நிஜமாகும் நினைவுகள்

 

           அத்தியாயம் 1

     🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

          முன்புறம் சிறிய பூஅலங்காரத்துடன் கூடிய அந்தக் கார் வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதையில் சீரான வேகத்துடன் அழகாகப் பயணித்தது.

      லாவகமாக ஸ்டியரிங்கை வளைத்து ஒடித்து ஓட்டினான் தீபக். அருகில் பட்டு வேஷ்டி சட்டை சகிதமாக முகமும், கண்களும் பளிச்சிட சிபி அமர்ந்திருந்தான்.

       பின்பக்க இருக்கையில் அவனது அம்மா சாவித்ரி, அப்பா ராகவன், தங்கையும் தீபக்கின் மனைவியுமான, ஷன்மதி. “தீபு பொண்ணு வீட்ல கோவிலுக்கு வந்துட்டாங்களா? நீங்க கேட்டீங்களா? “என்று தன் கணவனிடம் கேட்டாள்.

     “கேட்கல மதி. அவங்க உள்ளூர் தானே? வந்திருப்பாங்க. இந்த காலத்துலயும் கூட இப்படி ஆட்களானு அதிசயமா இருக்கு. ஆனந்த் மட்டும் முயற்சி எடுக்கலைன்னா, இந்தக் கல்யாணம் நடக்கிறதே கஷ்டமா போயிருக்கும் “என்று லேசாக சலித்தான்.

     “கிராமத்துலயே இருக்கிறவங்க மாப்ள,அதான் அப்படி “என்றாள் சாவித்ரி. “இப்போ கிரமங்கள் கூட நல்லா முன்னேறிருக்குதே சாவி?”என்று மனைவியிடம் கேட்டார் ராகவன்.

    “ ஆமாத்த. மாமா சொன்ன மாதிரி, ஆன்ட்ராய்டு போனும், டிஷ்ஷூம் கிராமத்து வீடுகள்லயும் வலம் வர ஆரம்பிச்சாச்சே? பியூட்டி பார்லர் கூட இருக்கு மதிம்மா” என்றான் தீபக்.

     “மனுசங்களுக்குதான் மாற்றம் வந்துருக்கு மாப்ள. அவங்க மனசு இன்னும் பழைய பஞ்சாங்கம் தான். ரத்தத்துலயே ஊறினது அவ்வளவு சுலபமா மாறாது “என்றாள் சாவித்ரி.

     “இப்போ தான் எல்லாம் சரியாயிடுச்சேம்மா?இன்னும் கொஞ்ச நேரத்துல இதேக் கார்ல உங்க மருமகளோடத் திரும்ப வீட்டுக்குப் போகப் போறோம்” என்றான் சிபி.

    “ இங்கப் பார்ரா,இப்பவே விட்டுக் குடுக்காமப் பேசறத? தீபு உங்க ப்ரெண்டுதானே எங்க அண்ணன்? கொஞ்சமாவதுக் கத்துக்கேங்க “என்றாள் ஷண்மதி.

    “ ஏன் சொல்லமாட்டே? இப்போ வரை புருஷனா நீதானே இருக்க? அப்புறமும் உனக்கு  குறை. பார்த்துக்கோங்கத்தை. உங்கள மாதிரி தான் உங்க பொண்ணு நடந்துக்கிறாளா? நீங்களே சொல்லுங்க “என்று சாவித்ரியிடம் கேட்டான் தீபக்.

      “அய்யோ சாமி. உங்க புருசன், பொண்டாட்டி பஞ்சாயத்துல, பாவப்பட்ட என் பொண்டாட்டிய இழுத்து விடாதீங்கப்பா. கொஞ்ச நேரத்துல நீங்க ஒண்ணு கூடிக்குவீங்க “என்றார் ராகவன்.

    காருக்குள் லேசாக சிரிப்பலைப் பரவ, மகழ்ச்சியான வேகத்தோடு,கார் கோவிலை நோக்கி பயணித்தது…

       மறுபுறம் இளம் ரோஜா வர்ணத்தில், அடர் பச்சை சரிகையிட்ட,அதிகமான பளபளப்பு இல்லாத பட்டு சேலையில்,எளிமையான நகை அலங்காரத்துடன்,ஓவியமாக கோவில் பிரகாரத்தின் ஒரு படியில் அமர்ந்திருந்தாள் அகல்யா.

     மணப்பெண் அவள்தான். அழகுப் பதுமையாக அமர்ந்திருந்த அவள் முகத்தில்ஆயிரம் சிந்தனை ரேகைகள் நெளிந்தபடி இருந்தது.

     “அகல் என்னம்மா இங்க உக்காந்துருக்க? இன்னும் கொஞ்சநேரத்துல, மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துடுவாங்க.நீ தனியா உக்காந்துட்டு இருக்காம, அங்க எல்லோர் கூடவும் போய் உக்காரும்மா.” என்றான் ஆனந்த்.

    லேசாகக் கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டாள் அகல்யா. “ஷ்ஷ் என்னம்மா இது? எதுக்கு இப்போக் கண்கலங்குற? “என்று லேசாகப் பதறினான்.

   “ பயமா இருக்குண்ணா. நான் இப்பிடியே உங்களோடையேஇருந்துடுறேனே? “என்றுக் கலங்கும் குரலில் சொன்னாள்.

    ஆனந்தின் மனைவி ரூபிணி, இவர்கள் சம்பாஷணையைக் கவனித்தவளாக,”என்ன அண்ணனும் தங்கச்சியும் கொஞ்சிக் குலாவிட்டு இருக்கீங்க போல? “என்றபடி வந்தாள்.

    “பாரு ரூபி,சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாத் திரும்ப, திரும்ப அதையே சொல்றா. நாங்க என்ன உன்னைப் பிடிச்சுக் கிணத்துலயாத் தள்ளிவிடுறோம்?”

     “நல்ல பையன். அவங்களாவே விரும்பி வந்தாலும் கூட,எல்லாம் விசாரிச்சுதான் செய்றோம். அப்பா அம்மாவே சந்தோசமா இருக்கும் போது, நீமட்டும் ஏன் பிடிவாதம் பண்ற? “என்று லேசாக எரிச்சலுற்றான்.

    “சும்மா போங்க நீங்க. அதெல்லாம் சரியாயிடும். எடுத்து சொன்னாப் புரிஞ்சுக்குவா. இன்னும் அவ என்ன சின்னக் குழந்தையா? நீ எழும்பி வா அகல்யா பிரகாரம் சுத்திட்டு வரலாம் “என்று வம்படியாக அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் ரூபிணி.

     சுற்றும் போதே நாத்தனாரின் கைகளை இதமாக அழுத்தி, “பாரு அகல், நீ வளர்ந்த விதத்துல, உனக்கு ஏத்துக்க இது கொஞ்சம் சிரமமா இருக்கலாம். ஆனா இன்றைய காலகட்டத்தில் இது சாதாரண விசயம்தான். வீணா மனசைப் போட்டு அலட்டிக்காத.”என்றாள் ரூபிணி.

   “ அதில்ல அண்ணி, முதல் கோணல் முற்றிலும் கோணல்னு சொல்வாங்களே. ஒருவேளை நிஜமாவே அந்த அம்மா சொன்னது போல நான் ராசியில்லாதவளோ? அத்தனை பேர்ல எ..என.. எனக்கு…மட்டுமே…” என்று அவள் திணறியதை முடிக்க விடாமல் குறுக்கிட்டாள் ரூபிணி.

    “இது என்ன அசட்டுத்தனம் அகல்? நல்ல விசயம் நடக்கும் போது, இன்னும் ஏன் அதே பழைய நினைவுகளோடப் போராடிட்டு இருக்க? உங்க அண்ணன் உனக்கு நல்லது மட்டும் தான் செய்வாருனு உனக்கு நம்பிக்கை இல்லையா? “லேசாகக் கோபம் காட்டினாள்.

    உதடுகளை அழுந்த மூடி, தலைகுனிந்து புறப்பட்டு வந்தக் கண்ணீர் முத்துக்களை தரையில் விட்டாள் அகல்யா. சட்டென நிதானித்த ரூபிணி “இங்க பாரும்மா, ஆரம்பத்துல லேசாத் தடுமாற்றம் இருக்கலாம். ஆனா நாள் போகப் போக நீயே வந்து என்கிட்ட நன்றி சொல்வப் பாரேன்” என்றாள் ரூபிணி.

   “ கண்ணைத் துடைச்சுக்க அகல், யாராவதுப் பார்த்தாங்கன்னா தப்பா நினைப்பாங்க. அந்தப் பையன் ரொம்ப நல்லவிதமாத் தான் தெரியுறான். நிச்சயம் உன்னைப் புரஞ்சுக்குவான். ரெண்டு பேருமா, ரொம்ப சந்தோசமா வாழ்வீங்கப் பாரேன்” என்று நாத்தனாரை செல்லமாக இடிக்க அகல்யா வரவழைத்தப் புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.

    இருவரும் பேசியபடியே மெல்லப் பிரகாரத்தை சுற்றி வந்தனர். “எங்கம்மா போனீங்க? கொஞ்ச நேரமா ஆளையேக் காணோம்? “ என்று கேட்டாள் அகல்யா அம்மா வாசுகி.

  “  சும்மா சாமி கும்பிடத்தான் அத்தே “என்றாள் ரூபிணி. “தாலிக்கட்டி முடிச்சிட்டு, ஜோடியாப் போகணும். இப்படி ஒத்தையிலப் போயிப் போயித்தான் ஒத்தமரமா வந்து நின்னா. “என்று நொடித்தாள் ஆனந்த், அகல்யாவின் அத்தை ராஜாத்தி.

    கொதித்துக் கோபமாகப் பேசப் போன ரூபிணியை சைகையால் அடக்கிய ஆனந்த், “அத்தை, இங்கேயா நிக்கிறீங்க?உங்களை அப்பாத் தேடுனாரே? “என்று அந்தப் பக்கமாக விரட்டினான்.

     பெருமூச்சை வெளிவிட்ட வாசுகி, “கல்யாணம் நல்லபடியா முடியணும் கடவுளே. அதுதுக்குள்ள இன்னும் எத்தனை கேடுகளை செய்ய, இந்தம்மா காத்திருக்கோத் தெரியல. ஆண்டவா நீதான் காப்பத்தணும் “என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள் வாசுகி.…

       தொடரும்

(வார்த்தைகளின் எண்ணிக்கை 600)

        அத்தியாயம் 2

     குட்டைக் குட்டையான கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு, வாத்து போல நடந்து செல்லும் அத்தையைக் கண்ட ஆனந்துக்கு சிரிப்பு வந்தாலும்,அடக்கியவனாக, அவள் அந்தபக்கம் செல்லும் வரைக் காத்திருந்துவிட்டு, மனைவியை நோக்கி, “கொஞ்சம் பொறுமையா இரு ரூபி “என்றான்.

     ” பின்ன என்னங்க, நாமளே இந்த நல்ல காரியம் நடக்கிறதுக்காக என்ன பாடுபட்டுட்டு இருக்கோம்? மாமாவை சம்மதிக்க வைக்க பட்டபாட்டை விட, இதோ இப்போ வரை, இவ ஏதாவது சொல்லிட்டு இருக்கிறதையும்,சமாளிச்சு இவ்வளவு தூரம் கொண்டுவந்தா, அச்சாணியம் பிடிச்ச மாதிரி, என்ன பேச்சு இது? “என்று கொதித்தாள்.

    ” ரூபி.. அத்தையோட சுபாவம் புதுசில்லையே? அவங்க ஏன் இப்படி பண்றாங்கன்னும் நமக்குத் தெரியும். அதனால ரியாக்ட் பண்ணாம போறதுதான் நமக்கு நல்லது. இல்லாட்டி எப்போ,எப்படி பிரச்சனையை ஆரம்பிக்கலாம்னு அலையுறவங்களுக்கு நாமே வழி ஏற்படுத்தக் கூடாது.சரியா?” என்றான் ஆனந்த்.

     மனமில்லாத வகையில் அவனைப் பார்த்து, தலையசைத்து வைத்தாள் ரூபிணி. சிறுசிறு சலசலப்புகளை, சாமர்த்தியமாக சமாளித்தபடி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் சகோதரனைக் கண்ட அகல்யாவுக்கு மனம் வலித்தது.

     ஆனந்த் மிலிட்டரியில் இருந்து ரிடையர்டாகி, ஆறுமாதமாகிறது. இப்போது பெங்களூரில் ஒரு ஸ்கூலில் பிடி டிரெயினராக இருக்கிறான். அண்ணியும் அதே ஸ்கூலில் டீச்சர்.

     இந்த காலத்திலும் ஜாதிப்பற்றை வேறுவிதமாக பிரகடணப்படுத்தும் ஒரு குடும்பத்தின் தலைவர் அப்பா ரத்னவேலு.வள்ளுவனின் வாசுகிக்கு சற்றும் குறையாதவள்தான் அம்மா வாசுகி.

    ரத்தினவேலு பழமைவாதி. பரம்பரை பெருமை என்று அலைபவர். அகல்யாவும் அப்படித்தான் வளர்க்கப்பட்டாள்.குடும்பம் வீடு இதுதான் அவளது உலகம்.

     அதற்காக ரத்னவேலு மகளை படிக்க வைக்காமல் ஒன்றும் இருந்துவிடவில்லை. ஹோம் சயின்ஸ் படிக்க அவள் ஆசைப்பட, கல்லூரியில் டாப்பராக வந்த போது, ஊருக்கே விருந்து வைத்தார்.

     அவர்களது ஊர் சிறிய கிராமம். அதன் பிரசிடெண்ட் ரத்னவேலுவே. பெரும்பாலும் சொந்த பந்தங்கள் அதிகமாக வசிக்கும்,அந்த கிராமத்தில்,அவர் சொல்லே அனைவருக்கும் வேதவாக்கு.

      இந்நிலையில் தான் மிலிட்டரியில்,தன்னுடைய சபார்டினேட்டாக இருந்த முரளி,தன் தங்கைக்கு பொருத்தம்,என்று தன் தந்தையிடம் கூற, அவர் தனது குடும்ப பெருமைக்கு ஒத்து வருமா?என்று விசாரித்து, திருமணத்தை முடிவு செய்தார்.

      தனக்கென எந்த முடிவும் எடுக்கத் தெரியாத, அகல்யாவும் சம்மதிக்க,ஒரு விடுமுறையில் முரளியின் மனைவியானாள் அகல்யா.

      பரம்பரைப் பெருமைக்காக பணம் கைமாறியதே தவிர,மனம் பற்றிய தெளிவு இல்லாமல் போனது,அகல்யாவுக்கு நன்மையா? இல்லைத் தீமையா?என்பது இன்னும் அவள் மனதில், விடையறியா வினாவாகவே உள்ளது.

    முரளிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருந்திருக்கவில்லை. தன் மேலதிகாரி சொல்லும் எதையும் எதிர்த்துப் பழக்கமில்லாதவன், இந்த விசயத்திலும் தன் மனதை மறைத்துவிட்டான்.

      தன் தங்கைக்கு நல்லது செய்வதாக எண்ணி,அதுவே அவளது வாழ்வின் அல்லலாக மாற்றிவிட்டக் குற்ற உணர்வு இன்றளவும் ஆனந்துக்கு மாறவில்லை.

     குடும்ப மகிமையைப் பார்த்த, ரத்னவேலுவும், முரளியின் மனதை மட்டுமல்லாமல், ஆயுளின் அளவையும் அறிந்திருக்கவில்லை.அவரறிய அவரது தமக்கை விடவுமில்லை.

     ராஜாத்திக்கு தன் அண்ணன் மகளை, தன் மகன் மணிவண்ணனுக்கு கட்டி வைத்தால், சொத்து வெளியேப் போகாது என்று திட்டம் போட்டாள். ஆனால் அதில் ஆனந்த் மண்ணையள்ளிப் போட்டு விட, முடிந்த அளவுத் தடுக்க முயற்சி செய்தாள்.

       விதி வலியதாக இருந்தது. போதாக்குறைக்கு வேலைவெட்டிக்கு போகாமல் சண்டியராக சுற்றும் மணிவண்ணனுக்கு,தன் மகளை திருமணம் செய்து வைக்க, ரத்னவேலுவுக்கு என்ன கிறுக்காப் பிடித்திருக்கிறது?

      முடிந்தவரை முயன்று விட்டுத் தோற்றுப் போயிருந்தவளுக்கு,மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க, மீண்டும் அதில் மண்ணைப் போட்டவன் அதே ஆனந்த் தான்.

     திருமணம் முடிந்த பத்தாவது நாளே, எமர்ஜென்சி என்று அழைப்பு வர, சென்றவன்தான், மூன்றாம் மாதம், தேசியக் கொடிப் போர்த்திய பெட்டியில் தான் வந்தான்.

    அன்றைய நிகழ்வு,இன்னும் அகல்யா மனதிலிருந்து போகவே இல்லை.ஒரு அதிகாலைப் பொழுதில், முரளியின் அம்மா சுந்தரியின் அலறலில்,கதிரவன் கூட வெளியே வரவா? வேண்டாமா?என ஒரு கணம் திகைத்து தான் போனான்.

      பகைவர்களின் உறைவிடம் தேடி சென்றவன், பகைவன் குண்டடிப்பட்டு தன்னுயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்தான். ராணுவத்தில் இது புதியதல்ல. ஆனால் இழந்தவர்களுக்கோ அப்படியல்லவே?

     வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு சுந்தரி அழுதாள். புத்திர சோகத்தில் மாமனார் பரமசிவம் கதறினார்.சகோதர பாசத்தில் அண்ணன் ரவியும் பதறினான்.

     என்ன செய்வதென்றே புரியாமல்,மற்றவர்கள் அழுததைக் கண்ட அகல்யாவின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது. அந்த அளவு தான் அவர்கள் உறவு.

    கல்யாணத்துக்கு முன்தினம் தான் முரளி வந்தான். தனது விருப்பமின்மையை, ஏதேதோ வழிகளில் காண்பித்தும், தோற்று, வழக்கமானமிரட்டலுக்கு பயந்து தான் அதுவும் வந்தது.

    பெற்றவள் செத்துப் போவதாக மிரட்டல் விட, வேறுவழியில்லாமல் பணிந்தான். தோழிகள் கல்யாணத்துக்கு முன்பே,அவுட்டிங்க், போட்டோ ஷூட்,என சென்றிருக்க, அகல்யாவிடம் முரளி போனில் கூடப் பேசியிருக்கவில்லை.

      அவளும் அதற்காக கவலைப் படவில்லை.கேட்டால்கூட அப்பா ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதால் அதை பெரிதாக எண்ணவில்லை.

     திருமணநாளிலும் கூட, அவன் அவளிடம் ஆர்வம் காட்டாது போக, சற்றே ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஒருவேளை அது ஆணின் வெட்கமோ?என்று எண்ணிக் கொண்டாள்.

      இரவின் தனிமையில் தான் முரளி தன் மனதைத் திறந்தான்.”இங்க பாருங்க அகல்யா. எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமில்ல” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

     அதிர்ந்து விழித்தவளிடம் தொடர்ந்து, “உங்க அண்ணன் என்னோட சுப்பீரியர். எப்பவும் அவர் கமாண்ட் பண்றத மீறுனதில்ல. எங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொன்னப்போ, அவங்களும் ஒத்துக்கல.”

      ” எனக்கு ஒரு காதல் உண்டு. அதுல பெரியவங்களுக்கு விருப்பம் இல்ல. ஜாதி மற்றும் பணத்துக்கு முன்னாடி என் காதல் தோத்து போச்சு.” என்று விழிகளை வேதனையுடன் மூடினான்.

      “ஆனா நீங்க என்கிட்டேயாவது சொல்லிருக்கலாமே? நான் எங்க அண்ணன் கிட்ட சொல்லித் தடுத்திருப்பேனே? வீணா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் சிக்கல்ல விழுந்திருக்காதே?” எனக் கரகரத்தாள் அகல்யா.

    ” அதென்னவோ தப்புதான். எப்படியாவது நிறுத்தலாம்னு நினைச்சேனே தவிர, உங்க மூலமா செய்யலாம்னு தோணல. ஒருவேளை நீங்களும் வீட்டுக்கு அடங்கினவங்களா இருந்ததால, உங்களாலக் கூட நிறுத்தியிருக்க முடியுமா?” என்று கேட்டான்.

    அவளால் திகைத்து தான் விழிக்க முடிந்தது. “சரி நடந்ததை மாற்ற முடியாது. இனி எனக்கு வழிதான் என்ன? “என்று கலங்கியபடி அவனிடம் கேட்டாள்.

     பெருமூச்சை வெளிவிட்டவன், “எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. அதுவரை நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம். இது வெளியத் தெரிய வேண்டாம். புத்தி சொல்லியே தெறிக்க விட்டுருவாங்க ”

     “சரியாகுமான்னு பார்க்கலாம். நீங்க வெயிட் பண்ணதான் வேணும்” என்று ஏதோ அவள் தான் அனைத்துக்கும் பொறுப்பு என்பது போலப் பேசியவனை சற்றே எரிச்சலுடன் பார்த்தாள்.

     ஓரு போர்வைத் தலையணையுடன், தரையில் படுத்து,தன் போனில் எதையோ டைப் செய்தபடி இருந்தவனைக் கண்டு மனம் வெதும்ப கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

    அடுத்து வந்த நாட்கள்,சொந்த பந்த வீடுகளில் விருந்து, உபசாரம் என்று கழிய, மறுவாரமே பெட்டியைக் கட்டிக் கொண்டு சென்றுவிட்டான்.

    பழகும் வாய்ப்பு கூட ஏற்படுத்த விரும்பாதவனின் மனைவி,எனும் வெறும் பட்டத்தோடு அவன் வீட்டில் வாழ்ந்தாள் அகல்யா. மாமியார் சற்று பயங்கரவாதியே. ஓரக்கத்திக்கோ இவள் அழகிலும் வசதியிலும் பொறாமை.

     ‘என்னடா வாழ்க்கை இது?

கொண்டவன் துணையிருந்தால் கூரை மீதேறி சண்டையிடலாம் என்பார்கள். இங்கு வழித்துணையாகக் கூட யாரும் இல்லை. வாழ்க்கைத் துணை என்றானாவனோ, வேறு துணை எனக்குண்டு என்கிறான்,’ என்று மனதுக்குள் மருகினாள்.

     அதட்டலும், உருட்டலுமாக மாமியாரின் பேச்சு ஒருவிதம் பழகி வந்தபோது,

வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் வாழ்வு முடிந்துவிட்டிருந்தது.

    கத்தலும், கதறலுமாக சொந்த பந்தங்கள் அழுதபோது கண்ணீர் மட்டும் வடித்தபடி அமர்ந்திருந்தாள்.மாமியார் தடாலென ஒரு அஸ்திரத்தை வீச அகல்யாவின் மனம் அடிபட்டு போனது.

   ”  பாவி மக என் மகன் வாழ்க்கையிலக் காலடி எடுத்து வச்சு, அவன் உசுரையேக் குடிச்சுட்டாளே?ராசிகெட்டவ, துக்கிரி” என்று அவளை வசைபட, நொறுங்கி போனாள்.

     புத்திர சோகத்தில் புலம்புவதாக ஆனந்தும், அவன் குடும்பத்தாரும் மௌனமாகக் கண்ணீர்விட,சடங்கு சம்பிராதயங்கள் கழிந்தும் அவள் நெருப்பை உமிழ, மகளை வீட்டோடு அழைத்து வந்து விட்டார்கள்.

     மகள் கழுத்தில் கட்டப்பட்டத் தாலியின் மஞ்சள் காயும் முன்னே, இறங்கிய வேதனையில் வாசுகிக்கு அட்டாக் வந்து விட, கெட்டது நடந்த வீட்டில் ஒரு நல்லதை நடத்திவிட சொந்தங்கள் வற்புறுத்த, ரூபிணி, ஆனந்தின் மனைவியானாள்.

     அருமையான பெண். அவள்தான் கணவனிடம், நாத்தனார் வாழ்க்கை,இப்படியேப் பட்டுவிடக் கூடாதென்று எடுத்து சொன்னாள்.

     ” அகல் மாப்பிள்ளை வீட்டுல வந்துட்டாங்க. முகத்தை சிரிச்சப்ல வச்சுக்கோ” என்று அண்ணிக் காதோரமாக சொல்ல நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்தாள்…

         தொடரும்..

 

    

    

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page