காதல் பூக்கள் – 12

 

 

மறுநாள் இருவரும் திருமணத்திற்கு தயாராகி கோவிலில் நின்று கொண்டு இருந்தனர். இதன்யா மிகவும் சந்தோஷத்தில் மிதக்க, அஜய்யோ பயத்தின் உச்சத்தில் நின்று கொண்டு இருந்தான். சுற்றி முற்றி அவன் பார்வை அலை பாய்ந்து கொண்டே இருந்தது. 

தெரிந்தவர்கள் யாராவது பார்த்து விடுவார்களோ? தாம் மாட்டிக் கொள்வோமா? என்ற அச்சம் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக சாமிக்கு அபிஷேகம் முடிந்து, இவர்களை அழைத்து தாலியை ஆசீர்வாதம் செய்து கொடுத்தார் அர்ச்சகர். 

கை நடுக்கத்துடன் அந்த பொன்தாலியை வாங்கியவன் இதன்யாவை பார்க்க, அவளோ சந்தோஷத்துடன் வெட்கப்பட்டுக் கொண்டு தலைகுனிந்து நின்றாள்.

ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தன்னிடம் இல்லாமல் போனதை எண்ணி வேதனை அடைந்தாலும், யாரேனும் பார்ப்பதற்குள் இதன்யாவின் கழுத்தில் மூன்று மூடிச்சு போட்டான் அஜய். அந்த கோவிலில் அர்ச்சகர் மட்டும் இருவரையும் ஆசீர்வாதம் செய்ய, அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு கோவிலை மூன்று முறை இருவரும் ஜோடியாகச் சுற்றி வலம் வந்து, மீண்டும் சன்னதிக்கு நேராக வந்து நின்றனர்.

அர்ச்சகர், “தம்பி தாலி கட்டின மனைவியோட மாங்கல்யத்திலும், நெற்றி வகிட்டிலும் திலகம் இட வேண்டும்பா” என்று சொல்லி குங்குமத்தை நீட்டினார்.

அஜய் அதை அவசர அவசரமாக வாங்கி, குங்குமத்தை வைத்து விட்டு அவர் கையில் இருநூறு ரூபாய் தாள்களைத் திணித்து விட்டு இதன்யாவின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு அங்கே இருந்து புறப்பட்டான். 

நேராக அலுவலகம் போவான் என்று எதிர்பார்த்த இதன்யா, அவன் அலுவலகத்துக்குப் போகாமல், அவளின் வீட்டின் வாசலில் வந்து வண்டியை நிறுத்தியது அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

அஜய்யோ அந்த பக்கத்து வீட்டுக்காரரைக் கூப்பிட்டு, “நாங்க ரெண்டு பேரும் இப்போ கணவன் மனைவி. எங்களுக்கு இன்னைக்கு காலையில் தான் கல்யாணம் முடிஞ்சிது. இனிமேல் உங்களுக்கு நாங்க தப்பா தெரிய மாட்டோம்ல” என்று அவரை வம்பிழுக்க, அவரோ அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றார். 

இதன்யாவோ தன் கணவனின் கரத்தை பிடித்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றாள். இருவரும் முதல் முறையாக, ஜோடியாக கையைக் கோர்த்துக் கொண்டு, வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே போனார்கள். 

இதன்யாவிற்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை. கண்ணாடி முன் நின்று தன் கழுத்தில் தொங்கிய தாலியைத் தொட்டுப் பார்த்து பரவசம் அடைந்தாள். பின் நெற்றியில் உள்ள திலகத்தையும் தொட்டுப் பார்த்தவளுக்கு, ஆனந்தக் கண்ணீரே வந்தது. 

இதைப் பார்த்த அஜய், “இதயா, அதான் நீ ஆசைப்பட்டபடி, உன் கழுத்தில் தாலி கட்டிடேன்ல. அப்புறம் ஏன்டி அழுதுட்டு இருக்கிற?” என்று அவள் முன் நின்று கேட்க,

இதயாவோ, “இனிமே நான் அனாதை இல்லைல மாமா. எனக்குன்னு என் மாமாவும், அவருடைய குடும்பமும் இருக்குல?” எனக் கண்ணீர் மல்க கேட்டாள்.

அதைக் கேட்டவனுக்கு மனது வலித்தது. “என்ன பேச்சு பேசுற இதயா. அனாதை அது இதுனு. உனக்கு எப்போவும் நான் இருக்கிறேன், இருப்பேன். இனிமே நீ என்னுடையவள்” என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு, அவளின் நெற்றியில் முத்தம் ஒன்றைப் பதித்தான். 

“அது சரி, கல்யாணத்தை முடிச்சிட்டு நேரா ஆஃபீசுக்கு போக தானே நம்ம முடிவு செய்து இருந்தோம். நீங்க ஏன் மாமா திடீரென்று வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டிங்க. பாருங்க நம்மளை ஆரத்தி சுத்தி வீட்டுக்கு அழைக்கக் கூட ஆள் இல்லை.” என்று சொன்னாள்.

“அடி போடி, உன் கழுத்தில் தாலி கட்டுகிறதுக்குள்ள எனக்கு பயத்தில் ஹார்ட் அட்டாக்கே வந்து இருக்கும் போல. அந்த பயத்தோட ஆஃபீசுக்கு போனா, என் கதி அவ்வளவு தான். அதான் வீட்டுக்கு உன்னை அழைச்சுட்டு வந்துட்டேன். ஆரத்தி சுத்தி எடுக்க இது என்ன முறைப்படி நடந்த கல்யாணமா? ஏதோ நம்மளை தப்பா பேசிட கூடாதுன்னு அவசர அவசரமா நம்மளே நடத்திக்கிட்ட கல்யாணம் தானே. இதுல போய் நீ இதெல்லாம் எதிர்பார்க்கிறது ரொம்ப ஓவர்டி” என்று அஜய் எதார்த்தமாகக் கூற,

இதன்யாவிற்கு தான் அவன் கூற்று மிகவும் வேதனையை அளித்தது. ஆனால் அதை தன் கணவன் முன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். அவளுக்கும் தெரியும் அல்லவா அவன் கூறுவது அனைத்தும் உண்மை தான் என்று. 

பின் அவனுக்கு காஃபியைக் கலந்து வந்து கொடுக்க, அவனோ காஃபியை வாங்கி டேபிளில் வைத்து விட்டு, இதன்யாவின் கரத்தைப் பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்து, “ஏன்டி பொண்டாட்டி, கையால காஃபி குடிக்கத் தான் உன் கழுத்தில் தாலி கட்டினேனா?” என்று சொல்லிக் கொண்டே அவளின் கழுத்து வளைவில் அவன் முகத்தைப் புதைத்தான். 

இதன்யாவிற்கு புரிந்தது அவன் கூறும் அர்த்தம் என்னவென்று. “மாமா, நீ சுத்தி வளைச்சு எங்க வரன்னு தெரியுது. ஒழுங்கா காஃபியைக் குடிச்சிட்டு, வீட்டுக்கு கிளம்புற வழிய பாரு. இதெல்லாம் நம்மளை உங்க வீட்ல ஏத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான். அதுவரைக்கும் எதுவும் இல்ல” என்று அவனை அவளிடமிருந்து தள்ளினாள்.

ஆனால் அஜய்யோ, “அடியே பொண்டாட்டி, அதான் நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சுல. இனிமே அவங்க ஏத்துக்கிட்டா என்ன, ஏத்துக்கலைனா என்ன, இந்த மாமாவுக்காக கொஞ்சம் மனசு வையுடி, மாமா பாவம்ல.”

“ஒரு பாவமும் இல்ல, நீ முதல்ல கிளம்பு இங்க இருந்து.” 

“என்னடி, என்னை விரட்டி விடுறதிலே குறியா இருக்க, அதான் இன்னைக்கு ரெண்டு பேரும் லீவ் போட்டாச்சுல. அது மட்டுமா இன்னைக்கு தான் நமக்குக் கல்யாணம் வேற நடந்து இருக்கு. அப்போ இன்னிக்கு…” அவன் குரல் கரகரக்க கூறினான்.

அவளோ, “முடியாது மாமா, முடியவே முடியாது” என்று விடாப்பிடியாக இருப்பதைப் பார்த்தவன், 

சிறிய ஏமாற்றத்துடன், “சரிடி, ஒன்னும் வேண்டாம். போதுமா! ஆனா நான் மாலை வரைக்கும் இங்கேயே தான் இருப்பேன். எப்போவும் போல ஆஃபீஸ் விடுற நேரத்திற்கே வீட்டுக்கு போறேன்” என்று சொல்லி அன்றைய பொழுதை அவளுடனே கழித்தான். 

அன்று நாள் முழுவதும் மூச்சுக்கு முன்னூறு முறை, “மாமாஸ மாமாஸ” என்று கூப்பிட்டு அவனை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தாள் இதன்யா. 

அஜய்யோ அவளின் இந்த செல்ல விளையாட்டை ரசித்துக் கொண்டு, அந்நாளை அவளுடனே கழித்தான்.

இதன்யா ஒவ்வொரு நாளும் அஜய்யின் அன்பினை அடைகாத்து, அதை தனக்குள் செதுக்கி வைத்தாள். அவள் சிறு வயதிலிருந்து ஏங்கிய அன்பு அஜய் மூலம் அனுபவித்துக் கொண்டு இருந்தாள் இதயா. அஜய்யோ இதயாவை தன் இதயத்தில் வைத்துத் தாங்கினான். அவளை தன் கண்ணுக்குள் பொத்தி வைத்து பாசத்தைக் காட்டினான். 

அவனின் பாசத்தில் தன் தோழியை மறந்து போனாள் என்று சொல்வதை விட, அஜய் ஜெயந்தியை பற்றி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் காதலால் அவளைக் கட்டி வைத்துக் கொண்டான். 

இவர்கள் காதல் கல்யாணத்தை ஒரு வருடமாகச் சிறு சிறு விசயத்தில் கூட ரசித்து அனுபவித்து வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்க்கையின் சந்தோஷத்தைப் பறித்துக் கொள்ள, விதி இவர்களின் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பதை அறியாமல் இருந்து விட்டனர் இருவரும்.

***

ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் தங்கள் கல்யாண நாளை இருவரும் சேர்ந்து கொண்டாட நினைத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டு இருந்தனர். 

தனித் தனியாக ஒருவருக்கு ஒருவர் தெரியப்படுத்தாமல் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து இருவரும் மகிழ்ச்சியோடு ஷாப்பிங் செய்தனர். அஜய் தன் மனைவிக்குப் பிடித்த ஒவ்வொன்றையும், அவளுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டு அவளது வீட்டிற்கு சென்றான்.

அங்கே வீடு பூட்டி இருப்பதைப் பார்த்துக் குழம்பினான். ‘இந்நேரத்துக்கு எங்கே போய் இருப்பாள்? எங்கே செல்கிறாள் என்று தன்னிடமும் சொல்லவில்லையே, ஒரு வேளை நம்மளை மாதிரி கிஃப்ட் வாங்கப் போய் இருப்பாளோ?’ என்று யோசித்தவன், வீட்டின் முன் இருந்த பூச்செடியைத் தூக்கிப் பார்க்க, அவன் நினைத்தது போலவே வீட்டுச் சாவி அங்கே இருந்தது. அதைக் கையில் எடுத்தவன் வீட்டைத் திறந்தான்.

‘எத்தனை தடவை சொல்றது இவகிட்ட சாவியை இப்படி வெச்சிட்டு போகாதேனு. என் கிட்ட இருந்த சாவியை ஒரு நாள் தொலைச்சிட்டேன். அப்போதே வேற சாவி போட்டுக் கொடுடினு சொன்னேன். ஆனால் கேட்டால் தானே. 

தொலைச்சதுக்குத் தண்டனைனு சொல்லி இதுவரைக்கும் வேற சாவி ரெடி பண்ணி தர மாட்டேங்குறா, என்னையும் போட்டுக்க கூடாதுன்னு ஆர்டர் போட்டுட்டா. இப்ப சாவியை இப்படி வெளியே பூச்செடிக்குக் கீழே வச்சுட்டுப் போறா. என்ன சொல்லி தான் இவளை திட்டுகிறது? இன்னைக்கு வேற கல்யாண நாள், ஸோ திட்டவும் முடியாது. அதனால நாளைக்கு திட்டிக்கலாம்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டே, வாங்கிக் கொண்டு வந்த கிஃப்ட்டுகளை அங்கே அங்கே மறைத்து வைத்துக் கொண்டு இருந்தான். 

இப்படி மறைத்து வைத்துக் கொண்டே வந்தவன், படுக்கையறையில் ஒரு பரிசுப்பொருளை வைக்க எண்ணி கதவைத் திறக்க, அப்படியே அதிர்ந்து நின்றான் அஜய். 

அங்கே கதவைத் திறந்தவன் முன் பட்டுப் புடவைக் கட்டி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, கை நிறைய வளையல் அணிந்து, வெட்கத்துடன் நின்று இருந்த இதயாவைப் பார்த்து, ஒரு நிமிடம் பிரம்மித்து தான் போனான் அஜய்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
136 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
255 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page