எந்த ஒரு செயலையும் முயன்று பார்க்கும் முன் முடிவெடுக்காதே…!
உன்னில் சிறையாகிறேன் – 1
இரவின் கருமை மெல்ல விடைபெற அடிவானத்தில் யாரோ குங்குமத்தைக் கரைத்து தெளித்தாற் போன்றதொரு செந்நிறக் கோலத்தை பிரசுரிக்க,
நிசப்தமான இரவைக் கிழித்துக்கொண்டு, எங்கோ ஒரு மரத்தின் கிளையிலிருந்து பறவைகளின் முதல் கீச்சொலி விடியலை அறிவித்தது,
புற்களின் நுனியில் தங்கியிருந்த பனித்துளிகள், உதயசூரியனின் முதல் கிரணங்கள் பட்டதும் வைரக்கற்களாய் ஜொலித்து மின்னயது,
காலை அலாரத்தின் மணியோசை ஒலிப்பதற்கு முன்பே எழுந்துவிட்டாள் தமிழினி, சமையலறையில் மிக்ஸியின் சத்தமும், குக்கரின் விசில் சத்தமும் அந்த வீட்டின் மௌனத்தை கிழித்துக் கொண்டிருந்தன,
ஆனால், அந்த வீட்டிற்குள் கணவன் மனைவியான தமிழினிக்கும் ஜீவாவிற்கும் இடையில் பேச்சுச் சத்தமும் சிரிப்பு சத்தமும் மட்டும் பலநாட்களாக கேட்கவே இல்லை,
ஜீவா குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன் நின்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான், தமிழினி உள்ளே வந்தாள் இருவருக்கும் இடையில் ஒரு அடி தூரம் கூட இல்லை, ஆனால் மனதளவில் அவர்கள் ஏதோ இரு வேறு துருவங்களில் நின்றிருந்தார்கள்,
”கவிம்மா மிதுன்குட்டி எழுந்திருங்கடா, டைம் ஆச்சு பாரு, எழுந்திருங்க செல்லங்களா” என்று தமிழினி தன் குழந்தைகளை எழுப்பும் சத்தம் மட்டும் அறையெங்கும் எதிரொலித்தது,
விடியல் பொழுதிலும் நன்றாக உறங்கிய குழந்தைகள் வெகுசிரமப்பட்டு கண்களைத் திறந்தனர், இளையவன் மிதுன் எழுந்ததும் அம்மாவின் மேல் தாவிக் கொண்டான்,
மூத்தவள் பார்கவி தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்தவள் ஜீவாவின் சட்டையைப் பிடித்து இழுத்தாள்,
“இன்னைக்கு ஸ்கூல்ல எனக்கு ஒரு காம்பெடிஷன் இருக்கு நீங்க வருவீங்கதானே டேடி” என்று அறைத்துக்கத்தில் கேட்டாள்,
ஜீவா மகளைத் தூக்கி அணைத்து முத்தமிட்டான்,
“நிச்சயமா வருவேன்டாம்மா, இப்ப போய் பாப்பா பிரஸ் பண்ணிட்டு குளிச்சிட்டு ப்ரஸ்ஸா வருவியாம் அப்பா உனக்காக டிபன் ஊட்டி விடுவேனாம் சரியா” என்றபடி குழந்தையை பாத்ரூமிற்குள் அனுப்பிவிட்டு ஹாலுக்கு வந்தவனின் கண்கள் தற்செயலாகத் தமிழினியின் மேல் பட்டன,
தமிழினி அவனைத் திரும்பி ஒரு பார்வை கூட பார்க்கவே இல்லை, அவள் காய்கறிகளை வெட்டுவதில் காட்டிய வேகம், அவள் மனதிற்குள் இருக்கும் ஆத்திரத்தையும் கசப்பையும் அப்பட்டமாகச் சொன்னது,
சுட்டிப்பையன் மிதுன் தன் சீருடையைத் தேடி அங்குமிங்கும் ஓட, தமிழினி இயந்திரத்தனமாக வேலைகளைக் கவனித்தாள், ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்தவர்கள் தான் இவர்கள் என்பதை இன்று பார்த்தால் எவரும் நம்ப மாட்டார்கள்,
விவாகரத்தின் விளிம்பில் நிற்கும் அளவு அந்த உறவின் விரிசல், அவர்கள் ஒருவரை ஒருவர் தவிர்ப்பதிலேயே தெரிந்தது,
”டிபன் ரெடி… குழந்தைகளுக்கு ஊட்டி விட்டுட்டு நீங்களும் சாப்பிடுங்க,” என்று கணவனைப் பார்க்காமல் சொல்லிவிட்டு ஒரு டீக்கோப்பையோடு தமிழினி பால்கனிக்குச் சென்றாள்,
ஜீவா பதில் பேசவில்லை, ஒரு காலத்தில் அவளது ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் தேடிப் பிடித்தவன், இன்று அமைதியை மட்டுமே ஆயுதமாக ஏந்தியிருந்தான்,
ஆழிக்காற்று வீசுவதற்கு முன்பான ஒரு கனத்த அமைதியைப் போல அந்த வீட்டில் பேரமைதியே குடிகொண்டிருந்தது,
சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் பள்ளிப் பேருந்தில் ஏறிச் சென்றதும், அந்த வீட்டின் மௌனம் இன்னும் அதிகமானது, ஒரு காலத்தில் சிரிப்பொலியால் நிறைந்திருந்த அந்தச் சுவர்கள்,
இப்போது இவர்களின் மூச்சுக்காற்றின் கனத்தையே தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஜீவா காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே நடக்க, தமிழினி தன் கைப்பையைச் சரிசெய்தபடி பின் தொடர்ந்தாள்,
இருவரும் காரில் ஏறினர், ஜீவா காரை ரேட்டில் செலுத்த, தமிழினி ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள்,
சாலையில் ஓடும் வாகனங்கள், அவசரமாக வேலைக்குச் செல்லும் மக்கள் என உலகம் வழக்கம் போல இயங்கிக் கொண்டு தான் இருந்தது,
ஆனால், இவர்களின் உலகம் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரப்போகிறது,
காரினுள் ஏசி ஓடிக் கொண்டிருந்தாலும், அந்தச் சூழல் அனலாகக் கொதித்தது,
யாரும் யாரிடமும் பேசவில்லை, இன்று அவர்கள் செல்வது அலுவலகத்திற்கோ அல்லது விசேஷத்திற்கோ அல்ல, ஆறு வருட பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறுத்துக் கொள்ள செல்கின்றனர்,
வாழ்க்கையின் கடைகோடி வரை விரல் பிடித்து நடக்க ஆசை என்று கவிபாடியவர் இன்று அதை பாதிலேயே பிரிந்து செல்ல மௌன போரில் இருக்கின்றனர்,
நீதிமன்ற வளாகத்தின் வாயிலில் இறங்கிக் கொண்டாள் தமிழினி, ஜீவா காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு வந்தான், இருவரும் இணைந்தே உள்ளே சென்றனர்,
நீதிமன்றத்தின் உள்ளே வக்கீல்கள் நெரிசலும், தட்டச்சு இயந்திரங்களின் சத்தமும் அவர்களின் மன அழுத்தத்தை இன்னும் அதிகமாக்கின, கூண்டில் ஏறி நின்றபோது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் இயந்திரத்தனமாகப் பதில் அளித்தனர்,
சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது,
”விவாகரத்து வழங்கப்படுகிறது”
ஆம், அவர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது, அவர்கள் கேட்டது கிடைத்துவிட்டது, ஆனால், நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது தமிழினியின் கால்கள் தள்ளாடின, ஜீவாவின் முகம் எவ்வித உணர்ச்சியுமின்றி இறுகிப் போய் இருந்தது,
வெளியே வந்ததும், ஜீவா காரின் கதவைத் திறந்து வைத்தான், தமிழினி ஏறி அமர்ந்தாள், கார் மீண்டும் வீட்டை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது,
கையில் இருந்த அந்தத் தீர்ப்பு நகல், அவர்கள் இத்தனை காலம் சேர்த்து வைத்த நினைவுகளைக் கிழித்துப் போட்ட காகிதமாகத் தெரிந்தது,
”முடிந்து விட்டது, எல்லாமே முடிந்து விட்டது” என மனதிற்குள் சொல்லிக் கொண்ட தமிழினிக்கு, நிம்மதியை விட ஒரு இனம் புரியாத வலி நெஞ்சைக் கவ்வியது உயிரை உயிரோடு உருவியது,
அவர்கள் வாழ்க்கையின் அத்தியாயம் முடித்து போயிருந்தாலும், அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது எதுவும் மாறாதது போலவே இருந்தது,
இரவு நெருங்க நெருங்க, வெளியிலிருந்த குளிரை விட அந்த வீட்டிற்குள் நிலவிய அமைதி மிகவும் குளுமையாக, ஒருவித கலக்கத்தையும் வெறுமையையும் ஏற்படுத்தியது,
இரவு உணவுக்கான நேரம் வர டைனிங் டேபிளில் தமிழினி உணவை எடுத்து வைத்தாள், வழக்கம் போலவே இருவருள்ளும் மாபெரும் மௌனப் போரில் யுத்தம் செய்து கொண்டிருந்தனர், ஆனால், குழந்தைகளின் வருகை அந்த நிசப்தத்தை உடைத்தது,
”அம்மா… இன்னைக்கு மிதுன் லஞ்ச் பாக்ஸ்ல இருந்த வெஜிடபுள்ஸ் எதுவுமே சாப்பிடவே இல்லமா” என்று பார்கவி புகார் வாசித்தபடி அப்பா ஊட்டிய உணவை விழுங்கினாள்,
”இல்லமா கவிதான் என் பென்சிலை எடுத்து ஒளிச்சு வச்சுட்டா” என்று மிதுன் தன் மழலை மொழியில் சிணுங்கினான்,
ஜீவா அமைதியாக குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான், குழந்தைகளின் அந்தச் சின்னச் சின்னப் சண்டைகளும், மழலைச் சிரிப்பும் அந்த அறையில் ஒரு மெல்லிய உயிரோட்டதைக் கொடுத்தது,
தமிழினி தட்டில் சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தாளே தவிர, ஒரு கவளம் கூட அவள் தொண்டைக் குழியையைக் கடந்து உள்ளே செல்லவில்லை,
‘நாளை முதல் இந்த மேஜையில் இந்த நான்கு பேரும் ஒன்றாக அமரப்போவதில்லை’ என்ற உண்மை அவள் நெஞ்சை அடைத்தது,
ஜீவாவுக்கும் அதே எண்ணம் இருந்திருக்க வேண்டும் போலும் அவன் குழந்தைகளின் முகத்தை ஏதோ ஒரு ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்,
உணவை உண்டு முடிந்ததும், குழந்தைகளை உறங்க வைக்க தமிழினி அவர்களை அறைக்கு அழைத்துச் சென்றாள்,
”அம்மா கதை சொல்லுங்கமா” என்று மிதுன் அவள் மடியில் தலை சாய்த்தான்,
தமிழினி ஒரு ராஜகுமாரன் ராஜகுமாரியின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்,
அந்தக் கதையில் அவர்கள் எப்போதும் பிரியாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள் சொல்லும்போதே அவள் குரல் கம்மியது, மேலும் வார்த்தைகள் வர தடைபட்டு கண்கள் உடைப்பெடுத்தது, பார்கவியும் மிதுனும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு, அந்தத் தாய்மையின் கதகதப்பில் மெல்ல உறக்கத்திற்குச் சென்றிருந்தனர்,
குழந்தைகளின் சீரான மூச்சுக்காற்று அந்த அறையில் ஒரு அமைதியை நிலைநாட்டியது, அவர்கள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியே வந்த தமிழினி, பால்கனியில் நின்றிருந்த ஜீவாவைப் பார்த்தாள்,
இரவின் குளிர்ந்த காற்று அவளைத் தீண்டியது, அவர்கள் இருவரின் பந்தமும் முறிவைப் பெற்றிருந்தாலும் ஒரே கூரையின் கீழ், அதே குழந்தைகளின் பெற்றோராக நிற்கும் அந்த இரவு தாங்க முடியாத பாரமானதாக இருந்தது,
குழந்தைகள் உறங்கிய பிறகு அந்த வீட்டின் மௌனம் இன்னும் பயங்கரமாக உருவெடுத்தது, பால்கனியில் நின்றிருந்த ஜீவா உள்ளே வர, ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த தமிழினியைச் சந்திக்க வேண்டியிருந்தது, இருவர் முகத்திலும் இருள் சூழ்ந்திருந்தது,
”குழந்தைங்க தூங்கிட்டாங்களா” என்று கேட்டு ஜீவா தான் மௌனத்தைக் கலைத்தான்,
”ம்ம் தூங்கிட்டாங்க” என தமிழினியின் பதில் சுருக்கமாக இருந்தது,
”இனி என்ன பண்ணப்போறோம், நாளைக்கு காலையில நான் மிதுனை கூட்டிட்டு கிளம்பறதா இருக்கேன், ஆனா பார்கவி கிட்டயும் மிதுன் கிட்டயும் இதைப் பத்தி எப்படி சொல்லப்போறேன்னு தெரியல” என்று ஜீவா சொல்ல பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள் தமிழினி, அவளின் எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்தான்,
”இப்போதைக்கு அவங்ககிட்ட நாம பிரிஞ்ச விஷயத்தை சொல்ல வேணாம்ன்னு தோணுது, போகப் போக அவங்களே புரிஞ்சுப்பாங்க, கொஞ்ச நாள் வேலைக்காக ஊருக்குப் போயிருக்கேன்னு சொல்லி சமாளிக்கலாம்” என்றே
ஜீவா சொன்னதும் தான் அந்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது, தமிழினி சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்,
“சமாளிக்கிறதா? எத்தனை நாளைக்கு பொய் சொல்லி சமாளிக்க முடியும், இன்னைக்கு கோர்ட்ல தீர்ப்பு வந்தாச்சு ஜீவா, நாம இனிமே புருஷன் பொண்டாட்டி இல்லைங்கிறதுதான் நிஜம், அந்த நிஜத்தை அவங்ககிட்ட மறைச்சு இன்னும் எத்தனை பொய் சொல்லப்போறீங்க” என்று கேட்டாள் தமிழினி,
”நான் அவங்க மனசு உடையக்கூடாதுன்னு நினைக்கிறேன் தமிழ் உன்னைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம்னு என்னால இருக்க முடியல” ஜீவாவின் குரலில் மெல்லிய எரிச்சல் தட்டுப்பட்டது,
”ஓ… அப்போ நான் தான் எல்லா விஷயத்தையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு பண்றவ, நீ நல்ல பொறுமைசாலி அப்படித்தானே, கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஜீவா நாம பிரியறதுக்குக் காரணமே உன்னோட அந்தப் பிடிவாதமும்,
விட்டுக் குடுத்து போகாத முரட்டுத்தனமும் தான், இப்போ குழந்தைகிட்ட சொல்லும்போது மட்டும் நான் தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லி நீ நல்லவனா நடந்துக்கணும்னு பார்க்குறயா” தமிழினியின் குரல் உயர்ந்தது,
” சத்தமா பேசாதே தமிழ் பசங்க முழிச்சுக்கப் போறாங்க, நான் என்ன சொன்னேன்னு உனக்குப் புரியல, அவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்கு ‘டைவர்ஸ்’னா என்னன்னு தெரியாது” என்று ஜீவா அடக்கிப் பேச முயன்றான்,
வாதம் விவாதமாக மாறுமோ…?
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
