காதல் பூக்கள் – 6
தன் வாழ்வில் முதன் முதலாக, முதல் நாள் வேலைக்குச் செல்லும் அஜய்க்கு உடல் முழுக்க சிலிர்த்தது.
இது பொதுவாக முதல் தடவையாக வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் தோன்றும் ஓர் உணர்வு தான் என்றாலும், அஜய்க்கு மட்டும் இது ஒரு தனி சுகம் தான் என்று சொல்ல வேண்டும். அவன் எதிர்பார்த்தபடி தன் மனதில் தோன்றுவதைச் செய்யக்கூடிய வேலை என்பதால், அவனால் தன் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘கடவுளே! நீ இருக்க, கண்டிப்பா இருக்க! அதான் நான் வேண்டிக்கிட்ட மாதிரியே இந்த வேலையை வாங்கிக் கொடுத்துட்ட. எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். மனதில் தோன்றும் உணர்வை அப்படியே எழுத்துக்களாகவும், ஓவியமாகவும் வடிவமைப்பது. அது எனக்குக் கிடைத்திருக்கிறது. நாம் கண்களால் காணும் காட்சிகளுக்கும், கனவில் தோன்றும் காட்சிகளுக்கும், உயிர் கொடுத்து அதை உருவாக்குவது, எப்படிப்பட்ட சந்தோஷம்’ என்று சந்தோஷத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
காத்திருப்பு பகுதியில் அமர்ந்து பற்களை, ‘ஈஈ’ என்று காட்டியபடி முகம் முழுக்க சந்தோஷத்தோடு இருந்தவனைப் பார்த்தவர்கள் எல்லாரும், தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அன்றாட பணிகளைக் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு பணியாள், “மிஸ்டர் அஜய், மேம் உங்களை உள்ளே கூப்பிடுறாங்க” என்று அழைத்தான்.
அஜய் தன் முப்பத்து இரண்டு பற்களையும் காட்டியபடி உள்ளே சென்றான். உள்ளே செல்லும் வரை ஈஈ என்று இளித்துக்கொண்டு இருந்தவன், அங்கிருந்த நபரைப் பார்த்து அதிர்ந்து போனான்.
அஜயைப் பார்த்தவளோ, “வாங்க மிஸ்டர் அஜய், உட்காருங்க” என இனிமையான குரலில் அவனை அழைத்தாள்.
அவனோ மனதில் துள்ளிக் குதித்துக் கொண்டு, வெளியில் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அப்பெண் முன்பு அமர்ந்தான்.
“இந்தாங்க அஜய், உங்க அப்பாய்ன்மெண்ட் ஆர்டர். இதில் மற்ற டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு. நீங்க படித்துப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்க ஒர்க் ஷெட்யூல் எப்போ என்னன்னு எல்லா டீடைல்ஸும் இந்த கவர் உள்ளே இருக்கு. அப்புறம் உங்களுக்கு ஏதாவது சந்தேகமென்றால் தராளாமா என்கிட்ட வந்து கேட்கலாம். இப்போ உங்க கேபினுக்கு போகலாம்” என்று கூறிவிட்டுத் தன் பணியை ஆரம்பித்தாள்.
அஜய், கீ கொடுத்த பொம்மை போன்று அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு, தலையை தலையை ஆட்டிவிட்டு எழுந்து வெளியே சென்று பெருமூச்சு ஒன்றை விட்டான்.
ஏற்கனவே மிகுந்த சந்தோஷத்தில் இருந்தவனுக்கு, இப்போது அவன் ரசித்த பெண்ணைப் பார்த்ததும் மிகுந்த குதூகலமாகி விட்டது. அது மட்டுமின்றி, இனி அவளோடு தான் தானும் வேலை செய்ய போகிறோம் என்று நினைத்து எல்லையில்லா ஆனந்தத்திற்குச் சென்றான். பின் தன்னுடைய டேபிள் எதுவென்று தேடிக் கொண்டிருக்க, பியூன் அவனுக்கு உதவி செய்தான்.
இங்கே அஜயைப் பார்த்தவளின் மனது படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. இதுவரை இப்படி ஓர் உணர்வை அவள் உணர்ந்ததே இல்லை.
‘கண்டிப்பா இவனுக்கு நான் வேலை பார்க்கும் ஆஃபிசில் வேலை கிடைக்காது என்று நினைத்தேனே. ஆனால் இப்போ வேலையும் கிடைத்து என் டீம்லயும் வந்து சேர்ந்து இருக்கான். அன்னைக்கே வச்ச கண்ணை எடுக்காம பார்த்துட்டு இருந்தான். இப்போ ஒரே ஆஃபிஸ், அதுவும் ஒரே டீம் சொல்லவே வேண்டாம்’ என்று அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘இருந்தாலும் இதுவும் நல்லா தான் இருக்கு’ என்ற எண்ணமும் தோன்றியது அவளுக்கு. தலையை உலுக்கி அவனது நினைவில் இருந்து வெளிவந்து பாதியில் நிறுத்திய வேலையைச் செய்யத் தொடங்கினாள்.
அஜய் தன் கேபினுக்குச் சென்று அமர்ந்து, அருகில் இருப்பவர்களிடத்தில் சின்னப் புன்னகையை உதிர்த்து விட்டு, அவள் கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தான்.
“ப்பா… என்னா கையெழுத்துடா. முத்து முத்தா இருக்கு!” என்று வாய் விட்டுக் கூறினான்.
அருகிலிருந்தவனோ, “ஹலோ அது டைப்பிங் மெசின்ல அடிச்சது” என்று அவனை வாரினான்.
அஜய் அவனைத் திரும்பிப் பார்த்து பல்லைக் காட்டி விட்டு, “அவ்வளவு சத்தமாவா கேட்குது நம்ம மைண்ட் வாய்ஸ்” என்று அவனுக்குள்ளே கேட்டான்.
அதற்கு அவனோ, “இப்போதும் கேட்குது தான்பா. மைண்ட்வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சம் சத்தமா பேசிட்டு இருக்கீங்க” என்று சிரித்தபடி கூறினான்.
“அச்சோ சாரி சார், நான் கொஞ்சம் ஆர்வக்கோளாறு” எனத் தலையைச் சொறிந்தபடி கூறினான்.
“சார் எல்லாம் வேண்டாம், நான் மகி” எனத் தன்னை அறிமுகம் செய்தான்.
“நான் அஜய்” என இவனும் கையை குலுக்கினான். மகியோடு சேர்ந்து அங்கே வேலை செய்யும் பதினைந்து பேரும் அஜய்யை திரும்பிப் பார்த்தனர்.
அஜய், ‘என்ன ஆஃபிஸ் மொத்தமும் நம்மளை ஒரு மாதிரி பார்க்குது. நம்ம ஏதாவது தப்பா சொல்லிட்டோமோ? நம்ம பெயரைத் தானே கூறினோம்?’ என்று யோசித்தான்.
“மகி, நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா? ஆஃபிஸ்ல இருக்கிற எல்லாரும் என்னையே பார்க்கிறாங்க?” என சந்தேகமாகக் கேட்டான்.
“அதுவா, அது வந்து…” எனச் சொல்லப் போக,
அதற்குள் அடுத்த சீட்டில் இருந்தவள் எழுந்து, “அதெல்லாம் ஒன்னுமில்லை அஜய். நீங்க புதுசுல்ல அதான் யாருடா அதுனு பார்த்தாங்க” எனச் சொன்னாள்.
அவள் அப்படிச் சொன்னதும் மகி திரும்பி அவளைப் பார்த்து கண்களால் சைகை காட்டி, “ஏன்டி பொய் சொன்ன?” என்று கேட்க,
அவள், “சும்மாஸ” என்று கூறிவிட்டு, அஜயை நோக்கித் திரும்பினாள்.
“நான் நிஷா” என்று தன்னை அஜயிடம் அறிமுகம் செய்து கொண்டாள்.
மகி, ‘ஏதாவது பண்ணிக்கிட்டு போகட்டும்’ என்று நினைத்து தன் வேலையைச் செய்யத் தொடங்கினான்.
அஜயால் நிஷா சொல்வதை நம்ப முடியவில்லை என்றாலும், இப்போதைக்கு வேறு வழியும் இல்லை என அதை அப்படியே விட்டு விட்டான். பின் தன் முன் இருந்த பேப்பர், பென்சிலை எடுத்து அவனுக்குக் கொடுத்த வேலையைச் செய்ய ஆரம்பித்தான்.
“ஹலோ மேடம், உள்ளே வரலாமா?” என்று கேட்டுக் கொண்டு டோர் முனையில் நின்று இருந்த ஜெயந்தியைப் பார்த்த அவள், “உதைக்கப் போறேன் உன்னை. என்னடி புதுசா அனுமதி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க?” என்று தன் தோழியைப் பார்த்துக் கடிந்து கொண்டாள்.
“ஆமா மேடம், இனிமேல் நீங்க கொஞ்சம் பிஸியாகிடுவீங்க. அதான் இப்பவே எல்லாத்துக்கும் பழகிக்கலாம்னு…” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தாள்.
அவள் ஜெயந்தியின் கையைப் பிடித்துக் கிள்ள, அந்த வலியில் ஜெயந்தி கத்தினாள். அந்நேரம் பார்த்து அஜய் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும் ஜெயந்தி, அவளுக்கு மட்டும் புரியும்படி சிரித்து வைக்க, அவளோ கண்களால் தன் தோழியை மிரட்டிக் கொண்டு இருந்தாள்.
அஜய் நேராக உள்ளே வந்தவன், அவளது கண்களைப் பார்த்து மெய் மறந்து நின்றான். அவள் நான்கு, ஐந்து முறை அஜயைக் கூப்பிட்டும் அவனிடத்தில் அசைவின்றி இருப்பதைப் பார்த்த ஜெயந்தி, அஜய்யின் அருகில் சென்று அவனைக் கிள்ளினாள்.
அந்த வலியில் தன் சுயவுணர்வுக்கு வந்தவன் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிற்க, இதைப் பார்த்த இரு பெண்களுக்கும் சிரிப்பு தான் வந்தது. பின் அவன் வந்த விசயம் என்னவென்று விசாரித்து சூழ்நிலையை மாற்ற நினைத்தாள்.
“சொல்லுங்க அஜய், என்னாச்சு ஏதாவது சந்தேகமா?” எனக் கேட்டாள்.
அவனோ, “அதெல்லாம் இல்லை மேடம், நீங்க சொன்ன கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டேன்” என்று சொல்லி தான் கொண்டு வந்ததை அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கிப் பார்த்தவள், அதன் அழகை தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்தாள். அப்படியே அச்சு அசலாக உண்மையான சித்திரம் போன்ற உணர்வு தோன்றியது.
“பிரமாதமா வரைந்து இருக்கீங்க அஜய்” என அவள் பாராட்ட, அதில் இன்னும் சந்தோஷம் அடைந்தான்.
ஆர்வத்தில் சட்டென அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்று உணர்ச்சி மிகுதியில் கூற,
அவளுக்கோ அவன் தொடுதல் உடல் முழுவதும் சிலிர்த்தது. முகம் முழுக்க சிவந்து போனது. சட்டென அஜய்யின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவிக் கொண்டு, “நீங்க போகலாம்” என்று அவனை வெளியேறச் சொன்னாள்.
அஜய், “மன்னிச்சிடுங்க, ஏதோ ஒரு ஆர்வத்தில…” எனச் சொல்லிவிட்டு சங்கடத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
இதுவரை அமைதியாக அங்கே நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஜெயந்தி, “அடியேஸ இங்க என்னடி நடக்குது? பார்த்த இரண்டாவது நாளே கையைப் பிடிக்கிறான். இதெல்லாம் எனக்கு என்னவோ சரியா படல” என்று கூறினாள்.
“ஜெய், அவன் ஏதோ ஆர்வத்தில கையை பிடிச்சான்டி. வேற ஒன்னும் இல்லை. நீ கண்டதை போட்டு குழப்பிக்காதடி.”
“யாரு, நானா கண்டதை போட்டு குழப்பிக்கிறேன். இல்லை அவனா? என்னவோ அவனுக்கு நம்ம ஆஃபிஸ்ல வேலை கிடைக்காதுனு சொன்ன. ஆனா இன்னைக்கு அவனுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்ததே நீ தான். அது மட்டுமா, இப்போ உன் டீம்ல வேற சேர்ந்து இருக்கான்.
வேலைக்கு சேர்ந்த அன்னைக்கே நீ சும்மா அவனை என்கரேஜ் பண்ணனு நினைச்சு அவனை பாரட்டின. ஆனா அவனோ என்னவோ ரொம்ப நாளா உன் கூட பேசி பழகின மாதிரி டக்குனு உன் கையைப் பிடிக்கிறான்.
இதெல்லாம் எனக்கு என்னவோ சரியா படல. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். சரி கிளம்பு நேரம் ஆகுது வீட்டுக்குப் போகலாம். இல்லைனா அன்னைக்கு மாதிரியே மழை பிடிச்சிட போகுது” என்று தன் மீது உள்ள அக்கறையில் கூறியவளைக் கண்டு நெகிழ்ந்தாள்.
“ஜெய், நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதடி. எல்லாமே நல்லதாகவே நடக்கும். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு வரேன்” எனக் கூறிவிட்டு மனதில் குழப்பத்துடன் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அவளின் குழம்பிய மனம் தெளிவடையுமா? காத்திருந்து பார்ப்போம்.
