காதல் பூக்கள் – 14

 

 

அஜய் சென்றதும் செல்வி, “ஏங்க அவன் நம்ம சொல்படி நடந்துப்பான் தானே?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா நடந்துப்பான், அவனுக்கு இன்னும் என் மேல இருக்கிற பயம் குறையல. இப்போ பார்த்தல, நீயும் நானும் இப்படி நின்னதைப் பார்த்து எவ்வளவு பயந்துட்டான்னு” என்றார். 

அவனின் குடும்ப பாசத்தை வைத்து, பயத்தைக் காட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள். 

“அது சரிங்க, நீங்க ஏன் அவனை அந்த கடையில் பார்த்தப்போ கண்டிக்கல. சரி அங்க கூட்டம் இருந்துச்சு. ஏதாவது பிரச்சனை நடந்தா அசிங்கமா இருக்கும் விட்டுடலாம். ஆனால் அவன் பின் தொடர்ந்து அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பார்த்தீங்கல்ல. அப்போவே அவனை நாலு தட்டு தட்டி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கலாம்ல?” 

“அடி ஏன்டி நீ வேற, நானே அவனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு அவன் சொன்னதும் நெஞ்சு வலியே வந்துடுச்சு. அப்போ நான் அந்த பொண்ணு கூட இருந்தப்ப அவனை மிரட்டி இருந்தா, தன் பக்கத்தில் ஒரு பொண்ணு இருக்கா அதுவும் தாலி கட்டின பொண்ணு முன்னாடி அசிங்கப்பட நினைப்பானா? அப்போ என் கிட்ட எகிறிட்டு வர மாட்டான். அப்படி நடந்து இருந்தா அவனுக்கு என் மேல இருக்கிற பயம் போய் இருக்கும்.

அதான் அவனை அங்க எதுவும் கேக்காம நேரே வீட்டுக்கு வந்துட்டேன். சரி நைட் வீட்டுக்கு வருவான் அப்போ கேட்கலாம் பார்த்தா, இரவு முழுக்க அந்த பொண்ணு வீட்லயே இருந்து இருக்கான். அதான் இதுக்கு மேல இதை வளர விட்டா சரியா வாரதுனு தான், உன்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கச் சொன்னேன்” என்று அஜய்யின் தந்தை சேகர் சொன்னார்.

அதைக் கேட்ட செல்வியோ, “நீங்க சொல்வதும் சரி தாங்க” என்று சொல்லி அவருக்கு ஜால்ரா அடித்தாள். 

இங்கே இதன்யாவின் வீட்டில்,

“யாரு இப்படி காலிங் பெல் அடிக்கிறது? இருங்க இருங்க இதோ வரேன்” என்று இதயாவின் குரல் கேட்டது அவனுக்கு.

உள்ளுக்குள் பெரிய பூகம்பமே நடந்து கொண்டு இருந்தது. ‘எப்படி ஆரம்பிப்பது? என்ன சொல்வது? உண்மையை சொல்லக் கூடாதுன்னு வேற மிரட்டி அனுப்பி இருக்காங்க. வேற எப்படி சொல்வது? என்னுடைய மொத்த அன்பையும் கொடுத்த ஒரே நாளில் அந்த காதலை மொத்ததையும் திருப்பிக் கேட்டால் அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா?’ என்று அவள் சத்தம் கேட்டதில் இருந்து கதவு திறப்பதற்குள் அவன் மனதில் அலைகளாக எண்ணங்கள் வந்து கொண்டே இருந்தது. 

கதவு திறந்ததும், அஜய் அவளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்று கதவை தாழ் போட்டான். 

தன் கணவனைத் திரும்பப் பார்த்த சந்தோஷத்தில், “என்னங்க போனதும் வந்துட்டீங்க?” என முகமெல்லாம் புன்னகையுடன் அவனை நெருங்கி நின்று கேட்டாள்.

அவன் மீது அடித்த மண்ணெண்ணெய் வாசம் தாங்கிக் கொள்ளாமல் விலகிச் சென்று பதற்றத்துடன், “என்ன மாமா இப்படி மண்ணெண்ணெய் ஸ்மெல் வருது. ஆமா இந்த ட்ரெஸ் நீங்க போகும் போது போட்டு போனது தான? அப்போ இன்னும் வீட்டுக்குப் போகலையா நீங்க? இவ்ளோ நேரம் எங்க போனீங்க மாமா? சரி அதை விடுங்க, முதல்ல உள்ளே போய் குளிச்சுட்டு வாங்க. குளிச்சிட்டு இங்க உங்க ட்ரெஸ் ஒரு செட் இருக்கும் அதை போட்டுக்கோங்க” என்று அவனின் கரத்தை பிடித்து இழுத்தாள். 

ஆனால் அஜய் அசையாமல் நின்று இருப்பதைப் பார்த்தவளுக்கு என்னவோ தவறாகத் தோன்றியது.

“மாமா என்னாச்சு, ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்ட அடுத்த நொடி அவளின் கரத்தைப் பட்டென்று தட்டிவிட்டான்.

“என் பிரச்சனையே நீ தான்டி. இப்படி அட்டை போல ஒட்டிக் கொண்டே இருக்க. ச… சனியன் சனியன்… உன் முகத்தில என்னைக்கு முழிச்சேனோ அப்போ பிடிச்சது சனியன்” என்று அவன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கோபமாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் அஜய். 

“என்ன மாமா, பிராங் பண்றீயா? எங்க ஃபோனை ஒளிச்சு வச்சு இருக்க? ஏன் மாமா உனக்கு பொய்யா கூட என் மேல கோபப்பட தெரில. இங்க பாரு என்னை நீ திட்டுற, ஆனா உன் கண்ணுல இருந்து கண்ணீர் வருது” என இதயா கூறிய பிறகு தான் உணர்ந்தான், அவன் உதடுகள் மட்டுமே அவளைத் திட்டியது தவிர, உள்ளம் அழுதது அவனுக்குத் தெரியவில்லை.

அவன் பேசியதைக் கேட்டுக் கோபப்படுவாள் இல்லை அழுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, அவளின் அமைதியான பேச்சு அவனை ஆச்சரியப்படுத்தியது.

“சரி மாமா, நீ போய் முதல்ல குளிச்சுட்டு வா. ரொம்ப நேரம் மண்ணெண்ணெய் மேல இருந்தா ஸ்கின்னுக்கு தான் பிரச்சனை வரும்…” என்று அவள் பேசிக் கொண்டிருந்த சமயம்,

“இதன்யாஸ நம்ம பிரிஞ்சிடலாம்!” என்றான். 

அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போல் உணர்ந்தாள். தன்னைச் சமன் செய்து கொண்டு, “மாமாஸ என்ன சொன்ன? எனக்கு சரியா கேட்கல?”

“நம்ம பிரிஞ்சிடலாம் இதன்யா” என மீண்டும் அவன் அழுத்தமாக சொன்னதைக் கேட்டவளுக்கு, நெஞ்சம் பாரமாகிக் கண்கள் கலங்கியது.

உதடுகள் நடுக்கத்துடன், “மாமா, நீ சும்மா விளையாட்டுக்கு தானே சொல்ற. போ மாமா, எப்போ பார் என்னைக் கிண்டல் செய்றதே நீ வேலையா வச்சு இருக்க. இனி விளையாட்டுக்கு கூட நம்ம பிரிஞ்சிடலாம்னு சொல்லாத மாமா. என் இதயம் தாங்கிக் கொள்ளாது. ரொம்ப பலவீனம் ஆனது” என கண்ணீருடன் கூறினாள்.

“இல்ல இதன்யா, நான் என் மேல சத்தியமா தான் சொல்றேன். எல்லாம் ஓவர், நாம பிரிஞ்சு போய்விடலாம். எனக்குத் தேவையானது நேத்து நைட் கிடைச்சிடுச்சு. உன்னை அடைய தான் ஒரு வருசமா நான் உன் பின்னால் சுத்திக்கிட்டு இருந்தேன். அதான் நீயே உன்னை கொடுத்திட்டியே. இதுக்கு அப்புறம் நமக்குள்ள என்ன இருக்கிறது. அதான் எல்லாம் முடிஞ்சுப் போச்சே. ஸோ நாம பிரிந்து விட்டால் நான் என் வாழ்க்கையை பார்த்துப்பேன். இது சொல்லத் தான் திரும்ப வந்தேன். இனி இங்க வர மாட்டேன் உன் முகத்தையும் பார்க்க மாட்டேன்” என்று அஜய் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தான்.

இதன்யாவிற்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் முன் வந்து நின்று அவனைத் தடுத்தவள்,

கண்களில் கண்ணீர் வழிய அஜய்யின் இரு கரத்தையும் தன் இரு கரங்களில் பிடித்துக் கொண்டு, அவனின் கண்களைப் பார்த்தபடி, “மாமா, ஏன்டா இந்த முடிவு? என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? நீ இல்லன்னா செத்துடுவேன்டா! ஏமாத்த மாட்டேன்னு சொன்னியேடா. இப்போ அம்போனு நடுத்தெருவில் விட்டு போறீயே மாமா. நமக்குள்ள எல்லாம் அவ்வளவுதான்னு யோசிக்கும் போதே மனசு வலிக்குது மாமா. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாடா?” என அவள் வாய் வார்த்தைகளை உதிர்க்க, கண்களில் கண்ணீர் அருவியாகப் பொழிந்தது.

“எப்படி மாமா உன்னால் இந்த வார்த்தையைச் சொல்ல முடிந்தது? மாமா! மாமா! ப்ளீஸ்டா போயிடாத. சத்தியமா தாங்க முடிலடா. மூச்சு மூட்டுது, என்னால் இதை ஏத்துக்கவே முடியலயே. இங்க பாருடா நான் கூட நீ இல்லாமல் இருந்து விடுவேன் மாமா. ஆனால் உன்னால் தான்டா நான் இல்லாமல் வாழ முடியாது” என்று பிரியும் நேரத்தில் கூட அவனுக்காக யோசித்தவளை பார்த்தவனுக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.

அதுவரை அவன் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மனவேதனை கண்ணீராக உடைய தொடங்கியது.

“என் கிட்ட எதையும் கேட்காதடி. நான் ரொம்ப இக்கட்டான நிலையில் இருக்கேன். தயவுசெய்து என்னை மன்னிச்சிடுடி, புரிஞ்சிக்கோடி எனக்கு வேற வழி தெரியல. நாம பிரிந்து தான் ஆக வேண்டும். உன் மாமாவ மன்னிச்சிடுடி” என்று அஜய் அவள் கரம் பற்றி முகத்தில் புதைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினான்.

அவன் தலையை வருடிக் கொடுத்து, “ப்ளீஸ் மாமா, என்ன நடந்துச்சுனு சொல்லுடா. எந்த பிரச்சனையா இருந்தாலும் ரெண்டு பேரும் ஒன்னா நின்னு சமாளிப்போம் மாமா. ஆனா என்னை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாத மாமா. உன் கூட எப்படியெல்லாம் வாழணும்னு நான் ரொம்ப கனவு கோட்டை கட்டி இருக்கேன் மாமா. அதை சுக்கு நூறா உடைச்சிடாத மாமா. நீ இல்லாம நான் இல்லை மாமா” எனக் கண்ணீரோடு அவனிடம் தன் காதலுக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

ஆனால் அஜய் அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் கண்ணீரோடு இருந்தான். அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு ஒன்று புரிந்தது, அவன் தன்னை விட்டுப் பிரிந்து போவதில் உறுதியாக இருக்கிறான் என்று. 

அதைப் புரிந்து கொண்டவள், “மாமா, என்னைப் பார், நீ போகணும்னு தீர்மானம் எடுத்துட்ட. இதற்கு மேல் என் வலியை உனக்கு உணர்த்தவும், இனி உன்னைக் கட்டாயப்படுத்தி என் கூடவே இருந்துடுன்னு சொல்ல என்னால முடியாது. நீ போகலாம்ஸ இனி உன் பொண்டாட்டி உன் வாழ்க்கையில் இல்லை. 

எல்லாம் இந்த நிமிடமே முடிந்தது உன்னைப் பொறுத்தவரை. அப்புறம் என்னை மறக்கச் சொல்றதுக்கும், நினைக்க வேண்டாம் சொல்றதுக்கும் உனக்கு உரிமையில்லை. ஆனால் ஒன்னு மட்டும் எப்போதும் உன் நினைவில் வைத்துக்கொள். நான் உயிரோடு இருக்கும் இறுதி நாள், நிமிடம், நொடி வரை உன்னை ஒரு துளி அளவு கூட மன்னிக்க மாட்டேன். என்றாவது உன்னை மன்னித்து விடலாம் என என் இதயம் நினைக்கத் தொடங்கினால், அந்நொடியே என் இதயத்துடிப்பு நின்று விடும்.

என் இதயத்துடிப்பு நின்று விட்டால் உன்னை மன்னித்து விட்டேன் என்று அர்த்தம்” எனச் சிலை போல் நின்று கொண்டு உணர்ச்சியே இல்லாமல், கண்களில் ஒரு துளி கண்ணீர் வழியாமல், விழியின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரையும் உள்ளே இழுத்தபடி பேசியவளைப் பார்த்த அஜய்க்கு சிறிது பயம் உண்டாகத் தான் செய்தது.

இதன்யா சொல்வதைக் கேட்டவனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கிளம்ப நினைத்தவனிடத்தில், “மாமா, நாம இனி பார்த்துக் கொள்ளவே வேண்டாம் என நீ நினைத்தாலும், நம்ம சந்திக்கும் நாள் வரும்டா. ஆனால் அப்போது எல்லாமே முடிவு பெற்று இருக்கும். உன் கண் முன் தோன்றிய அக்கணம், இன்று நடந்தது ஒவ்வொன்றும் உன் நினைவிற்குத் தோன்றும். பிரியணும்னு முடிவு எடுத்துட்டல, நீ போ மாமா, ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம், இன்று நான் துடிச்சதை விட வரும் அந்நாளில் நீ துடிப்படா மாமா. 

நல்லா நினைவில் வைத்துக்கொள் மாமா, உன் கண்முன் நான் வரும் அந்நெடியிலிருந்து நீ பார்க்கும் எத்திசையும் சரி, உன் செயல், நீ பேசும் வார்த்தைகள், நீ நினைக்கும் நினைவுகள் அனைத்திலும் நான் மட்டுமே நிறைந்து இருப்பேன். நீ நினைத்தாலும் என் நினைவை உன்னால் அழிக்கவே முடியாது” என்று திமிருடன் சொன்னதைக் கேட்டவனுக்கு அச்சம் தோன்ற, அங்கே இருந்து நடக்கத் தொடங்கினான். 

இதயாவோ, “மாமாஸ” என அழைக்க, அந்த அழைப்பில் நின்றவன் திரும்பிக்கூட பார்க்காமல் அப்படியே நின்று இருக்க, அதைப் பார்த்தவளுக்கு இதயம் வெடித்துச் சிதறியது. 

“மாமாஸ இப்படி என்னை முட்டாளாக்கிட்டியே!” என அவள் கண்ணீருடன் கேட்க, யாரோ ஈட்டியை எடுத்து அவன் இதயத்தில் குத்தியது போல் உணர்வு தோன்றியது அவனுக்கு. அதற்கு மேல் அவன் அங்கே நிற்கவே இல்லை.

அஜய் போவதைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், அப்படியே மண்டியிட்டுக் கதறிக் கதறி அழுது துடித்தாள். ஜெயந்தி அவளை விட்டுப் போனதை விட மரண வேதனையை அடைந்தாள் இதன்யா.

***

அஜய் பதற்றத்துடன் வீட்டுக்கு வர, அங்கே அனைத்தும் சாதாரணமாக இருந்தது. 

அனைவரும் வீட்டில் இருப்பதைப் பார்த்தவன், ‘நான் முதல்ல வரும்போது லதாவும் சரவணனும் இல்லையே. இவங்க எப்போ வந்தாங்க? இவங்களுக்கு எல்லா விசயமும் தெரிஞ்சு இருக்குமா?’ என்று நின்று கொண்டு யோசித்தவனின் கரத்தை அவன் தாய் பிடித்து அறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றார்.

“என்ன அவளை வெட்டி விட்டியா?” என்று இரக்கமே இல்லாமல் கேட்டார்.

“இம்” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தான் அஜய்.

“நல்லது! இனிமே நீ அந்த கம்பெனிக்கு வேலைக்குப் போக வேண்டாம். அப்பா உனக்கு வேற நல்ல இடத்தில், வேலை பார்த்து வச்சு இருக்காரு அங்க போ. அப்புறம் இந்த விசயம் எதுவும் உன் கூட பிறந்த ரெண்டு பேருக்கும் தெரியாது. நீயும் சொல்லாத, அப்புறம் உன்னைத் தான் தப்பா நினைப்பாங்க. என்ன நான் சொல்கிறது புரியுதா?” என்று அவர் கேட்க,

இவன் அனைத்துக்கும் சேர்த்து, “இம்” என்று மட்டும் கூறினான்.

பின் அவர் சென்று விட, பாத்ரூமிற்கு சென்று தண்ணீரைத் திறந்துவிட்டு வாய்விட்டுக் கதறி அழுதான். ஓர் ஆண்மகனாக இருந்து தன்னால் தைரியமாக ஒரு முடிவு எடுக்க முடியாத, கோழையாக இருப்பதை எண்ணி தன்னைத்தானே அடித்துக் கொண்டான். தன் பெற்றோர்களுக்காக அவன் தாலி கட்டிய மனைவியை, அனாதையாகத் தவிக்க விட்டு வந்ததை எண்ணி எண்ணித் துடித்தான். 

அன்று அவள் தோழி பிரிந்து சென்ற போதே தன்னைத் தானே வருத்திக் கொண்டவள், இன்று அவளின் காதலையும் கனவையும் உடைத்துவிட்டு வந்துள்ளனே! என்ன செய்து கொள்வாளோ என்ற அச்சம் தோன்றியது அவனுக்கு. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிப் போனான் அஜய்.

அதன் பின் அவனின் தங்கையின் வாழ்க்கையைக் காட்டி அஜய்யை திருமணத்திற்குச் சம்மதம் வாங்கி, இதோ திருமணம் வரை வந்து விட்டது.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
135 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
251 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page