காதல் பூக்கள் – 7
மறுநாள் அலுவலகத்திற்குள் நுழைந்தவனைப் பார்த்ததும் மகி, “குட் மார்னிங் அஜய்” என்றான்.
“வெரி குட் மார்னிங் மகி, என்ன மகி இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா வந்துட்ட போல?”
“ஆமாப்பா, ஒரு முக்கியமான வேலை. பத்து மணிக்கெல்லாம் மேடம் டேபிளில் இந்த பேப்பர் இருக்கணும். அதான் முடிக்க வந்துட்டேன்.”
“ஓ சூப்பர் மகி, ஆமா மகி, என்ன மாதிரியான கதை எழுத்திட்டு இருக்க. எங்க காட்டு நான் படிச்சிட்டு சொல்றேன்.”
“காமிக்ஸ்பா, திரில்லர் மாதிரி ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு முடிஞ்சிடும். நாளைக்கு பிரிண்ட் ஆகி ஷாப்க்கு எல்லாம் வந்திடும். சோ, அப்போ வாங்கி படிச்சுகோ” என்று அஜயை வெறுப்பேற்ற கூறினான் மகி.
அஜய் அதன் பிறகு அமைதியாகிவிட, அதைப் பார்த்த மகிக்கு பாவமாக தோன்றியது. பின் தான் எழுதிக் கொண்டிருந்த பேப்பர்களில் நான்கு பக்கத்தை எடுத்து நீட்டினான்.
அஜயும் சிரித்துக் கொண்டே அதை வாங்கி படித்துவிட்டு, “ப்பா! செம பயங்கரமா இருக்கு மகி. சூப்பரா ஹிட்டாகும்” என்று பாராட்டினான்.
“மகி, உனக்கு என் உதவி ஏதாவது தேவையா?” என்று கேட்டான் அஜய்.
மகியோ, “தேவை தான் அஜய்” எனக் கூற,
“சொல்லு மகி, என்ன எழுதி தரணும்? எப்படி வேணும்?” என்று கேட்டான்.
மகி எழுதிக் கொண்டே, “எழுதுவதற்கு இல்லை அஜய், இந்த காமிக்ஸ்க்கு கவர் படம் நீ தான் வரைந்து தர போற. மேடம் நேத்தே உன்கிட்ட சொல்லி இருப்பாங்களே.”
“அட ஆமா மகி, நேத்து சொன்னாங்க நானும் வரைந்து கொடுத்துட்டேன். அதான் என் மனசுக்குள்ள தோனுச்சா இந்த காமிக்ஸ் எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்துச்சேனு. இப்போ புரிஞ்சுடுச்சு, உன்னுடைய காமிக்ஸ்க்கு தான் நான் ஓவியம் வரைந்து கொடுத்தேன்” என்று கூறினான்.
“செம! வந்ததும் வேலையெல்லாம் சூப்பரா செய்யுறீங்க போல” என்று இவர்கள் இருவரையும் பார்த்து பேசியபடி நடந்து வந்தாள் ஜெயந்தி.
ஜெயந்தியைப் பார்த்ததும் இருவரும் எழுந்து நின்று, “குட் மார்னிங் மேடம்” என்று கூறினார்.
ஜெயந்தியின் பின்னால் நடந்து வந்தவளைப் பார்த்த இருவரும் சின்ன புன்னகையோடு, “குட் மார்னிங்” சொல்ல,
அஜய் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். ஜெயந்தி தன் கேபினுக்குச் சென்று விட்டாள்.
அவள் மகியின் முன் நின்று, தான் முடிக்க சொன்ன வேலையை முடித்து விட்டானா என்று அவன் மேசையிலிருந்த காகிதங்களை எடுத்துச் சரி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்ததும், முறைத்து விட்டு மகியைத் தன் கேபினுக்கு வரச் சொல்லிவிட்டு, அவள் சென்று விட்டாள்.
மகி அவசர அவசரமாக பேப்பர்களை அடுக்கிக் கொண்டு இருந்தான். அவனிடத்தில், “மகி, இவங்க நேம் என்ன?” என்று குரலில் ஆசையைத் தேக்கிக் கேட்டான்.
மகியோ, “வந்து சொல்கிறேன் அஜய்” என்று சொல்ல,
“ஏன் மகி, ஒரு பேரை சொல்றதுக்குள்ள என்ன டைம் ஆகிட போகுது? நீ சொல்லிட்டு போ” என அவன் கரத்தை பிடித்துக் கொண்டான்.
மகி பதற்றத்தில், “அவங்க நேம் ஜெயந்தி” என்று கூறினான்.
‘ஜெயந்தியா! இது அந்த சிடுமூஞ்சி பேராச்சே. ரெண்டு பேருக்கும் எப்படி ஒரே பேர் வைப்பாங்க?’ என யோசித்தவன், மீண்டும் மகியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ஏய் மகி, நான் முன்னாடி போன மேடம் பேர் கேட்கல. இப்போ உன்னை கேபினுக்கு வர சொன்னாங்கல்ல, அவங்க நேம் கேட்டேன்.”
“டேய், இப்போ என்னடா வேணும் உனக்கு? நானே பதட்டத்தில இருக்கேன். இப்போ வந்து பேரை சொல்லு, நேமை சொல்லுன்னு உசுர வாங்குற. விடுடா என் கையை, எதுவா இருந்தாலும் நான் போயிட்டு வந்து சொல்றேன்” என்று அவனிடத்தில் கத்திவிட்டுச் சென்று விட்டான்.
“அட முட்டா பயலே, இவ்வளவு நீளமா பேசுனதுக்கு, நீ அவங்க நேம் என்னன்னு சொல்லிட்டு போய் இருக்கலாம். ஒரே வார்த்தைல முடிஞ்சி இருக்கும்” என்று மகியின் முதுகைப் பார்த்துக் கூறினான்.
ஆனால் மகி அவன் கூறுவது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், வேலையே கண்ணும் கருத்துமாக இருந்தான்.
ஜெயந்தி தன் கேபினுக்குள் நுழைந்ததும், “இந்த அஜய்யோட பார்வையே சரியில்லை. எப்போ பாரு பல்லைக் காட்டிக்கிட்டே இருக்கான். ஆளும் சரியில்லை, முழியும் சரியில்லை. இவனை எப்படியாவது வேலையை விட்டு துரத்தணும், ஆனால் எப்படிஸ?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அஜயை வேலையிலிருந்து துரத்திவிட யோசனை செய்து கொண்டு இருந்தவள், பியூனிடம் அஜயைத் தன் கேபினுக்கு வரச் சொல்லுமாறு கூறி அனுப்பினாள்.
ஜெயந்தியின் அழைப்பு வரும் வரை சிரித்துக் கொண்டு இருந்தவன், பியூன் வந்து, “ஜெயந்தி மேடம் உங்களை வர சொன்னாங்க” என்று சொன்னதும் அதுவரை அவனிடமிருந்த சிரிப்பு காணாமல் போனது.
இதைக் கவனித்த நிஷா, “என்னாச்சு அஜய், ஜெயந்தி மேடம் கூப்பிட்டதும், உன் சிரிப்பு போய் பயம் முகத்தில் தெரியுது?” என்று கேட்டாள்.
அஜய், “அதெல்லாம் எதுவுமில்லை நிஷா” எனக் கூறிவிட்டு ஜெயந்தியின் கேபினுக்கு சென்று, அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
“வாங்க சார்” என்று நக்கலாக அவனை உள்ளே வரச் சொன்னாள்.
அவள் அழைத்த தோரணையில், அவனுக்குத் தன்னை கடுப்பேற்றத் தான் அழைத்து இருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கேபினுக்குள் சென்றதும், “குட் மார்னிங் மேடம்” என்று கூறினான்.
“குட் மார்னிங் மிஸ்டர் அஜய், உக்காருங்க” என்று கூறி அவனை அமரச் சொன்னாள்.
அஜய் அமர்ந்ததும், “அப்புறம் வேலையெல்லாம் எப்படி போகுது? வந்த இரண்டாவது நாளே கதை பேசிக்கிட்டு இருக்கீங்க சூப்பர். வேலை செய்றீங்களா இல்லையா? சும்மா ஓ பி அடிச்சுட்டு, பேசிட்டு போகலாமென்று வந்தீங்களா?” என்று வேண்டுமென்றே அவனின் கோபத்தைச் சீண்டி பார்த்தாள் ஜெயந்தி.
“அப்படியெல்லாம் இல்ல மேடம். மகியுடைய காமிக்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு, அதான் அதைப் பத்தி பேசிட்டு இருந்தோம்.”
“அதைப் பத்தி பேச உங்களுக்கு என்ன சார் இருக்கு? ஐ மீன் தகுதி. நீங்க காமிக்ஸுக்கு படம் வரைந்து கொடுக்கிறதோட இருங்க. அதாவது எல்லா விசயத்திலும் உங்க லிமிட்டோட இருங்க. அப்படி இருந்தா உங்க வேலைக்கும் நல்லது. உங்களுக்கும் நல்லது” என்று மறைமுகமாக அவனை எச்சரித்தாள்.
அஜயை சென்று வேலையைக் கவனிக்கச் சொல்லிவிட்டு தன் சீட்டில் அமர்ந்தாள். ஜெயந்தியின் நினைவுகள் அனைத்தும் தன் தோழியைச் சுற்றியே இருந்தது.
‘இந்த உலகம் பொல்லாததுடி. அதுவும் அஜய் மாதிரி ஆளுங்களை நம்பவே கூடாது. ஏனோ அவனை அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் பார்த்ததிலிருந்தே எனக்கு அவன் மேல நம்பிக்கையே வர மாட்டேங்குது. அவனும் அவன் பார்வையும்ஸ ஆளே சரியில்லை. நீ அவனோட வலையில் விழாமல் இருக்கணும்னு தான் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்!’ என்று தன் தோழியின் வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டினாள்.
ஆனால் கடவுளின் எண்ணமோ வேறு மாதிரி அல்லவா இருக்கிறது.
***
தன் பணிகளை முடித்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்த அஜயின் முகம் வாட்டமாக இருந்தது.
தன் தமையனைப் பார்த்த சரவணன், ‘அண்ணனின் முகம் சோகமா இருக்கிற மாதிரி தெரியுதே. என்ன விசயம் என கேட்போம்’ என்று யோசித்தபடியே அவன் பின்னால் சென்று, அஜய்யின் அறைக்குள் நுழைந்தான்.
“டேய் சரவணா, வெளியே போ. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு அப்புறமா சாப்பிட வரேன். இப்போ எனக்கு பசியில்லை” என, சரவணன் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே அஜய் பதில் அளித்தான்.
“அஜய், நான் இன்னும் பேச ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள நீயாவே ஏதோ ஒன்னு புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்ற. என்னாச்சுடா ஏன் சோகமா இருக்க?”
“எனக்கு என்ன, நான் நல்லா தான் இருக்கேன்.”
“ஓ! அப்படியா, அப்போ இதுக்கு பேரு என்ன?” என்று அவனின் முகத்தைக் கண்ணாடியில் காண்பித்து கேள்வி கேட்டான்.
அஜய்யோ, “ஒன்னுமில்லடா, நிறைய வேலை அதான்” எனப் பொய் கூறினான்.
ஜெயந்தி காலையில் பேசியதையே நினைத்துக் கொண்டு இருந்தவனால் தன் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. அந்த நினைவில் சரியாக வேலை செய்ய முடியாமல், அனைத்தையும் தப்பு தப்பாக வரைந்து கொடுத்து விட்டான்.
அதைப் பார்த்து அவள் அவனைக் கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்து விட்டாள். அதன் தாக்கமே இப்போது இவனின் முக வாட்டத்திற்குக் காரணம். ஆனால் அதைப் பற்றி எப்படிக் கூறுவான் தன் தம்பியிடம்.
“அஜய், நான் ஒன்னு கேக்கட்டா?”
“ம்”
“உனக்கு உண்மையாவே இந்த வேலை பிடிச்சு இருக்கா?” என்று சரவணன், தன் தமையன் அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செய்து கொண்டு இருக்கிறானோ என்று நினைத்துக் கேட்டான்.
“ச்ச… அதெல்லாம் இல்லைடா, இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குடா. அதுவும் என் திறமைக்கு தகுந்த வேலைடா. எத்தனை பேருக்கு கிடைக்கும், மனதில் ஆசைப்பட்ட வேலை. அது எனக்கு அமைந்து இருக்கிறது. நான் மனசார தான் இந்த வேலையை செய்றேன்” என்று அஜய் தனக்குப் பிடித்த வேலையைப் பற்றி தெளிவாக கூறினான்.
“சரவணா, நீ யோசிக்கிற மாதிரி எதுவும் இல்லை. உண்மையாவே நிறைய வேலை, அதான் சோர்வா இருக்கேன். நீ கண்டதை போட்டு குழப்பிக்காத, போஸ நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று தன் தம்பியை அனுப்பி வைத்தான்.
சரவணன் சென்றதும் மெத்தையில் படுத்தவனுக்கு, நினைவு முழுதும் அவளின் முகமே வந்து வந்து போனது.
‘என்னையே அறியாமல் என் மனதிற்குள் குடி புகுந்தவளே, என்று உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தப் போகிறேனோ? அந்நாளிற்காகக் காத்திருக்கிறேன்!’ என்று மனதில் வரிகள் ஓடியது.
***
நாட்களும் அதன் போக்கில் ஓட தொடங்கியது.
இதோ, அஜய் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து இன்றோடு ஐந்து மாதங்கள் ஓடிவிட்டது. இந்நாள் வரை அவளின் உண்மையான பெயரை மட்டும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆள் ஆளுக்கு ஒரு பெயர் கூறினர்.
அவ்வளவு ஏன், இந்த அலுவகத்தில் பணிபுரியும் பாதிப் பேரின் பெயர்களே மாற்றித் தான் உள்ளது.
காமிக்ஸில் எழுதி முடித்துவிட்டு கடைசியில் எழுதியவரின் பெயராக, அவர்களின் உண்மையான பெயர்களைப் போடாமல் புதிய புதிய பெயர்களாக வைக்க, முதலில் குழம்பித் தான் போனான். பிறகு போகப் போக ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டான்.
அன்று தன் பெயரைக் கூறும் போது அனைவரும் திரும்பிப் பார்த்ததற்கான காரணத்தை அப்போது தான் உணர்ந்தான். அன்றிலிருந்து அஜய் தன்னுடைய ஓவியத்தில் அவனின் உண்மையான பெயர் மட்டுமே பதிவு செய்வதாக அனுமதி கேட்க, அவளோ சரியென்று ஒப்புக் கொண்டாள். பின் இருவரும் வேலையின் காரணமாக நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
அன்று ஒரு நாள்…
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வரை அமைதியாக வந்த தன் தோழியின் கோபத்தை, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு வந்தாள் அவள். வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்திய வேகத்திலேயே, ஜெயந்தியின் கோபம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
“ஜெய், நான் சொல்றதை ஒரு நிமிஷம் நிதானமா கேளுடி. அங்கே, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல” வீட்டில் நுழைந்தவுடன் ஜெயந்தியை சமாதானம் செய்ய நினைத்துப் பேச ஆரம்பித்தாள் அவள்.
ஜெயந்தியோ ஆத்திரத்துடன் தன் தலையில் அணிந்திருந்த தலைக் கவசத்தைக் கழற்றி தூக்கி எறிந்து விட்டு, “ஹலோ மேடம், நான் நிதானமா தான் இருக்கிறேன். நீங்க தான் நிதானத்தை இழந்துட்டீங்க. என்ன சொன்ன, என்ன சொன்ன? நான் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலையா? அப்போ நான் நினைக்காத மாதிரி வேற ஏதாவது நடந்து இருக்கா?” என்று தன் கோபத்தில் தன் தோழியின் மனதைப் புண்படுத்தினாள்.
“ஏய் ஜெய், ஏன்டி இப்படியெல்லாம் பேசுற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி. இப்படி தப்பா நினச்சு பேசாதடி. ப்ளீஸ்டி நான் சொல்றதை நம்பு.”
“அம்மா தாயேஸ ஆளை விடு, இனிமே நீ எதுனாலும் செஞ்சுட்டு போ, உன் லைஃப்ல நான் தலையிட மாட்டேன்” என்று கடுங்கோபத்தில் தன் இரு கையையும் கூப்பி சொல்லிவிட்டு, மீண்டும் தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டாள் ஜெயந்தி.
தன் தோழி போவதையே பார்த்துக் கொண்டு கண்ணீரோடு அப்படியே சோபாவில் அமர்ந்தவளுக்கு, தன் மீதே கோபம் கோபமாக வந்தது.
“என்ன காரியம்டி பண்ணி இருக்க நீ? அஜய் தான் அவன் மனசில் இருப்பதை எழுத்துகள் மூலம் சொன்னா, உனக்கு எங்கே போச்சு அறிவு? உடனே அவனைக் கூப்பிட்டு கண்டித்து இருக்க வேண்டும். அதை விட்டுட்டு, அவனை நேரில் பார்த்து சரினு சொல்லி அவனோட காதலுக்கு சம்மதம் சொல்லிருக்க.
ச்செ… உன் மனசும் உன் மூளையும் மங்கி போயிடுச்சா? ஒருத்தன் காதல் சொன்னதும் எப்படி அவன் மீது மயங்கிப் போன?” என்று கண்ணாடியைப் பார்த்து தன்னை தானே கேட்டுக் கொண்டவள், கோபத்துடன் கண்ணாடியை உடைத்தாள்.
வெளியே போன ஜெயந்திக்கோ கோபம் அதிகமாகிக் கொண்டே போனதே தவிர, அவளால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
‘ச்செ, எப்படி பழகுன கொஞ்ச நாள்லயே காதல் வந்துவிடுகிறது இவங்களுக்கு? அஜயை பத்தி என்ன தெரியும் இவளுக்கு? அவன் வேலைக்கு சேர்ந்தே ஐந்து மாசம் தான் ஆகிருக்குது. அதுக்குள்ள அவன் லவ் சொன்னதும் இவளும் எதைப் பத்தியும் யோசிக்காம, கவலைப்படாம, என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம அவனோட காதலுக்கு சரினு சொல்லிட்டா.
எப்படி இப்படியெல்லாம் சட்டு சட்டுன்னு முடிவு எடுக்குறாங்க? அப்போ இத்தனை வருஷமா அவ கூடவே இருந்த என்னை பத்தியெல்லாம் அவள் யோசிக்கவே இல்லையா? அவளுக்காகத் தானே நான் என் பெற்றோரைத் தள்ளி வச்சு இருக்கிறேன். ஆனால் அவளால எப்படி சுயநலமா முடிவு எடுக்க முடிகிறது? அப்போ இந்த சுயநலத்திற்கு பெயர் தான் காதலா?’ என்று கடுங்கோபத்துடன் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஜெயந்தி.
