காதல் பூக்கள் – 11

 

 

அஜய் அப்படிப் பேசியதைக் கேட்டவளுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவளின் மன ரணத்திற்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. அது அவள் மனம் நிறைந்தவனால் மட்டுமே தர முடியும் என்று நினைத்து, அவனை அணைத்து அழுதாள். தன் வலியை அவனுக்குள் கரைத்துக் கொண்டு இருந்தாள்.

அஜய்யோ இதன்யாவை தன்னிடம் இருந்து பிரித்து, முன்னால் நிறுத்தி அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாலும் மனதிற்குள்,

‘இது போதும் இதன்யா, உனக்கு யார் முக்கியம்னு சொல்லாமல் சொல்லிட்ட. இதுவே எனக்கு வெற்றி தான். இனி உன் வாழ்க்கையில் எல்லாமே நான் மட்டும் தான். எல்லாவற்றிக்கும் இனி நான் தான் முதல்ல உன் நினைப்புக்கு வரணும். 

நம்ம காதலை பிரிக்க வேண்டும் என நினைத்து, உன்னைப் பிரிந்து போனவள், இனி போனவளாக தான் இருக்கணும். இதுக்கு அப்புறம் அவளை உன் வாழ்க்கைக்குள்ள வர விட மாட்டேன். நான் மட்டும் தான் இனி உன் வாழ்நாள் இருக்கும் வரை!’ என்று இதன்யாவை தன்னிடம் எப்படித் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தான் அஜய். 

அஜய்யின் அன்பினால் இதன்யா மீண்டும் பழைய மாதிரி மாறத் தொடங்கினாள். பின் அஜய்யின் கட்டாயத்தால் திரும்ப வேலைக்கு வர ஆரம்பித்தாள் இதன்யா. இப்படியே நாட்கள் போக, அது மாதங்களாக மாறியது. 

ஜெயந்தி போனதிலிருந்து தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவளுக்கு ஃபோன் செய்து பார்த்தாள். ஆனால் ஜெயந்தியோ இதன்யாவின் ஃபோனை எடுக்காமல் தவிர்த்தாள். அப்படியே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது, ஒரு நாளைக்கு ஒரு முறை என்றானது. பின் இரண்டு நாளைக்கு ஒருமுறை என்றாக, அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை என்றானது. ஆனால் ஜெயந்தியின் கோபம் மட்டும் தணியாமல் இருந்தது. 

அதற்குக் காரணம் அவள் இதன்யாவைப் பிரிந்து போன பிறகு, அவள் எப்படி இருக்கிறாள் என்று விசாரித்து, அவளின் காதல் எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்பதையும் தெரிந்து கொண்டாள். அதன் காரணமே இதன்யாவின் மீது இருந்த கோபம் அதிகமாகியது. 

அஜய் கொஞ்சம் கொஞ்சமாக இதன்யாவின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டான். ஜெயந்தி இல்லாமல் கூட இதன்யாவால் இருந்து விட முடியும், ஆனால் இனி ஒரு நிமிடம் கூட அஜய் இல்லாமல் இருக்க முடியாத அளவிற்கு மாறிப்போனாள் இதன்யா.

நாட்கள் இப்படியே போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் அஜய் இதன்யாவை அழைத்துக் கொண்டு வந்து விடுவதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி, அஜய்யை வைத்துக் கொண்டே இதன்யாவிடம், “யாருமா இந்த தம்பி, தினமும் உன் கூடவே வருது. அப்புறம் ரெண்டு மணி நேரம் கழித்து போகுது. 

ஒரு வயசு பொண்ணு இருக்கிற வீட்ல ஒரு வயசு பையனுக்கு என்னம்மா வேலை? அதுவும் ரெண்டு மணி நேரம் அப்படி என்ன பண்ணுவீங்க? அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்களாம் ரொம்ப கௌரவமான குடும்பங்கள். நீங்க அடிக்கிற கூத்தைப் பார்த்தா இந்த ஏரியாவையே தப்பா பேச மாட்டாங்களா?” என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே சென்றார். 

இதன்யாவோ, அவரின் வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் கண்ணீர் விடத் தொடங்கினாள். 

அஜய் கோபப்பட்டு, “ஏங்க பார்த்து பேசுங்க, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம். இவளுக்கு மாமன் முறை நான். இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்குக் கல்யாணம். அது தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க. வாய் இருக்குனு என்ன வேணா பேசுவீங்களா?” என்று அஜய் கோபத்தில் பேசிக் கொண்டே போக, இதன்யாவிற்கோ அதிர்ச்சியாக இருந்தாலும், சந்தோஷம் அடைந்தாள். 

“அப்படியா தம்பி, என்னை மன்னிச்சிடுப்பா. ஏன்மா இதன்யா, இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. நான் கூட உன் தோழி போனதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். இப்போ தான விசயமே தெரியுது, உங்களுக்குக் கல்யாணம் ஆகப் போதுன்னு தான் உங்களுக்கு எதுக்கு தொந்தரவா இருக்கணும்னு ஊருக்கு போயிட்டாளோ” என்று மீண்டும் வார்த்தையில் அவளை நோகடித்தார்.

அஜய்யோ அவர் பேசிக் கொண்டு இருப்பதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், இதன்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். 

உள்ளே நுழைந்ததும், “என்ன அஜய் நீங்க பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டிங்க. கல்யாணம், மாமா அப்படி இப்படினு” என கேட்டாள்.

“ஆமா, நான் உண்மையைத் தான் சொன்னேன். உன்னை நான் தானே கல்யாணம் பண்ணிக்க போகிறேன். கல்யாணத்திற்கு அப்புறம் என்னை எப்படி இருந்தாலும் மாமானு தானே கூப்பிடுவ. அதான் அட்வான்ஸா சொல்லிட்டேன்” என்று அஜய் கூறிக் கொண்டே அவளின் கரத்தை பிடித்து அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்ள முயல, அவனின் அணைப்பிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டு விலகினாள் இதன்யா. அஜய்யிற்கோ சட்டென வெறுப்பு தோன்றியது. 

“அட போடி, எப்போ பாரு உன்கிட்ட வந்தாலே தள்ளித் தள்ளி போற. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல கட்டிப்பிடித்ததோட சரி. அப்புறம் நான் உன் கையை பிடித்தால் கூட, விலகி போற. ரொம்ப வெறுப்பா இருக்கு இதயா” என்று அவளைச் செல்லமாகக் கோபித்துக் கொண்டான் அஜய். 

இதன்யாவோ, “எல்லாத்துக்கும் நேரம் காலம் இருக்குல மாமா” என்று அவனை ஆசையாக அழைக்க,

அவளின் மாமா என்ற வார்த்தையில் மயங்கியவன், அந்த குஷியில் அவளை தன்னிடம் இழுத்து, “என்ன சொன்ன, திரும்ப ஒரு தரம் சொல்லு?” என்று கேட்டான்.

“அதுவா, கல்யாணத்துக்கு அப்புறம் மாமானு கூப்பிடுறதை விட, இப்போதிலிருந்தே கூப்பிட்டு பழகிட்டா நல்லா இருக்கும்ல. அதான் மாமா, இனிமேல் உங்களை மாமா தான், கூப்பிட போறேன் மாமா. என் செல்ல மாமா” என்று அவனை வார்த்தைக்கு வார்த்தை, ‘மாமா மாமா’ என்று அழைத்தாள்.

அவனுக்கோ அந்த அழைப்பில் ஒரு வித புத்துணர்ச்சி தோன்ற, அவள் எதிர்பாராத சமயத்தில் அவளின் கன்னத்தைப் பிடித்து அவள் இதழோடு இதழ் வைத்து, முத்தம் ஒன்றை முதல் முறையாகக் கொடுத்தான். 

அவனின் இந்த செயலில் இதன்யா பிரம்மித்து போய் அப்படியே நிற்க, மீண்டும் அவளின் இதழோடு இதழ் பதித்தான் அஜய். ஏனோ இதைத் தடுக்க மனம் இன்றி இருந்தாள். 

அஜய் அவளைத் தன்னிடம் இருந்து விலக்கியதும், இதன்யா அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “என்ன மாமா, திடீரென்று இப்படி பண்ணிடீங்க?” என்றாள்.

“ஏன் இதயா பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கு மாமா” என்று மெல்லமாகச் சொல்லி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 

“ஏய், மாமா மாமானு நீ கூப்பிட கூப்பிட எனக்குள்ள என்னவோ ஆகுதுடி. இதுக்கு மேல நான் இங்க இருந்தா சரிப்பட்டு வாரது, நான் கிளம்புறேன். நீ சாப்பிட்டு கதவை நல்லா லாக் போட்டு தூங்கு. நாளைக்கு பார்க்கலாம்” என்று கூறிவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, 

கிளம்பியவனின் கையைப் பிடித்துக் கொண்டு, “மாமாஸ நாம நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கலாமா மாமா?” என்று அவள் சர்வ சாதாரணமாகக் கேட்க, அஜய்க்கு தான் தூக்கிவாரிப் போட்டது. 

“லூசு என்னடி உளர்ற? என்னவோ ஒரு காஃபி குடிக்கலாமானு கேட்கிற மாதிரி கேட்கிற. நாளைக்கே எப்படிடி கல்யாணம் பண்ணிக்க முடியும். கொஞ்சமாச்சு யோசிச்சு தான் பேசுறியா? இல்ல பைத்தியம் முத்திடிச்சா?” என்று அஜய் அவளைக் கிண்டல் செய்தான்.

“இல்ல மாமா, நான் நிஜமா தான் கேட்கிறேன். இப்போவே அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கலாம் ஒரு மாதிரி பார்த்துப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு அப்புறமும் நாம இப்படியே இருந்தால், அதுவே அவர்களுக்கு நம்மளைப் பத்தி தப்பா பேச நம்மளே வாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகிடும். அதான் சொல்றேன் நாம நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் மாமா” என்று அவனின் கரத்தை பிடித்துத் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கண்கலங்கிக் கேட்டவளைப் பார்த்தவனுக்குப் பாவமாகத் தோன்றியது.

அவளை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “நீ சொல்றது எல்லாம் சரி தான்டா, ஆனால் நான் இன்னும் எங்க வீட்ல நம்ம லவ் விஷயத்தைப் பத்தி பேசவே ஆரம்பிக்கல. உன்னைப் பத்தி சொன்னதும் அவங்க டக்குனு உன்னை ஏத்துப்பாங்கன்னு நினைக்காத. முதலில் சண்டை வரும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் பேசி பேசி அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். அதான் சொல்றேன் இப்படி சட்டு புட்டுனு கல்யாணம்லாம் பண்ண முடியாதுடா” என்று அவளின் தலையை வருடிக் கொடுத்தபடி அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.

இதன்யாவோ, “அய்யோ மாமா, அதெல்லாம் யோசிக்காம தான் கேட்பேனா?”

“எனக்கு புரியலடி” என்று அவன் கேட்க,

“மாமாஸ ஃபர்ஸ்ட் நாளைக்கு நம்ம சிம்பிளா ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் வழக்கம் போல ஆஃபிசுக்கு போயிட்டு வேலை பார்க்கலாம். அதுக்கு பிறகு எப்போவும் போல, என்னை இங்க விட்டுட்டு நீங்க வீட்டுக்கு போங்க. உங்க வீட்டில் எப்போ நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச நேரம் வருதோ, அப்போ பேசுங்க. அதுவரை நாம இப்போ எப்படி இருக்கோமோ அப்படியே இருக்கலாம். ஆனால் என்ன என் கழுத்தில் உங்க கையால் ஏறுன தாலியோடு இருப்பேன் மாமா” என்று அவள் மிகப் பெரிய விசயத்தை சர்வ சாதாரணமாக சொல்லச் சொல்ல அஜய்க்கு தான் மயக்கமே வந்தது. 

‘ஆனால் இவள் சொல்வதும் சரி தானே. இன்னைக்கே இப்படி தப்பா பேசினவங்க, நாளைக்கு என்ன வேணாலும் பேசுவார்கள். அதுக்கு ஒரே வழி இதயா சொல்கிறது தான் சரி. அதான் அவளே சொல்கிறாளே, வீட்டில் எப்போ பேச முடிகிறதோ அப்போ பேசுங்கனு. இப்போ இதன்யா கழுத்தில் நான் தாலி கட்டிடா, அதுக்கு அப்புறம் அந்த ஜெயந்தியே வந்தாலும் இதயா கிட்ட பேசி, அவள் மனசை மாற்றி எங்களைப் பிரிக்க முடியாது’ என்று இவன் இப்படி யோசித்து இதயாவிடம் கல்யாணத்திற்குச் சரியென்று சம்மதம் சொன்னான். 

இதைக் கேட்ட இதயா மிகுந்த மகிழ்ச்சியுடன் அஜய்யை கட்டியணைத்து, அவனின் கன்னத்தில் அழுத்தமான ஒரு முத்திரையை தன் இதழால் பதித்து, “ஐ லவ் யூ மாமா” என்று கூறினாள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
136 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
258 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page