காதல் பூக்கள் – 2
- அத்தியாயம் -2
‘விடிந்தால் கல்யாணம், இவள் எதற்காக இப்போது என் முன் வரவேண்டும்? ஒரு வருடம் கடந்து விட்டது, அவளைப் பிரிந்து.
இதோ, இதே நாளில் தான் அவளை விட்டுப் பிரிந்து செல்கிறேன் என்று, அவளைக் காயப்படுத்தி விட்டு வந்தேன். பிரிந்த அன்று அவள் உதிர்த்த வார்த்தைகள் என் செவிகளில் இன்னும் கேட்டுக் கொண்டு இருக்கிறதே!’ என்று யோசித்துக் கொண்டிருந்த அஜயின் மன எண்ணங்கள், அவளைப் பிரிந்து செல்ல முடிவு எடுத்த நாளை நோக்கி சென்றது.
கண்களில் கண்ணீர் வழிய, அஜயின் இரு கரத்தையும் தன் இரு கரங்களில் பிடித்துக் கொண்டு அவனின் கண்களைப் பார்த்தபடி, “மாமா, ஏன்டா இந்த முடிவு? என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? நீ இல்லைனா செத்துடுவேன்டா! ஏமாத்த மாட்டேன்னு சொன்னியேடா. இப்போ அம்போனு நடுத்தெருவில் விட்டு போறீயே மாமா.
நமக்குள்ள எல்லாம் அவ்வளவு தான்னு யோசிக்கும் போதே மனசு வலிக்குது மாமா. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாடா?” என அவள் வாய் வார்த்தைகளை உதிர்க்க, கண்களில் கண்ணீர் அருவியாகப் பொழிந்தது.
“எப்படி மாமா உன்னால இந்த வார்த்தையை சொல்ல முடிந்தது? மாமா… மாமா… ப்ளீஸ்டா போய்டாத… சத்தியமா தாங்க முடியலடா. மூச்சு மூட்டுது, என்னால இதை ஏத்துக்கவே முடியல. இங்க பாருடா நான் கூட நீ இல்லாம இருந்துடுவேன் மாமா. ஆனால் உன்னால தான்டா நான் இல்லாமல் வாழ முடியாது.”
பிரியும் நேரத்தில் கூட எனக்காகத் தவித்தவளை, மனசாட்சி இல்லாத மிருகம் போல் அவளையும் அவள் காதலையும் தூக்கி எறிந்து விட்டு வந்தேனே, அவளைப் பிரியும் அந்த நொடி, வேதனையில் அவள் பேசிய வார்த்தைகள் புத்தியில் வந்து வந்து செல்கிறதே!
“மாமா, நாம இனி பார்த்துக் கொள்ளவே வேண்டாம்னு நீ நினைச்சாலும் நாம சந்திக்கும் நாள் வரும்டா. ஆனா அப்போ, எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும். உன் கண் முன்னால தோன்றிய அக்கணம், இன்று நடந்தது ஒவ்வொன்றும் உன் நினைவிற்குத் தோன்றும். பிரியணும்னு முடிவு எடுத்துட்டல, நீ போ மாமா. ஆனால் ஒன்னு மட்டும் உன் நினைவில் வச்சுக்கோ, இன்று நான் துடிச்சதை விட வரும் அந்நாளில் நீ துடிப்படா மாமா.
நல்லா நினைவில் வைத்துக் கொள், உன் கண்முன்னால நான் வரும் அந்நொடியிலிருந்து நீ பார்க்கும் எத்திசையும் சரி, உன் செயல், நீ பேசும் வார்த்தைகள், நீ நினைக்கும் நினைவுகள் அனைத்திலும் நான் மட்டுமே நிறைந்து இருப்பேன். நீ நினைத்தாலும் என் நினைவை உன்னால் அழிக்கவே முடியாது.”
அவள் கூறிய ஒவ்வொன்றும் இப்போது நடந்து கொண்டிருக்கிறதே. அப்படியென்றால் அவள் இங்கே தான் இருக்கிறாளா? எங்கே இருக்கிறாள்? எதற்காக வந்தாள்? இந்த திருமணத்தை நிறுத்தவா?
“ச்சே, என்ன மடத்தனமா யோசிக்கிறேன். அவள் எப்போதும் எனக்கு ஒரு தீங்கும் நினைக்காதவள். என் சந்தோஷம் தான் அவள் நிம்மதி என நினைத்து வாழ்ந்தவள். அப்படிப்பட்டவளை என் குடும்பத்திற்காகத் தூக்கி எறிந்து விட்டேனே. அதுவும் அப்படி ஒரு சூழ்நிலையில்!” தன் தலையில் கை வைத்துக் கொண்டான்.
அவன் மனதில் ஒளிந்து கொண்டு இருந்த அவளின் நினைவுகள் இப்போது ஒவ்வொன்றும் உள்ளே, வெளியே என்று விளையாட்டைத் தொடங்கியுள்ளது.
அவள் அவன் அருகில் தான் எங்கேயோ இருக்கிறாள் என்று அஜய் முழுமையாக நம்பினான்.
அவனுக்குள் தோன்றிய உணர்வை நினைத்து விழிகளை மூடியபடி சந்தேகத்துடன் அமர்ந்து இருந்தான்.
‘இப்படியே உட்கார்ந்து மனதை போட்டுக் குழப்பிக் கொண்டு இருந்தால் நிச்சயம் விடை தெரியாது. இன்னும் எட்டு மணி நேரத்தில் இந்த திருமணம் எந்த தடையுமின்றி நடக்க வேண்டும் என்றால் அவள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவளைச் சந்திக்க வேண்டும். ஆனால் எப்படி போக முடியும்? மண்டபத்திலிருந்து இந்த நேரத்தில் மாப்பிள்ளை வெளியே சென்றால் தவறாக நினைத்து விடுவார்கள். பிறகு எப்படி?’
மனமும், புத்தியும் அவளை ஒரு முறை நேரில் பார்த்து மன்னிப்பு கூற வேண்டும் என, மீண்டும் அவள் நினைவிற்குப் போனது. அன்று அவன் உதிர்த்த சொற்கள் மீண்டும் இவன் செவியில் ஒலித்தது.
“தயவுசெய்து என்னை மன்னிச்சிடுடி, புரிஞ்சிக்கோடி எனக்கு வேற வழி தெரியல. நாம பிரிஞ்சு தான் ஆகணும். உன் மாமாவை மன்னிச்சிடுடி” என்று அஜய் அவள் கரம் பற்றி முகத்தில் புதைத்துக் கொண்டு கண்ணீர் சிந்த, அவள் கரம் அவன் தலையை வருடிக் கொடுத்தது.
“மாமாஸ என்னைப் பாரு, நீ போக வேண்டும்னு தீர்மானம் எடுத்துட்ட. இதற்கு மேல் என் வலியை உனக்கு உணர்த்தவும், இனி உன்னைக் கட்டாயப்படுத்தி, என் கூடவே இருந்துடுனு சொல்லவும் என்னால முடியாது. நீ போகலாம்!
இனி உன் பொண்டாட்டி உன் வாழ்க்கையில் இல்லை. எல்லாம் இந்த நிமிடமே முடிந்தது உன்னைப் பொறுத்தவரை. அப்புறம் என்னை மறக்கச் சொல்றதுக்கும், நினைக்க வேண்டாம்னு சொல்றதுக்கும் உனக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால் ஒன்னு மட்டும் எப்போதும் உன் நினைவில் வைத்துக் கொள். நான் உயிரோடு இருக்கும் இறுதி நாள், நிமிடம், நொடி வரை உன்னை ஒரு துளி அளவு கூட மன்னிக்க மாட்டேன். என்றாவது உன்னை மன்னித்து விடலாம் என என் இதயம் நினைக்கத் தொடங்கினால், அந்நொடியே என் இதயத்துடிப்பு நின்று விடும்.
என் இதயத்துடிப்பு நின்று விட்டால், உன்னை மன்னித்து விட்டேன் என்று அர்த்தம்” என சிலை போல் நின்று கொண்டு உணர்ச்சியே இல்லாமல், கண்களில் ஒரு துளி கண்ணீர் வழியாமல், விழியின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரை உள்ளே இழுத்தபடி பேசியவளைப் பார்த்த அஜய்க்கு சிறிது பயம் உண்டாகத் தான் செய்தது.
அன்று அவள் உதிர்த்த வார்த்தையை நினைத்து இன்றும் பயம் உண்டாகியது அஜய்க்கு.
“ஒருவேளை நான் மன்னிப்பு கேட்க போய், அவள் சொன்னது போல் நடந்துவிட்டால்… அய்யோ நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அவளை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய நானே, அவள் வாழ்நாள் முழுவதுக்கும் ஆறாத ரணத்தைக் கொடுத்து விட்டேனே” என கோவத்தில் தன் கோட்டை கழற்றி தூக்கி எறிந்தான்.
பின் சிறிது நேரம், அங்கும் இங்கும் நடந்தவன், ‘அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம். ஆனால் ஒரு முறை அவள் நன்றாக இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு வந்து விடலாம். அப்போது தான் என்னால் இன்னொரு பெண் கழுத்தில் மூன்று முடிச்சு இட முடியும்.
இல்லையென்றால் காலம் முழுக்க குற்றவுணர்விலேயே சாக வேண்டியது தான்’ என்று நினைத்தவன், யாருக்கும் தெரியாமல் மண்டபத்தின் பின் பக்கம் சென்று விடலாம் என்று எண்ணி, தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு அறை கதவு திறக்க, அந்த சத்தம் கேட்டு வந்த சரவணன் அதைப் பார்த்து அதிர்ந்தான்.
காலையில் தாலி கட்ட வேண்டிய மாப்பிள்ளை, இந்நேரம் எங்கோ செல்வதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. சரவணனின் எண்ணமோ ஏதேதோ நினைக்கத் தோன்றி விட்டது.
‘அஜய் திருமணம் பிடிக்காமல், அவன் கூறிய பெண்ணை திருமணம் செய்யச் செல்கிறானா? அவ்வாறு அஜய் செய்துவிட்டால்ஸ’ காலையில் நடக்க இருக்கும் விபரீதத்தைப் பற்றி யோசித்தவன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன் தமையன் பின் சென்றான்.
அஜய் பைக் எடுக்கப் போக, சரவணன் அவன் முன் வந்து நின்றதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தவனிடத்தில்,
“எங்க அஜய் போற இந்த நேரத்தில?”
“அது… அது சரவணா, கொஞ்சம் ரிலாக்ஸா வெளியே போய்ட்டு வரலாமென்னு…”
“யார் கிட்ட கதை விடுற அஜய், ஒழுங்கா சொல்லு எங்கே போற? விடிஞ்சா கல்யாணம், நீ என்னடானா அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாம ரிலாக்ஸ் பண்ண போறனு சொல்ற. இதை நம்ப நான் என்ன முட்டாளா?” என சரவணன் கேட்டதும், அஜயின் சிந்தனைகள் தானாகவே மீண்டும் அவளிடம் சென்றது.
“மாமா, இப்படி என்னை முட்டாளாக்கிட்டியே!” என அவள் கண்ணீருடன் கேட்டது, இன்று மீண்டும் அவன் கண்முன் தோன்ற, தன் தம்பிக்கு விடையளிக்காமல் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
அஜயின் நடவடிக்கையைப் பார்த்தவன், அடுத்து அவன் இங்கே இருந்து செல்லப் போகிறான் என்று உணர்ந்த நிமிடம், சட்டென்று அஜயின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான். அஜயும் அவனைத் தடுக்காமல் அமைதியாக பைக்கை எடுத்துக் கொண்டு மண்டபத்திலிருந்து பறந்தான்.
“அஜய், எங்கடா போற, இந்த நேரத்தில் கல்யாண மாப்பிள்ளை மண்டபத்திலிருந்து வெளியே போயிட்டான்னு தெரிஞ்சா பெரிய பிரச்சனை வரும்டா. அண்ணிய பத்தி ஒரு நிமிடம் யோசிச்சியா? எத்தனை கனவோடு இருந்து இருப்பாங்க. இப்போ அது எல்லாம் இல்லைனு தெரிஞ்சா அவங்க நிலைமையை நினச்சு பாருடா. ப்ளீஸ் பைக்கை திருப்புடா” என்று சரவணன் பேசியதைக் கேட்டவனுக்கு விழிகளில் கண்ணீர் வழிந்து, காற்றில் சரவணனின் கன்னத்தில் தெறித்தது.
அஜயின் கண்ணீரைக் கண்டவனுக்கு, ஏனோ அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றாமல் அமைதியாக அவனோடு சென்றான்.
அஜயோ, சரவணனின் சொற்களைச் செவிகளில் வாங்கியவன், “ஆமாம் சரவணா, ஒரு பெண்ணோட கனவை சிதைச்சுட்டு வந்திட்டேன். கனவைக் கொடுத்த நானே, அவளின் கனவை அழிக்கும் காலனாகவும் மாறிப் போனேன்” என்று உளறியவனை பைக்கின் முன் கண்ணாடி வழியாகப் பார்த்தவனுக்குப் பாவமாகத் தோன்றியது.
தன்னுடைய அண்ணனின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று மறக்க முடியாத அளவிற்கு நடந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டவன், தன் தமையனின் தோளை ஆறுதலாகப் பற்ற, அந்த இரு சக்கர வாகனம் ஒரு வீட்டின் முன் நின்றது.
சரவணன் சுற்று முற்றும் பார்த்தபடி இறங்கியவன், எதிரே இருந்த வீட்டைப் பார்த்து உறைந்து நின்றான்.
அஜயோ, குற்றவுணர்வில் அந்த இல்லத்தைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து நிற்க, சரவணனோ இல்லத்தைப் பார்த்தபடி அதிர்ந்து நின்றான்.
