காதல் பூக்கள் – 13

 

 

அதிர்ச்சியில் ஏதும் பேசாமல் நின்ற தன் கணவனின் தோள்களைத் தட்டி, அவனிற்கு சுயநினைவைக் கொண்டு வந்தாள் இதயா. 

அஜய் நினைவுக்கு வந்ததும், “அடியே என்ன இது, புதுசா இருக்க. என்னடி கோலம் இது?” என்று ஆச்சரியம் விலகாமல் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்ததும் மேலும் அதிர்ந்து போனான்.

அங்கே மெத்தை முழுவதும் பூக்களால் அலங்கரித்து, மெத்தைக்கு நடுவில், “ஐ லவ் யூ மாமா!” என்ற வார்த்தைகள் இருந்தது. 

அதைப் பார்த்து, “என்னடி ஆச்சு உனக்கு! இதெல்லாம் இப்போ எதுக்குடி?” என்று கேட்டான்.

“நம்ம திருமண நாளுக்கு உங்களுக்கு நான் தர போற கிஃப்ட் மாமா” என்று சொல்ல அஜய் சிரித்தே விட்டான்.

“அடி லூசு பொண்டாட்டி, எங்க வீட்ல உன்னை ஏத்துக்கிற வரைக்கும் நமக்குள்ள எதுவும் வேண்டாம்னு சொன்னது நீ தானடி. இப்போ என்னடானா நீயே எல்லாத்துக்கும் சரி என்பது போல தயாராகி வந்து நிற்கிற.”

“ஆமா மாமா, நான் சொன்னேன் தான். ஆனால் நீங்க தான் இன்னும் உங்க வீட்டில் என்னைப் பத்தி பேச்சே ஆரம்பிக்கவில்லையே.”

“ம்ம்… நான் என்னடி பண்றது? வீட்டில் இன்னும் எனக்கு கல்யாண பேச்சே ஆரம்பிக்கலையே. முதல்ல என் தங்கச்சி லதாவுக்கு கல்யாணம் முடிச்சுட்டு தான் எனக்குக் கல்யாணம் பண்ற மாதிரி பேசிட்டு இருந்தாங்க. இப்போ போய் நம்ம விசயத்தை சொன்னா அவ்வளவுதான். அதான் அவங்களே ஆரம்பிக்கிற வரை பொறுத்துட்டு இருக்கேன். ஆனா நீ என்னடானா இப்படி வந்து நின்னு திடீர்னு அதிர்ச்சி தருவன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலைடி.

ஆமா நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த, சாவி வெளியே தான இருந்துச்சு. எத்தனை முறை சொல்லி இருக்கேன், சாவியை அப்படி வெளியே வச்சுட்டு போகதன்னு” என்று திட்டினான் அஜய்.

“அது இல்ல மாமா, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் முன் பக்கம் கதவைப் பூட்டி, வீட்டு சாவியை அங்க வச்சுட்டு பின் பக்கமா உள்ள வந்துட்டேன். அது மட்டும் இல்ல மாமா, உன்னை ரொம்ப தள்ளி வைக்கிற மாதிரி தோனுச்சு. அது மட்டுமில்லை நீ என்கிட்ட உரிமை எடுத்துகிட்டு நெருங்கும் போதெல்லாம் எனக்குள்ள சின்னதா பயம் வந்து உன்னை விட்டு விலகி போறேன். 

ஆனால் அதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காம, என்னை உன் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குற. நான் எதிர்பார்த்த அன்பை விட, அளவுக்கு அதிகமான பாசத்தை கொடுத்துட்டு இருக்க. அப்படி இருக்கும் போது நானும் என் மாமாவுக்காக கொஞ்சம் இறங்கி வரதுல எந்த தப்பும் இல்லைனு தோனுச்சு. அதான் மாமாஸ” என்று வெட்கப்பட்டு சொன்னாள் இதயா. 

இதைக் கேட்ட அஜய்க்கு கண்கலங்க, “ச்சீ லூசு பொண்டாட்டி! நீ எனக்காக இறங்கி வரணும்னு நினைச்சதே போதும்டி. இந்த ஜென்மம் முழுக்க நான் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்டி. நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு, உனக்கு அன்பை வாரி வழங்கிக்கிட்டே இருப்பேன். எப்பவும் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன்டி. இது நம்ம காதல் மீது சத்தியம்” என்று சொல்லி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு இதழ் பதித்தான்.

இதயாவோ அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்தில் வார்த்தைகள் வராமல் போக, அவளும் தன் சந்தோஷத்தை இதழ்கள் மூலம் வெளிப்படுத்தினாள். 

பின், “அப்போ இன்னைக்கு நமக்குள்ள எதுவும் வேண்டாமா மாமா?” என்று இதயா கேட்க,

அஜயோ, “அப்படி சொல்லல…” என்று வார்த்தையை இழுத்தவன் பேச்சை மாற்றினான்.

“ஆனா பொண்டாட்டி, இந்த பட்டுபுடவையில நீ செமையா இருக்கடி. அதுவும் தலை நிறைய மல்லிகைப்பூ வச்சுக்கிட்டு என்னைக் கொல்ற” எனக் கூறி அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டு பூவின் வாசத்தை முகர்ந்தான்.

அதில் கிறங்கி போனவன் அவளை இறுக்கி அணைக்க, அவனையே அவன் இழந்து கொண்டு இருந்தான். என்ன இருந்தாலும் ஒரு ஆண்மகன் அல்லவா, தான் தாலி கட்டிய மனைவியின் அழகில் சொக்கித் தான் போனான் அஜய். 

இதன்யாவும் எந்தவித எதிர்ப்புமின்றி தன் கணவனுக்கு இசைந்து கொடுக்க, இருவரும் மெல்ல மெல்ல தங்களையே தொலைத்துக் கொண்டு வந்தனர், காதல் என்னும் ஆசையில்.

இருவரும் தன்னிலையை மறந்து, ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்து இருந்தனர். இதயா மெல்ல எழுந்து குளியலறைக்குள் சென்றாள். அவள் குளித்து முடித்துவிட்டு வந்ததும் நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டு தன் கணவனை எழுப்பினாள்.

“மாமாஸ மாமாஸ எழுந்திடுங்க, விடிஞ்சிடுச்சு” என்று அவள் சொன்ன அடுத்த வினாடி பொழுதில், விழுந்தடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான். 

இதைப் பார்த்த இதயா, “என்னாச்சு மாமா, ஏன் இப்படி பதறிட்டு எழுந்துக்குற?” எனக் கேட்க,

அவனோ, “டைம் என்னாச்சு இதயா?” எனக் கேட்டான்.

“மணி பத்து ஆகுது, ஏன் மாமா கேட்கிற?”

“என்ன சொல்ற பத்து ஆகுதா!”

“ம்”

“அப்போ நேத்து நைட் முழுக்க நான் இங்கே தான் இருந்தேனா!” 

“ஆமா மாமா, இப்போ ஏன் நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்கிற?” என்று பயத்தோடு கேட்டாள்.

“இல்லடி நைட் எல்லாம் வீட்டுக்குப் போகாம இங்கயே இருந்து இருக்கேன். வீட்ல ஒரு ஃபோன் பண்ணி கூட சொல்லல, வேலை இருக்கு வர லேட்டாகும்னு. அதான் வீட்டில் என்ன சொல்வாங்களோனு பயமா இருக்கு” என்று தன் பயத்தைக் காட்டினான் அஜய்.

அவனின் பயத்தைப் பார்த்தவளுக்கும் பயம் தொற்றிக் கொள்ள, “ஏன் மாமா, ஏதாவது பிரச்சனை வருமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா. எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு என்னை ஏமாற்றிட மாட்டல?” என்று கண்கலங்கினாள். 

அவளின் கலங்கிய விழியைப் பார்த்தவன், “ச்சீ லூசு பொண்டாட்டி” என்று சொல்லி அவளை வாரியணைத்துக் கொண்டு நெற்றியில் இதழ் பதித்தான்.

“நீ ஏன்டி பயப்படுற? நான் தான் பயப்படணும். வீட்டுக்குப் போய் என்ன சொல்ல போறேனோ தெரியல. உன்னை ஏமாத்தணும்னு நினைச்சு இருந்தா, ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஏமாத்திட்டு போய் இருப்பேன்.

நான் உன்னை மனசார காதலிக்கிறேன்டி. நீ இல்லாமல் என்னால எப்படி இருக்க முடியும்? என் உலகமே நீ தான்டி என் செல்ல பொண்டாட்டி” என்று கூறி அவள் கன்னத்தைப் பிடித்து முத்தம் ஒன்றைக் கொடுத்தான்.

பின், “சரிடி நான் வீட்டுக்கு கிளம்புகிறேன். அங்க நிலவரம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு திரும்ப வரேன். நீ கிளம்பி இரு, வெளியே போகலாம். ஆமா இன்னைக்கு நீ ஆஃபீசுக்கு லீவ் சொல்லிட்ட தான?” 

“இம் சொல்லிட்டேன் மாமா, நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து.”

“அப்போ சரி, நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்.”

“மாமா குளிச்சுட்டு போகலாம்ல?”

“இல்லடி டைம் இல்ல, இப்போவே ரொம்ப லேட். நான் வீட்ல போய் குளிச்சுட்டு வரேன்” எனக் கூறிவிட்டு கடைசியாக அவளை அணைத்து நெற்றியின் உச்சியில் தன் கடைசி முத்திரையைப் பதித்தான். 

பாவம் அப்பொழுது தெரியவில்லை இருவருக்கும், அது தான் இவர்களின் கடைசி அணைப்பும் முத்தமும் என்று. 

வீட்டிற்கு வந்தவன் தலை குனிந்தபடி நேராக தன் அறைக்குப் போக எத்தனிக்க, அஜய்யின் தந்தை, “என்னப்பா இவ்வளவு நேரம், இரவு பொழுது வீட்டுக்கே வரல. ஒரு ஃபோன் கூட பண்ணல?” என்று அவனைக் கேட்டார். 

அவனோ பயத்துடன், “அது அப்பா, ரொம்ப வேலை அதான் வர முடியல. ஃபோன் எடுக்கக் கூட முடியல” என்று பொய் உரைத்தான்.

அஜய்யின் அம்மாவோ கடுங்கோபத்துடன் அவன் முன் வந்து நின்று, “எங்கப்பா வேலை? இரவு முழுக்க ஒரு பொண்ணு கூட கூத்தடிக்கறதா?” என்று நேரடியாகக் கேட்டார். 

அன்னையின் கேள்வியில் அஜய் ஆடிப்போனான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பயத்தில் கை கால் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விட்டது.

“சொல்லுப்பா கடை கடையா ஏறி இறங்கி பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு, பழகின வீடு போல் சாவியெல்லாம் இருக்கும் இடத்திலிருந்து எடுத்துக்கிட்டு, கதவைக் கூட தாழ் போடாமல் ஒருத்தி கூட எல்லை மீறி நடத்துக்கிட்டியே! அது தான் உன்னுடைய வேலையாப்பா?

இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் கொடுங்குறாங்க. அப்போ இந்த ஒன்னரை வருஷமா இந்த வேலை செய்து தான் எங்களுக்கு காசு கொடுத்தியா? 

என்னடா எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுது பாக்குறியாப்பா. நீ போன கடையில் உன் பின்னாடி தான்பா நான் இருந்தேன். பெற்ற அம்மாவின் உருவத்தைக் கூட மறக்கும் அளவிற்கு அப்படி சொக்குப்பொடி போட்டு உன்னை மயக்கி வச்சிருக்காள்ல?” என்று வார்த்தையில் ஈட்டியை வைத்து குத்தி கிழித்தார்.

இதைக் கேட்ட அஜய்க்கு கோபம் வர, “அம்மாஸ என்ன பேச்சு பேசுறீங்க. இப்படி தப்பா எல்லாம் பேசாதீங்கம்மா…” என்று குரல் உயர்த்திய நேரம், அவன் தந்தை அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார். 

“என்னடா, செய்யுற தப்பு எல்லாம் செஞ்சுட்டு, கேள்வி கேட்டா குரலை உயர்த்துற. யாருடா அந்த சிறுக்கி மவ? எப்படிடா இந்த கெட்ட பழக்கம் வந்தது? எவ்ளோ நாளா இருக்குது இந்த பழக்கம்?”

“அப்பா, என்னைப் பத்தி என்ன வேணாலும் பேசுங்க. ஆனால் அவளைப் பத்தி தப்பா பேசாதீங்க. அவள் ரொம்ப நல்லவப்பா. மனசளவுல மென்மையானவ…”

“ச்சீ நிறுத்து, எவளோ ஒருத்திக்காக உங்க அப்பன் கிட்டயே எதிர்த்து பேசுறீயா? அவ என்னடானா உன்னை, மாமா மாமானு கூப்பிடுறா. கன்றாவி ச்சீ! த்தூ! கேட்கவே முடியலடா. அப்போவே உன்னை நாலு சாத்து சாத்தி இருப்போம். ஆனால் நீங்க தான் இந்த உலகத்தையே விட்டு வேற உலகத்தில மிதந்துட்டு இருந்தீங்க. அந்த அசிங்கத்தைப் பார்த்துட்டும் நாங்க இன்னும் சாகாம இருக்கோம் பார், எங்களை சொல்லணும்.”

“அம்மா, அவ யாரோ ஒருத்தி இல்ல. நான் தொட்டு தாலி கட்டின என்னுடைய மனைவி. எங்களுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணமாகிடுச்சு. அப்போ இருந்து நாங்க எங்க எல்லையை மீறினது இல்லை” என அவன் கெஞ்சினான்.

அஜய் சொன்னதைக் கேட்டு அவனின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட, தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் அஜய். அதை தட்டிவிட்டார். 

சிறிது நேரம் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்தவர், “என்னடா இது, கல்யாணம் அது இதுனு சொல்ற. இந்த விசயம் வெளிய தெரிஞ்சிதுனா, நாளை பின்ன உன் தங்கச்சியை யாருடா பொண்ணு கேட்டு வருவாங்க. நம்ம குடும்ப மானம் என்ன ஆகிறது?” என்று தலையில் கை வைத்து அழுதவரை சமாதானம் செய்ய முற்பட்டான் அஜய்.

ஆனால் அதற்குள் அவனின் தாய் சமையலறை நுழைந்து கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். அஜய் எவ்வளவு தடுத்தும் அவன் தாய் கேட்கவில்லை. 

“அம்மா, என்னம்மா பண்ற, கேனை விடுமா. அம்மா நான் சொல்கிறதைக் கேளுமாஸ” எனத் தன் தாயிடம் மன்றாடிக் கொண்டு இருக்க, அவனின் தந்தையும் மறைத்து வைத்து இருந்த இன்னொரு மண்ணெண்ணெய் கேனை எடுத்து அதை அவர் மீது ஊற்றிக் கொண்டார். 

இருவரையும் தடுக்க வழி தெரியாமல் தவித்தவன், ஒரு கட்டத்தில் மண்டியிட்டு அழுது தன் இரு கரத்தையும் கூப்பி, “இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க, செய்றேன். நான் பண்ண தப்புக்கு உங்களுக்கு நீங்க தண்டனை கொடுத்துக்காதீங்க” என்று தரையில் மண்டியிட்ட நிலையில் குனிந்து அழுது கொண்டே கூறினான்.

அதைப் பார்த்த இருவரும், “இப்போவே இந்த நிமிஷமே அந்த பொண்ணோட சவகாசத்தை விட்டுடணும். அந்த பொண்ணை மறந்துட்டு நாங்க சொல்ற பொண்ணைக் கட்டிக்கணும். அந்த பொண்ணு எந்த காரணத்தை வைத்துக் கொண்டும் உன்னைத் தேடி வரக் கூடாது” என்று இருவரும் ஒன்று போலச் சொன்னார்கள்.

இருவரும் ஏற்கனவே பேசி வைத்துத் தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று அப்பொழுதுதான் தான் அவனுக்குப் புரிந்தது. அஜய்க்கு தன் தந்தை, தாயின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு காதலுக்கு சமாதி கட்ட முடிவெடுத்தான். அவனுள் இருக்கும் அவளின் இதயத்தை சுக்குநூறாக உடைத்தெறியச் சரியென்று ஒப்புக் கொண்டான். 

தன் கலங்கிய விழியோடு தன் பெற்றோர்களைப் பார்க்க, அவர்களோ கையில் வைத்திருந்த தீப்பெட்டியைக் கீழே போடாமல் அப்படியே வைத்திருந்தனர். 

அதைப் பார்த்தவன், “அதான் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன்னு சொல்றேனேமா. அப்பா தீப்பெட்டியைக் கீழே போடுங்க.” 

“மாட்டோம், நீ போய் சொல்லி விட்டுத் திரும்பி பத்து நிமிசத்துல வீட்டுக்கு வரணும். வெறும் பத்து நிமிஷம் தான் உனக்கு நேரம். அதுக்குள்ள நீ அவளை வெட்டி விட்டு வரணும். இல்லைனா எங்களை இனிமேல் நீ உயிரோடவே பார்க்க முடியாது.”

“அம்மா, அப்பா பத்து நிமிஷம்லாம் ரொம்ப குறைவு. அவள் ரொம்ப பாவம்மா. நான் மெதுவா தான் எடுத்துச் சொல்ல முடியும். அவளுக்குன்னு யாருமே இல்லமா. நான் மட்டும் தான்” என்று கடைசி நிமிடத்திலும் அவளின் நலனை யோசித்துக் கூறினான்.

அவளுக்காகப் பேசிய மகனைப் பார்த்தவர், “பார்த்தீங்களா, அந்த சண்டாளி என் மகனை எப்படியெல்லாம் மயக்கி வச்சு இருக்கா” என்று அவன் தாய் தலையில் அடித்துக் கொண்டார்.

அஜய்யோ, “அம்மா ப்ளீஸ்மா, இதயாவைப் பத்தி தப்பா பேசாதீங்க. அதான் நீங்க சொல்ற மாதிரி செய்றேன்ல. ஆனா அதுக்கு எனக்கு வெறும் பத்து நிமிசம் மட்டும் பத்தாதுமா. ஒருஸ ஒருமணி நேரமாச்சும் டைம் கொடுங்க” என அவன் தன் காதலுக்கு சமாதி கட்ட நேரம் கேட்க, 

அவர்களோ, “சரி வெறும் ஒரு மணி நேரம். அதுக்கு மேல டைம் எடுத்த, எங்களைக் கொலை பண்ண பாவம் உன்னையும், அந்த மூதேவி மேலயும் தான் விழும்” என்று அவனை மிரட்டி அனுப்பி வைத்தனர்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
136 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
257 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page