காதல் பூக்கள் – 3
- அத்தியாயம்- 3
‘இப்போ எதற்கு அஜய் இங்கே வந்து இருக்கிறான். ஒருவேளை நம்ம காதல் விசயம் தெரிஞ்சிடுச்சா?’ என ஒரு நொடி அதிர்ந்தான் சரவணன்.
பின் தன் தலையில் தட்டிக் கொண்டு, ‘ச்செய், அப்படியெல்லாம் இருக்காது. தெரிந்து இருந்தால் அண்ணா இதை கல்யாண மண்டபத்திலே கேட்டு இருக்கலாமே. இது வேற ஏதோ ஒரு விசயம். அண்ணனே சொல்ற வரை நம்ம வாயைப் பொத்திக்கிட்டு அமைதியா இருப்போம். வாயைக் கொடுத்துப் புண்ணாக்கிக்க வேண்டாம்’ என தனக்குள்ளே பேசிக் கொண்டு இருந்தவன், அஜய் முன்னேறி நடப்பத்தை பார்த்து அவன் கரம் பற்றி தடுத்தான்.
“டேய் அஜய், என்னடா பண்ற? இந்த நேரத்தில பெண்கள் இருக்கிற வீட்டுக்குள்ள போற?” வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று யோசித்து முடிப்பதற்குள், மாட்டிக் கொண்டதை நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டு நாக்கை கடித்தான்.
ஆனால் அஜய் இது எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வான் சரவணன். அஜய், அவன் கரத்தை விடுவித்து அந்த வீட்டை நோக்கிச் செல்ல, வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான்.
சரவணன், “அஜய், வீடு பூட்டி இருக்கு. இப்போ எதற்கு இங்கே வந்து இருக்க? அங்க மண்டபத்தில நம்மளை காணோம்னு தேடிக்கிட்டு இருக்கப் போறாங்க. வா நாம கிளம்பலாம்” என்று தன் தமையனை அங்கே இருந்து அழைத்துக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தான்.
பேச்சு சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் லைட் போட, அதைப் பார்த்த சரவணன், “போச்சுஸ பக்கத்து வீட்டுக்காரங்க வராங்க. நம்மளை இந்த டைம்ல இங்கே பார்த்தா அவ்வளவு தான். அவங்க வெளிவருவதற்குள் வாடா போகலாம்” தன் தமையனை இழுத்தபடி பேசிக் கொண்டு இருக்க,
அதற்குள் அருகில் இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து எட்டிப் பார்த்து, “யார் அது?” என்றார்.
சரவணன் வாய் திறக்கப் போக, அவர் தன் இல்லத்தில் கதவைத் திறந்து கொண்டு வந்து, அவர் வீட்டில் திண்ணையில் இருந்தபடி யாரென்று பார்த்தவர், “அட வாப்பா அஜய் தம்பி, எப்படி இருக்க? ஒரு வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து. உன் பொண்டாடிக்கிட்ட கேட்டேன். நீ வெளிநாட்டுக்கு போயிருக்கிறதா சொன்னா. இப்போ தான் ஊரில இருந்து வறீயா? எப்படிப்பா இருக்க, நல்லா இருக்கியா?
பாவம்பா உன் பொண்டாட்டி ஆளே உருகிப்போய்டா. நீயே கதினு இருந்துட்டாளா, அதான் நீ வெளிநாட்டுக்கு போனது அவளால தாங்கிக்கவே முடில. எப்போ பார் ஏதோ ஒன்னை பறிகொடுத்த மாதிரியே முகமெல்லாம் களை இழந்து போய் இருந்தா. அட, அதை விட அவள் சிரிப்பையே மறந்துட்டானா பார்த்துக்கோ. அம்புட்டு உசுருய்யா உன் மேல. ஆனால் மகாராசி என்ன நினைச்சாளோ தெரில, இப்படி ஆகிடுச்சி” என அவர் பாட்டுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் பொண்டாட்டி என்று சொன்ன அடுத்த நொடி, சரவணனுக்குப் பேச்சே வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனான்.
‘தன் கூட பிறந்தவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா!’ என்ற வியப்பில் ஆழ்ந்தவன்,
‘அப்போ இந்த கல்யாணத்திற்கு எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இவனை யாருமே கட்டாயப்படுத்தலையே. இந்த திருமணத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்று யாருமே இவனை மிரட்டவும் இல்ல. அப்படி இருக்கும் போது இன்னொரு பொண்ணோடு வாழ்க்கையை ஏன் நாசம் செய்ய நினைத்தான்?’ என்று தன் சகோதரன் மீது கோபம் உண்டாகியது.
அதே சமயம் உடன் பிறந்தவன் மீது இத்தனை வருடம் வைத்த நம்பிக்கை சரவணனை அசைத்துப் பார்த்தது. ‘இல்லை, அஜய் பொண்ணுங்களுக்கு துரோகம் செய்யக் கூடியவனே இல்லை’ என்று.
அஜய்யோ, ‘அவள் சிரிப்பையே மறந்து விட்டாள்’ என்ற சொல் கேட்டதும் அவன் இதயத்தில் யாரோ கூர்மையான கத்தியை வைத்துத் திருகியது போல் உணர்வு தோன்றியது அவனுக்கு.
இதயத்தின் ரணவேதனையை உணர்ந்தவன், தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அருகிலிருந்த ஒரு பூச்செடியை எடுத்தவன், அந்த ப்ளாஸ்டிக் பூங்கொத்தை தூக்கிப் பார்த்தான்.
அவன் நினைத்தது போலவே சாவி அதிலிருந்தது. ‘இன்னும் இவள் மாறவில்லையா? சாவியை இப்படி வைத்து விட்டுப் போகாதே என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன்?’ என்று சிறிது கோபம் எட்டி பார்த்தது.
இப்போது அவள் மேல் கோபப்படும் உரிமை தனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு, அமைதியாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
பக்கத்து வீட்டு அக்காவோ, தன்னால் இதற்கு மேல் நிற்க முடியவில்லை மாத்திரை போட்டதால் தூக்கம் வருகிறது என்று கூறிவிட்டு தன் இல்லத்திற்குச் சென்றுவிட, பாவம் சரவணன் தான் நடப்பது ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றான்.
அஜய் வீட்டினுள் காலடி எடுத்து வைக்க வைக்க, அவளின் குரல் செவிகளில் அதிகமாகக் கேட்கத் தொடங்கியது. எப்போதும் வீட்டிற்குள் நுழைந்தால் மூச்சுக்கு முன்னூறு தடவை, ‘மாமாஸ மாமாஸ மாமாஸ’ என்று மட்டுமே அழைப்பாள். இன்றோ தன்னை மாமா என்று சொல்லி அழைக்க, அவளைக் காணாது தவித்தவன், சுற்றி கண்களை அலையவிட்டான்.
அஜய் பின்னால் வந்த சரவணனோ தன் தமையனின் தோள்களைப் பிடித்து நிறுத்தி, “என்னடா நடக்குது இங்க, யார் வீடு இது? அவங்க ஏதோ உனக்குக் கல்யாணம் ஆன மாதிரி, பொண்டாட்டி அது இதுனு சொல்றாங்க. உன்கிட்ட நிறைய நாள் பழகின மாதிரி பேசுறாங்க.
ஆமா அந்த பூச்செடியில் இந்த வீட்டு சாவி இருக்கும்னு உனக்கு எப்படித் தெரியும். சொல்லித் தொலைடா என்ன நடந்துட்டு இருக்கு நம்மளை சுத்தி? நாளைக்கு உனக்குக் கல்யாணம், ஆனால் உனக்கு மனைவி இருக்காங்கனு யாரோ ஒருத்தர் சொல்லிக் கேட்கிறேன்.
என்னடா இதெல்லாம், ஒரு பொண்ணோட வாழ்க்கையை மட்டும் இல்லை, இரண்டு பெண்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறி ஆக்குறடா நீ. நம்ம வீட்ல நம்ம கூட பிறந்த ஒரு பொண்ணு இருக்கா. அதைப் பற்றியெல்லாம் யோசிக்காம என்ன காரியம் செய்துட்டு வந்து நிற்கிற? நான் கேட்டுட்டே இருக்கேன், நீ அமைதியா இருந்தா என்னடா அர்த்தம். பதிலை சொல்லுடா?” என அவனைப் பிடித்து உலுக்க, அதுவரை அவன் இழுத்துப் பிடித்து இருந்த கண்ணீர், வலி அனைத்தும் உடைந்து, கதறி அழுதான்.
“ஆமாடா நான் நம்பிக்கைத் துரோகம் செய்துட்டேன்ஸ” என்று கத்தினான்.
இரு ஆண்களின் பேச்சு சத்தம் கேட்டு, உள்ளறையிலிருந்து ஒரு பெண் தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்தாள். அஜயைப் பார்த்ததும் சினம் கொண்டு, அஜயின் அருகில் சென்று அஜய் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள்.
அவளைப் பார்த்ததும் சரவணனிற்கு, ‘பூட்டி இருக்கிற வீட்டிலிருந்து இவள் எப்படி வந்தாள்?’ என்று குழப்பமாக இருந்தது. யார் முன் தன்னை கெத்தாக, ஒரு ஹீரோவாக காட்ட நினைத்தானோ அவள் முன் இன்று தலைகுனிந்து நின்றான் தன் சகோதரனால்.
“எதுக்குடா இங்கே வந்த, நம்பிக்கை துரோகி. செத்தாளா இல்லை இன்னும் உயிரோடு இருக்கிறாளானு பார்க்க வந்தியா? அதான் ஒரு வருஷத்திற்கு முன்னயே உயிரோட கொன்னுட்டு போய்டியே, இப்போ இருந்தா என்ன? இல்லைனா என்ன?
இப்போ என்ன வெண்ணைக்குடா இங்கே வந்த? நாளைக்கு உனக்கு கல்யாணமாச்சே. இப்ப இங்க வந்து நிற்கிற? மனசாட்சி உறுத்துச்சா, இல்லை மணப்பெண் வேற யார் கூடயாவது ஓடி போயிட்டாளா?” என்று வார்த்தைகள் அவள் வாயிலிருந்து கடுமையாக வந்து விழுந்தது.
சரவணனோ பேச வாய் திறக்க, அவனைப் பார்வையாலே அமைதியாக்கினாள்.
அஜய் தன் இருகரம் கூப்பி மண்டியிட்டு அழுதான். “நான் செய்தது மன்னிக்க முடியாத தப்பு தான். அதற்காக என்னை மன்னிக்கச் சொல்லிக் கேட்க வரல. ஒரு தரம் எப்படி இருக்…” என அவன் சொல்லி முடிக்கும் முன்னே, மீண்டும் அஜய் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
ஒரு பெண் தன் அண்ணனை அடிப்பதைத் தடுக்க முடியாத நிலைமையில் இருப்பதை நினைத்த சரவணன் தன் பொறுமையை இழந்து, “இங்கே என்ன தான் நடக்குது சொல்கிறீர்களா?” என்று சத்தம் போட, அவளோ கரத்தை உயர்த்தி சரவணனை கத்தாதே என்று சைகையில் காட்டினாள்.
“உன்னோட மிரட்டலுக்கு இவன் அடங்கிப் போவான், நான் இல்லை. அது என்ன, ஒரு ஆம்பளைனு கூட நினைக்காம என் கண்ணு முன்னாடியே என் அண்ணனை ஒரு பெண்ணான நீ அடிக்கிற. இவன் ஆயிரம் தப்பு செய்து இருக்கட்டும், அதுக்கு ஒரு பொம்பளை ஒரு ஆண்மகனை கை நீட்டி அடிக்கலாமா?” என்று ஆணாதிக்கம் கொண்டு கேட்க, சற்று கூட அசராமல் சரவணனின் கன்னத்திலும் ஓர் அறை விட்டாள்.
“இந்த திமிர் தான்டா, உங்களை மாதிரி ஆம்பளைங்க எங்களை மாதிரி பெண்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கிட்டு, கடைசியா தூக்கிப் போட்டு போக வைக்குது.
என்ன சொன்ன ஆயிரம் தப்பு செய்து இருக்கட்டுமா! அதென்னடா ஆம்பளைங்கனா என்ன தப்பு வேணாலும் செய்வீங்களா? அதை பெண்கள் நாங்கள் பொறுத்துட்டு போகணுமா? இங்கே பார் சரவணா, உன் மேல் ஒரு நல்ல மதிப்பு வச்சு இருக்கேன். இப்படி ஒரு கேடு கெட்டவனுக்காக என்கிட்ட எகிறிகிட்டு வராதே.
இவன் பண்ணது தப்பு இல்லை, பச்ச துரோகம். அன்பிற்காக ஏங்கினவளோட இதயத்தை, மனசாட்சியே இல்லாம உடைச்சுட்டு போனவன். இவனுக்காக பரிந்து கொண்டு என்கிட்ட பேசாதே” என்று அவள் சரவணனை நோக்கி கூறினாள்.
சரவணன் அமைதியாகத் தான் பேசிய வார்த்தை தப்பு என்று சொல்லி மன்னிப்பு கேட்டவன், தன் தமையனிடம் திரும்பி, “என்ன தான் நடந்துச்சுனு சொல்லுடா. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்குடா. அப்படி என்ன துரோகம் பண்ண இவங்களுக்கு?” எனக் கேட்க, அவளோ அஜயை எரித்துவிடும் பார்வை பார்த்தாள்.
அஜய்யோ விழிகளில் நீர் வழிய, இதற்கு மேல் மறைத்து வைப்பதை விட தன் மனதில் உள்ள பாரத்தை வெளியே கொட்டித் தீர்த்து விடலாம் என்ற முடிவோடு, இதுவரை தன்னுள் போட்டு புதைத்து வைத்து இருந்த ரகசியத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
இரண்டு வருடத்திற்கு முன்பு,
பல இடத்தில் வேலைக்கு அலைந்து கொண்டு இருந்தான் அஜய். அந்த சமயத்தில் கடைசியாக ஒரு நிறுவனத்தில் நேர்காணல் முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் மழை பெய்தது. அங்கே இருந்த பேருந்து நிலையத்தின் பக்கத்தில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்குள் நிற்க ஓடிச் சென்றான்.
அவன் கால் சகதியில் வழுக்கிக் கொண்டு பின்னால் விழப் போனவனை, தன் ஒரு கரம் கொண்டு அவன் கரத்தைப் பிடித்து, மறுக் கரத்தால் அவனின் இடையை வளைத்துக் கீழே விழாமல் பிடித்து நிறுத்தினாள் ஒருத்தி.
பூவை விட மென்மையான கரம் தன்னை தாங்கி பிடித்து நிறுத்தியதை உணர்ந்தவன் அவள் முகம் பார்த்தான். பார்த்த முதல் பார்வையிலே அவளிடம் சொக்கி தான் போனான் அஜய்.
“மெல்ல… மெல்ல பார்த்து வர கூடாதாங்க. இந்த சகதியில் விழுந்து இருந்தா இந்த வைட் சர்ட் நிலைமை என்ன ஆகி இருக்கும்? பாவம் உங்க அம்மா தான் இதை சுத்தம் செய்ய கஷ்டப்பட வேண்டியதா இருக்கும்” என்று யார் என்றே தெரியாத இவனின் அம்மாவை நினைத்து வருந்தினாள்.
இப்படிப்பட்ட மென்மையான குணம் உடையவள், பறவை போல் சிறகு இல்லை என்றாலும், இந்த உலகத்தை ரசித்துப் பார்த்து வலம் வந்தவளை இனி வரும் அத்தியாயத்தில் காணலாம்.
