காதல் பூக்கள் – 9
மறுநாள் அவளுக்கு வாழ்க்கையே இருண்டு போனது போல் ஆனது. பித்துப் பிடித்தவள் போல் சோஃபாவிலே விடிய விடிய அமர்ந்து இருந்தாள். ஜெயந்தி போனதையே நினைத்து அழுதுகொண்டே இருந்தவள், விடிந்தது கூட தெரியாமல் வீட்டினுள்ளே அடைந்து கிடந்தாள்.
காலை பத்து முப்பது மணி ஆகியும் அலுவலகத்துக்கு அவள் வராமல் இருக்க, அஜய்க்கு இருப்பு கொள்ளவில்லை. என்னாச்சோ ஏதாச்சோ என்ற அச்சம் மட்டும் வந்து வந்து போனது.
ஆஃபிசில் அரசல் புரசலாக ஜெயந்தி இரவோடு இரவாக வெளியூர் சென்றதும், லாங் லீவ் கேட்டு வாங்கியதும், அஜய்யின் காதில் விழுந்ததில் மேலும் அவனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது.
‘நேற்று தானே அவளுடைய காதலையே சொன்னாள். ஜெயந்தி இரவோடு இரவாக சென்றிருக்கிறாள் என்றால் அப்படி என்ன நடந்து இருக்கும்? ஒருவேளை எங்க காதலால் தான் ஜெயந்தி இந்த முடிவு எடுத்து இருப்பாளோ? அப்போ அவளையும் என்கிட்ட இருந்து பிரித்துச் சென்று விட்டாளா? அப்ப எங்க காதல்? இனி அவள் எனக்கு இல்லையா?’ என்று இப்படிப் பல கேள்விகள் அவனின் மனதில் நதி போன்று ஓடிக் கொண்டே இருந்தது.
ஆனால் அதற்குண்டான விடை தான் அவனுக்கு கிடைக்கவில்லை. அப்படி, இப்படி என்று மாலை ஆகிவிட்டது. அரக்கப் பரக்கவென்று அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு, மகியிடம் ஜெயந்தியின் வீட்டு முகவரியைக் கேட்டான்.
“இப்போ அவங்க வீட்டு அட்ரஸ் உனக்கு எதுக்கு அஜய்?”
‘என்னவென்று சொல்லுவேன்! எப்படிச் சொல்லுவேன்? என் காதலைத் தொலைத்துவிட்டேனா? இல்லையா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்’ என அஜய் மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியில்,
“ஏய் ப்ளீஸ் மகி, எப்படியாவது அட்ரஸ் எடுத்துக் கொடு மகி. ஏன் எதுக்குனு எல்லாம் கேட்காத. அவங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சுனு நான் பார்க்க வேண்டும். கேள்வி கேட்காமல் கொடு மகி. நான் அப்புறமா சொல்றேன்” என்று அவன் மகியிடம் கெஞ்சிக் கேட்டான்.
அதற்கு அவனோ, “எனக்கு எதுவும் சரியா படல அஜய். ஜெயந்தி ஊருக்குப் போனது, மேடம் ஆஃபிஸ் வராமல் இருப்பது, இப்போ நீ அவங்க அட்ரஸ் கேட்பதுனு எதுவுமே நல்லதா எனக்கு தெரியல. என்னவோ தப்பா இருக்கு அஜய்” என்று கூறினான்.
“என்ன தப்பா இருக்கு?” எனக் கண்கள் இடுங்க கேட்டான்.
“ஏதோ ஒன்னு உங்க மூனு பேருக்குள்ளயும் ஓடிக்கிட்டு இருக்கு. அது தான் இப்போ பெரிய பிரச்சனையா வந்து இருக்குமோனு தோனுது.” என்று மகி சரியாக பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து கேட்டான்.
அஜய் தான் அவன் கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான். பின், “இப்போ உன்னால அட்ரஸ் தர முடியுமா? முடியாதா?” என்று சற்று கோபத்துடன் கேட்டான்.
மகியும் வேறு வழியின்றி ஜெயந்தியின் வீட்டு முகவரியை கொடுத்தான். அதை குறித்துக் கொண்டு, அங்கே இருந்து வேக வேகமாக அவள் இருக்கும் இடத்தை நோக்கிப் பறந்தான்.
மகி கொடுத்த வீட்டு விலாசம் முன், தன் பைக்கை நிறுத்தி விட்டு, சுற்றி முற்றிப் பார்த்து மெல்ல அந்த வீட்டின் முன் நின்று, “ஹலோ மேடம்ஸ! ஜெயந்தி மேடம் இருக்கீங்களா? ஹலோ யாராவது இருந்தால் வந்து கதவை திறங்க” என்று சத்தம் போட்டுக் கொண்டே கதவைத் தட்டினான்.
கதவு தானாகத் திறந்தது. கதவு தானாக திறக்கவும், அஜய்க்கு பக்கென்று பயம் தொற்றிக் கொண்டது. “ச்சீ… இவ்ளோ நேரமா திறந்திருந்த கதவைத் தான் தட்டிக்கிட்டு இருந்தேனா?” என்று தன் பின் தலையில் தட்டிக் கொண்டான்.
மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தான். ஆனால் யாருமே இல்லாதது போல் தோன்ற, “அப்போ அவளும் என்னை விட்டு போய்விட்டாளா?” எனத் தனக்குள்ளே வேதனையுடன் கேட்டுக் கொண்டான்.
சோர்வுடன் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பைக்கிடம் சென்றவனின் மனதில், ‘ஒருமுறை அவள் வாழ்ந்த வீட்டைச் சுற்றி பார்த்துட்டு வந்திடலாமா? அதான் யாருமே இல்லையே’ என்று யோசித்தவன், மீண்டும் அந்த வீட்டை நோக்கி நடந்தான்.
உள்ளே சென்றதும், சுற்றி முற்றிப் பார்க்க மிக அழகாக இருந்தது. அந்த வீட்டைப் பார்க்கும் பொழுது அவனையும் மீறி ரசிக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வந்தவன், நடுவில் சோஃபா இருந்ததைப் பார்க்கத் தவறி, அதில் இடித்துக் கொண்டவன் வலியில், “அம்மாஸ” எனக் கத்தினான்.
வலியில் தன் முழங்காலைத் தேய்த்துக் கொண்டே நிமிர்ந்தவன் விழியில் விழுந்தாள் அவனது தேவதை. அங்கே சோஃபாவில் எந்த அசைவுமின்றி படுத்துக்கிடப்பவளைப் பார்த்தவன் பதறினான்.
தன் கழுத்தில் மாட்டி இருந்த பேக்கை கழற்றி வைத்துவிட்டு, அவள் அருகில் சென்று அவளின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயற்சித்தான். ஆனால் அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லாமல் இருக்க, அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து எடுத்துக் கொண்டு வந்து அவள் முகத்தில் தெளித்தான். அப்போதும் எந்த ஒரு அசைவுமின்றி இருப்பவளைப் பார்த்தவனுக்கு, மூச்சை அடைத்துக் கொண்டு பயம் தொற்றிக் கொண்டது.
அப்படியே கீழே அமர்ந்து தலையில் கை வைத்துக் கொண்டு, ‘ஒருவேளை இவளைக் கொலை செய்து விட்டுத் தான் ஜெயந்தி தப்பித்து போய்விட்டாளோ?’ என்று அவன் மூளை குறுக்குத் தனமாய் யோசித்தது.
‘நான் தான் தேவையில்லாமல் காதல் கத்திரிக்காய் என்று நினைத்து வருத்தப்பட்டு இவளைத் தேடி வந்தேனா? இப்போ கொலை கேசில் நான் மாட்டிக் கொள்வேனோ? அப்போ என்னை ஜெயிலில் போட்டு விடுவாங்களா? என் கைரேகையெல்லாம் வேறு எங்கெங்கு இருக்கிறதோ!’ என்று அவள் பற்றிய கவலைகளை மறந்து யோசித்தான்.
‘நான் ஜெயிலுக்குப் போனா அது நியூஸ் பேப்பர்ல வந்து, என்னால் எங்க குடும்ப மானமே போய்விடுமே! அப்புறம் என் அப்பா, அம்மா என்னை அடித்தே கொன்னுடுவாங்க. என் தம்பி சரவணனுக்கு அரசாங்க வேலை கிடைக்காமல் போய்விடும். என் தங்கச்சி லதாவிற்குக் கல்யாணமே நடக்காதே! ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுடைய வீட்டு பெண்ணை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க?’ என்று ஒரு நிமிடம் சுயநலமாக யோசித்தான்.
பின் தன்னிலைக்கு வந்தவன், தன் தலையில் அடித்துக் கொண்டு, “த்தூ… எப்படி இப்படி சுயநலமா யோசிக்குறேன்? அங்கே அசைவின்றி இருப்பது என்னுடைய காதலி. அவளுக்கு என்ன ஆச்சுன்னு கவலைப்படாமல் என்ன என்னவோ யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று தன்னை தானே திட்டிக் கொண்டான்.
தைரியத்தை வர வைத்துக் கொண்டு மீண்டும் அவள் அருகில் சென்று மூச்சு வருகிறதா என்று, மூக்கிற்கு நேராக விரல் ஒன்றை நீட்டிப் பார்த்தான். எதுவும் அவனுக்கு உணர்வு இல்லை. பின்பு கையில் நாடி துடிப்பு வருகிறதா என்று அவளின் கரத்தை பிடித்து உன்னிப்பாகப் கவனித்தான். மிகவும் மெதுவாக அவளின் நாடிதுடிப்பு உணர்ந்தவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது.
இவள் உயிர் பறவை இன்னும் போகவில்லை, உயிரோடு தான் இருக்கிறாள் என்று பரபரப்பாக, மீண்டும் அருகிலிருந்த தண்ணீரைத் தெளித்துப் பார்த்தான். ஆனால் அவளிடம் இருந்து எந்த அசைவும் வரவில்லை.
“இப்போ என்ன செய்வது, நாடி துடிப்பு இருக்கு, ஆனால் தண்ணீர் தெளித்தால் அசைவின்றி படுத்து கிடக்கிறாள். ஒருவேளை மயக்கமாகி இருப்பாளா? ஆனால் மயங்கி போனாலும் தண்ணீர் தெளித்தால் மயக்கம் தெளிந்து எழுந்துக்கணும், ஆனால் இவள் எழுந்துக்க மாட்டேங்கறாளே, என்ன செய்வது? வீட்டுக்குப் போக வேற டைம் ஆகுது. இவளை இப்படியே விட்டுப் போகவும் மனசு வர மாட்டேங்குது.
வீட்டுக்கு இன்னும் வரலையேன்னு அம்மா எதிர்பார்த்துட்டு இருப்பாங்களே! லேட்டா போனா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாங்க. என்ன பதில் சொல்றது?” என்று புரியாமல் தலையைச் சொறிந்தபடி நின்றுகொண்டு அவளைப் பார்த்தான்.
தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து தான் இன்னும் ஆபீசில் இருப்பதாகவும், வேலை அதிகமாக இருப்பதால் வீட்டிற்கு வரத் தாமதமாகும் என்று பொய் கூறினான். அஜய்யின் அம்மாவும் தன் பிள்ளை தன்னிடம் உண்மையை மட்டும் கூறுவான் என்ற நம்பிக்கையில், சரி என்று ஃபோனை வைத்தார்.
பிறகு வெளியே சென்று தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்தான். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒரு ஆட்டோ கூட அவனுக்குத் தெரியவில்லை. வேறு வழியின்றி தன் பைக்கை எடுத்துக்கொண்டு தெருமுனைக்குச் சென்றவன், ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு மீண்டும் அவள் வீட்டிற்கு வந்தான்.
“அண்ணா இங்கேயே இருங்க, நான் போய் அவங்களைக் கூட்டிட்டு வரேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அவளைத் தன் இரு கரங்களால் தூக்கிக்கொண்டு வெளியே வந்து ஆட்டோவில் உட்கார வைத்து, அவனும் ஏறிக்கொண்டு அவளைத் தன் மடியில் கிடத்தி விட்டு போகச் சொன்னான்.
