வேண்டினேன் – 3

மீராவுக்கு கண்ணனின் கோபத்தைப் பார்த்து உள் காய்ச்சலே வந்துவிட்டது. அவள் நடுங்கியபடி, பயத்தில் சிலை போல நின்றாள். இதற்குள், உள்ளே வந்திருந்த நகுல், கண்ணனின் காலில் விழுந்துவிட்டான்.

“டேய் அண்ணா, என் கேர்ள் ஃப்ரெண்ட் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாடா. அவளுக்கு பர்த்டே வருது. கண்டிப்பா நீ சீஃப் கெஸ்ட்டா எங்க கூட ஹோட்டலுக்கு வந்தே ஆகணும்” என்று கெஞ்சினான்.

அவளும் இன்ஸ்டாவில் பிரபலமாக முயற்சித்துக் கொண்டிருப்பவள்தான். தன்னை பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டுகிறாள் என்று தெரியாத அளவு கண்ணன் முட்டாளா என்ன?

எனவே எரிச்சலுடன், “என்ன, விளையாடுறியா? ஒழுங்கா வெளிய போயிடு” என்று கோபமாகச் சொன்னான்.

“மாட்டேன், நீ ஓகேன்னு சொல்ற வரைக்கும் உன் காலடியிலேயே கிடப்பேன்” என்று அடம்பிடித்தான்.

“தேவையில்லாம நாச்சியப்பனுக்கு என்ன போன் பண்ண வைக்காத” என்றான் கண்ணன்.

“அந்த ஆளு யாருன்னே எனக்குத் தெரியாது. அண்ணா, என்னால நிஜமா என் கேர்ள் ஃப்ரெண்ட கன்வின்ஸ் பண்ணவே முடியலடா. அம்மா சத்தியமா நான் எல்லாமே ட்ரை பண்ணிட்டேன்டா” என்று நகுல் கெஞ்சினான்.

“ம்ச்ச்” என்று எரிச்சல் அடைந்த கண்ணன், நகுலைத் தூக்கிக் கொண்டு போய் கதவுக்கு வெளியே போட்டான்.

அந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு சுரேஷ் அந்தப் பக்கமாக நடந்து வந்தார். பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் பொறுப்பே இல்லாமல், தினமும் ஆறு மணிக்கு மது குடிக்க ஆரம்பித்து, விடியும் வரை குடித்து கும்மாளம் போடுவார்.

இதில் அவ்வப்போது எங்காவது போய் பிரச்சனையை இழுத்துக் கொள்வதும் உண்டு. அப்படி ஒருவர் அந்த அப்பார்ட்மெண்டில் இருந்ததாலேயே, கண்ணனின் கோபத்தால் வரும் பிரச்சனைகளை மற்றவர்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இப்போதும், “ஐயையோ, யாருப்பா நீ? உன்னை எதுக்கு அவன் இப்படித் தூக்கி போடுறான்?” என்று அனுசரணையோடு ஓடிவந்து நகுலைத் தூக்கிவிட்டார்.

“அது என் அண்ணனுங்க, பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு இவ்வளவு தூரம் வந்தேன். இப்படி பண்றான் பாருங்க…” என்று நகுலும் தன் பங்குக்கு பிட்டை போட்டான்.

சுரேஷ், “நீ எல்லாம் மனுஷன் தானா?” என்று வீராப்பாகக் கேட்டுக் கொண்டே, கண்ணன் முன்னால் வந்தார்.

அடுத்த கணம், ரவிக்கு விழுந்ததை விட பத்து மடங்கு பலமான அறை அவர் கன்னத்தில் விழுந்தது. இரண்டு முறை சுழன்று தரையில் விழுந்தவர், அதோடு மயக்கமடைந்துவிட்டார்.

“ஆத்தாடி, இப்ப நாம எழுந்தா அடுத்தது நமக்குத்தான் பொளீர்னு ஒண்ணு தருவான்” என்று பயந்த நகுல், அப்படியே தரையோடு தரையாகப் படுத்துவிட்டான்.

அடுத்த கணம், “டமால்!” என்ற சத்தத்தோடு கதவு மூடப்பட்டது. உள்ளே ரவி, ப்ரியா, மீரா என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

“நல்ல மூட்ல இருந்தேன். மொத்தமா ஸ்பாயில் பண்ணிட்டாங்க…” என்று புலம்பியவன், விறுவிறுவென‌ தன் அறைக்குள் போய் அடைந்து கொண்டான்.

“போச்சுடா, இப்ப நான்‌ போய் அவனை சமாதானப்படுத்தனுமா?” என்று புலம்பியபடி எழுந்தாள் ப்ரியா.

ரவி, “இன்னொருவாட்டி அவனுக்கு விருப்பமில்லாத காரியத்தை செய்யாத மீரா. என்னால உனக்காக இன்னொரு அறையெல்லாம் வாங்க முடியாது. ம்மா, வலிக்குதே…” என்று புலம்பிய படி போனான்.

மீராவின் பயம் மேலும் மேலும் அதிகரித்தது. இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதே அவளுக்குப் புரியவில்லை. கண்ணனின் கோபமும், வன்முறையும் அவளை மறைமுகமாக இங்கிருந்து கிளம்பச் சொல்லியது.

வீட்டின் வெளியே, “இந்த மனுஷன பாரு, இப்பெல்லாம் காலங்காத்தாலே குடிக்க ஆரம்பிச்சுட்டாரு” என்று சிலர் திட்டிக்கொண்டே போவது மீராவுக்கு கேட்டது.

கதவில் இருக்கும் வியூவர் ஹோல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள். தரையில் விழுந்து கிடந்த சுரைஷை திட்டிவிட்டு நடந்தனர் சிலர். நகுல் ஆளையே காணவில்லை… அவன் எப்போதோ தப்பி ஓடி விட்டான்! மீரா மட்டும்தான் நடந்து முடிந்த சம்பவத்தை தாண்டி செல்ல முடியாமல் இன்னமும் அதிலேயே தேங்கி நின்றாள்.

மதியம் வரை கண்ணன் வெளியே வராமல் இருக்க, மீராவுக்கு தூக்கம் சொக்கி கொண்டு வந்தது. முதல் நாள் தனியாக பயணம் செய்த காரணத்தால், ஒற்றைக் கண்கூட உறங்கவில்லை பாவம். எனவே மெதுவாக தன்‌ அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மீரா. அவளது அழகான மலையடிவார கிராமம் கனவில் வந்தது. பசுமையான மலைகள், தெளிந்த நீரோடை, மரங்கள் நிறைந்த காடுகள் என எல்லாம் அழகாக காட்சியளித்தன. அவள் தோழிகளுடன் கைகோர்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். வானில் வண்ண வண்ணப் பறவைகள் பறந்து, அவளது மகிழ்ச்சியை மேலும் கூட்டின. அவளது மனது அமைதியையும், ஆனந்தத்தையும் உணர்ந்தது.

திடீரென, கனவின் காட்சி மாறியது. அந்தப் பசுமையான மலைகள் கருகி, வறண்டு போயின. தெளிந்த நீரோடை காய்ந்து, மண் பிளந்து போனது. பறவைகளின் ஒலி அடங்கி, ஒருவித பயங்கரமான அமைதி சூழ்ந்தது. அவளது தோழிகள், அவளை விட்டு விலகி ஓடினர். மீரா பதறிப் போனாள். என்ன நடந்தது என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது மனம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

அந்தப் பயங்கரமான அமைதியைக் கிழித்து, அவளது முன் கண்ணன் தோன்றினான். அவனது கண்களில் எப்போதும் இருக்கும் கோபமும், கடுமையும், இப்போது இருளின் சாயலில் வேங்கையின் விழி போல பயங்கரமாகக் காட்சியளித்தன. அவனுடைய பாதங்கள் மட்டும் ரோடு ரோலர் போல பெரிதாக இருந்தது.

அவன் மீராவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். அண்ட சராசரமும் நடுங்கிட, பேதையவள் பயந்து போனாள். அடுத்த அடி வைத்தால் அவள் அவனுடைய பாதத்தின் கீழ் நசுங்கி விடுவாள். எனவே பயந்து ஓடினாள். அவளது பயத்தைப் பார்த்து, அவன் முகம் ஒருவித கொடூரமான புன்னகையை உதிர்த்தது.

“வேணாம்… என்னை எதுவும் செய்யாதீங்க…” என்று அவள் மனதில் அலறினாள். அவளது குரல் அவளது தொண்டைக்குள்ளேயே அடங்கிப் போனது.

திடீரென, “என்னை மீறி ஏதாவது செய்வியா நீ?” எனக் கேட்ட கண்ணன், மீராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“பளார்!” என்ற சத்தம் அவளது காதில் எதிரொலித்தது. அந்த அறையின் வலியோடு, மீரா பயத்தில் பதறி அடித்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தாள்.

“வேணாம், அடிக்காதீங்க… என்னை விட்டுருங்க… நான் இனிமே அப்படி செய்ய மாட்டேன்…” என்று கத்தி கதறினாள்.

அவளது அலறல் கேட்டு, அவளுக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த ப்ரியா விருட்டென எழுந்தாள்.

அரை தூக்கத்தில் “எடுபட்ட பய, யாருடா அவள அடிச்சா?…” என்று பெணாத்தினாள்.

ப்ரியாவின் குரல் கேட்டுத்தான் மீராவுக்கு தான் கண்டது எல்லாம் கனவு என்று தெரிந்தது. ஆயினும் பதற்றம் தனியாமல், இழுத்து இழுத்து மூச்சு விட்டாள்.‌ அவளது முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டே, அவள் தாவணியின் துணையால் வியர்வையைத் துடைத்து எடுத்தாள்.

“ஒண்ணுமில்ல ப்ரியா. கனவுதான்…”

“அவ்ளோதானா? விடு. உறங்கு… நமக்கு இன்னிக்கி ஈவினிங்ல இருந்து நாளைக்கு மதியம் வரைக்கும் வேலை இருக்கும். சரியா அஞ்சு மணிக்கு எழுப்பறேன்னு சொல்லி இருக்காங்க. திரும்ப ரெஸ்ட் எடுக்க டைம் கிடைக்காது, நல்லா தூங்கிடு…” என்று கூறியவள், மீராவின் மேலேயே காலை போட்டு படுத்து விட்டாள்.

மீராவுக்கோ கனவில் வந்த காட்சிகள், நிஜமாகவே நடந்தது போலத்தான் இப்போதும் தோன்றியது. அவனோடு இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு, மனதில் தொற்றிக் கொண்டது. அவள் தலையணையை இறுக்கமாக அணைத்துக் கொண்டு கண்களை மூடி உறங்க முயன்றாள். ஆனால் தூக்கம்தான் அவளை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டதே.

அவள் படுத்துக்கொண்டே இடம் வலமாக அசைந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில், மீராவின் இந்த அசைவுகள் ப்ரியாவின் உறக்கத்தையும் கலைத்துவிட்டது. கண்களைத் திறந்து எழுந்து உட்கார்ந்தாள் ப்ரியா.

அவளது முகத்தில், ‘ஏன்டி என் உசுரை வாங்குற?’ எனும் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

“டிஸ்டர்ப் பண்றேனா?”

“பின்ன? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்துற?” என்று நேரடியாகவே கேட்டு சண்டையிட்டாள்.

“சாரி ப்ரியா, என்னால தூங்க முடியல…” என்று பாவமாக சொல்ல, ப்ரியாவுக்கும் அவள் மேல் கரிசனம் உண்டானது.

“கண்ணன் இவ்வளவு மோசமானவரா இருப்பாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. சொந்த தம்பி ஒரு உதவிக்காக வந்திருக்கான். அவனுக்காக இதைக்கூட செய்ய முடியாதா? அவன் காசோ பணமோ கேட்டானா? கொஞ்ச நேரம் கூட வந்து இருங்கன்னு மட்டும்தான் கேட்டான். அதுக்கேன் அவருக்கு இவ்வளவு திமிரு?” என்று மீரா கோபமும், வருத்தமுமாகக் கேட்டாள்.

“ஏய், திமிரெல்லாம் இல்ல…” என்றாள் ப்ரியா அமைதியாக.

“அது திமிருதான் ப்ரியா. பெரிய செலிப்ரிட்டி ஆய்ட்டோம்ன்ற மெதப்புதான் இத்தனைக்கும் காரணம். இல்லனா பொசுக்கு பொசுக்குன்னு கை நீட்ட தோணுமா சொல்லு? கனவுல வாங்குன அடிக்கே என் கன்னம் வலிக்குது தெரியுமா?”

“ஏன் இப்படிப் பேசுற? அதான் உனக்கு துணையா நான் இருக்கேன்ல? இனிமே அவன் உன்னை நெருங்காதபடி, நான் பார்த்துக்கிறேன்” என்று ப்ரியா அவளைத் தேற்ற முயன்றாள்.

“அவன் என் மேல கை ஓங்கின வேகமே எனக்குள்ள ஒரு‌மாதிரி ஆகிருச்சு. நீ தடுத்தா மட்டும் கேட்கவா போறாரு? இனி அவருட்ட எத்தனை அறை வாங்கணுமோன்னு நினைக்கும்போதே உடம்பெல்லாம் நடுங்குது” என்று மீரா சொன்னாள்.

ப்ரியாவுக்கு இப்போது உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தோன்றியது. அவள் மீராவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“மீரா, பயப்படாத. முதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. கண்ணன் இப்படி இருக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நினைக்கிற மாதிரி செலபிரிட்டியானதால அவன் திமிரா இல்ல. வீட்டை விட்டு விரட்டுனதால, வெறியோடவும், லட்சியத்தோடவும் வாழ்ந்து காட்டி இருக்கான். அந்த மன அழுத்தம் அவனை விட்டு போக மாட்டேங்குது.”

அதிர்ந்து விழித்தாள் மீரா.

‘என்னது? வீட்டை விட்டு விரட்டினாங்களா?!’ என்பதிலேயே அவள் மனது தேங்கி நின்று விட்டது.

கண்ணன் எல்லோரையும் போல இன்ஜினியரிங் படித்தவன். படித்த படிப்புக்கு அடுத்த ஒரு வருடம் முழுவதும் வேலை தேடி அலைந்தான். இன்ஜினியரிங் மாணவர்களுக்கு லட்சத்தில் பத்து சதவீதம் பேருக்கு தான் வேலை கிடைக்கும். ஒரு சிலர் சிபாரிசு மூலமாக வேலைக்கு சென்று விடுவார்கள். ஏனையோர்? கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த பெரும்பான்மை பகுதியைச் சேர்ந்தவன் தான் கண்ணன்‌.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page