5.வல்லினம்
கீழே விழச் சென்றவளை, தனது ஒற்றை கரத்தினால், விழாமல் பிடித்து நிறுத்தியிருந்தான் ருத்ரஜித். ஆணவனின் திடீர் தொடுகையில், அவளது உடலில் சிறு நடுக்கம் தோன்ற, தனது அதிர்ந்த விழிகளை மறைக்க முற்பட்டவள் தோற்றுதான் போனாள் அவனிடம். குறும்புத் தவழும் அவனது கண்களும், வசீகரிக்கும் சிரிப்பினை உதிர்க்கும் இதழ்களும் அவளோடு பேசத் தொடங்கியது.
“ஆர் யூ ஓகே.” என்றவனின் வார்த்தைகள் பெண்ணவளின் செவி வழி நுழைந்த நொடி, பட்டென்று அவனது கைகளைத் தட்டிவிட்டவள், அவனை விட்டு தள்ளி நின்றுக்கொண்டாள்.
அவளைப் பொருத்தவரை அவன் அந்நியன் அல்லவா? சிரிக்கும் பெண்ணவளின் முகம் கோபத்தை சுமந்திருக்க, அவனை உறுத்து விழித்தாள் பிரகல்யா.
“கொஞ்சம் கூட அறிவில்லையா? இப்படி தான் பொது இடத்துல வந்து, பொண்ணுகிட்ட தப்பா பிஹேவ் பண்ணுவீங்களா?” என்றாள் அடிக்குரலை உயர்த்தியபடி.
“ஹலோ மேடம். நீங்க தான் எங்கேயோ வேடிக்கை பார்த்துட்டே என் மேல மோத வந்தீங்க. சரி விழப் போறீங்கனு, கீழவிழாமல் பிடிச்சு உதவுனா ரொம்பதான் பேசுறீங்க?” என்றவன் தனது கைகளைக் கட்டிக்கொண்டபடி பொங்கி எழுந்தான்.
அவன் கூறியது போலவே, அவள்தான் தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என்று எண்ணியபடி, திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடினாள். அவன் சொல்லில் தெரிந்த உண்மையினைப் புரிந்துக் கொண்டவள், அவனை சங்கடமாக பார்த்தாள்.
“சாரிங்க.” என்றவள் உண்மையாக வருத்தப்பட்டே மன்னிப்பையும் அவனிடம் கேட்டாள்.
அவளது செயலில் சிறு புன்னகை எட்டிப்பார்க்க, “இட்ஸ் ஓகே. உங்களுக்கு என்ன டென்ஷனோ, அதுனால அப்படி பேசியிருப்பீங்க. விடுங்க.” என்றவன் சிறு தலையசைப்போடு, அவளைக் கடந்துச் சென்றான்.
“ச்சே, ரொம்ப நல்லவரா இருக்காரு. இவரை போய் தப்பா நினைச்சுட்டோம்.” என்று தனது நெற்றியை செல்லமாக தட்டிக் கொண்டவளோ, செல்லும் அவனைக் கண்டு புன்னகையோடு பார்க்க, இவளை உண்மையாகவே பின்தொடர்ந்து வந்த வாலிபனோ, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று தூரம் சென்ற ருத்ரஜித்தோ, வெளியே நின்றிருந்த தனது காரில் ஏறி அமர்ந்துக் கொண்டபடி, வெகுநேரமாக தனது அலைபேசியினை தொடர்புக்கொள்ள முயற்சித்த வைகை செல்வனை அழைத்திருந்தான்.
“பாஸ் எங்க போனீங்க? இரண்டு நாளா நம்ம போட்டிருந்த, மீட்டிங் எல்லாமே கேன்சல் பண்ணிட்டீங்க. பாஸ் நீங்க எங்க தான் இருக்கீங்க இப்போ?” என்று பரிதவிப்பில் கேட்டவனது குரலில் அவனைப் பற்றிய அக்கறையும் எட்டிப் பார்த்தது.
“இங்க பாஸ் நீயா? இல்லை நானா? நிறைய கேள்வி கேட்குற வைகை.” என்றான் சிறு நக்கல் தொணிக்கும் குரலில்.
“அது இல்லை பாஸ். உங்களை இரண்டு நாளா பார்க்க முடியலையேனு பதட்டத்துல கேட்டுட்டேன்.”
“ஹாஹா. எனக்கு பொண்டாட்டி இருந்திருந்தா கூட, இப்படி பதட்டப்பட மாட்டாங்கடா.” என்றவன் சிரித்ததும் தான் வைகைக்கு போன உயிரே மீண்டும் வந்தது.
“பாஸ். நாளைக்கு மும்பையில எச்.ஆர்.கே கம்பெனியில மீட்டீங் இருக்கு. அப்புறம்.” என்றான் தயங்கியபடி.
“அப்புறம் என்ன வைகை. எனக்கு பொண்ணு பார்த்துட்டாங்க அதானே.” என்றவனின் பதிலில் வைகையின் கண்களில் ஆச்சரியம் எட்டிப்பார்க்காமல் இல்லை. எவ்விடமிருந்தாலும் தன்னை சுற்றி நடப்பதை தெரிந்து வைத்திருக்கிறார் என்பதில் அவனுக்கு என்றுமே பிரம்மிப்பு தான்.
“பாஸ். அம்மாவே தேர்ந்தெடுத்திருக்காங்க. அப்புறம் நாளைக்கே பொண்ணு வீட்டுக்கு போய் பேச போறாங்க.”
“இன்ட்ரஸ்டிங்க். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நானும் பார்க்குறேன். மும்பை மீட்டிங் அரெஞ்சு பண்ணு. ஈவினிங் பிளைட்ல கிளம்புறோம்.” என்று உரையை முடித்தவன் போனை வைத்துவிட, மறுமுனையிலிருந்த வைகைக்கோ கலக்கமாக இருந்தது.
“இவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகிடுவாருனு பார்த்தால், பிடிக்கொடுக்க மாட்டாரு போலயே. சரி நடப்பது அனைத்தும் நன்மைக்கே.” என்று பெருமூச்சொன்றை விடுத்த வைகையோ அவனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
இங்கு, தூங்கிக் கொண்டிருந்த அபூர்வாவோ அடித்துப் பிடித்து எழுந்தாள். “அய்யோ மம்மி. இது என்ன இந்த அபூக்கு வந்த சோதனை. என் வாழ்வை நினைச்சா ஒரே வேதனையா இருக்கே. பட்டபகல்ல கல்யாண கனவா வருதே. சரியில்லையே?” என்று உதட்டை பிதுக்கியவள், நல்லவேளையாக நேற்று நடந்தவற்றை மறந்திருந்தாள்.
அதுதான் அபூர்வா. தொண்டையை அடைக்கும் துக்கம் வந்தாலும் எளிதில் கடந்துவிடுவாள் என்பதைவிட மறந்துவிடுவாள் என்பதே திண்ணம். அடித்துப் பிடித்து எழுந்தவளின் புலம்பல் சத்தம், அவளின் அன்னைக்கே கேட்டுவிட, அவளது அறையின் கதவினைத் திறந்தபடி அவ்விடம் வந்தார் சரஸ்வதி.
“என்னடி இன்னும் நீ பெட்ல இருந்தே எழுந்திரிக்கலையா? நேரங்காலத்துல எழுந்திரிக்குற பழக்கமே இல்லாமல் இருக்க? உங்க அக்காக்கு அடுத்து, வேற வீட்டுக்கு போற பொண்ணு பொறுப்பா இருக்க வேண்டாமா?” என்றவரின் அதட்டலை, தேவகாணம் கேட்பது போல முகத்தை வைத்துக் கொண்டு இன்பமாக கேட்டாள் சின்னவள்.
“அடிக்கழுதை. நான் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடானா, ரசிச்சுகிட்டு இருக்க?”
“எனது அன்னை சரஸ்வதியே, உங்களது பேச்சு என்னும் இசைமழையில் நனைந்துக் கொண்டிருக்கும் அடியவள் நான். உங்களது திட்டுக்கள் ஒவ்வொன்றும் தேவகானமாய், என் செவி வழி நுழைந்து, இதயத்தை தொடுகிறது.” என்று சிலாகித்தவளின் மீதே தன் அக்னிப்பார்வையை பொழிந்தவர்,
“எங்க அந்த துடைப்பக்கட்டை.” என்று நாலாபுறமும் தேட, பதறி எழுந்தவளோ, “சரஸ்வதி இப்போ பத்ரகாளியா மாறிடுச்சு. மீ எஸ்கேப்.” என்று கூறிக்கொண்டே அறையை சுற்றி ஓடியவள், வெளியே ஓடிச் செல்ல, அவளைத் துரத்திக்கொண்டே மூச்சிறைக்க ஓடி வந்தார் சரஸ்வதி.
“நில்லுடி குட்டி பிசாசு.” என்று மூச்சு வாங்கிக்கொண்டே அவர் வர, அவருக்கு பளிப்புக் காட்டிய சின்னவளோ, வாசலில் செய்தித்தாளை வாசித்தபடி அமர்ந்திருந்த, தனது தந்தைக்கு பின்னே சென்று மறைந்துக் கொண்டாள்.
“என்னடா பாப்பம்மா. வந்ததும் வராததுமா, அம்மாகூட சேட்டை பண்றியா?” என்றவருக்குமே அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. நேற்று வீட்டிற்கு வந்தவள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே தனது அறைக்குள் சென்று விட்டாள். இன்று பழையபடி சேட்டை செய்பவளைக் கண்டதும் தான் சத்யராஜிற்கு நிம்மதியே பிறந்தது.
“டாடி. இந்த சரசு ரொம்ப பண்ணுது. அக்காவை மட்டும் தங்கம் வைரம்னு கொஞ்சுது. என்னை மட்டும் துடைப்பக்கட்டையால அடிக்க வருது டாடி. என்னென்னு கேளுங்க.” என்றவள் செல்லமாக புகார் மழையைப் பொழிந்தாள்.
தன் கணவரின் முன் மூச்சிறைக்க வந்து நின்ற சரஸ்வதியோ, “பாருங்க. இந்த சின்னவாண்டு என்ன பேச்சு பேசுதுனு.” என்று பதிலுக்கு அவரும் புகார் தொடுக்க, இருவரின் மத்தியிலும் மாட்டிக்கொண்டு அல்லல் பட்டார் அந்த மனிதர்.
அந்தநொடி அவரது கைபேசி அழைத்து அவரைக் காப்பாற்ற, “அமைதியா இருங்க இரண்டு பேரும்.” என்று இருவரையும் அமைதிப்படுத்தியபடி அழைப்பை உயிர்பித்தார்.
எதிர்புறம் கேட்ட செய்தியில் புன்னகைத்தவர், “கண்டிப்பா. நாளைக்கே எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம். நேத்து அவ்ளோ பெரிய இடத்து சம்மந்தம் வரப் போகுதுனு தெரிஞ்சப்போவே ரொம்ப சந்தோஷமா தான் இருந்துச்சு. இப்போ அவங்க நேரடியாக வீட்டுக்கு வரது நினைச்சா இரட்டிப்பு மகிழ்ச்சி தான். நான் பார்த்துக்குறேன்.” என்று மறுமுனையிலிருந்த புரோகிதர் பரஞ்சோதியிடம் பேசியபடி அலைபேசியை அணைத்திருந்தார்.
நேற்றைய தினமே, இந்த செய்தி புரோகிதரின் மூலமாக அவரை வந்தடைந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்களது வீட்டில் தன் மகள் வாக்கப்பட்டு செல்லவிருக்கிறாள் என்ற மகிழ்ச்சியே அவரை சம்மதிக்க வைத்தது. இருந்தும் அவர் ருத்ரஜித்தை பற்றி விசாரிக்க, அவனைப் பற்றி நற்செய்திகளும், பாராட்டுக்களுமே கிடைக்க பெரும் உவகைக் கொண்டார் மனிதர். இன்று தான் தன் மகளிடம் இவ்விசயத்தை பற்றி உரைக்க இருந்த வேளையில், நாளை அவர்கள் வருகிறார்கள் என்ற செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருந்தது அவருக்கு.
தன் தந்தையின் பிரகாசித்த முகம் பலநூறு கதைகளை பேச, “என்ன டாடி. முகம் டாலடிக்குது. என்ன விசயம்?” என்று ஆர்வமாக கேட்டாள் அபூர்வா.
“உங்க அக்காவை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க.”
“என்ன டாடி சொல்லவே இல்லை.” என்று இன்ப அதிர்ச்சியுடன் கேட்டாள் சின்னவள்.
“நீ கேட்கவே இல்லைடா பாப்பம்மா.” என்று சின்னவளின் மூக்கினைப் பிடித்து ஆட்ட, தன்னை போலவே பேசும் தன் தந்தையை செல்லமாக முறைத்தாள் அபூர்வா.
“ஆமா. பெரிய மனுசி உங்கிட்ட சொல்லிட்டுதான் செய்வாங்க பாரு. இன்னும் உங்க அக்காக்கே சொல்லலை.” என்று சரஸ்வதி அவளது கன்னத்தைக் கிள்ளினார்.
“அப்போ நான் தான் அக்காகிட்ட சொல்வேன். சோ அமைதியா வேடிக்கை பாருங்க இரண்டு பேரும்.” என்று உத்தரவிட்டவள் அன்னை கிள்ளிய தனது கன்னத்தை நீவியபடி அங்கிருந்து சென்றாள்.
“அறுந்தவாலு.” என்று புன்னகை புரிந்தார் சரஸ்வதி.
இவையாவும் அறியாத பிரகல்யாவோ வீட்டிற்கு வந்தவள் வந்ததும் சிறிது நேரம் இளைப்பாறினாள். அதன்பின்னரே குளிப்பதற்காக அறைக்கு சென்றிருக்க, அங்கு அபூர்வாவோ கணினியில் தீவிரமாக எதையோ பார்த்தபடி இருந்தாள்.
“என்ன பார்க்குறீங்க மேடம்?”
“சும்மா தான் அக்கா. ஆமா இன்னைக்கு நீ ஏன் என்னைவிட்டு தனியா ஜாக்கிங் போன?”
“நீதான் அசந்து தூங்கிட்டு இருந்தியே பேபி. சரிடி நான் குளிச்சிட்டு வரேன்.” என்று கூறிக்கொண்டே அவளது உடைகளை எடுத்தவள் குளிக்க சென்று விட்டாள்.
‘அடேய் பிரக்ஸ்… நான் என்னை பார்த்துட்டு இருந்தேன்னு தெரிஞ்சா. செம சாக் ஆகிடுவ.’ என்று புன்னகையோடு நினைத்துக் கொண்ட சிறியவளோ, தனது மடிக்கணினியில் சிரித்த முகத்துடன் இருந்த ருத்ரஜித்தை மிக ஆர்வமாக பார்த்தாள்.
“வாவ் மாமா. செம ஹேண்ட்சமா இருக்கீங்க. அக்கா நீ கொடுத்து வச்சவ.” என்று புன்னகையும், பிரம்மிப்பும், ஆர்வமும் கலந்து, ருத்ரஜித்தின் புகைப்படத்தினை தன் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவளோ, ருத்ரஜித் தான் தன்னிடம் அன்று அவ்வாறு நடந்துக்கொண்டான் என்று அறிந்தால், அந்த நொடி அவள் நிலை என்னவாக இருக்கும்? என்பது விதி அறிந்த ஒன்று.
குளித்து முடித்து வெளியே வந்த பிரகல்யா, தனது கிளினிக்கிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்க, அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள் அபூர்வா.
“என்ன டி காலையிலேயே பாச மழை பொழியுற. என்ன விசயம்?”
“என் அக்காவை கொஞ்ச எதாவது விசயம் இருக்கணுமா என்ன? ஏய் பிரக்ஸ் உன் கல்யாணத்துக்கு, எனக்கு செம கிராண்டா சாரி வேணும். வாங்கித் தருவியா?” என்றவளின் முகத்தில் டன்கணக்கில் ஆவல் தெரிந்தது.
“பார்ரா. என்னமோ நாளைக்கே எனக்கு கல்யாணங்குற மாதிரி பேசுற. அது நடக்கும் போது நம்ம அப்பாகடையில போயி எடுத்துக்கலாம் சரியா.” என்றவள் லேசாக முறுவல் புரிந்தபடி தனது முடியினை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது சொல்லில் களுக்கென்று சிரித்த சின்னவளோ, “கவலைப்படாத அக்கா. நாளைக்கே கல்யாணம் எல்லாம் இல்லை. நாளைக்கு உன்னை பொண்ணு மட்டும் பார்க்க வராங்கோ.” என்றதும்தான் தாமதம், அவளை அதிர்ச்சியுடன், திரும்பி பார்த்தாள் பிரகல்யா.
“என்னடி சொல்ற? உன் விளையாட்டுக்கு அளவில்லாமல் போச்சு.”
“அக்கா நான் உன்கிட்ட இந்த விசயத்துல விளையாடுவேனா? மாப்பிள்ளை பேரு ருத்ரஜித். செமையா இருக்காருக்கா. மிஸ் பண்ணிடாத.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தன் தந்தையைக் காண அறையை விட்டு சென்றிருந்தாள் பிரகல்யா.
“டாடி…” என்றவள் அவர் அறையின் முன்பு வந்து நிற்க, அவளது குழப்பம் நிறைந்த முகத்தைக் கண்டதுமே, புரிந்துக் கொண்டார் சத்யராஜ்.
“டாடி எது பண்ணாலும் உன் நல்லதுக்குதானடா பாப்பா.” என்று மிக சாதாரணமாக கூறிவிட்டார்.
ஒவ்வொரு முறையும் தன்னைக் கேட்டு, பார்த்து பார்த்து செய்யும் தந்தை இம்முறை தன்னை எதுவும் கேட்கவில்லையே என்ற கவலை நிறைந்திருக்க, சங்கடமாக அவரைப் பார்த்தாள் பிரகல்யா.
“புரியுதுடா பாப்பா. என்னடா, டாடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் முடிவு எடுத்ததா நினைக்குறியா? மாப்பிள்ளை பத்தி எல்லாம் விசாரிச்சுட்டேன். நம்மளைவிட பலமடங்கு வசதியான குடும்பம் தான். இருந்தாலும் அவரை பத்தி விசாரிக்காமல் நான் இந்த முடிவு எடுக்கலைடா. பாப்பா உனக்கு வாட்ஸ்அப்ல மாப்பிள்ளை போட்டோ அனுப்பியிருக்கேன். பாரு. உனக்கு பிடிக்கலைனா சொல்லு. நான் வேண்டாம்னு சொல்லிடுறேன்.”
என்றவருக்கோ, எங்கு அவள் வேண்டாமென்று சொல்லிவிடுவாளோ என்ற கவலை, முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
‘இப்போவே மாப்பிள்ளைனு சொல்றீங்களே டாடி.’ என்று மனதில் நினைத்தவள், “ஓகே டாடி. நான் கிளினிக் போறேன். நான் யோசிச்சு என் பதிலை சொல்றேன்.” என்றவள் தனது கைப்பையை எடுத்துக்கொண்டபடி உணவுகூட உண்ணாமல் தனது காரில் ஏறி சென்றிருக்க, செல்லும் அவளையே கவலையோடு பார்த்தது தந்தையின் உள்ளம்.
“டாடி டோண்ட்வொரி. எப்படியும் அக்காக்கு அவரை பிடிச்சிடும்.” என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக அவ்விடம் வந்த அபூர்வாவோ, தனது தந்தையின் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டாள்.
“பிடிச்சா சந்தோசம் தான்டா பாப்பம்மா ” என்றவர், சின்னவளின் தலையை ஆதரவாக வருடினார்.
“அப்படி அக்கா வேண்டாம்னு சொன்னால், நான் அவரை கட்டிக்குறேன் டாடி.” என்று கேலிக்காக அவள் சொல்ல, அவ்விடம் வந்த சரஸ்வதியோ தன் மகளை முறைத்தார்.
“அடிங்கு. போய் படிக்குற வேலையைப் பாருடி.” என்று உக்கிரமாக முறைக்க,
“க்கூம். என் தாத்தா பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாரு. சரஸ்வதினு உனக்கு பேர் வைக்குறதுக்கு பதில், பத்ரகாளினு பேர் வைச்சுருக்கணும்.” என்று முகத்தை திருப்பிக்கொள்ள, “அடிக்கழுதை.” என்று சரஸ்வதி சொன்ன நேரம், “அய்யோ மம்மி.” என்று தெறித்து ஓடினாள் சிறியவள். அவளது சேட்டைகளைக் கண்டு மெலிதாக புன்னகைத்தபடி பார்த்தார் சத்யராஜ்.
****
“மைல்ட் பீவர்தான். ஒண்ணும் பிரச்சனை இல்லை. இந்த மாத்திரை, சாப்பிட்டதுக்கு அப்புறம் காலையில, இராத்திரி இரண்டு வேளையும் சாப்பிடுங்க. மூனு நாள் கழிச்சு பீவர் குறையலைனா வாங்க.” என்று பிரகல்யா கூறிக்கொண்டிருக்க,
“சரிங்க டாக்டர்.” என்றவர்களோ, மருந்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து செல்ல, உணவு உண்ணாமல் வந்த பிரகல்யாவுக்கோ பசி நன்கு எடுத்தது. காரில் ஏறியது முதல் யோசித்துக் கொண்டே வந்தாள். தற்போது வரை யோசித்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று மட்டுமே தோன்றவில்லை.
“ரமேஷ் அண்ணா. பக்கத்துலயிருக்க ஹோட்டல்ல இரண்டு இட்லி வாங்கிட்டு வாங்க அண்ணா. சாப்பிடாமல் வந்துட்டேன்.” என்று அவள் சொன்னதும் தான் தாமதம் விரைந்து அங்கிருந்து சென்றார் ரமேஷ்.
அவர் சென்றதும் மேசையின் மீதே கை ஊன்றி அமர்ந்தவள், தன் இமைகளை மூடியபடி சிந்திக்கலானாள்.
அந்த நொடி, அவளுக்கு எதிராக இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தான் ஒருவன். இமைமூடியவளை ஒரு நிமிடம் ஆர்வமாக பார்த்தவன், அடுத்த நிமிடம் அவளை அழைத்திருந்தான்.
“டாக்டர் மேடம்.” என்றவனின் அழைப்பில் தன் இமைகளை பட்டென்று திறந்தவள், தன் முன்னே அமர்ந்திருந்தவனை கேள்வியாக பார்த்தாள்.
“நான்..” என்று அவன் தொடங்கும் முன்,
“தெரியும் விஷ்வா தானே. நேத்து போலிஸ் ஸ்டேஷன்ல பார்த்தேன். ஆமா என்ன விசயமா வந்திருக்கீங்க? உடம்பு எதாவது சரியில்லையா?” என்று அவளே பேசத் தொடங்கினாள்.
“ச்சேச்சே… மனசுதான் டாக்டர் சரியில்லை. இஃப் யூ டோண்ட் மைண்ட், உங்களை பேர் சொல்லி கூப்பிடலாமா?”
“ம்ம்ம் ஓகே சொல்லுங்க.” என்றவளின் முகமே கூறியது குழப்பத்துடன் இருக்கிறாள் என்பது.
“ஓகே பிரகல்யா. நான் விஷ்வா. நேத்து இறந்தது என் நண்பன் உதய். அவனும் நானும் ரிப்போர்ட்டரா இருக்கோம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல சூசைடுனு தான் வந்திருக்கு. அவன் மேலயிருந்து கீழ விழுந்ததுனால தான் உயிர் போயிருக்குனு சொல்லிட்டாங்க.”
“ஓகே. ஆனால் இது எல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க?”
“காரணமில்லாமல் இல்லை. எனக்கு இது பக்கா மர்டர் மாதிரி தோணுது. உங்க தங்கை தான் அவனோட சடலத்தை பார்த்திருக்காங்க. அப்போ வேற எதாவது இல்லைனா, வேற யாரையாவது அங்க பார்த்தாங்களானு தெரிஞ்சுக்கணும். ஏன்னா உதய் ஒரு பெரிய விசயத்தை கண்டு பிடிச்சதா என்கிட்ட சொன்னான். அது என்னென்னு நேருல சொல்றேன்னு சொன்னான். ஒரு நண்பனா, அவனோட இந்த டெத்க்கான காரணமானவனை நான் கண்டுபிடிக்கணும்னு ஆசைப்படுறேன். அவனுக்கு தண்டனை சட்டப்படிக் கிடைக்கணும்.”
“சாரி விஷ்வா. என் தங்கச்சி வேற எதுவும் பார்க்கலை. பார்த்திருந்தால் எதாவது சொல்லியிருப்பாங்க. பெட்டர் நீங்க வேற வழியில தேடுங்க. அதையும் மீறி அபூர்வாவை விசாரிப்பீங்கனு சொன்னால், உங்க மேலதான நான் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டி வரும்.” என்று தன்மையாக எடுத்துரைத்தாலும், இறுதியில் அவளது எச்சரிக்கை விடுக்கும் குரல் விஷ்வாவையே ஆச்சரியம் கொள்ள செய்தது.
மெலிதாக புன்னகைத்தவன், “இன்னொரு விசயமும் இதுல இருக்கு. அவன் டைரியில உங்க ஹாஸ்பிடல் அட்ரஸ் இருந்துச்சு. அதுனால தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன் லியா.” என்றவனின் பதிலில் சிறு அதிர்ச்சி பெண்ணவளின் முகத்தில் தெரிந்தது.
“வாட். இது சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கு. மேபி எமெர்ஜென்சிக்காக இந்த அட்ரஸ் எழுதியிருக்கலாமே உங்க பிரெண்டு.”
“ம்ம்ம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுக்கோ டேக் கேர் லியா.” என்றவன் சிறு தலையசைப்புடன் அவளிடம் விடைப்பெற்று சென்றிருந்தான். அவன் கேட்டைக் கடந்து செல்லும் நேரம், எதிரே வந்த ரமேஷ் மீதே மோத, “சாரி” என்றவன் பரபரப்புடன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அவனது வருகையும், அவன் சொல்லிவிட்டு சென்றதும் பிரகல்யாவிற்கு குழப்பத்தை உண்டாக்க, ஆழ்ந்த மூச்சொன்றை விடுத்தவள், தனது கவனத்தை திசைத் திருப்புவதற்காக, வாட்ஸ்அப் புலனத்தை உயிர்பித்தாள்.
அவள் தந்தை அனுப்பிய ருத்ரஜித்தின் புகைப்படம் லோடாகும் வரை காத்திருக்க, அந்த நிமிடம் கையில் உணவுடன், அவ்வறைக்குள் நுழைந்தார் ரமேஷ்.
“பாப்பா முதல்ல சாப்பிடுங்க வாங்க.” என்றவர் அழைக்கவும் உணவு உண்பதற்காக பிரகல்யா செல்ல, அவளது குழப்பமான முகம் ரமேஷிற்கு எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது.
அதன்பிறகு அன்றைய நாள் முழுவதும், சிகிச்சைக்காக வந்தவர்களை பார்ப்பதற்கே பிரகல்யாவிற்கு நேரம் சரியாக இருந்தது. அதன்பின்னர் எட்டு மணியளவில் வீட்டை அடைந்தவள், இரவு உணவினை உண்டபடி உறங்கச் சென்றாள்.
“பிரக்ஸ் என்ன முடிவு பண்ணியிருக்க?” என்ற அபூர்வாவின் அழைப்பில், அவளைத் திரும்பி ஒருமுறை பார்த்தவள்,
“உனக்கு பிடிச்சிருக்கா?” என்று மட்டும் கேட்டாள்.
“ஓ டபுள் ஓகே.” என்று தலையை பலமாக ஆட்டினாள் அபூர்வா.
“அப்போ நீயே கட்டிக்கோடி.” என்று மட்டும் கூறியவள் உறங்க செல்ல,
“விளையாடாதக்கா. நிஜமாவே கட்டிப்பேன். அவரு செமையா இருக்காரு. அழகா சிரிக்குறாரு. அவருக்கு ஃபேன் பேஜ் எல்லாம் இருக்கு தெரியுமா?”
“என்னமோ நேர்ல பார்த்தமாதிரி பேசுற?”
“நிஜமாக்கா. போட்டோ பார்த்தே அசந்துட்டேன். அப்புறம் அவரைப் பத்தி இன்ஸ்டகிராம்ல தேடுனா அப்படியே சாக் ஆகிட்டேன். செம ஃபேமஸ்க்கா அவரு.”
“ஓ.. எங்க உன்னை அசரடிச்சவரோட போட்டோவை காமி.” என்று கூறியவளுக்கும் அந்நிமிடம் அவனைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.
அடுத்த நொடியே அபூர்வா ருத்ரஜித்தின் புகைப்படத்தைக் காட்ட, பிரகல்யாவின் கண்கள் தன்னாலே ஆச்சரியத்தில் விரிந்தது.
“எப்படி அக்கா மாப்பிள்ளை. செமல்ல… பாரு நீயே வாயடைச்சு போயிட்ட.” என்று புன்னகையோடு கூறினாள்.
அந்த நிமிடம், காலையில் அவனைப் பார்த்ததும், தனது இடையைப் பற்றியவனது புன்னகையான முகமும், அவனுக்கே உரிய புன்னகையும் பட்டென்று கண்முன்னே தோன்ற, பிரகல்யாவின் இதழ்களில் அன்னிச்சையாக புன்முறுவல் பூத்தது.
“பிரக்ஸ் என்ன வெட்கமா?” என்று அபூர்வா அவளைக் கட்டிக் கொள்ள, தனது வெட்கத்தை மறைக்க மிகவும் முயற்சித்தவள் தோற்று தான் போனாள்.
“ஐ அக்கா சிரிச்சுட்டா. டாடி, மம்மி” என்று கத்திக் கொண்டே அறையிலிருந்து சென்றவள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள, பிரகல்யாவின் முகம் மேலும் பிரகாசித்தது.
“பாப்பா. நிஜமாவாடா?” என்று தந்தை உற்சாகத்துடன் கேட்டதில் தனது சம்மதத்தை தெரிவித்தாள் பெண்ணவள்.
சரஸ்வதியோ தனது மகளை அணைத்தவர், அவளது நெற்றியில் முத்தமிட்டப்படி, “ரொம்ப சந்தோசமா இருக்குடா பட்டு.” என்றார்.
“மம்மி வாங்க சந்தோசத்தை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுவோம்.” என்று மகிழ்ந்தவள், கையோடு கொண்டு வந்த இனிப்புகளை, தந்தைக்கும், தாய்க்கும், தனது அக்காவிற்கும் ஊட்டிவிட்டாள்.
சிறிது நேரம் அவர்களது மகிழ்ச்சியில் திளைத்த பிரகல்யா, தனது அறைக்கு தூங்குவதாக சொல்லிவிட்டு சென்றவளின் மனமோ, மகிழ்ச்சியில் திளைத்தது. தன் இடையை உரிமையுடன் பற்றியவனை நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது பெண்ணவளுக்கு.
” நான் தான் பொண்ணுனு தெரிஞ்சும் வேணும்னே என்னை பார்க்க வந்திருக்கீங்களா?” என்று இங்கிருந்தபடியே தன்னவனுக்குள் கேள்வியைக் கேட்டுக் கொண்டது பெண்ணவளின் மனம்.
ருத்ரஜித்தோ மும்பையிலிருந்த பப்பில், தனது கையில் தவழ்ந்துக் கொண்டிருந்த இளம் நங்கையவளது இடையை பற்றிக்கொண்டு நடனம் புரிந்தவனது இதழ்களில் தன்னாலே முறுவல் தோன்ற, “கேம் ஸ்டார்ட் நௌவ்” என்று அழுத்தமாக கூறியவன், தனது கையில் தவழும் பெண்ணின் பின்னந்தலையையை இறுக்கமாக பற்றியவன், அவளது கழுத்திற்குள் முகம் புதைத்தபடி நடனமாடினான்.
இவளின் கனா அவன்,
அவனின் கனா அவள்,
வேய்ந்தனனின்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
சிக்கிக் கொள்ளும்
பட்டுப்பூச்சி தான் இவளோ…!
அவனது நயனங்களில் நிரம்பிய
நளினமங்கை தான் அவளோ…!
