3.வல்லினம்
கைபேசியின் மறுபுறம் அறிந்துக் கொண்ட செய்தியில், ருத்ரஜித்தின் முகம் பாறைப் போல் இறுகியது. குளிர்ந்த ஏலகிரி மலையின் குளிர்க்காற்று கூட, அவனது உஷ்ண மூச்சிற்கு முன் ஒன்றுமில்லாமல் போக, கண்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்த நினைத்தவனது கூரிய விழிகள் பின்னிருக்கையில் படுத்திருந்த அபூர்வாவின் மீது தீண்டி சென்றது.
மயக்கத்தில் மூடியிருந்த பெரிய கண்கள் திறவாதா? என்ற யோசனை அவனுள் இருக்க, அவளை தன்னிருகைகளால் அள்ளியணைத்த போது, பெண்ணவளின் அளவான கூர் நாசியிலிருந்து வெளிவரும் சூடான மூச்சுக்காற்று, ஆணவனின் மார்பில் பட்டுச் சென்ற நிமிடம் உண்டான கதகதப்பை நினைத்தவனின் மனம் ஒரு நிலையிலேயே இல்லை.
அந்நொடி எதற்காக அவ்விடம் வந்தானோ அதை அனைத்தையும் மறக்க செய்பவளைக் கண்டு சிறு கோபமும் எட்டிப் பார்க்க, அவளை உறுத்து விழித்தவனது பார்வை அவளின் ரோஜா இதழ்களின் மீது படிய, அவனது வசீகரிக்கும் பார்வை, பெண்ணவளை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியது.
பின் கடினப்பட்டே, தனது முகத்தை அவள் புறமிருந்து திருப்பியவன், காரினை உயிர்ப்பிக்க, காரின் அதிர்வில், மெல்ல தன் கண்களை திறந்தாள் அபூர்வா.
“ம்ம்ம்… மம்மி ஓநாய்க்கு டின்னர் ஆகிட்டேனா?” என்று புலம்பியபடியே மெல்ல விழித்தவள், சுற்றிலும் பார்வையை சுழற்ற, அப்போதுதான் நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.
ஓநாய்க்கு பயந்து ஓடியவள், தன் மீது மோதவிருந்த காரைக் கண்டு மயங்கி சரிந்தது முதற்கொண்டு நினைவுவர, பெண்ணவளின் பார்வை காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது படிந்தது.
“ஹலோ… யாருயா நீ?” என்றவள் பட்டென்று எழுந்துக் கொண்டு கேட்க, வண்டியின் இயக்கத்தில் இருக்கையின் மீதே மீண்டும் விழுந்தாள். ஏற்கனவே அவள் விழித்துக் கொண்டதை அறிந்தவனோ, அவளது செயலைக் கண்டு நகைத்தபடி அமர்ந்திருந்தான்.
“உன்னை தான் கேட்குறேன் மிஸ்டர். நீதான என்னை இடிக்க வந்த?” என்றவளின் கேள்வியில் நகைத்தானே தவிர, பதில் ஏதும் பேசவில்லை.
‘என்ன இவன், சிரிக்குறான் எதுவும் பேச மாட்டிங்குறான். ஒருவேளை என்னை கிட்நாப் பண்ண போறானோ? எதுக்கும் நம்ம பொறுமையா பேசி பார்ப்போம்’ என்று யோசித்தவள் அவன் புறம் திரும்பி, “இங்க பாருங்க. நீங்க யாருனு எனக்கு சொன்னாதானே தெரியும்? என்னை எங்க கூப்பிட்டு போறீங்க?” என்றாள் சற்று மிரட்சியோடு முகத்தை வைத்தபடி.
அவனோ முன்னோக்கி திரும்பியிருந்ததால், முகம் வேறு சரியாக தெரியவில்லை அவளுக்கு. எட்டி எட்டி பார்க்க முயற்சித்தவளுக்கு, அவன் போட்டிருந்த தொப்பி மேலும் இடையூறாக இருக்க, ‘அக்னி நட்சத்திர வெயில் மண்டையை பொளக்குற மாதிரில்ல தொப்பி போட்டிருக்கான். எதுவும் பேச வேற மாட்டிங்குறான். அபூமா எதவாது பண்ணுமா?’ என்று மனதில் நினைத்தவளுக்கு மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.
“யோவ் என்னை கடத்திட்டு போக பார்க்குறியா? மரியாதையா வண்டியை நிறுத்து, இல்லைனா ஓடுற வண்டியில இருந்து கதவை திறந்து குதிச்சிடுவேன்.” என்று கூறியவளோ ‘யாருகிட்ட?’ என்று மிதப்பாக அவனைப் பார்க்க, அதுவரை லாக் செய்திருந்த பின் கதவுகளை திறந்து விட்டிருந்தான் ருத்ரஜித்.
அவனது செயலே, ‘தாராளமா குதி.’ என்று சொல்லாமல் கூறியிருக்க, ஒருநிமிடம் அதிர்ந்துதான் போனாள் அபூர்வா.
“கூல் கூல்… நான் சும்மா சொன்னேன். நான் குதிச்சா தேவையில்லாமல் நீங்கதானே ஜெயிலுக்கு போகணும். லாக் போட்ருங்க.” என்று பவ்யமாக கூறுபவளைக் கண்டு அன்னிச்சையாக முறுவலித்தது ஆணவனின் வன்மையான இதழ்கள்.
‘இதுக்கும் பேச மாட்டிங்குறானே. ஒருவேளை வாய் பேச வராதோ?’ என்று யோசனையோடு அவனை பார்த்தவளுக்கு சடுதியில் ஒரு எண்ணம் தோன்ற, அவனது தோளை சுரண்டினாள்.
“ஹேய் மிஸ்டர் என்னை கடத்திட்டு தானே போற? நீதானே அந்த ஆன்டிஹீரோ.” என்று ஆர்வத்தோடு கூற, அடுத்த நொடி “வாட்?” என்று கர்ஜித்தான் ருத்ரஜித்.
“ஓஹோ… நீ ஊமையில்லையா. அப்போ கன்பார்ம் ஆன்டிஹீரோ தான். அவங்க தான் அதிகமா பேசவே மாட்டானுங்க. சாதாரணமா பேசுனாலே இப்படி தான் கத்துவாங்க.” என்றவளின் முகத்தில் சொல்லிலடங்கா மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
அதுவரை அழகியாக தோன்றியவளோ, தற்போது லூசாக அவனுக்கு தெரிய, குழப்பத்தோடு காரினை ஓட்டினான் ருத்ரஜித்.
“ஓய் சொல்லுபா… என்னை எங்க கடத்திட்டு போற? நான் கத்த எல்லாம் மாட்டேன். இன்பேக்ட் உன்னை மாதிரி ஒரு ஆளை பார்க்கணும்னு தான் ரொம்ப வருசமா காத்துகிட்டே இருக்கேன். நல்லவேளை எங்க காலேஜ் கேம்ப்க்காக ஏலகிரி சாகச முகாம்க்கு அழைச்சுட்டு வந்தாங்க. அப்படி வராமல் இருந்திருந்தேனா உன்னை பார்த்திருக்க முடியுமா? அதுமட்டுமா நான் யாருக்கும் தெரியாமல், இந்த நடுராத்திரி எழுந்து வந்தது கூட ரொம்ப நல்லதா போச்சு” என்று புன்னகை மாறாமல் பேசுபவளை வினோதமாக பார்த்தான் ருத்ரஜித்.
“நீ எப்போதும் இப்படி தானா? ஆமா அது என்ன ஆன்டிஹீரோ? என்னை பார்த்தால் ஆண்டியை க்ரெக்ட் பண்ற மாதிரியா இருக்கு?” என்று சற்று கோபத்தோடு வந்தது அவனின் வார்த்தைகள்.
அவனது கூற்றைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவளோ, “நீ இவ்ளோ எல்லாம் பேசுவியா? ஆன்டிஹீரோனா, ஹீரோவுக்கு எதிர்மறையான குணம் கொண்டவன்னு அர்த்தம். உதாரணத்துக்கு நீ நல்லவனா இருந்தால் என்னை கேம்ப் கூப்பிட்டு போய் விடுவ. அதே நீ ஆன்டிஹீரோனா என்னை கடத்திட்டு போய் வலுக்கட்டாயமா என்னை டார்ச்சர் பண்ணுவ. தினம் தினம் என்னை சித்ரவதை பண்ணுவ? வாழ்க்கையை வெறுக்க வைப்ப. இது மாதிரி இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.” என்று முகத்தை பயங்கரமாக வைத்துக்கொண்டு அவள் கூற, ருத்ரஜித்தின் முகத்தில் வசீகரப் புன்னகை படர்ந்தது.
“உனக்கு அப்போ பயமா இல்லையா?” என்று ஆர்வமும், விசமமும் கலந்தவன் கேட்க,
“இல்லையே? எதுக்கு பயப்படணும்? சரி உங்க பேர் என்ன?” என்றாள் ஆர்வத்துடன்.
அவளது கேள்விக்கு பதில் ஏதும் பேசாதவனோ, காரினை ஓரிடத்தில் நிறுத்தியிருந்தான். “ஓ அதுக்குள்ள இடம் வந்திடுச்சா? பழைய பங்களாவா? இல்லை காட்டு பங்களாவா?” என்றாள் பேரார்வத்துடன்.
“இறங்கிப் பாரு. நீயே தெரிஞ்சுப்ப?” என்றவன், காரின் லாக்கினை திறந்துவிட, கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள், அவ்விடத்தைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.
அவர்களது கல்லூரி முகாமிட்ட இடத்திற்கு தான் அழைத்து வந்திருந்தான் ருத்ரஜித். அவள் பேசும்போது சொன்ன இடத்தினை வைத்து பத்திரமாக அவளை கொண்டு வந்து சேர்த்திருந்தான் அவன். அவ்விடத்தைக் கண்டதுமே ஆர்வத்துடன் இருந்தவளின் பூமுகம், சோகத்தை தத்தெடுக்க, “அடப்பாவி இதுதான் அந்த இடமா? அப்போ இவன் நல்லவன்தான் போல.” என்று பெருமூச்சொன்றை விட்டாள் பெண்ணவள்.
அவள் சொல்லி முடித்து திரும்புவதற்குள், பெண்ணவளின் கழுத்தினை பின்னிருந்து இறுக பற்றியிருந்தான் ருத்ரஜித். அவனது திடீர் செயலில் அதிர்ந்தவள் திரும்ப முயற்சிக்க, பாவம் அவளால் துளிகூட அசைய இயலாது போனது.
தன் உடலோடு, அவளது உடலை சேர்த்து அணைத்தவன், பெண்ணவளின் பின் தோளில் அவனின் நாடியை வைக்க, அவனது அடர்ந்த தாடி கொடுத்த குறுகுறுப்பும், அவனது சூடான மூச்சுக்காற்றும் அவளை நடுங்க செய்தது. கடினப்பட்டே எச்சிலை விழுங்கியவள், பேச நினைக்கும் முன், தனது கரத்தால் அவளது வாயை பொத்தினான்.
“இன்னொரு முறை இப்படி தனியா சுத்துன மவளே… இப்படி கொண்டு வந்து விடமாட்டேன். அப்புறம் நான் கொடுக்குற பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்கும்.” என்று கூறும்போதே அவனது கைகள் அவளது இடையை இறுக்கமாக பற்றியிருந்தது. அவனது அந்த இறுக்கம் அவளுக்கு வலியை உண்டாக்க, மறுபக்கம் அவனது தொடுதல் பெண்ணவளின் வயிற்றில் ரோலர்கோஸ்டர் ரைடை சிறப்பாக செய்திருந்தது.
“ஒழுங்கா நல்லபுள்ளையா கேம்ப் வந்தோம்மா.. போனோமானு இருக்கணும். ஆன்டிஹீரோனு வேற எவன்கிட்டயாவது போய் பேசிட்டு இருந்த, அவ்வளவுதான். அடுத்த நிமிசம் உன்னை எங்கிட்ட இருந்து எவனாலையும் காப்பாற்ற முடியாது.” என்றவனது எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகள் அவளின் செவி வழி நுழைந்து, முதுகுதண்டினை சில்லிடச் செய்தது.
“அன்டர்ஸ்டாண்ட்” என்று மீண்டும் அவன் கர்ஜிக்க, அவளை அறியாமலே பயத்தில் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பெண்ணவள்.
அவளது செயலில் ருத்ரஜித்தின் முகம் அன்னிச்சையாக மலர்ந்திருக்க, அவளது வாசனையை முகர்ந்தவனின் கைகளோ பெண்ணவளது இடையை இறுக்கமாக பற்றியிழுக்க, அவனது உடும்புபிடி பெண்ணவளது உடலில் பயபந்தை உருவாக்கியிருந்தது.
ஆணவனின் ஸ்பரிசமும், தீண்டலும், அவள் உணராத உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்க, பயத்தில் கண்களை மட்டும் இறுக மூடிக்கொண்டாள் அபூர்வா. மெல்ல அவளது இதழ்களை பிடித்திருந்த தனது கைகளை நகர்த்தியிருந்தவனோ, அவளின் அருகாமையில் தன்னையவன் இழந்தாலும், அவன் வந்த வேலை அவனுக்காக காத்திருக்க, மெல்ல அவனது பிடியை அவளைவிட்டு தளர்த்தியிருந்தான் ருத்ரஜித்.
அவன் முழுவதுமாக அவளைவிட்டு பிரிந்திருந்தாலும், அந்த பயமும், பெண்களுக்கே உரிய கூச்சமும் அபூர்வாவை கண் திறக்க இயலாது செய்திருக்க, அவ்விடத்தில் சிலை போல் நின்றிருந்தாள் அபூர்வா.
அவனது கார் செல்லும் சப்தம் கேட்டதும் தான், தனது கண்களை பட்டென்று திறந்தவள், சாலையினைத் திரும்பி பார்த்தாள். அவனது கார் சென்ற வழித்தடமின்றி அவ்விடம் மிக அமைதியாக இருக்க, அபூர்வாவின் இதயமோ நூறுமடங்கு துடித்தது.
யாரிவன்? முகத்தை கூட பார்க்க இயலவில்லை. இருந்தும் ஒருநொடியில் தன்னை அச்சமுற செய்துவிட்டானே? என்று கவலை அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய, மறுபுறம் கோபமும் வர, “டேய் உன்னை விடமாட்டேன்டா பொறுக்கி.” என்று திட்டியவளுக்கு அவ்விடம் நிற்கவே பிடிக்கவில்லை.
சாவி போட்டால் நடக்கும் பொம்மை போல, அங்கிருந்து சென்றவள் சத்தமின்றி வந்தனாவின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள். இந்த நிமிடம் வரை நடந்தவை கனவு போலவே தோன்றியது அபூர்வாவுக்கு. அதன்பின்னர் விடியற்காலை நான்கு மணிக்கு தன்னையும் மீறி கண்ணயர்ந்தவள் உறக்கத்தினைத் தழுவியிருந்தாள்.
****
அந்த அதிகாலை வேளையில் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக் கொண்டிருந்தான் ஒருவன். அவனது பயம் உடல் முழுவதும் விரவியிருக்க, சாவைக் கண்டு அஞ்சியவன், தான் பிழைத்துவிட மாட்டோமா? என்ற கவலையில் ஓடிக் கொண்டியிருக்க, அவனைத் துரத்திக் கொண்டு வந்திருந்தனர் நான்கு ரவுடிகள்.
அவர்களின் பிடியில் இரண்டு நாட்களாக அகப்பட்டு இருந்தவனுக்கு, நரகம் என்றால் என்ன என்பதைக் காட்டியிருந்தனர் அந்த நான்கு மலைமாடுகளும். ஆம் ,அவர்களது தோற்றம் மிக பயங்கரமாக இருந்தது. அதைவிட பாவம் பார்ப்பது, அவர்களது அகராதியிலேயே இல்லாமல் இருக்க, அவர்கள் அசந்த நேரத்தில் தப்பித்து இருந்தான் தற்போது ஓடிக் கொண்டிருப்பவன்.
அங்கிருந்த புதர் ஒன்றில் மறைந்துக் கொண்டவன், தனது மூச்சுக்காற்று கூட வெளியில் கேட்காத வண்ணம் வாயைப் பொத்திக்க் கொண்டான். அவ்விடம் வந்த ரவுடிகளோ, நாலாபுறமும் அவனை தேடியபடி, இரண்டு நபர்களாக பிரிந்து, அவனைத் தேடுவதற்காக சென்றுவிட, அவர்கள் சென்றதும் வெளியே வந்தவன், வேறு வழியாக ஓடத் தொடங்கியிருந்தான்.
தன்னை காப்பாற்ற யாரேனும் வரமாட்டார்களா? என்றவனின் வேண்டுதலுக்கு இணங்க, அவன் ஓடிக்கொண்டிருந்த அதே சாலையில் தனது மகிழுந்தில் வந்துக் கொண்டிருந்தான் ருத்ரஜித்.
அவனது காரைக் கண்டதும், போன உயிர் மீண்டும் வர, வழியில் நின்றவன் உதவி கேட்டான். காரை நிறுத்திய ருத்ரஜித்தோ, “என்னாச்சு?” என்றதும் தான் தாமதம், பதட்டமடைந்தவனோ, கண்ணீரில் கரைந்தான்.
“சார் என்ன ரவுடிங்க துரத்துறாங்க. என்னை காப்பாற்றுங்க. ப்ளீஸ்.” என்று இருகரம் கூப்பி கெஞ்சியவனைப் பார்க்கும் போதே பரிதாபம் தோன்றியது ருத்ரஜித்திற்கு.
“வண்டில ஏறுங்க. நம்ம இங்க இருந்து உடனே போகலாம்.” என்றவனோ, அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
“யாரு அந்த ரவுடிங்க? எதுக்கு உங்களை துரத்துறாங்க?” என்று சந்தேகத்தை தெளிவாக்கிக் கொள்வதற்காக வினாவினான்.
“தெரியலை சார். இரண்டு நாளா பச்ச தண்ணீ கூட பல்லுல படாமல் கொடுமை படுத்துனாங்க சார்.” என்று கண் கலங்கியவனைக் கண்டு பரிதாபம் கொண்டவனோ,
“பயப்படாதீங்க. ஒரு பிரச்சனையும் இல்லை. நம்ம நேரா போலிஷ் ஸ்டேசன் போவோம்.” என்றவன் கூறியதும்தான், தனி தெம்பே வந்தது அவனுக்கு.
அடுத்த பத்தாவது நிமிடம் லேசாக கண் அயர்ந்தவனது நெத்தி பொட்டின் மீதே துப்பாக்கியை வைத்திருந்த ருத்ரஜித்தோ, சடுதியில் அவனது நிம்மதிக்கு குட்பாய் சொல்லியிருக்க, கண்களை பட்டென்று திறந்துக் கொண்டவனோ, அதிர்ச்சியுடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தான்.
அதற்குள் காரை நிறுத்தி இருந்தவனோ, “சதிஷ்… அம் ஐ ரைட்.” என்று அவனது பெயரை அழுத்தம் திருத்தமாக அவன் உச்சரித்த தோரணையில் சர்வமும் நடுங்கியது சதிஷிற்கு.
“நீ… நீங்க..” என்று பயத்தில் சதிஷின் வார்த்தைகள் நாக்கை அடைக்க, மென்புன்னகை உதிர்த்தான் ருத்ரஜித். அவனது பரிட்சியமிக்க முகத்தை எங்கோ கண்டு இருக்கிறோம் என்ற சிந்தனையே அப்போதுதான் சதிஷின் மூளையை எட்டியது.
உயிரைக் கையில் பிடித்தபடி ஓடி வந்தவனுக்கு, அந்த நிமிடம் பதட்டத்தில் ருத்ரஜித் யாரென்று சிந்திக்க நேரமில்லாமல் இருந்தது. தற்போது தன்முன் துப்பாக்கியுடன் இருப்பவனைக் கண்டதும் தான் நிதர்சனமே விளங்கியது.
“என்ன சதிஷ் அப்படி பார்க்குற? காருல இருந்து இறங்குறியா? இல்லை நான் இறங்க வைக்கவா?” என்றான் அதிகாரமாக. அடுத்தநொடி காரைவிட்டு இறங்கியிருந்தவனோ, தப்பித்து ஓட பார்க்க, அடுத்துக்கூறிய ருத்ரஜித்தின் வார்த்தைகள் அவனை செயலிழக்கச் செய்தது.
மறுநொடி அவனது கால்களில் விழுந்திருந்தான் சதிஷ்.
“என்னை மன்னிச்சிடுங்க சார். நான் தெரியாமல் பண்ணிட்டேன் சார். இதுல முழுசா என்னோட தப்பு எதுவும் இல்லை. என்னை மன்னிச்சிடுங்க. என்னை நம்பி எனக்கொரு குடும்பம் இருக்கு சார். அவங்களை பார்த்துக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கு.” என்று கண்ணீர் மல்க கேட்பவனைக் கண்டு சிறு பரிதாபம் கூட காட்டவில்லை ருத்ரஜித்தின் கண்கள்.
“தெரியும். நான் அவ்ளோ கெட்டவன் எல்லாம் இல்லை. உன் குடும்பத்தை பார்த்துக்குற பொறுப்பு என்னுடையது. அதே சமயம் உன் பாவத்தை கழிக்குற கடமை உன்னுடையது. இரண்டு சான்ஸ் தரேன். ஒன்னு அங்கிருக்க மலையிலயிருந்து குதிச்சு நீயே உன் பாவத்தை கழிச்சுக்கோ. இல்லைனா, வெரி சிம்பிள் நான் உன் பாவத்தை என் துப்பாக்கியால கழிக்குறேன். உனக்கு இதை விட்டா வேற ஆப்சனும் இல்லை.” என்றவன் துப்பாக்கியை அவனை நோக்கி காட்ட, அதிர்ந்து போய் எழுந்தான் சதிஷ்.
இத்தனைக்கும் அவன் ஒன்றும் மிகப்பெரிய தவறை செய்யவில்லை. ஆனாலும் அவன் செய்த தவறை நினைத்து வருந்தாத நாளே இல்லை. தனது ஒரு வயது மகளை நினைத்து பார்த்துக் கொண்டவன், மனம் முழுவதும் ரணமாக, மலையை நோக்கி நகர்ந்தான்.
செல்லும் அவனைக் கண்டு வெற்றுப் புன்னகை உதிர்த்த ருத்ரஜித்தின் இதழ்களின் இடுக்கிலும் அனல் நிறைந்து தான் இருந்தது.
மலை உச்சியில் ஏறியவன், “நான் பண்ண தப்புக்கு என் குழந்தையை கஷ்டப்பட விட்ராதீங்க.”என்று கூறியபடி பின்னோக்கி கண்களை மூடிக்கொண்டு விழ, தூரத்தில் இருந்தபடியே கண் குளிர ரசித்தான் ருத்ரஜித்.
அவனது குரூர முகத்தினை தனது புகைப்படக் கருவியின் மூலம், ஒளிந்திருந்த ஒருவனோ படம் பிடித்திருக்க, அதை அறியாத ருத்ரஜித்தோ, தனது காரில் ஏறி அங்கிருந்து சென்றான்.
இந்த இரண்டு நாட்களாக சதிஷை பிடித்து அடைத்து வைத்திருந்தது, அவனது ஆட்களே. அவனை கொல்வதற்காகவே சென்னையிலிருந்து நான்கரை மணி நேரம் பயணம் செய்து இவ்விடம் வந்திருந்தான் ருத்ரஜித். வந்த வேலை முடிந்ததும் அவன் அங்கிருந்து சென்றான்.
அவனை ஒளிந்திருந்து புகைப்படம் எடுத்தவனோ,
“ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு ருத்ரா.” என்று கண்களில் குறும்பு அப்பட்டமாக மின்ன, இதழ்களிலோ பளிச்சென்ற புன்னகை தோன்ற கூறியிருந்தான்.
தனது புகைப்படக் கருவியினுள் உள்ள அனைத்து புகைப்படங்களையும் பார்த்தவனது கண்கள், அந்த ஒரு புகைப்படத்தின் மீது நிலைத்து நின்றது. அதிலிருந்த பெண்ணை கண்டவன், “அடுத்து அந்த ருத்ராவோட டார்கெட் நீதான். அந்த ருத்ரா கையில நீ மாட்டுறதுக்கு முன்னாடி, சீக்கிரமே உன்னை தேடி நான் வரேன்.” என்று கூறிக் கொண்டான் அந்த நிழல் மனிதன்.
காரில் சென்றுக் கொண்டிருந்த ருத்ரஜித்தின் கோபம் சற்று மட்டுப்பட, சற்று முன்பு சந்தித்த அபூர்வாவை நினைத்துக் பார்த்தது அவன் மனம்.
“இன்ட்ரெஸ்டிங்க்” என்று தன்னை மீறி அவன் உதடுகள் உதிர்க்க, மறுநொடி பிரகல்யாவின் முகத்தை நினைத்தவன், “கிளவர் கேர்ள்.” என்றுரைத்தான்.
ஒருவனின் மனதில் இருவேறு பெண்களை பற்றிய எண்ணமும் தறிக்கெட்டு ஓட, ருத்ரஜித்தின் வசம் சிக்கவிருக்கும் மூன்றாவது பெண் தான் யார்? என்ற கேள்வியுடன் பயணித்தது அவனின் பயணமட்டுமல்ல. நமது பார்வையும் கூட.
அடுத்தநாள் காலை, தன்னருகே படுத்திருந்த அபூர்வாவின் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பியிருந்தாள் வந்தனா. அவளது செயலில் அடித்துப் பிடித்து எழுந்தவளோ, தனது கண்களை உருட்டிபடி, தன்தோழியை அக்னிப் பார்வை பார்த்தாள்.
“எதுக்குடி தண்ணீர் ஊத்துன? அறிவு இருக்கா? இல்லையா.” என்று கோபத்தில் கத்த, அவளது உஷ்ண பார்வையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் வந்தனா.
“அபூ. ரொம்ப நேரமா எழுப்புனேன். நீ எந்திரிக்கவே இல்லைடி. அதான் தண்ணீ ஊத்துனேன். ஆமா எதுக்கு டென்ஷன் ஆகுற? இவ்ளோ எல்லாம் கோபப்படமாட்டியே.”
“அது வந்து… யாருக்கா இருந்தாலும் தண்ணீரை தூங்கும் போது ஊத்துனா கோபம் தான் வரும். நீ போடி முதல்ல.” என்று சமாளித்தவளுக்கு நன்கு தெரிந்தது அவன் மீதிருந்த கோபத்தை தான் இவள் மீது காட்டிவிட்டோம் என்று.
“நேத்து நடந்தது எல்லாம் ஒருவேளை கனவா இருக்குமோ?” என்று புலம்பியவளை முறைத்தாள் வந்தனா.
“சத்தியமா கனவு இல்லை ஆத்தா. நீ கனவு கண்டுகிட்டே, நிஜத்துல என்னை உருட்டி எடுத்துட்ட? ஸ்சப்பா உன்னோட ஒரே அக்கப்போற போச்சுடி.” என்று புலம்பியவளைக் கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் அபூர்வா.
“நான் எத பத்தி சொன்னால்? இவ எத சொல்றா பாரு, லூசு.” என்று அங்கிருந்து சென்றவள், பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட குளியலறைக்குள் நுழைந்தபடி குளிக்க, அப்போதுதான் சிவந்து போயிருந்த தனது இடையைப் பார்த்தாள்.
“அடக்கடவுளே. என்ன கொடுமை பண்ணியிருக்கான். இவன் நல்லவனா? கெட்டவனா?” என்று புலம்பியவளுக்கு, ‘இதுல என்ன சந்தேகம் கெட்டவன் தான்.’ என்று மறுப்பேயின்றி பதிலளித்திருந்தது பெண்ணவளின் மனம்.
கேம்ப் இன்றுடன் முடிவடைவதால், இறுதியாக, ஏலகிரியிலிருந்து இறங்கும் வழியில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தனர், அவர்களது குழுவினர்.
சலனமில்லாமல் ஏலகிரி மலையிலிருந்து கொட்டும் பன்னீர் போன்ற அருவியைக் கண்டு அனைவரும் மெய்மறக்க,
வந்தனாவோ ஆர்ப்பரித்து வரும் அருவியை பார்த்து மகிழ்ந்தவள், அபூர்வாவை அழைத்துக் கொண்டு அருவிக்குள் சென்றாள்.
தண்ணீர் அபூர்வாவின் மேனியில் பட்டும் கூட, முகத்தில் புன்னகையின்றி, அமர்ந்திருந்த தனது தோழியின் அருகே வந்தாள் வந்தனா.
“என்னடி டல்லா இருக்க?” என்ற தோழியின் உலுக்கலில் மீண்டவள், “அது ஒன்னும் இல்லை. வா என்ஜாய் பண்ணலாம்.” என்று சமாளித்தாள்.
‘அவனால நான் எதுக்கு உம்முனு இருக்கணும். போடா முகம் தெரியாத காட்டேரி.’ என்று அர்ச்சனை மழை பொழிந்தபடி தண்ணீரில் நனைய, அவளது இடையை யாரோ உரசுவது போல தோன்றியதில், பட்டென்று திரும்பி பார்த்தாள் பெண்ணவள்.
ஆனால் அங்கு யாருமே இல்லாமலிருக்க, மீண்டும் அவளது கழுத்தை யாரோ தொடுவது போல தோன்றியதில், மீண்டும் அவள் திரும்பி பார்க்க, அருகே இருந்த புதருக்கு பின் ஒரு உருவம் மறைந்திருப்பது போல் அவள் கண்களில் தென்பட்டது.
அருவியில் நனைந்தபடி வந்தனா, மனமகிழ்ச்சியில் குதுகளிக்க, அவளை இடையூறு செய்யாமல் தனியாகவே அவ்விடம் எட்டிப் பார்த்தவள், அங்குக் கண்ட காட்சியில் உறைந்து போய் நின்றாள்.
சிறகடிக்கும்
வண்ணத்துப் பூச்சியிவளை
புலம்பவிட்டு சென்றாயோ…?
இல்லை உனது பகையை
பழிதீர்க்க சென்றாயோ….?
உன் ரகசியத்தை படம்பிடித்தவன்
எவனோ…..?
அவனது நிலை நாளை என்னவோ…?
பாவையின் விழிகளை சிறை
எடுக்க மீண்டும் வருவானா வேந்தனவன்.
