இறுதி அத்தியாயம்

 

இதோ இதன்யாவை பிரிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இந்த நொடி அவள் சொன்னது போல், அவளைப் பற்றி மட்டுமே நினைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறான் அஜய். 

அஜய் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான் சரவணன். ‘என்னோட அண்ணனின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்து இருக்கு. எத்தனை வலிகளைச் சுமந்து கொண்டு இருக்கிறான்’ என்று எண்ணும் போதே சரவணனுக்கு கஷ்டமாக இருந்தது. தன் பெற்றோர்களை நினைத்து வெட்கப்பட்டான். சரவணனால் ஜெயந்தியின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு அசிங்கமாக இருந்தது அவனுக்கு. 

“அதான் எல்லா கதையும் தெரிஞ்சுக்கிட்ட இல்ல, இப்போ எல்லாம் புரியுதா? காதல் கத்திரிக்கானு என் பின்னாடி சுத்தி உன் டைமை இனி வேஸ்ட் பண்ணாத” என சரவணனைப் பார்த்து எச்சரித்தவள்,

“முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்றாள்.

சரவணன் தன் அண்ணனை அழைக்க, அவனோ ஜெயந்தியின் முன் மண்டியிட்டு, “தயவுசெய்து உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன் ஜெயந்தி. என் இதயா எங்க இருக்கா? எப்படி இருக்கா சொல்லு. அது மட்டும் தெரிஞ்சுக்கிட்டா நான் நிம்மதியா இருப்பேன்” என்று தன் இரு கரம் கூப்பி கெஞ்சியவனைப் பார்த்து,

“உனக்குத் தண்டனைன்னு ஒன்னு கொடுக்கணும்னா, இதயாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம, வாழ்நாள் முழுக்க அவளை நினைச்சு நினைச்சு வேதனைப்பட்டு, உன்னோட வாழ்க்கையை வாழ முடியாமல் சாகவேண்டும். கடைசி வரைக்கும் இதயாவுக்கு என்னாச்சுன்னு உனக்குத் தெரியவே கூடாது” என்று அவனிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். 

அஜய்யோ, “இவ்வளவு பெரிய தண்டனையை எனக்குக் கொடுக்காத ஜெயந்தி…” என்று சாத்தியிருந்த கதவைப் பார்த்துக் கத்த, 

சரவணனோ ஜெயந்தியின் முடிவு தெளிவாக இருப்பதை உணர்ந்தவன், தன் தமையனை வலுக்கட்டாயமாக அங்கே இருந்து அழைத்துச் சென்றான். போகும் வழியில் சரவணன் அந்த பூச்செடியைப் பார்க்க, அப்போது தான் அவனுக்கு புரிந்தது. இந்த வீட்டிற்கு இன்னொரு வழியும் இருப்பது. 

அஜய்யோ தன் தவறை உணர்ந்தாலும், குற்றவுணர்வோடு மனதில் பாரத்தோடு அந்த வீட்டையே பார்த்தபடி புலம்பிக் கொண்டே நடந்தான். 

‘தன் அண்ணனின் கோழைத் த‍னத்திற்கு, கடைசி வரை இதன்யாவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே அவன் வாழ்க்கையை வாழ்வது தான், அந்த கடவுள் இவனுக்குக் கொடுத்த தண்டனையாக இருக்கும்!’ என்று சரவணனும் நினைத்தான். 

அறைக்குள் வந்த ஜெயந்தி, தன் தோழியின் புகைப்படத்தை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். 

“முட்டாள்டி நீ, உன் காதல் உண்மையா இருந்தாலும், அவனின் காதல் கோழையாகிப் போனது. அதற்கு நீ தண்டனை கொடுக்க வேண்டியது அவனுக்கு. உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளக் கூடாது. நான் மட்டும் அன்னைக்கு உன்னை விட்டுப் பிரிந்து போகாம இருந்திருந்தால், உன்னை இந்த நிலைமைக்கு வர விட்டு இருக்க மாட்டேன். 

என் கோபத்தாலும், நீ என்னிடம் மறைத்து காதலை அவனிடம் கூறியதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் சுயநலத்தாலும், அவனின் கோழைத்தனம் கலந்த சுயநலத்திலும் உன் காதல் உண்மையானது என்று நிரூபிக்க நீ எடுத்த முடிவின் சுயநலத்தால, இன்று நீ இப்படி உயிர் இருந்தும் நடைப்பிணமா படுத்து கிடக்கிறீயேடிஸ இந்த உலகத்தில் சுயநலம் இல்லாத மனிதர்களே இல்லை போல. அனைவரும் ஏதோ ஒன்றில் சுயநலத்துடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!” என்று படுக்கையில் எந்த அசைவுமின்றி இருந்தவளைப் பார்த்து கண்ணீரோடு பேசினாள் ஜெயந்தி. 

பின் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன்னோடு மொபைல் ஃபோனை எடுத்து கடைசியாக இதன்யா பேசிய வார்த்தைகளைக் கேட்டாள். 

அன்று அஜய் இதன்யாவை விட்டுப் பிரிந்து சென்றதும், அவளின் வாழ்க்கையில் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டது. யாரும் இல்லாத தனிமையில் வாடினாள். என்ன செய்வது என்று தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் வீட்டுக்குள் அடைந்து இருந்தவள், தன் உயிராக வாழ்ந்த தோழியிடம் பேச வேண்டும் என்று ஜெயந்திக்கு போன் செய்தாள். 

ஆனால் அவளின் போதாத காலம் அன்று பார்த்து, ஜெயந்தி ஒரு வேலையில் மாட்டிக் கொள்ள, அவளின் ஃபோன் சைலன்ட்டில் இருந்தது. பின் யோசித்தவள், வாட்ஸ்ஆப்பில் அவளுக்கு வாய்ஸ் மெஸேஜ் ஒன்றைப் பதிவு செய்தாள். 

“ஜெய்ஸ இன்னும் என் மேல இருக்கிற கோபம் குறையலயா? நான் இப்போ திரும்ப அனாதை ஆகிட்டேன்டி. சிறகு உடைந்த பறவை போல், என் வாழ்க்கை ஆகி விட்டது!” என்று ஜெயந்தி பிரிந்து போனதிலிருந்து நடந்ததைச் சொல்லிக் கொண்டு வந்தவள், அஜய் பிரிந்து சென்றதைச் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவளுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழுதாள். 

பின் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் நடந்ததைக் கூறி முடித்தவள், அதை அவளுக்கு அனுப்பி விட்டு எழுந்து தன் முகத்தைக் குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவிக் கொண்டாள். சற்று அவளுக்குப் புத்துணர்வு கிடைத்தது போல் உணர்ந்தாள். பின் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்தவள், காஃபி ஒன்றைக் கலந்து கொண்டு வந்து அமரும் போது, யாரோ காலிங் பெல் அடிப்பதைக் கேட்டவள் மனதில், அஜய்யாக இருக்குமோ என நினைத்தவள், தயங்கியபடி கதவைத் திறந்தாள். 

கதவைத் திறந்தவள், முகம் அறியாத இரு நபர்கள் நின்று இருப்பதைப் பார்த்து, “யாரு நீங்க? யார் வேணும்?” என்று கேட்டாள். 

“உள்ளே போய் பேசலாமா, இல்ல இங்கேயே நின்று பேசலாமா? இங்க நின்னு பேசுனா, உன் மானம் தான் போகும். அதுவே உள்ள போய் பேசினா நாலு சுவருக்குள்ள முடிந்திடும்” என்று சொல்லியவரைப் பார்த்த இதன்யா ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றாள்.

“நீங்க என்ன பேசுறீங்கனு புரியல. முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க?” என்றாள்.

“நாங்களா! அதான் நீ மயக்கி வச்சு கூத்தடிச்சியே அஜய், அவனோட அப்பா, அம்மா” என்று அவளின் மனதைக் காயப்படுத்தி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் இருவரும். 

என்னதான் அஜய் அவளைப் பிரிந்து வந்தாலும், அவர்கள் இருவருக்கும் நம்பிக்கை இல்லாமல் போனது. திரும்பத் தன் மகன் இதன்யாவை பார்க்க வரக்கூடாது. அப்படி வந்தாலும் இவள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து, இதன்யாவை அசிங்கப்படுத்த நினைத்து இங்கே வந்து நிற்கிறார்கள். 

அவர்கள் அப்படிப் பேசியதைக் கேட்டவளுக்கு அசிங்கமாக இருந்தது. ‘என்ன அப்பா, அம்மா இவங்க? ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்று கூடவா தெரியாது?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் இதன்யாவை நகர்த்தி விட்டு உள்ளே சென்றனர்.

“உனக்கு மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் இருக்கா என்ன? ஆனால் நாங்க அப்படி இல்ல, நாங்க ரொம்ப கௌரவமான குடும்பம், மானம் மரியாதையோடு வாழ்கிறோம்” என்று பேசிக் கொண்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள்.

“ஆமா இந்த வீட்ல நீ மட்டும் தான் தனியா இருக்கியா?” என்று சேகர் கேட்க,

அஜய்யின் பெற்றோர்கள் என்றதும் அவளின் மனதில், ‘ஒருவேளை அஜய் அவங்க அப்பா, அம்மா கிட்ட என்னைப் பத்தி பேசி இருப்பாரோ, அதான் அவங்க அப்பா, அம்மா வந்து இருக்கிறார்களா?’ என்று நினைத்தவள்,

“ஆமாங்க நான் மட்டும் தான் இருக்கேன்” என்று சொன்னாள்.

செல்வியோ, “இவ எங்க தனியா இருக்கா. அதான் நம்ம புள்ளையை வளைச்சுப் போட்டு கூத்தடிச்சிகிட்டு இருக்கிறாளே, பொண்ணா இவ! யாரும் இல்லாமல் அனாதையா இருக்கிறவ, ஒரு நல்ல குடும்பத்துப் பையன் கிடைச்சதும் மயக்கி வச்சுக்கிட்டாள். ச்சீ! நீயெல்லாம் நல்ல அப்பா, அம்மாவுக்குப் பிறந்த பொண்ணா இருந்தா, இப்படி ஒரு கௌரவமான குடும்பத்துப் பையனைக் கூட வச்சுக்கிட்டு இருப்பியாடி” என்று அவளை வார்த்தைகளால் புண் படுத்தினார்கள். 

அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாத இதன்யா, தன் காதை பொத்திக் கொண்டு, “போதும் நிறுத்துங்கஸ” என்று கத்தியவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார் செல்வி.

“என்னடி என்னவோ பத்தினி மாதிரி கூச்சப்படுற? இங்க பாரு நாங்க பேசிட்டு போற வரைக்கும் நீ வாயே திறக்க கூடாது புரியுதா?” என்று அவளை எச்சரித்தார். 

பின் சேகர், “இங்க பாரும்மா. உன்னை அசிங்கப்படுத்த எங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனால் அதை நாங்க செய்ய மாட்டோம். ஏன்னா இதுல எங்க பையன் பெயர் சம்மந்தப்பட்டு இருக்கு. அதனால நாங்க சொல்றதைக் கேட்டு நடந்துக்கிட்டா உனக்கு நல்லது” எனக் கூறியவர், 

தொடர்ந்து, “என் பையனை விட்டு விலகி இரு. அவனோட வாழ்க்கையில எப்போவும் வர நினைக்காத. இல்ல முடியாது, என் பையன் தான் வேணும்னு அடம்பிடிச்சிட்டு இருந்தா, அது உனக்கு நல்லதில்லை. ஜாக்கிரதையா இருந்துக்கோ. உன் உயிர் உனக்கு முக்கியம் தானே. பொண்ணா வேற போய்ட்ட. அதுவும் தனியா வேற இருக்க. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்று அவர் மிரட்டினார்.

செல்வியோ, “அட ஏங்க நீங்க வேற இவகிட்ட பேசிட்டு இருக்கீங்க. இங்க பார்டி, ஒழுங்கு மரியாதையா என் புள்ளைய விட்டு போயிடு, இல்ல இந்த தெருவே உன்னைப் பார்த்து காரி உமிழ்ற அளவுக்கு அசிங்கப்படுத்திடுவேன்” என்று இன்னும் மிரட்டினார். 

“வாங்க போகலாம், இவக்கிட்டலாம் பேசுற அளவுக்கு, இவள் ஒன்னும் கௌரவமான குடும்பத்து பொண்ணு இல்லை” என்று சொல்லித் தன் கணவனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். 

அப்படி வெளியே போகும் போது அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இந்நேரம் வேற ஒரு நல்ல பொண்ணா இருந்தா இந்நேரத்திற்கு தன் உயிரையே விட்டு இருப்பா” என்று கூறிவிட்டுச் சென்றார். 

அவர்கள் போனதும் அடை மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு. பாவம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் எதற்காக வந்தார்கள்? எதற்காகத் தன்னை அசிங்கப்படுத்தி என் மனதைக் காயப்படுத்தினார்கள்? என்று ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனாள். 

‘கௌரவம், கௌரவம்னு சொல்லிட்டு இருந்தாங்களே அது என்னது? இப்படி யாருமே இல்லாத ஒரு பொண்ணை அசிங்கப்படுத்திப் பேசுவதா?’ என்று இதன்யா யோசித்துக் கொண்டு இருந்தவள், 

‘என் காதலால் மாமாவுக்கு பிரச்சனை வந்து இருக்குமோ? அதான் இவர்கள் இப்படி பேசிவிட்டு போகிறார்களா?’ என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. 

‘தன்னால் எல்லாருக்கும் பிரச்சனை தான். என்னால் யாருக்குமே நிம்மதி இல்லை. ஜெயந்திக்கும் என்னால் நிம்மதி இல்லை. இப்போ என் மாமாவிற்கும் நிம்மதி இல்லை. இனி நான் யாருக்காக வாழ வேண்டும்? எனக்கு என்று யார் இருக்கிறார்கள்? நான் வாழ்ந்து எல்லாருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பதை விட, நான் இல்லாமல் போனால் அனைவருக்கும் நிம்மதியாவது கிடைக்கும்’ என முட்டாள்தனமாக யோசித்தவள், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள். 

இன்றும் ஜெயந்தி தன் தோழியின் நிலைக்கு, அஜய் தான் காரணம் என்று அவன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு இருந்தாள்.

“அவன் உன்னை விட்டுப் பிரிந்து போனதுக்கு அப்புறம், கடைசி என் குரல் கேட்க வேண்டும் மெஸேஜ் அனுப்பி விட்ட, நான் அதைக் கவனிக்கத் தவறிட்டேனே. ஏற்கனவே மனவேதனையில் இருந்தவளுக்கு நானும் சேர்ந்து வேதனையை கொடுத்துட்டேன். பாவி சாக வேண்டும் முடிவு எடுத்துட்டியேடி. உன்னை ஏமாத்திட்டு போனவனைப் பத்தி நினைச்ச நீ… என்னைப் பத்தி நினைக்க மறந்துட்டியே. நீ இந்த உலகத்தை விட்டு போகணும் முடிவு செய்து மலையிலிருந்து விழ போனியேஸ யார் செய்த புண்ணியமோ, உன்னை ஏமாத்திட்டு போனவனின் தம்பி சரவணன் சரியான நேரத்தில் உன்னை காப்பாற்றிவிட்டார். 

ஆனால் அப்படி இருந்தும் மலைக்கு அருகிலிருந்த அருவியில் நொடிப் பொழுதில் விழுந்துட்டியே இதயா. ஆனால் அப்போவும் சரவணன் தான் உன்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து, உன்னைப் பத்தி எப்படியோ விசாரித்து என்னை இங்க வர வைத்தார். இங்க வந்தா உன்னை அப்படி ஒரு நிலைமையில், ஹாஸ்பிட்டல்ல எந்த அசைவும் இல்லாமல் பார்த்ததும் என் உயிரே போயிடுச்சு” என்று சொல்லிப் படுக்கையில் படுத்து இருந்த இதன்யாவை பார்த்து கண்ணீர் சிந்தினாள் ஜெயந்தி. 

அன்று அஜய்யின் பெற்றோர்கள் அவளைக் காயப்படுத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாத இதன்யா, இனி யாருக்கும் நாம் தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து, குற்றாலத்திற்கு சென்று, அங்கே இருந்த மலை உச்சியிலிருந்து கீழே விழப் போனவளை, அங்கே நண்பர்களோடு சுற்றுலா பயணத்திற்கு, அதே ஊருக்கு வந்த சரவணன் அவளை காப்பாற்றினான். 

“ஹலோ மேடம் ஏன் குதிக்க போனீங்க?” என்று அவன் கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த அடுத்த நொடி, இதன்யா அருகிலிருந்த அருவியிலிருந்து குதித்தாள். ஆனால் அவள் கெட்ட நேரமா இல்லை நல்ல நேரமா என்று தெரியவில்லை. குதித்தவள் அடித்துக் கொண்டு போகும் தண்ணீரில் விழாமல் பாறையில் விழுந்தாள். 

விழுந்த வேகத்தில் பின்னந்தலையிலும், முதுகில் நடு எலும்பிலும், பலமான அடிப்பட்டது.  தன் கண்முன்னே ஓர் உயிர் போவதைப் பார்க்க முடியாத சரவணன், அங்கே இருக்கும் வனத்துறை அதிகாரிகளை வைத்து எப்படியோ அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான். 

அங்கே அவளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “அவளின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், அவங்க கோமா ஸ்டேஜுக்கு போயிட்டாங்க” என்று சொல்லி சரவணனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்கள்.

பின்பு சரவணன் ஒரு வழியாக தன் நண்பர்களை வைத்து இதன்யாவைப் பற்றி விசாரிக்க, அவளுக்கு ஒரு தோழி மட்டுமே இருப்பது தெரிய வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு சரவணனின் முயற்சியால் ஜெயந்தியின் நம்பர் கிடைக்க, இதன்யாவை பற்றிய செய்தியைக் கூறினான். 

அதன் பின் ஜெயந்தி வரும் வரை இதன்யாவிற்கு துணையாக மருத்துவமனையில் சரவணன் இருக்க, ஜெயந்தி பதற்றத்தோடு தன் தோழிக்கு, என்னாச்சோ ஏதாச்சோ என்ற கவலையோடு வந்தவளைப் பார்த்த நொடியில், ஜெயந்தியின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது.

பிறகு இதன்யாவை அவ்வப்போது பார்க்க வந்த சரவணன், ஒரு நாள் ஜெயந்தியிடம் தன் மன விருப்பத்தைச் சொல்ல, 

அவளோ, “என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு உங்கள் மீது பெரிய மரியாதை உள்ளது. ஆனால் காதல் இல்லை. இனி என் வாழ்க்கை முழுவதும் என் தோழிக்கு மட்டுமே. இனி வரும் காலம் என் இதன்யாவிற்காக வாழப் போகிறேன். அது தான் நான் அவளுக்குச் செய்யும் பரிகாரம். அன்று நான் மட்டும் சுயநலத்தோடு கோபப்பட்டு இவளைப் பிரியாமல் இருந்திருந்தால், அவளின் வாழ்க்கையில் இத்தனையும் நடந்து இருக்காது. எல்லாமே என் தப்பு மட்டும் தான்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள். 

இதற்கு மேல் மருத்துவமனையில் இருக்க முடியாது என நினைத்தவள், இதன்யாவை வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக் கொண்டாள். பகல் முழுக்க வீட்டைத் திறந்து வைத்து தன் தோழியைக் காத்தவள், இரவுகளில் மட்டும் வீட்டைப் பூட்டிக் கொண்டு, பின் வாசல் வழியாக மீண்டும் வீட்டிற்குள் வந்து தன் தோழியைப் பார்த்துக் கொண்டாள்.

இனி தன் வாழ்க்கை தன் தோழிக்காக மட்டுமே என்று முடிவு செய்தாள் ஜெயந்தி. 

மென்மையான குணத்தோடு, சிரித்த முகத்தோடு இருந்தவளின் வாழ்க்கையில் காதல் என்னும் காலன் நுழைந்து, அவளுடைய வாழ்க்கையில் விளையாடி விட்டு சென்று விட்டான். 

அதுதான், ‘யானை கொடுத்தாலும் ஆசை கொடுக்காதீர்கள்’ என்ற சொல் இன்று உண்மையாகிப் போனது. பயமும் கோழைத்தனமும் சுயநலமும் இல்லாத மானிடர் பிறக்கும் உலகத்தில் மீண்டும் இதன்யா தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில், நாமும் இவர்கள் இருவரின் வாழ்க்கைக்காக வேண்டிக் கொண்டு விடை பெறுவோம். 

காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள் முடிவு பெற்றது. 

***நன்றி***

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அரக்கனின் காதலி
135 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
252 10 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
243 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page