காதல் பூக்கள் – 10
மருத்துவமனையில் அவளை சேர்க்க, எமர்ஜென்சி வார்டில் அவளை அழைத்துக் கொண்டு சென்று அரைமணி நேரம் ஆகியும் டாக்டரும் நர்ஸும் வெளியில் வராமல் இருக்க, மேலும் மேலும் அவனுக்கு பயம் அதிகரித்தது.
அவளுக்கு என்னாச்சு என்ற பயத்தை விட, தன் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள் யாராவது தன்னை பார்த்து விடுவார்களோ? என்ற அச்சமே அவன் மனதில் அதிகம் இருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் டாக்டரும் நர்ஸும் வெளியே வந்தனர்.
“டாக்டர் என்னாச்சு அவங்களுக்கு? இப்போ எப்படி இருக்காங்க?” என்று கேட்டான்.
டாக்டர் அஜய்யை பார்த்து, “ஆமா நீங்க யார் சார் அவங்களுக்கு?” என்று கேட்டதும் தடுமாறியவன், ஒரு சில வினாடிக்குப் பிறகு,
“நான் அவங்களோட நண்பன், ஒரே ஆஃபீசில் தான் ஓர்க் பண்றோம். இன்னைக்கு அவங்க ஆஃபீசுக்கு வரலையே, என்னாச்சுனு பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். அங்க போய் பார்த்த போது தான் தெரிஞ்சிது, அவங்க மயக்கத்தில் இருக்காங்கனு. அதான் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தேன்” என்று இவனே தன் மேல் எந்த தவறும் இல்லையென்று டாக்டருக்கு புரிய வைக்க முயற்சிதான்.
டாக்டரோ, “அட போதும் சார், நான் ஒரு கேள்வி தான் கேட்டேன். நீங்க என்னடானா சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்றீங்க” என சொன்னார்.
“அவங்க ரொம்ப டிப்ரஷன்ல இருந்து இருப்பாங்க போல. அதான் ஓவர் மன அழுத்தம் ஏற்பட்டு மயக்கமாகி இருக்காங்க. அது மட்டுமில்லை, அவங்க மயக்கமாகி எப்படியோ எட்டு மணி நேரமாகி இருக்கணும். ரொம்ப வீக்கா இருக்காங்க. இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்தில் கண்ணு முழிச்சிடுவாங்க.
அவங்க கண்ணு முழிச்சதும் ஃபர்ஸ்ட் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க. டேப்லெட் எழுதிக் கொடுக்கிறேன். சாப்பிட்டு முடித்ததும் அந்த டேப்லெட் போட சொல்லுங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். யாரும் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறிவிட்டு டாக்டர் செல்லத் திரும்பினார்.
அஜய், “ஒரு நிமிஷம் டாக்டர்” என்று அழைத்து, “இவ்வளவு சொன்ன நீங்க, எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொல்லாமலே போறீங்க” எனக் கேட்டான்.
“நாளைக்கு மார்னிங் தான் டிஸ்சார்ஜ்” என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
அஜய்க்கு தான் அதிர்ச்சியும், தர்மசங்கடமும் ஆனது. ‘எப்படி இவளைத் தனியாக விட்டு, வீட்டுக்குப் போக முடியும்? நைட் வீட்டுக்கு போகலைன்னா, என்னை வார்த்தையாலே வறுத்தெடுத்துடுவாங்க. இப்போ என்ன பண்ணலாம்?’ என்று மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தாலும், டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தையும், நைட் இருவருக்கும் சாப்பிட டிபனும் வாங்கிக் கொண்டு வந்தான். அவள் இருந்த அறைக்குள் வைத்துவிட்டு, மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.
‘என்ன சொல்லலாம், அன்னைக்கு ஒரு நாள், நைட் ஒர்க்ல அர்ஜென்டான அன்னைக்கு மறுநாள் அனுப்ப வேண்டிய காமிக்ஸுக்குத் தேவையானதை வரைந்து கொடுத்துட்டு, காலையில வீட்டுக்கு வர ஐந்து மணி ஆகிடும்னு சொன்னதுக்கே செம திட்டு. ஆனால் அதையும் மீறி வேலை செஞ்சுட்டு தான் போனேன். அப்ப கூட அவங்க நம்பணும்னா செல்ஃபி எடுத்து அனுப்ப சொன்னாங்க. செல்ஃபி அனுப்புனதுக்கு அப்பறம் தான் நம்பவே செஞ்சாங்க.
ஆனா இப்போவும் அதையே சொன்னா செல்ஃபி எப்படி எடுத்து அனுப்ப முடியும்? இது ஆஸ்பிட்டல் ஆச்சே. தெரிஞ்சிடுமே’ என்று பல விதமாக யோசித்தான்.
முதலில் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து, “வேலை ரொம்ப அதிகமா இருக்குதுமா. அன்னைக்கு மாதிரி விடிந்ததும் தான் வர முடியும் போலமா. மொத்த ஆஃபீசும் ரொம்ப டென்ஷனோட இருக்காங்கம்மா. வேலை இன்னும் சரியா முடிக்கலைனு.”
“சரிப்பா அதுக்கு என்ன இப்போ?” என அவன் தாய் கேட்க,
“அது இல்லம்மா இன்னைக்கும் வர லேட் ஆகும். அவ்வளவு ஏன் காலையில் பத்து மணிக்கு மேல கூட ஆகும் அம்மா” என்று பயத்தோடு திக்கித் திணறி கூறினான்.
அவனுடைய அம்மா என்ன சொல்லித் திட்டுவாரோ என்று பயத்தோடு இருந்தவனுக்கு, அவன் அம்மா கூறிய பதிலைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனான்.
“அதுக்கு என்னப்பா வேலையை முடிச்சிட்டே வா கண்ணு” என்று சொல்லிவிட்டு லைனை கட் செய்தார். இதைக் கேட்டதும் அஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியாகத் தான் இருந்தது. தன்னுடைய அம்மாவா இது என்று யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அவள் மெல்ல கண் விழித்து, மெதுவாக தான் எங்கே இருக்கிறோம் என்று விழிகளைச் சுழற்றிப் பார்த்தாள். அவளின் உடல் அசைவை உணர்ந்தவன் எழுந்து அவளின் அருகில் வந்து, மெதுவாக அவளைப் பிடித்து அமர வைக்க உதவி செய்தான்.
“இப்போ எப்படி இருக்க இதன்யா?” என்று அவன் கேட்டதும், கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது அவளுக்கு.
ஆம்! அவள் பெயர் தான் இதன்யா. மிகவும் இளகிய குணம் உடையவள். இதயத்தில் ஒருவருக்கு இடம் கொடுத்து விட்டால் அவர்களுக்காக தன் உயிரின் துடிப்பையே கொடுப்பவள், அவள் தான் இதன்யா.
அஜய் டாக்டரிடம் சென்று, “அவள் கண்விழித்து விட்டாள்” என்று கூறிவிட்டு, அவரை அழைத்து வந்தான்.
அவரும் இதன்யாவை பரிசோதித்து, “இவங்க இப்போ நல்லா இருக்காங்க. சாப்பிட ஏதாவது கொடுங்க. மார்னிங் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
இதன்யாவோ டாக்டர் போகும்வரை எதுவும் வாய் திறந்து பேசாமல் அமைதியுடன் இருந்தவள், அவர் சென்றதும், “நான் எப்படி இங்க வந்தேன் அஜய்?” என்று கேட்டாள்.
அஜய், “இதன்யா என்னாச்சு உனக்கு? உன்னைப் பார்க்க உங்க வீட்டுக்கு வந்தேன். ஏன் இதன்யா மயங்கிப் போய் இருந்த. எதுக்கு சாப்பிடாம கொள்ளாம இருந்த? உன் ஃப்ரெண்ட் வெளியூர் போனா நீ சாப்பிடாம இருப்பியா? நான் எவ்வளவு பதறி போனேன் தெரியுமா? நீ வேலைக்கு வரலையே என்னாச்சு ஏதாச்சுனு பார்க்க வந்தா, நீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த. உன்னை அப்படிப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பயம் வந்திடுச்சு” எனக் கூறிவிட்டு, தான் வாங்கி வந்த டிஃபனை பிரித்து நீட்டினான்.
“இந்தா இதை சாப்பிடு.”
அவளோ, “இல்லை எனக்கு வேண்டாம் அஜய். நீங்க ஏன் என்னை ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் தூக்கிட்டு வந்து சேர்த்தீங்க. அப்படியே விட வேண்டியது தானே. செத்துப் போய் இருப்பேன்” என்று விரக்தியாகப் பேசியவளைப் பார்த்து அதிர்ந்தான்.
“ஏய் லூசு! ஏன் இப்போ லூசு மாதிரி பேசுற? என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க?”
“வேற எப்படி என்னைப் பேச சொல்ற அஜய், என்னுடைய உயிர் தோழி என்னை விட்டுப் பிரிந்து போயிட்டா. அதுவும் என் காதலால” என்று சொல்லி முகத்தை மூடிக் கதறினாள்.
அவள் கதறுவதை பார்த்த அஜய்க்கோ அதிர்ச்சியாக இருந்தது. “என்னது உன் காதலால ஜெயந்தி உன்னை விட்டு பிரிந்து போயிட்டாளா? என்ன உளறல் இதன்யா இது?”
“ஆமா அஜய் அவளுக்கு நம்ம காதல் பிடிக்கல” என சொன்னவள் சட்டென்று, “இல்ல, இல்ல… பிடிக்கலைனு சொல்ல முடியாது. நான் என் காதலை அவக்கிட்ட சொல்லலைன்னு அவளுக்கு என் மேல கோபம். அந்த கோவத்தில எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்துட்டு போய்ட்டா” என்று சொல்லி அழுதவளைப் புரியாமல் பார்த்தான்.
“அய்யோ ப்ளீஸ் இதன்யா என்னாச்சு, என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லு” என்று கோபத்துடன் கேட்க,
இதன்யாவும் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள். அதைக் கேட்ட அஜய்க்கோ கோபம் கோபமாக வந்தது.
“நான் ஒன்னு கேட்கட்டுமா இதன்யா?” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
“இம்” என்று அவள் சொல்ல,
“நீ என் கூடத்தானே வாழ போற, நீ என்னைத் தானே காதலிக்கிற. இதில் அவளுக்கு என்ன பொறாமை?” என்றான்.
இதன்யாவிற்கோ சட்டெனக் கோபம் வர, “அஜய் வார்த்தையைப் பார்த்து உபயோகப்படுத்துங்க. அவள் என் தோழி. எப்பவும் எனக்கு நல்லது மட்டும் தான் பண்ணுவா.”
“ஓ! அப்படி நல்லது பண்றவளா இருந்தா, அவள் உன் காதலுக்கு சப்போர்ட் தான் பண்ணி இருப்பாளே தவிர, உன் கிட்ட கோபப்பட்டு நீ இருந்தால் என்ன இல்லைனா என்னனு விட்டு போயிருக்க மாட்டா” என்று அஜய் ஆத்திரத்துடன் கூறினான்.
“போதும் அஜய்! என் ஜெய் பத்தி எனக்குத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்க” என்று அந்த அறையின் வாசலைக் கை நீட்டிக் காட்டினாள்.
அஜய்யோ, “எனக்கு இது தேவை தான். நீ பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதைப் பார்த்ததும், எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல அப்படி ஒரு நடுக்கம். என்ன செய்யுறதுனு தெரியாமல் நான் தவித்தது எனக்குத் தான் தெரியும். என் காதல் வலி உனக்கு எங்கே தெரிய போகிறது? உனக்கு இப்போ கவலையெல்லாம் உன்னை விட்டுப் போனவளைப் பத்தி தானே. உன் கூட இருக்கிறவனைப் பத்தி உனக்குக் கவலை இல்லை” என்று புலம்பிக் கொண்டே தன் பேக்கை எடுத்து தோளில் மாட்டினான்.
“நான் போறேன், நானும் ஒரேயடியா உன்னை விட்டுப் போறேன். நீ அவளையே நெனைச்சுக்கிட்டு அழுதுட்டு சாப்பிடாம கொள்ளாம இரு. என்னைப் பத்தி உனக்கு என்ன கவலை?” என்று சோகமாகக் கூறிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்தான்.
அதற்கு மேல் இதன்யாவால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அஜய்யை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
