காதல் பூக்கள் -1
- காதல் பூக்கள்-1
நேசம் விதைத்த
மனசுக்குள்
மோசம் இசைந்து
ஓசை குறைந்து
ஓய்வெடுக்கும் எண்ணம்
ஒருமனதாக ஒருமனதிடம்
தோன்ற…..
காற்றுலாவியில் பிடித்த
முகமறியா ஒரு
முகவரியை
என் மனமென்னும்
தாளில்
காதல் வரியாக
எழுத துவங்கிட
மேகமதில்
விதைந்த நிலவிரவாய்
என் வானம்
மௌனமதை தொலைத்த
புன்னகையாய் மலர்ந்ததாக
உணர்ந்தேன்
தினம் தினம்
நிகழ்கால கனவில்
எதிர்கால ஆசைகள்
பிறப்பெடுக்க
உருவாக உணர்வாக
முப்பொழுதுகளிலும்
காதல் என்னை
ஆட்கொண்டுவிட
மெய்யற்ற விழிகளாய்
திக்கற்று போனேன்
திகட்ட திகட்ட
காதலிலானேன்
மழை நனைந்த
மறுநாள் மாறும்
பேச்சோசை போல்
திகட்டிய காதல்
எனக்கு மட்டும் தான்
திகட்டியதாக
உணரத்தொடங்கினேன்
யானை தந்தாலும்
ஆசை தரக்கூடாது
என்ற சொல்லின்
உண்மை நிலவரங்கள்
புரியத்தொடங்கினேன்
ஆசையின் அடைக்கூட்டுக்குள்
நான் மட்டும் ஏமாற்றப்படுவது
விதிவிலக்கா என்ன
நானும் வரலாறு கண்ட
பெண் இல்லையா
உயிர்க்கூடு சரியத்
தொடங்கிய காலம்
காரணம் வினவினேன்
அவன் கூட்டில்
ஆணத்துவம் இல்லையென
அறிந்து கொண்டேன்
வேஷதாரி உதிர்ந்த
வார்த்தைகள் முழுவதும்
மன்னிப்பென்னும்
மோட்சம் நிறைய
துரோகம் இழைத்த
சடலம் தரும்
மன்னிப்பிற்கு
என்ன உயிர் இருக்கிறது
என் கதை என்னோடு
முடியட்டும்
துவங்கள் காதலில்
பூரிப்பாகத் தானிருக்கும்
மீண்டும் உரைக்கின்றேன்
பெண் இனமே
யானை கொடுத்தாலும்
ஆசை கொடுக்காதீர்கள்
புதிய தொடராக
என் வெற்றிக் காதல்
ஆம் என் காதல் வெற்றிதான்
என் நேர்மை எதிலும்
தோற்கவில்லை…
“மாமா! மாமா!”
சட்டென்று அவள் குரல் கேட்க, கண்மூடி ஷோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தவன், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து சுற்றும் முற்றும் கண்களைச் சுழல விட்டான்.
அவள் குரல்… ஆமாம் அவள் கூப்பிடும் அதே உணர்வு. அவள் மட்டுமே அவனை அப்படி அழைப்பாள். எங்கே இருக்கிறாள்? என்று அவன் மனம் அவளைத் தேடியது.
கால்கள் தானாக கதவின் அருகில் சென்று கதவைத் திறக்க, அவனது கரம் பற்றி தடுத்தான், அவன் தம்பி சரவணன்.
“டேய் அஜய், எங்க போற இந்த டைம்ல?”
“சரவணா, என் கையை விடுடா. அவ இங்க வந்து இருக்கா. என்னை மாமானு சொல்லி கூப்பிட்டா” என்று உளறினான்.
“யார் வந்து இருக்காங்க? எங்க வந்து இருக்காங்க?” என கேட்டபடி அறையைப் பார்வையால் அலசினான். ஆனால் அங்கோ அவனையும் அவன் தமையன் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை.
“அதான்டா, அவ அவளே தான்டா” என்று பித்து பிடித்தவன் போல் சொன்னதையே திரும்பச் சொல்லிய தன் தமையனை கன்னத்தில் அறைந்தான் சரவணன்.
அவன் அறைந்ததும் சுயநினைவுக்கு வந்தவன், சுற்றி முற்றிப் பார்த்து, “எங்கடா அவ?” என கேட்க,
“டேய் பைத்தியம், அதான்டா நானும் கேக்கறேன். யாரு அந்த பொண்ணு?” என்று நேரடியாக கேள்வியைக் கேட்டான்.
“அது… அது…” என சொல்ல முடியாமல் இழுத்து கொண்டே, அப்படியே பேசாமல் அமைதியாக யோசித்தான்.
‘என்னாச்சு? ஏன் இப்படி புலம்புறேன்? எதற்காக அவள் வந்து கூப்பிட்டாள்? கூப்பிட்டவள் எங்கே சென்றாள்?’
இப்படி பல கேள்விகளை மனதில் போட்டுக் குழம்பியவனைப் பார்த்த சரவணன், இதற்கு மேல் தன் தமையனிடம் எதுவும் கேட்க வேண்டாம், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
“அஜய் போய் தூங்கு, விடிஞ்சா கல்யாணம். கல்யாண மாப்பிள்ள தாலி கட்டும் போது அழகா இருக்கணும்” என தன் தமையனைப் படுக்க சொல்லி விட்டு சென்றான்.
தனது அறைக்குள் நுழைய போகும் முன்பு, ஒரு தரம் நின்று தன் தமையனைத் திரும்பிப் பார்க்க, அவன் இன்னும் அந்த அறையில் யாரையோ தேடுவது நன்றாக புரிந்தது அவனுக்கு.
பின் தன் அறைக்குள் நுழைந்த சரவணன், பலத்த சிந்தனைக்குள் சென்றான்.
‘என்னாச்சு! அஜய் ஏன் இப்படி நடந்துக்குறான். திருமண பேச்சு ஆரம்பிச்சப்ப கூட நல்லாத்தான இருந்தான். ஆனால் கல்யாண நாள் நெருங்க நெருங்க ஏதோ ஒன்னு அவன் மனச போட்டு வதைக்குது. இது மட்டும் நல்லா புரியுது.
ஆனால் என்ன விசயமா இருக்கும்? யாரோ ஒரு பொண்ண பத்தி சொன்னானே! யார் அது? இத்தனை நாள் இல்லாத ஒருத்தி எங்க இருந்து வந்தாள்?’ என்று சரவணன் யோசித்து கொண்டு இருந்த சமயம், யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு, வெளியே சென்று எட்டி பார்த்தவன், பதறி நின்றான்.
