரியாத ஒருத்தன் இங்க எப்படி நுழைய முடியும்? உங்க உதவி இல்லாமல்?” என்றவன் நேரடியாக கேட்டே விட்டான்.
“யாருனு உனக்கு தெரியாதுனு சொல்லு. அந்த பொண்ணுக்கு நல்லாவே தெரியும். சேர வேண்டிய இடத்துல சேர்ந்துட்டா. இதுக்கு மேல அவ பின்னாடி போக நினைச்சா, பையன்னு கூட பார்க்க மாட்டேன். சம்ஜே.” என்றவர் முன்னோக்கி செல்ல, அவனோ பெரும் கோபத்துடன் தனது காரில் ஏறிச் சென்றிருந்தான்.
தனக்கு நேர்ந்தவை அனைத்தும் திட்டமிடப்பட்ட சதி என்பது மெல்ல மெல்ல அவன் மனதிற்கு விளங்கத் தொடங்கியது. தந்தை தன் நண்பர்களை அழைத்துச் சென்றது தொடக்கம் தனியாக இருந்தவனை நொடியில் தாக்கி மயக்கமுற செய்து, தன் திருமணத்தையே நிறுத்திவிட்டதை அவனால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு சீறிப்பாய்ந்தான் ஆர்யன்.
வீட்டை அடைந்திருந்த ஆர்யன் கைக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் உடைக்கத் தொடங்கியிருந்தான். அவனோடு வந்த நண்பர்களும் அவனைத் தடுக்கப் பார்க்க, அவனது கோபம் மட்டும் குறையவில்லை. அதிஷ்டா தன் மனைவியாகப் போகிறாள் என்ற கனவை சுமந்தவனுக்கு இந்த ஏமாற்றத்தை எதிர்கொள்ளவே இயலவில்லை.
“காம் டவுன் மச்சான். நீ கொஞ்சம் ரிலாக்ஸாக இரு.” ராகுல் நண்பனைக் கட்டுப்படுத்த முயன்றான்.
“எப்படி என்னால முடியும்? வாட் தி ஹெல்டா மச்சான். விட மாட்டேன் அவனை விடவே மாட்டேன்.”
“மச்சான், அவனுங்க எல்லாம் படிச்சவனுங்க மாதிரி தெரியலைடா. ரொம்ப அநாகரிகமா நடந்துகிட்டானுங்க. பாவம் அந்த பொண்ணை வற்புறுத்தி அழைச்சிட்டு போனான். இதுல உங்க அப்பாவோட அமைதி தான்டா என்னால டால்ரேட் பண்ண முடியலை.”
“அவர் தான் முதல் கிரிமினல். நான் யோசிக்க தவறிட்டேன். இவர் இவ்ளோ சீக்கிரம் சரினு சொல்றாருனு நான் திங் பண்ணிருக்கணும். நம்பி ஏமாந்து நிற்கிறேன். விடமாட்டேன் என் அதிஷ்டாவை அந்த நரகத்துலயிருந்து நான் மீட்டுக் கொண்டு வருவேன்.” என்றான் மிக உறுதியாக.
“ஒன்னு மறந்திடாதாடா, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதுமட்டுமில்ல உங்க அப்பா சொன்னதுப் போல, அவளுக்கும் அவனை நல்லாவே தெரிஞ்சிருக்கு. எதுவும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாது.”
“திட்டம்போட்டு என் வாழ்க்கை அழிச்சவங்களை எப்படிடா நான் சும்மா விடுவேன்? விடமாட்டேன் ராகுல்.. என்ன பண்றேனு மட்டும் பாரு.” என்றான் கோபத்துடன்.
ஆனால் அவனும் அறியாத ஒன்று இனிதான் நடக்கவிருக்கின்றது. அது நடக்கும் நொடி அனைத்தும், அவனே நினைத்தாலும் மாறாது போய்விடும்.
